August 28, 2009

காற்றில் யாரோ நடக்கிறார்கள்..!!!

வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதியதன் மூலமாக தமிழ் இலக்கியத்தை (என்னைப் போன்ற) சாதாரண மக்களிடமும் கொண்டு போய் சேர்த்ததில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முக்கிய பங்குண்டு. எஸ்ராவினுடைய சிறுகதைகளை விட கட்டுரைகளே என்னை மிகவும் பாதித்து இருக்கின்றன. எளிமையான வார்த்தைகளில் ஆழமான கருத்துகளை யாவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் தருவதுதான் அவருடைய சிறப்பு.

இலையின் நுனியில் தேங்கி நிற்கும் பனித்துளியை துல்லியமாகப் படம்பிடிக்கும் புகைப்படக்காரனைப் போல, நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களையும் நடக்கும் நிகழ்வுகளையும் கூர்ந்து அவதானித்து, அவற்றை வித்தியாசமான கோணங்களின் வாசகனின் பார்வைக்கு கொடுப்பதே எஸ்ராவின் உத்தி.

நாம் ஒரு சாலையில் நடக்கிறோம். நம்மைப் பொருத்த வரையில் அது ஒரு சாலை. அவ்வளவுதான். ஆனால்..அந்த சாலை ஆரம்ப காலத்தில் என்னவாக இருந்தது? எத்தனை நூற்றுண்டுகளாக அந்த சாலை இருக்கிறது? இதில் எத்தனை மனிதர்கள் நடந்து போயிருக்கக் கூடும்? இந்த சாலை எந்த ஊர்களை இணைக்கிறது? அந்த ஊர்களின் சரித்திரம் என்னவாக இருக்கக் கூடும்? இது போன்று அடுக்கடுக்காய் பல கேள்விகளை எழுப்பி, நுட்பமான பல விஷயங்களை வார்த்தைகளில் கொண்டு வருபவர் எஸ்ரா.

காற்றில் யாரோ நடக்கிறார்கள் - கல்குதிரை, கணையாழி, தினமணி, விகடன், குமுதம், அட்சரம், எஸ்ராவின் வலைத்தளம் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தனக்குப் பிடித்த எழுத்தாளர்கள், பார்த்து ரசித்த படங்கள், இசை, புத்தக அறிமுகங்கள் என்று பல தளங்கில் இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன. இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளை ஐந்து பிரிவுகளாக பிரித்து இருக்கிறார்கள்.

இலக்கியம்
************

எஸ்ராவின் கதாவிலாசத்தில் மௌனியின் அழியாச்சுடர் பற்றி படித்த நாள் முதலாக அவருடைய புத்தகங்களைத் தேடி வருகிறேன். சென்ற வருடம் கோவை புத்தகத் திருவிழாவில் ஒரு மனிதர் என்னிடம் சொன்ன வார்த்தைகள் மிகக் காட்டமானவை. "மௌனியின் எழுத்துக்கள் யாருக்கும் புரியாதவை. அவரெல்லாம் எழுத்தாளரே இல்லை.." இது போன்ற ரீதியில் இருந்தன அவருடைய வார்த்தைகள்.

வெறும் இருபது கதைகளே எழுதினாலும் இன்று வரை விவாதிக்கப்பட்டும், இன்றைய சூழ்நிலைக்கு பொருந்தும் வகையில் எழுதி இருக்கக் கூடிய ஒரு மனிதரைப் பற்றிய மதிப்பீடு இப்படியாகவா இருக்க முடியும்? "மறந்து போன மௌனி" என்னும் கட்டுரையில் இந்தக் கருத்துக்களைத்தான் எஸ்ரா முன்வைக்கிறார். புதுமைப்பித்தனைப் போல ஏன் நாம் மௌனியைக் கொண்டாடுவதில்லை? 2007 ஆம் வருடம் மௌனியின் நூற்றாண்டு விழா என்பதை இங்கே யாருமே அறிந்திருக்காத சோகத்தை நாம் அறிய நேரும்போது மனம் கனக்கிறது.

"நகுலன் இல்லாத பொழுது" என்னும் கட்டுரை நகுலனின் மரணத்தைப் பற்றியும், இல்லாமல் இருந்தும் அவருடைய எழுத்துக்களால் தொடர்ந்து இருக்கும் நிலை பற்றியும் விரிவாகப் பேசுகிறது. சாவைப் பற்றிய எழுதிய தஸ்த்யாவெஸ்கி போல தமிழில் எழுதியுள்ள முக்கிய எழுத்தாளரான சம்பத்தைப் பற்றிப் பேசுகிறது இன்னொரு கட்டுரை.

"சிப்பியின் வயிற்றில் முத்து" - தூத்துக்குடியில் இருக்கும் மீனவ மக்களின் வாழ்வை விரிவாக பதிவு செய்யும் நாவல். தென்மாவட்ட மக்களின் வாழ்வை மிகவும் அழகாக படம்பிடித்துக் காட்டும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் "போதி சத்வ மைத்ரேய" என்னும் வங்காள எழுத்தாளர் என்பது ஆச்சரியம் தரும் விஷயம். "எரியும் பனிக்காடு" என்னும் புத்தகம் தேயிலை தோட்டக் கூலிகளின் வாழ்வில் இருக்கும் அவலங்களை ஆவணப் படுத்துகிறது. இதை எழுதி இருப்பவர் டேனியல் என்னும் ஆங்கில எழுத்தாளர். நம் தமிழ் வாழ்க்கையை நம்மை விட அதிக கவனத்துடன் இவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஹோமரின் இலியட் என்னும் இதிகாசம் பற்றி படிக்கும்போது மகாபாரதத்தின் நினைவு வருவதை தவிர்க்க முடியாது. ஆபாசம் என்று சொல்லப்படும் விஷயங்கள் கூட எப்படி இலக்கியம் ஆகின்றன என்பதை ஜேம்ஸ் ஜாய்சின் கடிதங்கள் பற்றி படிக்கும்போது தெரிந்து கொள்ளலாம். ஆக மொத்தத்தில் வேதாளத்தை தூக்கி சுமக்கும் விக்ரமன் போல இலக்கியத்தை சுமந்தாலும் அது ஒரு சுகமான சுமையாகவே எழுத்தாளனுக்கு இருந்து வருவதை குறிப்பிடுகிறார் எஸ்ரா.

(தொடருவேன்)



(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

August 25, 2009

மதுரை டூ கோவை (வழி: சிங்கை, காரைக்குடி)..!!!

மதுரையில் இந்த மாத இறுதியில் புத்தகத் திருவிழா நடக்க இருக்கிறது. இன்றைக்கு வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருவது மனதுக்கு வருத்தம் தரும் விஷயமாக இருக்கிற சூழலில், இது போன்ற புத்தகத் திருவிழாக்கள் நடத்துவது என்பது மிகவும் நல்ல விஷயம். என்னுடைய மாணவர்களுக்கு நான் அடிக்கடி சொல்வது, புத்தகம் படிக்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்பதுதான். மதுரையில் புத்தகத் திருவிழா நடைபெறுவது இது நான்காவது முறை. களை கட்டும் என நம்புகிறேன். பதிவுலக நண்பர்களும் வந்து கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.
இது பற்றிய நண்பர் ஸ்ரீதரின் இடுகை இங்கே..
***************
ஆதிகாலம் முதலாய் வாழ்க்கையை இயற்கையோடு ஒன்றாக இயைந்து வாழ்ந்து வருவது பழங்குடி இன மக்களே. இன்றைய நாகரீகத்தின் முன்னோடிகளாக பல விஷயங்களில் இருந்து வரும் இம்மக்களைப் பற்றிய ஆராய்ச்சிகள், சரித்தரத்தில் மிக முக்கியமாக பதியப்பட வேண்டியவை. இந்தத் துறையில் மிகுந்த ஆர்வத்துடன் இயங்கி வருபவர் பேரா.காந்திராஜன். மதுரை புத்தகத் திருவிழாவில் "நான்மாடக் கூடல்" என்னும் அரங்கில் இவருடைய ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றன. நண்பர்கள் இந்த முயற்சியை பெருமளவில் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இது பற்றிய நண்பர், கவிஞர் நரனின் இடுகை இங்கே..
***************
சிங்கை பதிவர் செந்தில்நாதனுக்கு உதவிய, உதவி வரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. வெறும் வாய்ப்பேச்சோடு நின்று விடாமல் நம்மால் இயலும் என்பதை பதிவுலக நண்பர்கள் சாதித்துக் காட்டி இருக்கிறோம். அவருடைய அறுவை சிகிச்சைக்கான நாள் முடிவு செய்யப்பட்டு விட்டது. வரும் வியாழக்கிழமை காலை பத்து மணிக்கு தொடங்குகிறது. அவர் நல்ல முறையில் குணமாகி வீடு திரும்ப அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்வோம்.

