June 29, 2010

உக்கார்ந்து யோசிச்சது(29-6-10)..!!!

உங்களோட பைக்க ஜம்முனு ஓட்டிக்கிட்டு, நீங்க பாட்டுக்கு ரோட்டில ஜாலியா போய்க்கிட்டு இருக்கீங்கன்னு வச்சுக்கோங்க.. திடீர்னு உங்க பக்கத்துல வந்த ஒருத்தன், உங்களுக்கு யாருன்னே தெரியாத ஆளு.. "ஏண்டா டேய்.. உனக்கெல்லாம் அறிவே கிடையாதா"ன்னு சம்பந்தமே இல்லாம திட்டினா எப்படி இருக்கும்? ரெண்டு நாளைக்கு முன்னாடி இதேதான் எனக்கு நடந்துச்சு. சாயங்கால நேரம். கல்லூரி முடிஞ்சு வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கேன். மேலமாசி வீதி. செமையான டிராபிக். சர்க்கஸ் மாதிரி வண்டி ஓட்டிக்கிட்டு இருக்குறப்ப திடீர்னு எனக்கு இடது பக்கத்துல இருந்து அந்தக் குரல் வந்தது.

"நீயெல்லாம் சோத்துல உப்பு போட்டுத்தானடா தின்ற?"

எவன்டா அவன்னு திரும்பிப் பார்த்தா.. புல்லட்டுல கெடா மாடு மாதிரி ஒருத்தன். சட்ட பேண்ட் எல்லாம் போட்டு நல்லா டீசண்டா இருக்கான். எனக்கு ஒரே குழப்பம். நமக்கு இவன யாருன்னே தெரியலையே.. எதுக்கு நம்மளத் திட்டுறான்? அவன் மறுபடி திட்டுனான்..

"நான் சொல்ல சொல்ல கேக்காம திரும்பத் திரும்ப பேசாதடா.. அறிவு கெட்ட நாயே.. வகுந்துபுடுவேன்.."

எனக்கு வவுத்துல புளியைக் கரைக்குது.. யேண்டா.. நான் எங்கடா பேசுனேன்? அப்போத்தான் திடீர்னு அது தோணுச்சு. ஒருவேளை அப்படி இருக்குமோ? மெதுவா வண்டிய சுலோ பண்ணி அவனுக்கு இடது பக்கம் வந்தா.. நான் எதிர்பார்த்த மாதிரியே.. அவன் காதுல ப்ளூடூத் இயர்போன். அட நாசமாப் போறவனே.. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்களா? இந்த மொபைல வச்சுக்கிட்டு இவனுங்க பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியலடாயப்பா..

***************

ராவணன் வெளியான தினம். மதியம் மூன்று மணி போல "indiaglitz" இணையதளத்தில் படத்தைப் பற்றிய விமர்சனம் வெளியாகி இருந்தது. எப்போதும் ஈத்தரைப் படத்தைக் கூட நன்றாக இருக்கிறது என்று சொல்பவர்கள், ஈவு இரக்கமே இல்லாமல் இந்தப் படத்தை அடித்துக் கிழித்துக் காயப் போட்டிருந்தார்கள். திரை அரங்குக்குப் போய் நேரத்தை வீணாக்க வேண்டாம், வீட்டில் டிவியில் போடும்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதி விட்டு "பத்து தலை கருமாந்திரம்" (Ten headed downer) என்கிற அர்த்தத்தில் பன்ச் வேறு கொடுத்து இருந்தார்கள். ஆனால் அன்றைக்கு இரவே அந்த விமர்சனம் மாற்றப்பட்டது. படத்தை பற்றிய பல நெகட்டிவான விஷயங்கள் மாயமாக மறைந்து போயின. கடைசி வரிகள் மாற்றப்பட்டு, பன்ச்சும் "பத்து வித குணாதிசயங்கள்" (Ten headed personna) என்கிற ரீதியில் மாற்றப்பட்டது. எப்படி இது சாத்தியம்? பணம் பத்தும் செய்யும் என்பது இதுதானோ?

***************

ஞாயிற்றுக்கிழமை நண்பரை பார்ப்பதற்காக அவருடைய நெட் சென்டருக்குப் போயிருந்தேன். வாசலில் இரண்டு பெண் பிள்ளைகள். அதிகபட்சம் போனால் ஏழாவது இல்லை எட்டாவது படித்துக் கொண்டிருக்கலாம். பதட்டமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

"இங்க பாருடி.. அவனுக்காகத்தான் வீட்டுல பொய் சொல்லிட்டு வந்தேன்.. அவன் வரலைன்னா எப்படி.. கண்டிப்பா வரச் சொல்லுடி.."

"சரிடி.. சொல்றேன்.. பொறுமையா இரு.."

அடுத்தவள் மொபைலை எடுத்து பேசத் தொடங்கினாள். பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மண்டை காய்ந்து போனது. இந்த சின்ன வயசில் இப்படியா? இவர்கள் பெற்றோர்கள் இவர்கள் மேல் எத்தனை நம்பிக்கை வைத்து இருப்பார்கள்? சின்னப் பிள்ளைகள் இப்படி சீரழிவதற்கு யாரைக் குற்றம் சொல்வது? ஒண்ணுமே புரியல போங்க..

***************

சம்பத்தின் "இடைவெளி" நாவலை அனுப்பித் தந்த நண்பர்கள் சென்ஷி, அகநாழிகை பொன்.வாசுதேவன் மற்றும் யாத்ரா ஆகியோருக்கு நன்றி. போனசாக நண்பர் யாத்ரா நவீன விருட்சத்தில் வெளியாகி இருந்த "பிரிவு" என்கிற சம்பத்தின் சிறுகதைக்கான லிங்கையும் அனுப்பி இருந்தார். கதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்..

***************

கவுதம் சசிதரன் - எனது பிரியத்துக்கு உரிய மாணவன். கொங்கு கல்லூரியில் என்னிடம் பயின்றவன். தற்போது மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சித்துறையில் பொறுப்புள்ள பணியில் இருக்கிறான். எழுதும் மற்றும் படிக்கும் ஆர்வம் நிறையவே உண்டு. வெகு சமீபமாக தன்னுடைய எண்ணங்களை ஆங்கிலத்தில் "gauss' boulevard" என்கிற தளத்தில் எழுதி வருகிறான். கோடைக்கால மழையை அவன் அழகாக விவரிக்கும் இந்த இடுகையை வாசித்துப் பாருங்கள்.. நாமும் மழையில் நனைந்த உணர்வு ஏற்படுகிறது..

***************

அழிந்து வரும் அரிய கலையான "தோல் பாவைக் கூத்து" பற்றிய இந்த இடுகை கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று..

***************

காதல் சொல்ல வந்தேன் - பூபதிபாண்டியன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம். இசையில் யுவன் பேக் டூ பார்ம். பாடல்கள் எல்லாமே பிஸ்து கிளப்புகின்றன. "ஓ ஷலா " காதல் கிடைக்கப்பெற்றவன் சந்தோஷமாகப் பாடுவதாக வரும் வழக்கமான யுவன் பாடல். உதித் நாராயண் பாடும் "ஒரு வானவில்லின்" பாட்டு, தன காதலியின் அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்ததை காதலன் கொண்டாடுவதைப் போல அமைந்திருக்கிறது. "என்ன என்ன ஆகிறேன்" விஜய் யேசுதாசின் குரலில் அருமையான மெலடி. பிட்சா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நடுவே சுள்ளென்று வெங்காயத்தைக் கடித்தது போல கிராமத்து பாட்டாக வருகிறது "சாமி வருகுது" பாடல். கடைசியாக வரும் "அன்புள்ள சந்தியா" பாடல்தான் பிக் ஆப் தி ஆல்பம். உள்ளம் கேட்குமே படத்தின் ஓ மனமே பாட்டு ஞாபகம் வந்தாலும், கார்த்திக்கின் மயக்கும் குரலில் ரொம்பவே அருமையான மென்சோகப் பாடல். மொத்தத்தில் ஒரு ஜிலீர் காதல் ஆல்பம்.

(ஹி ஹி ஹி.. ஒரு ஆனந்த விகடன் ஸ்டைல் முயற்சி..)

***************

சமீபத்தில் ரசித்த எஸ்.எம்.எஸ் ஜோக்குகள்..

--> டெஸ்ட்க்கும்(Test ), குயிஸ்சுக்கும் (Quiz) என்ன வித்தியாசம்?

டெஸ்ட்ல விடை தெரிஞ்சா பாஸ்..(Pass)

குயிஸ்ல விடை தெரியலைனா பாஸ்.. (Pass)

--> அக்கா பிரண்ட அக்காவா நினைக்கலாம்.. தங்கச்சி பிரண்ட தங்கச்சியா நினைக்கலாம்.. அதுக்காக பொண்டாட்டி பிரண்ட பொண்டாட்டிய நினக்க முடியுமா?

--> ஜனவரி 14க்கும் பிப்ரவரி 14க்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14

அதே பொண்ணு ஒரு பையனுக்கு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி 14

இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))

June 24, 2010

சொர்க்கமும் நரகமும்..!!!

அவன் அந்த ஊர்லையே பெரிய போர்ப்படைத் தளபதி. தன்னோட ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருக்கார்னு கேள்விப்பட்டு அவரை பார்க்குறதுக்குப் போனான். ஒரு ஆலமரத்துக்கு அடியில சாமியார் ஜம்முன்னு உக்கார்ந்து இருந்தார். சுத்தி நிறைய மக்கள் கூட்டம். தளபதி மரியாதைக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுட்டு தன்னோட சந்தேகத்தைக் கேட்டாரு.

"ஐயா.. சொர்க்கமும் நரகமும் உண்மையிலேயே உலகத்துல இருக்குதா?"

"நீ என்னப்பா தொழில் பண்ற?" சாமியார் திருப்பிக் கேட்டாரு.

என்னடா இது.. நாம ஒண்ணு கேட்டா சாமியாரு நம்மள சம்பந்தமே இல்லாம வேற எதையோ கேக்குறாருன்னு தளபதிக்குக் குழப்பம்.

"நான் ஒரு படைத்தளபதிங்க.."

"உன்னைய எல்லாம் எவன்யா தளபதின்னு நம்புவான்.. ஆளு பார்க்க ஆடு திருடுறவன் மாதிரி இருக்க.. ஹே ஹே ஹே.."

"யாரைப் பார்த்து என்னய்யா சொன்ன.. இப்பவே உன்ன வெட்டிக் கூறு போடுறேன் பாரு.." உறுமினான் தளபதி.

"அதேதான்.. நீ கேட்டில.. நரகத்தின் கதவு.. அது இப்போ இங்கே உனக்காகத் தொறந்து கிடக்கு.." அமைதியாக சாமியார் சொன்னார்.

