"ஹேய்ய்ய்ய்ய்ய்ய்...."
அவர்கள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே அந்தப் பெண் சிரித்தபடி நின்றிருந்தாள்.
"எக்காரணம் கொண்டும் நீங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க மாட்டேன். ஆனால் அதற்கு முன்னர் உங்களோடு சிறிது நேரம் உரையாட முடியுமா?"
அவள் பேச்சில் இருந்த உறுதி அவர்களை என்னமோ செய்தது. அவர்கள் குழப்பத்தோடு இறங்கி வந்தார்கள். இப்போது அந்தப் பெண்ணை நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. சற்றே வித்தியாசமாக உடை அணிந்திருந்தாள். களையான யாரையும் எளிதில் கவரக்கூடிய முகம். உதடுகளின் ஓரம் ஒட்டியிருந்த அந்தப் புன்னகை இன்னும் அழகு.
"இப்படி இந்த மரத்தின் கீழே அமர்ந்து கொள்வோமா?"
அமர்ந்தார்கள்.
"எதற்காக இந்த தற்கொலை முடிவு?"
"வேறன்ன.. எல்லாம் இந்த பாழாப்போன காதல்தாங்க.."
"உங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?"
"சொல்றேங்க... இவங்கப்பா ஊர்லையே பெரிய பணக்காரரு.. நாங்களும் வசதியான குடும்பம்தான்.. இவளக் காலேஜ்ல பார்த்து லவ் பண்ணினேன்.. இவ இல்லாம நான் இல்லைன்னு ஆகிப்போச்சு.. ரெண்டு பேர் வீட்டுலையுமே வசதி ஜாஸ்திங்கிரதால பிரச்சினை வராதுன்னு நம்பினோம்.."
"பிறகு..?"
"ஆனா எல்லாத்துக்கும் மேல தமிழன் கண்டுபிடிச்ச ஒரு விஷயத்த நாங்க மறந்துட்டோம்.. அது சாதி.. நான் கீழ்சாதியாம்.. அதனால பொண்ணு தர மாட்டேன்னு இவங்கப்பா சொல்லிட்டாரு.. நம்ம சாதியப் பத்தித் தப்பாப் பேசுனவன் பொண்ணு உனக்கு அவசியமான்னு எங்கப்பாவும் ஆட ஆரம்பிச்சுட்டாரு.. அதனால் வீட்டை விட்டு வந்தாச்சு.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதான் சாவுலையாவது ஒண்ணு சேருவோமேன்னு.. "
"நீங்கள் சொல்வதும் நியாயம்தான்.. ஆனால் ஒரே ஒரு கேள்வி.. செத்துப் போவதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்க முடியும் என நினைக்கிறீர்கள்?"
""எங்க அப்பாக்களுக்கு வலிக்கும்ல.. ஏன்டா இவங்களை சேர்த்து வைக்கலைன்னு காலம் பூரா அவங்க வருத்தப்படணுங்க.."
"ஹ்ம்ம்.. வீட்டை விட்டு வந்து எத்தனை நாளாகிறது?"
"ஒரு வாரமாச்சு.. ஏன் கேக்குறீங்க.."
"இந்த ஒரு வாரத்தில் எப்போதாவது உங்கள் வீட்டில் உங்களைத் தேடிக்கொண்டு வந்தார்களா?"
முதன்முறையாக அவன் முகத்தில் சிறிய குழப்பம் தோன்றியது.
"ம்ஹூம்.. இல்லைங்க.."
"உங்களை வருத்திக் கொள்வதை நான் தவறு சொல்ல மாட்டேன். ஆனால்.. உங்கள் கஷ்டத்தால் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று சொல்பவர்களுக்காக நீங்கள் உங்களை அழித்துக் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது..?"
"..."
"இப்படிப்பட்ட, உங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மக்களுக்காக நீங்கள் மாய்ந்து போகத்தான் வேண்டுமா? உலகிலேயே அதிக தைரியம் தற்கொலை செய்து கொள்ளத்தான் தேவைப்படும்.... உங்களுக்கு அதற்கான தைரியமே இருக்கும்போது வாழ வேண்டும் என்றால் போராடுவதா முடியாது?"
"ஆமாங்க.. இவங்க சொல்றதுலயும் நியாயம் இருக்கு.."அந்தப் பெண் முதல் முறையாகப் பேசினாள்.
"இந்த வாழ்க்கை எத்தனை அழகானது தெரியுமா?" அவள் பேசத் தொடங்கினாள். பேசி முடித்தபோது அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.
"நல்ல நேரத்துல வந்து எங்களைக் காப்பாத்துனீங்க.. ரொம்ப நன்றி.. இவங்க முன்னாடி நாங்க கண்டிப்பா வாழ்ந்து காட்டுவோம்.."சொல்லும்போதே அவன் நா தழுதழுத்தது.
"இந்த நம்பிக்கை என்றைக்கும் இருக்க வேண்டும். எனக்கு அது போதும். புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.. "
அந்தப் பெண் திரும்பி நடக்கத் தொடங்கினாள். சட்டென ஞாபகம் வந்தவனாக அவன் அவளைக் கூப்பிட்டான். அவள் நின்றாள்.
"எங்களுக்கு இவ்ளோ உதவி பண்ணினீங்க.. உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே.."
அவள் விரக்தியாகச் சிரித்தாள்.
"நானும் உங்களைப் போல தகுதி பார்க்காமல் காதலித்தவள்தான். என் அதீத அன்பே என் காதலரின் மரணத்துக்கு காரணமாகிப் போனது. நானும் ஒரு சில மருந்துகளை ஒன்றாகக் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். ஆனால் என் கேட்ட நேரம் பிழைத்துக் கொண்டேன். ஒவ்வொருவர் வாழ்விற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். அன்று முதல் என்னால் இயன்றவரை காதல் ஜோடிகளை ஒன்று சேர்த்து வாழ வைத்து வருகிறேன். நான் காப்பாற்றும் 3 ,88 ,76,543 ஆவது ஜோடி நீங்கள்.."
அவன் முழித்தான்.
"புரியலையே.."
"சில விஷயங்கள் புரியாமலிருப்பதே நல்லது.. நான் கிளம்புகிறேன்.."
"ஹலோ.. உங்க பேரென்னன்னு சொல்லவே இல்லையே.."
அவள் மெல்லிய புன்னகையோடே சொன்னாள்.
"அமராவதி.."