May 30, 2011

தண்டவாளத் தனிமையில் உருளும் கூழாங்கல்


செடார் மரங்கள் அடர்ந்திருக்கும் மலைச்சரிவில்
சின்னஞ்சிறு செடிகளுக்கு
மழை பொழிய மறுக்கும் மேகங்கள்
விதுரனின் கூழாங்கல்லாய்ச்
சமைந்து நிற்கின்றன
பேசப்படாத வார்த்தைகள்
எப்படிப் பார்த்தாலும்
முதுகினைக் காட்டுவதில்லை
ரசம் போன கண்ணாடிகள்
கைவிடப்பட்ட ரயில் நிலையத்தின்
கடைசி மீதமுள்ள பணியாளன் இவன்
தனிமையின் மொழி தொடங்கி
தொலைந்து போகும் நிழல்கள் வரை
துளை வழி கசியும் நீரென
கிளம்பிக் கொண்டே இருக்கும் கேள்விகள்
பதில்கள் கிடைக்காதெனத் தெரிந்தும்
ராமனின் பாதம் எதிர்நோக்கி
காத்திருக்கிறாள் அகலிகை
ஹெம்லாக்கை அருந்தியபின்னும்
காதுகளைத் திறந்தே வைத்திருந்தார்
சாக்ரடீஸ்.

May 25, 2011

சென்னையும் போடா வெண்ணையும் (2)

சென்னையிலிருந்து மதுரை வரும் வைகை எக்ஸ்பிரஸ். என்னுடைய முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து இருக்கிறேன். அன்ரிசர்வ்ட் டிக்கட் வாங்கியவர்கள் இடமின்றி கிடைத்த இடங்களில் எல்லாம் நின்று கொண்டிருக்கிறார்கள். எனக்கருகே ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்க்கும்போதே திருநெல்வேலி அல்லது தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது. ஒரு கையில் தனது பையையும் சாப்பாட்டையும் வைத்துக் கொண்டு இன்னொரு கையில் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு சாப்பிட முடியாமல் ரொம்ப சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

"அண்ணே இப்படி வந்து உக்கார்ந்து சாப்பிடுங்கண்ணே..”

பரவாயில்ல தம்பி.. இருக்கட்டும்..”

அட சும்மா வாங்கண்ணே.. எம்புட்டு நேரம்தான் நின்னுக்கிட்டே கைல சாப்பாட்ட வச்சுக்கிட்டு கதகளி ஆடுவீங்க.. வந்து உக்கார்ந்து சாப்பிடுங்க..”

சிரித்தபடியே வந்து உக்கார்ந்து பொறுமையாக சாப்பிட்டு முடித்தவர்ரொம்ப நன்றி தம்பிஎன்றபடியே எழுந்தார்.

தம்பிக்கு எந்த ஊரு..”

மதுரைண்ணே..”

நினச்சேன்.. நம்ம ஊரு பக்கமாட்டுத்தான் இருக்கும்னு.. பொறவென்ன.. இந்த மெட்ராஸ்காரப் பயலுவன்னா எவனும் இந்த மாதிரி ஒதவவா போறான்..”

எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாத, சக மனிதர்கள் மீது கவனம் செலுத்த நேரமில்லாத, தனக்கென மட்டுமெ வாழும் மக்கள்.

இதைப் பொதுவாகவே பெருநகரங்களில் இருக்கும் மனிதர்களின் மீதான குற்றச்சாட்டு எனக் கொண்டாலும் சென்னை என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதே பெரும்பாலான தென்மாவட்ட மக்களின் எண்ணமாக இருக்கிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. சென்னை எனத் தனியாக ஊர் எதுவும் கிடையாது மாறாக அது பல சிறு கிராமங்களின் மொத்தத் தொகுப்பே என்றும் அதை “வந்தேறிகளின் நகரம்” எனவும் கிண்டல் செய்வது எனது வழக்கம். இன்றைக்கு சென்னையின் எந்தப் பகுதிக்குப் போனாலும் அங்கே இருக்கக் கூடியவர்கள் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அதுவும் இந்த பொறியியல் கல்லூரிகளின் அசுர வளர்ச்சிக்குப் பிறகு சென்னை முழுவதுமே வெளியூர் மக்களின் மிகப்பெரிய தங்கும் விடுதியாக மாறிப்போனது பெருங்கொடுமை.

சமீபமாக சென்னை வந்த போது எக்ஸ்பிரஸ் அவனியூவிற்குப் போய்வரும் வாய்ப்பு கிடைத்தது. சத்தியமாக நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என நம்ப முடியாமல் திகைத்துப் போனேன். காசை வைத்துக் கொண்டு என்ன செய்வதெனத் தெரியாமல் இத்தனை மக்கள் இருக்கிறார்களா எனத் திறந்த வாயை நான் கடைசி வரை மூடவே இல்லை. முந்தைய நாள் மகாபலிபுரத்தில் சாமி மூணு பத்து ரூபா சாமியோவ் என ஒரு நரிக்குறவப் பெண் விற்றுக் கொண்டிருந்த கிளிப் இங்கே அழகாய் ஒரு அட்டையில் மாட்டி வைக்கப்பட்டு தொண்ணூறு ரூபாய். குழந்தையின் தலைக்கு வைக்கும் பஞ்சுத் தலையணை ஆயிரத்து ஐநூறு ரூபாய். அதை எல்லாம் வாங்கவும் ஆளிருக்கிறது.

உடையலங்காரம், நுனி நாக்கு ஆங்கிலம், பாவனை, பொருள் வாங்கும் வசதி என எல்லாமே ஏதோ எனக்கு சென்னைக்கு உள்ளேயே வேறொரு நகரத்தில் நான் இருக்கும் உணர்வை ஏற்படுத்தின. ஒரு சாதாரணமான நடுத்தரப்பட்ட தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவன் இது போலதொரு இடத்துக்கு வருவானாயின் இயல்பாகவே அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் வலிமை இந்த இடங்களுக்கு உண்டு என்பதை அன்று நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். இத்தனைக்கும் ஓரளவுக்கு உருப்படியான சம்பளம் வாங்கும் எனக்கே இந்த கதி என்றால் மற்றவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. நானெல்லாம் லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினால் கூட இப்படியொரு இடத்துக்கு வந்து மனதார செலவு செய்வேன் எனத் தோன்றவில்லை.