தளபதிக்கு தன்னோட ஆத்திரம் தப்புன்னு புரிஞ்சது. சட்டுன்னு சாமியார் கால்ல விழுந்துட்டான்.

"ஐயா.. புரிஞ்சுக்கிட்டேன்.. மன்னிச்சுடுங்க.. என்னோட அகந்தைல கண்ணு மண்ணு தெரியாம பேசிட்டேன்.."

"நல்லது.. இப்போ உனக்காக சொர்க்கத்தின் வாசல் தெரிஞ்சிருக்குமே.."

ஒரு கணம் தோன்றி மறையும் எண்ணத்தில்தான் நன்மையையும் தீமையும் உறைந்திருக்கின்றன.

***************

நாலு சாமியாருங்க சேர்ந்து ஒரு சத்தியம் பண்ணுனாங்க. "ஏழு நாளைக்கு ஒண்ணுமே பேசாம தியானம் பண்ணனும். ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது.." அப்படின்னு. சொன்ன மாதிரி ஒரு தனி அறைல வெறும் மெழுகுவர்த்திகள மட்டும் ஏத்தி வச்சுட்டு தியானத்துல உக்கார்ந்தாச்சு.

மொத நாள் முடியப் போற சமயம்.. பயங்கர காத்துக்கு மெழுகுவர்த்தி எல்லாம் படபடன்னு எரிய ஆரம்பிச்சது.

"அய்யய்யோ.. மெழுகுதிரி அணைஞ்சிடும் போல இருக்கே.." ஒருத்தர் பொலம்ப ஆரம்பிச்சுட்டார்.

உடனே இன்னொருத்தர் கோபத்தோட சொன்னாரு.." மறந்துட்டியா? நாம இப்ப பேசக்கூடாது.."

அடுத்தவரு.. "ஏன் இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க"ன்னு மூஞ்சிய சுழிச்சாரு.

கடைசி ஆளு மட்டும் சும்மா இருப்பாரா? "ஹா ஹா ஹா.. அப்பாடா.. நான் மட்டும்தான் கடைசி வரைக்கும் எதுவுமே பேசல"

அடுத்தவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது, எப்போதுமே அந்தத் தவறை நாமும் செய்யக்கூடும் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

***************

கண்பார்வையில்லாத ஒருத்தன் தன்னோட நண்பனோட ஊருக்குப் போயிருந்தான். கொஞ்சம் நேரம் கழிச்சு மறுபடி ஊருக்குக் கிளம்பும்போது, நண்பன் அவன்கிட்ட ஒரு லாந்தர் விளக்கக் கொடுத்து, அதை எடுத்துட்டுப் போகும்படி சொன்னான்.

கண்ணு இல்லாதவன் சிரிச்சுக்கிட்டே சொன்னான்.. "எனக்கு வெளிச்சமும் இருட்டும் ஒண்ணுதானே நண்பா.. எனக்கு எதுக்கு இது?"

"அப்பு.. அது எங்களுக்கும் தெரியும்.. ஆனா இது இல்லாம நீ இருட்டுல போறேன்னு வையி.. வழியில வர யாராவது உம்மேல மோதிட்டா? அதுக்குத்தான்" அப்படின்னு சொல்லி விளக்கக் கொடுத்து விட்டான் நண்பன்.

சமாதானமா லாந்தர் விளக்க வாங்கி, அதை தனக்கு முன்னாடி தூக்கி பிடிச்சுக்கிட்டு கிளம்பினான் அந்தப் பார்வை இல்லாதவன். சித்த தூரத்துலையே எதிர்த்தாப்பிடி வந்த ஒருத்தன் மேல மோதிட்டான். அவனுக்கு பயங்கர கோபம்.

"என்னய்யா ஆளு நீ? மூஞ்சிக்கு முன்னாடி ஒரு விளக்கு எரியறது கூடவா உனக்கு தெரியாது?"

"தம்பி.. உங்க விளக்கு அணைஞ்சு ரொம்ப நேரம் ஆகிடுச்சு போல.." அமைதியா சொல்லிட்டு எதிர்ல வந்தவன் போய்ட்டான்.

மற்றவர்களுக்கு ஞானம் அளிக்க அடுத்தவரின் கருத்துக்களைப் பயன்படுத்துவது, கண்பார்வையற்றவன் கைவிளக்கேந்திப் போனது போலத்தான்.. வழியில் விளக்கு அணைந்து போகலாம். அது ஒருபோதும் தெரியாது.

***************

யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் புத்தகத்தை வாங்குவதற்காக "அகல்" பதிப்பகத்தை தேடிக் கண்டுபிடித்துப் போயிருந்தேன். சென்னையில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒரு குட்டி காம்பவுண்டுக்குள் ஒரு சின்ன வீடு. அதுதான் வீடு. அதுதான் அலுவலகம். நான்கைந்து புத்தகங்கள் சேர்த்து வாங்கினேன். பதிப்பக உரிமையாளர் நான் மதுரையில் இருந்து வருவதைக் கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். நான் வாங்கிய புத்தகங்களோடு பரிசாக "ஜென் கதைகள்" என்ற புத்தகத்தையும் அன்பளிப்பாகத் தந்தார். நான் எவ்வளவோ வற்புறுத்தியும் அதற்கான பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டார். "அவ்ளோ தூரத்துல இருந்து புத்தகம் வாங்க வந்திருக்கீங்க.. உங்களுக்கு இது கூட செய்யலைன்னா எப்படி?" அத்தனை கஷ்டத்துக்கு நடுவிலும் புத்தகங்களை, வாசகர்களை நேசிக்கும் இது போன்ற மக்கள் இருக்கும்போது இலக்கியம் கண்டிப்பாக வாழும் என்றே நம்ப முடிகிறது.

ஜென் கதைகள்
தமிழில்: சேஷையா இரவு
வெளியீடு: அகல் பதிப்பகம்
விலை: ரூ.60

June 21, 2010

பரீட்சைன்னா.. பெரிய பருப்பா?!!!

அது என்னமோ பாருங்க.. சின்ன வயசுல இருந்து நமக்கு இந்தப் பரீட்சைன்னாலே அவ்வளவா ஒண்ணும் பெரிய பயமெல்லாம் கிடையாதுங்க.. ஏன்னு கேட்டீங்கன்னா.. அதுக்குக் காரணம் எங்கம்மா. அவங்க தான் நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த மொத வாத்தியாரு. அவங்க நமக்கு சொன்னதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்.. "மகனே.. படிக்கிறது அறிவ வளர்க்கத்தான்.. வெறுமன புத்தகத்துல இருக்குறத படிச்சிட்டுப் போய் பேப்பர்ல வாந்தி எடுக்கிறதால நாம பெரிசா எதையும் சாதிச்சிட முடியாது.. அதனால எதப் படிச்சாலும் புரிஞ்சு படி.. ஏன் எதுக்குப் படிக்கிறோம்னு தெரிஞ்சு படி.. அது போதும்.. பரீட்சைல நீ மார்க்கு வாங்கலை, அது இதுன்னு நான் கவலைப்படவே மாட்டேன்.. சரியா?" அவங்க சொன்னதுல நம்ம மண்டைல எது ஏறுச்சோ இல்லையோ.. அந்தக் கடைசி வரி.. பரீட்சைன்னா பயப்பட வேண்டியது கிடையாதுங்கிறது மட்டும் தெளிவா பதிஞ்சு போச்சு. அதுக்கு அப்புறம் நமக்கு என்ன கவலை சொல்லுங்க?

நல்லா படிச்சா நம்ம வாழ்க்கை நல்லாயிருக்கும். இதுதான் எங்க தாத்தா சொல்லிக் கொடுத்தது. பொதுவாவே எனக்கும் படிக்க பிடிக்கும். சோ நமக்கு படிப்பு நோ ப்ராப்ளம்தான். நாம இருந்த வீட்டுல இருந்து பத்து வீடு தாண்டி பள்ளிக்கூடம். நாங்கதான் எங்க ஸ்கூலோட மொத செட்டும் கூட. அதனால வாத்தியாருங்க எல்லாரையும் நல்லாத் தெரியும். நல்ல ஜாலியா பொழுது போகும். பக்கத்து வீட்டுக்காரர்தான் ப்ரின்சி. அதனால பரீட்சை மார்க் எல்லாம் நான் பாக்குறதுக்கு முன்னாடியே அம்மா பார்த்திடுவாங்க. பெரும்பாலும் மூணு ரேன்குக்குள்ள வந்திருவேன். யாரு பர்ஸ்ட் வரதுன்னு பசங்களுக்கு உள்ள போட்டி, அப்படி இப்படின்னு பரீட்சைய எதிர்பார்த்துக் கிடந்த கோஷ்டி நம்மது. (அடிக்க வராதீங்கப்பா..)

அஞ்சாவது வரைக்கும் பரீட்சை எழுதினது எல்லாம் அவ்வளவா ஞாபகம் இல்லை. அதுக்கு அப்புறமும் சாதாரணமாத்தான் இருந்தது. சுத்தி இருந்த மக்கள் எல்லாம் ஓவரா பில்டப்பா கொடுத்தது பத்தாவது பரீட்சையப்பத்தான். "இதுதான் உன் லைப்பு.. பார்த்து.. ஆ.. ஊன்னு.." அடப் போங்கப்பா.. திமிருக்குன்னே அடுத்த நாள் பயாலஜி எக்ஸாம் வச்சிக்கிட்டு நம்ம பசங்க கூட படத்துக்குப் போனேன். "பூச்சூடவா" - அந்தக் கொடுமைய பார்த்ததுக்கு ஒழுங்கா உக்கார்ந்து படிச்சிருந்தாலாவது புண்ணியம். கடைசியா +2 . மொதல்லேயே வீட்டுல சொல்லியாச்சு. இவ்வளவு மார்க்குதான் வாங்குவேன்... இதுக்குத்தான் படிக்கப் போறேன்னு. அவங்களும் ஒண்ணும் கண்டுக்கல. கடைசியா சொல்லி வச்சி மாதிரித்தான் மார்க்கும் வந்தது. அதுக்குப் பொறவு நான் பொறியியல் சேர்ந்ததும், இன்னைக்கு வாத்தியாரா வந்து நாலு பேருக்கு நாம பரீட்சை வச்சுக் கொலையா கொல்றதும்.. விடுங்கப்பா.. அதெல்லாம் அவனவன் செய்த வினைப்பயன்..