இது தொடர்பான நண்பர் ராஜாவின் இடுகை இங்கே..
***************
பதிவுலக நண்பர் தேவன்மாயம் - காரைக்குடியில் மருத்துவராகப் பணிபுரிகிறார். பன்றிக் காய்ச்சல் பரவிய போது பல பயனுள்ள இடுகைகளை எழுதி வந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது அவருடைய பேட்டி குமுதம் ரிப்போர்டரில் வந்து இருக்கிறது. ஊடகங்கள் தொடர்ந்து பதிவுலகை கவனித்து வருகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. அண்ணன் தேவன்மாயத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இதுபற்றி அவரின் இடுகை இங்கே..
***************
சிங்கை பதிவர்கள் எல்லோரும் இனைந்து நடத்தும் மணற்கேணி போட்டி பற்றி அறிந்து இருப்பீர்கள். மூன்று வகைப் போட்டிகள். ஒவ்வொன்றிலும் தனித்தனிக் கட்டுரைத் தலைப்புகள். இது பற்றி என்னுடைய மாணவர்களிடம் சொல்லி இருந்தேன். இப்போது இரண்டு பேர் இதற்காக ஆர்வமாக கட்டுரை எழுதி வருகிறார்கள். நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி போட்டியின் முடிவு தேதி ஆகஸ்ட் 15-லிருந்து பின்னொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது நம் திறமையை வெளிக்காட்ட ஒரு அருமையான வாய்ப்பு. பதிவுலக நண்பர்கள் இதில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இது தொடர்பான விவரங்கள் அறிய இங்கே க்ளிக்குங்கள்..
***************
கடந்த சனிக்கிழமை அன்று மாணவர்களோடு கோவைக்கு இண்டஸ்ட்ரியல் விசிட்டுக்கு போயிருந்தேன். மதியம் ஒன்று முதல் மூன்று மணி வரை காந்திபுரத்தில் இருப்பதாக முடிவானது. நம்ம சுழிதான் சும்மா இருக்காதே.. கோவையில் எனக்குத் தெரிந்த ஒரே பதிவுலக நண்பரான இரா.சிவக்குமரனுக்கு போன் போட்டேன். ஆனால் அவரோ பனி நிமித்தமாக சேலம் சென்று இருந்தார். என்னை வடகரை வேலன் அண்ணாச்சிக்கு போன் பண்ண சொல்லி நம்பர் தந்தார்.
எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது.. என்னை அவருக்குத் தெரியாதே என்றேன். அதெல்லாம் தெரியும், நீங்கள் அழைத்துப் பேசுங்கள் என்றார். கூப்பிட்ட கொஞ்ச நேரத்தில் அண்ணாச்சி வந்து சேர்ந்தார். சற்று நேரத்தில் செல்வேந்திரனும் வந்து சேர்ந்தார். அன்றைய மதிய உணவு நேரம் அவர்களோடு கழிந்தது. கொஞ்ச நேரம்தான் என்பதால் அதிகமாக பேச முடியவில்லை. நன்றி கூறி விடைபெற்றேன். அன்போடு கவனித்துக் கொண்ட அந்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி.
இதுபற்றிய தகவல்களுக்கு.. சாரி.. பழக்க தோஷம்.. அந்த இடுகையத்தான் நீங்க படிச்சுக்கிட்டு இருக்கீங்க..
ரைட்டு.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

August 23, 2009

கந்தசாமி - திரை விமர்சனம்..!!!


கலைப்புலி S. தாணுவின் "V" கிரியேஷன்சுக்கு இது இருபத்து ஐந்தாவது வருடம். வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கி இருக்கும் படம் தான் "கந்தசாமி".


--> படத்தின் அழைப்பிதழே பதினைந்தாயிரம் ரூபாய் செலவில் டிரைலராகத் தயாரிக்கப்பட்டது...



--> பாடல் வெளியீட்டின் போது தயாரிப்பாளர்கள் இரண்டு கிராமங்களைத் தத்து எடுத்தார்கள்


--> தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம் ...



--> மெக்சிக்கோவில் எடுக்கப் பட்டு இருக்கும் முதல் தமிழ் படம்..



--> பீமா என்ற தோல்விப் படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகும் விக்ரம் படம்..



இப்படி பல எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கும் படம் அவற்றை பூர்த்தி செய்கிறதா? மேலே படியுங்கள்..



திருப்போரூரில் இருக்கும் கந்தசாமி கோவிலில் மக்கள் எழுதி வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறுகின்றன. கடவுளின் பெயரால் அதை செய்பவர் "கந்தசாமி" விக்ரம். CBI ஆபிசர். பல்வேறு வேஷங்களில் போய் கெட்டவர்களின் கறுப்புப் பணத்தை எடுத்து ஏழை மக்களுக்கு உதவுகிறார். அவருக்குத் துணையாக ஒரு பெரிய டீமே இருக்கிறது. கந்தசாமி யார் என்பதை கண்டுபிடிக்க வரும் போலிஸ் ஆபிசர் பிரபு.



PPP (ஆசிஷ் வித்யார்த்தி) என்னும் பெரும் பண முதலையுடன் மோதும் விக்ரம் அவருடைய மகள் சுப்புலக்ஷ்மியுடன் (ஸ்ரேயா) காதல் கொள்கிறார். விக்ரமுடன் மோதும் இன்னொரு பணக்கார வில்லன் ராஜ்மோகன் (முகேஷ் திவாரி). வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப் பணத்தை கொண்டு வந்தால் இந்தியாவின் துயரை நீக்கி விடலாம் என்ற கருத்து சொல்லி ஓய்கிறான் கந்தசாமி.



செம ஸ்மார்ட்டாக விக்ரம். பாட்மேனை நினைவு படுத்தும் சேவல் கெட்டப்பில் அறிமுகம் ஆகிறார். பறந்து பறந்து சண்டை போடுகிறார். பெண்வேடம், கிழவன் என்று தன்னை மிகவும் வருத்திக் கொண்டுள்ளார். ஆனால் அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர். ஜென்டில்மேனில் ஆரம்பித்து சிவாஜி வரை ஷங்கர் நார் நாராய் கிழித்து தொங்க விட்ட கதையில் அவரால் வேறு என்னதான் செய்ய முடியும்?



ஸ்ரேயா படத்துக்குத் தேவையா? கொஞ்சம் வில்லத்தனம் கலந்த கேரக்டரில் ஏதோ புதுசா செய்யப் போகிறார் என்று பார்த்தால் புஸ். கவர்ச்சி காட்டுவதோடு சரி. இவ்வளவு பவர்புல்லாக காட்டும் ஹீரோக்குத் தகுந்த வில்லன்கள் இருக்க வேண்டாமா? ஆசிஷும் முகேஷ் திவாரியும் தண்டமாக வந்து போகிறார்கள். படத்துக்கு சம்பந்தமே இல்லாத வடிவேலுவின் ஜோக்குகள் கொஞ்சமாக சிரிக்க வைக்கின்றன. பிரபு.. ஹ்ம்ம். இது போதாதென்று சுசி கணேசன் வேற வந்து போறார்.



தேவிஸ்ரீ பிரசாதின் இசையில் பாடல்கள் எல்லாமே ஹிட். ஆனால் பின்னணி இசை சொதப்பல். "அலேகா" பாட்டில் ஸ்ரேயாவின் நடனம் அப்படியே தால் படத்தில் ஐஸ்வர்யா ஆடும் ஆட்டத்தையும், ஷக்கீராவின் "whenever wherever" பாட்டையும் ஞாபகப்படுத்துகிறது. நடனம் அமைத்த புண்ணியவான் யார் என்று தெரியவில்லை. "Excuse me", "கந்தசாமிதான் டாப்பு" பாட்டுக்களுக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. "மியா மியா பூனை"...ஐயோ.. பாட்டு எழுதிய விவேகாவை என்ன செய்தாலும் தகும். "மாம்போ மாமியா" பாட்டில் மெக்சிக்கோவை சுற்றிக் காமிக்கிறார்கள். "என் பேரு மீனாக்குமாரி" பாட்டின் நடன அசைவுகளில் ஆபாசம் அருவியாய் வழிந்தோடுகிறது.



சத்ரபதி சக்தி மற்றும் கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகள் ஓகே. குறிப்பாக கண்ணைக் கட்டிக் கொண்டு விக்ரம் போடும் சண்டை அம்சம். ஏகாம்பரத்துக்கு யாரவது சூனியம் வைத்து விட்டார்களா? அவர் காமிராவை சுத்துற சுத்துல நமக்கு கண்ணக் கட்டுது. எடிட்டிங்கும் சரி இல்லை. படம் பல நேரங்களில் ஜவ்வா இழுக்குது.



கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சுசி கணேசன். அழகா பார்த்து பார்த்து செதுக்குன ஒரு மரச்சட்டம். ஆனா அதுக்கு உள்ளே ஓவியம் இல்லாம வெறும் வெள்ளைக் காகிதம் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் இங்க நடந்து இருக்கு. பழைய கதைக்கு சொதப்பலா திரைக்கதை. தாணுவின் காசைக் கொட்டி ஷங்கர் ஆக முயற்சி பண்ணி இருக்கார் சுசி. இந்தப் படத்தின் மூலமா சில கிராமங்களை தத்து எடுத்து இருக்குறதா சொன்னாங்க. அதுதான் மிச்சம்.



கந்த(ல்)சாமி..!!!



(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

August 21, 2009

மாதவம் செய்திட வேண்டுமம்மா..?!!!