அடுத்தபடியாக என்னைப் பெரிதும் பயம் கொள்ளச் செய்வது பரபரப்பும் பதட்டமும் நிறைந்த சென்னை நகரின் வீதிகள் . அதிலும் அங்கே வாகனம் ஓட்டும் மனிதர்கள் எல்லாம் வேற்று கிரகங்களைச் சேர்ந்தவர்களோ என்னும் பயம் நம் பதட்டத்தை இன்னும் அதிகமாக்கும். மதுரை காமராசர் சாலையில் வண்டி ஓட்டிப் பழகினால் உலகில் எங்கும் வண்டி ஓட்டிவிடலாம் என்று சொல்வார்கள். அவர்களை எல்லாம் கொண்டு போய் சென்னையில் விட்டால் தெரியும். நூறு மீட்டருக்கொரு முறை சிக்னல். ஒவ்வொரு சிக்னலிலும் பத்து நிமிடம். விளங்கிடும். அதனாலேயே முடிந்த அளவுக்கு சென்னையில் சுத்த ரயிலை மட்டுமே பயன்படுத்துவேன். மின்சார ரயில் என்கிற ஒரு விஷயம் மட்டும் இல்லையானால் சென்னை நகரமே நாறிப் போய் விடும் என்பது எனது தீவிர நம்பிக்கை.

சரி வெங்காயம்.. சென்னையைப் பிடிக்கவில்லை என்பதற்கு இத்தனை காரணங்கள் சொன்ன உனக்கு பிடிக்கும் எனச் சொல்வதற்கு ஒரு விஷயம் கூட இல்லையா என்றால்.. இருக்கிறது. கடல். அகண்ட கடலின் முன் நிற்கும் கணம் நாமெல்லாம் ஒன்றுமேயில்லை எனும் எண்ணம் உள்ளே அலையடித்துக் கொண்டேயிருக்கும். காலை நேரக் காற்றில் ஆள் நெருக்கடி இல்லாமல் மண்ணைக் கால்களால் அலைந்தபடி நண்பர்களோடு பேசிக்கொண்டே மெதுவாக நடந்து போவது ஒரு சுகானுபவம். என் வாழ்வின் அருமையான சில கணங்களை பேரன்பு கொண்ட என் நட்புகளோடு அங்கே கொண்டாடி இருக்கிறேன்.

கடைசியாக.. பிடிக்கும் பிடிக்காது என்பதை மீறி சென்னை என் வாழ்வின் ஒரு அங்கமாகிப் போன நகரம். இப்போதும் என் நண்பர்களை சந்திக்கும் பொருட்டு அடிக்கடி சென்னைக்கு வந்து போய்க் கொண்டுதானிருக்கிறேன். அதில் என் நண்பனொருவன் அடிக்கடி சொல்லுவான் “ஓவரா இந்த ஊரைத் திட்டுறே இல்ல.. மகனே ஒருநாள் இல்ல ஒருநாள் நீ இங்கயே வந்து தங்குற மாதிரி வரும் பாரு..” அவனது சாபம் பலிக்குமா எனத் தெரியவில்லை. அப்படி பலிக்குமாயின் மிகவும் சந்தோஷப்படக்கூடிய முதல் ஆளாகவும் நான்தான் இருப்பேன்.

May 20, 2011

சென்னையும் போடா வெண்ணையும் (1)

சின்ன வயசுல இருந்தே, யாராவது என்கிட்ட தமிழநாட்டுலயே உனக்குப் பிடிக்காத ஊரு எதுன்னு கேட்டா யோசிக்காம பதில் சொல்லுவேன், மெட்ராஸ்னு. விவேக் ஒரு படத்துல சொல்ற மாதிரி எப்பவுமே சென்னை என்னைப் போடா வெண்ணைன்னுதான் சொல்லி இருக்கு. ஏன் பிடிக்காமப் போச்சுன்னு கேட்டா என்னத்த சொல்றது? நிறைய காரணங்கள். ஏழெட்டு வயசுல இருந்து சென்னையப் பத்திக் கேள்விப்பட்டது எல்லாமே தப்பான விஷயங்கள்தான்.

டேய் தம்பி மெட்ராஸுக்குப் போறப்ப மட்டும் ரொம்ப கவனமா இருக்கணும். ஏன்னா அந்த ஊருல பிக்பாக்கெட்டுங்க ஜாஸ்தி. அவனுங்க ரொம்ப மோசமானவனுங்க. நாம கொஞ்சம் அசந்தாப் போதும் மொத்தத்தையும் உருவிக்கிட்டு விட்டுருவானுங்க. பார்த்து சூதானமா இருக்கணும் புரிஞ்சதா? இதை சின்னப் பசங்ககிட்ட சொல்லாத பெருசுங்களே மதுரைல அந்தக்காலத்துல கிடையாது. அதே மாதிரி மெட்ராஸ்ல ஆட்டோக்காரங்களையும் நம்பவே கூடாது. இந்தா இருக்குற இடத்துக்கு ஊரெல்லாம் சுத்தி காசு புடுங்குவானுங்க. நம்மள சுத்தி இருக்குற எல்லாருமே இந்த மாதிரி எல்லாம் சொல்லும்போது நமக்கு அதை நம்புறதத் தவிர வேற வழியேது? ரொம்ப நாளைக்கு மெட்றாஸ் பூரா திருடங்க மட்டும்தான் இருப்பாங்கன்னு நான் நம்புன காலம் அது.