சம்பவம் 1

என்னடா இவன் ஓவராப் பேசுறான்.. பரீட்சைன்னா நீ பயந்ததே கிடையாதா? நீ பெரிய *****யோ? இப்படி எல்ல்லாம் திட்டணும்னு தோணுதா? பிளீஸ் வெயிட்.. நாங்களும் அசிங்கப்பட்ட கதைய சொல்லுவோம்ல. நான்தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. நம்ம அம்மாவுக்கு நம்ம மேல நம்பிக்கை ஜாஸ்தி. பிள்ளைய ஒரு பெரிய படிப்பாளின்னு நெனச்சுக்கிட்டு மூணாவது படிக்கும்போதே ஹிந்தி படிக்கக் கொண்டு போய் விட்டாங்க. அவனும் அஞ்சு பரீட்சைய ஒழுங்கா எழுதிட்டான். ஆனா பாருங்க.. இந்த விஷாரத் உத்தரார்த் வந்தப்பதான் புடிச்சது சனி. ஏழாங்கிளாஸ்னு நினைக்கிறேன். அப்பத்தான் நமக்கு கோலிகுண்டு, சீட்டு, உருட்டுக்கட்டை, புது நண்பர்கள் எல்லாம் அறிமுகம் ஆன நேரம். எல்லா கிளாசும் கட்டு. நேரா பரீட்சைக்கு போய் நின்னா..? ஒண்ணுமே தெரியல. என்ன பண்ண.. வேற வழி இல்லாம கைடத் தூக்கிட்டு உள்ள நொழஞ்சாச்சு.

லட்சுமி ஸ்கூல்தான் செண்டர். பரீட்சை ஆரம்பிச்சா.. சும்மா குண்டு குண்டுன்னு ஒரு அம்மாதான் சூப்பர்வைசர். சுத்தி சுத்தி வருது. காலுக்கு கீழ கைடு. பார்த்து பார்த்து அடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்படியே வேர்த்து வழியுது. பயம். முன்ன பின்ன செத்தாத்தான சுடுகாடு தெரியும்? கடைசில நம்ம மூஞ்சியே காட்டிக் கொடுத்துருச்சு. அந்த அம்மா நேரா வந்து கைட எடுத்துருச்சு. சுமார் ஒரு மணி நேரம் நின்னுக்கிட்டே இருக்கேன். அப்புறம் என்ன நினச்சாங்கன்னு தெரியல.. பாவம்னு என்கிட்டே வந்து.."இனிமேல் இப்படி பண்ணாதப்பா"னு சொல்லிட்டு அது வரைக்கும் எழுதி இருந்த எல்லாத்தையும் அடிச்சுட்டுப் போய்ட்டாங்க. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் காமெடி. நான் மறுபடி அடிச்சத பார்த்தே எழுத ஆரம்பிக்க, அந்தம்மாவுக்கு வந்துச்சு பாருங்க ஒரு கோபம்... குடுகுடுன்னு ஓடி வந்து பேப்பர புடுங்கிட்டாங்க. "நீ எழுதிக் கிழிச்சது போதும்.. கிளம்புப்பா".. நாம வாழ்க்கைல வாங்குன மொதக் கப்பு.. அதுதான். அப்புறமேட்டிக்கு நான் ஹிந்தில எம்.ஏ வரைக்கும் படிச்ச கொடுமைலாம் நடந்தது தனிக்கதை.. (ஹி ஹி ஹி.. எல்லாம் ஒரு விளம்பரந்தானே..)

சம்பவம் 2

வெற்றிகரமா +2 எழுதியாச்சு. அடுத்து என்ன? முட்டி மோதியும் மூணே மார்க்குல மெடிக்கல் சீட் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு. அப்ப வேற வழியே கிடையாது.. பொறியியல்தான். ஆனாலும் கடைசி முயற்சியா.. ஒரு தடவை கேரளாவுல போய் பரீட்சை எழுதிப் பார்க்கலாமேன்னு ஒரு ஆசை. அங்க நடக்குற மெடிக்கல் மற்றும் பொறியியல் தேர்வுக்கான பரீட்சை. போய் உக்கார்ந்து கேள்வித்தாள வாங்கி பார்த்தா கண்ணக் கட்டுது. 120 கேள்விகள். சரி.. மொதல்ல நமக்குத் தெரிஞ்சத எல்லாம் எழுதுவோம். அதுக்கு அப்புறம் தெரியாததைப் பத்தி யோசிப்போம்னு எழுதி முடிச்சுட்டு பார்த்தா.. மொத்தம் மூணே கேள்விதான் எழுதி இருக்கேன். அவ்வ்வ்வவ்.. ரைட்டு வேற வழியே இல்லை.. பாண்டியா.. உருட்டுடா பகடையன்னு எல்லாக் கேள்விக்கும் டாஸ் போட்டு பதில் எழுதி முடிச்சுட்டு வெளில வரேன்.. வந்து பார்த்தா, அங்க பயபுள்ளைங்க எல்லாம் பேசிக்கிட்டு இருக்குதுங்க..

"நீ எத்தனைடா எழுதுன?"

"24 .. நீ?"

"நான் 28ப்பா .."

டேய்.. என்னடா சொல்றீங்க.. நான் இப்போத்தாண்டா 120 கேள்விக்கு பதில் எழுதிட்டு வரேன்? அப்புறம் விசாரிச்ச்சத்தான் தெரிஞ்சது.. அங்க எல்லா கேள்விக்கும் பதில் அளிக்கிறது கட்டாயம் இல்லையாம். ஏன்னா.. சரியான விடைக்கு நாலு மார்க்கு.. அதே மாதிரி தப்பான விடைக்கு ஒரு மார்க்கு மைனஸ். வெளங்கிடும். அங்க ரிசல்ட் வந்தப்ப என்னோட ரேன்க் பத்தாயிரத்து சொச்சம். அங்கயும் பொறியியல்தான் கிடைக்கும்னு சொன்னங்க. வேற வழி இல்லாம தமில்நாட்டுலையே சேர்ந்து படிச்சு.. கஷ்டப்பட்டு முன்னேறி.. விடுங்கப்பா.. அதெல்லாம் நாளைய வரலாறு கூறட்டும். (ஒரு விண்ணப்பம்.. துப்புரவங்க பப்ளிக்ல துப்பாதீங்கப்பா.. தனியா மின்னஞ்சல் அனுப்பி உங்க கடமைய செய்யலாம் )

ஆக.. இப்படியாக பரீட்சைக்கும் நமக்கும் இருக்குற உறவு மாமன் மச்சான் உறவு மாதிரிதான். ரொம்ப பயந்தது எல்லாம் கிடையாது. அது பாட்டுக்கு நடக்கும். கடமையைச் செய்.. பலனை எதிர்பார்க்காதே.. நம்ம கைல என்ன இருக்கு.. சொல்லுங்க? இந்த சங்கிலிப்பதிவை எழுதும்படி கேட்டுக்கொண்ட தோழி "இயற்கை ராஜி"க்கு நன்றிகள் பல.. வேறு யாரும் எழுத விருப்பட்டால் தொடரலாம்..

June 18, 2010

ராவணன் - திரைப்பார்வை..!!!

நல்லவனுக்கு உள்ளே ஒரு கெட்டவன் இருப்பதுண்டு.. கெட்டவனுக்கு உள்ளேயும் ஒரு நல்லவன் உண்டு.. அதுதான் "ராவணன்". முதலிலேயே தெளிவாக சொல்லி விடலாம். இது சாட்சாத் ராமாயணக் கதையேதான். "அசோகவன"ப் பகுதியை கதைக்கான கருவாக்கிக் கொண்டு கலந்து கட்டி கொடுத்து இருக்கிறார் மணி. கதை என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஆனால் அதை காட்சிப்படுத்தி இருக்கும் விதத்தில் சொக்க வைக்கிறார். மகாபாரதத்து கர்ணனை "தளபதி"யாக்கிய மணிரத்னம் இந்தப் படத்தில் ராமாயணத்து ராவணனை நாயகன் ஆக்கியிருக்கிறார்.


ஊருக்கெல்லாம் நல்லவன் வீரா. ஆனால் சட்டத்துக்கு குற்றவாளி. அவனைப் பிடிக்க வரும் வரும் காவல்துறை அதிகாரி தேவ். அவருடைய மனைவி ராகினி. தன்னுடைய தங்கையின் மரணத்திற்கு பழிவாங்க ராகினியைக் கடத்துகிறான் வீரா. ராகினியின் மீது அவனுக்கு உண்டாகும் காதலால் அவளைக் கொல்லும் முயற்சியில் தோற்றுப் போகிறான். மனைவியைத் தேடி காட்டுக்குள் நுழையும் தேவ், கணவனின் அன்புக்கும் வீராவின் பாசத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் ராகினி, ராகினியின் அன்புக்காக ஏங்கும் பழிவெறி கொண்ட வீரா.. அவர்களுக்கு இடையே நடக்கும் ஆடுபுலியாட்டம் தான் படம்.

இது ஐஸ்வர்யாவின் படம். அழகாக இருக்கிறார். அந்த பளிங்குக் கண்கள்.. ஆத்தாடி.. படத்துக்காக ரொம்பக் கஷ்டப்பட்டு இருக்கிறார். மலையில் இருந்து கீழே குதித்து மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சி ஒன்றே போதும்.. அங்கே ஆரம்பிக்கும் "உசுரே போகுதே" பாடலும்.. பட்டாசு. அருவி, ஏரி, மழை என படம் முழுவதும் நனைந்து கொண்டே இருக்கிறார். மெதுமெதுவாக விக்ரமின் மீது ஈர்க்கப்படும் காட்சிகளிலும் அருமையாக நடித்து இருக்கிறார். என்ன ஒன்று.. படம் முழுவதும் மார்புகள் தெரியும்படியாக அவர் அணிந்திருக்கும் உடைகள் மட்டும் வடகத்திய சாயலோடு இருப்பதால் நமக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. (தியேட்டரில் பின்னாடி உட்கார்ந்து இருந்த நண்பர்கள் வேறு "ஐயோ பாவம் அபிஷேக்" என்று கத்திக் கொண்டே இருந்தார்கள்.. அவ்வவ்..)



முரட்டு வீராவாக விக்ரம். படம் முழுக்க வியாபித்து அழகாக நடித்து இருக்கிறார். தன் மீது ஐஸுக்கு அன்பு வந்து விட்டதை உணர்ந்து கொண்டு கண்களில் ஒரு சந்தோஷத்தை காண்பிக்கிறார் பாருங்கள்.. தூள். ஆனால் இதை விடக் கடினமான ரோல்களில் எல்லாம் அவரைப் பார்த்து விட்டதால் அவ்வளவு ஒன்றும் பெரிதாக ஈர்க்கவில்லை. தனக்கு இந்தப் படத்திற்காக தேசிய விருது கிடைக்கக் கூடும் என்று நம்பிக்கையோடு சொல்லி இருக்கிறார். பார்ப்போம். தேவாக பிருத்விராஜ். நல்லவனா, கெட்டவனா என்று பிரித்துப் பார்க்க முடியாத பாத்திரம். நிறைவாக செய்திருக்கிறார். கண்களில் சிரிப்பைத் தேக்கி வைத்துக் கொண்டே மற்றவர்களை காலி பண்ணும் காட்சிகளில் அசத்துகிறார்.