"வாழ்த்துகள் அம்மா.. உங்களுக்கு பேத்தி பொறந்திருக்கா.."

"அடச்சே.. பொட்டப் புள்ளையா.. செலவு கணக்கு தானா? ஒத்தப் பையனோட போதும், நிப்பாட்டிக்கடான்னா கேட்டாத்தானே.. இனி இதை வளர்த்து, ஆளாக்கி, கட்டிக்கொடுத்து.. கிழிஞ்சிடும் போ.."
***************
"என்னங்க.. புள்ளைக்கு பால் பவுடர் தீர்ந்து போச்சு.. வரும்போது வாங்கிட்டு வாங்க.."

"ஏண்டி.. நீ பெத்து வச்சு இருக்கிறது பிள்ளதானா? இந்தத் தீனி திங்கிறது.. இதுக்கு பால் டப்பா வாங்கிப்போட்டே நான் அழிஞ்சிடுவேன் போலையே.."
***************
"அப்பா.. எனக்கும் புது சட்டை, பொம்மை எல்லாம் வேணும்.."

"சனியனே.. இங்க என்ன கொட்டியா கிடக்குது.. அதெல்லாம் உங்க அண்ணன் பயன் படுத்தின பழசு எல்லாம் கிடைக்குதுல்ல.. அத வெச்சு வெளையாடு.. போதும்.."
***************
"அப்பா.. எங்க கிளாஸ்லையே நான் தான் மொத ரேங்க்.. ரிபோர்ட் கார்ட்ல கையெழுத்து போட்டுக் குடுங்கப்பா.."

"சரி சரி.. பெரிசா ஏதோ சாதிச்சுட்ட மாதிரி பீத்திக்காத.. வேலையா இருக்கேன்னு தெரியுதுல.. உங்கம்மாக் கிட்ட வாங்கிக்க போ.."
***************
"நீ பெரிய பொண்ணு ஆகிட்ட.. இனிமேல இஷ்டத்துக்கு வெளிய போய் விளையாடக் கூடாது.. சரியா? அடக்க ஒடுக்கமா வீட்டுல இருக்கணும்.. புரிஞ்சுதா?"

"ஏம்மா.. அண்ணனும் என்ன விட பெரிய பையன் தானே.. ஆனா அவன மட்டும் எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க?"

"அது நாம வாங்கி வந்த வரம்டி.."
***************
"எனக்கு மேல படிக்கனும்னு ஆசையா இருக்குப்பா.. ப்ளீஸ்ப்பா.."

"பொம்பளப்பிள்ள இவ்வளவு படிச்சதே போதும்.. போய் உங்க அம்மாவுக்கு ஒத்தாசையா சமையல கத்துக்க.. கூடிய சீக்கிரம் உன்னைய ஒருத்தன் கைல பிடிச்சுக் கொடுத்தாத்தான் நிம்மதி.. "
***************
"சீக்கிரம் விளக்க அணைச்சிட்டு பக்கத்துல வா.."

"என்னங்க.. எனக்கு பயமா இருக்கு.. இதை கொஞ்ச நாள் கழிச்சு வச்சிக்கலாமே.."

"இதப்பாரு.. நீ பயப்படுற அளவுக்கு ஒண்ணும் இல்ல.. ரொம்ப நாளா இதுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்.. கிட்ட வா.."

"இல்லைங்க.. ஆனாலும்.."

"சும்மா பேசிக்கிட்டு இருக்காம வான்னா.."
***************
"என்னங்க.. சாயங்காலம் எங்கையாவது வெளில போகலாமா?"

"இங்க அவனவனுக்கு இருக்குற டென்ஷன்ல இது ஒண்ணுதான் குறைச்சல்.. போடி.. போய் வேலையப்பாரு.."
***************
"பையன் பொறந்திருக்கான்னு சொன்னவுடனே சிரிப்பைப் பாரு இவளுக்கு.."

"அதுக்கு இல்லம்மா... பொட்டப் புள்ளையா பொறந்து என்ன மாதிரி சிரமப்பட வேண்டாம்ல.. அதுதான் ஒரு சின்ன சந்தோஷம்.."
***************
"டேய்.. நீ அப்பா பிள்ளையா.. அம்மா பிள்ளையா.."

"அப்பா பிள்ளை.."

"ஏன் அப்பா பிடிக்கும்.."

"அவர்தான் சாக்லேட் எல்லாம் வாங்கித் தருவார்.. அம்மா படி படின்னு திட்டும்.. எனக்கு அம்மா வேண்டாம்.."
***************
"டேய் தம்பி.. ஏதாவது சாப்பிட்டுட்டு போடா.."

"உனக்கு வேற வேலையே இல்லையாமா... வேலையா போகுற நேரத்துல கடுப்ப கிளப்பிக்கிட்டு.. எங்களப் பார்த்துக்க எங்களுக்குத் தெரியும்.. போ.."
***************
"மருமகளே.. பசிக்குது.. கொஞ்சம் காப்பி போட்டு தாரியா.."

"ஆமா.. உங்களுக்கு செய்றதுக்குத் தான் எங்க அப்பா அம்மா என்னைய இங்க கட்டிக் கொடுத்தாங்களா.. சும்மா சும்மா எதையாவது கேட்டுக்கிட்டு.. ஊத்துற கஞ்சிய குடிச்சுட்டு பேசாம படுத்துக் கிடங்க.. நொய் நொய்னு என் உசிர வாங்காதீங்க.."
***************
"தம்பி... கண்ணு சரியாத் தெரிய மாட்டேங்குது.. சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்து என்னைய கண்ணு டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போறியா?"

"இப்போ உனக்கு எதுக்கு கண்ணாடி.. நீ டிவி பார்க்கலைன்னு யார் அழுதா... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. சும்மாக் கிட.."
***************
"மகராசி.. சுமங்கலியாப் போய் சேர்ந்துட்டா.. அவ மனசு நெறஞ்ச வாழ்க்கை.. எத்தனை பேருக்கு கிடைக்கும்.. கொடுத்து வச்ச மனுஷி..!!!"

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

August 19, 2009

எருமை - கழுதை - குதிரை..!!!

குருவிடம் சிஷ்யன் சொன்னான்.

"தவசீலரே.. வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன். ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்?"
"மகனே.. நீ வாழ்வில் என்னவாக இருக்க விரும்புகிறாய்? எருமையாகவா, கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.
"புரியவில்லை குருவே.."

"எருமையின் பின்னால் தட்டினால் என்ன செய்யும்?"

"எதையும் கண்டு கொள்ளாது தன் வேலையைப் பார்க்கும்.."

"கழுதையைப் பின்னால் தட்டினால்?"

"தட்டியவரை எட்டி உதைக்கும்.."
"ஆனால் குதிரை..?"

"முன்னால் பாய்ந்து செல்லும்.."

"புரிந்ததா.. நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்.. இதுதான் வாழ்வின் ரகசியம்.."

சிஷ்யன் சந்தோஷமாகத் திரும்பிச் சென்றான்.
***************
பானை செய்து விற்கும் குயவன் அவன். கடவுள் மீது அபார நம்பிக்கை கொண்டவன். அதிகாலையில் எழுந்து தான் செய்த பானைகளை ஒரு வண்டியில் அடுக்கி சந்தைக்கு கொண்டு சென்று விற்பான். அவனுடைய அன்றாடத் தேவைகளை அந்தப் பணத்தைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்வது அவனுடைய வழக்கமாக இருந்தது.
அன்றைக்கும் எப்போதும் போல பானைகளை வண்டியில் எடுத்துக் கொண்டு சந்தைக்கு கிளம்பினான். ஆனால் வண்டி வழியில் இருந்த சேறு நிறைந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அவன் கவலைப்படாமல் ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டான். எக்காரணம் கொண்டும் கடவுள் தன்னைக் கை விட மாட்டார், வண்டியை வெளியே எடுக்க உதவுவார் என்ற நம்பிக்கை.
வழியில் செல்வோர் எல்லாம் அவனை என்னவென்று விசாரித்தனர். நான் பார்த்துக் கொள்கிறேன், கவலை வேண்டாம் என்று எல்லோரையும் அனுப்பி விட்டான். நேரம் சென்றது. மாலை வேளை நெருங்கியவுடன் இருட்டத் தொடங்கியது. இப்போதுதான் முதல் முறையாக குயவனுக்கு பயம் தோன்றியது.
பானைகள் எதையுமே விற்காவிட்டால் இன்றைய பொழுதை எப்படிக் கழிப்பது? அழத் தொடங்கினான். அழுகை சிறிது நேரத்தில் கோபமாய் மாற கடவுளை திட்டத் தொடங்கினான். உன்னை நம்பினேனே, என்னை இப்படி மோசம் செய்து விட்டாயே என்றெல்லாம் புலம்பத் தொடங்கினான்.
சட்டென்று அவன் முன்னே கடவுள் தோன்றினார். பளாரென்று ஒரு அறை. குயவனுக்கு பொறி கலங்கிப் போனது.

