May 3, 2016

அம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே

சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், அல்லது அவரது நினைவாக நடைபெறும் கூட்டங்களின் கன பரிமாணம் ஆகிய அனைத்தும் மகத்துவத்தை அளவிடும் அலகுகள் என்றால், பாபாசாகேப் அம்பேத்கரோடு போட்டியிடும்படியான வேறு எந்தவொரு சரித்திர புருஷனும் இருக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் பிரார்த்தனைக்கூட்டங்கள் நடைபெறும்போதெல்லாம் புதிது புதிதான இடங்கள் அவரது நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இணைந்து கொள்கின்றன. அப்படியானதொரு அதிசயமாக அவர் இருக்கிறார், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மக்களுக்கு இதை நம்புவதற்கு கடினமாகவும் இருக்கலாம், இத்தகைய மனிதர் – பூனைகளும் நாய்களும் அனுமதிக்கப்பட்டதொரு பொது நீராதாரத்தில் தண்ணீர் குடிக்க சிரமப்பட்டவர்– இந்த கிரகத்தில் எப்போதேனும் நடைபயின்றார் என்பது. சொர்க்கத்தில் இருக்கும் கடவுள்கள் கூட, ஒருவேளை அவர்கள் இருப்பார்களெனில், அவர் மீது பொறாமை கொள்ளக்கூடும். இந்த அதிசயத்திற்கு பின்னாலிருப்பது எது? அவர் தலித்துகளின் கடவுளாக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆரம்பத்தில் அவர்களில் ஒரு பகுதியினருக்கு மட்டும், இப்போது, அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு. தனி மனிதனாகவும் தனித்த சிந்தனையோடும் அவர் அவர்களுக்கு செய்தவற்றுக்காக அவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பது இயற்கைதான். ஆயினும் உண்மையில், இதனை மட்டுமே தனித்த மற்றும் ஒரே காரணமென்பதாய் நம்புவது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. ஒரு புனிதபிம்பமாக அம்பேத்கரை கட்டமைப்பதிலும் முன்னிறுத்துவதிலும் வினையூக்கிகளாகச் செயல்படும் ஆளும் வர்க்கங்களின் பங்கு மிக முக்கியமானது, மேலும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பலம் சேர்ப்பதும் கூட. அம்பேத்கரின் மீது உரிமை கோரும் சங்பரிவார்களின் சமீபத்தைய பிரஸ்தாபங்கள், அவற்றின் உள்ளார்ந்த அர்த்தங்களை தலித்துகள் புரிந்து கொள்ளும்படியாக, வெளிப்படையாக, ஒளிவுமறைவற்றே இருக்கின்றன.

புனிதபிம்பத்தின் உருவாக்கம்

அரசில்யல்ரீதியான இந்துவை பிரதிநித்துவப்படுத்திய காங்கிரஸ்தான் அம்பேத்கரின் பிரதான எதிரியாயிருந்தது. 1932 வட்ட மேசை மாநாடுகளின் போது தலித்துகளுக்கென தனித்த வாக்காளர் அடையாளங்களைப் பெறுவதற்கான அம்பேத்கரின் முயற்சிக்கெதிராக காந்தியின் முழுமூச்சான எதிர்ப்பையும், மேலும் தலித்துகளுக்கான எதிர்கால தனித்த அரசியல் அடையாளத்தை முற்றிலுமாய் அழித்தொழித்த பூனா ஒப்பந்தத்தில் அவரை பலவந்தமாக வற்புறுத்தி கையெழுத்திடச் செய்ததையும், நினைவுகூருங்கள். அதிகார மாற்றத்திற்குப் பிறகு, அம்பேத்கர் சட்டசபைக்குள் நுழைந்து விடக் கூடாதெனும் உள்நோக்கத்தோடு காங்கிரஸ் வெகு கவனமாகப் பார்த்துக்கொண்டது. ஆனால் விரைவில் அது எதிர்பாராதொரு அரசியல் குட்டிக்கரணம் போட்டது. நாட்டார் கதை பாணியிலான விளக்கங்களைப் போலிருந்தாலும், உள்ளே நுழைந்திட எந்த வழியும் இல்லாத நிலையில் அம்பேத்கர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பிறகு அதன் வரைவுக்குழுவுக்கான தலைவராக அவரைத் தெரிவு செய்ததும் காந்தியின் தந்திரம் நிரம்பிய நுண்ணறிவே. அரசியலமைப்பில் தலித்துகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாற்றாக இராஜதந்திரத்தோடு அம்பேத்கர் நடந்து கொண்டாலும், புதிதாய் உருவான இந்த உறவு வெகுகாலம் நீடிக்கவில்லை. இந்து சட்ட மசோதா மீதான எதிர்ப்பு குறித்த பிரச்சினையில் நேரு மந்திரிசபையில் இருந்து அம்பேத்கர் பதவி விலக நேர்ந்தது. பிற்பாடு, தானொரு வாடகைக்குதிரையாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லி அம்பேத்கர் அரசியலமைப்பை நிராகரிக்கவும் கூட செய்தார் – அரசியலமைப்பால் யாருக்கும் எந்தப் பயனுமில்லை, மேலும் அதனை எரிக்கும் முதல் நபராக அவரே இருக்கக்கூடும். அவர் காங்கிரஸை தலித்துகள் தங்களுடைய ஆபத்தான காலங்களில் மட்டும் நுழையும்படியான ‘எரியும் வீடு’ என்றழைத்தார். ஆனால், ‘அம்பேத்காரிசத்தைக்’ காப்பதற்காக நூற்றுக்கணக்கான ‘அம்பேத்காரிஸ்டுகள்’ காங்கிரசில் இணைவதை, அதனால் தடுக்க முடியவில்லை.

