Showing posts with label உதிரிப்பூக்கள். Show all posts
Showing posts with label உதிரிப்பூக்கள். Show all posts

October 8, 2012

உதிரிப்பூக்கள் - 18

ப்பாவோடு வண்டியில் ரயில்வே காலனி வழியே போய்க் கொண்டிருந்தேன். போலிஸ் லைன் அருகேயிருக்கும் தண்ணித் தொட்டியைத் தாண்டும்போது ஏதோ ஞாபகம் வந்தவர் வண்டியை நிறுத்தச் சொன்னார். செய்தேன். இறங்கிப் போனவர் நேராக அங்கிருந்த ள்ளத்தில் போய் அமர்ந்து கொண்டார். வெகு நேரமாக வராதவரை என்னவென்று போய்ப் பார்த்தால் மனிதருக்குக் கண்ணெல்லாம் கலங்கி இருந்தது.

என்னப்பா ஆச்சு?

என் கூட சின்ன வயசுல இருந்து ஒண்ணா இருந்தவன்யா.. தர்மராசுன்னு பேரு. போன மாசம் தவறிட்டான். இந்த வழியாப் போனோமா.. அவன் நெனப்பு வந்திருச்சு. நாங்க நாலஞ்சு பேரு கூட்டாளிங்க.. உங்களுக்கு அந்தக் கொழாயடி மாதிரி..   இந்தத் தொட்டிக்குக் கீழ தான் எல்லாரும் விழுந்து கெடப்போம். இன்னைக்கு அவனுக யாரும் இல்ல. நான் மட்டும்தான் கடைசி.

வண்ணதாசனுக்கு நடைபெற்ற "அந்நியமற்ற நதி" கூட்டத்தில் எஸ்ரா பேசிய வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வந்தன. "இடம் என்பது வெறும் இடம் மாத்திரம் அல்ல. அவை நினைவுகளின் மீதங்கள். காலம் மனிதர்களைக் கவர்ந்து போக இடம் மட்டும் அவர்களுடைய நினைவுகளைத் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு அர்த்தத்தை நமக்குத் தந்து போகிறது."

த்தனை சத்தியமான வார்த்தைகள்? நீருக்குள் கிடக்கும் கூழாங்கற்களாய் ஆழ் மனதில் உறைந்து கிடக்கும் நினைவுகளை மீட்டெடுத்து பைத்தியம் பிடித்ததென நம்மை அலைக்கழிப்பவை இடங்கள். கலைடாஸ்கோப் போல பார்ப்பவரின் தன்மைக்கேற்ப தனது இயல்பையும் இருப்பையும் அவை மாற்றிக் கொள்கின்றன. நிறங்களின் வழி கசிந்துருகும் சில கனவுகள் உயிர்ப்பாய் இருக்கின்றன. சில நம்பிக்கைகள் மொத்தமாய்த் தொலைந்து போகின்றன. வாழ்வின் அற்புத கணங்களை, நாம் இழந்த மனிதர்களை, சந்தோசங்களை, துக்கங்களை, துரோகங்களை என யாவற்றையும் உயிர்ப்பாய் வைத்திருப்பவை நாம் தாண்டிப்போகும் இடங்கள்தானே?

வ்வொரு முறையும் மதுரைக் கல்லூரி பாலத்தின் மீது போகும்போதும் என் கண்கள் சுப்பிரமணியபுரத்தின் சாலைகளில் வீழ்ந்து மீளும். என் வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம் அங்கேதான் கழிந்தது. உலகம் என்பது என்னவென்று எனக்கு சொல்லித் தந்தது அந்த இடம். இன்றிருக்கும் என்னை வடிவமைத்தது  என நான் அங்கிருந்த நாட்களைச் சொல்லலாம்.

நான் குடியிருந்த சாந்தா அத்தை காம்பவுண்டின் முதல் வீட்டில் இருந்த மீனாக்காவுக்கு பாட்டு என்றால் உயிர். தன் தங்கையோடு சேர்ந்து மேடைக் கச்சேரிகளில் பாடுபவர். இரவில் அவரது வீட்டின் உள்ளிருந்து எப்போதும் ஒரு மெல்லிய ஹம்மிங் கேட்டபடி இருக்கும். நானும் என் தங்கச்சியும் ஒரு நாள் இல்லைன்னா ஒருநாள் சூலமங்கலம் சிஸ்டர்ஸ் மாதிரி பிரமாதமா வருவோம்டா. மடியில் அமர்த்தி என் தலைகோதி பிரியமாகச் சொல்லுவார். இப்போது மீனாக்கா எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் கோவில் திருவிழா மேடைகளைக் கடக்கும்போதெல்லாம் அங்கு பாடிக் கொண்டிருப்பவர் மீனாக்காவாக இருக்கக்கூடாது என்று பதட்டமாக இருக்கும். 

எதைச் சாப்பிட்டாலும் வீட்டுக்குள் பேண்டு வைக்கிறார் என வாசலுக்குத் துரத்தப்பட்டவர் எதிர்வீட்டு சம்முவம் பாட்டையா. ரோட்டில் விளையாடும் பசங்களைத் திட்டிக் கொண்டே இருப்பார். மேலே பந்து விழுந்தால் எடுத்து வைத்துக் கொண்டுத் தர மாட்டார். அவரைக் கண்டாலே எங்களுக்கு எரிச்சலாக வரும். நான் வீடு காலி செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு என்னை வரச் சொன்னார் எனப் போயிருந்தேன். தன் தலைகாணிக்குக் கீழிருந்து ஒரு சின்ன டப்பாவை எடுத்துத் தந்தார். அது முழுக்க பழங்காலத்து நாணயங்கள். நான் சேகரிப்பது தெரிந்து எனக்காகக் கொடுத்து விட்டார். இன்னும் கொஞ்ச நாள்ள போகப் போறவன் எனக்கு எதுக்குய்யா, எங்க இருந்தாலும் நல்லா இரு எனக் கண்களில் கண்ணீர் மல்கியபடி கொடுத்த அந்த மனிதரின் பிள்ளைகள் மீதான பிரியம் அன்றுதான் புரிந்தது. அவர்  இன்னும் உயிரோடு இருப்பாரா? இல்லை அந்தக் கட்டில் இன்னும் வெளியேதான் கிடக்குமா? 

மொட்டை மாடியில் நின்றபடி நான் உன்னை விட்டுப் போக மாட்டேண்டா என அழுதவளின் ஈரத்தை இன்னும் உணர முடிகிறது தோள்களில். எனக்குக் கெட்ட வார்த்தை சொல்லித்தந்த குரு பால்வண்டி பாலாஜியும் பாதியில் படிப்பை விட்டு லேத்துக்குப் போன குட்டை குமாரும் என்ன ஆனார்கள்? சாந்தா அத்தையின் மூன்றாவது மகள் தான் காதலித்த ராஜசேகர் அண்ணனோடு ஓடிப்போனாளா இல்லையா? ரைஸ்மில் கிரவுண்டில் கட்டப்பட்ட பாலகுருகுலம் ஸ்கூலுக்குள் எங்காவது ஒரு ஓரத்தில் அவுட், சிக்ஸர் போன்ற அலறல்கள் இன்னும் கேட்குமா? நிறைய கேள்விகள் என் மனதுக்குள் ஓடியபடி இருக்கும். ஒருமுறை அந்தப் பகுதிக்குப் போய்ப் பார்க்கலாமா எனவும் தோன்றும். ஆனால் ஏதோவொரு இனம்புரியாத பீதியும் பதட்டமும் என்னை இன்றுவரை அங்கே போகவிடாமல் செய்தபடி இருக்கின்றன.

த்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது நான் சோலைஅழகுபுரத்தில் குடியிருந்தேன். ஸ்ரீனிவாசா தியேட்டருக்குப் பின்னால்  ஒரு காம்பவுண்டில் வீடு. அங்கே என் கூட்டாளியாக இருந்தவன் டோரி என்கிற வெங்கடேசன். ஒன்றரைக்கண் என்பதால் டோரி. ரொம்ப அப்பாவி. வீட்டுக்கு பயந்தவன். எனக்கு ரெண்டு வயது மூத்தவன். எங்கள் காம்பவுண்டுக்கு எதிர்வீட்டில் கோமதி, சோபனா என்று இரண்டு பிள்ளைகள். அண்ணா அண்ணா என்று என் மேல் உயிரை விடுவார்கள். பள்ளிக்குப் போகாத நேரங்களில் அவர்கள் வீட்டில்தான் தெருப்பிள்ளைகள் எல்லாம்  ஒன்று கூடி விளையாடுவோம்.

கோமதியின் தோழியாகத்தான் கீதாஞ்சலி எங்களுக்கு அறிமுகமானாள். அவளுடைய அம்மா சின்ன வயதில் யாரோடோ ஓடிப்போய் விட்டாள் என்பதால் அவளுடைய அப்பாவுக்கு அவளைப் பிடிக்காது. தன் பாட்டியோடு வசித்து வந்தவள் நாங்கள் இருந்த ஏரியாவுக்கு வீடு மாற்றிக் கொண்டு வந்த கொஞ்ச நாளிலேயே எங்கள் எல்லோரோடும் ரொம்ப நெருக்கமாகி விட்டாள். நமக்கென ஒரு காதலி இருந்தால் தான் கவுரவம் எனத் தீவிரமாக நம்பியதோடு அதற்கான முயற்சிகளில் மனம் தளராமல் நான் ஈடுபட்டிருந்த பருவமது. ஆக நான் காதலிக்க வேண்டியவர்கள் வட்டத்துக்குள் கீதாவும் வந்து சேர்ந்ததில் எந்த ஆச்சரியமும் இருக்கவில்லை. 

எப்போதோ ஒருமுறை தனக்குக் கவிதைகள் பிடிக்கும் என கீதா சொல்லி இருந்தாள். ஆகவே கவிஞர் அவதாரம் எடுத்து அவளை கரெக்ட் செய்யலாம் என முடிவு செய்தேன். ஒரு அன்ரூல்டு நோட்டு முழுக்கக் கவிதைகள். “இந்தப் பூக்களின் வாசமெல்லாம் அந்த மாலையில் வாடி விடும் நம் காதலின் வாசமெல்லாம் எந்த நாளுமே முடிவதில்லை”. புதிய பாட்டாக எழுதினால் கண்டுபிடித்து விடுவாள் என்பதற்காக தேடித் தேடி பழைய பாடல் வரிகளாக எழுதி வைத்திருந்தேன். ஆனால் என் நேரத்துக்கு அந்த நோட்டு கீதாவின் கைகளில் போய்ச் சேர்வதற்கு முன்பாக என் அம்மாவிடம் சிக்கிக் கொண்டது. வாசித்து விட்டு என்ன கருமம்டா இது எனக் கிழித்துப் போட்டு விட்டார். இருந்தும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல என் முயற்சிகள் தொடர்ந்தபடி இருந்தன.

ஒரு மாலை நேரம் மொட்டை மாடியில் நானும் டோரியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கீதா வந்தாள். திடீரென ஒரு கடிதத்தை எடுத்து டோரியிடம் கொடுத்தவள் ஏதும் சொல்லாமல் போய் விட்டாள். அது ஒரு லவ் லெட்டர். எனக்கு உள்ளே ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இலவு காத்த கிளியின் நிலை உணர்ந்து மண்டை காய்கிறது. டோரியோ நடுங்கி விட்டான்.  வீட்டில் தெரிந்தால் கொன்று போடுவார்கள் எனவே நீயே போய் அவளிடம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று சொல்லி விடு என ஒதுங்கிக் கொண்டான். எனக்கு இது தேவைதானா?

ஸ்ரீநிவாசா தியேட்டரின் ஆளில்லா பின்புறத்தில் வைத்துதான் கீதாவிடம் பேசினேன். இது காதலிக்கும் வயசு கிடையாது என்பதையும் டோரி நிறைய பயப்படுவதையும் அவளிடம் சொன்னேன், ஆனால் அவள் புரிந்து கொள்வதாக இல்லை. இடையிடையே வேறு யாரையேனும் அவளை விரும்புகிறவர்களைக் கூட காதலிக்கலாமே என்றெல்லாம் பிட்டைப் போட்டும் அந்த தத்திக்கு எதுவும் விளங்கவில்லை. கடைசியில் கடுப்பாகிக் கத்தினேன்.நீ சின்னப் பொண்ணும்மா. இன்னும் வயசுக்குக் கூட வரல.. கொஞ்சம் யோசிச்சுச் செய். அதற்கு அவள் சொன்ன பதில்தான் எனக்கு பயங்கர அடி. நான் வயசுக்கு வரலைன்னு உங்களுக்குத் தெரியுமா. நான் அதிர்ந்து போனேன். தான் பெரிய பெண்ணாகிவிட்டது தெரிந்தால் அப்பாவிடம் சொல்லி யாருக்காவது கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என்பதற்காக அதை வீட்டில் சொல்லாமல் மறைத்திருக்கிறாள். ஒரு பெண்ணுக்கு இத்தனை தைரியம் இருக்கக்கூடும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏதும் பேச இயலாமல் திரும்பி விட்டேன்.

இது நடந்த இரண்டு மாதங்களில் கீதா காணாமல் போனாள். அவள் அப்பா எதற்கோ போட்டு அடித்ததால் ஓடிப் போய் விட்டாள் என்றும் வேறு யாரோ ஒரு பையனை இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள் என்றும் தற்கொலை செய்து கொண்டாள் எனவும் பல கதைகள் ஊருக்குள் நிலவின. ஆனால் அவள் மாயமாய் மறைந்து விட்டாள் என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு முறை அரவிந்த் தியேட்டர் - இப்போது ஸ்ரீனிவாசா தியேட்டரின் பெயர் இதுதான் - வழியாகப் போகும்போதும் அவளுடைய நினைவு வரும். அவளுடைய முகம் மனதில் நிழலாடும். ஒருவேளை டோரி அவளிடம் சரி எனச் சொல்லியிருந்தால் கூட அந்தப் பெண்பிள்ளையின் வாழ்க்கை வேறொன்றாக இருந்திருக்கலாம் என்கிற குற்றவுணர்ச்சி பெரும்பாரமாக மனதை அழுத்தும். ஆனால் என்ன செய்வது? முடிந்து போன சில விசயங்களை எப்போதும் நம்மால் மாற்ற முடிவதில்லை.

சிறு வயதிலிருந்தே பழனி எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். எப்படியும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது அங்கே போய் வருவது வழக்கம். அதுமாதிரியான சமயமொன்றில் சாமி கும்பிட்டு விட்டு படிகளில் இறங்கத் தொடங்கியபோதுதான் நான் அந்தப் பையனைப் பார்த்தேன். அதிகபட்சம் போனால் என்னைக் காட்டிலும் இரண்டு வயது கம்மியாக இருக்கக்கூடும் அவனுக்கு. பனிரெண்டு அல்லது பதிமூன்று சொல்லலாம். கையில் கொஞ்சம் லாட்டரி டிக்கட்டுகள் வைத்திருந்தான்.

சார் சார்.. அடுத்த வாரம் குலுக்கல் சார். வாங்கிக்குங்க சார். அதிர்ஷ்டலட்சுமி உங்களைத் தேடி வர்றா சார்.. ஒரு டிக்கெட் ரெண்ட் ரூவாதான் சார்.. வாங்குங் சார்...

அப்பாவுக்கு லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கமுண்டு. ஆனால் அதனால் அம்மாவோடு பெரும் சண்டை ஏற்பட்டு சமீபமாகத்தான் அந்தப் பழக்கத்தை விட்டிருந்தார். எனவே வேண்டாம் என்பதாகத் தலையசைத்தபடி என் கைகளைப் பிடித்துக் கொண்டு இறங்க ஆரம்பித்தார். ஆனால் அந்தப் பையனும் விடுவதாக இல்லை.

வீட்டுல ரொம்பக் கஷ்டப்படுறோம் சார். வித்துட்டுப்போனாதான் சார் இன்னைக்கு சாப்பாடு. அம்மா பாவம் சார். பொய் சொல்லல சார். வேணும்னா வீட்டுக்கு வந்து பாருங்க சார். வாங்கிக்கங்க சார்.. 

கிட்டத்தட்ட அடிவாரத்துக்கே வந்து விட்டோம். அந்தப் பையனும் திரும்பத் திரும்ப அதே பாட்டைப் பாடியபடி எங்கள் கூடவே வந்து கொண்டிருந்தான். எனக்கு மனசு கேட்கவில்லை.

அப்பா.. பாவம்ப்பா.. வாங்குங்கப்பா..

அப்பா ஏதோ யோசித்தவர் தனது பைக்குள் கைவிட்டு பத்து ரூபாயை எடுத்தார்.

எனக்கு டிக்கெட் வேண்டாம். இதை வச்சுக்கப்பா..

இதுவரை நீண்டிருந்த அந்தப் பையனின் கைகள் சட்டென பின்னிழுத்துக் கொண்டன. அவன் கண்கள் கலங்கி விட்டிருந்தன.

நீங்க டிக்கெட் வாங்கலைன்னாக் கூடப் பரவாயில்லை சார். ஆனா எனக்கு எந்தப் பிச்சையும் போட வேண்டாம் சார்..

அப்பா அமைதியாக அந்தப் பையனிடம் இருந்து ஐந்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார். சந்தோசமாக வாங்கிக் கொண்டவனின் கண்கள் இப்போது சிரித்தன. எனக்கு அந்தப் பையனை நினைக்கும்போது ரொம்பப் பெருமையாக இருந்தது. அதன் பின்பு ஒவ்வொரு முறையும் பழனிக்குப் போகும்போதெல்லாம் என் கண்கள் அவனைத் தேடும். அவனையொத்த சாயலுடைய பையன் எங்கேயாவது தென்படுவானா என்று மனம் கிடந்து அலைபாயும். ஆனால் அவன் என்னிடம் அகப்படவே மாட்டான்.

ஐந்தாறு வருடங்கள் பின்பாக - கொஞ்சம் கொஞ்சமாக நான் கடவுள் என்பதைக் கேள்வி கேட்கத் தொடங்கியிருந்த காலகட்டம் - அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் பழனிக்குப் போயிருந்தேன். நான், அம்மா, அப்பா மூவரும் யானைப் பாதையில் ஏறிக் கொண்டிருந்தோம். எதிரே ஒரு மனிதர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அழுதபடி கண்கள் எல்லாம் சிவந்து பார்க்கவே பாவமாக இருந்தார். தானாகப் புலம்பியபடி வந்த மனிதரிடம் என்ன ஆனதென்று அப்பா கேட்டார்.