கொஞ்சம் கொஞ்சமா நமக்கு வெவரம் தெரிஞ்ச காலத்துல, வெறும் வார்த்தைகளால மட்டுமே அறிமுகம் ஆகி இருந்த மெட்ராஸ் பத்தி, ஊரு இப்படித்தான் இருக்கும்னு எனக்கு அறிமுகம் செஞ்சு வச்சது சினிமா. வாரம் ரெண்டு படம் பாக்குற குரூப் நாம. சினிமா நடிகனுக்கும் நடிகைக்கும் ரசிகர் மன்றம் வச்சு சேவை செய்யாத மக்கள் யாரும் இருக்கோமா என்ன? படத்துல அடிக்கடி காட்டுற இடங்களான பீச், அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி, உழைப்பாளர் சிலைன்னு நிறைய இடங்களைத் தியேட்டர்ல பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுலயும் சிவகுமார் நடிச்ச பாட்டொண்ணு பஸ்ல பாடுற மாதிரி வரும் “இந்தாம்மா மீன் மார்க்கெட்டெல்லாம் எறங்குன்னு” அந்தப்பாட்டு கூட நிறைய மெட்ராஸ சுத்திக் காமிச்சு இருக்கு. சினிமா மக்கள் குடியிருக்க கோடம்பாக்கம்தான் அப்போதைய காலத்துல எங்களுக்கு மெட்ராஸ்னு நம்பிக்கை. என்னதான் சினிமா நடிகங்களைப் பிடிச்சாலும் அந்த ஊரு மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காததாத்தான் அப்பவும் இருந்துச்சு.

திருப்பதி போறதுக்காக ட்ரெயின் மாறணுமேன்னு போனதுதான் நான் மொத தடவையா மெட்ராஸ் மண்ண மிதிச்சது. எக்மோருக்கு எதிர்த்தாப்டி இருந்த கடைங்கள எல்லாம் வேடிக்கை பார்த்ததோட சரி. எங்க தாத்தா கொடுத்த அஞ்சு ரூபா காச சட்டைப் பாக்கெட்டுக்குள்ள வச்சுக்கிட்டு அந்தப் பைய கைல பிடிச்சுக்கிட்டே சுத்துனது இப்பவும் ஞாபகம் இருக்கு. பிறகொரு தரம் வெளிமாநில டூர் போயிட்டுத் திரும்பி வர்ற வழியில மெட்ராஸ்ல ஹால்ட் அடிச்சி இருக்கேன். என் வாழ்க்கைல நான் என்னைக்கும் மறக்க முடியாத அடி வாங்கினது அப்பதான். ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி தான் போய் விழுமாம் கழனிப்பானையில துள்ளின்னு சொல்ற மாதிரி ஒரு கேசட் கடையில நானே திருடப் போய் செமத்தியா வாங்கிக் கட்டினேன். அதுவரைக்கும் பிடிக்காம மட்டும் இருந்த ஊரு அதுக்குப் பொறவு சுத்தமா பிடிக்காமப் போச்சு. வாழ்க்கையில இன்னொரு தரம் மெட்ராஸ்ங்கிற ஊருக்கு வரவே கூடாதுடான்னு அன்னிக்கு நினைச்சுக்கிட்டேன். ஆனா விதி யாரை விட்டது?

+2 முடிச்ச சமயம். நல்லாப் படிக்கிற பயபுள்ளைக்கு கணக்குல மார்க்கு கொறஞ்சு போச்சேன்னு வீட்டுல ஒரே கவலை. (181 வாங்கி இருந்தேன்). ஒடனே ரயில் ஏத்தி விட்டுட்டாய்ங்க போய் கல்வி அலுவலகத்துல மறுகூட்டல் விண்ணப்பம் கொடுத்துட்டு வான்னு. ரீவேல்யுவேஷன் அப்படின்னு ஒண்ணு இருக்குன்னு தெரியாம வண்டி பிடிச்சு நானும் வந்து இறங்கிட்டேன். கூடவே என் ஃபிரண்டும் வந்திருந்தான். ரெண்டு பேருமே ஊருக்குப் புதுசுன்னாலும் விசாரிச்சு பஸ் ஏறிட்டோம். ரெண்டரை ரூபா டிக்கட்டுக்கு ஊரையே சுத்திக் காமிக்குறாய்ங்க. எல்லா ஊர்லயும்தான் வெயில் அடிக்கும். ஆனா இந்த ஊர் வெயில் அந்தப் புழுங்கு புழுங்குது. மண்டை காய்ஞ்சு இறங்க வேண்டிய எடத்துல இறங்கி கழுத்துப் பகுதில கைய வச்சா கறுப்பு கறுப்பா படிஞ்சு கெடக்கு. கருமம் பிடிச்ச ஊருடான்னு திட்டிக்கிட்டே ஆபிசுக்குப் போனா தம்பி போய் ஊருப்பக்கம் பொழப்ப பாருங்க ஸ்கூலுக்கே ஃபார்ம் வரும்னு பொடணில அடிச்சு பத்தி விட்டாய்ங்க. மறுபடியும் மெட்றாஸ் மிஷன் ஃபெயிலியர்.