"காலை முதல் கடவுள் காப்பாற்றுவார் எனச் சொல்லி சும்மாவே இருந்தாயே? அந்நேரத்திற்கு பள்ளத்தில் இறங்கி வண்டிச் சக்கரத்தைக் கொஞ்சமாவது நகட்ட முயற்சி செய்து இருந்தால் இந்நேரம் நான் உனக்கு உதவி இருப்பேன்... முதலில் உன்னை நீ நம்பி முயற்சி செய்.. வாழ்வில் தன்னம்பிக்கை தான் முக்கியம்.."

குயவன் புரிந்து கொண்டவனாக சந்தைக்கு கிளம்பினான்.
***************
பெண் ஒருவள் தன் காதலனுடன் கொண்ட உறவால் கர்ப்பமாகிப் போனாள். வீட்டில் இருந்தவர்கள் விவரம் தெரிந்து யார் காரணமெனக் கேட்டபோது அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பயத்தில் தன் வீட்டின் அருகில் இருந்த துறவியின் பெயரைச் சொல்லி விட்டாள். கோபம் கொண்ட உறவினர்கள் துறவியிடம் சென்று தாறுமாறாக சத்தம் போட்டனர்.
பொறுமையாகக் கேட்ட துறவி சொன்னார்..

"அப்படியா..?"

குழந்தை பிறந்தவுடன் அதை ஆசிரமத்தில் கொண்டு வந்து விட்டார்கள். துறவி அந்தக் குழந்தையை சீராட்டி வளர்க்கத் தொடங்கினார். கொஞ்ச காலம் கழித்து அந்தப்பெண்ணின் காதலன் திரும்பி வந்து தன் தவறை ஒத்துக் கொண்டான்.
துறவியை தவறாகப் பேசியதை எண்ணி ஊர் மக்களும் வருத்தம் கொண்டனர். அவரிடம் சென்று நடந்த விஷயங்களைக் கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு குழந்தையை தந்து விட சொன்னார்கள். சம்மதம் சொன்ன துறவியிடம் குழந்தையின் தந்தை யாரென அவர்கள் சொன்னார்கள்.
அதற்கும் துறவி சொன்னது..

"அப்படியா..?"
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

August 15, 2009

பொக்கிஷம் - திரை விமர்சனம்..!!!


பொக்கிஷம் - சேரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஒன்பதாவது படம். ஒரு சில படங்களை பார்க்கும்போது இது என்ன மாதிரியான படம், நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை நம்மாலேயே அனுமானிக்க முடியாது. இது அந்த வகைப்படம். அருமையான சிறுகதைக்கான கரு. ஆனால் அதை மூன்று மணி நேரப் படமாக எடுத்து நம் பொறுமையைச் சோதித்து இருக்கிறார் சேரன்.


அப்பாவின் டைரியையும், அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் கடிதங்களையும் மகன் படிப்பதாக ஆரம்பிக்கிறது படம். கதைக்களம் 1970ஆம் வருடம். கல்கத்தாவில் துறைமுகத்தில் வேலை பார்க்கும் இந்து இளைஞன் லெனின்(சேரன்). நாகூரில் தமிழ் இலக்கியம் படிக்கும் இஸ்லாமியப் பெண் நதீரா(பத்மப்பிரியா). சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சந்திக்கும் இவர்களுக்குள் நட்பு மலர்ந்து பின்பு காதலாகிறது. சேரனின் அப்பா திருமணத்துக்கு ஒத்துக் கொள்கிறார். தானும் ஒத்துக் கொள்வதாக சேரனை நம்ப வைக்கும் பத்மப்பிரியாவின் அப்பா, சூழ்ச்சியாக அவரை எங்கோ மறைவாக கூட்டிச் சென்று விடுகிறார். வேறொரு கல்யாணம் செய்து கொள்ளும் சேரன் கடைசி வரை பத்மப்பிரியா எங்கிருக்கிறார் எனத் தெரியாமலே இறந்தும் போகிறார். தன காதலிக்காக அவர் எழுதி, அனுப்பாத கடிதங்களை அவருடைய மகன் பத்மப்பிரியாவை தேடிக் கண்டுபிடித்து சேர்க்கிறார். இதுதான் பொக்கிஷம்.


ஆட்டோகிராப் முதல் தவமாய் தவமிருந்து வரை பார்த்த அதே சேரன். மெல்லிய உணர்வுகள் கொண்ட மனிதனாக வருகிறார். செதுக்கிய மீசையும், கன்னங்களில் அப்பிய பவுடருமாக அவர் அழும்போது திரை அரங்கில் மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். குறிப்பாக பத்மப்பிரியா தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டதை அறிந்து கொள்ளும் தருணத்தில் ஒரு உணர்வினை வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.. அவ்வ்வ்வ்.. முடியலை. திருத்தமாக வரையப்பட்ட ஒரு ஓவியம் போல அழகாக இருக்கிறார் பத்மப்பிரியா. கண்கள் பேசுகின்றன. கடைசிக் காட்சிகளில் வயதான பெண்ணாக அருமையாக நடித்து இருக்கிறார். ஆனால் ஒப்பனை சரியில்லை. (அவருக்கு குரல் கொடுத்து இருப்பது சேரனின் அதிர்ஷ்ட தேவதை மீனாவா?)


சேரனின் அப்பாவாக வரும் விஜயகுமாரும், பத்மப்பிரியாவின் அப்பாவாக வரும் பெரியவரும் நன்றாக நடித்து உள்ளார்கள். சேரனின் மகனாக வருபவருக்கு பிரசன்னா குரல் கொடுத்து இருக்கிறார். கடிதங்கள் கொண்டு வரும் போஸ்ட்மேன், சிலை வடிக்கும் இளவரசுவின் குடும்பம், கல்கத்தாவில் சேரன் குடியிருக்கும் இடத்தில் வசிக்கும் பக்கத்து வீட்டு வங்காளப் பெண், பத்மப்பிரியாவின் தோழியாக வரும் புவனா, சேரனின் மகனோடு எப்போதும் சண்டை போடும் காதலி என்று துணை கதாப்பாத்திரங்களை அழகாக செதுக்கி உள்ளார் சேரன்.


இதுவரை சேரன் எடுத்த படங்களிலேயே டெக்னிக்கலாக மிகச்சிறந்த படம் இதுவாகத்தான் இருக்கும். ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு அபாரம். நாகூரின் கடற்கரையில் கிடக்கும் ஒற்றைப்படகு, ட்ராம் வண்டிகள் ஓடும் கல்கத்தா நகரின் வீதிகள், முப்பது வருடங்களுக்கும் முன்பு பயன்பாட்டில் இருந்த மோட்டார் வாகனங்கள் என்று கலை இயக்குனர் மெனக்கெட்டு இருக்கிறார். ஆனால் அதற்காக சேரன் கடிதம் எழுதும்போது கூட அருகில் பழைய காலத்து குமுதம் கிடப்பது வலிந்து திணிக்கப்பட்டு உள்ளதாகத் தோன்றுகிறது.


இசை ஆச்சரியம் - சபேஷ் முரளி. பாடல்கள் எல்லாமே அருமை. படத்தோடு பார்ப்பதை விட தனியாக கேட்கும்போது இன்னும் நன்றாக இருக்கும் என்று போலத் தெரிகிறது. இவ்வளவு செய்தவர்கள் பின்னணி இசையில் சொதப்பி விட்டார்கள். படத்தின் மிகப்பெரிய பலம் இலக்கிய நயம் நிறைந்த வசனங்கள். ஆனால் படத்தில் நடித்து இருக்கும் அனைவருமே படம் பார்ப்பவருக்கு புரிந்து விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பேசியது போல இருக்கிறது(மணிரத்னம் எபெக்ட்). முதல் பாதி முழுதும் சேரனும் பத்மப்பிரியாவும் கடிதங்கள் மூலம் பேசிக்கொள்வதுதான் பொறுமையைச் சோதிக்கிறது. இரண்டாம் பாதியிலும், வயதான தோற்றத்தில் பத்மப்பிரியா வரும் இறுதிக்காட்சிகளிலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். ஒரு சில வசனங்களிலும், சேரனின் காதலை இந்துப் பெரியவர் ஒப்புக் கொள்வதாகவும் இஸ்லாமிய பெண்ணின் தந்தை சூது செய்வதாகவும் காட்டும் இடங்களில் தேவை இல்லாத உள்குத்து எதுவும் இருக்கிறதோ எனத் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.


"இலக்கிய வடிவில் ஒரு இயல்பான சினிமா" என்கிறார் சேரன். காணாமல்போன தன அப்பாவின் காதலியை, நாற்பது வருடங்கள் கழித்து கண்டுபிடித்து, கடிதங்களைக் கொண்டு போய் சேர்ப்பது என்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம் சேரன். நீங்கள் காதலைப் பற்றி படம் எடுத்தால் ஆட்டோகிராபோடு ஒப்பிடப்படும் என்பது நிச்சயம். படம் பார்க்கும் எல்லோரும் தங்களை ஏதேனும் ஒரு இடத்தில் பொருத்திப் பார்க்க முடிந்ததுதான் ஆட்டோகிராப்பின் வெற்றி. ஆனால் பொக்கிஷத்தில் அது சாத்தியமாக வில்லை. எந்த ஒரு காட்சியிலும் அழுத்தம் இல்லாததுதான் படத்தின் பலவீனம்.