எல்லாம் பிளான் பண்ணிப் பண்றாய்ங்க சார். கீழ கிடந்த லாட்டரி டிக்கட்ட விட்டுட்டுப் போறீங்க தம்பின்னு விக்கிறவன்கிட்ட எடுத்துக் கொடுத்தா.. அது உன்னைத் தேடித்தான் வந்திருக்கு.. வாங்கிக்கோன்னு கம்பெல் பண்ணுனானுங்க.. அடப் போங்கப்பா வேண்டாம்னு கெளம்புனா ஒரு கூட்டமா சுத்திக்கிட்டு அடிக்க வர்றானுக.. எல்லாம் ஒரே குரூப்பு போல.. சொல்லி வச்சுப் பண்றானுங்க.. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு வந்தா.. இங்கேயும்.. ச்சே.. வெறுத்துப் போகுது சார்..

இப்படி எல்லாம் கூடவா செய்வார்கள் எனும் ஆச்சரியத்தோடு மேலேறிப் போனால் சற்று தூரத்திலேயே டிக்கெட்காரர்களோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த இன்னொரு மனிதரைப் பார்க்க முடிந்தது. நான் அப்படியாக மட்டும் இருந்துவிடக் கூடாது என வேண்டியவனாக பிரச்சினை செய்து கொண்டிருந்தவர்கள் யாரெனப் பார்த்தேன். நடுவே எல்லாருக்கும் முன்பாக அந்த மனிதரின் சட்டையைப் பிடித்து வம்பு பண்ணிக் கொண்டிருந்தவன் - அவனேதான்.

அதன் பிறகு நான் பழனிக்குப் போகவேயில்லை.

சொல்லிக் கொண்டே போகலாம். ண்ணற்ற விதைகளைத் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் மாதுளை போல ஒவ்வொரு இடமும் தனக்குள் எண்ணிலடங்கா மனிதர்களையும் அவர்கள் சார்ந்த நினைவுகளையும் ஒளித்து வைத்திருக்கிறது.  இடங்கள் வெறும் இடங்கள் மட்டும் அல்ல. அவை நினைவுகளின் தாழ்வாரங்கள்.

September 21, 2012

உதிரிப்பூக்கள் - 17

ள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்குப் போகும் காலகட்டம். கோவை சிறுவாணி மலையடிவாரத்தில் இருந்த ஒரு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தது. என்னை ஹாஸ்டலில் கொண்டு சேர்க்க வந்த மக்களுக்கு பயங்கர சந்தோசம். அருமையான வசதிகளுடன் கூடிய கல்லூரி, தலைக்கு மேலே தவழ்ந்து போகும் மேகங்கள், மெல்லிய தூறலுடன் மழை, அற்புதமான சுற்றுச்சூழல் என எல்லாம் பார்க்கையில் அம்மாவுக்குப் பரம திருப்தி. பத்திரமா இருந்துக்கப்பா என்று ஒற்றை வார்த்தையோடு நிம்மதியாகக் கிளம்பிவிட்டார். ஆனால் நான் உள்ளுக்குள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன்.

கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் செட்டியைப் பார்க்கப் போயிருந்தேன் (ராம்பிரசாத் - ஞாபகம் இருக்கானா?). காரைக்காலில் ஒரு பிசியோதெரபி கல்லூரியில் சேர்ந்தவன் இரண்டே வாரங்களில் பயங்கரக் காய்ச்சலோடு ஊருக்குத் திரும்பி வந்திருந்தான். என்னடா ஆச்சு என்று கேட்டதற்கு ஓவென அழ ஆரம்பித்து விட்டான். காரணம் - ராகிங்.

கல்லூரியின் முதல் நாளே பத்து ஆசை சாக்லேட் ரேப்பர்களைக் கொடுத்து அவற்றின் நிறத்தை நீக்கித் தர வேண்டுமென சொல்லி இருக்கிறார்கள் சீனியர்கள். அதுவும் வாயால் சவைத்து சவைத்தே எடுக்க வேண்டுமாம். ஒரு துளி நிறம் மிச்சமிருந்தாலும் அதற்குத் தண்டனையாக மேலும் பத்து ரேப்பர்கள். ஆசை ரேப்பரில் எத்தனை நிறங்கள் இருக்கும் என்று தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேளுங்கள். அன்றைக்குப் பூராவும் ரேப்பர்களை சவைத்து சாயங்காலத்தின் போது வாயெல்லாம் வீங்கி இரண்டு நாட்கள் பயல் பேசமுடியாமல் கிடந்திருக்கிறான்.

எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை அவனுக்கு ஹாஸ்டலில் நடந்திருக்கிறது. முதலாம் வருட மாணவர்களை எல்லாம் ஒரு இருட்டு அறைக்குள் தள்ளி நிர்வாணமாக்கி இருக்கிறார்கள். பிறகு அவர்களில் ஒவ்வொருவராகப் போய் மற்றவர்களுடைய பிறப்புறுப்பின் அளவை ஸ்கேலால் அளந்து வர வேண்டும். கடைசியாக எல்லாரும் ஒரே மாதிரி அளந்திருக்கிறார்களா என்று சீனியர்கள் சரி பார்ப்பார்கள். தப்பாய் அளந்தவனுக்கு செமத்தியான அடியும் உதையும் கிடைக்கும். இதெல்லாம் தாங்கிக் கொள்ள மாட்டாமல் ஓடிவந்து விட்ட செட்டி அடுத்து கல்லூரிக்குப் போகவே மட்டேன் என அழும் அளவுக்கு பயந்து கிடந்தான். ஆக ராகிங் பற்றிய பயத்தில் நான் ததிங்கினத்தோம் போட்டுக் கொண்டிருந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லைதானே?

ல்லூரியின் முதல் நாள். மிகச்சரியாக இண்டெர்வெல் சமயத்தில் சீனியர்களிடம் சிக்கினேன். 

எந்த ஊருடா நீ?

மதுரைண்ணே..

ப்ர்ர்ர் என்று சிரித்து விட்டார்கள். அண்ணே என்கிற வார்த்தையின் பயன்பாடு அவர்களுக்கு அத்தனை கிண்டலானதாக இருந்தது.

மதுரையாம்... அண்ணேவாம்.. கெரகம்.. அது கிடக்கட்டும். நாங்க எல்லாம் உனக்கு அண்ணங்க தான? எங்க பேர் கேக்க மாட்டியா...

பரவாயில்லை ஒரு நேசபாவத்தோடு தான் இருக்கிறார்கள் என்று நம்பிக் கேட்டேன்.

உங்க பேரு என்னண்ணே?

முடிக்குமுன்பாக மண்டையைச் சேர்த்து அடி விழுந்தது.

அவனுக்கு நீதான் பேரு வச்சியா? ஒழுங்கா மரியாதையாக் கேளுடா..

எப்படிண்ணே கேக்கணும்?

மைட்டி மைட்டி சீனியர் சார் ஐயாம் அக்லி அக்லி ஜூனியர் சார் மே சார் ஐ சார் நோ சார் யுவர் சார் நேம் சார்.. இப்படிக் கேளுடா வெண்ண..

சுற்றி இருந்த பத்து அண்ணன்கள், பதினைந்து அக்காக்களிடம் எல்லாம் பேர் கேட்டு முடித்தபின்பு அடுத்த இம்சை ஆரம்பமானது. எங்கள் கல்லூரிக்கு என இருந்த பிரத்தியேகமான முறையில் சல்யூட் அடிக்க வேண்டும். எப்படி? அட்டென்ஷனில் நின்று இடது கையைத் தொடையிடுக்கில் இறுக்கிப்பிடித்து வானில் ஒரு தவ்வு தவ்வி அதே நேரத்தில் முழுதுமாய்ச் சுழன்று கீழிறங்கும் வேளையில் வலக்கையால் சல்யூட் அடிக்க வேண்டும். கேட்கும் போதே தலை சுற்றுகிறதா? அப்போது அதைச் செய்பவர்களுக்கு? சுற்றி இருக்கும் அத்தனை பேருக்கும் சல்யூட் அடி. ஆக இப்படி கோலாகலமாகத்தான் தொடங்கியது என் கல்லூரி வாழ்க்கை.

பெரும்பாலும் ராகிங் என்கிற பெயரில் அப்போது நடந்து கொண்டிருந்தது எல்லாம் பணம் பறிப்பதுதான். பணத்துக்காக பேயாய் அலையும் ஜீவன்களை நான் அங்குதான் முதலில் சந்தித்தேன். அன்றைய காலகட்டத்தில் என் செலவுக்காக அம்மாவால் மாதாமாதம் தர முடிந்தது வெறும் நூறு ரூபாய் மட்டுமே. பாக்கெட் வைத்த ஷார்ட்ஸ் போட்டு அதில் பணத்தை ஒளித்து வைத்திருப்பேன். ஆனால் எமப்பயல்கள் அதையும் தேடி எடுத்து விடுவார்கள். காசு போட்டு படத்துக்கு கூட்டிப் போகச் சொல்வார்கள். புதிதாய் ரிலீஸ் ஆன படங்களின் கேசட்கள் வாங்கி வா என்பார்கள். என் சுவாசக் காற்றே மட்டும் நாலைந்து கேசட்டுகள் என் சீனியர்களுக்கு அழுதிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

அதில் தமிழ் மாணவர்களைக் கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நாம் கெஞ்சினால் மனம் இளகி விட்டு விடுவார்கள். ஆனால் தெலுங்கு மற்றும் மலையாள மாணவர்கள்தான் ரொம்பப் பாவம். அந்த  சீனியர்கள் எப்போதும் பத்து முதல் இருபது பேர் வரைக்கும் ஒரு கூட்டமாகத்தான் வருவார்கள். யார் நல்ல பசையுள்ள பார்ட்டி என்று பார்த்து அழைத்துப் போய் விடுவார்கள். அவர்கள் கேட்பதை எல்லாம் செய்து கொடுத்து விட்டால் அவன் பிழைத்தான். மறுத்துப் பேசினால் ஹாஸ்டலுக்குப் பின்னால் இருக்கும் காட்டுக்குள் கூட்டிப்போய் அடி நொறுக்கி விடுவார்கள். 

நான் பள்ளியில் படிக்கும்வரைக்கும் யாரும்  எதற்கும் என்னை அடித்தது இல்லை. முதல் வருடம் முழுவதும் அப்படி இப்படி என்று பணம் போனால் கூட யாரிடமும் அடி வாங்காமல் தப்பித்துக் கொண்டேன். அதில் எனக்கு பரம சந்தோசமும் பெருமையும் கூட. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து பெரிய மொத்தாக வாங்கப் போகிறேன் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

ரண்டாம் வருடம். லேட்டரல் பயல்கள் மீது எங்களுக்கு ஒரு காண்டு. நாங்கள் மட்டும் இத்தனை இம்சைப்பட்டு முதல் வருடம் படித்து விட்டு வருவோம், நீங்கள் நோகாமல் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து சீனியர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுவீர்கள்? அப்படி எல்லாம் விட்டு விட முடியாது தம்பிகளா? அதனால் லேட்டரல் மக்களை நாங்களே ராகிங் செய்வது என முடிவானது. இந்த நாங்களே என்பது நான் மற்றும் எனது நான்கு அறை நண்பர்களைக் குறிக்கிறது எனக் கொள்க.

ஒரு நிறைந்த செவ்வாய்க்கிழமை இரவில் சுந்தரேசன் எங்களிடம் மாட்டினான். எப்படிடா குழந்தை பிறக்கும் எனக்கேட்டால் சாமி கொடுப்பார் என சொல்லுமளவுக்கு மிகப்பெரிய அப்பாவி அவன். எங்களுக்கும் அப்படி ஒரு ஆள்தான் தேவை. ஏனென்றால் அவன்தான் நாம் எத்தனை அடித்தாலும் திருப்பி அடிக்க மாட்டான் பாருங்கள். அன்றைக்கு ராத்திரி முழுக்க செம கூத்து. அவனை ஓட்டி எடுத்து விட்டோம். போதாக்குறைக்கு எங்கள் முதல் ராகிங் முயற்சியை எப்போதும் நினைவில் கொள்ளும் வகையில் அதைக் கேசட்டில் பதிவு செய்தும் வைத்துக் கொண்டோம்.

மறுநாள் காலை எட்டு மணி போல அவசரமாகக் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து ஃபைனல் இயர் ஸ்டூடண்ட் சேர்மன் அங்கே வந்தார்.

என்னடா சாமியாரே.. நேத்து ஒரே ஆட்டம் போல?

ஆமாண்ணே.. சும்மா விளையாட்டுக்கு..

அதனால் என்னடா.. விடு.. ஏதோ ரெக்கார்ட்லாம் பண்ணிங்களாம்.. போடு கொஞ்ச நேரம் ஜாலியாக் கேப்போம்..

கேசட் ஒரு இருபது நிமிடம் ஓடியிருக்கும். எதேச்சையாக சேர்மன் கேட்டார்.

இம்புட்டு பேக்கா இருக்கான். இந்த சுந்தரேசன் யாருன்னு தெரியுமாடா..

இல்லையே.. ஏண்ணே.. சிரித்தபடி கேட்டேன்.

அவன் என் தம்பிடா...

ன்றைக்கு இரவு சேர்மனின் அறைக்குள் நண்பர்கள் அனைவரும் மண்டியிட்டு அமர்ந்திருந்தோம். கேசட் ஓடிக் கொண்டிருக்க சுந்தரேசன் யார் யார் எதை எதைப் பேசியது என அடையாளம் காட்டிக் கொண்டிருந்தான். யார் என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் வந்து எங்களை அடித்துக் கொண்டிருந்தார்கள். 

இவனுங்க கெட்ட கேட்டுக்கு இண்ட்ர்னல் ராகிங்.. ஏண்டா?

ஒருவன் எங்கிருந்தாவது வருவான். நாங்கள் மண்டியிட்டு இருப்பதைப் பார்ப்பான். ஓங்கி முதுகைச் சேர்த்து ஒரு மிதி. அம்மா என்று கதறியபடி கீழே விழுந்தாலும் உடன் எழுந்து கொள்வோம். இல்லை என்றால் அதற்கும் அடிப்பார்கள். பிறகு பொறுமையாகக் கேப்பான்.

எதுக்குடா மாப்ள இவனுங்கள அடிக்கிறீங்க?

ஏண்டா டேய்.. எதுக்கு என்னன்னு கேட்டுட்டாவது அடிக்கக் கூடாதா? லூசுப்பயலுகளா.. அடிச்சுட்டுதான் கேப்பீங்களாடா? இது என் மைண்ட் வாய்ஸ். அன்றைக்கு இரவு ரூமுக்குத் திரும்பி வந்தபோது அத்தனை பேர் உடம்பும் புண்ணாகிப் போயிருந்தது. பேருக்குத் தூங்கி விட்டு காலையில் எழுந்தோம்.  அடுத்த குண்டு தயராக இருந்தது. 

மாப்ள. நேத்து அடிச்சது ஹாஸ்டல் சீனியர்களாம். இன்னைக்கு ராத்திரி டே ஸ்காலர்ஸ் வர்றாங்களாம்..

நாசமாப் போச்சு. நம்மால முடியாதுடா யப்பா. இதுக்கு மேல உடம்பு தாங்காது. மாலை கல்லூரி முடிந்தது சத்தம் போடாமல் கோவையில் இருந்த எங்கள் நண்பன் ஒருவனின் வீட்டுக்கு எஸ் ஆகி விட்டோம்.

ரவில்  எங்களைத் தேடிக் கொண்டு வந்தது நான்காம் வருட மாணவர்கள் அல்ல - மூன்றாம் வருட மாணவர்கள். எந்தக் கல்லூரியையும் போல எங்கள் கல்லூரியிலும் மூன்றாம் வருட மக்களுக்கும் நான்காம் வருட மக்களுக்கும் ஆகவே ஆகாது. ஹாஸ்டலில் ஒரு தப்பு நடந்தால் ஃபைனல் இயர் மட்டும்தான் தட்டிக் கேட்கலாமா, நாங்கள் கேட்கக் கூடாதா என்னும் உயரிய கொள்கையோடு எங்களைத் தேடி இருக்கிறார்கள். நாங்கள் கையில் சிக்கவில்லை. ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் எங்கள் பக்கத்து அறையில் இருந்த இன்னொரு நண்பனை பிடித்து நாயடி அடித்து விட்டார்கள். அங்குதான் ஆரம்பித்தது வினை.

எதிர்பாராதவிதமாக அவர்கள் அடித்தது அவன் உயிர்நிலையில் பட்டு விட்டது. வலி தாங்காமல் துடித்தவனை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். பரிசோதித்துப் பார்த்த டாக்டர் அவன் எழுந்து நடமாட ஆறு மாதங்கள் ஆகும் என்றும் அதன் பின்பும் அவன் ஆண்மையோடு இருப்பது சந்தேகம்தான் என்றும் சொல்லி விட்டார். மறுநாள் காலை இந்தத் தகவல் எங்களுக்கு வந்து சேர்ந்தபோது நாங்கள் அதிர்ந்து போனோம். கல்லூரிக்குத் திரும்பி வந்தால் இரண்டாம் வருட மாணவர்கள் ஸ்ட்ரைக். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை டிஸ்மிஸ் செய்யும் வரை போராட்டம். கடைசியில் கல்லூரி நிர்வாகம் ஆறு மூன்றாம் வருட மாணவர்களைக் கல்லூரியை விட்டுத் தூக்கிய பின்புதான் பிரச்சினை ஓய்ந்தது. எங்களை யாரும் இந்தக் களேபரத்தில் கவனிக்கவில்லை என்பதில் எங்களுக்கு ஒரு அல்ப நிம்மதி.

ல்லூரியில் எனது மூன்றாம் வருடம். எங்களுக்கும் ஃபைனல் இயர் மாணவர்களுக்கும் ஒரு மறைமுகப் போர் நடந்தபடி இருக்க அதை மீண்டும்  பெரிதாக்கிய பிரச்சினை இரண்டாம் வருட மாணவர்களின் வடிவில் வந்தது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் ஒரு பெண். அவளை ஒரு எலெக்ட்ரிக்கல் பையனும் மெக்கானிக்கல் பையனும் விரும்பி இருக்கிறார்கள். அவளோ அந்த எலெக்ட்ரிக்கல் பையனை விரும்பி இருக்கிறாள். காண்டாகிப் போன மெக்கானிக்கல் பையன் லேடிஸ் ஹாஸ்டல் வாசலில் வைத்தே அந்த எலெக்ட்ரிக்கல் பையனை அடி நொறுக்கி விட்டான். அவன் அழுது கொண்டே எங்களிடம் வந்தான். நாங்களும் அந்த மெக்கானிக்கல் பையனைக் கூப்பிட்டு மிரட்டி அனுப்பினோம். அந்தப் பக்கி அதை நேராக ஃபைனல் இயர் மக்களிடம் போய் சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டது. ஆக மீண்டும் எங்களுக்கும் சீனியர்களுக்கும் சண்டை.

ஃபிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மூன்றாம் வருட ஸ்டூடண்ட் சேர்மனின் கார் தீப்பற்றி எரிகிறது. அன்று மாலை எங்களிடம் சிக்கிய செக்யூரிட்டி ஒருவர் தீ வைத்தது நான்காம் வருட மாணவர்கள் என்பதையும் யார் யார் என்பதையும் சொல்லி விட்டார். மறுநாள் மாலை சீனியர்களை ஹாஸ்டலில் புகுந்து கதவுகளை எல்லாம் உடைத்து அடி நொறுக்குகிறோம். கல்லூரியின் மிகப்பெரிய தலைகள் எல்லாம் வந்து சண்டையை நிப்பாட்டும்படிக் கெஞ்சுகிறார்கள். யாரும் கேட்கத் தயாராக இல்லை.

வெகு சில எண்ணிக்கையில் சீனியர்கள். நாங்களோ அவர்களைப் போல மூன்று மடங்கு எண்ணிக்கையில் இருந்தோம். முந்தைய நாட்களின் ராகிங் கோபம் எல்லாம் சேர்ந்து கொள்ள கையில் டிராஃப்டரோடு வெறியாட்டம் போட்ட அந்த நேரத்தை இப்போது நினைத்துப் பார்க்கையில் வெட்கமாக இருக்கிறது. அடிதடி எல்லாம் ஓய்ந்த பின்பும் அன்றைய இரவு பதட்டமாக கழிந்தது.

புதன் அன்று என் அம்மாவுக்கு மதுரையில் கண் ஆபரேஷன். எனவே நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு செவ்வாயன்று காலை ஊருக்குக் கிளம்பினேன். பிரச்சினையின் காரணமாக கல்லூரிக்கு இரண்டு நாள் விடுப்பு விட்டிருந்ததும் எனக்கு வசதியாகப் போக ஹாயாக் கிளம்பி விட்டேன். அப்போது எல்லாம் முடிந்து விட்டதாக நான் நினைத்தது இரண்டே நாட்களில் பொய்யாகிப் போனது.

புதன்கிழமை இரவு ஒன்பது மணி போல மூன்றாம் வருட மாணவர்கள் நான்கு பேர் கோவைக்கு படத்துக்குப் போய்விட்டு பைக்கில் திரும்பி இருக்கிறார்கள். கல்லூரிக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பாக சீனியர்கள் அவர்களை மடக்கி விட்டார்கள். மூவர் மாட்டிக் கொள்ள ஒருவன் மட்டும் தப்பி வந்து ஹாஸ்டலில் இருந்த என் நண்பர்களிடம் சொல்லி விட்டான். உடன் அங்கிருந்து 94 பேர் கொண்ட ஒரு கூட்டம் கிளம்பி விட்டது. 

கல்லூரி விடுதியின் வாசலில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்திருக்கிறார் ஒரு கவர்மெண்ட் பஸ் டிரைவர். இப்போது பஸ்ஸை நீ எடுக்கிறாயா இல்லை நாங்கள் எடுக்கட்டுமா என மிரட்டி மொத்தக் கும்பலும் கிளம்பி அந்த இடத்துக்குப் போயிருக்கிறார்கள். கையில் ஹாக்கி ஸ்டிக், பேட், சைக்கிள் செயின் போன்ற ஆயுதங்களும்.

சீனியர்கள் தங்கியிருந்த வீட்டுக்குப் பெயர் வொயிட் ஹவுஸ். அவர்கள் கிட்டத்தட்ட இருபது பேர். எனது நண்பர்கள் அங்கே போய் இறங்க பயங்கரக் களேபரம். கண்டபடி சண்டை நடந்திருக்கிறது. விமல் என்று ஒரு சீனியர். அருமையாக நடனம் ஆடுபவர். கோவையின் மைக்கேல் ஜாக்சன் என்று சொல்வோம். சைக்கிள் செயின் பற்றி இழுத்ததில் அவருடைய வலது கண் தெறித்துப் போனது. சீனியர்கள் அடித்ததில் என் நண்பன் மைக்கேலுக்கு காது கேட்காமல் போனது. எல்லாவ்ற்றுக்கும் மேலே, தன்னையும் அடித்து விடுவார்களோ என பயந்து ஓடிய சீனியர் சுந்தர் என்பவர், தரையோடு தரையாக இருந்த கிணற்றுக்குள் விழுந்து செத்துப் போனார்.

ம்மாவின் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து நான் வெள்ளியன்று ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். போன் வந்தது.

மாப்ள.. ஐடிசி டா.. சீனியருங்க நம்ம மேல கொலவெறில இருக்காங்க.. பார்த்துக்க..

புலனாய்வு பத்திரிக்கைககள் எல்லாம் கண்டபடி எழுதின. ஆண்களுக்கு ராகிங். பெண்களுக்கு ரேப்பிங். பயங்கரக் கல்லூரி. கொலைவெறி கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள். என்ன சொல்வதன்றே தெரியவில்லை. நண்பர்களில் 36 பேர் டிஸ்மிஸ். 50 பேர் சஸ்பெண்ட். அங்கே இருந்தவன் இல்லாதவன் என்று கணக்கில்லாமல் யார் மீதெல்லாம் கல்லூரிக்கு கடுப்பு இருந்ததோ அவர்களை எல்லாம் தாளித்து எடுத்து விட்டார்கள்.

அம்மாவுக்கு ஆபரேஷன் இல்லாதிருந்தால் ஒருவேளை நானும் அவர்களில் ஒருவராய் இருந்திருக்கலாம். என்னை அன்று காப்பாற்றியது எதுவென்று இதுவரைக்கும் எனக்குத் தெரியவில்லை. அத்தோடு அடங்கியவர்கள்தான் நாங்கள். அதற்குப் பிறகு நான்காம் வருடம் முடிக்கும் வரை ஒரு சத்தம் கிடையாது. கல்லூரி நிர்வாகமும் எங்களுக்கு எந்த பிளேஸ்மெண்டும் வராமல் பார்த்துக் கொண்டது. இன்றைக்கு யோசிக்கும்போது எல்லாமே பைத்தியக்காரத்தனம் என்பது புரிகிறது. வருடங்களில் பின்னோக்கிப் பிரயாணித்து சில விசயங்களை, சில தவறுகளை மாற்றி விட வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் முடியவில்லை. அமைதியாகச் சிரித்தபடி இருக்கிறது காலம்.




August 9, 2012

உதிரிப்பூக்கள் - 16

கோவையில் ஒரு கருத்தரங்கத்திற்காக இரண்டு வாரங்கள் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் தங்கிட நேர்ந்தபோது அந்த மனிதருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கொடைக்கானலில் இருக்கும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்தார். அவரும் வாசிக்கக் கூடியவர் என்பதோடு அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் எஸ்ரா என்கிற கூடுதல் தகுதியும் இருக்க அவரை என்னால் எளிதில் நட்பாக்கிக் கொள்ள முடிந்தது.

இரண்டு வாரப் பழக்கத்தில் குடும்ப விவகாரங்களைக் கூட விரிவாகப் பேசுமளவுக்கு நாங்கள் நெருக்கமான நண்பர்களாக மாறியிருந்தோம். நண்பருடைய திருமணம் காதல் திருமணம். தன்னுடைய மனைவி பற்றிப் பேசும்போது அவருக்கு அத்தனை சந்தோசம். தனக்காக உறவுகள் சொத்து அத்தனையும் விட்டு வந்தவர் என்பதால் அவருக்காகத் தான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பெருமையாகச் சொல்வார். ஆனால் அவர் பேசும்போதெல்லாம் நான் ஒரு விசயத்தை மட்டும் கவனித்து வந்தேன். தன் மனைவி பற்றி எத்தனை பேசினாலும் அவருடைய பெயரை மட்டும் மனிதர் சொல்லவே மாட்டார்.

ஒரு முறை பொறுக்க மாட்டாமல் அவரிடம் கேட்டே விட்டேன். “ஏன்யா வீட்டுக்காரம்மா பத்தி இவ்ளோ சொல்றீங்க அவங்க பேர் என்னய்யா...” ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போன மனிதர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு அது கெடக்கு தலைவா அதப் போய்க் கேட்டுக்கிட்டு என்று ஏதோ சொல்லி சமாளித்தபடி அந்த விசயத்தைத் தாண்டிப் போய் விட்டார். அவர் மனைவி பெயரைக் கேட்பதை விரும்பவில்லை என்று உணர்ந்து கொண்ட பின்பாக நானும் அதைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டேன்.

இன்னும் இரண்டு நாட்களில் கருத்தரங்கம் முடிந்து அவரவர் வீட்டுக்குக் கிளம்ப வேண்டும். வந்திருந்த நண்பர்கள் எல்லாரும் கொண்டாட்டமாக மது அருந்தப் போகலாம் என ஒன்றாய்க் கிள்ம்பினார்கள். நான் வழக்கம் போல சைட் டிஷ்களை சேகரித்துக் கொண்டு ஒதுங்கினேன். கோடை நண்பர் அன்றைக்கு சரியான சுதி. மிகுந்த சிரமப்பட்டுத்தான் அவரை அறைக்குக் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது. படுக்க வைத்தால் படுக்காமல் மனிதன் புலம்பத் தொடங்கினார்.

“அவ ஏன் நண்பா அப்படிப் பண்ணினா? அவளால என் வாழ்க்கை இப்படி நாசமாப் போச்சே..”

“என்ன நண்பா.. யார் என்ன பண்ணினா..”

“நீங்க ரொம்ப நல்லவர் நண்பா.. உங்ககிட்ட கூட சொல்ல முடியாமப் பண்ணிட்டாளே..”

“யோவ்.. யாரு உன்னைய என்னய்யா பண்ணினா..”

“ஊரு உலகத்துல எத்தனையோ பேரு இருக்கப்போ அவ ஏன் அந்தப் பேரை வச்சுக்கிட்டா.. அவ எதுல வேணா நடிக்கட்டும் என்ன வேணா பண்ணட்டும்.. ஆனா அந்தப்பேர எதுக்கு வச்சுக்கிட்டா.. அவளாலதான என்னால என் பொண்டாட்டி பேரை யாருக்கிட்டயும் சொல்ல முடியலை.. அவளை விடக்கூடாது.. ஏய்ய்...”

யாரோ ஒரு நடிகையின் பொருட்டுதான் அவரால் தனது மனைவியின் பெயரை எங்கேயும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “அப்படி என்னதான்யா உம்ம பொண்டாட்டி பேரு..”

“ஷகிலா..”

ள்ளியில் படிக்கும்போது தமிழ் துணைப்பாடப் பிரிவில் “பெயரில் என்ன இருக்கிறது” என்றொரு கதை படித்ததாக ஞாபகம். மனிதருக்கு மனம்தான் முக்கியம் பெயரல்ல என்கிற ரீதியில் அந்தக்கதை இருக்கும். ஆனால் அந்தக் கதையின் கருத்தோடு என்னால் ஒத்துப் போக முடிவதில்லை. பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் எல்லாம் இருக்கிறது. பெயர் என்பது வெறும் பெயர் மட்டும் அல்ல. அது ஒரு அடையாளம். பல நினைவுகளுக்கான திறவுகோல். எங்கோ நாம் கேள்விப்படும் அல்லது பெயர்ப்பலகைகளில் பார்க்கும் பெயர்கள் நம் மனதுக்குள் ஏற்படுத்தும் அதிர்வலைகள்தான் எத்தனை எத்தனை?

என்னுடைய உண்மையான பெயரான கார்த்திகேயப் பாண்டியனை பள்ளியில் சேர்க்கும் விண்ணப்பப் படிவம் நிரப்பும்போது தவறுதலாக கார்த்திகைப் பாண்டியன் என்பதாய் எழுதப்போக அதுவே நிரந்தமாகிப் போனது. அந்தத் தவறைச் செய்தவர் ஜேம்ஸ் அங்கிள். எனக்குப் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர். நான் படித்த செவந்த் டே பள்ளியின் முதல்வர். பள்ளிக்கூடத்தில் எனக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்த மனிதர்.

என்னுடைய பெயரைக் கிண்டல் செய்வதில் அவருக்கு அத்தனை சந்தோசம். தீபாவளிப் பாண்டியன், பொங்கல் பாண்டியன் என்று எல்லாப் பண்டிகைகளையும் வம்புக்கு இழுப்பார். நான் கோபத்தில் சிணுங்கியபடி அழுதால் அதையும் கிண்டல் செய்து சிரிப்பார். தப்பாக எழுதியது நீங்கள்தானே என்று நான் குற்றம் சுமத்தினாலும் கண்டு கொள்ளவே மாட்டார். தீபாவளியும் பண்டிகை, கார்த்திகையும் பண்டிகை எப்படிக் கூப்பிட்டால் என்ன என்று எகடாசி பேசுபவரை என்ன செய்வது? என்னுடைய எட்டாம் வகுப்பில் மாற்றலாகி வேறு ஊருக்குப் போகும்வரைக்கும் என்னை அவர் கிண்டல் செய்வது நிற்கவே இல்லை.

சில தினங்களுக்கு முன்பு அவருடைய வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போயிருந்தேன். கிட்டத்தட்ட பதினைந்து வருட இடைவெளி என்றாலும் அறிமுகம் செய்து கொண்டவுடன் என்னைக் கண்டுபிடித்து விட்டார். “நான் உனக்குச் சொல்லிக் கொடுத்த காலம் போய் நீ இப்போ சொல்லித் தர்றியா.. சந்தோசம்டா..” வெகுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்றுக் கிளம்பினேன். சட்டென அந்தக் குரல் கேட்டது.

“டே தீபாவளிப் பாண்டியா..”

திரும்பிப் பார்த்தேன். ஜேம்ஸ் அங்கிள் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.

“மறந்துட்டியோன்னு.. ச்சும்மா.. பழைய ஞாபகங்கள்.. போயிட்டு வா..”

ன்னோடு சிறுவயது முதல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவன் ராம்பிரசாத். என் ஆரம்பகால குற்றங்களான வீட்டில் காசு திருடுவதிலும் கில்மா படம் பார்க்கப் போவதிலும் அய்யாதான் நம்முடைய கூட்டாளி. அவனுடைய இனிஷியல்கள் எஸ்.டி. என்றிருக்கும். அதை வேகமாகச் சொன்னால் செட்டி என்பதாக வரும். அதனால் பள்ளியில் படிக்கும் பையன்கள் எல்லாரும் சேர்ந்து அதையே அவனுக்கு பட்டப்பெயராகவும் வைத்திருந்தோம்.

ஒருமுறை உயிரியல் வகுப்பில் எய்ட்ஸ் பற்றிப் பாடம் நடத்திவிட்டு ஹெச்.ஐ.வி வைரசை தெர்மாக்கோல் மாடலாக செய்து எடுத்து வரும்படி ஆசிரியர் சொல்லி இருந்தார். இது மாதிரியான வேலைகள் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் செட்டியோடு சேர்ந்து செய்யலாம் என்று முடிவானது. ஒரு சனிக்கிழமை காலை அவனுடைய வீட்டில் ஆஜராகி விட்டேன். தெர்மக்கோல் அட்டைகள், ஜிகினா என்று வேலை கனஜோராக நடந்து கொண்டிருக்கையில் பிரசாத்தின் அம்மா என்னிடம் வாயைக் கொடுத்தார்.

“என்னடா பண்றீங்க.. இது என்னது..”

“அத்தை.. இது ஒரு வைரஸ்.. இதாலதான் எயிட்ஸ் வருது..”

“அதெல்லாம் சரி.. இது ஆம்பளையா பொம்பளையாடா..”

அங்கேதான் சனி என் நாவில் சம்மணம் போட்டு அமர்ந்து இருக்கிறான் என்பதை கவனிக்கத் தவறி விட்டேன். ஏதோ விளையாட்டாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு சொன்னேன்.

“அதெல்லாம் இல்லை.. நம்ம பிரசாத் மாதிரி.. எல்லாம் கலந்தது..”

சொல்லி முடிப்பதற்கும் அவர் கையில் வைத்து அரிந்து கொண்டிருந்த காய்கறித் தட்டு பறப்பதற்கும் ரொம்பச் சரியாக இருந்தது. யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்ன என்று மூச்சிரைக்க அவர் கத்த ஆரம்பித்தார். ஏதோ தவறாக சொல்லி விட்டோம் என்பது மட்டும் உள்ளுக்குள் உறைக்க விடுவிடுவென்று வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன். மறுநாள் காலையில் பிரசாத் அம்மா என் வீட்டுக்கே வந்து விட்டார்.

“கார்த்தியம்மா.. உங்க பையன் என் பையன ஒம்போதுன்னு சொல்லிட்டான்..” ஓவென்று அழுதபடி சொன்னவரின் கண்களில் கண்ணீர் மாலை மாலையாய் வழிந்து கொண்டிருந்தது. என் அம்மா என்னென்னவோ சொல்லி சமாதானம் பண்ணியும் வேலைக்கு ஆகவில்லை. சரி நம்மால் ஆனதைச் செய்வோம் என்று அவர் முன்னால் போனேன்.

“மன்னிச்சுருங்க அத்தை... தெரியாமச் சொல்லிட்டேன்..”

“நீ பாட்டுக்கு ஸ்கூல்ல போயி இது மாதிரி பேசினீன்னா எம்மவன் பேரு என்ன ஆகும்..”

சொல்லியபடி மூக்கைச் சிந்தியவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

“அடச்சே.. இதுக்குத்தான் இவ்ளோ அழுதீங்களா.. பயப்படாதீங்க அத்தை.. ஸ்கூல்ல ஏற்கனவே அவனுக்கு இன்னொரு பேரு இருக்கு.. செட்டின்னு.”

கொஞ்சமாக சிணுங்கிக் கொண்டிருந்தவர் இதைக் கேட்டவுடன் இன்னும் அதிகமாகக் கத்த ஆரம்பித்து விட்டார். பிறகுதான் தெரிந்தது அவர்கள் அந்த இனம்தானாம். நான், பிரசாத், என் அம்மா எல்லாரும் சேர்ந்து அவரை சமாதானம் செய்வதற்குள் வாழ்க்கையே வெறுத்துப் போனது. அதன் பிறகு நான் செட்டியின் வீட்டுக்குப் போவதையே வெகுவாகக் குறைத்துக் கொள்ளும் அளவுக்கு அந்தப் பெயர் என்னைப் பழிவாங்கியதை என்னவென்று சொல்வது?

றாவது படிக்கும்போது சுப்பிரமணியபுரம் கல்லு சந்துக்கு குடிபோன சமயத்தில்தான் எனக்கு பர்பி அறிமுகமானது. அவனுடைய இயற்பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. நாலைந்து பொத்தல்கள் விழுந்த பனியன். சாயம் போன நிறத்தில் ஒரு அரை டவுசர். எப்போதும் முகத்தில் வழிந்து கொண்டிருக்கும் எண்ணெய். இதுதான் பர்பி. என்னைக் காட்டிலும் இரண்டு வயது அதிகம். என்றபோதும் சற்றே மூளை வளர்ச்சி குறைவு. நாம் சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளுவான். ஆனால் பதில் சொல்வதற்காகப் பேசினான் என்றால் கோர்வையாக இருக்காது. அவன் கூடவே ஒரு நாட்டு நாயும் சுற்றிக் கொண்டிருக்கும். அதற்கு ராஜா என்று பெயர். பர்பி ஒரு இடத்தில் இருக்கிறான் என்றால் ராஜாவும் அங்கேயே இருக்கும் என்பதும் போல அவனுக்கும் அதற்கும் அத்தனை நெருக்கம்.