காங்கிரஸ் வெகு திறமையாக நில சீர்திருத்தங்கள் மற்றும் பசுமைப் புரட்சி போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களின் வழியே கிராமப்புறப் பகுதிகளில் அடர்த்தியான மக்கள்தொகையினைக் கொண்டிருந்த சூத்திரர்களின் இனக்குழுக்களிலிருந்து பணம் நிரம்பிய விவசாயிகள் என்றொரு பிரிவை வார்த்தெடுத்தது. பெரும்பாலும் இந்தப் பிரிவு அவர்களின் கூட்டாளியாக இருந்தபோதும், பிராந்திய கட்சிகளை வளைத்தும் மெதுமெதுவாக உள்ளூர் மற்றும் மாநில அளவிலான அதிகார மையங்களை ஆக்கிரமித்தும் அது தனக்கான தனித்த அரசியல் லட்சியத்தை வளர்த்துக்கொண்டது. தேர்தல் அரசியல் மலிவடைய, முறையே சமூக நீதி மற்றும் மத சீரமைப்பு என்கிற பெயரால் அரசியலமைப்பில் வெகு திறமையாக பாதுகாக்கப்பட்ட சாதி மற்றும் இனக்குழு வடிவிலான ஓட்டு வங்கிகள் முன்னிலைக்கு வந்தன. இங்கிருந்து தான் வெகு கவனமாக, இயல்பாகவே, முதலாவதாக காங்கிரசிடமிருந்தே, அனைவரையும் ஒன்றிணைந்து தேர்ந்தெடுப்பதற்கான ஆளும் கட்சிகளின் இயக்கம் தொடங்கியது, அம்பேத்கரின் அடிப்படை கவலைகள் மூடிமறைக்கப்பட்டன, வெகு நேர்த்தியான முறையில் ஒரு தேசியவாதியாக, பாதி காங்கிரஸ்காரராக, அரசியல் நிபுணர் மற்றும் அரசியலமைப்பை உருவாக்கியவராக, அவர் உருவகப்படுத்தப்பட்டார். இந்த பிரச்சாரம் பல பறவைகளை ஒரே கல்லால் அடித்து வீழ்த்தியது: அம்பேத்காரிய மக்களின் மனதை வென்றது, காங்கிரஸை நோக்கிய சந்தர்ப்பவாத தலித் தலைவர்களின் வெளியேற்றத்தை துரிதப்படுத்தியது, தலித் இயக்கத்தை நிலைகுலைய வைத்து அடையாள அரசியலைத் தழுவும்படி செய்தது, மேலும், அம்பேத்கரை மெல்ல தீவிரமிழக்க வைத்தது. மெதுவாக, தங்களுக்கேயான தனித்த அம்பேத்கரின் புனிதபிம்பத்தை முன்னிறுத்த மற்ற கட்சிகளும் போட்டிக்குள் நுழைய வேண்டி வந்தது.

தங்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கவும் கருத்துருவங்களைப் பரப்பவும் சங்பரிவார் நுட்பமான மற்றும் புதிதாய் வெளிக்கிளம்பும் பிரச்சினைகளை கையாளக்கூடிய இரண்டாம் தலைமுறை இயக்கங்களைத் தொடங்கியது. தலித்துகளைத் தங்கள் கைப்பிடிக்குள் நைச்சியமாய்க் கொண்டு வர ‘சாமாஜிக் சமரசதா மன்ச்’ (சமூக ஒருங்கிணைப்புக்கான மேடை) தொடங்கப்பட்டது. 1925 இல்– தலித் மற்றும் சமூக இயக்கங்கள் தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில்– தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ்- ஆரம்பத்தில் அதன் கற்பனையான இந்து பெரும்பான்மையினரை நம்பி இருந்தது, ஆனால் காங்கிரஸ் எதிர்ப்பலையை பயன்படுத்தி 1977 லோக்சபா தேர்தலில் 94 இடங்களைக் கைப்பற்றும் வரை சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் யாதொரு அடையாளத்தையும் ஏற்படுத்தவியலாது தோல்வியுற்றது.

அம்பேத்கரை ‘காவிமயமாக்குதல்’

தொடக்கத்தில், அம்பேத்கரின் இந்து எதிர்ப்பால் அவமதிக்கப்பட்டு அது மறைமுகமாக அவரை இகழ்ந்தது, மேலும், பிற்காலத்தில் பால் தாக்கரே பகிரங்கமாக ஒப்புக்கொண்டதைப் போல, அம்பேத்காரியரல்லாத தலித்துகளைச் சார்ந்திருந்தது. என்றாலும், அரசியல் அதிகாரமென்னும் மாமிசத்தின் ருசியை அறிந்திருந்ததால், அனைத்து இந்திய தலித்துகளுக்கானதொரு பிம்பமாய் வளர்ந்து விட்டிருந்த அம்பேத்கரை தன்னால் நிராகரிக்க முடியாதென்பதை அது புரிந்து கொண்டது. ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத சிதறலான அவரது கூற்றுகளைத் திரட்டி அவற்றோடு கோயபெல்ஸ்தனமான பொய்களைக் கலந்து, அவரை காவிமயமாக்க திட்டம் தீட்டியது. அம்பேத்கர் மீதான காவி நிற தீற்றல்களில் முதலாவது இணையற்றதை ஒப்பிடுவதாக இருந்தது, அம்பேத்கரை ஹெட்கேவரோடு, ஏதோ, மெட்ரிகுலேசனுக்குப் பின்பாக வரும் டிப்ளமோவைக் கொண்டிருந்த அரசு அனுமதி பெற்ற மருத்துவ பயிற்சியாளரான ஹெட்கேவரும், உலகப் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களிலிருந்து இரண்டு முனைவர் பட்டங்களைப் பெற்றிருந்த அம்பேத்கரும், ஒப்பிடத்தக்கவர்கள் என்பதைப் போல, அவர்களை “இரு மருத்துவர்கள்” என்றழைத்தார்கள். உண்மையாகவே அவர்கள் இருவருக்கும் மத்தியில் என்னதான் ஒற்றுமை இருக்கக்கூடும்? 
    