காதலைப் பற்றி படம் எடுக்க ஆயிரம் பேர் உண்டு. ஆனால் எல்லாப்படத்திலும் சமூகத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று எடுக்க உங்களைப் போல ஒரு சிலரால் தான் முடியும்.வெற்றிக் கொடி கட்டு, பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், பொற்காலம் என்று சமுதாயம் மீது அக்கறை கொண்ட சேரன் என்னும் சமூகப் போராளியை மீட்டு எடுங்கள். அது போன்ற படங்கள் தான் தமிழ் சினிமாவின் உண்மையான பொக்கிஷங்களாக இருக்கும்.


சேரனுக்கு (மட்டுமே) பொக்கிஷம்..!!!


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

August 13, 2009

பதிவர் செந்தில்நாதனுக்கு உதவிடுவோம்..!!!

சிங்கப்பூரில் இருந்து எழுதி வரும் பதிவுலக நண்பர் செந்தில்நாதன் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நம்மால் ஆன உதவியை செய்வோம் நண்பர்களே... இது குறித்து சக பதிவர் KV ராஜா எழுதி உள்ள பதிவை இங்கே கொடுத்துள்ளேன்.
சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.
ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ICICI Account Details
Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: தஞ்சாவூர்
Singapore Account Details
Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings
பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலதிக விபரம் வேண்டுபவர்கள் என்னையோ அல்லது எனது நண்பர் கருணாநிதியையோ தொடர்பு கொள்ளலாம்.
ராஜாவின் செல்பேசி எண்: +966 508296293
கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261
சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.
Hi Friends,
This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batch mates.I expect all ur prayers at this moment.
Thanks&Regards,
Santhi Senthil Nathan.
இது என்னால் முடிந்த சிறு உதவி. நாம் அனைவரும் இணைந்தால் கண்டிப்பாக அவருக்கு உதவ முடியும் நண்பர்களே.. நம்மால் ஆன முயற்சிகளைச் செய்வோம்..!!
தொடர்புடைய பிற பதிவுகள்...

August 12, 2009

உக்கார்ந்து யோசிச்சது (12-08-09)..!!!

கடந்த வார இறுதியில் ஈரோட்டில் நடந்த புத்தகத் திருவிழாவுக்கு நண்பர் ஸ்ரீதருடன் போயிருந்தேன். சனிக்கிழமை இரவு எட்டு மணிக்கு நாங்கள் போய் சேர்ந்தபோதே ரூம் எல்லாம் ரெடி பண்ணி வைத்து இருந்தார் நம்ம வால்பையன். ஈரோட்டை சேர்ந்த பதிவுலக நண்பர்களும் வந்து சேர்ந்து கொள்ள களைகட்டியது. கதிர் - ஈரோடு என்னும் பெயரில் எழுதி வரும் நண்பர் கதிர், பாலாஜி, வெகு நாட்களாக பதிவுகளைப் படித்து வரும் அன்பர் ஜாபர் ஆகியோர் வந்து இருந்தார்கள். சமுதாயம், பதிவுலகம் எனப் பல விவாதங்கள் நடைபெற்றன. இரவு ஒரு மணி வரை நானும் வாலும் பேசிக் கொண்டிருந்தோம். தன்னைப் பற்றிய தனிப்பட்ட பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவருடைய நல்ல மனதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை. வாலின் புண்ணியத்தில் எழுத்தாளர் வாமு கோமுவின் அறிமுகம் கிடைத்தது. நான் இதற்கு முன்னர் அவருடைய ஒரே ஒரு சிறுகதையை மட்டுமே வாசித்து இருக்கிறேன். எளிமையாகப் பழகும் மனிதர். எந்த பந்தாவும் இல்லை. புத்தகத் திருவிழாவுக்கு என்னுடன் வந்து புத்தகங்களை சகாயமாக வாங்கித் தந்தார். நான் வாங்கிய புத்தகங்களின் விவரம் இங்கே..
ஏழாம் உலகம் - ஜெயமோகன்
புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
ஆழிசூழ் உலகு - ஜோ.டி.க்ரூஸ்
ஜெ.ஜெ சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
உறுமீன்கள் அடர்ந்த நதி - இசை
கடவுளுடன் பிரார்த்தித்தல் - மனுஷ்யபுத்திரன்
கள்ளி - வாமு கோமு
மண்பூதம் - வாமு கோமு
ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது - முகுந்த் நாகராஜன்
இத்தனை வாங்கிட்டு நம்ம தலைவர் இல்லாமலா? அதனால..
எஸ். ராமகிருஷ்ணனின் "காற்றில் யாரோ நடக்கிறார்கள்.."
நடுவில் என்னுடைய பழைய மாணவர்களும் வந்து சந்தித்தார்கள். இரண்டு நாட்களை பயனுள்ளதாக கழிக்க முடிந்ததில் ரொம்ப சந்தோஷம்.
***************
உரையாடல் போட்டியின் முடிவுகள் வெளிவந்து விட்டன. வெற்றி பெற்ற இருபது நண்பர்களுக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்ற மக்களில் அகநாழிகை பொன்.வாசுதேவனைத் தவிர மற்றவர்களின் பதிவை நான் படித்தது இல்லை. இனிமேல்தான் படிக்க வேண்டும். பல சிரமங்களுக்கு இடையே இதனை சிறப்பாக நடத்திய நண்பர்கள் பைத்தியக்காரனுக்கும், ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் நன்றி. அடுத்ததாக சிறுகதை எழுதுவதற்கான ஒரு பயிற்சிப் பட்டறை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். நானும் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். சீக்கிரமா தேதிகளை சொல்லுங்கப்பா..!!!
***************
சமீபத்தில் அழகர்மலை என்னும் அடாசுப்படம் ஒன்று வந்து இருக்கிறது. இசை - இளையராஜா. படத்தில் ஒரு பாடலைப் பாடி நடித்தும் இருக்கிறார். அதன் வரிகள் இப்படிப் போகின்றன.."உலகம் இப்போ எங்கோ போகுது.. எனக்கிந்த அன்னை பூமி போதும்.. இங்கே பிறந்தவரும் எங்கோ போகிறார்.. எனக்கிந்த அன்னை பூமி போதும்.." பாட்டைக் கேட்கும் யாருமே இந்தப் பாடல் யாரைப் பற்றியது என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடலாம். ஏற்கனவே ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தபோது ராஜா வெளிப்படையாக பாராட்டவில்லை என்று குற்றம் சொன்னார்கள். இந்த சூழ்நிலையில் இந்தப் பாட்டு இசைஞானிக்கு தேவைதானா?
***************
இது கவிதை இல்லை.. ஒரு கதறல்..(சிட்டிசன் அஜித் மாதிரி படிங்கப்பா..)

சாலைகளில், கோவில்களில்,
பூங்காக்களில், திரை அரங்கங்களில்..
அங்கிங்கெனாதபடி எங்கும்
நிறைந்து இருப்பவர்களாய்..
கைகோர்த்து சுற்றித் திரியும்
காதல் உள்ளங்களை
பார்க்கும் போதெல்லாம்
இறைஞ்சுகிறது என் ஆழ்மனது..
"சீக்கிரம் வா என் முகம் தெரியா தேவதையே.."
***************
வழக்கம் போல.. முடிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் ஜோக்ஸ்..
-->உங்களுக்கு தண்ணியடிக்கிற பழக்கம் இருக்கா? அதை குறைக்கணும்னு நினைக்கிறீங்களா? ரொம்ப ஈசி.. கல்யாணத்துக்கு முன்னாடி எப்பவெல்லாம் சோகமா இருக்கீங்களோ, அப்ப மட்டும் குடிங்க. கல்யாணத்துக்கு அப்புறம் எப்பவெல்லாம் சந்தோஷமா இருக்கீங்களோ, அப்ப குடிங்க. இதை பாலோ பண்ணினா நீங்க சீக்கிரமே குடிய விட்டுடலாம்.
-->ஆள் 1: என்னய்யா நாலு கால் பேசிட்டு ஒரு காலுக்கு காசு தரீங்க?
ஆள் 2: நாலு கால் ஒண்ணுதான்யா..
ஆள் 1: ?!!!
-->சல சலன்னு பேசிக்கிட்டே இருக்கிற பொண்ணை அமைதியாக்க என்ன பண்ணலாம்? ஒரு முட்டாள் அவக்கிட்ட நேரடியாப் போய் வாய மூடுன்னு சொல்லுவான். அதே ஒரு அறிவாளின்னா, உங்களோட உதடுகள் மூடி இருக்கும்போதுதான் நீங்க இன்னும் அழகா இருக்கீங்கன்னு சொல்வான்.

போதும்.. இத்தோட நிறுத்திக்குவோம்.. :-)))
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

August 6, 2009

ஒரு கிழிஞ்ச சட்டையும் அய்யனாரின் நினைவுகளும்..!!!