அனுமார் கார்த்தி. தனது ஒன்லைனர்களால் சிரிக்க வைக்கிறார். விக்ரமின் அண்ணனாக மகாகுண்டு பிரபு (விபீஷணன்?!). கொடுத்த வேலையைக் கச்சிதமாக செய்கிறார். தம்பியாக முன்னா. போலிசால் சுடப்பட்டு சாகிறார். விக்ரமின் தங்கையாக பிரியாமணி. தமிழ் சினிமாவில் இனிமேல் கேங்ரேப் என்றாலே அவர்தான் போல. பிரபுவின் மனைவியாக ரஞ்சிதா மாதாஜி ஸ்க்ரீனில் வரும்போதெல்லாம் விசில் தூள் பறக்கிறது. அரவாணியாக வையாபுரியும் இருக்கிறார்.

டெக்னிக்கல் விஷயங்களைப் பொறுத்தவரை - சர்வதேசத் தரத்தில் ஒரு தமிழ் சினிமா என்று பெருமையாக சொல்லலாம். சண்டைக் காட்சிகள் எல்லாமே அசத்தி இருக்கிறார்கள். குறிப்பாக பாலத்தில் நடைபெறும் கடைசி சண்டைக் காட்சி.. இணைந்த கைகள் படத்துக்குப் பிறகு இப்படி ஒரு காட்சியை நான் இப்போதுதான் பார்க்கிறேன். அதே போல ஓடும் டிரக்குகளில் ஏறும் மனிதர்கள், கூடாரங்களில் நடக்கும் சண்டை என எல்லாமே ரொம்ப இயற்கையாக இருக்கின்றன. சுஹாசினியின் வசனங்கள் அதிசயமாக தெளிவாக புரிகின்றன. ஒலிப்பதிவும் பயங்கரத் துல்லியம்.

படத்துக்கு மூன்று முக்கிய தூண்கள். முதலில் கலை - சமீர் சந்தா. மலையில் இருக்கும் கிராமம், அருவிக்கு ஊடே இருக்கும் கடவுள் சிலை, பாழ்மண்டபங்கள் என்று கலக்கி இருக்கிறார். இரண்டாவதாக ஏ.ஆர்.ரகுமான். பாடல்களை விடுங்கள். படம் முழுக்கவே பின்னணி இசையில் புயல் பின்னி எடுத்திருக்கிறது. கிளைமாக்சுக்கு முந்தைய காட்சியில் விக்ரமும், ஐசும் பேசிக் கொள்ளும் காட்சியின் பின்னணி இசை.. கொல்லுது... அம்சம். கடைசியாக ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டன். மனத்தைக் கொள்ளை கொள்ளும் காட்சியமைப்புகள். கொஞ்சம் தவறினால் ஆள் காலி என்பது போன்ற கஷ்டமான இடங்களில் ரொம்ப சிரமப்பட்டு படம் பிடித்து இருக்கிறார்கள். வண்ணங்களால் வரைந்த அழகிய ஓவியங்கள் நம் கண்முன்னே உருப்பெற்று வந்தது போல எல்லாக் காட்சிகளுமே அருமை. படம் பார்க்கும்போது சீனாவின் யாங் ஈமு படங்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.


மணிரத்னம் - இவரைப் பற்றி என்ன சொல்ல? அனைவரும் அறிந்த ஒரு பொதுப் பிரச்சினையை எடுத்துக் கொள்வது.. அதனூடாக தான் ஒரு கதையை சொல்வது.. இதுதான் மணியின் ஸ்டைல். ரோஜா தொடங்கி குரு வரை இதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அதை தெளிவாக, அழகாக செய்கிறார் என்பதுதான் முக்கியம். இந்தப் படம் கூட ஏதோ நக்சல் தலைவரின் கதை என்கிற ரீதியில் பேசினார்கள். ஆனால் இது ராமாயணப் போர்வையில் அப்பட்டமான ஒரு காதல் கதை. அதன் நடுவே சிறிது அரசியலையும் பேசி இருக்கிறார். அவ்வளவே.. முதல் பாதி நல்ல வேகம். இரண்டாம் பாதி கொஞ்சம் சுனங்கினாலும் போனது தெரியவில்லை. இறுதியில் கனத்த மனதோடு நாம் வெளியேறுவதில் தனது வெற்றியை உறுதி செய்கிறார் மணி.

(அபிஷேக்குக்காக ஒரு முறை இந்தியில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையைத் தூண்டி விட்டிருக்கிறது படம்..)

ராவணன் - கவர்கிறான்

June 16, 2010

(கவனிக்கப்படாத) மனதைக் கவர்ந்த பாடல்கள்-2..!!!

ஒரு சில பாட்டுகள்.. ரொம்ப நல்ல பாட்டா இருக்கும்.. ஆனா ஏதாவது டுபுக்கு படத்துல இருக்குற காரணத்துனாலேயே யாருக்கும் தெரியாமயே போயிரும். அந்த மாதிரி ஒரு சில பாடல்களை தொகுத்து (கவனிக்கப்படாத) மனத்தைக் கவர்ந்த பாடல்கள் என்கிற தலைப்புல ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதி இருக்கேன். இப்போ அதே மாதிரி எனக்குப் பிடிச்ச.. ஆனா அவ்வளவா பிரபலம் ஆகாத பாடல்களோட ரெண்டாவது தொகுப்பு. பாடல்களுக்கான சுட்டியும் கொடுத்து இருக்கேன்.. பார்த்துட்டு (அல்லது) கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க நண்பர்களே..

நிஜமா நிஜமா (படம் - போஸ் இசை - யுவன் ஷங்கர் ராஜா)

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட படம். புலி - சூர்யா.. பூனை - ஸ்ரீகாந்த். "காக்க காக்க மாதிரி ஒரு படம் பண்றோம் சார்"னு இயக்குனரு ஸ்ரீகாந்த் கிட்ட சொல்லி இருப்பார் போல. ஸ்ரீயும் நம்பி ஏமாந்துட்டார். மகா மொக்கையான படத்துல இந்த ஒரு பாட்டு மட்டும் நல்லா இருக்கும். சிநேகா அழகா இருப்பாங்க. பாட்டோட ஒரு ஷாட்டுல "உயிரின் உயிரே" பாட்டுல சூர்யா ஓடி வர மாதிரி ஸ்ரீகாந்த் முழு நீள கோட்டு போட்டு ஓடி வருவார் பாருங்க.. அவ்வ்வ்வவ்வ்வ்வ்

ஒரு தேதி பார்த்தா (படம் - கோயமுத்தூர் மாப்ள இசை - வித்யாசாகர்)

அது ஒரு அழகிய நிலாக்காலம். விஜய் + சங்கவி ஜோடின்னாலே சும்மா அள்ளும். இந்தப் படத்துல கவுண்டமணியும் சேர்ந்து பட்டயக் கிளப்பி இருப்பார். அர்ஜுனோட எல்லாப் படத்துக்கும் இசை அமைச்சுக்கிட்டு, அப்பப்போ வேற யார் படமாவது கிடைக்காதான்னு வித்யாசாகர் ஏங்கிக்கிட்டு இருந்த டைம். அருமையான மெலடியா இந்தப் பாட்டக் கொடுத்திருப்பார். பார்க்கவும் நல்லா இருக்கும். (பாட்டோட லிங்க் ஏதாவது இருந்தா சொல்லுங்கப்பா..)

முகம் என்ன (படம் - சுபாஷ் இசை - வித்யாசாகர்)

அர்ஜுன் ரேவதியோடவும், அபு சலீம் புகழ் மோனிகா பேடி கூடவும் சேர்ந்து நடிச்ச படம். எல்லாப் பாட்டுமே நல்லா இருக்கும். இந்தப் பாட்ட பாலா ரொம்ப ரசிச்சு பாடி இருப்பார். படத்த பத்தின இன்னொரு முக்கியமான தகவல்.. இதுக வர "ஏய் சலோமா சலோ" பாட்டுதான் கடைசியா சிலுக்கு ஆடுன பாட்டு. தீக்குள்ள இருந்து வந்து தீக்குள்லையே போற மாதிரி எடுத்து இருப்பாங்க..:-(((

இருபது வயசு (படம் - அரசாட்சி இசை - ஹாரிஸ் ஜெயராஜ்)

"வல்லரசு" மகராஜன் இயக்கத்துல அர்ஜுன் நடிச்ச படம். மொதப்படம் தமிழ்ல நடிச்சா நாமளும் ஒரு ஐஸ்வர்யான்னு நம்பி லாரா தத்தா நடிச்சாங்க. ஆனா படம் பப்படம். ஹாரிசோட இசைன்னே பல பேருக்குத் தெரியாது. இந்தப் பாட்டு சக்கையான ஐட்டம் சாங். ஹரிணி செமையா பாடி இருப்பாங்க. பாட்டுக்கு ஆடுனது "தாஜ்மகால்" ரியா சென். பார்க்க சூப்பரா இருக்கும். அதுலையும் கீழ படுத்துக்கிட்டு இடுப்ப மட்டும் தூக்கி ஒரு ஸ்டெப் போடுவாங்க பாருங்க.. ஆகா ஆகா.. (வெறும் பாட்டு லிங்க் தான் கொடுத்து இருக்கேன்.. யாராவது வீடியோ லிங்க் கொடுங்கப்பா..)

பூவரசம் பூவே (படம் - கடவுள் இசை - இளையராஜா)

கடவுள் மறுப்ப மையமா வச்சு வேலு பிரபாகரன் இயக்கிய முதல் படம். மணிவண்ணன் கடவுளா வந்து கடைசியா செத்துப் போவார். இந்தப் பாட்டு என்ன ஸ்பெஷல்னா.. தமிழ்ப்படங்கள்ள வந்த மிகச் சிறந்த கில்மாப்பாடல்கள்ன்னு ஒரு லிஸ்ட் எடுத்தா கண்டிப்பா இந்தப் பாட்டுக்கும் அதுல இடம் உண்டு. கேக்குறதுக்கும் நல்லா இருக்கும்.. ஹி ஹி ஹி.. வீடியோவ பாருங்க.. கொடுத்து வச்ச தாடிக்காரன்... ஹ்ம்ம்ம்..