அம்பேத்கரின் நேரடித்தன்மை எண்ணற்ற முரண்பாடுகளை விட்டுச் சென்றாலும், யாராலும் அவரது வாழ்வின் மையப்பொருளை தவறவிட முடியாது, அவர் தனது சொந்த வார்த்தைகளில் சொன்னதைப்போல, ஒருங்கிணைப்பை வலியுறுத்தக்கூடிய ‘விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம்’ ஆகியவற்றின் அடிப்படையிலான மாதிரி சமுதாயத்தை உருவாக்குவது. சாதிகளை ஒழிப்பதையும் பொதுவுடைமையையும் (வர்க்கங்களை ஒழித்தல்) அவர் அதற்கான முன் நிபந்தனைகளாகப் பார்த்தார்; குடியரசு அவற்றின் மிக முக்கியமான அங்கம் மற்றும் பௌத்தம் அதனை நெறிப்படுத்தும் கொள்கை.

ஆர்எஸ்எஸ்-சின் உலகப்பார்வை என்பது இதற்கு எல்லா விதத்திலும் நேர் எதிரானது. காவிநிற அம்பேத்கர் ஒரு தேசியவாதி; சாதி குறித்த பிரக்ஞையின் காரணமாக இந்துக்களால் ஒரு தேசத்தை உருவாக்க முடியாது என உண்மையான அம்பேத்கர் வாதிட்டார், மேலும் மிகக்குறிப்பாக ‘இந்து ராஜ்ஜியம்’ என்பது பெரும் விபரீதம் என்று எச்சரிக்கவும் செய்தார். தானொரு இந்துவாக மரணிக்க மாட்டேன் என்கிற அவருடைய சத்தியத்தையும் மீறி ஆர்எஸ்எஸ்ஸின் அம்பேத்கர் ஒரு மகத்தான இந்து. பௌத்தத்தை, இந்துத்துவத்தைக் கைவிட்ட பின்பாக அம்பேத்கர் அரவணைத்துக் கொண்டதை, அது இந்துத்துவத்தின் ஒரு அங்கமாகவே முன்வைத்தது, இந்துத்துவத்திற்கு எதிரான சிரமண புரட்சியையும், அதற்கு எதிராக பின்னது நிகழ்த்திய, பௌத்தத்தை அது தோன்றிய நிலத்திலிருந்து முற்றிலுமாய் துடைத்தெறிந்த, குருதியில் தோய்ந்த எதிர் புரட்சியையும் – பௌத்தம் அடையாளப்படுத்திய மொத்த வரலாற்றையும் இதன் மூலமாக ஒதுக்கித் தள்ளியது.

அம்பேதர் சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என விரும்பினார், தேசியக்கொடியாக காவிநிறக்கொடி, மேலும் ஆர்எஸ்எஸ்ஸை அதன் நல்ல முயற்சிகளுக்காகப் பாராட்டினார், மற்றும் ‘கர் வாப்ஸி’-ஐ’ (தாய் மதம் திரும்புதல்) ஆதரித்தார் என்பது போன்ற அறைகூவல்கள் அம்பேத்கரை விஹெச்பி குரங்குகளின் தரத்துக்கு சிறுமைப்படுத்த முயல்கின்றன, அவை குறித்து ஏதும் கருத்து சொல்லக்கூட தகுதியற்றவை. அவருடைய ‘பாகிஸ்தான் குறித்த சிந்தனைகளிலிருந்து’ தொடர்பற்ற வாக்கியங்களை எடுத்துக்காட்டி சங்பரிவார் அறிவுஜீவிகள் அம்பேத்கர் முஸ்லிம்களுக்கு எதிரானவராக இருந்தார் என்று சொல்லி வருகிறார்கள். வாக்குவாதம் செய்வதான நடையில் எழுதப்பட்ட புத்தகம் இது, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருக்குமான வழக்கறிஞரின் உடைகளை அம்பேத்கர் அணிகிறார். ஒருவர் வெகு சிரத்தையோடு வாசிக்காவிட்டால் அதன் முக்கியமான பல தர்க்கங்களை அவர் தவற விடக்கூடும். முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் – கட்டுக்கதைகளும் உண்மைகளும் என்கிற எனது புத்தகத்தில், 2003-ல் நான் இந்தப் பொய்யை உடைத்தெறிந்திருக்கிறேன். ஆனால் மீண்டும், அவருடைய பரந்த குணத்தையும் மாற்றத்துக்கான அவருடைய தேர்வு இஸ்லாமாக இருக்கலாம் (முக்தி கோன் பதே 1936) எனச் சொல்லும்படியாக முஸ்லிம் சமூகத்தை அவர் பாராட்டியதாக கிடைக்கக்கூடிய எண்ணற்ற தரவுகளைக் கொண்டும் பார்க்கும்போது, அவரை ஒரு குறுகிய சிந்தனையாளராக, முஸ்லிம் எதிர்ப்பாளராக வரையறுக்கவியலாது. ஆர்எஸ்எஸ் இதனைப் புரிந்து கொள்வது நல்லது, சில தலித் அடிமைகளை அது தன்னுடைய மேடைகளில் தோன்றச் செய்யலாம், ஆனால் ஒருபோதும் அம்பேத்கரை ஒரு வகுப்புவாதியாக நிறுவிட முடியாது.