மீண்டும் மெட்ராஸ் வந்தது பொறியியல் கவுன்ஸிலிங் சமயத்துல. அடுத்த நாள் காலைல அண்ணா யுனிவர்சிட்டிக்குப் போகணும். மொத நாள் சாயங்காலம் படத்துக்குப் போகலாம்னு நானு, எங்க மாமா, என் ஃபிரண்டு, அவங்கப்பா எல்லாரும் கிளம்பி நாங்க தங்கி இருந்த இடத்துக்குப் பக்கத்துல இருந்த தேவி தியேட்டர் காம்ப்ளக்சுக்குப் போறோம். நாலு தியேட்டர்ல ஒண்ணுல காட்சில்லா, ஒண்ணுல அஜய் தேவ்கன் கஜோல் நடிச்ச ஹிந்திப்படம் (ஃப்ரென்ச் கிஸ்ஸோட காப்பி), இண்ணொன்னுல காதல் தேசம்னு நினைக்கிறேன், கடைசி தியேட்டர் என்ன படம்னு ஞாபகம் இல்ல. எல்லாப் படமும் ஹவுஸ்ஃபுல் போர்டு போட்டுட்டான். சரி பிளாக்ல வாங்கிப் போகலாம்னு விசாரிக்கப் போன மயக்கம் வராத குறைதான். ஒரு டிக்கட்டு 400 ஓவா. வெளங்குமா? டேய் முருகன் தியேட்டர்ல பத்து ரூபா காசுக்கு கால் மேல கால் போட்டு குஷன் சீட்டுல உக்கார்ந்து படம் பாக்குறவண்டா நானு. என்கிட்டப் போய்? போங்கடான்னு திரும்பி வந்தாச்சு. ஆக திரும்புற பக்கமெல்லாம் அடியாக் கெடச்சு எந்த விதத்திலயும் எனக்குப் பிடிக்காத ஊரா சென்னை இருந்துச்சு.

ஆனால் பின்னாளில், என் வாழ்வின் அதிமுக்கியமானதாக நான் கருதும் நட்பு சென்னையில்தான் இருக்கும் என்பதையோ, நான் பெரிதும் வெறுத்த அந்த ஊருக்கே இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை விரும்பி செல்லக் கூடிய நிலை வருமென்பதையோ அப்போது நான் அறிந்திருக்க வில்லை.

(சென்னை நினைவுகள் தொடரும்..)

May 9, 2011

சாம்பல் மிருகங்கள்


சதுரம் வட்டம் முக்கோணம் செவ்வகம்
என விதவிதமான வடிவங்களில்
தபால்தலைகளை சேர்ப்பது
ரொம்பப் பிடித்தமானது அபிக்கு
கிடைப்பதற்கரிய தபால்தலைகளை
பத்திரமாக ஒட்டிவைக்கிறாள்
மெலிதான பிளாஸ்டிக் உறைகளுக்குள் போட்டு
எளிதாக கிடைக்கும் மற்ற தபால்தலைகளை
அவள் அழகாக வெட்டி ஒட்ட
மானும் புலியும் பூனையும் பட்டாம்பூச்சியும்
அபியைப் பார்த்து சிரிக்கின்றன
தன் வாழ்வின் மாபெரும் பொக்கிஷம்
அதுவென நம்பினாள் அபி
பிறிதொரு நாளின் எதிர்பாரா சமயம்
வீட்டில் சட்டென்று பற்றிக் கொண்ட தீயில்
சாம்பலாகிப் போன ஆல்பத்தை பார்த்து
அழுதுகொண்டிருந்த அபியை
என்ன சொல்லி தேற்றுவதெனத் தெரியாமல்
மீண்டும் புதிதாக வாங்கிக் கொள்ளலாம்
என சொன்னவனை நிமிர்ந்து பார்த்து
தபால்தலைகளை வாங்கலாம்
செத்துப் போன புலியும் மானும்
பூனையும் பட்டாம்பூச்சியும்
மறுபடியும் வருமா
கண்கள் கசக்கி கேட்பவளிடம்
பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து
திகைத்து நிற்கிறேன் நான்.

(முகுந்த் நாகராஜனுக்கு)

May 3, 2011

பதிவுலகமும் நாதாரி பின்னூட்டங்களும்

கிட்டத்தட்ட ரெண்டரை வருஷமா பதிவுகள் எழுதிக்கிட்டு இருக்கேன். வெறுமனே பின்னூட்டம் போடுறதுக்காக ஆரம்பிச்ச பதிவுதான் இது. அதுக்கப்புறம் வேலையத்துப் போய் என்னத்தையாவது கிறுக்கி வைக்க நாலஞ்சு பயபுள்ளைங்க மாப்ள சூப்பருன்னு ஏத்தி விட்டதுல தொடர்ச்சியா எழுத ஆரம்பிச்சேன். இதுல எழுதுறதால எனக்குக் கிடைச்சது என்னன்னா முகம் தெரியா மக்களோட அன்பும் சில அருமையான நட்புகளும்தான். ரொம்ப நாளைக்கு முன்னாடி "நான் ஏன் எழுதுகிறேன்"னு இதைத்தான் சொல்லி இருக்கேன்.

ஒரு சிலர் பதிவை தங்களோட டைரிக்குறிப்புகளா வச்சிருக்காங்க. எழுதிப் பழக ப்ளாக் ஒரு அருமையான இடம் நம்மை அடுத்த தளத்துக்கு நகர்த்திட்டுப் போக இது உதவும்னு பத்திரிக்கைகள்ல எழுத ஆசைப்படுற மக்கள் சொல்றாங்க. எனக்கு இது மொக்கை போட அருமையான இடம் நம்மள மாதிரியான ஜாலியான மக்களை சந்திக்க இது உதவுதுன்னு சொல்றது சில பேரு. ஆக பதிவு எழுதுறதுக்கு எல்லாருக்கும் ஒரு காரணம் இருக்கு. அதே மாதிரி மக்களைத் தொடர்ச்சியா எழுத வைக்கிறதுலயும் அவங்களோட ஆர்வத்த தக்க வைக்கிறதுலயும் பின்னூட்டங்கள் ரொம்ப முக்கியமானவை.

எதை எழுதினாலும் அதுக்கு மக்கள் என்ன சொல்றாங்கன்னு உடனே தெரிஞ்சிக்கிறது பின்னூட்டங்கள் மூலமாத்தான். பதிவை எழுதிப்புட்டு எத்தனை பின்னூட்டம் வந்திருக்குன்னு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு வாட்டி ரெப்ரெஷ் பண்ணிப் பாக்குற வியாதி எனக்கும் இருந்திருக்கு. எல்லாம் எதுக்காக? ஒரு சின்ன அங்கீகாரம்.. நாம நல்லாத்தாண்டா எழுதி இருக்கோம்னு நண்பர்கள் பாராட்டும்போது ஒரு சந்தோசம். அதுக்குத்தானே ஆசைப்படுறோம். அதே மாதிரி நல்லாயில்லைன்னு நண்பர்கள் சொன்னாலும் நம்மள நாமளே திருத்திக்க ஒரு வாய்ப்பை பின்னூட்டங்கள் தருது.