ரொம்ப நாளைக்கு அப்புறமா போன வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு வீட்டுல இருந்தேன்.
"ஏம்ப்பா.. வீட்டை சுத்தம் பண்ணி நிறைய நாளாச்சு.. இன்னைக்கு பண்ணலாமுன்னு இருக்கேன்.. எல்லாத்தையும் ஒதுங்க வைக்கணும்.. கொஞ்சம் ஒத்தாசை பண்றியா?" - அம்மா.
தாறுமாறா கொடியில் கிடந்த துணிகளை எல்லாம் எடுத்து பீரோவில் அடுக்கி வச்சேன். அடுத்ததா கட்டிலின் கீழே இருந்த சாமான்களை ஒவ்வொண்ணா ஒதுக்க ஆரம்பிச்சபோதுதான் அது என் கண்ணுல தட்டுப்பட்டுச்சு. என்னோட பொக்கிஷப் பேழை. சின்ன வயசுல இருந்து நான் விலை மதிக்க முடியாததா நினைக்குற சமாச்சாரம் எல்லாம் ஒரு பெட்டில பத்திரமா வச்சு இருக்கேன். எப்பவாச்சும் தோணுனா தொறந்து பார்த்து சந்தோஷப் பட்டுக்குறது.
அன்னைக்கு தோணுச்சு. பொட்டியத் தொறந்தேன். பசங்க அனுப்புன கிரீட்டிங் கார்டு, பிள்ளைங்க கைல கட்டி விட்ட ராக்கி, காலேஜ்ல இருந்தப்போ அம்மாவுக்கு எழுதின லெட்டர், எனக்கு வந்த லெட்டர்ஸ், கிப்ட்ங்க.. எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே வந்தப்போ ஓரமா ஒரு கிழிஞ்ச சட்டையும். எனக்கு அதைப் பார்த்தவுடனே அய்யனாரோட ஞாபகம் வந்திருச்சு. ஆசையா அந்த சட்டையத் தடவிக் கொடுத்தேன். எத்தனை இனிமையான நாட்கள் அதெல்லாம்?
***************
நான் அப்போ அஞ்சாங்கிளாஸ் படிச்சிக்கிட்டு இருந்தேன். வீடு ஜீவா நகர்ல இருந்துச்சு. எங்க எதுத்த வீட்டுக்கு புதுசா ஒரு குடும்பம் குடி வந்தாங்க. ஒரு அம்மா, ரெண்டு பொண்ணுங்க. அவங்க வந்த அன்னைக்கே அம்மா அவங்க வீட்டுக்கு போய் பேசிக்கிட்டு இருந்தாங்க. நானும் கூடப் போய் இருந்தேன். ரெண்டு பிள்ளைங்களும் சொட்டாங்கல் ஆடிகிட்டு இருந்துச்சுக. நான் ஓரமா நின்னு பார்த்துக்கிட்டு இருந்தப்போ பெரியவதான் மொதல்ல பேசினா.

"நீயும் விளையாட வரியா..?"
நானும் அவங்களோட சேர்ந்துக்கிட்டேன்.

"உன் பேர் என்ன.."

"கார்த்தி. செவன்த் டே ஸ்கூல்ல பிப்த் ஸ்டாண்டர்ட். நீ?"

"அய்யனார்.. முருகன் ஸ்கூல்ல நாலாங்கிளாஸ்.. இது என் தங்கச்சி. ரங்கா.. ரெண்டாப்பு படிக்கிறா.."
இதுதான் அய்யனாரோடான என்னோட முதல் அறிமுகம். கொஞ்ச நாள்லேயே அவ எனக்கு நெருங்கின சிநேகிதம் ஆகிட்டா. எப்படா ஸ்கூல் முடியும், அவளைப் போய் பார்த்து விளையாடலாம்னு மனசு கெடந்து அடிச்சுக்கும். பசங்க எல்லாம் கிண்டல் பண்ணுவாய்ங்க.."டேய், பையங்க கூடயும் கொஞ்சம் விளையாடுடான்னு.." நான் கண்டுக்கவே மாட்டேன். நான் இருக்கிற இடத்துல அவ இருப்பா.. அதே மாதிரி நானும்னு சொல்ற அளவுக்கு ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம்.
***************
ஒரு நாள் எங்க வீட்டுல உக்கார்ந்து நான், என் தங்கச்சி, ரங்கா, அய்யனார் எல்லாம் உக்கார்ந்து டிவி பார்த்துக்கிட்டு இருந்தோம். விக்ரம்னு கமல் நடிச்ச படம். ஏதோ ஒரு பாட்டு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அய்யனார் ரொம்ப ரசிச்சு பார்த்து கை தட்டிக்கிட்டு இருந்தா.

"கமல் சூப்பரா டான்ஸ் ஆடுறார் இல்ல? ச்சே..எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்குடா"
எனக்கு கோபம் கோபமா வந்தது. "ஏன்.. அவர் மட்டும்தான் ஆடுவாரா.. எங்களால முடியாதா? நான் அவரை விட சூப்பரா ஆடுவேன் தெரியுமா?"

"நெஜமாவா..?"

அவ கண்ல இருந்த ஆச்சரியத்தைப் பார்த்தவுடனே எனக்கு சந்தோஷம் தாங்கல. "இப்போ ஆடிக் காட்டுறேன் பாரு.."
ரெண்டு தடவை அப்படியும் இப்படியும் தவ்வினேன். ரெண்டே ஸ்டெப்பு தான். கால் தட்டி கீழே விழுந்துட்டேன். சுத்தி இருந்தவங்க எல்லாம் சிரிச்சுட்டாங்க. எனக்கு அவமானமாப் போச்சு.

"ப்ராக்டிஸ் இல்லைல.. அதான் சரியா வரல.. இப்போ பாரு.. எப்படி ஆடுறேன்னு.."

மறுபடியும் எந்திரிச்சு ஆடப் பார்த்தேன். அதே கதைதான். கீழே விழுந்துட்டேன். என் கண்ணுல தண்ணீர் முட்டிக்கிட்டு வருது. ரங்காவும் என் தங்கச்சியும் விழுந்து விழுந்து சிரிக்கிறாளுங்க. என்னால கண்ணீர அடக்கவே முடியல. அய்யனார் ஓடி வந்து என்னைத் தூக்கி விட்டா.
"சிரிப்ப நிப்பாட்டுங்க.." அவளோட ஒரு கத்துல மத்ததுங்க அமைதி ஆகிடுச்சு.
அய்யனார் என்கிட்டே குனிஞ்சு சொன்னா.."உனக்கு டான்ஸ் ஆடத் தெரியலனாலும் உன்னைத் தாண்டா எனக்கு ரொம்பப் பிடிக்கும்.." என் காலு தரையிலேயே இல்ல. வானத்துல பறக்குற மாதிரி இருந்தது.
***************
"நாளைக்கு கம்மாய்க்கு வெளையாடப் போகலாமா?"

அவ கேட்டு என்னைக்கு நான் இல்லைன்னு சொல்லி இருக்கேன். மறுநா நாங்க வெளயாண்டு முடிச்சப்ப இருட்டிருச்சு.

"கார்த்தி.. நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே.."

"என்னப்பா.. சொல்லு.."

"எனக்கு ரொம்ப நாளா பசங்கள மாதிரி சட்ட போட்டுக்கணும்னு ஆசை.. அம்மாக்கிட்ட கேட்டா திட்டும்.. உன்னோட சட்டையத் தரியா.. ஒரே ஒரு தரம்.. போட்டுப் பார்த்துட்டு தந்துடுறேன்..?"
சந்தோஷமாக் கழட்டி கொடுத்தேன். மரத்துக்குப் பின்னாடி மறவாப் போய் போட்டுக்கிட்டு வந்தா.

"நல்லா இருக்கா.. உண்மையாச் சொல்லணும்.."
"நெஜமாவே நல்லா இருக்கு.. அய்யனாரு.. உனக்குப் பிடிச்சு இருந்தா இந்த சட்டைய நீயே வச்சுக்கியேன்.."

"ஆத்தாடி.. அம்மா தோல உரிச்சுடும்.. இரு கழட்டி தாரேன்.."

அவ கழட்டுனப்போ பக்கத்து மரத்துல இருந்த கிளையில சிக்கி சட்ட லேசா கிழிஞ்சு போச்சு. பயந்துட்டா. நான் அம்மாக்கிட்ட சொல்லி சமாளிச்சுக்கிறேன்னு தெய்ரியம் பண்ணி கூட்டி வந்தேன். அன்னில இருந்து அந்த சட்டை என்னோட பிரியமான ஒண்ணா மாறிப் போச்சு. அதை எடுத்து பத்திரமா வச்சுட்டேன்.
***************
அன்னைக்கு காலைல இருந்து அய்யனார வெளியவேக் காணோம். அவளைத் தேடிக்கிட்டு அவ வீட்டுக்கு போனேன். வீட்டுல ஒரே பொம்பளைங்க கூட்டமா இருந்துச்சு. அவங்க அம்மா வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தாங்க. என்னைய வீட்டுக்குள்ள விடாம வெரட்டி விட்டுட்டாங்க. நான் அம்மாக்கிட்ட கேட்டப்போ அய்யனார் பெரிய மனுஷி ஆகிட்டதால இனிமே பசங்க கூடவெல்லாம் சேர மாட்டான்னு சொல்லிட்டாங்க.
இத்தன நாள் கூடவே இருந்த பிரெண்டு திடீர்னு உன் கூட பேசவே மாட்டான்னா அத என்னால ஒத்துக்கவே முடியல. அவ வீட்டையே சுத்தி சுத்தி வந்தேன். ஒரு நாள் ஜன்னல் வழியா யாரோ என்னக் கூப்பிடுற மாதிரி இருந்துச்சு. பாத்தா அய்யனார்.
"நல்லா இருக்கியாடா.. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலடா.. அம்மா யார்கூடவும் பேசக் கூடாதுன்னு சொல்றாங்க.. என்னால முடியல.." அழுறா.
எனக்கும் அழுகையா வந்துச்சு."நீ இல்லாம எனக்கும் பொழுதே போகல தெரியுமா.. நான் என் உன் கூட பேசக் கூடாது? பையனா பொறந்தது என் தப்பா?"
"எனக்கும் அதுதாண்டா தெரியல.." கொஞ்சம் நேரம் ரெண்டு பேருமே அமைதியா இருந்தோம். அப்புறமா அவ கேட்டா.."டேய்.. என்னைய எப்பவும் மறந்துட மாட்டியே?"