நவீன-தாராளமய நிர்ப்பந்தம்

பலதரப்பட்ட அரசியல் உற்பத்தியாளர்களால் இந்தியாவின் தேர்தல் சந்தையில் கையளிக்கப்பட்ட, தங்களுக்குள் போட்டியிடும் அம்பேத்கரின் புனிதபிம்பங்கள், உண்மையான அம்பேத்கரை முற்றிலுமாக மூடிமறைத்து தலித் விடுதலைக்கான சக்திவாய்ந்த ஆயுதத்தை அழித்து விட்டன. வெவ்வேறு நிறபேதங்களைக் கொண்டிருந்தாலும், இந்த புனிதபிம்பங்கள் எல்லாமே, அம்பேத்கரின் மீது நவீன-தாராளமயம் எனும் நிறத்தைப் பூசுகின்றன. ஒரு அம்பேத்கர் பிம்பம் அரசின் அதிர்ஷ்டவுருவாக, 1947இல் இருந்து 1980கள் வரை சரியாக வேலை பார்த்து வந்த காந்தியை, கிட்டத்தட்ட பதவியிழக்கச் செய்தது. ஆட்சி அமைப்பொழுங்கை நிர்வகிப்பதில், மக்களுக்கெதிரான அரசின் தந்திரங்கள், அவர்களின் நன்மைக்கானதாய்ச் சொல்லப்பட்ட பொய்த்தோற்றங்கள், மற்றும் அதன் இந்துத்துவ ரீதியிலான வளர்ச்சி ஆகியவற்றை மறைக்க, ஆட்சியாளர்களுக்கு, காந்தி மிகப்பொருத்தமானவராக இருந்தார். ஆனால் முதலாளித்துவ பிரச்சினைகள் அதிகரிக்க அரசு தன் பிரகாசத்தை இழக்கத் தொடங்கியது, ஆட்சியாளர்களை நவீன தாராளமய கொள்கைகளை நோக்கி உந்தித் தள்ளியது. அதிதீவிர முன்னேற்றம், நவீனமயமாக்கல், வெளிப்படையான போட்டி, சந்தைமயமாக்கல் போன்ற பசப்புரைகள், குறிப்பாக அவற்றால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் அடித்தட்டு மக்களிடம் தாராளமயமாக்கப்பட்ட சந்தைகளை ஏற்றுக்கொள்வதால் ஒன்றுமற்றவனாய் இருப்பதிலிருந்து பணக்காரனாய் மாறுவதற்கான சாத்தியங்களை வலியுறுத்த, மக்களை நம்ப வைக்கும் புதியதொரு பிம்பத்துக்கான தேவையை உருவாக்கின. மற்ற எல்லாரைக் காட்டிலும் அம்பேத்கர் இதற்கு மிகச்சரியாகப் பொருந்தி வந்தார். புதிதாய்ப் பிறந்த சவலைப்பிள்ளையான இந்தியாவுக்கென ஒரு அரசியலமைப்பை வடிவமைக்க வேண்டிய காலத்தில் காந்தி உணர்ந்த அதே தந்திரமான தேவை போன்றதுதான் இது. நவீன-தாராளமயத்தின் சமூக டார்வினிச பண்புகள் மேலதிகார ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தாக்கங்களோடு ஒரு குறிப்பிட்ட ஒத்திசைவைக் கொண்டிருந்தன, இதுதான் பிஜேபியை அரசியல் அதிகாரத்தின் வானளாவிய எல்லைக்கு உயர்த்தியது.

தலித்துகளைக் கவர எல்லா கட்சிகளுமே அம்பேத்கர் புனிதபிம்பத்தை பயன்படுத்தினாலும், 1990கள் தொடங்கி, பிஜேபியோடு இணைந்து ஆர்எஸ்எஸ் தான் மிக அதிகமான சுயநல நோக்கில் அதனை பயன்படுத்திக் கொண்டுள்ளது, காங்கிரஸைக் காட்டிலும் அதிகமான தனித் தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது. நவீன-தாராளமய அரசுக்கு தலித்துகளிடையேயிருந்து கதைப்பாடகர்கள் மிக அத்தியாவசியமாகத் தேவைப்பட்டார்கள், அவர்களும் அதற்கு கிட்டினார்கள். தங்களது நாயகர்களால் வழிநடத்தப்பட்ட குறிப்பானதொரு தலித் நடுத்தர வர்க்கம், எப்படி நவீன-தாராளமயம் அவர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும் என்பதாக தலித்துகளை நம்ப வைக்க ஆரம்ப காலகட்டங்களில் வெகு தீவிரமாக முயன்றார்கள், எவ்வாறு அம்பேத்கர் ஒரு நவீன-தாராளமயவாதி என்பதையும் எப்படி இந்தக் கொள்கைகள் விளைவித்த தலித் மத்திய வர்க்கத்தின் ‘புரட்சியால்’ தலித்துகளின் அபரிதமான முன்னேற்றங்கள் நிகழ்ந்தன என்பது குறித்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் பேசினார்கள். இந்த நடுத்தர வர்க்கம் பிஜேபியோடு பிரத்தியேகமானதொரு உறவைக் காண்கிறது, ஆகவே இதன் காரணமாகத்தான் பெரும்பாலான தலித் தலைவர்கள் இன்று பிஜேபி அணியில் இருக்கிறார்கள். (மேலதிகத் தகவல்களுக்கு எனது ‘மூன்று தலித் ராமர்கள் பிஜேபிக்காக அனுமார் வேடம் தரிக்கிறார்கள்’ என்கிற கட்டுரையை வாசிக்கலாம், EPW, 12 ஏப்ரல் 2014). இந்த வருடம், அசாதாரணமான திறனோடு, அம்பேத்கர் மாணவனாக அவற்றிலொரு விடுதியில் தங்கியிருந்தார் என்பதற்காக மட்டுமே, லண்டனில் இருக்கும் சாதாரணமானதொரு கட்டடத்தை 44 கோடிகளுக்கு பிஜேபி அரசாங்கம் விலைக்கு வாங்கியுள்ளது; மேலும் மும்பையில் மிகப்பெரிய அம்பேத்கர் நினைவிடம் கட்டுவதற்காக இந்து ஆலை நிலத்தை வழங்குவதிலிருந்த தடைகளை அகற்றியதோடு அதற்கு சமமான மிகப்பெரிய அம்பேத்கர் சர்வதேச நிலையத்தை டெல்லியில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.  