அந்த சந்தில் இருக்கும் எல்லா பிள்ளைகளுக்கும், நான் உட்பட, விளையாட்டில் ஊறுகாய் என்றால் அது பர்பிதான். அப்போது நாங்கள் ரவுண்டு கண்ணாமூச்சி என்றொரு விளையாட்டு விளையாடுவோம். சுப்பிரமணியபுரத்தில் இருக்கும் பனிரெண்டு சந்துகளில் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம் என்பது ஆட்ட விதிமுறை. பட்டு வருபவன் அத்தனை பேரையும் கண்டு பிடிப்பதற்குள் மண்டை காயும் என்பதால் எப்போதும் இதில் பர்பிதான் சூதாக சிக்க வைக்கப்படுவான். சந்து முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குப் போய் ஆயிரம் எண்ணி முடித்தபின் தான் பட்டு வர வேண்டும். என்னுடைய ரவுண்டு கண்ணாமூச்சி சரித்திரத்தில் ஒவ்வொரு தடவையும் ஆயிரம் வரைக்கும் முழுமையாக எண்ணக்கூடிய ஒரே ஆள் பர்பி மட்டுமே.

ஒவ்வொரு முறையும் ஆட்டம் முடிய குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும். எப்படியும் யாராவது பர்பிக்கு ஐஸ் வைத்து விட்டோம் என்றால் ஆட்டம் முதலில் இருந்து தொடங்கும். அப்படி இல்லாமல் என்றாவது அவன் எல்லாரையும் கண்டுபிடித்து விட்டான் என்றால் அன்றைய ஆட்டம் அத்தோடு முடிந்து விடும். மறுநாள் ஆட்டம் தொடங்கும்போது பர்பி மீண்டும் பட்டு வருவான். அவன் மக்களைத் தேடி வரும் அழகே தனி. திடீரென ஆள் காணாமல் போய் விடுவான். ரொம்ப நேரமாகியும் ஆளைக் காணோமே என நாம் குழம்பி வெளியே வந்தால் போர்வை மூடி கால் விந்தி விந்தி நடந்து நம்மைத் தாண்டிப் போகும் ஆள் சட்டென்று நெருங்கி வந்து ஒண்ணு என்பான். பார்த்தால் அது பர்பியாக இருக்கும். ராஜா உடன் வந்தால் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம் என்பதால் அதை எங்காவது விட்டு வந்திருப்பான். ரவுண்டு கண்ணாமூச்சி என்றுதானில்லை எங்களுடைய எல்லா விளையாட்டுகளையும் சுவாரசியமாய்ச் செய்தவன் பர்பி. ஒரு டீ வாங்கிக் கொடுத்தால் போதும் அவனை என்ன வேலை செய்யச் சொன்னாலும் செய்வான் என்பது தெருவில் இருந்த அனைவருக்கும் வசதியாகப் போனது. ஆகமொத்தம் சிறியவர் பெரியவர் என தெருவில் இருந்த அனைவருக்கும் மிக நெருக்கமான உறவாக அவன் இருந்தான்.

திடீரென ஒருநாள் காலை தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பி பர்பி செத்துப் போனதாக என அம்மா சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது எப்படி நடந்தது? காலையில் எழுந்ததும் வழக்கம் போல காலைக் கடன்களை முடிக்க பர்பி ரயில்வே டிராக் பக்கம் போயிருக்கிறான். உடன் ராஜாவும் போயிருக்கிறது. டிராக்கின் ஓரமாக இருவரும் உட்கார்ந்து இருக்க ரயில் வரும்போது தண்டவாளத்தின் மீது ராஜாவின் வால் கிடந்திருக்கிறது. ரயில் அதன் மீது ஏறும் தருணத்தில் யாராவது தொடும்போது நாம் சட்டெனத் திரும்புவதுபோல சட்டென ராஜா திரும்ப உள்ளிழுக்கப்பட்டு விட்டது. ராஜா என்று கத்திக் கொண்டே பர்பியும் ரயிலுக்கு உள்ளே பாய்ந்து விட்டான் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.

பாகம் பாகமாகப் பிரிந்து கிடந்த பர்ர்பியைப் போய்ப் பார்க்க வேண்டாம் என எனது அம்மா தடுத்து விட்டார். இரங்கல் தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் ஒன்றில்தான் அவனது பெயரை முதல்முதலாகப் பார்த்தேன். “மரண அஞ்சலி - செல்வம் என்கிற பர்பி”. இப்போதும் சாலையில் விளையாடும் பிள்ளைகளைக் கடந்து போகும் போதெல்லாம் பர்பியின் நினைவுகள் மனதுக்குள் கிளர்ந்தெழுந்து கண்ணீரை வரவழைக்கும்.

தை எழுதும் இவ்வேளையில் நண்பர்கள் தொடங்கி பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் வரை ஒருவர் விடாமல் எல்லாருக்கும் வைத்த பட்டப்பெயர்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. எப்போதும் என்னைக் கோத்திரி என்றே கூப்பிடும் பால்வண்டி என்கிற பாலாஜி, என்னை எவனாவது பட்டப்பெயர் சொல்லிக் கூப்பிட்டீங்க அழுதுருவேன் என்று கதறும் மண்டையன் என்கிற சிங்கம் என்கிற திராவிடமணி, ஒரே அறையில் நான்கு வருடம் ஒன்றாக இருந்து விட்டு காதலுக்காக என்னைத் தூக்கியெறிந்த மொட்டை என்கிற தேவா, எல்லாரையும் சிரிக்க வேண்டும் என்ப்தே தன் லட்சியமெனச் சொல்லும் மெனா என்கிற முத்துக்கண்ணன், என் பிரியத்துக்குரிய சைக்கோ சரவணன், சாமி கார்த்தி, வீனா கூனா குமார், தலைவன் வெங்கடேசன், மசாஜ் செர்வீஸ் மாரி, இனிலன் எனும் குட்டிச் சாத்தான் என எத்தனையோ பெயர்களும் அவர்கள் சார்ந்த நினைவுகளும் நிலழென என் கண்முன்னே ஆடியபடி இருக்கின்றன. சொன்னேன் இல்லையா? பெயர் என்பது நம் மனதின் நினைவுகளுக்கான திறவுகோல்.

July 26, 2012

உதிரிப்பூக்கள் - 15

பெருந்துறையில் வேலை பார்க்கும்போது என்னிடம் பயின்றவன் ரவிபிரகாஷ். தில்லியைச் சேர்ந்தவன். பொறியியல் என்பது படிப்பதல்ல கற்பது என்பதில் தீவிர நம்பிக்கை உடையவன். படிப்பு என்பதைத் தாண்டியும் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் ஆல் இந்தியா ரேடியோவில் அவனது வயலின் கச்சேரி கண்டிப்பாக இருக்கும். கல்லூரி ஆண்டுவிழா ஒன்றின்போது நானும் ரவியும் இணைந்து மாணவர்களின் நட்பைப் பற்றிய பாடல் ஒன்றை உருவாக்கினோம். அதிலிருந்து அவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவனாக மாறிப்போனான்.

கல்லூரி முடிந்து வெளியேறிப் போனபின்பாக ரவியோடு பெரிதாகத் தொடர்பு இல்லாமல் போனது. நானும் மதுரைக்கு வேறொரு கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தேன். திடீரென ஒரு நாள் அவனிடமிருந்து அழைப்பு வந்தது.

“நல்லா இருக்கியாடா..”

“நல்லா இருக்கேன் சார்.. நீங்க எப்படி இருக்கீங்க..”

“ரொம்ப நல்லா இருக்கேன். என்ன ரவி பண்ணிக்கிட்டு இருக்க..” அவன் படிக்கும்போதே இன்ஃபோசிஸில் வேலை கிடைத்திருந்தது. கண்டிப்பாக பெரிய பொறுப்புக்கு வந்திருப்பான் என்பது எனது நம்பிக்கை.

“தில்லிலதான் சார் இருக்கேன். இங்க ஒரு ஸ்கூல்ல பிசிக்ஸ் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.. ”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கிடைத்த நல்ல வேலையை விட்டு விட்டு இவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவனிடம் கேட்கவும் செய்தேன்.

“நீங்கதான சார் அடிக்கடி சொல்வீங்க. மனசுக்குப் பிடிச்ச வேலை பாக்குற மாதிரி சந்தோசம் வேற எதுவும் கிடையாதுன்னு. சாஃப்ட்வேரை விடவும் எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. சாலஞ்சிங்கான வேலை. பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போதுதான் என் மனசுக்கு திருப்தியா இருக்கு. அதான் சார்.. பொருளாதார ரீதியா எனக்குப் பெரிய தேவைகள் இல்லாததனால ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. ”

நான் அமைதியாக இருந்தேன். ஆனால் அவன் சொன்னதைக் கேட்டபோது மனதுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. “பெருமையா இருக்குடா.. வேற என்ன சொல்றதுன்னு தெரியலை..”

“இருங்க சார்.. இன்னும் இருக்கு...” அவனுடைய மழலை கொஞ்சும் தமிழில் சொன்னவனுடைய குரலில் உற்சாகம் மிகுந்து வழிந்தது. “நேத்திக்கு எங்க பள்ளியில ஆண்டு விழா. இந்த வருடத்துக்கான சிறந்த ஆசிரியராக என்னைத் தேர்வு செஞ்சிருக்காங்க. ஆனா சத்தியமா அது என்னோட விருது கிடையாது சார். உங்களோடது.. that one is for you sir.. நீங்க இல்லைன்னா நான் கண்டிப்பா இங்க வந்திருக்க மாட்டேன். ரொம்ப நன்றி சார்..”

ன்னுடைய கண்கள் கலங்கி இருந்தன. வாழ்வில் இதை விடப் பெரிதாக வேறென்ன கேட்டுவிட முடியும்? இது மாதிரியான தருணங்கள்தான் என்னை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாக நம்புகிறேன். சில சமயங்களில் மனம் கிடந்து அலைபாய்ந்தபடி இருக்கும். யாருமற்ற வெளியில் தான் மட்டும் தனித்து விடப்பட்டதென உணரும். ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் பெரும் தவறு செய்து விட்டோமோ? உடன் படித்தவர்கள் எல்லாம் பெரிய வேலையிலும் வெளிநாட்டிலும் வசதியாய் இருக்க நான் மட்டும் ஏன் இப்படி பொருளாதார ரீதியாகவும் பின் தங்கி விட்டேன் என்றெல்லாம் கேள்விகள் எழ மனம் ஆழ்ந்த துயரத்தில் விசனப்படும். அப்போதெல்லாம் எங்கிருந்தாவது வந்து சேரும் இதுபோன்ற மாணவர்களின் அன்புதான் என்னை மீட்டுக் கரைசேர்ப்பதாக இருந்திருக்கிறது.

இன்றுவரைக்கும் என்னால் மாணவர்களுடன் மட்டும்தான் நெருக்கமாக இருக்க முடிந்திருக்கிறது. உடன் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு, முகத்துக்கு முன் முதுகுக்குப் பின் என இரண்டு முகங்கள் இருப்பது போல, மாணவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களைப் பொருத்தவரைக்கும் பிடித்து விட்டால் இறுதி வரைக்கும் மறக்க மாட்டார்கள். பிடிக்கவில்லையென்றால் தலைகீழாய் நின்றாலும் வேலைக்கு ஆகாது. பெரும்பாலும் மாணவர்களோடு நம்முடைய அலைவரிசை ஒத்துப்போவதால் நமக்கு அவர்களோடு ஒட்டிக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. பெருந்துறையில் ஆண்டு விழாவின் போது நான் மேடையேறிப் பேசப் போக மாணவர்கள் விசிலடித்து களேபரம் செய்து இந்த அளவுக்கு மாணவர்களோடு பழகக்கூடாது என முதல்வர் திட்டுமளவுக்கு அந்த நெருக்கம் இருந்திருக்கிறது.

டித்து முடித்த இரண்டே மாதங்களில் கொடைக்கானலில் வேலைக்கு சேர்ந்து விட்டேன். ஆசிரியர் வேலை மீதிருந்த மதிப்போடு எப்போதும் மாணவர்களோடு ஒருவனாய் இருப்பது மனதை உற்சாகமாய் வைத்திருக்கும் என்பதும் நான் அந்தப் பணியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள். அப்போதெல்லாம் பொறுப்பு பற்றிய அக்கறை ஒன்றும் எனக்குக் கிடையாது. அங்கிருந்த மாணவர்களுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான் என்பதால் ஆட்டம்பாட்டம்தான் வேலை என்பதாக இருந்தது என் மனநிலை.

கோடை கல்லூரியில் இரண்டாம் வருட மாணவர்களுக்கு நான் வகுப்பாசிரியர். ஒருநாள் அந்த வகுப்பில் படிக்கும் பெண் ஒருவருடைய தந்தை என்னைப் பார்க்க வந்திருந்தார். குறைந்தபட்சம் ஐம்பது வயதிருக்கக்கூடிய அந்த மனிதர் நான் சென்றவுடன் சட்டென்று எழுந்து நின்று என்னை வணங்கவும் செய்தார். எனக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது. எங்கோ ஒரு ஊரில் நாங்கள் இருக்க எங்களுடைய பிள்ளையை உங்களை நம்பித்தான் விட்டுப் போகிறோம் ஒரு சகோதரன் என நீங்கள்தான் அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த சில நிமிடங்களை என்னால் வாழ்க்கைக்கும் மறக்க முடியாது. என்னுடைய பணியின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்ட தினம் அதுதான். என்னிடம் பாடம் படிக்கும் அத்தனை பிள்ளைகளும் என் நெருங்கின உறவுகள் எனும் உணர்வை எனக்குள் விதைத்தவர் அந்த மனிதர்.

ன் வாழ்வில் மறக்க முடியாத பயணம் எதுவெனக் கேட்டால் கோடைக்கல்லூரி மாணவர்களோடு நான் போய் வந்த டூரைச் சொல்லுவேன். மூன்றாம் வருட மாணவர்கள் என் நண்பனோடு கோவா கிளம்பிப் போக நாமும் எங்காவது போவோம் என இரண்டாம் வருட மாணவர்கள் ஒரே அடம். பெண் பிள்ளைகள் வருவார்கள் என்பதால் யாராவது ஒரு ஆசிரியையும் கண்டிப்பாக வரவேண்டும் எனத் தாளாளர் சொல்லிவிட்டார். நான் வரமாட்டேன் என்று சொன்ன ஒரு அம்மாவை வெறுமனே பெயர் தந்தால் போதும் என சமாதானம் செய்து அனுமதி பெற்றுக் கிளம்பினோம்.

மதுரைக்குப் பேருந்தில் வந்து என் வீட்டில் இரவு உணவை முடித்துக் கொண்டு நாங்கள் மாட்டுத்தாவணிக்கு வந்தபோது மணி இரவு பனிரெண்டு. நானும் என் நண்பனும் என இரண்டு ஆசிரியர்கள், எட்டு மாணவிகள் மற்றும் பத்து மாணவர்கள். எங்கு போகிறோம் என்கிற எந்த முடிவும் இல்லை. கையிலும் பெரிய அளவில் பணம் இல்லை. அப்போது ஆபத்பாந்தவனாய் கைட் ஒருவர் வந்து சேர எல்லோரும் கன்னியாகுமரி நோக்கி வேனில் பயணமானோம்.

காலையில் எங்களுக்குப் பொழுது திற்பரப்பு அருவியில் விடிந்தது. முடியுமட்டும் ஆடி விட்டு அங்கிருந்து தொட்டிப்பாலம். காலை உணவை முடித்துக் கொண்டு பத்மநாபபுரம் அரண்மனை. மதிய உணவுக்கு எங்கள் கூட்டம் கன்னியாகுமரி வந்து சேந்திருந்தது. நேராகக் கடலில் போய் இறங்கினால் பயங்கர ஆட்டம். சற்றே பலமானவர்கள் எல்லாம் தரையில் மீது நின்று கொள்ள அவர்கள் மேலே ஏறும் ஒரு கூட்டம் என பிரமிடுகள் உருவாக்கி விளையாட ஆரம்பிக்க கடலிலிருந்த மொத்தக் கூட்டமும் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அங்கே ஆடி முடித்து பாறைக்குப் போய் விவேகானந்தருக்கு ஒரு ஹாய் சொல்லிக் கோவிலையும் பார்த்துத் திரும்பினால் அடுத்ததாக ஒரு பெரிய பிரச்சினை எங்கள் முன்பாக இருந்தது. எங்கே போய்த் தங்குவது?

அதற்கு விடை ராமகிருஷ்ண மட வடிவில் கிடைத்தது. மூன்று பெரிய அறைகளைக் கொண்ட ஹால் வெறும் நூற்றைம்பது ரூபாய் வாடகைக்கு. முதல் ஹாலில் ஆண்கள் இருந்து கொண்டு நடுவில் இடைவெளி விட்டு கடைசி ஹாலில் பெண்பிள்ளைகள் தங்கிக் கொண்டார்கள். காலை சூரிய உதயம் பார்த்து விட்டுக் கிளம்பி நேராக சுசீந்தரம். அங்கே தானுமாலையனை தரிசித்து அங்கிருந்து கிளம்பி திருவனந்தபுரம். மிருகக்காட்சி சாலையும் கோளரங்கமும் முடிந்து வேலிக்குக் கிளம்பிப் போய் மீண்டும் தண்ணீரில் ஒரு ஆட்டம். கடைசியாக நாங்கள் பத்மநாபசாமி கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தபோது நடை சார்த்தும் நேரம் நெருங்கி விட்டிருந்தது.

பையன்கள் எல்லாரும் துண்டு வேட்டி எனக் கட்டிச் சமாளித்து விட்டார்கள். ஆனால் பெண்பிள்ளைகள் என்ன செய்வது? உடைகள் மாற்றிக் கொண்டு வர நேரமானால் நடையைச் சார்த்தினாலும் சார்த்தி விடுவார்கள். சட்டென்று பிள்ளைகள் அனைவரையும் தங்களுடைய துப்பட்டாவையே எடுத்து இடுப்பில் அணியச் சொல்லி ஒருவாறாக சமாளித்து உள்ளே நுழைந்து விட்டோம். நன்றாக தரிசனம் பார்த்து விட்டு வெளியே வந்து ஒரு ரோட்டுக் கடையில் அருமையான இரவு உணவு. ஆடியபடியும் பாடியபடியும் அங்கிருந்து கிளம்பி மதுரை வந்து சேர்ந்தோம். போகும்போது சாராக இருந்தவன் திரும்பி வரும்போது அனைவருக்கும் அண்ணனாகிப் போயிருந்தேன். அதற்குப் பின்பாக எத்தனையோ கல்லூரி டூர்களுக்குப் போய் வந்திருந்தாலும் திக்கு திசை அறியாது சுற்றி வந்த அந்த இரண்டு நாட்களை என்னால் என்றும் மறக்க முடியாது.