"என்ன இப்படி கேட்டுட்டே.. நாம எப்பவுமே பிரண்ட்சா இருப்போம்.. நீ பயப்புடாத.." இதுதான் நான் அவக்கிட்ட கடைசியாப் பேசினது. ரெண்டு மாசம் கழிச்சு அவங்க அம்மா கூட வீட்ட காலி பண்ணிக்கிட்டு போய்ட்டாங்க. நான் ஸ்கூலுக்கு போய் இருந்ததால கடைசியா அவ மூஞ்சைக் கூடப் பார்க்க முடியல.
***************
"என்னப்பா ஒரே யோசனை.." அம்மாவோட குரல் என்னை மறுபடியும் நிகழ் காலத்துக்கு கூட்டி வந்துச்சு.
"ஒண்ணுமில்லம்மா.."சட்டையப் பழையபடி பொட்டியில பத்திரமா வச்சு மூடினேன்.
அய்யனாருக்கு இந்நேரம் கல்யாணம் ஆகி இருக்கும். ரெண்டு குழந்தை கூட இருக்கலாம். அவள மறுபடி பார்க்க முடிஞ்சா ஒண்ணே ஒண்ணு மட்டும் கேக்கணும்.
"இப்பவும் உன்னோட வீட்டுக்காரோட சட்டைய வாங்கி போட்டுக்குரியா?"
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

August 4, 2009

உக்கார்ந்து யோசிச்சது ( 04-08-09)..!!!

ஞாயிற்றுக்கிழமை - நண்பர்கள் தினத்தன்று கொங்கு கல்லூரி மாணவர்கள் போன் பண்ணி இருந்தார்கள். சனிக்கிழமை மாலையே கிளாசில் கேக் எல்லாம் வெட்டிக் கொண்டாடியதாகச் சொன்னார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மாணவ மாணவிகளிடையே இருந்த பிரச்சினைகளை விலக்கி ஒற்றுமையைக் கொண்டு வருவதற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தப் பழக்கத்தை - ஏதேனும் பிறந்த நாளோ இல்லை விசேஷ நாட்களோ வந்தால் எல்லோரும் இணைந்து கொண்டாடுவதை அறிமுகம் செய்து இருந்தேன். நான் கல்லூரியை விட்டு நீங்கி வந்த பின்னும் அந்த நல்ல வழக்கம் தொடர்கிறது என்பதை அறிந்த போது உள்ளம் நெகிழ்ந்து போனேன். எல்லோரும் கடைசியாக சொன்னது.."thanks a lot sir.. we miss you..". பெருமையாக இருந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாண்டியா?
***************
நல்லது செய்ய வேண்டும் என்று வாய் வார்த்தையாக மட்டுமே பேசிக் கொண்டிராமல் அதை செயலிலும் காட்டத் தொடங்கி விட்டார்கள் நம் பதிவுலக நண்பர்கள். நண்பர் நர்சிம் விடியலைப் பற்றி எழுதியவுடன் அவர்களுக்கு பல நண்பர்கள் உதவி செய்து உள்ளார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதே போல இன்னொரு முயற்சியில் நண்பர் ஜோ (joe) ஈடுபட்டு இருக்கிறார். அவருடைய இந்த இடுகையைப் படியுங்கள். சின்னபள்ளிக்குப்பம் என்னும் கிராமத்தில் நூலகம் ஒன்றை அமைப்பதில் உதவி வருகிறார். இதற்காக புத்தகங்கள் வாங்கி தரும்படி நண்பர்களிடம் கேட்டு இருந்தார். நிறைய பேர் தங்களால் இயன்றதை செய்து இருக்கிறார்கள். மேலும் பல நல்ல விஷயங்களை செய்ய அவருக்கும் என் வாழ்த்துகள்.
***************
F1 மோட்டார் போட்டிகளை பார்த்து வரும் அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்து இருக்கும். ஹங்கேரியில் நடைபெற்ற போட்டியில் பெர்ராரி அணியைச் சேர்ந்த பெலிப்பே மாசாவிற்கு பயங்கரமான விபத்து நடந்தது. இடது கண்ணின் அருகே பலத்த அடிபட்டு கோமாவில் இருந்தவர், இப்போது உடல்நலம் தேறி நன்றாகி விட்டார். கெட்டதில் ஒரு நல்லது என்று சொல்வார்களே, அதுபோல மாசா மீண்டும் ரேஸ் ஓட்ட முடியும் வரை அவருக்கு பதிலாக முன்னால் உலக சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கர் பங்கேற்க இருக்கிறார். நான் அவருடைய தீவிர ரசிகன் என்பதால் அவரை மீண்டும் போட்டிக்களத்தில் பார்க்க ஆவலோடு இருக்கிறேன். "Welcome Back Schumi.."
***************
சமீபத்தில் தான் கௌதம சித்தார்த்தனின் "பொம்மக்கா" என்னும் சிறுகதைத் தொகுப்பை படித்தேன். அருமை. கொங்கு மண்ணின் கதைகளை அதன் வாசம் மாறாமல் அப்படியே தந்துள்ளார். சிறு தெய்வங்களின் கதைகளான பொம்மக்கா, ஒண்டி முனியப்பன், பாட்டப்பன் மூன்றும் மனதை கனமாக்கி விட்டன. தொகுப்பில் கடைசியாக இருக்கும் "மண்" என்னும் கதை பெண்கள் மீதான அடக்குமுறையை தெளிவாக விவரிக்கிறது. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
***************
மலேஷியாவில் இருந்து எழுதி வரும் பதிவுலக நண்பர் குமாரைநிலாவனை போன வாரம் மதுரையில் சந்தித்தேன். எளிமையான மனிதர். உறவினர்களைப் பார்க்க தஞ்சைக்கு போய் விட்டு வரும் வழியில் மதுரையில் இறங்கினார். நானும் ஸ்ரீயும் பார்க்க வருவதாக சொன்னவுடன் ரூம் போட்டே தங்கி விட்டார்.நிலாரசிகனின் "ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்" என்னும் கவிதைப் புத்தகத்தை எனக்காக தேடிப்பிடித்து வாங்கி வந்து பரிசாக அளித்தார். இரவு பனிரெண்டு மணி வரை அவரோடு கதை பேசிவிட்டு விடை பெற்றுக் கொண்டோம். நிலாரசிகனின் வலைப்பூவை நான் வாசித்து இருக்கிறேன். ஆனால் அவர் புத்தகம் வெளியிட்டு இருப்பது தெரியாது. ரொம்ப எளிமையான கவிதைகள். உணர்வுப்பூர்வமாக எழுதி உள்ளார். அதில் எனக்குப் பிடித்த கவிதை...
"என் விரலில் பட்ட
காயத்திற்கு
மருந்து வைத்துக்
கட்டும்போது தெரிகிறது..
அம்மாவின் முகத்தில்
வலி..!!!"

***************

கடைசியாக எஸ்.எம்.எஸில் வந்த ஜோக் ஒன்று...

போலிஸ்: உன் பேர் என்ன?

அவன்: குப்புசாமி...

போலிஸ்: என்ன தொழில்?

அவன்: உப்பு சாமி..

போலிஸ்: ஏண்டா தள்ளாடுற?

அவன்: மப்பு சாமி..

போலிஸ்: சரி சரி.. மாமூல் எடு..

அவன்: தப்பு சாமி..

போலிஸ்: ?!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

August 3, 2009

உயிரோடைக்கு ஓர் எதிர்வினை..!!!