சொல்லப்போனா பின்னூட்டம் அப்படிங்கிற வார்த்தையே தப்புத்தான். ஆங்கிலத்துல "comments" அப்படிங்கிறத மொழிபெயர்த்தா "கருத்துரைகள்"னு வேணும்னா சொல்லலாம். அதுதான் சரியா இருக்கும். பதிவுல இருக்குற விஷயங்கள் பத்தி வாசிக்கிறவங்களோட கருத்து என்ன? இது சரியா தப்பா.. என்ன மாதிரியான மாற்றுக்கருத்து இருக்கு? இதை எல்லாம் தெரிஞ்சுக்குறதுக்கான இடமாத்தான் பின்னூட்டங்கள் இருக்கணும். ஆனா இன்னைக்கு அப்படி இருக்கா?

நண்பர் ஒருத்தர் எழுதின பதிவு அது. ஒரு தொலைகாட்சி நிறுவனத்துல வேலை பார்த்த பெண்மணி ஒருத்தவங்க மர்மமான முறையில இறந்து போயிட்டதப் பத்தின பதிவு. அதுல இருந்த மொத பின்னோட்டம் என்ன தெரியுமா? எனக்குத்தான் சுடுகஞ்சி. ஏன்யா உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? எழவு வீட்டுல போய் ஆதித்யா சேனல் போடுங்கன்னு சொல்ற மாதிரியான அபத்தம் இல்லையா அது? பதிவு என்ன எது பத்தின்னு கொஞ்சம் கூட வெவரம் தெரியாம எதுக்குங்க பின்னூட்டம் போடணும்? உங்க நண்பர் அதப் பார்த்துத்தான் நீங்க வந்து இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கணும்னா அப்படி ஒரு அவசியமே இல்லைன்னுதான் சொல்லுவேன்.

இன்னொரு கொடுமை. ஒரு பதிவர் தான் ஒரு இன்டர்வியூக்குப் போயிட்டு வந்த கதையை எழுதி இருக்காங்க. ஏற்கனவே ஆளைத் தேர்ந்து எடுத்துட்டு வெறுமனே கண்துடைப்புக்கு நடத்துறாங்கன்னு நொந்து போய் எழுதி இருக்க இடத்துல நம்மாளுங்க போய் போடுற பின்னூட்டம் "மொத வடை". இவங்கள எல்லாம் என்ன பண்றது? இதோட நிப்பாட்டுறாங்களா.. வாய்ல வர்றது எல்லாம் பின்னூட்டம். கோடாலி சுத்தியல் தயிர் தக்காளின்னு.. கருமம்டா. இப்படி எல்லாம் பின்னூட்டம் போடுறதுக்கு போடாமயே இருக்கலாம்.

வாசிச்சு நல்லா இருக்கு இல்லைன்னு சொல்றதுக்குத்தாங்க பின்னூட்டம். இந்த மாதிரி ஈத்தரையா மீ தி ஃபர்ஸ்ட், சுத்தியல், வடைன்னு போடுறதுக்கு இல்லைங்க. விளையாட்டு பண்ணுங்க.. ஆனா பதிவு எதப் பத்தின்னு தெரிஞ்சுக்கிட்டாவது பண்ணுங்க. போற போக்க பார்த்தா அருமை, நல்லாயிருக்கு, :-)))) மாதிரியான டெம்ப்ளேட் பின்னூட்டங்களே பரவாயில்லைன்னு சொல்ற மாதிரி வந்துரும்னுதான் நினைக்கிறேன்.

பதிவுகள் இன்னைக்கு ரொம்பவே நல்லா வளந்துக்கிட்டு இருக்கு. மத்த மீடியால இருந்தெல்லாம் நம்மள கவனிக்கிறாங்க. இங்க இருந்து பத்திரிக்கைகளுக்கு எழுதப் போற அளவுக்கு முக்கியமான இடத்துல இருக்கோம். நமக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு. அதனாலத்தான் சொல்லணும்னு தோணுச்சு. சொல்லிட்டேன். இனிமே உங்க பாடு. அம்புட்டுத்தான்.

May 2, 2011

பிறிதொரு மரணம் - உதயசங்கர்

(கல்குதிரையில் வெளியான கட்டுரை)

Man is the only animal for whom his own existence is a problem which he has to solve

- Eric Fromm

தன்னுடைய இருத்தல் சார்ந்த பிரச்சினைகளே இன்றைய உலகில் மனிதன் சந்திக்கக் கூடிய மிகப்பெரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. எந்த இடத்திலும் நிலை கொள்ளாமல் அடுத்தது என்னவென்ற குழப்பத்தோடு முன்னகரும்போது அடிப்படை விஷயங்கள் காலாவதியாகி தனக்கான சுயத்தைத் தொலைத்துத் திரிய நேரிடுகிறது. உலக மயமாக்கலும் ஊடகங்களின் ஆதிக்கமும் இன்றைக்கு வாழ்வின் மீதான புதியதொரு பரிமாணத்தை உருவாக்கியிருக்கின்றன.

சமீபத்தில் சில மாணவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில் கடைசியாக தங்கள் குடும்பத்தோடு அமர்ந்து வேறெந்த சிந்தனையுமின்றி சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தது எப்போது எனக் கேட்டபோது யாராலுமே பதில் சொல்ல இயலவில்லை. பணம் சம்பாதிப்பதும் இலக்கின்றி வாழ்வதுமே வாழ்க்கை என நம்பக்கூடிய ஒரு காலகட்டத்துக்கு நாம் இயல்பாகவே வந்து விட்டிருக்கிறோம். இது சரியென்றோ தவறென்றோ பேசுவதற்கான அக்கறையோ நேரமோ யாரிடத்திலும் இல்லை.