இதுபோன்ற தந்திரமான நடவடிக்கைகள் அனைத்தும் தலித்துகளை மயக்குகின்றன, அவர்களில் 90% இன்னும் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எப்படி இருந்தார்களோ அது போன்றதொரு வாழ்க்கைத் தரத்தில்தான் இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள், அல்லது இன்னும் மோசமாக, அப்போது அவர்களுக்கு நம்பிக்கைகள் இருந்தன ஆனால் இப்போது அவர்களிடம் எதுவுமில்லை. அம்பேத்கரின் ‘சமத்துவம்(சமதா)’ என்பது ‘சமூக நல்லிணக்கம் (சமரசதா)’ என்றாகாது அல்லது அம்பேத்கரின் உலகப்பார்வை என்பது அவர்களை ஒழித்துக் கட்ட முயலும் நவீன-தாராளமயமாகிய சமூக டார்வினிசம் கிடையாது என்பதையும், அவர்கள் அறியமாட்டார்கள். ஒரே ஒரு பதிற்றாண்டின் நிதிநிலை அறிக்கைகளில் அவர்களுக்கான ஒதுக்கீட்டிலிருந்து அரசாங்கத்தால் கையாடப்பட்ட ஐந்து லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையோடு ஒப்பிடும்போது அம்பேத்கர் நினைவிடங்களின் மீதான சில நூறு கோடிகள் என்பது பிச்சைக்காசு என்பது கூட அவர்களுக்குப் புரிவதில்லை.

ஆனந்த் தெல்தும்ப்தே


எழுத்தாளர், அரசியல் விமர்சகர் மற்றும் மனித உரிமை ஆர்வலர். இடதுசாரி மற்றும் தலித் இயக்கங்கள் சார்ந்து நிறைய நூல்களை எழுதியுள்ளார். சமகாலப் பிரச்சினைகள் குறித்து தொடர்ச்சியாக Outlook Inida, Tehelka, Mainstream, Seminar போன்ற பல பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். இந்தக் கட்டுரை Economic and Political weekly-ல் அவர் எழுதும் பத்தியான ‘Margin Speak’-ல் 2.5.2015 அன்று வெளியானது.

(கொம்பு சிற்றிதழில் வெளியான மொழிபெயர்ப்பு கட்டுரை)

March 9, 2016

மூன்று மொழிபெயர்ப்பு நூல்களுக்கான அறிமுகக் கூட்டம் (6.3.16)

கடந்த ஞாயிற்றுக்கிழமை 6-3-16 அன்று நெல்லை சிந்து பூந்துறையில் உள்ள மூட்டா அரங்கில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. வலசை சிற்றிதழும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வை எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் தொகுத்தளித்தார்.
நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்று நூல்கள்...

நீர்க்கோழி - ஹருகி முரகாமி சிறுகதைகள்
வலசை வெளியீடு
தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ்

அஞ்சல் நிலையம் - சார்ல்ஸ் புகோவ்ஸ்கி
எதிர் வெளியீடு
தமிழில்: வி.பாலகுமார்

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - யுகியோ மிஷிமா
எதிர் வெளியீடு
தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்

கவிஞர் கைலாஷ் சிவன், கவிஞர் கிருஷி, கவிஞர் கடங்கநேரியான், பேராசிரியர் அ.ராமசாமி, மொழிபெயர்ப்பாளர் ஜெ.சாந்தாராம், ஓவியர் கதிர், நண்பர்கள் ஈஸ்வரன், சுப்ரா வே.சுப்ரமணியன், தீபா நாகராணி, விஜயன் மற்றும் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வின் முதல் அமர்வாக மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் நீர்க்கோழி பற்றிய தன் கருத்துகளை முன்வைத்தார்.
“ஹருகி முரகாமி இன்று உலகளவில் புகழ்பெற்ற எழுத்தாளராக இருக்கிறார். வெகுசன அளவிலும் இலக்கிய ரீதியாகவும் தொடர்ந்து கவனம் பெற்ற மனிதராக அவர் இருக்கிறார் என்பது எப்படி சாத்தியம் ஆகிறது? மரபான ஜப்பானிய எழுத்திலிருந்து அவர் எப்படி வேறுபடுகிறார் என்பதை எல்லாம் நாம் பேச வேண்டியிருக்கிறது. வெகு சாதாரணமானதொரு விசயத்தை எடுத்துக் கொண்டாலும் உளவியல் ரீதியாக அவர் அதைக் கொண்டு செல்லும் விதம் வெகு அபாரமானது. அவருடைய எழுத்து இரு வேறு உலகங்களை இணைக்கிறது. கிட்டத்தட்ட நவீன இசையை ஒத்த அல்லது அதிலிருந்தே முரகாமியின் எழுத்துகள் உருவாகி வருகின்றன என்றும் சொல்லலாம். இது மிகத்தெளிவாக நேற்று என்கிற கதையில் வெளிப்படுகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள மற்றொரு முக்கியமான கதை 100% பெண்ணை என்கிற கதை. இது ஏற்கனவே வேறொருவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. எனினும் அதில் சில சிக்கல்கள் இருந்தன. ஆனால் ஸ்ரீதர் அதனை மிகச்சரியாகவும் தெளிவாகவும் சரி செய்திருக்கிறார். ஆக ஒரு படைப்புகான வெவ்வேறு வடிவங்கள் கிடைக்கும்போதுதான் நம்மால் எது சரியானது என்பதை உணர முடிகிறது. போலவே ஸ்ரீதர் சில புதிய வார்த்தைகளை இந்த மொழிபெயர்ப்புக் கதைகளில் பயன்படுத்தியுள்ளார். அதில் ஓரின விரும்பி எனும் வார்த்தையை நான் மிகவும் ரசித்தேன். ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு இதுபோன்ற புதிய வார்த்தைகளுக்கான தேடலும் அவசியம். மொத்தத்தில் இந்தத் தொகுப்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் சந்தோசத்தையும் தந்தது என்பது உண்மை. அருமையாக மொழிபெயர்த்திருக்கும் ஸ்ரீதர் ரங்கராஜுக்கு வாழ்த்துகள்..”