முதன்முதலாக (படம் - எதிரி இசை - யுவன் ஷங்கர் ராஜா)

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம். மாதவன் மாஸ் ஹீரோவாக முயற்சி பண்ணின படம். "பாட்டில் மணி"யா வந்து அவர் ரவுடிசம் பண்றதப் பார்த்தா காமெடியா இருக்கும். சதாவும், கனிகாவும் நாயகிகள். இந்தப் பாட்டு.. ஒரு மாதிரியாக தனது சோகத்தையும் காதலையும் நாயகன் சொல்ற மாதிரி இருக்குற பாட்டு. ஹரிஹரன் ரசிச்சு பாடி இருப்பாரு. பாட்டு படமாக்கின விதம் அக்மார்க் கே.எஸ்.ஆர் ஸ்டைல். நல்லா இருக்கும்.

சோனாலி சோனாலி (படம் - காமா இசை - ஆதித்யன்)

தமிழ் சினிமால ஒரு கில்மா படத்துக்கு சினிமா எக்ஸ்பிரஸ் ஒரு தனிப் புத்தகமே போட்டுச்சுன்னா அது இந்தப் படம்தான். பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமார் தன்னோட மகன (?!) ஹீரோவைப் போட்டு எடுத்தா அஜால் குஜால் படம். படத்துல ஒண்ணுமே இல்லாம எல்லாத்தையும் சென்சார் படுபாவிங்க வெட்டி விட்டு பல ரசிக பக்த கேடிகளோட பாவத்த சம்பாதிச்சது தனிக்கதை. பாட்டப் பொறுத்த வரைக்கும்.. ஹரிஹரன் கும்முன்னு பாடி இருப்பாரு. (எப்படி தேடியும் லிங்க் கிடைக்கல.. யாராவது தெரிஞ்சா சொல்லுங்க..)

வெண்ணிலா சிறகடித்து (படம் - பொன்னியின் செல்வன் இசை - வித்யாசாகர்)

எனக்கு ரொம்பப் பிடிச்ச கோபிகாவும், சுத்தமா பிடிக்காத ரவிகிருஷ்ணாவும் நடிச்ச படம். தயாரிப்பாளருக்காக அவர் மகன ஹீரோவாப் போட்ட நல்ல படம் கூட நாறிடும்னு ராதாமோகனுக்கு நல்ல பாடம் சொன்ன படம். நாயகன், நாயகியோட சுத்தி இருக்குறவங்க எல்லாரும் ரொம்ப நல்லா நடிச்சு இருப்பாங்க. அமைதியான அழகு - அதுதான் கோபிகா.. அருமையான பாட்டு.

மக்கள்ஸ்.. இது எனக்குப் பிடிச்ச ஒரு சில பாட்டுதான்.. உங்களுக்கும் இந்த மாதிரி பிடிச்ச, ஆனா நிறைய பேருக்குத் தெரியாத பாட்டு இருந்தா பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்கப்பா...

June 11, 2010

உக்கார்ந்து யோசிச்சது (11-06-10)..!!!

சமீபத்தில் கோவையில் இருந்து பதிவுலகத் தோழி ஒருவர் அலைபேசியில் அழைத்து இருந்தார். பாலகுமாரன் எழுதிய "கடவுள் ஜூவுக்குப் போயிருந்தார்" என்னும் சிறுகதை இருக்கும் தொகுப்பு தனக்கு தேவைப்படுவதாகவும், அதை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து தரும்படியும் கேட்டுக் கொண்டார். நான் இதுவரை அந்தப் புத்தகம் பற்றிக் கேள்விப்பட்டது இல்லை என்பதோடு, எனக்குத் தெரிந்து பாலகுமாரனின் சிறுகதைகள் தொகுப்பாக வந்த ஞாபகமும் இல்லை. நண்பர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்கும் அந்தப் புத்தகம் பற்றித் தெரிந்திருக்கவில்லை. என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தான் எனக்குத் தோன்றியது... உண்மையிலேயே அந்த சிறுகதையை எழுதியது பாலகுமாரன் தானா? இந்தக் கதையின் பெயரை வேறு மாதிரி எங்கோ கேள்விப்படிருக்கிறோமே?

சட்டென்று ஏதோ நினைப்பில் எஸ்ராவின் "தமிழின் மிகச் சிறந்த நூறு சிறுகதைகளை"" எடுத்து தேடத் துவங்கினேன். நான் நினைத்தது சரிதான். அந்தக் கதையை எழுதியவர் சம்பத். கதையின் பெயர் - "சாமியார் ஜூவுக்குப் போகிறார்". பரவாயில்லை.. எழுதியவரைக் கண்டுபிடித்து விட்டோம்... இனி புத்தகத்தை எளிதாக வாங்கி விடலாம் என்றெண்ணி மதுரையில் இருந்த முக்கியமான புத்தக கடைகள் அனைத்திலும் விசாரித்தேன். ஏமாற்றம்தான் மிச்சம். அவருடைய தொகுப்பு எங்குமே கிடைக்க வில்லை. பதிப்பகம் தெரியாமல் போனதுதான் நான் செய்த தவறு என்றெண்ணி இணையத்தில் தேடலாம் என்று வந்து அமர்ந்தபோதுதான் உண்மையே விளங்கியது. இதுவரை சம்பத்தின் கதைகளே எதுவுமே தொகுப்பாக வந்தது கிடையாதாம். என்ன கொடுமை இது?

உலகத்தரத்திற்கு இணையான "இடைவெளி" என்னும் நாவலை தமிழில் படைத்த ஒரு மனிதனின் படைப்புகள் இன்றுவரை அச்சு வடிவம் காணவில்லை என்பது எத்தனை வருத்தமான விஷயம்? சம்பத்தை பற்றிய வெகு சில கட்டுரைகளே இணையத்திலும் காணக் கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமானவற்றின் சுட்டிகளை இங்கே இணைத்து இருக்கிறேன்..

சம்பத்தின் இடைவெளி - எஸ்ரா
இடைவெளி சம்பத் - ஆர்.பி.ராஜநாயகம்
"இடைவெளி" சம்பத் - அழியாச் சுடர்கள்
இடைவெளி எஸ்.சம்பத் - அய்யனார்

பதிவுலக நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள். தங்கள் யாரிடமாவது சம்பத்தின் "இடைவெளி"யோ மற்ற கதைகளோ இருந்தால் தந்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். படித்து விட்டு பத்திரமாக திருப்பித் தந்து விடுகிறேன்.

***************

காமிக்ஸ் புத்தகங்கள் ஏதாவது கிடைக்கின்றனவா என்று பழைய புத்தக கடைகளில் அடிக்கடி தேடுவதுண்டு. அதேபோல சென்ற வாரம் எதேச்சையாக தேடிக் கொண்டிருந்தபோது அருமையான இரண்டு புத்தகங்கள் கிடைத்தன. அசோகமித்திரனின் "காந்தியும் புலிக்கலைஞனும்" மற்றும் இரா.முருகனின் "முதல் ஆட்டம்". இரண்டு புத்தகமும் சேர்த்து வெறும் பத்து ரூபாய்க்கு தந்தார்கள். தமிழில் இலக்கியவாதிகளுக்கு உண்டான மரியாதை? ஹ்ம்ம்ம்...

மனதை கனக்க செய்யும் "புலிக்கலைஞன்" ரொம்பவே பிடித்து இருந்தது. ஏழ்மை ஒரு உண்மையான கலைஞனை என்னவாக ஆக்குகிறது என்பதை எளிமையாக சொல்லி இருக்கிறார். அடுத்ததாக இரா.முருகன். அவருடைய "மூன்றாம் விரல்" என்ற நாவலை ஏற்கனவே படித்து இருக்கிறேன். அது என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை என்பதால் "முதல் ஆட்டத்தை" பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் முதல் கதையான "விடை"யிலேயே எனக்கு செமத்தியான அடி. மனிதன் பட்டாசு கிளப்பி இருக்கிறார். இரண்டு தொகுப்பையும் இன்னும் முழுதாக படிக்கவில்லை. கூடிய சீக்கிரம் படிக்க வேண்டும்.

***************

பத்து நாட்களுக்கு முன்பு.. என்னுடைய பிறந்த நாள் அன்று.. அதிகாலையில் இருந்தே நண்பர்களும் மாணவர்களும் ஒவ்வொருவராக கூப்பிட்டு வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். நிறைய குறுந்தகவல்களும் வந்து கொண்டிருந்தன. அவற்றில் திடீரென ஒரு குறுந்தகவல் விஜயைத் திட்டி வந்திருந்தது. யார் அனுப்பியது என்று பார்த்தால் அசோக் என்ற என்னுடைய மாணவன். கொங்கு கல்லூரியில் என்னிடம் படித்தவன். தொடர்ச்சியாக அவனிடம் இருந்து ஐந்தாறு குறுந்தகவல்கள். எல்லாமே விஜயைத் திட்டி, கிண்டல் செய்பவை. இத்தனைக்கும் அவன் ஒரு விஜய் ரசிகன் என்பதை விட வெறியன் என்று சொல்லலாம். என்ன ஆச்சு இவனுக்கு.. ஏன் இப்படி என்று எனக்கு ஒரே குழப்பம்.சற்று நேரத்தில் அவனிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.

"பிறந்த நாள் வாழ்த்துகள் சார்.."

"நன்றிடா.. என்னடா ஆச்சு உனக்கு..? விஜயைத் திட்டி மெசேஜ் எல்லாம் அனுப்புற? கட்சி மாறிட்டியா..?"

"அப்படி எல்லாம் இல்லை சார்.. அந்த மெசேஜ் எல்லாம் பாக்குறப்போ நீங்க கொஞ்ச நேரமாவது சந்தோஷப்பட்டு இருப்பீங்க இல்ல? எனக்கு அது போதும் சார்.. எங்க சார் சந்தோஷத்துக்கு முன்னாடி நாம விஜய் ரசிகர்ங்கிறதெல்லாம் ரெண்டாம்பட்சம்தான் சார்.."

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சந்தோஷமாக இருந்தது. ஆசிரிய பணிக்கு வந்து என்ன சம்பாதித்து இருக்கிறேனோ இல்லையோ, எனக்காக ஒரு சில நல்ல மனிதர்களை, உறவுகளை சம்பாதித்து இருக்கிறேன் என்று ரொம்பவே பெருமையாக சொல்லிக் கொள்வேன்.