நமக்கு முன் இப்பாதை வழி பயணம் சென்ற பலரும் சொல்லிப் போன விஷயங்களான அன்பும் சக மனிதர்கள் மீதான நேசமும் நம்பிக்கையும் இன்றைய இயந்திர உலகத்தில் அர்த்தமில்லாத சொற்களாக மாறி விட்டன. பணம் ஒன்றே சகலத்தையும் தீர்மானிக்கும் விஷயமாக மாறிப் போய் விட்ட சூழலில், தன்னைச் சுற்றி இருக்கக் கூடிய தன் மக்களின் வாழ்வை, அவர்கள் தொலைத்து விட்ட விஷயங்களையும் ஆதாரங்களை கேலிக்குரியதாக்கும் வாழ்க்கை முறையையும் வறுமையையும் அதன் அபத்தங்களையும் எந்தப் பாசாங்கும் இல்லாமல் பேசிப் போகிறது உதயஷங்கரின் படைப்புலகம்.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக இலக்கியத்தில் இயங்கி வரும் உதயசங்கரின் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பாக பிறிதொரு மரணம்என்கிற தலைப்பில் வம்சி வெளியீடாக வந்திருக்கிறது. தன்னுடைய அரசியல் நிலைப்பாடு மற்றும் நம்பிக்கைகள் சார்ந்து ஒரு படைப்பாளி இயங்கும்போது பெரும் கவனத்தோடு இயங்க வேண்டி வருகிறது. எக்காரணம் கொண்டும் கதைகளில் பிரச்சார நொடியோ தன்னுடைய சிந்தனைகளை கதாபாத்திரங்களின் வழி இறக்கி வைக்கும் முஸ்தீபுகளோ ஏதுமில்லாமல் கதையைத் தன்போக்கில் பயணிக்க விட வேண்டும் என்பதில் உதயசங்கர் கவனமாக இருந்து சாதித்து இருக்கிறார்.

இந்தத் தொகுப்பில் வலம்வரும் கதைமாந்தர்கள் எல்லாரும் ஏதோ மாய உலகில் இருந்து குதித்து வந்தவர்கள் கிடையாது. ஒவ்வொரு கணத்தையும் எதிர்பார்ப்புகளோடு கழிக்கும் நடுத்தர வர்க்கத்தினரும், எந்தவொரு ஆதாரமுமின்றி அடுத்த வேளை உணவுக்குக் கூட யாரையேனும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் வரை நாம் பார்த்து அறிந்திருக்கக் கூடிய மக்களே இந்தக் கதைகளில் காணக் கிடைக்கிறார்கள். மனிதர்களின் அந்தரங்கள் சார்ந்து பேசுவதைக் காட்டிலும் அவர்களுடைய புறச் சூழல் எத்தகைய நெருக்கடிகளை உண்டு பண்ணுகிறது என்பதை சொல்லி வாசிப்பவருக்கும் அந்தப் பதட்டத்தைக் கடத்துவது உதயசங்கருக்கு எளிதாகக் கைவருகிறது.

இந்தத் தொகுப்பில் இருக்கக்கூடிய ஆகச் சிறந்த கதையென "மார்ட்டின் ஹைடேக்கரும் மத்தியானச் சோறும்" என்கிற கதையை சொல்லலாம். பெருநகரத்தில் பிழைப்பு தேடித் திரியும் அவனால் ஒரு நாள் முழுக்க பட்டினி கிடக்க முடியாமல் வரும் வழியில் சந்திக்கும் அதிகம் அறிந்திராத நண்பனொருவனிடம் உதவி கேட்கிறான். இவனை விட வீடென்ற ஒன்று இருக்கிரதென்பதைத் தவிர அதிகம் வித்தியாசமில்லாத அவனிடமும் காசில்லாமல் போக இருவரும் வீட்டுக்கு சாப்பிடப் போகிறார்கள். அங்கே தாயின் புலம்பல் தாங்க மாட்டாமல் நண்பன் கோபித்துக் கொண்டு போக கிடைத்த ஒரு வாய் வெறும் சோற்றை அள்ளிப் போட்டுக் கொண்டு கையை நக்கியபடி ஓடும் மனிதனை விட இருத்தல்வாதத்தை யாரால் பெரிதாகக் கேலி செய்து விட முடியும்?

எல்லா மனிதர்களும் சமமெனில் எங்கிருந்து இந்த வித்தியாசங்கள் தோன்றுகின்றன என்கிற ஆதாரக் கேள்வியை முன்வைத்தே உதயசங்கர் தன்னுடைய படைப்புகளை முன்வைக்கிறார். நன்கு வாழ்ந்து கெட்ட முதிய மனிதனொருவன் மாதம் தவறாமல் தம்பி வீட்டில் கிடைக்கும் அமாவாசைச் சோற்றுக்காக ஏங்கிக் கிடக்கும் "கருப்பு மதியம்" கதையும் இதே மாதிரியான இருத்தல் பிரச்சினைகளை முதுமையின் கொடிய மாற்றங்களைக் காட்சிப்படுத்திப் பேசுகிறது.

உதயசங்கரின் கதைகளில் உலாவும் பெண்கள் வெகு சாதாரணமானவர்கள். எங்கிருந்தோ மாயலோகத்தில் இருந்து குதித்தவர்கள் போலல்லாமல் நீங்களும் நானும் எதேச்சையாகக் கடந்து போகக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அத்தோடு அவர் படைக்கும் பெண்களை காலம் சார்ந்தும் அணுக வேண்டியிருக்கிறது. கதைகள் எழுதப்பட்ட காலமான 70 -90 களில் தமிழ்ப்பெண்களின் நிலை என்னவாக இருந்தது? எந்தவொரு சூழலிலும் ஆணைச் சார்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் பொருளாதார விடுதலையின்மையும் பெண்களை பீடித்து இருந்த பெருவியாதிகளாக இருந்த காலத்தை அழுத்தமாக பதிவு செய்யும் பெண்களை நம் கண் முன் நிறுத்துகிறார் ஆசிரியர்.