மாணவர்கள் பற்றிப் பேசும்போது என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். “நல்லாப் படிக்குற அமைதியான பசங்களைப் பத்தி கவலைப்படத் தேவையில்லை கார்த்தி. அவங்க எப்படின்னாலும் நமக்கு நெருக்கமாத் தான் இருப்பாங்க. ஆனா எல்லா கிளாஸ்லயும் ஒரு சில அடங்காத பசங்க இருப்பாங்க பாருங்க. அவங்களத்தான் நாம நமக்குக் குளோசா மாத்த முயற்சி பண்ணனும். அதை செஞ்சுட்டா சாதிச்சுட்டீங்கன்னு அர்த்தம்..”

மதுரையில் வேலை பார்த்த சமயம். மெக்கானிக்கல் பாடப்பிரிவுக்கு நான் ஒரு வகுப்புக்குப் போக வேண்டும். அங்கே போகுமுன்பாகவே சக ஆசிரியர்கள் பயமுறுத்தத் தொடங்கி விட்டார்கள். “ மோசமான செட்டு சார். ஒரு எட்டு பசங்க குரூப்பா இருப்பானுங்க. யாரையும் மதிக்க மாட்டானுங்க. பார்த்து நடந்துக்கோங்க..”. அவர்கள் சொன்னதுபோலவே தான் அந்த மாணவர்களும் இருந்தார்கள். பாடம் நடத்தும்போது ஏதாவது தொல்லை கொடுப்பது, வகுப்புக்கு நேரத்துக்கு வரமாலிருப்பது எனத் தொடர்ச்சியாய் பிரச்சினைகள். “அப்படிச் செய்யாதீங்கப்பா... நேரத்துக்கு வரக்கூடாதா..”. நான் எல்லாவற்றையும் சின்னச் சின்ன வார்த்தைகளோடு தாண்டிப் போய் விடுவேன். பொதுவாகவே எனக்கு யாரையும் திட்டத் தெரியாது என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

முதல் பருவத் தேர்வில் அவர்கள் அனைவருமே எனது பாடத்தில் தேர்வு பெற்றிருக்கவில்லை. வகுப்பில் விடைத்தாள்களைத் தரும்போது ஒரே வார்த்தைதான் நான் அவர்களிடம் சொன்னது. “அடுத்த முறை நன்றாக எழுதுங்கள்..” இரண்டாவது தேர்விலும் இதே கதை. அத்தனை பேரும் தோற்றுப் போயிருந்தார்கள். இப்போதும் நான் அதையேதான் சொன்னேன். “அடுத்த முறை..” இது நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் எட்டு பேரும் என்னைத் தனியாக வந்து சந்தித்தார்கள். நான் அவர்களை ஏதும் சொல்லாதது அவர்களுக்கு அத்தனை ஆச்சரியமாக இருந்தது.

“நீங்க எங்களைக் கண்டமேனிக்குத் திட்டுவீங்கன்னு நினைச்சோம் சார்..”

“எதுக்குப்பா.. நீங்க சின்னப் பசங்களா.. உங்களைக் காட்டிலும் அதிகமா உங்க வாழ்க்கையப் பத்தி நான் கவலைப்பட்டுறப் போறேனா.. ஆனா ஒண்ணு.. எல்லாத்தையும் தாண்டி நீ வாழ்க்கைல நல்லபடியா வந்துட்டா கண்டிப்பா உன்னைக் காட்டிலும் அதிகமா சந்தோசப்படுறவனா நான் இருப்பேன்..”

நான் பேசி முடித்தபோது அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். பொறியியல் படிக்க விருப்பமில்லாது கல்லூரிக்கு வந்தவர்கள், கல்லூரியின் சட்டதிட்டங்கள் பிடிக்கவில்லை எனச் சொல்வதற்கு அவர்களிடம் அத்தனை விசயங்கள் இருந்தன. இதுநாள் வரைக்கும் அவற்றைக் கேட்க யாருமில்லை என்பதுதான் அவர்களுடைய பிரச்சினை. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு பொறுமையாக எடுத்துச் சொல்ல அமைதியாகக் கேட்டவர்கள் அதன் பின் மொத்தமாக மாறிப் போனார்கள். கல்லூரி முடியும்வரைக்கும் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள் இன்றைக்கு சமூகத்தில் மிக முக்கிய பணிகளில் நல்ல விதமாக செட்டில் ஆகி இருக்கிறார்கள்.

மாணவர்களுக்குப் பாடம் சொல்லுகையில் நடக்கும் கூத்துகளை வேறு யாராலும் மிஞ்ச முடியாது. நான் பாடம் நடத்தும்போது பெரும்பாலும் நடைமுறையில் இருந்து எடுத்துக்காட்டுகளைச் சொல்லுவேன். அது சொல்ல வரும் விசயத்தை அவர்கள் எளிதில் புரிந்து கொள்ள உதவும். ஆனால் அதிலும் கந்திரகோலம் செய்து வைக்கும் நண்பர்கள் உண்டு. ஒரு முறை மைக்ரோபிராசசர் பற்றி நடத்தும்போது இண்டரப்ட் எனும் பாடம் குறித்து விளக்க தபால்காரர் வீட்டுக்கு தபால் எடுத்து வரும் முறையைச் சொல்லி பாடத்தை நடத்தினேன். ஆனால் அதை அப்படியே புரிந்து கொண்ட ஒரு பிரகஸ்பதி பரீட்சையில் இப்படி எழுதி இருந்தது. “தபால்காரர் வீட்டுக்கு வருகிறார். வந்து உங்கள் வாசல் மணியை அடிக்கிறார். டிங் டிங். நீங்கள் கதவைத் திறந்து தபாலை வாங்கிக் கொண்டு கையெழுத்து போடுகிறீர்கள். அவர் சென்று விடுகிறார்.” கடைசி வரைக்கும் அதில் பிராசசர் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இதுதான் கதையை மட்டும் கேட்டு விட்டு கருத்தை கோட்டை விடுவதென்பது.

இது இன்னொரு கூத்து. அது ஒரு செய்முறை வகுப்பு. மோட்டார்கள் பற்றி பாடம் நடத்தி விட்டுக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

“மோட்டார்ல எதுக்கு ஸ்டார்ட்டர் பயன்படுத்துறோம்?”

“சார்.. அது சார்... ஸ்டார்ட் பண்ண சார்..”

ஆகா. ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறார்கள். “அப்படி இல்லப்பா.. நீ ஒரு பொறியாளர். இந்த மாதிரி பொத்தம்பொதுவாப் பேசக் கூடாது. டெக்னிக்கலாப் பேசணும். புரிஞ்சுதா.. இப்போ சொல்லு.. எதுக்கு ஸ்டார்ட்டர்?”

“மோட்டாரை டெக்னிக்கலா ஸ்டார்ட் பண்ண சார்..”

இதற்கெல்லாம் எங்கு போய் முட்டிக் கொள்வது? சொல்லப்போனால் இதெல்லாம் வெறும் சாம்பிள்தான். இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல விசயங்கள் விடைத்தாள் திருத்தும்போது நடக்கும்.

ந்தோசம், கோபம், ஆதங்கம், உற்சாகம் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கொண்டதுதான் ஆசிரியர் மாணவருக்கு இடையேயான உறவு. என் வாழ்வின் அர்த்தம் இதுவாகவே இருக்க முடியும் என நம்பியே இந்த பணிக்கு வந்தேன். இன்றுவரைக்கும் அது தொடர்ந்தபடியே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அலைபேசியில் லாவண்யா அழைத்து இருந்தாள். திண்டுக்கல்லில் என்னிடம் பாடம் பயின்றவள். மேல்படிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தவரைக்கும் எனக்கு அவளைத் தெரியும். பேசும்போதே குரல் அத்தனை குதூகலமாக ஒலித்தது.

“அண்ணா.. எனக்கு இங்க சென்னைல வேலை கிடைச்சிருச்சி. சாஃப்ட்வேர் லைன்ல வேலை. இப்போத்தான் ஹெச் ஆர் முடிஞ்சு கன்ஃபர்ம் பண்ணினாங்க. உடனே கூப்பிடுறேன்..”

“ரொம்ப சந்தோசம்டா.. அம்மாக்கிட்ட சொன்னியா..” அவளுக்கு அப்பா கிடையாது. அவளுடைய அம்மாவை எனக்கு ரொம்ப நன்றாகத் தெரியும்.

“இல்லைண்ணா.. முதல்ல உங்களுக்குத்தான். ஏதோ உங்ககிட்டதான் முதல்ல சொல்லணும்னு தோணுச்சு. எனக்கு இங்கிலீஷ் வரல்லைன்னு சொன்னப்போ எனக்காக எவ்ளோ சிரமப்பட்டீங்க.. எவ்ளோ நேரம் எனக்காகப் பேசி இருப்பீங்க.. இதை உங்ககிட்ட சொல்றதுதான் சரின்னு பட்டது.. நான் இப்படிப் பண்றதுதான் சரின்னு அம்மாவும் சொல்வாங்க.. அதான்..”

தான் பார்க்கும் வேலையை உண்மையாக நேசிப்பவனுக்கு இதைக் காட்டிலும், இந்த அன்பைக் காட்டிலும் பிடித்தமானதாக வேறென்ன இருக்க முடியும்?

ங்கெங்கோ அலைந்து திரிந்து இப்போது சிவகங்கை கல்லூரியில். போன வாரம் இறுதி வருட மாணவர்களுக்காக ஒரு குழு விவாதம் நடத்தினோம். யாரும் சரியாகப் பேசவில்லை. ஆங்கிலத்தில் பேசும் திறன் இல்லை என்கிற ஒன்றின் காரணமாகவே எப்படி தென்மாவட்ட மாணவர்கள் பெரிய கம்பெனிகளால் நிராகரிக்கப்படுகிறார்கள் என்று வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வாய்ப்பு மறுக்கப்பட்ட நானறிந்த நண்பர்கள் பற்றிச் சொல்லும்போது என்னையும் மீறி குரல் தழுதழுத்துப் போனது. இத்தனை சொன்னதற்காகவாவது அடுத்த முறை விவாதம் நடக்கும்போது யாராவது ஒருவர் ஒழுங்காகப் பேசினால் எனக்கு சந்தோசம் என்பதாகச் சொல்லி விட்டு வந்தேன். நேற்று மாலை ஒரு அழைப்பு வந்தது. நான்காம் வருட மாணவன் அவன்.

“சார்.. புக் செண்டர்ல இருக்கேன். எந்த டிக்சனரி வாங்குனா நல்லது சார்..?”

பயணங்கள் இன்னும் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

June 29, 2012

உதிரிப்பூக்கள் - 14

கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் பேருந்து. நண்பர் ஒருவரின் கல்யாணத்தில் கலந்து கொண்டு விட்டு தனிப்பட்ட அலுவல்களுக்காக சென்னை கிளம்ப வேண்டிய சூழல். திருமணத்திற்கு வந்திருந்த மற்றொரு நண்பர் தனக்கும் சென்னையில் வேலையிருப்பதாக உடன் சேர்ந்து கொள்ள இருவருமாகக் கிளம்பினோம். மட்ட மத்தியானம் பனிரெண்டு மணிக்கு நாங்கள் வண்டிக்குள் ஏறியபோது கிட்டத்தட்ட மொத்தப் பேருந்தும் காலியாக இருக்க வசதியான இடமாகப் பார்த்து அமர்ந்து கொண்டோம்.

எங்களுக்கு முன்சீட்டில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அதிகபட்சம் முப்பத்தைந்து வயதிருக்கலாம். பார்த்தவுடன் சட்டென்று ஈர்த்துக் கொள்ளக்கூடிய அழகு. ஆனால் அவரது முகத்தில் சின்னதொரு குழப்பம் தேங்கியிருந்தது. அத்தோடு அவர் அணிந்திருந்த ஆடைகள் எல்லாம் நெகிழ்ந்திருக்க வேறெங்கோ தொலைந்தவர் போல அமர்ந்திருந்தார். அவ்வப்போது தனது மொபைலை அருகில் இருப்பவர்களிடம் கொடுத்து ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு பெண் தனது அலைபேசியை இத்தனை பகிரங்கமாக மற்றவர்களிடம் தருகிறாரே என்று எங்களுக்கு குழப்பம். ஒரு மாதிரியான பெண்ணாக இருப்பாரோ அல்லது சற்றே மனநலம் குன்றியவரோ என எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

ண்ருட்டி அருகே ஒரு மோட்டலில் மதிய உணவுக்காக பேருந்து நின்றபோது மணி நான்கு. நாங்கள் இருவரும் உள்ளே சென்று வாய்க்கு விளங்காத தோசை இரண்டை பிய்த்துப்போட்டு வந்தபோது அந்த பெண்மணி அருகிலிருந்த கடையில் ஏதோ வாங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பற்றிப் பேசிச் சிரித்தபடி இருவரும் பேருந்துக்குள் ஏறினோம். வண்டி கிளம்பியபின்னரே வேகவேகமாக ஓடி வந்து ஏறியவரைப் பார்த்து ஏன் இவர் இத்தனை வினோதமாக நடந்து கொள்கிறார் என ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நண்பருக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.

சவுதியில் இருக்கும் நண்பரின் சகோதரர் அழைத்திருந்தார். பேச்சுவாக்கில் நண்பர் ஊரெல்லாம் எப்படி இருக்கிறது என சவுதி பற்றி விசாரிக்க முன்னாலிருந்த பெண்மணி இப்போது எங்களை ஆர்வமாகப் பார்ப்பதை நான் கவனித்தேன். நண்பர் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்த அந்தப் பெண் சட்டென்று நண்பரிடம் பேசினார்.

உங்களுக்கு சவுதில யாரையும் தெரியுமா சார்? ஊரெல்லாம் எப்படி? நானெல்லாம் அங்க போனா நிம்மதியா இருக்க முடியுமா..

யாரென்று தெரியாதவர் தானாக வழுவில் வந்து பேசுகிறாரே என்று எங்களுக்குக் குழப்பம். அவரோ எதையும் கவனிக்காமல் தொடர்ச்சியாக சவுதி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். நண்பரும் சில வருடங்கள் சவுதியில் இருந்திருந்தபடியால் ஊரைப் பற்றி அந்தப் பெண்மணிக்கு பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தார்.

ல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டபின்பு அந்தப்பெண் தன்னைப் பற்றிச் சொன்னார். ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவராம். கும்பகோணம் அருகே இருக்கும் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் உத்தியோகம் பார்க்கிறார் போல. கணவருக்கு இன்ஸ்பெக்டர் வேலை. ஒரே மகன் சென்னையில் இறுதி ஆண்டு பொறியியல் படிப்பில் இருக்கிறான். இவர் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்ப்பதால் வார இறுதிகளில் சென்னை சென்று குடும்பத்தோடு இருப்பது வழக்கமாம். அவர் ஆசிரியர் என்று சொன்னதுதான் தாமதம். நண்பர் என்னைப் பார்த்து ரகசியமாகச் சிரித்தபடி அந்தப்பெண்ணிடம் சொன்னார்.

இவரும் வாத்தியார்தான். காலேஜ்ல.. இப்போத்தான் முனைவர் படிப்பு படிச்சுக்கிட்டு இருக்கார்.

அப்படியா சார்? ரொம்ப சந்தோசம். உங்களுக்குத் தெரியாதா என்ன? நானாவது ஸ்கூல்ல இருக்கேன். நீங்க காலேஜ். உங்களுக்குத் தெரியாததா.. எத்தனை அரசியல் இருக்கும் தெரியுமா இந்த முனைவர் பட்டம் வாங்குறதுக்குள்ள..

அவர் தொடர்ச்சியாகப் பேசியபடியே இருந்தார். தான் பட்ட கஷ்டங்கள், உடன் வேலை பார்க்கும் மக்களின் பொறாமை, பல்கலையின் இழுத்தடிப்பு.. நிறுத்தாமல் அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அது நெருடலாக இருக்கவில்லை. ஒரு சிறுபிள்ளை கதை சொல்லுவது போல அத்தனை ஆவலுடன் சொல்லியபடியே இருந்தார். அந்நிய மனிதர்களிடம் பேசுகிறோம் என்கிற எந்த உணர்வும் இல்லாமல் அவர் பேசிக் கொண்டிருந்தது அவர் மீது எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் உண்டு பண்ணியிருந்தது. இன்றைக்கு ஊர் போய்ச் சேர பொழுதுபோக்கிற்கு ஆள் கிடைத்தாயிற்று என்பதாக அவர் பேசுவதைக் கவனித்தபடி இருந்தோம். அவருக்குத் தெரிந்த தோழி ஒருவர் சவுதியில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இருந்தார் என்பதாலேயே எங்களிடம் சவுதி பற்றி விசாரித்ததாகக் கடைசியாகச் சொன்னார். எல்லாம் கேட்டுவிட்டுப் பொறுமையாகச் சொன்னேன்.

உங்களுக்கு பணம் பெரிசாத் தேவையில்லைன்னா நீங்க இப்பப் பார்த்துக்கிட்டு இருக்குற வேலையை விடாதீங்க மேடம். இதுவும் கவர்மெண்ட் வேலைதானே? அதனால இதுலயே இருக்கலாம். எங்கேயோ ஒரு நாட்டுல ஊர் பேர் தெரியாம யாருக்காக சம்பாதிக்கிறீங்களோ அவங்களை விட்டு விலகிக் கிடக்குறது நல்லாவா இருக்கும்? அதை விட முக்கியம்.. உங்களை மாதிரி திறமையானவங்க கிராமப்புற பள்ளிகள்ள இருக்க மாணவர்களுக்கு செய்யுற சேவைதான் பெரிசு. அந்தப் பிள்ளைங்க பெரிய கல்லூரிகள்ல சேர்ந்து உற்சாகமா உங்கக்கிட்ட வந்து நன்றி சொல்றதை விட என்ன பெரிய சந்தோசம் வாழ்க்கைல கிடைக்கப் போகுது?

ஆமாம் என்பதாக சந்தோசமாகத் தலையை அசைத்தவர் நீங்க சொல்றது சரிதான் சார் நான் இங்கேயே இருந்துடப் போறேன் என்று ஒரு குழந்தையின் குதூகலத்துடன் சொன்னார். நிமிடத்துக்கு நிமிடம் சட்டென்று மாறும் அவருடைய மனநிலை எனக்கு சுத்தமாகப் புரிபடவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று சிரித்து வைத்தேன்.