***************

ரொம்ப லேட்டாக.. "சிங்கம்" படத்தைப் பற்றி.. பர பரவென்று தீ வைத்தது போல போகிறது. ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. ஒன்றரை டன் வெயிட்டுடா என்று ஒளட்டினாலும் சூர்யாவை ரசிக்க முடிகிறது என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தல மற்றும் தளபதி வகையறாக்கள் முழித்துக் கொள்ளா விட்டால் சிவசம்போதான். அனுஷ்கா செம ஜில். ஆங்காங்கே பெயின்ட் அடித்த கலாரசனை இல்லாத சென்சார் அதிகாரிகள் ஒழிக. படத்தின் ஒரே கடுப்பு விவேக்கின் ரெட்டை அர்த்த வசனங்கள். பாடல்களை முதன்முதலில் கேட்டபோது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் இப்போது படத்தோடு பார்க்குபோழுது எல்லாப் பாடல்களுமே நன்றாக இருப்பதைப் போன்றதொரு உணர்வு. குறிப்பாக "காதல் வந்தாலே", "என் இதயம்" ரெண்டுமே ரசிக்க வைக்கின்றன. மொத்தத்தில் கம்பீரமான சிங்கம்.

எல்லா இடங்களிலுமே படம் ரொம்ப நன்றாக ஓடிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் கொடுமையை கவனியுங்கள். படம் வெளியான மறுநாளே இணையத்தில் "அப்லோடு" செய்து விட்டார்கள். அப்புறம் எங்கிட்டு வெளங்கும்?

***************

90 -களின் ரகுமானை நினைவிருக்கிறதா? பாடல் வெளியீடு என்றால் போதும்.. கேட்காமலே நம்பி வாங்கலாம். அதேபோல இன்றைக்கு ஹிந்தியில் நான் நம்பிக் கேட்கிற மனிதர் ஹிமேஷ் ரேஷமையா மட்டும் தான். அட அதாங்க.... நம்ம தசாவதாரத்துக்கு இசை அமைத்தவர். மனிதர் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு, தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இசை அமைப்பது என்று முடிவு செய்து விட்டதால் நஷ்டம் நம்மைப் போன்ற ரசிகர்களுக்கு தான்.வெகு நாட்களுக்குப் பிறகு அவர் இசையமைத்து, நாயகனாக நடிக்கும் "கஜராரே" (kajraare) என்ற படத்தின் பாடல்கள் வெளியாகி இருக்கின்றன. கேட்டுப் பாருங்கள். கலக்கி இருக்கிறார். பாடல்களைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்குங்கள்..

***************

தமிழ் வலைப்பதிவுகளில் கல்வி, கல்வி நிறுவனங்கள் சார்ந்து எழுதுபவர்கள் (எனக்குத் தெரிந்து) ரொம்பவே கம்மி என்று நினைக்கிறேன். அந்த வகையில் மதுரையில் இருந்து எழுதி வரும் நண்பர் சரவணன் ரொம்பவே கவனிக்கப்பட வேண்டியவர். "அரசிடம் கல்வியை இலவசமாகக் கேட்காதது ஏன்?" என்கிற அவருடைய இடுகையை வாசித்துப் பாருங்கள். சமூக அக்கறையுடன் எளிமையான மொழியில் முக்கியமான விஷயங்களை சொல்லிச் செல்கிறார். இன்னும் நிறைய எழுதுங்கள் நண்பா...

***************

வாசித்ததில் பிடித்தது...

நாம் பிறந்த பின்பு பேச கற்றுக் கொள்ள இரண்டு வருடங்கள் ஆகிறது.. ஆனால் எதைப் பேசக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள நம்முடைய வாழ்நாள் முழுதும் கூட போதுமானதாக இருப்பதில்லை..

***************

நிறையவே சீரியசாப் பேசியாச்சு.. அதனால் முடிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் ஜோக்ஸ்.. இணையத்துல இருந்து சுட்டதுதான்ப்பா..

கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.

மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.

கணவன் : ????!!!!

கண்ணம்மா : ஏங்க.. ஒருநாள் ஓட்டு போட்டுட்டு அஞ்சு வருஷம் கஷ்டப் படறாங்களே.. இந்த வாக்காளர் எல்லாம் பாவம்தானே..?

ராஜா : அடப் போம்மா.. அஞ்சு நிமிஷத்துல தாலியக் கட்டிட்டு ஆயுசு பூரா அவதிப்படற ஆளுக தாம்மா ரொம்ப பாவம்..!

ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்.. அப்போது "அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..

மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன் சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..

மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், "யார் என்னை ஒவ்வொரு முறையும் காப்பாற்றுவது..?" என நினைத்தான்..

அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன் காவல் தெய்வம்".

இவன் அடுத்தபடியாக கேட்டான்.."ஓ லூசு பிடிச்ச காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"

அத்தனையும் அண்ணன் அத்திரிக்கு சமர்ப்பணம்... இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))

June 8, 2010

திருமண வாழ்த்துகள் - பிரதாப் பெஸ்கி..!!!

"எவனோ ஒருவன்" என்கிற பெயரில் பதிவுலகில் இயங்கி வரும் அன்புக்குரிய நண்பர் பிரதாப் பெஸ்கியின் திருமணம் நேற்று மதுரையில் (07-06-2010) இனிதே நடைபெற்றது. ஞாயிறுக்கிழமை இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர் முரளிக்கண்ணன் கலந்து கொண்டார். நேற்று காலை நடைபெற்ற மணவிழாவுக்கு தருமி ஐயாவையும் அழைத்துக் கொண்டு போயிருந்தேன். மணமக்களுக்கு நம் பதிவுலக நண்பர்களின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை சொல்லி வந்தோம். திருமண விழாவில் எடுக்கப்பட்ட ஒரு சில படங்கள் உங்கள் பார்வைக்கு..

மண்டபம் - அலங்காரங்களுடன் மணமேடை


வெள்ளை சட்டை அணிந்து வந்த நாதஸ்வரம் - பெஸ்கி..



ஐயா.. டை எல்லாம் கட்டி போஸ் கொடுக்குறேன்.. கொஞ்சம் நல்லா போட்டோ புடிங்க சாமி



மாப்பிள்ளை பெஸ்கியும் சகோதரி ஜெனிபரும்..



பயபுள்ளைய பத்திரமா வச்சு காப்பாத்துவேணுங்க..:-)))



எடுடா மேளம்.. அடிடா தாளம்.. கட்டுறா தாலிய



மாப்ள கொஞ்சம் நல்லாத்தான் சிரிச்சா என்னவாம்..



மாலை மாத்துறாங்கோவ்..



கொஞ்சம் குனிப்பா.. எட்ட மாட்டேங்குது..



கல்யாணத்துக்குப் போன நாட்டாமைங்க.. (கா.பா, கிறுக்கல் கிறுக்கன், தருமி)

பின்குறிப்பு 1: கடைசிப்படம் முழுக்க முழுக்க விளம்பரத்துக்காக மட்டுமே டுக்கப்பட்டது.

பின்குறிப்பு 2: ஏன் கமெண்ட் எல்லாம் சிகப்புல இருக்கு..? அது ஆபத்தின் நிறமாச்சே.. கல்யாணத்துக்கும் இதுக்கும் ஏதோ உள்குத்து இருக்கானு குறியீடு தேடும் மக்களின் வீட்டுக்கு ஸ்பெஷலாக ஆட்டோ அனுப்பப்படும்..:-)))

பின்குறிப்பு 3: எல்லார் கல்யாணத்துக்கும் போற.. உனக்கு எப்போன்னு கேட்க தடை விதிக்கப்படுகிறது.. (யாராவது வீட்டுல வந்து பேசுங்கப்பா.. அவ்வவ்வ்வ்வ்)

உங்களுடைய வாழ்த்துகளையும் சொல்லுங்க நண்பர்களே..:-))))

June 7, 2010

தனிமையின் வலி - தி ஐல் (The Isle - 2000)..!!!

உங்களுக்கென இந்த உலகத்தில் யாருமே இல்லாத ஒரு தனிமையான நிலையை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? யாரோடும் பேசாமல்.. உங்களுக்கான தேவைகளை நீங்களே கவனித்துக் கொண்டு... சந்தோஷமோ அல்லது துக்கமோ, அதனை பகிர்ந்து கொள்ளக் கூட ஆட்கள் இல்லாமல்.. அப்படி ஒரு வாழ்வை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை அல்லவா? அப்படிப்பட்டதொரு தனிமையை விரும்பி ஏற்றுக் கொண்ட, தனக்கென யாருமற்ற ஒரு பெண்ணின் வாழ்வையும்... எதிர்பாராமல் அவளுக்கு உண்டாகும் காதலையும்... அதனால் ஏற்படும் விளைவுகளையும் சொல்லும் படம்தான் "தி ஐல்" (the isle). தென்கொரியாவின் பிரபல இயக்குனரான கிம் கி டுக்கின் படம்.


அழகான மலைப்பிரதேசத்தின் ஊடாக இருக்கும் ஏரி. அதில் அங்கங்கே அமைந்து இருக்கும் சின்ன சின்ன படகு வீடுகள். அவற்றை மொத்தமாக பராமரிப்பதுதான் நாயகி ஹீ-ஜின்னின் வேலை. யாரோடும் பேசுவது கிடையாது. துணைக்கு ஒரு நாய் மட்டுமே உண்டு. வாடிக்கையாளர்களை படகு வீடுகளுக்கு அழைத்து செல்வதில் ஆரம்பித்து.. அவர்களுக்கு வேண்டிய உணவு, தேனீர் வழங்குவது என அனைத்தையும் கவனித்துக் கொள்கிறாள். தங்குபவர்கள் விருப்பத்திற்காக பெண் வேசைகளை அருகிலிருக்கும் விடுதியில் இருந்து அழைத்து வருவதுடன் தானே சில நேரங்களில் வேசையாகவும் இருக்கிறாள். காதலியைக் கொன்ற குற்றத்திற்காக போலிசால் தேடப்படும் நாயகன் ஹ்யுன்-சிக் படகு வீட்டில் தங்க வரும் காட்சியில் படம் தொடங்குகிறது.

இரவில் அனைவருக்கும் உணவு கொடுக்கும் நாயகியோடு, சீட்டாடிக் கொண்டிருக்கும் நண்பர்களில் ஒருவன் உறவு கொள்கிறான். அதற்கான பணத்தை தர வேண்டும் என்றால் அவள் வாய் திறந்து பேச வேண்டும் என்று அவனுடைய நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள். நாயகி அமைதியாக இருக்கிறாள். கோபம் கொள்ளும் அவர்கள் பணத்தை நதியில் வீசி விடுகிறார்கள். அவள் அமைதியாக பணத்தை எடுத்துக் கொண்டு போகிறாள். நாயகியோடு உறவு கொண்டவன், நடு இரவில் மலம் கழிப்பதற்காக வெளியே வருகிறான். அப்போது நீருக்குள் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளிவரும் நாயகி அவனை மோசமாக காயப்படுத்தி விட்டு மறைகிறாள்.