பெண் விடுதலை, வீரம் என்றெல்லாம் அதீதமாக பேசிக் கொண்டிராமல் இதுதான் நிதர்சனம் பெண்களின் உலகம் இப்படியாகத்தான் இருக்கிறது என்பதை உறைக்கும்படியாக சொல்லிப் போகிறார். வீடுகளின் பட்டாசால்களிலும் அடுக்களையிலும் அலைந்து திரியும் பெண்களில் துயரத்தின் சாயல்களும் தீர்க்க முடியா ஆசையின் பெருங்கனவுகளும் ஆற்றாமையின் பெருவடிவாய் தீவிரமாகப் படிந்து கிடக்கின்றன.

இந்த மாதிரியான விஷயங்களைக் கேள்விக்குண்டாக்கும் வகையில் "வாசனை" என்கிற கதையும் "பூனைவெளி" என்கிற கதையும் மிக முக்கியமானவை ஆகின்றன. தன் ஆதிக்கம் தாளாது மனைவி தன்னைக் கொன்று விடுவாளோ எனப் பயந்து நடுங்கும் கணவன் உணரும் மரணத்தின் வாசனையும், தாயைப் போலவே பூனைகளைக் குறியீடாகக் கொண்டு தனக்கான வாழ்வை வெளியே ஒரு பெண் தேடியலையும் பூனைவெளியும் பெண்களின் அக உலகம் சார்ந்து இயங்குகின்றன.

மென்மையான மனிதராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் உதயசங்கரின் கதைகளில் அடுத்ததாக பெரிதும் தேங்கி நிற்பது மனிதர்களின் மீதான நம்பிக்கையின்மையும் பதட்டமுமே. அன்பும் நம்பிக்கையும் அருகி பார்க்கும் மனிதரெல்லாம் நம் எதிரியோ என சந்தேகப்படும் மனித குணமும் அதன் அடிப்படை ஆதாரமாக விளங்கும் பணமும் அவருக்கு புரியாததாகவும் பயம் தரக் கூடியதாகவும் இருக்கின்றன. அவ்வகையில் "நிலை" ஒரு அற்புதமான கதை எனச் சொல்லலாம். நண்பரோடு பகிந்து கொண்டிருக்கும் அறை ஒன்றில் அவரை விசாரித்துக் கொண்டு வரக்கூடிய மனிதன் உண்டாக்கக் கூடிய பதட்டமும் சந்தேகங்களையும் வெகு அழகாக சொல்லிப் போகும் கதை.

நம்புவதா வேண்டாமா என்கிற மனிதனின் அவஸ்தையை வெகு அழுத்தமாகப் பதிவு செய்யும் இக்கதையின் தொடர்ச்சியாக வரும் "அசைவு" என்கிற கதை நேரெதிராக ஆசுவாசத்தையும் குரூரத்தையும் பேசிப்போகிறது. பேருந்தில் பயணிக்கும் இரண்டு பேர் மற்றவன் தன் பணத்தை திருட வந்தவனோ என சந்தேகம் கொண்டு அலைந்திடும் "சக மனிதன்" சமுதாயத்தின் நிலையை கிண்டலுக்கு உட்படுத்துகிறது.

குடும்ப முறைகள் இன்று எந்த மாதிரியான சூழலில் இயங்கி வருகின்றன என்பதை ஆழ்ந்து பதிவு செய்யும் கதைகளும் இத்தொகுப்பில் இருக்கின்றன. ஜி.நாகராஜனின் கதையொன்றை ஞாபகப்படுத்துகிறது "உறவு" சிறுகதை. பெண் பிள்ளைகளுக்கும் சொத்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லும் தாயை எதிர்த்து சண்டை போடும் மகன்கள் வெயிலில் கிளம்பும்போது தடுத்து சாயங்கலாம சாப்பிட்டுப் போகலாம் எனச் சொல்லும் தாயின் வார்த்தைகளில் ஒளிந்து கிடக்கிறது மிச்சமிருக்கும் பாசத்தின் சிறுதுளி.

பணம் சம்பாதிக்கத் துப்பில்லாத மகனை தாயும் தந்தையும் கூட மதிக்காத நிதர்சனத்தை பேசுகிறது "வாசலில் ஒரு பெட்டி". எத்தனை பெரிய உறவாக இருந்தாலும் பணம் என்கின்ற பிசாசின் முன் தோற்றுப் போனதாக தலைகுனிந்து நிற்க வேண்டிய சூழலை அண்ணன் தங்கை பிரச்சினையாக அழுத்தமாகப் பதிவு செய்கிறது "மனிதர்கள்". கடுமையான பொருளாதாரச் சூழலில் தாய்க்கு செய்யும் செலவுக்குக் கூட கணக்கு பார்க்கும் மகன்களின் கதைதான் "புறாக்களும் தண்டவாளங்களும்". ஆக இன்று உலகத்தின் அடிப்படை ஆதாரமாக அசுர உருவெடுத்து நிற்கும் பணம்தான் நம் இயக்கத்தை தீர்மானிக்கிறதா என்கிற காட்டமான கேள்விகளை உறவுகள் சார்ந்து இந்தக் கதைகள் முன்வைக்கின்றன.