ற்று நேரம் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென ஏதோ ரகசியம் பேசுவது போல என்னை அருகில் வரும்படி அழைத்தார். நான் அவர் அருகே நகர்ந்தேன்.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நான் இன்னைக்கு சென்னை போறது எங்க வீட்டுல யாருக்கும் தெரியாதே..

சிரித்தபடி சொன்னவரை நான் அதிர்ச்சியாகப் பார்த்தேன். பேருந்து சென்னையை அடையும்போது எப்படியும் இரவு பத்து மணியாகி விடும். அந்நேரத்துக்கு மேல் இவர் எங்கே போவார்? என்ன சொல்கிறார் இவர்?

என்னோட ஸ்கூல்ல படிச்ச ஃபிரெண்டு ஒருத்தி அமெரிக்காவுல இருந்து வந்திருக்கா சார். அவளைப் பார்க்கத்தான் போய்க்கிட்டு இருக்கேன். என் வீட்டுல சொன்னா அவர் அலோ பண்ண மாட்டாரு. அதான் சொல்லாமப் போய்க்கிட்டு இருக்கேன்.

நான் ஏதும் பேசாமல் இருக்க அவரே தொடர்ந்தார்.

கல்யாணம் ஆனப்போ எனக்கு பதினேழு வயசு சார். அவ்வளவா விவரம் இல்லாத வயசு. அவர்தான் எனக்கு எல்லாம்னு இருந்தேன். அவரும் நல்லவருதான். ஆனா ரொம்ப பொசசிவ் டைப் சார் அவரு. நான் வேற யார்கூடயும் பேசிறக்கூடாது. உடனே கோபம் வந்திரும். என்னையப் போட்டு அடிப்பாரு. உன்னோட அன்பு எல்லாம் மொத்தமா எனக்குத்தான். வேற யாரும் இருக்கப்போய்த்தானே நீ அவங்க கூட பழகுறன்னு சொல்லி யார்கூடவும் அண்ட விட மாட்டாரு. எங்க அம்மா அப்பாக்கிட்ட கூட பேச வேண்டாம்னு சொல்லிட்டாருன்னா பாருங்க. நானும் அப்படியே இருந்து பழகிட்டேன். ஒருநாள் எங்கம்மா எல்லாத்தையும் மீறி வீட்டுக்கு வந்திருந்தாங்க. நான் அவங்க மடியில படுத்துட்டு இருக்குறதை அவர் பார்த்துட்டாரு. மறுநா அம்மா போன பிறகு என்ன பண்ணினாரு தெரியுமா..

பேசிக்கொண்டே இருந்தவர் தனது இடைச்சீலையை சற்றே நகர்த்திக் காட்ட நாங்கள் அதிர்ந்து போனோம். நீளக்கோடு போல சூடு போட்ட மிகப்பெரிய தழும்பு அங்கே இருந்தது. அந்த மனிதரின் ரவுத்திரம் ஒரு புறம் என்றால் இந்தப்பெண் இத்தனை வெட்ட வெளிச்சமாக நம்மிடம் ஏன் இதை எல்லாம் சொல்ல வேண்டும் என்கிற அதிர்ச்சி ஒரு புறமுமாக நானும் நண்பரும் பேச்சற்று அமர்ந்திருந்தோம்.

இப்படித்தான் சார் ஏதாவது அறிவில்லாம செஞ்சிடுவாரு. அப்புறம் கெடந்து சாரி சாரின்னு கெஞ்சிக்கிட்டு இருப்பாரு. ஏதோ பொம்பளைப் பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல்ங்கிறதால என்னை வேலைக்கு விட்டுருக்கார். இல்லைனா அவ்ளோதான். இதுல ஃபிரெண்டு வர்றா பாக்கப்போறேன்னு சொன்னா என்னை விட்டுட்டுத்தான மறுவேலை பாப்பாரு. அதான் சொல்லாமப் போறேன். அவர்கிட்ட நாளைக்குத்தான் கும்பகோணத்துல இருந்து வர்றேன்னு சொல்லி இருக்கேன். எனக்கு ரொம்ப தைரியம்தான். இல்லை சார்?

நானும் நண்பரும் சங்கடமாக சிரித்து வைத்தோம். பேச்சை மாற்றுவோம் என நண்பர் அவரிடம் கேட்டார். ஸ்கூல் நேரம் போக மத்த நேரம் ஹாஸ்டல்ல என்னங்க பண்ணுவீங்க? இதைக் கேட்டபோது அந்தபெண்ணின் கண்களில் ஒரு ஒளி தோன்றி மறைந்தது.

உங்கக்கிட்ட ஒரு விசயம் சொல்லலையே? நான் நல்லாப் பாடுவேன் சார். ஹாஸ்டல்ல ஒரு வீணை வச்சிருக்கேன். அதுதான் என்னோட ஒரே ஃப்ரெண்டு. மனசு சந்தோசமா இருந்தாலும் சோகமா இருந்தாலும் நமக்கு பாட்டுத்தான் சார் எல்லாமே. இப்போ ஒரு பாட்டு பாடட்டுமா..

நாங்கள் என்ன ஏதென்று சொல்வதற்குள் அவர் கண்களை மூடி ஹம் பண்ண ஆரம்பித்து இருந்தார். தன்னுடைய கட்டுப்பாட்டில் அவர் இல்லை என்பது போலாக கண்கள் செருகி இருந்தன. சற்று நேரத்தில் இனிமையான குரலில் அற்புதமாகப் பாடத் தொடங்கினார். இரவும் நிலவும் வளரட்டுமே... எங்களைத் தவிர்த்து பேருந்தில் இருந்த வெகு சிலரும் என்ன இது என்பதாக அவரைப் பார்த்தபடி இருந்தார்கள். தன்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்கிற எந்தப் பிரஞ்கையும் இல்லாமல் அவர் பாடிக் கொண்டிருந்தார். பாடல் முடிந்தபோது எங்களையும் அறியாமல் நாங்கள் கைகளைத் தட்டிக் கொண்டிருந்தோம். அவருடைய குரல் அத்தனை அருமையாக இருந்தது.

ரொம்ப அற்புதமாப் பாடுறீங்க.. சான்சே இல்லைங்க..

அதனாலத்தாங்க அவர் என்னைப் பாடக்கூடாதுன்னு சொல்லிச் சொல்லி அடிப்பாரு. பத்து வருசம் கழிச்சு வெளியாளுங்க முன்னாடி நான் பாடுறது இதுதான் முதல் தடவை தெரியுமா... ரொம்ப நன்றிங்க..

இதைச் சொன்னபோது அவரது கண்களில் நீர் கோர்த்திருந்தது. நான் இன்னும் கொஞ்சம் பாடட்டுமா என்றவரிடம் சரி என்றோம். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அருமையான பழைய பாடல்களைப் பாடியபடி வந்தவர் வெகுநேரம் கழித்தே ஆசுவாசமானார்.

ந்தப்பயணத்துல இப்படி ஒரு மனுசியைச் சந்திப்போம்னு நினைச்சுக்கூடப் பார்க்கலீங்க என்றார் நண்பர். ஆமாங்க, நல்லாப் படிச்சு இருக்கீங்க. வாழ்க்கைல கஷ்டப்பட்டாலும் இன்னைக்கு சமூகத்துல ஒரு கவுரமான இடத்துக்கு வந்திருக்கீங்க. இனியாவது உங்களுக்கு பிடிச்சமான விசயங்களை செஞ்சுக்கிட்டு நல்லா சந்தோசமா இருக்க முய்ற்சி பண்ணுங்க என்று அவரிடம் சொன்னேன். பதிலுக்கு அவர் விரக்தியாய் சிரித்தபடி சொன்னார்.

சந்தோசமாவா.. இந்த சமூகம் விடும்னா நினைக்கிறீங்க.. ஒரு பொண்ணு சங்கடத்துல இருந்தா அதை எப்படி பயன்படுத்த முடியும்னு தான் சார் இந்த உலகம் பார்க்கும். போன வருசம் எங்க ஸ்கூலுக்கு ஒரு சீஃப் ஆபிசர் வந்திருந்தார். என்னை விடப் பத்து வயசு சின்னப்பையன் தான். ஸ்கூல் பத்தி நான் கொடுத்த பிரசெண்டேஷன் அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நம்ம டவுன் ஸ்கூலுக்கும் இதே மாதிரி ஒண்ணு ரெடி பண்ணனும்னு சொல்லி என்னைக் கூப்பிட்டார். சரின்னு நானும் போனேன்.

ராத்திரி ஏழு மணிக்கு மேல காட்டு வழில கார்ல போய்க்கிட்டு இருக்கோம். அவர் ஓட்டிக்கிட்டு வர நான் பக்கத்துல உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கேன். திடீர்னு பார்த்தா ஏசியோட அளவு ஏகமாக் கூடுது. பயங்கரக் குளிர். என்னமோ பேசிக்கிட்டே இருந்தவரு சட்டுன்னு என் கையப் பிடிச்சுக்கிட்டாரு. எனக்கு ஒண்ணும் புரியலை. ஆனா கொஞ்சம் சந்தோசமா இருந்தது. அதுக்கப்புறம் அவரோட பேசுறதுக்கு ஒரு செல்போன் வாங்கித் தந்தாரு. கொஞ்ச நாள் சந்தோசமாப் பேசிக்கிட்டு இருந்தோம். என்னோட கஷ்டங்களை எல்லாம் பகிர்ந்துக்க நான் சாஞ்சுக்க ஒரு தோள் கிடச்சாச்சுன்னு சந்தோசமா இருந்தேன்.

ஆனா அவன் அப்படி மட்டும் நினைக்கலைன்னு பிறகுதான் தெரிஞ்சுது. எப்பப் பேசினாலும் ரூம் போடலாமான்னுதான் கேப்பான். நான் என்னோட வலிகளை பகிர்ந்துக்கணும்னு சொன்னா ஒதுங்கிப் போயிடுவான். ஒரு கட்டத்துல எனக்குப் புரிஞ்சு போச்சு. நான் அவனை முழுசா நேசிச்சேன். ஆனா அவன் என் உடம்பு மேல தான் குறியா இருந்திருக்கான். அவனைச் சும்மா விடக்கூடாது. அன்னைக்கு நடந்தது ஒரு கனவுதான்னு முடிவு பண்ணினேன். அந்த ராத்திரில அவன் எனக்கு முத்தம் கொடுத்தது ஒரு அம்மாவுக்கு குழந்தை குடுத்த மாதிரி இருந்துட்டுப் போகட்டும். ஏண்டா தேவுடியா பையா.. உனக்கு உடம்பு வேணும்னா யாருக்கிட்டயாவது போறதுதானே? எதுக்குக் காதல்னு சொல்லி என்னை ஏமாத்தணும். அவனைத் தலை முழுகினதோட சரி.. அதுக்கப்புறம் யாரையும் நம்புறது கிடையாது சார்...

சரசரவென மழை பெய்வது போல அவர் சொல்லி முடித்தபோது நானும் நண்பரும் பேய் அறைந்தது போல அமர்ந்திருந்தோம்.

ரொம்ப சந்தோசமா இருக்கு சார். என் மனசுல இருக்க கசட எல்லாம் யாருகிட்டயாவது சொல்லி அழாம உள்ளயா வெச்சு வெந்து போயிருப்பேன். ஆனா நல்லவேளையா இன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தேன். ஒரு பொண்ணுக்கு தனியா மனசு இருக்குனு என்னை மதிச்சு யாரோ ஒருத்தி பேசுறதை நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் கேட்டதே பெரிசு சார். நாம எல்லாரும் ஒரே வேவ்லென்த்ல இருக்குறதால நீங்க என்னைப் புரிஞ்சுக்கிட்டீங்க. உங்ககிட்ட என் பாரம் எல்லாம் எறக்கி வச்சுட்டேன்னு நிம்மதியா இருக்கு சார்..

ங்களுக்கு அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவருடைய எல்லா செயல்களையும் சரி என்று சொல்ல முடியாதென்றாலும் அவருடைய நிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே அவருடைய செயல்களுக்கான நியாயம் புரியவரும். அவருடைய சூழல் அவரை இதை எல்லாம் செய்ய வைத்திருக்கிறது என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க பேருந்து நிலையம் வந்து விட்டது. எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டதோடு அவரும் இறங்க உதவி செய்தோம். ரொம்ப அயர்ச்சியாக இருப்பதால் ஒரு காபி வாங்கித் தர முடியுமா எனக்கேட்டார். கேண்டினில் போய் காபி வாங்கிக் கொண்டு வந்தேன். ஏதும் பேசாமல் மெதுவாக அதை அருந்தி முடித்தவர் கிளம்பினார்.

போயிட்டு வர்றேன். கடைசி வரைக்கும் என் பேரைக் கூட நீங்க கேக்கலை பாருங்க.. ரொம்பப் பெருமையா இருக்கு சார். பிரயாணத்துல பார்த்தோம். பேசுனோம். சந்தோசமா அப்படியே பிரிஞ்சுடலாம். வர்றேன் சார்..

எங்களை நீங்கி அந்தப்பெண் நடக்கத் தொடங்கினார். காருக்குள் நடந்த சம்பவத்தைக் கேட்டபின்பு அவருடைய அலைபேசி எண்ணை வாங்கலாமா என் எனக்குத் தோன்றியதை அவரிடம் கூப்பிட்டு சொல்லலாமா என்று நினைத்தேன். வேண்டாம். யாரேனும் ஒரு சிலராவது அவருடைய உலகத்தில் நல்லவராக இருக்கட்டும் எனத் தோன்ற அமைதியாக நின்றிருந்தேன். அவர் பேருந்து நிலையத்தில் ஜனத்திரளுக்குள் நுழைந்து காணாமல் போனார்.

June 15, 2012

உதிரிப்பூக்கள் - 13

விவரம் தெரிந்து சினிமா பார்க்க ஆரம்பித்த காலத்தில் நான் ரஜினி ரசிகனாயிருந்தேன். காலம் காலமாய் நிலவி வரும் தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களின் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டிய அடிப்படைக் கலாச்சாரப்படி எம் ஜி ஆர் - சிவாஜி என்கிற வரிசையில் ரஜினியா கமலா என வந்தபோது ரஜினி ரசிகனாக இருப்பதே எனக்குப் பெருமையாகவும் வசதியாகவும் இருந்தது. ஏன் என்றால் ரஜினி படத்தை வீட்டில் அனைவரோடும் உட்கார்ந்து பார்க்கலாம். சிரிப்பு சண்டை என்று ஜாலியாகப் போகும். ஆனால் கமல் படமோ பாதிக்கு மேல் புரியாது. அத்தோடு அவர் கதாநாயகிகளைக் கண்டபடி கட்டிப்பிடிப்பார் முத்தம் குடுப்பார் என்பதால் குடும்பத்தோடு பார்க்கவும் முடியாது.

அடுத்ததாக
சினிமாவைத் தாண்டி பொது வாழ்விலும் ரஜினி ரொம்ப நல்லவர். எல்லோருக்கும் உதவி செய்பவர். வெளிப்படையான மனிதர். மொத்தத்தில் ரஜினி அப்படியே எம் ஜி ஆர் மாதிரி. கமலோ இதற்கு நேர் எதிர். இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு கல்யாணம் செய்தவர். யாருக்கும் உதவ மாட்டார். நடிப்பிலும் வாழ்விலும் சிவாஜி மாதிரியே. இப்படியாகக் காதில் விழும் செய்திகள் எல்லாமே ரஜினிக்கு ஆதரவாகவே இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினி படம் ன்றாகவே இல்லை என்றாலும் நூறு நாட்கள் ஓடும். கமல் படம் எவ்வளவு நன்றாக இருந்தாலும் ஓடித் தொலையாது. மாமாங்கத்திற்கு ஒரு படம் கமலுக்கு ஓடினால் அதுவே ஆச்சரியம். ஓடும் குதிரையின் மீதுதானே உலகம் பணம் கட்டும் என்கிற நிலையில் ஊருக்குள் பத்து பேர் இருந்தால் அதில் எட்டு பேர் ரஜினி ரசிகராக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லையே?

உறுப்பினராகச் சேர்ந்தால் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் ஓசி டிக்கெட் கிடைக்கும் என யாரோ சொன்னதை நம்பி நான் போய் இணைந்து கொண்ட சுப்பிரமணியபுரம் ஸ்டைல் கிங் ரஜினிகாந்த் மன்றத்தின் அருகிலேயே சகலகலா வல்லவன் கமல்ஹாசன் நற்பணி மன்றமும் இருந்தது. கடைசிவரைக்கும் எனக்கு ஒரு டிக்கெட் கூட காசு கொடுக்காமல் கிடைக்கவில்லை என்பது வேறு விசயம். ஆனால் தினமும் ஜாலியாகப் பொழுது போக மன்றம் பெரிதும் உதவியது.

மன்ற உறுப்பினர்கள் வீட்டில் விசேசங்கள் நடக்கையில் பேர் போட்டு போஸ்டர் அடிக்க, தெருத்தெருவாய்ப் போய் ஒட்ட, மைக் அன்வுன்ஸ் பண்ண, பள்ளிக்கூடம் திறக்கையில் மாணவர்களுக்கு நல உதவித் திட்டங்கள் என்று ஏதாவது ஒன்று நடந்தபடி இருக்கும். அப்படி எந்த வேலையும் இல்லாத, பொழுது போகாத நேரங்களில், எதிர்ப்பக்கம் போய் கமல் ரசிகர்களை வம்பிழுப்பதென்பது நமது நண்பர்கள் செட்டுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று. எங்கள் ஆள் நடிப்பு அப்படி இப்படி என்றெல்லாம் முரண்டினாலும் கடைசியில் எத்தனை படம் ஓடியது எனும் ஒரே கேள்வியில் எதிர்த்தரப்பு மொத்தமாக ஆஃப் ஆகி விடுவார்கள். ஏதேதோ சொல்லிப் பார்த்து ஒன்றும் முடியாமல் போக அவர்கள் பயன்படுத்தும் கடைசி அஸ்திரம் போங்கடா மெண்டல் ரசிகய்ங்களா என்பதாக இருக்கும். இதற்காகத்தான் காத்திருந்தோம் என்பதுபோல நாங்கள் அவர்கள் மேல் தாவ அதுவரைக்கும் வாய் வார்த்தையாக இருந்தது கைகலப்பாக மாறி யாருடைய மண்டையாவது உடைவதில் போய் முடியும்.