நண்பர் ஸ்ரீதரின் ஏற்புரை...
“நான் ஏற்கனவே வேறு சில கதைகளை மொழிபெயர்த்திருந்தாலும் கூட முதல் தொகுப்பு எனும்போது எனக்கானதொரு நல்ல அடையாளமாக இருக்கும் என்றே முரகாமியைத் தேர்வு செய்தேன். அப்படித் தேர்வு செய்யும்போது இங்கு ஏற்கனவே பரவலாகப் பேசப்பட்டு வந்த மாய யதார்த்த கதைகளை விட்டு விலகி அவர் எழுதிய அற்புதமான யதார்த்தக் கதைகளை மட்டும் கொண்டு வருவது என முடிவு செய்து கொண்டேன். புதிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதும் கவனம் பெறுகிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு என்னால் வர முடியவில்லை. வெளிநாட்டில் இருந்தேன். ஆனால் இங்கு நெல்லையில் இந்த மூன்று புத்தகங்களுக்குக் கூட்டம் நடைபெறுவது சந்தோசமாக இருக்கிறது. மற்ற இருவரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்பதோடு மதுரையில் ஒன்றாகச் சுற்றித் திரிந்தவர்களின் புத்தகங்கள் ஒரே மேடையில் விவாதிக்கப்படுவதும் சிறப்பு. தொடர்ந்து உழைப்பதற்கான, புதிய விசயஙளைப் பேசுவதற்கான உற்சாகத்தை இந்தக் கூட்டம் எனக்களித்துள்ளது. நீர்க்கோழியை வெளியிட்ட வலசைக்கும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தமுஎகசவுக்கும் என் நன்றிகள்...”

நிகழ்வின் இரண்டாவது அமர்வு பாலகுமார் மொழிபெயர்த்த அஞ்சல் நிலையத்துக்கான அறிமுகம். உடல்நிலை காரணமாக விமர்சகர் மணிமாறன் பங்கேற்க முடியாத சூழலில் கவிஞர் போகன் சங்கர் நூலை அறிமுகம் செய்து பேசினார்.
“இங்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஹருகி முரகாமியைப் பற்றியதொரு உரையாடல் நடைபெற்றது. முழுக்கவே ஜப்பானிய மரபிலிருந்து விலகி இன்றைய மேற்குலகத்துக்கு அணுக்கமான எழுத்துகளைப் படைப்பவர் முரகாமி. தனக்கான ஒழுங்குகளையும் விழுமியங்களையும் மிகத் தீவிரமாகக் கடைபிடிப்பவர். அந்தப் புள்ளியிலிருந்து விலகி முற்றிலும் எதிர்நிலையிலிருந்து இயங்கக்கூடியவர்தான் புக்கோவ்ஸ்கி. அவருடைய கலை கலகத்திலிருந்து பிறக்கிறது. அவருக்கு எந்த விழுமியங்களும் கிடையாது. குடி மற்றும் பெண்கள்தான் அவருடைய உலகம். அதைப் பற்றி விரிவாக எழுத அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. அவரைப் பொறுத்த மட்டில் அவருடனிருந்த அனைவருமே அவருடைய எழுத்துகளுக்கான ஊற்றுக்கண்கள்தான். தன்னோடு உடனிருந்த பெண்களின் நிர்வாணத்தை, உடல் மற்றும் மனதளவில், அவர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவருடைய வாழ்க்கையை விரிவாகப் பேசும் ஒரு நூலை வாசிக்க முடிந்தது. அத்தனை வசீகரமான வெளிப்படையான மனிதனாயிருக்கிறார். ஒருவேளை பாலகுமார் இந்த நூலை சில பத்தாண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்திருந்தால் தொண்ணூறுகளில் அவரை நகல் செய்ய முயன்று தோற்ற தமிழ் இலக்கியவாதிகளிடமிருந்து நாம் தப்பியிருக்கலாம். இந்த புதினத்தின் ஆதாரமாய் இருப்பது புக்கோவெஸியின் மெல்லிய நகைச்சுவை உணர்வு. அதை எந்த விதத்திலும் பாதிக்காமல் கிட்டத்தட்ட நேரடியாகத் தமிழில் வாசிப்பதான உணர்வைத் தரும்படி பாலகுமார் இதனை மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்..”