மறுநாள் காலை. நாயகனின் படகு வீட்டில் வைக்கப்பட்ட உணவு சாப்பிடப்படாமலே இருக்கிறது. ஹீ-ஜின் எட்டிப் பார்க்கும்போது அவன் அழுது கொண்டிருக்கிறான். அன்றிரவு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாக முயலுகிறான் ஹ்யுன்-சிக். அப்போதும் நீருக்குள் இருந்து வரும் கத்தி ஒன்று அவனைக் காயப்படுத்தி அவனுடைய திட்டத்தை குலைக்கிறது. தன்னைக் காப்பாற்றியது யார் எனத் தெரியாமல் அவன் குழம்புகிறான். அடுத்த நாள் நாயகனின் வளர்ப்புப் பறவைகளுக்கு உணவளிக்கிறாள் ஹீ-ஜின். அவன் கம்பிகளை வளைத்து பொம்மைகள் செய்வதில் கைதேர்ந்தவனாக இருக்கிறான். ஹீ-ஜின் ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவதைப் போல ஒரு பொம்மையை அவளுக்குப் பரிசாகத் தருகிறான் ஹ்யுன்-சிக். அவளையும் அறியாமல் அவன் மீது ஹீ-ஜின்னுக்கு ஈர்ப்பு உண்டாகிறது.

பலமாகப் பெய்யும் மழையின் ஊடாக ஹீ-ஜின் நாயகனுடைய படகு வீட்டுக்குப் போகிறாள். அங்கே அவன் அவளை கட்டாயப்படுத்தி உறவு கொள்ள முயலுகிறான். கோபம் கொண்டு அவனை அடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறாள். எனினும் வேசையர் விடுதியில் இருந்து ஒரு பெண்ணை அவனுக்காக வரவழைக்கிறாள். வந்திருக்கும் வேசையோடு நாயகன் உறவு கொள்ள மறுக்கிறான். மாறாக அவளோடு வெறுமனே பேசிக் கொண்டிருக்கிறான். புதிதாக வந்தவளுக்கு நாயகனை ரொம்பவும் பிடிக்கிறது. அவள் வெகு நேரமாகத் திரும்பாததால் வேசையர் விடுதியின் சொந்தக்காரன் வந்து நாயகனோடு சண்டை போட்டு அவளைக் கூட்டிப் போகிறான்.

இயல்பாகக் கழியும் சில தினங்களுக்குப் பிறகு அந்த வேசைப்பெண் மீண்டும் நாயகனைத் தேடி வருகிறாள். விடுமுறையை அவனோடு கழிக்க விரும்புவதாக சொல்கிறாள். அன்றிரவு நாயகனும் வேசியும் உறவு கொள்வதை ஹீ-ஜின் மறைந்து இருந்து பார்க்கிறாள். மறுநாள் நாயகன் வேசிக்குப் பணம் தருகிறான். அவளோ அவன் மீதான அன்பினாலேயே தான் வந்ததாக வருத்தத்துடன் சொல்லுகிறாள். நேரம் கிடைக்கும்போது மீண்டும் வருவதாக சொல்லிச் செல்லுகிறாள்.



மறுநாள் படகு வீடுகளில் போலிஸ் வந்து சோதனை இடுகிறார்கள். அவர்கள் தன்னைத்தான் தேடி வந்திருப்பதாக எண்ணும் ஹ்யுன்-சிக் மீன் பிடி தூண்டிலை தொண்டைக்குள் செலுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயலுகிறான். அவனை மறைத்து வைத்து போலிசின் பிடியில் இருந்து காப்பாற்றுகிறாள் ஹீ-ஜின். ஹ்யுன்-சிக்கின் தொண்டையில் சிக்கி இருக்கும் தூண்டில் முட்களை நீக்கி விட்டு, வேதனையில் துவளும் அவனோடு உறவு கொள்கிறாள்.அவர்களுக்குள் ஒரு இனம் புரியாத உறவு உண்டாகிறது.

வேசிப்பெண் மீண்டும் நாயகனை சந்திக்க வருகிறாள். ஆனால் அவளைத் தந்திரமாக வேறொரு படகு வீட்டுக்கு அழைத்துப் போகிறாள் ஹீ-ஜின். அங்கே அவளின் கை கால்களை கட்டி வாயில் துணியை வைத்து அடைத்து சிறை வைக்கிறாள். அன்றிரவு தப்பிக்க முயலும் அந்தப்பெண் தவறி நீரில் விழுந்து இறந்து போகிறாள். அவள் ஓட்டி வந்த ஸ்கூட்டரையும் அவளோடு சேர்த்துக் கட்டி நீரில் தள்ளி விடுகிறாள் ஹீ-ஜின். காணாமல் போனவளைத் தேடி வரும் விடுதி உரிமையாளனுக்கும் ஹ்யுன்-சிக்குக்கும் நடக்கும் சண்டையின் முடிவில், விடுதிக்காரனையும் நீரில் அமிழ்த்தி கொல்கிறாள் நாயகி.

விடுதிக்காரனின் உடலை அப்புறப்படுத்தும்போது இன்னொரு படகு வீட்டில் கிடக்கும் வேசைப்பெண்ணின் ஒற்றைக் காலணியைப் பார்க்கிறான் நாயகன். அவளையும் ஹீ-ஜின் கொன்றிருக்கக் கூடும் என்பதை புரிந்து கொள்ளுகிறான். படகு வீட்டில் இருந்து தப்பி செல்ல முயற்சி செய்கிறான். தப்ப முடியாமல் பாதி வழியில் நீரில் தத்தளிக்கும் அவனை ஹீ-ஜின் காப்பாற்றுகிறாள். கோபம் கொண்டவனாக அவளை அடித்து உதைக்கிறான். ஆனால் அதன் பின்னர் அவளோடு உறவு கொள்கிறான்.

மறுநாள் தூங்கிக் கொண்டிருக்கும் நாயகியை நீங்கி படகினை எடுத்துக் கொண்டு தப்ப முயலுகிறான். அவன் தன்னை விட்டு பிரிந்து போவதை அறிந்து கொள்ளும் ஹீ-ஜின் தனது யோனியில் தூண்டில் முட்களை மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் பார்க்கிறாள். அவள் அலறல் சத்தம் கேட்டு திரும்பி வரும் ஹ்யுன்-சிக் அவளைக் காப்பாற்றுகிறான். இருவரும் தங்களுக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். இன்னொரு படகு வீட்டில் தங்கியிருக்கும் பணக்காரன் ஒருவனின் ரோலக்ஸ் கடிகாரம் நீருக்குள் விழுந்து விடுகிறது. அதனை எடுப்பதற்காக நீரில் மூழ்குபவர்களை வரவழைக்கிறான். அவர்கள் அங்கே அமிழ்ந்து கிடக்கும் ஸ்கூட்டரையும் பெண்ணின் உடலையும் கண்டுபிடிக்கிறார்கள். தான் செய்த கொலைகளை கண்டுபிடித்து விடுவார்கள் என்பதை புரிந்து கொள்ளும் ஹீ-ஜின், ஹ்யுன்-சிக்கையும் அழைத்துக் கொண்டு படகு வீட்டுடன் நதியின் பாதையில் புறப்படுகிறாள்.



அதன் பின்னர் வரும் படத்தின் இறுதிக் காட்சியை சத்தியமாக என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நாயகன் நதியின் நடுவில் இருக்கும் ஒரு பச்சை நிற நாணல் புதருக்குள் மறைந்து போகிறான். பிறகு பார்த்தால் அந்த பச்சை நிறப் புதர் நாயகியின் பெண்குறியை மூடி இருக்கிறது. அவள் நிர்வாணமாக படகு நீரில் அமிழ்ந்து கிடக்கிறாள். இத்தகு என்ன அர்த்தம்? அவன் அவளுக்குள் தொலைந்து விட்டான் என்றா? இல்லை அவள் அவனையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாளா? தெரியவில்லை.. தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்கப்பா..

தனிமையையும் அதன் வலியையும் பேசுவதுதான் இந்தப் படத்தின் நோக்கம். அனைவருக்கும் உணவு தந்து விட்டு ஒற்றை ஆளாக படகில் தனித்துக் கிடக்கும் ஹீ-ஜின்னின் அருகில் படத்தின் தலைப்பான "தி ஐல்" என்று போடுவதே அவள் ஒரு தனித்தீவாக இருப்பதை குறிக்கிறது. நாயகியாக நடித்து இருக்கும் பெண் ரொம்ப அருமையாக நடித்து இருக்கிறார். படத்தில் நாயகி எங்கேயும் பேசுவதே இல்லை. ஆனால் ஒரே ஒரு முறை அவள் போனில் பேசுவது திரைமறைவாக காண்பிக்கப்படுகிறது. தற்கொலை முயற்சியின் போதே வலியால் அலறுவது மட்டுமே படத்தில் நாயகிக்கான ஒரே வசனம்(?). மனிதர்களின் இயல்புகள் சட் சட்டென்று மாறுவதையும் அருமையாகப் பதிவு செய்கிறார் இயக்குனர். முதல் முதலில் தான் பிடிக்கும் மீனை காப்பாற்றி நீரில் விடும் நாயகன், தான் கோபம் கொண்டிருக்கும் காட்சியில் ஓவ்வொரு மீனாகப் படித்து ஆத்திரத்துடன் வெட்டிப் போடும் காட்சியைக் குறிப்பிட்டு சொல்லலாம். பணத்துக்காக வரும் வேசையர்களின் மீதான வன்முறையையும் படம் பேசுகிறது.

படத்தில் உடலறவு கூட நாயகனும் நாயகியும் தங்கள் வலிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கருவியாகவே பயன்படுகிறது. வலி என்பது அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது என்பதையே இயக்குனர் பல காட்சிகளில் உணர்த்த முயலுகிறார். தொண்டை மற்றும் யோனியில் தூண்டில் முட்களை செலுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயலும் காட்சிகள், தவளை ஒன்றை தோலுரிப்பது, நீரின்றி துடித்து சாகும் மீன்கள், பாதி அறுபட்டு மீண்டும் நீரில் விடப்படும் மீன்கள் என படத்தில் அதிர்ச்சி தரும் காட்சிகள் நிறையவே உண்டு. அதே போல முதல் முறையாக மலம் கழிக்கும் காட்சி ஒன்றை நேரடியாக திரையில் காண்பித்ததும் இந்தப் படமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். வெனிஸ் பட விழாவல் இந்தப் படத்தை பார்த்த பலர் வாயில் எடுத்திருக்கிறார்கள்.. ஒரு சிலர் மயக்கம் போட்டிருக்கிறார்கள் என்றால் படத்தின் காட்சிகள் எத்தனை தீவிரமாக இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

படத்தின் மொத்த வசனமும் ஒரு பக்கம் கூட வராது. திரைப்படம் என்பது காட்சிகளின் வாயிலாக நகர வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்து எடுத்து இருக்கிறார்கள். படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்ற இரண்டு விஷயங்கள்.. இசையும் ஒளிப்பதிவும். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இயற்கை ஒலிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. தேவையான இடத்தில் மட்டுமே ஒலிக்கும் பின்னணி இசையும் அருமையாக இருக்கிறது. பனி படர்ந்த மலை சிகரங்களின் ஊடான ஏரி, படகு வீடுகள், மழையில் நனையும் ஊஞ்சல் பெண், நீரின் அடியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் என்று ஒளிப்பதிவு அதகளம் செய்கிறது.