91 தீபாவளி என்று நினைவு. ரஜினியின் தளபதியும் கமலின் குணாவும் நேருக்கு நேர் மோதின. தினமலரோடு மண்டையில் கொண்டை போட்ட சாமுராய் ரஜினி போஸ்டரை இலவசமாகத் தந்தார்கள். அந்தப் போஸ்டரை வாங்கவே அடிதடி ஊருக்குள் தூள் பறந்தது. முதல்முறையாக மணிரத்னத்தோடு ரஜினி இணையும் படம் என்று ரசிகர்களிடையே ஏக அலப்பறை. அந்தப்பக்கம் தலையில் மஞ்சள் துண்டை கட்டிக்கொண்டு பப்பரப்பா என்று கைகளை நீட்டியபடி லட்டு வாங்க நிற்கும் கமல் போஸ்டர் வெளியாக கமல் ரசிகர்கள் மொத்தமாக மண்டை காய்ந்தார்கள்.

படங்கள் வெளியான முதல் நாளே நிலவரம் தெரிந்து போனது. ரஜினி படமாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு குன்சாக இருந்தது தளபதி. தேவாஆஆஆ சூர்யாஆஆஆ என்று ஒரே உற்சாக வெள்ளம் தியேட்டர்களில். ரஜினி சாவது கிளைமாக்ஸ் என்றிலிருந்து மாறி மம்முட்டி சாக ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் ஏக சந்தோசம். கண்டிப்பாக படம் ஓடிவிடும் எனத் தெரிந்து விட்டது. ஆனால் குணா பார்த்த பாதி பேர் அபிராமி அபிராமி என்று அய்யோ பாவமாக கலங்கிப்போய் வெளியே ஓடிவர உற்சாகம் பிய்த்துக் கொண்டது எங்களுக்கு.

நமது படம் நன்றாக இருப்பதைக் காட்டிலும் எதிராளியின் படம் ஊத்திக் கொள்வது என்பது அளவில்லா சந்தோசம்தான் இல்லையா? இன்றைக்கு அதே குணாவை மீண்டும் மீண்டும் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது வேறு விசயம். ஆனால் குணாவின் தோல்வி ஒரு ரஜினி ரசிகனாக அன்றைக்கு ரொம்பக் கொண்டாட்டமாக இருந்தது. என் நினைவுக்கு ரஜினியும் கமலும் நேரடியாக திரையில் மோதியதில் அதுதான் கடைசி. அதன் பின்பாக இருவருமே படங்கள் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டதும் ஒரே நாளில் அவர்களுடைய படங்கள் வெளியாவதும் இல்லாமல் போனபின் இந்த ரசிகர்கள் சண்டை வெகுவாகக் குறைந்து போனது.

ரஜினி இரண்டு வருடங்களுக்கு ஒரு படம், கமல் பல பரிசோதனை முயற்சிகள் எனத் தடம் மாறியதால் இவர்கள் வரிசையில் அடுத்தது யார் என்பதே அப்போதைக்கு என்னைப்போன்ற சாதாரண ரசிகனின் கேள்வியாய் இருந்தது.

நாளைய தீர்ப்பு வெளியானபோது குரங்கு என்றும் தகரடப்பா முகம் என்றும் பத்திரிக்கைகளால் நேரடியாகக் கேலி செய்யப்பட்ட விஜய் தமிழின் அடுத்த பெரிய நடிகராக வருவார் என யாராவது அன்று சொல்லியிருந்தால் நிற்காமல் சிரித்திருப்பேன். பெரிய இயக்குனரின் மகன் ஆசைக்கு ஒரு படம் நடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவருடைய இரண்டாவது படமான ரசிகன் வெளியானது. மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றி. பம்பாய் குட்டி சுக்கா ரொட்டி ஒத்தப்பாட்டுக்காக அந்தக் கருமாந்திரம் பிடிச்ச படத்தை நாலஞ்சு தடவை தியேட்டர்ல பார்த்தேண்டா தம்பி என என் அப்பா அடிக்கடி பெருமையாக சொல்வார்.

அடுத்தடுத்து வெளியான விஜய் படங்களின் ஃபார்முலா ரொம்ப எளிமையானது. பேருக்கு ஒரு கதை. நாலு சண்டை கொஞ்சம் காமெடி. ஆனால் பட்டாசான ஒரு கதாநாயகியும் கண்டிப்பாக ஒரு மழைப்பாட்டும் இருக்கும். கூடவே ஒரு கவர்ச்சி நடிகையின் குத்தாட்டப்பாடலும். சுவாதி, சங்கவி, யுவராணி என்று பலரை அறிமுகம் செய்து தங்கத்தமிழ் ரசிகனின் மனதினை எஸ் ஏ சி குளிரச் செய்தார். வயதுக்கு வந்து பிட்டுப்படங்கள் பார்க்க ஆரம்பித்திருந்த காலகட்டம் என்பதால் நானும் மிக எளிதாக விஜய் படங்களை நோக்கி ஈர்க்கப்பட்டேன்.

ஆனால் பூவே உனக்காக வெளியாகி விஜய்க்கு வேறொரு பாதை அமைத்துக் கொடுத்தது. காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் எல்லாம் வெளியாகி மெகா ஹிட்டாக விஜய் எங்கேயோ போய் விட்டார். படங்கள் ஓடுவது போக தானும் ஒரு ரஜினி ரசிகர் என்று கிடைக்கும் கேப்பில் எல்லாம் விஜய் அடித்து விட்டது எனக்கு இன்னும் வசதியாகிப் போனது. ரஜினி வழியில் அடுத்து நமக்குப் பிடித்தது விஜய்தான் என்று தீர்மானம் ஆனது.

ஜித்துக்கு அப்போது பத்திரிக்கைகள் வைத்திருந்த பெயர் வாய்க்கொழுப்பு நடிகர். ஏடாகூடமாக பேட்டி கொடுப்பது அவருடைய ஸ்பெசாலிட்டி. பாசமலர்கள், ராஜாவின் பார்வையிலே என்று சின்ன சின்ன கச்சடா ரோல்களில் நடித்துக் கொண்டிருந்தவரை முதலில் அடையாளம் காட்டியது ஆசையின் வெற்றி. அதன் பின்பு ஹீரா மற்றும் சுவாதியின் காதல், திமிர்த்தனமான பேட்டிகள் என்று ஆரம்ப கட்டங்களில் அஜித்தை எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ராசி என்றொரு படம். தானைத்தலைவி ரம்பாவுக்காகப் போய்ப் பார்த்தது. அஜித் வரும் காட்சிகளில் பெரும்பாலும் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தேன்.

தொடர்ச்சியாக படங்கள் ஊத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் எதிர்பாராமல் காதல் கோட்டை வெளியாகி சக்கைபோடு போட்டது. படத்துக்கு தேசிய விருதும் கிடைக்க அஜித்துக்கென ஒரு அடையாளம் உருவாகத் தொடங்கியது. அதில் தொடங்கி உன்னைத்தேடி, வாலி எனத் தொடர்ச்சியாக ஆறேழு படங்கள் ஹிட். அடுத்தாக அஜித்துக்கு நேர்ந்த நல்ல விசயம் ஷாலினி. அமர்க்களம் படத்தில் நடிக்கையில் இருவரும் காதல் வயப்பட அஜித் பொறுமையான மனிதனாக மாறத் தொடங்கினார். அதுவரைக்கும் மோசமானவராகப் பார்த்து வந்த மனிதனை சினிமா உலகம் சட்டென்று அற்புதமான மனிதர் என்று கொண்டாடத் தொடங்கியது. வாய்ப்புக் கேட்டு வரும் புதிய இயக்குனர்கள் எல்லாம் அஜித்தை கடவுள் ரேஞ்சுக்குப் புகழ அவரும் மேல்நோக்கி நகர ஆரம்பித்தார். தன்னை விஜய்க்குப் போட்டியாளானாக அஜித் அறிவித்துக் கொண்டதும் இந்த காலகட்டத்தில்தான் நேர்ந்தது.

சத்தமே இல்லாமல் உள்ளே வந்த இரண்டு நடிகர்கள் சட்டென்று வளர்ந்து நாங்கள்தான் அடுத்த தலைமுறை போட்டியாளர்கள் என உருவாகி நின்றிருந்தார்கள். போட்டியில் நான் விஜயின் பக்கமிருந்தேன். அதே நேரத்தில் வாலி, கார் ரேஸ், ஷாலினியுடனான அமைதியான வாழ்க்கை என்று அஜித்தின் மீது சின்னதொரு சாஃப்ட் கார்னரும் உருவாகத் தொடங்கி இருந்தது.

நிலாவே வா ரிலீஸ். சோலைமலை தியேட்டரில் காலை எட்டு மணிக்கெல்லாம் ரசிகர்கள் குவிந்து விட்டோம். அந்தத் தியேட்டரில் ஒரு நல்ல விசயம் - சைக்கிள் டோக்கனுக்கு டிக்கெட் தருவார்கள். முண்டியடித்து முன்னால் போய் வரிசையில் நின்றால் மதியம் மூணு மணி வரைக்கும் பொட்டி வரவில்லை. வந்து படம் போட்டபின்பு ஏண்டா பொட்டி வந்தது என்றாகி விட்டது. நாலு கிமீ கடலுக்குள் போன விஜயை சிலுவ என்று கத்தி சுவலட்சுமி கூப்பிட்டுக்கொண்டிருந்தபோது நாங்கள் நாற்பது கிமீ வேகத்தில் தியேட்டரை விட்டு ஓடிக் கொண்டிருந்தோம். அங்கே ஆரம்பித்தது சனியன்.

காதல்னா என்னன்னு தெரியுமா என வாயசைக்காமல் ஒவ்வொரு படத்திலும் விஜய் வசனம் பேசித்தள்ள எனக்கு வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது. நெஞ்சினிலே, நேருக்கு நேர், என்றென்றும் காதல் என வரிசையாகப் படங்கள். வருவியா வருவியா தியேட்டருக்கு வருவியா என்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் இழுத்து வைத்து அறைந்து கொண்டிருந்தார் மனுசன். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல வந்தது கண்ணுக்குள் நிலவு. படம் பார்த்த அத்தனை பேரும் பைத்தியம் பிடித்து வெளியே வந்தோம். ஆணியே பிடுங்க வேண்டாம் என மண்டை காய்ந்து சுத்திக் கொண்டிருந்தபோது தான் அஜித்துக்கு முகவரி வெளியானது.

நான் இதுவரைக்கும் பார்த்த படங்களில் மிகப்பிடித்தவை எனச் சொன்னால் அதில் கண்டிப்பாக முகவரிக்கும் இடமிருக்கும். ரொம்பவே இயல்பான கதை. வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் ஒரு இளம் கலைஞனின் வலியை அச்சு அசலாகப் பிரதிபலித்து இருந்தார் அஜித். அந்தப் படத்தோடு நான் கட்சி மாறிவிட்டேன். அதன் பிறகு வெளியான தீனா அஜித்தை ”தல” ஆக்கியது. சிட்டிசன், ரெட் என்று ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் வித்தியாசம் இருந்ததே அஜித்தை ஆதரிக்க எனக்குப் போதுமானதாக இருந்தது.

ஆக்சிடண்ட் ஆகியும் சிரமப்பட்டு நடிக்கிறார், தனிப்பட்ட முறையில் நேர்மையானவர், மனதில் பட்டதை தயங்காமல் பேசுபவர், ரசிகர்களை தன் சுயலாபத்துக்குப் பயன்படுத்தாதவர் என்றெல்லாம் பத்திரிக்கைகள் தலைக்கு மேல் தூக்கிப்பிடிக்க அஜித் இப்போது எனக்கு மிகவும் நெருக்கமானவராகவும் அதே நேரத்தில் அரசியலுக்காக தன் ரசிகர்களைத் தயார் செய்து வந்த விஜய் பிடிக்காதவராகவும் மாறி இருந்தார். வேறு எந்த நடிகரின் படபூஜைகளுக்கும் வராத ரஜினி அஜித் பட பூஜைகளுக்கு வந்தது தன்னுடைய வாரிசு அவர்தானென சொல்வதாகவே நாங்கள் எடுத்துக் கொண்டோம்.

ஜித் படங்களை பார்த்து ரசிப்பதைக் காட்டிலும் முதல் நாளே விஜய் படங்களைப் பார்த்துக் கிண்டலடிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. புறாவுக்கு பெல் அடிக்கிறாண்டா என்று ஆரம்பித்து உண்மைக் காதல்னா சொல்லு ****க்கூடத் தர்றேன் என்று சகட்டுமேனிக்கு ஓட்டினால் உடன் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு பொறி பறக்கும். படம் வெளியாகும் முதல் நாள் கூட்டமாகப் போய் விஜய் ரசிகர்களோடு ஒரண்ட இழுப்பது ஒரு சுகமான அனுபவம்.

மதுர படம் ரிலீசான நேரம். முதல் நாள் இரவுக் காட்சி. உடுமலைப்பேட்டையில் நண்பர்களோடு படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாய் பேச முடியாத பெண் ஒருத்தியை விஜய் பேச வைக்கும் காட்சி. என்னால் சிரிப்பை அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன். உடன் இருந்த நண்பர்களில் ஒருவன் தீவிர விஜய் ரசிகன். அதான் படம் பிடிக்கல்லீல்ல அப்புறம் என்ன டாஷுக்கு மொத நாளே பார்த்துட்டு வயிறெறியணும் என்று காய்ந்து தள்ளி விட்டான். எனக்கு சுருக்கென்று ஆகி விட்டது. ஆமாம்தானே? பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஏன் முதல் நாளே பார்க்க வேண்டும்? இடைவேளையோடு வெளியேறினேன். அதுதான் நான் கடைசியாக விஜய் படம் பார்த்தது. பெருந்துறையில் இருந்து மதுரை வரும் வழியில் பஸ்ஸில் சிவகாசி போட்டான் என்று டிக்கெட் எடுத்திருந்தும் பாதி வழியிலேயே இறங்கிக் கொள்ளும் அளவுக்கு இன்றைக்கும் கொள்கைப் பிடிப்போடு இருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜித் விஜய் போட்டியில் மிகவும் சுவாரசியமான விசயம் ரசிகர்கள் பட வெளியீட்டன்று ஒட்டும் போஸ்டர்கள்தான். கடவுளைப் பார்த்தது எவண்டா தலயை ஜெயிச்சது எவண்டா இளைய தலைவலியே உனக்கு நாங்கதான் எமன்டா என்பது ஒருபக்கம் இருக்கும். தளபதி தான் வெயிட்டு தறு”தல” எல்லாம் வேஸ்ட்டு என இன்னொரு பக்கம் களைகட்டும். இவர்கள் என்ன போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகவே படம் வெளியாகும் தினத்தில் வண்டியை எடுத்துக்கொண்டு ரவுண்ட்ஸ் போய்வருவோம். நமது நேரம் நன்றாக இருந்தால் தியேட்டரிலேயே அடிதடிகள் நடப்பதைப் பார்க்கும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். படம் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரசிகர்களின் அக்கப்போரு பார்க்கப் பார்க்க சலிக்காது. ஆகமொத்தம் படம் வெளியாகும் நாளில் நமக்கு நன்றாகப் பொழுதுபோகும். சமீபமாக இரண்டு நடிகர்களும் ஒன்றாக சேர்ந்து போஸ் கொடுப்பது, நண்பர்கள் என்று பேட்டி கொடுப்பது என்றிருந்தாலும் ரசிகர்களுக்கு நடுவே இருக்கும் பகை தீரும் என எனக்குத் தோன்றவில்லை. நடிகர்களிடையே போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது என்று மைண்ட் வாய்ஸ் கேட்டாலும் அதை எல்லாம் பார்த்தால் தொழில் பண்ண முடியுமா பாஸ்?

சரி இவர்களோடு இந்தக் கச்சாயத்து எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்தால்... சில நாட்களுக்கு முன்பு வாலு டீசர் வெளியானது. சிம்புவைப் பார்த்து ஹன்சிகா சொல்கிறார். ஒரு சில பசங்களப் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும். உன்னமாதிரிப் பசங்கள பார்த்தவுடனே பிடிச்சிரும். சுத்தம்.

யில்வே காலனியில் ”ரஜினி” ராமனாதன் என்றால் எல்லோருக்கும் தெரியும். ரசிகர் என்பதைக் காட்டிலும் வெறியர் என்று சொல்லலாம். எங்களுக்கு சீனியர் செட். எனக்குப் பதினைந்து வயது மூத்தவர். எல்லா மன்ற வேலைகளிலும் முதல் ஆளாக நிற்பவர். தலைவர் மட்டும் அரசியலுக்கு வரட்டும் அப்புறம் நம்ம ராஜ்ஜியம்தான் என்று எந்நேரமும் பினாத்திக் கொண்டிருந்த மனிதர். இளம் வயதில் வேஇலைக்குப் போனதைக் காட்டிலும் மன்ற வேலைகளுக்காக அவர் அலைந்தது அதிகம். போனவாரம் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். பழைய விசயங்களை எல்லாம் தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்தார். கோச்சடையான் வரட்டும் பட்டையக் கிளப்பிருவோம் தம்பி எனச் சொல்லும்போது அவருக்கு அத்தனை சந்தோசம்.

கடைசி வரைக்கும் தலைவர் அரசியலுக்கு வரலைன்னு உங்களுக்கு வருத்தமே இல்லையாண்ணே

அது கெடக்கு தம்பி. அவர் வரலைன்னாலும் எத்தனை பேருக்கு நல்லது செய்றாரு. போதாதா

அப்படி இல்லைண்ணே.. சரி விடுங்க.

அப்போதுதான் கவனித்தேன். அவர் உடம்பில் அங்கங்கே காயங்கள்.

என்னண்ணே இது.. ஒரே காயமா இருக்கு..

அதுவா தம்பி.. நம்ம தலைவருக்கு உடம்பு சரியில்லாமப் போச்சுல.. சிங்கப்பூர் போனாரே.. அவர் கொரல அப்பக் கேட்டீங்களா தம்பி.. எனக்கு சாகலாம் போல இருந்துச்சு.. அந்த மனுசன் நல்லபடியாத் திரும்பி வரணும்ல.. அதான் திருப்பரங்குன்றதுக்கு அலகு குத்தி காவடி எடுத்தேன். எப்படி.. நம்ம பிரார்த்தனைதான். ஆள் ஜம்முன்னு துள்ளிக் குதிச்சு வந்தார் பார்த்தீங்களா

எனக்கு என்னமோ செய்தது. கண்கள் கொஞ்சம் ஈரமாகி இருந்தன. திரையில் நடிப்பவர்கள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் திரைக்கு முன்னிருப்பவர்கள் நடிப்பதில்லை என்பது மட்டும் தெரிகிறது. அவ்வளவுதான்.

May 29, 2012

உதிரிப்பூக்கள் - 12

ல்லூரி முடிந்து வெளியே வந்த போது வானத்தில் மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. கடந்த சில நாட்களாகவே மதுரையில் நல்ல மழை. வீட்டுக்கு நனையாமல் போய் விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வண்டியைக் கிளப்பினேன். தெப்பக்குளத்தை நெருங்கியபொழுது மொபைல் அடித்தது. வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினேன். போனில் அம்மா.