பாலகுமாரின் ஏற்புரை..
“இது திட்டமிட்டு செய்த விசயம் கிடையாது. அடிப்படையில் என்னை மொழிபெயர்ப்பாளன் என்று சொல்லிக் கொள்வதில் அத்தனை விருப்பம் இல்லாதவன் நான். ஆனால் அஞ்சல் நிலையம் எனக்கான ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று நம்புகிறேன். பொதுவாக என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே Reverse Engineering தான். எதிர் வெளியீட்டில் இருந்து இந்தப் புத்தகத்தைத் தந்தபோது எனக்கு புக்கோவ்ஸ்கியைத் தெரியாது. ஆனால் புத்தகம் கைக்கு வந்த பிறகு அவரைப் பற்றியும் பீட் ஜெனரேஷன் பற்றியும் அவர்கள் இயங்கிய தளம் பற்றியும் விரிவாக அறிந்து கொண்டேன். நான் கட்டுப்பாட்டுக்குப் பெயர் போனதொரு அரசுப்பணியில் இருப்பவன். ஆனால் இந்த நாவலை மொழிபெயர்த்த காலத்தில் மெல்ல மெல்ல எனக்குள் நிகழ்ந்த மாற்றங்களை என்னால் உணர முடிந்தது. அதிகாரத்துக்கு வெளியிலிருந்து அதிகாரத்துக்கு எதிராகப் பேசிய புக்கோவ்ஸ்கியை எனக்குள் நான் உணர்ந்த காலகட்டம் அது. அந்த உணர்வோடுதான் நான் ஆலன் கின்ஸ்பெர்கின் நீண்ட கவிதையான Howl-ஐயும் மொழிபெயர்த்துள்ளேன். இந்த நாவலை மொழிபெயர்க்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த நண்பர் கார்த்திகைப் பாண்டியனுக்கும் என் மீது நம்பிக்கை வைத்து வெளியிட்ட எதிர் வெளியீடு அனுஷுக்கும் நன்றி. நான் என்னுடைய முதல் மொழிபெயர்ப்பை வலசையில் தான் செய்தேன். என்னை அடையாளம் காட்டிய நண்பர் நேசமித்ரனுக்கும் என் மனதார்ந்த நன்றிகள்...”

நிகழ்வின் மூன்றாவது அமர்வு மிஷிமாவின் ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய அறிமுகம். தான் வர முடியாத சூழலில் கவிஞர் சமயவேல் தன்னுடைய கட்டுரையை அனுப்பி வைத்திருந்தார்.

மிஷிமா தன்னுடைய இளம் வாழ்வின் எல்லாவற்றையும் வெளிப்படையாக, ஒன்று விடாமல் கூறும் இந்த வாக்குமூலம் 1949ல் எழுதப்பட்டது. பால், பாலியல், வதைமரணம் முதலான மானுட வலியையும், மானுடம் தன் இயல்பில் சுகிக்கும் வன்முறையையும், மிக நுட்பமான உளவியல் கூறுகளாக படிப்படியாகக் கட்டமைப்பதின் மூலம் இந்த நாவலில் மிஷிமா செய்திருப்பது ஓர் உளவியல் சிகிட்சை என்றே கூறலாம். பிறப்பில் ஆண், பெண் என்ற கறாரான பால் பிரிவுகளை மட்டுமே அறிந்த, அங்கீகரிக்கிற பலருக்கும் இப்புதினம் பெரும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கலாம். திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வும், ஒருபால் ஈர்ப்புகள் மற்றும் திருமணங்கள் குறித்த புரிதல்களும் அரும்பத் தொடங்கியிருக்கும் இக்காலத்திற்கு, 1949ல் எழுதப்பட்ட இந்தப் புதினம் ஆச்சர்யமூட்டும் வகையில் பேருதவியாக இருக்கிறதுஇயற்கை மிஷிமாவின் பால் நிர்ணயத்தில் செய்துவிட்ட துரோகத்தை அவர் மொத்த வாழ்வையுமே மறுதலிப்பதின் மூலம் (நிகிலிஸ்ட், நீட்சேயிஸ்ட் எனும் முத்திரைகள் வேண்டாம்) சரிசெய்து கொண்டார் என்றும் தோன்றுகிறது. 1949ல் ஜப்பான் மட்டுமல்ல, அனேக தேசங்கள் இறுகிய பண்பாடுகளால் ஆன சமூகங்களைக் கொண்டவையே. இறுகிய பண்பாடுகள் மட்டுமே ஸ்திரமான வாழ்க்கையைத் தரும் என்று நம்பினார்கள்/நம்புகிறார்கள். ஆனால் அவை கோச்சான் போன்ற எளிய சின்னஞ் சிறு மனிதர்களை கொடூரமாக நசுக்கிக் கொன்றுவிடுவதை மிஷிமாவின் நாவலாக நாம் அனுபவிக்கிறோம். ஆண்தன்மையற்ற ஒருவர் திருநங்கையாகவோ அல்லது முன்னேறிய அறுவைச் சிகிச்சைகள் மூலம் பெண்ணாகவோ மாறுவதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாத சமூகத்தில்தான் இன்னும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக, கடந்த காலத்தைக் கனாக் காணும் மீட்பாளர்களுக்கு மிஷிமாவின் வாழ்வும் எழுத்தும் ஒரு பாடம். குறிப்பாக மதச் சமூகங்களால் ஆன பழம்பெருமை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் இன்று தலைதூக்கி நிற்கும் இந்தப் போக்கு மிதமிஞ்சிய வன்முறையையும் அழிவுகளையும்தான் கொண்டுவரும் என்பதை திட்டவட்டமாக நிரூபிக்கிறார் யுகியோ மிஷிமாபால்கடந்த (Transgender) ஜீவன்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களது ஒருபால் திருமணம் போன்ற ஆசைகளையும் அங்கீகரித்து பெரும் சமூக வாழ்வோடு இணைத்துக் கொள்வதில் நாம் இன்னும் தயங்க வேண்டியதில்லை என்பதுவே இந்த நாவலின் செய்தி. சிக்கலான இந்த உளவியல் நாவலைக் கண்டுபிடித்து அருமையாக மொழிபெயர்த்திருக்கும் கார்த்திகைப் பாண்டியனுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்..."