இது கிம் கி டுக்கின் ஐந்தாவது படம். தன்னுடைய படங்களில் "ஷாக் வேல்யூ" இருக்க வேண்டும் என்பதை அவர் தெரிந்தே புகுத்துகிறாரா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். நாயகி ஏன் இப்படி இருக்கிறாள் என்பது எங்கேயும் விளக்கப்படாத நிலையில் அவளுடைய வன்மம் மிகுந்த காதலை ஏற்றுக் கொள்வது சற்றே சிரமமாக இருக்கிறது. எப்படி முடியும், இது சாத்தியமா என்பது போன்ற ஒரு சில கேள்விகளைத் தவிர்த்து பார்த்தால்.. தனிமையின் வலியை தான் சொல்ல நினைத்து போலவே பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

The Isle (2000)

Language: Korean


Director: Kim Ki Duk


Starring: Seo Jeong, Kim Ye-Souk


Genre: Thriller


மேலதிகத் தகவல்களுக்கு நன்றி: விக்கிப்பீடியா

June 4, 2010

அட நாதாரிப் பயபுள்ளைகளா..!!!!

மதுரையில் இருக்கும் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை அது. சிறுநீரகக் கோளாறின் காரணமாக அங்கே அனுமதிக்கப்பட்டு இருந்த நண்பரின் தந்தையைக் காண்பதற்காக சமீபத்தில் அங்கே போக நேர்ந்தது. உள்ளே நுழைந்தபோது நான் நிறையவே ஆச்சரியப்பட்டுப் போனேன். ஏதோ ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்குள் நுழைவதைப் போன்றதொரு உணர்வு. பார்க்கும் இடமெல்லாம் அழகழான கண்ணாடிகள், மரச் சிலைகள் என்று பயங்கர படோடபம் வேறு. அங்கே ஒரு நாள் தங்குவதற்கான அறை வாடகை பற்றி நண்பர் சொன்னபோது தலையே சுத்தியது. பத்து நாள் இருந்தா என்னுடைய ஒரு மாத சம்பளம்.. ஸ்வாஹா. எக்காரணம் கொண்டும் இங்கெல்லாம் வர வேண்டிய சூழல் வந்து விடக்கூடாது என்று யோசித்தவாறே நண்பரின் அப்பாவைப் பார்க்கப் போனேன்.

நண்பரின் அப்பா குளிரூட்டப்பட்ட விசாலமான அறையில் சவுகரியமாக படுக்க வைக்கப்பட்டு இருந்தார். உடல்நிலை முன்னைக்கு இப்போது பரவாயில்லை என்று சொன்னவரிடம் பொறுமையாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் நண்பரின் அப்பா தூங்கி விட, நண்பர் வீட்டுக்கு சென்று குளித்து விட்டு வருவதாக சொல்லி கிளம்பி விட்டார். பொழுது போவதற்காக அங்கே கிடந்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். சற்று நேரம் கழித்து, அருகில் இருந்த அறையில் இருந்து தொடர்ச்சியாக ஏதேதோ சத்தங்கள் வரத் தொடங்கின. என்னவென்று அறிந்து கொள்ளும் ஆர்வம் உந்தித் தள்ள, அங்கே இருந்த மருத்துவ உதவியாளரிடம் சென்று விசாரித்தேன்.

அந்த அறையில் இருந்தவர் மதுரையின் மிகப் பெரிய நகைக்கடை அதிபரின் மனைவியாம். முக்கியமான ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தவர். அதற்காக அவருக்கு மூன்று யூனிட்டுகள் ரத்தம் தேவைப்பட்டு இருக்கிறது. அவருடைய ரத்தம் மிக அரிதான வகையை சேர்ந்ததாம். அதை யார் கொடுப்பது என்பதில்தான் பிரச்சினை.

"ஏன்.. அவங்க குடும்பத்துல யாருக்கும் அந்த ப்ளெட் குரூப் இல்லையா? அவங்க பசங்க.. யாராவது தர முடியுமா?" உதவியாளரிடம் கேட்டேன்.

"ரெண்டு பசங்க சார்.. ரெண்டு பேருக்குமே இந்த அம்மாவோட குரூப் தான்.. ஆனா அவங்க பண்றதுதான் பெரிய கூத்து.. மொதப் பய பயங்கர குடிகாரன் போல.. அதனால அவனோட ரத்தம் எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.."

"அய்யய்யோ.. அப்ப ரெண்டாவது பையன்..?"

"அந்தக் கொடுமைய ஏன் கேக்குறீங்க? அந்தப் பையனுக்கு ரத்தம் தரதுக்கு விருப்பம் இல்ல போலீங்க.. ரொம்ப பயந்து போய் இருந்தான்.. கொஞ்ச நேரம் முன்னாடிதான் டாக்டர் ஏதோ டெஸ்ட் எடுத்துப் பார்த்துட்டு அவன்கிட்ட இருந்து ரத்தம் எடுக்க முடியாதுன்னு சொன்னாரு.. கேட்டவுடனே அவனுக்கு அவ்வளவு சந்தோசம்.. துள்ளிக் குதிக்காத குறைதான்"

"வெளங்கிடும்.. உண்மையிலேயே அந்த அம்மா பாவம்தான் போல.. ரெண்டு பிள்ளைங்களும் இப்படி சொன்னா என்ன பண்றது.."

"அட நீங்க வேற.. இவங்கள கூட ஒரு கணக்குல சேர்த்துடலாம்.. அந்த அம்மா எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டிரும் போல.."

"ஏம்ப்பா.. அவங்க என்ன பண்ணினாங்க.."

"சொல்றதக் கேளுங்க.. பையனுங்க ரெண்டு பேருமே ரத்தம் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. வேற வழியே இல்லையேன்னு டாக்டர் சார் ரத்த வங்கிக்கு போன் பண்ணிட்டாரு.. அவங்க எங்க எங்கயோ அலைஞ்சு ஒரு காலேஜ் ஸ்டுடண்ட கண்டுபிடிச்சு கூப்பிட்டு வந்துட்டாங்க.."

"சரி... அதுதான் ரத்தம் கொடுக்க ஆள் கிடைச்சாச்சே.. அப்புறம் என்ன?"

"இப்போத்தான் அந்த அம்மா சீனுக்குள்ள வருது.. நான் ரத்தம் ஏத்திக்க மாட்டேன்னு அடம் பிடிக்குது.."

"அடப்பாவி.. ஏன்.."

அவர் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு வெறியே வந்து விட்டது.

"அந்தப் பையன் எந்த ஜாதின்னு தெரியலையாம்.. அதனால் ஏத்திக்க மாட்டங்களாம்.. அவங்க ஜாதிப் பையனா இருந்தா சரியாம்.. இல்லைனா அவங்களுக்கு அது வரைக்கும் அறுவை சிகிச்சையே பண்ண வேண்டாமாம்.."

அடக் கருமமே... எனக்கு ஓடிப்போய் அந்த அம்மாவை ஓங்கி வெட்டினால் என்ன என்று தோன்றியது. இது எல்லாம் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?

மெதுவாக அறைக்குள் எட்டிப் பார்த்தேன். டாக்டர் அந்த அம்மாவை சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார். அறையின் ஓரமாக இருந்த நாற்காலியில் ஒரு பையன் அமைதியாக அமர்ந்து இருந்தான். இருபது வயதிருக்கலாம். ரத்தம் தர வந்த கல்லூரி மாணவனாக இருக்கக் கூடும். அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. நேராக டாக்டரின் அருகில் சென்றேன்.

"நீங்கள் தவறாக நினைக்க வில்லை என்றால் இந்த அம்மாவிடம் இரண்டொரு வார்த்தை பேசிக் கொள்ளலாமா?"

டாக்டர் குழப்பமாக என்னைப் பார்த்து சரி என்றார். அந்த பெண்ணிடம் திரும்பினேன். பொறுமையாக சொன்னேன்.

"பெற்ற பிள்ளைகளே உங்களை காப்பாற்ற முன்வராத நிலையில், தன் வேலைகளை விட்டு உங்களைக் காப்பாற்ற வந்த அந்தப் பையனிடம் போய் ஜாதியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்களே.. ஷேம் ஆன் யூ.. நீங்க ஒரு ஒண்ணாம் நம்பர் லூசு.."

நான் அப்படிப் பேசுவேன் என எதிர்பார்த்து இருக்காத டாக்டர் திகைத்துப் போனார். "சார்.. என்ன சார்.. நீங்க பாட்டுக்கு.. மொதல்ல வெளில போங்க சார்.." கூடவே அந்த அம்மாவும் கண்டமேனிக்கு கத்த ஆரம்பித்தது.

எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்தப் பையனிடம் போனேன். "சின்ன வயசுன்னாலும் அடுத்தவங்களுக்கு உதவணும் என்கிற எண்ணம் இருக்கே.. சந்தோசம் தம்பி.." சொல்லி விட்டு வெளியேறினேன்.

கண்டிப்பாக என்னைக் காட்டான் என்று எண்ணி இருப்பார்கள். இருக்கட்டும். பரவாயில்லை. அதனால் நான் ஒன்றும் குறைந்து போய் விடப் போவதில்லை. பெத்த தாய் சாகக் கிடக்கும்போது, தான் ரத்தம் தர வேண்டியதில்லை என சந்தோஷப்படும் பிள்ளைகள்.. உயிரே போனால் கூட ஜாதி மசிருதான் முக்கியம் என சொல்லும் பெண்.. இவர்கள் எல்லாம் நாகரீகம் கொண்டவர்களாக இருக்கும் இடத்தில்.. நான் காட்டானாகவே இருந்து விட்டுப் போகிறேன். இருக்கிற இடம் பகட்டாக, அணியும் உடைகள் விலை உயர்ந்ததாக இருந்து என்ன பிரயோஜனம்? மனிதர்களை மதிக்காத ஜென்மங்களைப் பற்றி வேறென்ன சொல்ல முடியும்?

இப்படியும் சில மனிதர்கள்.. ச்சே..!!!