சில தினங்களுக்கு முன்பு உயிரோடை வலைத்தளத்தில் ஒரு சிறுகதைப் போட்டி நடத்துவதாக அறிவித்து இருந்தார்கள். "தூறல் கவிதை" ச.முத்துவேலின் கவிதையை கருவாகக் கொண்டு கதை எழுத வேண்டும் என்று சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட 32 பேர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். முடிவுகள் சென்ற வாரம் அறிவிக்கப்பட்டு உள்ளன. வெற்றி பெற்றவர்களைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.
போன வாரம் பதிவுல நண்பர் தண்டோராவை சந்தித்த போதுதான் முடிவுகள் வெளியாகி விட்டதை சொன்னார். பணியின் காரணமாக என்னால் அவற்றை இரண்டு நாட்களுக்கு முன்புதான் பார்க்க முடிந்தது. சரி.. இதில் பிரச்சினை எங்கே இருந்து வந்தது?
போட்டியின் முடிவுகளை அறிவிக்கும் இடுகையில் உயிரோடை பயன்படுத்தி இருக்கும் சில வார்த்தைகள் மனதைக் காயப்படுத்துவதாக உள்ளன. போட்டிக்கு வந்த கதைகளைப் பற்றி சொல்லும்போது அவர் உதிர்த்து இருக்கும் தத்துவ முத்துக்களை கவனியுங்கள்.
//சில கதைகள் தவிர இந்த கருவை ஒட்டியே எல்லோரும் கதை எழுதியிருந்தார்கள். பலரது கதைகளில் இதுதான் சாக்கென்று பாலியல் தொழிலாளியை அதீதமாக வர்ணித்தும், பிரிந்துபோன மனைவியை (என்ன காரணம் என தாங்களாகவே யூகித்துக் கொண்டு) கொச்சைப்படுத்தியும், கணவன் கதாபாத்திரத்தின் ஆண்மையை ஏளனம் செய்தும் அவரவர் பார்வையில் எழுதியிருந்தார்கள். பெரும்பான்மையினர் கதையில் விரசமே அதிகமாக காண முடிந்தது.//
நீங்கள் கொடுத்த கருவை ஒட்டித்தான் எல்லோரும் கதைகள் எழுதினோம். ஒவ்வொருவருக்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கலாம். அதை நீங்கள் பொதுவில் விமர்சிப்பது அவசியம்தானா? இப்படித்தான் கதைகள் இருக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி சொல்லலாம்? கதைகளில் தரம் இல்லை என்று சொல்வதை விட இவர்களால் இதுதான் எழுத முடியும், எல்லோரும் வக்கிரம் படைத்தவர்கள் என்று எள்ளி நகையாடும் பாங்குதான் இந்த வார்த்தைகளில் தொனிக்கிறது. உங்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை உயிரோடை. உங்களின் கவிதைகளை பெரிதும் ரசித்து இருக்கிறேன். ஆனால் தங்களிடம் இருந்து இந்த வார்த்தைகளை நான் ரசிக்க வில்லை.
உயிரோடையின் இடுகையில் நண்பர் கே.ரவிஷங்கரின் பின்னூட்டம் இது..
////வெற்றிப்பெற்ற போட்டியாளர்களுக்கு என் வாழ்த்துக்கள்!நடுவர்கள் முடிவுதான் இறுதி.அதில் எந்த மாற்றமும் இல்லை.என் கருத்துக்கள் சில:-கிரிதரன் மற்றும் ரெஜொவாசன் கதையை ரசித்தேன்.
//பலரது கதைகளில் இதுதான் சாக்கென்று பாலியல் தொழிலாளியை அதீதமாக வர்ணித்தும், பிரிந்துபோன மனைவியை (என்ன காரணம் என தாங்களாகவே யூகித்துக் கொண்டு) கொச்சைப்படுத்தியும், கணவன் கதாபாத்திரத்தின் ஆண்மையை ஏளனம் செய்தும் அவரவர் பார்வையில் எழுதியிருந்தார்கள். பெரும்பான்மையினர் கதையில் விரசமே அதிகமாக காண முடிந்தது. //
உங்கள் சொந்த கருத்து இங்கு ஏன் வருகிறது? அந்த நாலு நடுவரின் கருத்தா? இல்லாவிட்டால் நீஙகளும் ஒரு் நடுவரா? எங்கோ நெருடுகிறதே?
//தன் மனைவியின் புடவை, நகைகளை அணிவித்துப் பார்க்கிறான். அப்பெண்ணை அவனது நண்பனிடமே ”அனுப்பி விடுகிறான்.” //
க்விதையில் ”விருந்தாக்குகிறான்”அதுவும் தன் மனைவியின் ஒப்பனையோடு. இது விரசமில்லையா? காவியமா?////
இதற்கு பதில் கூறும் சாக்கில் நடுவர்களையும் வம்புக்கு இழுத்து இருக்கிறார் உயிரோடை.
//போட்டிக் க‌தைக‌ளை அனுப்ப‌ வேண்டிய‌ முக‌வ‌ரிக‌ளாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌வ‌ர்க‌ள் ந‌ட்புக்காக‌ என் ப‌ணியை ப‌கிர்ந்து கொண்ட‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே. க‌தைக‌ளைப் ப‌ற்றி எழுதி இருந்த‌ விம‌ர்ச‌ன‌ம் ந‌டுவ‌ர்க‌ளாலும் உண‌ர‌ப்ப‌ட்ட‌ ஒரு க‌ருத்தாகும்.//
எனக்குத் தெரிந்து இந்தப் போட்டிக்கு நடுவர்களாக இருந்த நண்பர்கள் நர்சிம், பொன்.வாசுதேவன், யாத்ரா, முத்துவேல் ஆகியோர் இப்படி சொல்லக் கூடியவர்கள் அல்ல. தான் சொன்ன வார்த்தைகளை மெய்யாக்க இவர்களையும் துணைக்கு கூப்பிடுவது எந்த வகையில் நியாயம்?
இதை நண்பர்களிடம் சொன்னபொழுது நீ இதை எழுதினால் பரிசு கிடைக்காத கோபத்தில் எழுதுவதாக சொல்வார்கள் என்றார்கள். பரவாயில்லை. கடந்த எட்டு மாதங்களாக இணையத்தில் எழுதி வருகிறேன். இதுவரை எந்தப் பிரச்சினைக்கும் போனதில்லை. கண்டிப்பாக நான் சொல்ல வருவதில் இருக்கும் நியாயத்தை நண்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என்னும் நம்பிக்கையில் எழுதுறேன்.
எங்கள் ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை உண்டு.. "விருந்துக்கு கூப்பிட்டு நல்லா கவனிச்சு ஓரமா கொஞ்சம் நரகலையும் வச்ச மாதிரி.." போட்டி ஒன்றை அறிவித்து பதிவுலக மக்களை ஊக்குவித்து, எல்லாம் செய்து விட்டு கடைசியில் உங்கள் வார்த்தைகளாலேயே எங்கள் நெஞ்சை குத்திக் கிழித்து விட்டீர்கள் உயிரோடை. இந்த எதிர்வினை கூட உங்களைக் காயப்படுத்தும் நோக்கில் அல்ல.. உங்கள் தவறை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான்.. நான் ஏதேனும் தவறாக சொல்லி இருந்தால் மன்னியுங்கள்..!!!
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

August 1, 2009

நட்பைக் கொண்டாடுவோம்..!!!


உங்களுடைய நண்பர்களை பத்திரமாக வைப்பதாக எண்ணி கண்களுக்குள் வைக்காதீர்கள்.. கண்ணீராக உருகி ஓடி விடக் கூடும்.. மாறாக இதயத்தில் வைத்திருங்கள்.. இதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும் உனக்கென நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பார்கள்..!!!


***************


சின்னக் கோபங்கள்.. செல்லச் சண்டைகள்.. சின்னதா ஒரு தாங்க்ஸ்.. பெருசா ஒரு சாரி.. சில நேரப் பிரிவுகள்.. நேரம் தெரியாமல் போகும் சந்திப்புகள்.. அத்தனையும் ஒரு வார்த்தையில்... நட்பு..!!!


***************


நட்பில் மறக்க முடியாத சில தருணங்கள்..


--> தோழமையோட கையப் புடிச்சிக்கிட்டு நடக்குறது..


--> அன்போட உங்க தோள்ல சாஞ்சிக்கிறது..


--> நண்பனோட சாப்பாட புடுஙகி சாப்பிடுறது..


--> நண்பனுக்கு செலவு பண்ணின பண்ணின பணத்த திருப்பித் தரப்போ, உரிமையா உள்ளே வையுன்னு சொல்றது..


--> நண்பர் அழறப்போ நம்ம கண்ணுலையும் தன்னால கண்ணீர் வரது..


--> தெருத்தெருவா ஊரைச் சுத்துறது..


--> நண்பனுக்கே தெரியாம அவனோட பிறந்த நாளைக் கொண்டாட ஏற்பாடு செஞ்சு ஆச்சரியப் படுத்துறது..


--> கஷ்டகாலங்கள்ல உன்னோட நான் இருக்கேன்டான்னு தைரியம் சொல்றது..


***************


நட்பைப் பொருத்த வரை மூன்று விஷயங்கள் ரொம்ப முக்கியமானவை..


--> ஜெயித்தல்


--> தோற்றுப் போதல்


--> பகிர்தல்


அன்பால் மற்றவர்களின் உள்ளங்களை ஜெயிக்கலாம். நட்பின் முன் நான் என்னும் ஈகோ தோற்றுப் போகும். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது சந்தோஷம் இரட்டாப்பாகி துக்கம் பாதியாகும்.


எங்கோ பிறந்தாலும் நட்பு என்னும் ஒற்றைச் சொல்லால் இணைந்து நிற்கும் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்..!!!


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)