கார்த்திகைப் பாண்டியனின் ஏற்புரை..
“சமயவேல் தன்னுடைய கட்டுரையில் நான் என்பது நானில்லை எனில் நான் என்பது யார் என்கிற கேள்வியை மிஷிமா தொடர்ந்து முன்வைப்பதாகச் சொல்கிறார். இதுதான் என்னை மிஷிமாவுடன் பிணைக்கிறது. தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்ட கலைஞர்களை வலசைக்காகத் தேடும்போது தான் மிஷிமா எனக்கு அறிமுகம் ஆனார். இன்றளவும் மரணம் குறித்து பெரும் அச்சம் கொண்டவனாயிருக்கும் எனக்கு அவருடைய தற்கொலை பிரமிப்பை உண்டாக்கியது. அதன் பிறகுதான் அவரைத் தேடி வாசிக்கத் தொடங்கினேன். ஒருவர் என்னவாக இருக்கிறாரோ அதை ஒத்தே அவருடைய தேர்வுகளும் அமையும். மிஷிமாவின் இந்த நாவல் அந்த வகையில் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஓரினச் சேர்க்கையாளன் என்பதைத் தவிர்த்து எனக்கும் கோச்சானின் பால்யத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. இந்த நாவல் மொத்தமும் இரண்டு தளங்களில் பயணிக்கிறது. உடல் மற்றும் மனம் என இரண்டு வகையிலும் வாசகனோடு தன் உரையாடலை நிகழ்த்துகிறது. அவ்வகையில் இந்த நாவலை மொழிபெயர்த்ததில் என்னால் ஒரு தன்னிறைவை உணர முடிகிறது. வலசையின் வழி என்னை வடிவமைத்த நண்பர் நேசமித்ரனுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். மூன்று நண்பர்களின் புத்தகங்களை ஒரே மேடையில் பேசும் வாய்ப்பை உருவாக்கித் தந்த நண்பர் நாறும்பூநாதனுக்கு என் நன்றி...”

இறுதியாக கவிஞர் நேசமித்ரன் நன்றியுரை வழங்கினார்.
“இந்த நிகழ்வு ரொம்பவே உணர்வுப்பூர்வமான ஒன்று. வலசையின் நீர்க்கோழி மற்றும் எதிர் வெளியீட்டின் இரு புத்தகங்கள். இது தகவல்களின் யுகம். வெவ்வேறு மொழிகளில் வரும் படைப்புகள் அனைவருக்கும் நேரடியாக கிடைக்கக்கூடிய காலகட்டம். மிகத் தெளிவாகவும் சரியாகவும் படைப்பாளிகள் புத்தகங்களை அறிமுகம் செய்து பேசினார்கள். அவர்களுக்கு என் நன்றி. என்னளவில் வலசை என்னுடைய மொழியை இலக்கியச் செறிவை வளர்த்துக் கொள்வதற்கான சாதனமாக இருந்தது. அதிலிருந்து உருவான மூன்று நண்பர்களை இங்கே ஒருங்கே காண்பதில் வலசை பெருமை கொள்கிறாள். வலசைக்கான மொழிபெயர்ப்புப் பணிகளின் போது படைப்புகளின் செறிவுக்காக நாங்கள் நிறைய மெனக்கெடுவோம். ஒரு சில படைப்புகளை மீண்டும் மீண்டும் மாற்றித் தரும்படி நண்பர்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு இங்கு அமர்ந்திருக்கும் நண்பர்கள் ஒத்துழைத்தார்கள். அவர்கள் இன்று நல்லதொரு நிலைக்கு வந்ததற்கான காரணம் அதுவாகக் கூட இருக்கலாம். தங்கள் தவறுகளை சரி செய்து கொள்ள இவர்கள் ஒருபோதும் தயங்கியதில்லை என்பதுதான் உண்மை. இவர்கள் மூவருமே மொழிபெயர்ப்பில் தங்களுக்கென தனிப்பட்ட நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பவர்கள். ஸ்ரீதர் ஒரு படைப்பை எவ்வளவு எளிதாகத் தர முடியும் என்று யோசிப்பவர். பாலா புதிய வார்த்தைகளையும் சொல்முறைகளையும் கண்டடைய முயல்பவர். கார்த்தியை மரபு சார்ந்து இயங்குபவர் என்று சொல்லலாம். இவர்களைப் பாராட்டும் வேளையில் குறைகளைச் சுட்டிக்காட்டும் உரிமையும் எனக்குண்டு என்று நம்புகிறேன். ஸ்ரீதரின் மொழிபெயர்ப்பில் அவ்வப்போது அவர் வாய் வார்த்தையாகப் பேசுவதையும் பயன்படுத்துகிறார். மொழிபெயர்ப்பில் நாம் காலத்தையும் பொருட்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். பாலா சில வார்த்தைகளை ஒன்றிணைத்து எழுதும்போது அவை வேறொரு வடிவம் கொள்வதை கவனிக்க வேண்டும். கார்த்தியைப் பொறுத்தவரை, நாம் இத்தனை கறாராக இருக்க வேண்டியதில்லை. மூலத்துக்கு நியாயம் செய்யும் அதே வேளையில் படைப்பை சரியான முறையில் வாசகனுக்குக் கடத்தவும் வேண்டியிருக்கிறது. மிக நீண்ட பயணத்தில் இவர்கள் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துகள். தமுஎகசவுக்கு வலசையின் நன்றியும்...”
நிகழ்வின் இறுதியில் கைலாஷ் சிவன் முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய தன் வாசிப்பனுவத்தைப் பகிர்ந்து கொள்ள கூட்டம் முடிவுற்றது.