முன்சென்ற காலத்தை திரும்பிப் பார்ப்பது எப்போதும் சுகமானது. அதே நேரம் அந்நினைவுகளே ஒரு மனிதனை துயரமேனும் பள்ளத்தாக்கில் சுற்றிச் சுழலடிக்கும் வல்லமையும் கொண்டவை. தொலைத்த வாழ்வின் வலை ஆகக் கொடியது என்பதை "மறதியின் புதைசேறு" பேசுகிறது. விதவிதமான பொம்மைகள் செய்யக்கூடிய ஒருவன் யதார்த்த வாழ்வின் கால்களில் நசுக்கப்பட்டு மளிகைக் கடைக்காரனாக மாறிப்போன காலத்தில் மீண்டும் பொம்மை செய்த தா என வந்து நிற்கும் பையனுடன் செய்யும் பொம்மைகள் எல்லாம் வெறும் காகிதப் பொட்டலங்களாக மட்டுமே வர முடியுமென்பதில் ஒளிந்திருக்கும் வலி அசாத்தியமானது.

தனக்குள் எங்கோ ஒளிந்து கிடந்த புல்லாங்குழல் இசை மீண்டும் வெளிவருவது கண்டு சந்தோசம் கொள்ளாமல் இதெல்லாம் சும்மா என்று சொல்லியபடி தலைதிருப்பும் "டேனியல் பெரியநாயகத்தின் புல்லாங்குழல்" நிதர்சன வாழ்வின் நிழல் பொழுதுகளைப் பேசுகிறது. இதே மாதிரியான உணர்வைத்தான் நெல்லை ஆற்றங்கரையில் பால்யத்தைத் தேடும் மனிதனின் கதையான "அடி"யும் சொல்கிறது.

சாதாரண மக்களுக்கு அபத்தமாகப் படும் விஷயங்களும் எப்படி விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் அங்கமாகிப் போகின்றன என்பதைப் பேசும் சில கதைகள் இந்தத் தொகுப்பில் கவனிக்கப்பட வேண்டியவை. தாலிக்கொடி அறுந்து போகும் அளவுக்கு அடித்துத் துரத்தும் கணவன் அடுத்த நாளே எந்த வித குற்றவுணர்வும் இன்றி மனைவியைக் கொஞ்சுவதும் அவளும் அதை பொருட்படுத்தாமல் அவனோடு போவதும் அவர்களுக்கு சகஜமாக இருப்பது "உள்ளும் வெளியும்" கதையில் வெகு அழகாக வெளிப்படுகிறது. "தூரம்", "பால்ய சிநேகிதி" போன்ற இன்னபிற கதைகளும் இதே வகையிலான அபத்தங்களைப் பேசுபவையே.

மாயப்புதிர்த் தன்மையோடு எழுதப்பட்டு இருக்கும் "சித்திரக் குள்ளர்களின் கலகம் ஒரு வரலாற்றுக் குறிப்பு ", "பிறிதொரு மரணம்" ஆகிய கதைகளும் சமூகத்தின் மீதான கோபத்தின் வெளிப்பாடுகளே. உதயஷங்கரின் அங்கதம் வெளிப்பட்டிருக்கும் ஒரே கதையான "அண்டகா கசூம்.." பெருநகர வீதிகளில் தன இருப்பை தொலைத்த ஒருவன் வெளிக்குப் போக முடியாமல் ஒரு நகரமே அவதிப்படுவதாக சொல்லி அந்நகரை விட்டு வெளிவந்த பின்னே தன் இயல்பு நிலை அடைகிறான் என்பதாக நகரத்தின் அவசர வாழ்க்கை மீதான கேலிச்சித்திரத்தை உருவாக்குகிறது. எழுதும் எல்லா கதைகளிலுமே சமூகம் குறித்து பேசுவதிலிருந்து சற்றே விலகி உணர்வு தளத்தில் இயங்கும் "ஒரு பிரிவுக்கவைதை" காதலின் வலியை வெகு ஆழமாக நமக்குள் இறக்கி வைக்கிறது.

நெல்லை மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களே களங்கள். ஸ்டேஷன் மாஸ்டர்களும் தீப்பெட்டித் தொழில் செய்பவர்களும் வறுமையில் உழல்பவர்களும் பிரதானக் கதாபாத்திரங்கள் என மீண்டும் மீண்டும் கதைகள் ஒரே சட்டகத்துக்குள் இயங்குவது சின்னதொரு சலிப்பை உண்டாக்குகிறது. அதே போல, ஒரே மாதிரியான உணர்வைத் தரக்கூடிய கதைகளை வெவ்வேறு சூழலுக்குள் பொருத்திக் கதை சொல்லும் இடத்தில் (சகமனிதன் - நிலை, தூரம் - உள்ளும் வெளியும், குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு - ஒரு விளக்கும் இரண்டு கண்களும், விடியுமா - ஊழி) சற்றே அலுப்புத் தட்டவும் செய்கிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். அகச்சிக்கல்களை ஆழமாகப் பேச இடமிருந்தும் அவற்றை தவிர்த்து நேரடிக் கதையாடலை மட்டுமே உதயஷங்கர் நம்புகிறார் என்பது வருத்தமான விஷயம்.

புத்தக வடிவமைப்பில் அட்டையில் நல்ல கவனம் செலுத்தி இருக்கும் பதிப்பகத்தார் உள்ளே பயன்படுத்தப்பட்டு இருக்கும் எழுத்துருவிலும் சற்றே கவனம் செலுத்தி இருக்கலாம். பக்.227 தொடங்கி எழுத்துரு வெகு சிறியதாக இருப்பது வாசிப்பவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

இருந்தும், முப்பது வருடங்களாக, தான் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் சார்ந்து தொடர்ச்சியாக இயங்கி வரும் உதயசங்கரை கண்டிப்பாக பாராட்டவே வேண்டும். என்றேனும் நிலை மாறும் எனும் நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக எழுதி வரும் அவருக்கு வாழ்த்துகள். எளிதான மொழி, சொல்ல வந்த விஷயத்தைத் திறம்பட சொல்லுதல், சக மனிதர்களின் மீதான அக்கறை என உதயசங்கரின் தொகுப்பு கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.


பிறிதொரு மரணம்
வம்சி வெளியீடு
ரூ.200