"தம்பி, வரும்போது ஒரு லிட்டர் நல்லெண்ணையும், கொஞ்சம் சின்ன வெங்காயமும் வாங்கிட்டு வர்றியா?"

அம்மா எப்போதாவதுதான் என்னிடம் இது போல சொல்வது உண்டு.

"சரிம்மா..."

வாடிக்கையாக எண்ணெய் வாங்கும் கடை கீழவாசலில் இருக்கிறது. அவர்களிடமே வெங்காயம் எங்கே வாங்குவது என்று விசாரித்தேன். அருகில் இருக்கும் சந்துக்குள் செல்ல வேண்டும் என்றார்கள். வண்டியைத் திருப்பினேன். மழை லேசாகத் தூர ஆரம்பித்து இருந்தது.

நான் வெங்காய மண்டியை அடைவதற்கும் மழை வலுப்பதற்கும் சரியாக இருந்தது. அவசரமாக வண்டியை நிறுத்தி விட்டு கடையின் வாசலில் நின்று கொண்டேன். வெளியே காய வைத்து இருந்து வெங்காயத்தை எல்லாம் ஒரு வயதான பாட்டி பெருக்கி எடுத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் கடையின் உள்ளே மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தார். மழை ரொம்பப் பெரிதாக பெய்யத் தொடங்கியது.

"தம்பி, அப்படி வாசல்ல நின்னீங்கன்னா நனைஞ்சிடுவீங்க.. இப்படி உள்ள வந்து நில்லுங்க.." உள்ளே இருந்தவர் அழைத்தார். அவர்தான் கடையின் முதலாளியாக இருக்கக் கூடும்.

"இல்லண்ணே... பரவாயில்ல.. கால்ல ஷூ போட்டிருக்கேன்.. நீங்க வேலை பாக்குற எடம்.."

"அதனால என்ன தம்பி.. எல்லாம் நம்ம மனசுதான்... மனுஷனத்தான் முதல்ல மதிக்கணும்.. சும்மா உள்ள வாங்க.."

டைக்கு உள்ளே போய் நின்று கொண்டேன். ஒரு பெரிய அறை. அதன் முக்கால்வாசி இடத்தை வெங்காய மூட்டைகளும், பூண்டு மூட்டைகளும் அடைத்துக் கொண்டிருந்தன. ஒரு டேபிள், சேர். அதன் மேலே கொஞ்சம் சாமி படங்கள். பக்கத்திலேயே ஒரு எடை போடும் எந்திரம்.

"நீங்க ...... ஸ்கூல்லையா தம்பி வேலை பாக்குறீங்க?" அவர் கேட்டபோது தான் நான் கழுத்தில் கிடக்கும் அடையாள அட்டையை இன்னும் கழட்டவில்லை என்பதையே கவனித்தேன்.

"இல்லண்ணே.. நான் காலேஜ்ல வேலை பாக்குறேன்.. ஸ்கூல், காலேஜ் எல்லாமே ஒரே நிர்வாகம்தான்.."

"ஏன் கேட்டேன்னா தம்பி.. எம்பிள்ளைங்க ரெண்டும் உங்க ஸ்கூல்லதான் படிக்குதுங்க.. அதுக்காக கேட்டேன்.."

"அப்படியா.. சரிங்கண்ணே..." சிரித்துக் கொண்டே மழையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அப்போது ஹோவென சத்தம் போட்டவாறே ஒரு சிறுவர்கள் கூட்டம் சைக்கிள் டயரை உருட்டியபடிக்கு மழையில் ஆடிக் கொண்டே போனார்கள். அடித்து ஊற்றும் மழையை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

"கொடுத்து வச்சவங்க.. இல்லையா தம்பி..?"

"கண்டிப்பாண்ணே..வாழ்க்கைல வளரவே கூடாது.. எப்பவும் சின்னப் பசங்களாவே இருந்துடணும்.."

"அப்படி எல்லாம் இல்ல தம்பி..” பெருமூச்சு ஒன்று அவரிடம் இருந்து வெளிப்பட்டது. “எல்லாம் சூழ்நிலையைப் பொறுத்துதான்.. என்னோட பிள்ளைங்களுக்கும் இந்த வயசுதான்.. ஆனா அதுங்க இந்த மாதிரி ஆடிப் பாடி சிரிச்சு விளையாண்டு நான் பார்த்ததே இல்ல.. நாமதான் வியாபாரத்துக்கு வந்துடோம்.. நம்ம பிள்ளைங்களாவது நல்லா படிக்கட்டும்னு பெரிய ஸ்கூல்ல சேர்த்து விட்டா அவங்க பிள்ளைங்கள செக்கு மாடா ஆக்கிட்டாங்க.. காலைல எட்டுல இருந்து சாயங்காலம் அஞ்சு வரைக்கும் ஸ்கூல்.. ஸ்கூல் விட்டு வந்தவுடனே டியூஷனுக்குப் போயிட்டு ஒன்பது மணிக்குத்தான் வரும்ங்க.. அதுக்கு அப்புறம் கொஞ்சம் டிவி.. தூங்கிடும்ங்க... இதுதான் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு தம்பி.."

நான் ஏதும் பேசாமல் அவர் முகத்தை பார்த்தேன். அதில் ஒரு சின்ன வேதனை இருந்தது. அவரே தொடர்ந்தார்.

"ஏதோ ஏன் வீட்டுக்காரம்மா இருக்குற தைரியத்துலதான் தம்பி என் பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு.. அது பொறுமையா பிள்ளைங்கள பார்த்துக்குரதாலத்தான் நான் நிம்மதியா இருக்கேன்.. பிள்ளைங்க கூட சேர்ந்து வெளிய கொள்ள போக முடியல.. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் அதுங்களுக்கு லீவு.. ஆனா அன்னைக்கு நான் லைனுக்கு போனாத்தான் கலெக்ஷன்... யாருக்காக சம்பாதிக்கிறோமோ, அவங்க கூட சந்தோஷமா இருக்க முடியாட்டி எதுக்கு இந்த வாழ்க்கைன்னு ரொம்பக் கோபமா வருது தம்பி.."

எளிமையாக அவர் பேசினாலும் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை என்னை சுட்டது.

"ஏதோ உங்க கிட்ட பேசணும்னு தோணுச்சு தம்பி.. தப்பா எடுத்துக்காதீங்க.."

"அய்யய்யோ.. என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க... உங்க கூட பேசுனதுல எனக்கும் சந்தோஷம்தாண்ணே .."

அவர் முகம் கொஞ்சம் தெளிவு அடைந்தது. மழை கொஞ்சம் சிறுத்திருக்க எனக்குத் தேவையான வெங்காயத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

"இருங்க தம்பி.. மழைல நனையாமப் போங்க.." என்று சொல்லியவாறே அவருடைய ஹெல்மட்டைக் கொடுத்தார். "நேரம் கிடைக்குறப்ப திருப்பிக் கொண்டு வந்து கொடுங்க.." நன்றி சொல்லி வாங்கிக் கொண்டேன்.

னதுக்குள் அந்த மனிதர் சொன்ன விஷயங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. இந்த வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் தான் என்ன? வாழ்க்கையை நாம் துரத்திக் கொண்டிருக்கிறோமா அல்லது வாழ்க்கை நம்மை துரத்துகிறதா? மழைத்துளிகள் முகத்தில் அறைய வண்டியைக் கிளப்பினேன்.

April 30, 2012

உதிரிப்பூக்கள் - 11

நான் வேலை பார்க்கும் கல்லூரிக்குப் பின்புறம் ஒரு பெரிய பொட்டல்காடு இருக்கிறது. எந்நேரம் பார்த்தாலும் அங்கே ஏதாவது ஒரு குரூப் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும். டவுசர் போட்ட சின்னப்பையன் முதல் கைலி கட்டிய பெரிய மனிதன் வரை எந்த பாகுபாடும் இல்லாமல் அந்தக் கூட்டத்தில் இருப்பார்கள். மதிய நேரத்து மொட்டை வெயிலோ மழையோ அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது. எந்நேரமும் கிரிக்கெட்தான். எந்தக் கவலையும் இன்றி நாமும் அவர்களைப் போல விளையாட முடியவில்லையே என்று பொறாமையாக இருக்கும்.

இந்தியாவில் இன்று ஜாதி மற்றும் கரப்பான்பூச்சிக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் ஒன்றுதான் எல்லா இடங்களிலும் பரவலாக விரவிக் கிடக்கிறது. வெளியூர் மற்றும் வெளிமாநிலப் பயணங்களின் போதும் தெருவில் எனக்கு அதிகம் பார்க்கக் கிடைக்கும் விளையாட்டு கிரிக்கெட் தான். குறிப்பாக பி எல்லின் வருகை கிரிக்கெட்டை விளையாட்டு என்பதிலிருந்து வேறொரு இடத்துக்கு நகர்த்தி இருக்கிறது. சச்சினைத் தங்கள் கடவுள் எனக் கொண்டாடிய மக்களை, அவரை வீழ்த்தி விட்டால் போதும் கண்டிப்பாக நாம் ஜெயித்து விடலாம், எனப் பிரார்த்திக்க வைக்கும் நிலை இன்றைக்கு வந்தாகி விட்டது.

ரு மட்டையைக் கொண்டு பந்தை அடிக்க வேண்டும் என்பதாக எனக்கு கிரிக்கெட் அறிமுகம் ஆனபோது ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். அடுப்பெரிக்க வைத்து இருக்கும் விறகும் பிளாஸ்டிக் பந்தும்தான் நான் முதன்முதலில் கிரிக்கெட் ஆடிய உபகரணங்கள். யார் அதிகம் பேட் செய்வது என்கிற தகராறில் விறகு பேட் வாளாய் மாறி சண்டை போட்டு கட்டை விரல் நகத்தைப் பெயர்த்துக் கொண்டதுதான் எனது முதல் விழுப்புண். ஆறாவது படிக்கும் காலத்தில் சுப்பரமணியபுரம் ஏரியாவுக்கு மாறிய பிறகுதான் நான் சீரியசாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது.

பாலகுருகுலம் ஸ்கூல் பக்கத்தில் இருந்து ரைஸ்மில் கிரவுண்ட் தான் எங்கள் பிளேகிரவுண்ட். எதிர் வீட்டு ராஜசேகர் அண்ணனின் டீமில் என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். என்னுடைய பவுலிங்கும் ஃபீல்டிங்கும் ரொம்பக் கேவலமாக இருக்கும் பேட்டிங் கொஞ்சம் கேவலமாக இருக்கும் என்பதால் ஏழாவது அல்லது எட்டாவதாக இறக்கி விடுவார்கள். பெரும்பாலும் கீப்பருக்குப் பின்னால் நின்று பந்து பொறுக்கி போடுவதுதான் என்னுடைய முக்கியமான வேலை.

அன்றைக்கு பதினைந்து ஓவர்கள் கொண்டதொரு பால் மேட்ச். எங்கள் அணிதான் பேட்டிங். முதல் நான்கு ஓவருக்குள்ளேயே ஆறு விக்கெட் போயிந்தி. ஏழாவதாக நான் இறங்குகிறேன். எதிர் முனையில் இருக்கும் குட்டை குமார் நன்றாக விளையாடக் கூடியவன் என்பதால் எப்படியாவது அவுட் ஆகாமல் மட்டும் இருடா என்று என்னிடம் வந்து சொல்லிப் போனான். அன்றைக்குப் பார்த்து எனக்கு என்ன ஆனதோ தெரியவில்லை சன்னதம் வந்தாற்போல ஆடி விட்டேன்.

போடுகிற பந்தை எல்லாம் காலிலேயே குத்திக் கொண்டிருந்தது வசதியாகப் போக சிக்சும் ஃபோருமாகப் பறந்தது. எங்கள் ஆட்டம் முடிந்த போது நான் எண்பது ரன்னும் குமார் அறுபதும் அடித்து இருந்தோம். அபார வெற்றி. மக்கள் என்னைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அன்றிலிருந்து நானும் குட்டை குமாரும் அணியின் முக்கியமான இணையாக மாறி விட்டோம். எல்லாம் நல்ல படியாகப் போய்க் கொண்டிருந்தது, நான் குட்டை குமாரின் தங்கைக்கு லவ் லெட்டர் கொடுக்கும் வரை.

யில்வே காலனிக்கு வந்த பிறகு வேறொரு டீம். ஆனால் இங்கு நான்தான் கேப்டன். ரப்பர் பந்திலிருந்து பீஸ்பாலுக்கு நாங்கள் புரமோஷன் வாங்கியது இந்தக் காலத்தில்தான். காலனியின் வீதிகளில் விளையாட தனித்திறமை வேண்டும். கடுமையான விதிகளுக்கு உட்பட்டு களம் இறங்குவோம். வாதாமரம் தான் ஸ்டம்ப். ஓட்டின் மீது அடித்தால் அவுட். வேலி கட்டிய வீடுகளுக்குள் பந்து நேராய்ப் போய் விழுந்தாலும் அவுட். அதுவும் பந்து போய் விழும் வீடு துரைசானிகளின் வீடாய் இருந்தால் பந்தைத் திருப்பி வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும். நிறைய பேர் பந்தை அறுத்துத்தான் திருப்பித் தருவார்கள். திட்டிக் கொண்டே திரும்பி வருவோம்.

கல்லூரியில் சேர்ந்தபின்பாக கிரிக்கெட் விளையாடுவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போனது. இன்றைக்கு கல்லூரி ஆண்டு விழாக்களில் எப்போதாவது மாணவர் ஆசிரியர் போட்டி வைத்தால் மட்டும் கலந்து கொள்வது என்கிற நிலைக்கு விளையாட்டு என்பது குறைந்து போய் விட்டது. இருந்தாலும் பால்யத்தின் பல இனிமையான நினைவுகளுக்கு கிரிக்கெட் விளையாட்டும் ஒரு காரணம் என்பதை என்னால் மறுக்க முடியாது. அதே நேரத்தில் சின்ன வயது நினைவுகள் மற்றும் கொண்டாட்டங்கள் பற்றிப் பேசும்போது கிரிக்கெட் தவிர்த்து சொல்வதற்கும் எங்களுக்கு நிறைய விளையாட்டுகள் இருந்தன.

ள்ளிக்கூடத்தில் பி டி பீரியட் என்று தனியாக ஒரு ஹவர் இருக்கும். அந்த நேரத்தில் விளையாடுவதற்கு என்று எங்கள் பள்ளிக்கென ஒரு ஸ்பெஷல் விளையாட்டு இருந்தது. மொத்த வகுப்பையும் இரண்டாகப் பிரித்து வரிசையாக ஆளுக்கொரு எண் கொடுத்து விடுவார்கள். இப்போது இரண்டு அணியிலும் தலா முப்பது எண்களைத் தாங்கிக் கொண்டு முப்பது பேர் இருப்போம். இரண்டு அணிக்கும் நடுவே ஒரு வட்டம் வரைந்து உள்ளுக்குள் ஒரு கர்ச்சீப்பை வைத்து விடுவார்கள். ஆட்டதுக்கு களம் ரெடி.

இப்போது நடுவராக இருக்கும் பி டி மாஸ்டர் ஒரு எண்ணை உரத்துச் சொல்வார். அந்த எண்ணுக்குரிய நபர்கள் இருவரும் வட்டதுக்கு அருகே வந்து விடுவார்கள். மற்றவர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அந்தக் கர்ச்சீப்பை எடுத்துக் கொண்டு மீண்டும் தங்கள் அணிக்குத் திரும்ப வேண்டும். அப்படி ஒருவர் எடுத்து வந்து விட்டால் அந்த அணிக்கு ஒரு பாயிண்ட். எடுத்தவர் அணியின் எல்லைக் கோட்டைத் தொடுவதற்குள் மற்றவர் இவரைத் தொட்டுவிட்டால் எதிரணிக்கு ஒரு பாயிண்ட். இப்படியாகப் போகும் ஆட்டத்தில் கிளுகிளுப்பே அழைக்கப்படும் எண்களுக்கு உரிய மக்கள் எதிர்பாலினத்தவர்களாக இருப்பதில்தான் இருக்கும். வாரம் பூராவும் இந்த ஒற்றை ஹவருக்காக காத்திருந்து விளையாடுவோம்.

ன்னுடைய நெருங்கிய சினேகிதிகள் எல்லாரும் எனக்கு சுப்பிரமணியபுரம் வந்த பிறகு கிடைத்தவர்கள். அங்கே இருந்த காலகட்டத்தில் நான் ஆண்பிள்ளைகளைக் காட்டிலும் பெண்களோடுதான் அதிகமாக விளையாடுவேன். தில்லி தில்லி பொம்மக்கா, கல்லா மண்ணா, கரண்ட் பாக்ஸ், வளையல் ஜோடி சேர்த்து ஆடுவது, சொட்டாங்கல், பிள்ளைப்பந்து, நாடு பிடிச்சு ஆடுவது என்று வித விதமான விளையாட்டுகளில் நேரம் போவதே தெரியாது. பசங்களோடு சேர்ந்து கொள்வதில்லை என்று பையன்கள் கண்ட மேனிக்கு வைவார்கள். இதை எல்லாம் பார்த்தால் பிழைப்பு நடக்குமா என்று போய்க் கொண்டே இருப்பேன்.

அந்தக் காலகட்டத்தில் எங்கள் ஏரியாப் பையன்களின் மத்தில் பிரபலமாக இருந்த விளையாட்டுக்களில் முக்கியமானது ரவுண்டு காத்து. ஏரியாவில் நின்று கொண்டிருக்கும் சைக்கிள்களில் எல்லாம் காற்றைப் பிடுங்கி விட்டுக் கொண்டே போவதுதான் விளையாட்டு. ஆட்டம் இரண்டு நாட்களுக்கு இரண்டு அணிகளுகு இடையே நடக்கும். முதல் நாள் டாசில் வென்ற அணி காத்துப் பிடுங்கப் போகும்போது எதிரணியில் இருந்து கணக்கெடுக்க ஒரு அம்பயரும் கூடவே போக வேண்டும். இரண்டாவது நாள் அடுத்த அணி வேட்டைக்குப் போகும். முடிவில் அதிகமான சைக்கிள் டயர்களைப் பதம் பார்த்தவர்களே வெற்றி பெற்றவர்கள். தோற்ற அணி மற்றவர்களுக்கு வடையும் டீயும் வாங்கித்தர வேண்டும். இன்னொரு முக்கியமான ஆட்டம் ரவுண்டு கண்ணாமூச்சி. ஏரியாவில் இருக்கும் பனிரெண்டு தெருக்களில் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம். தேடி வருபவன் எல்லாரையும் கண்டுபிடிக்க சில சமயங்களில் ஏழு எட்டு மணி நேரங்கள் ஆகும்.

விளையாட்டுகள் எல்லாவற்றுக்குமே சீசன் உண்டு. ஒரு விளையாட்டு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை ஓடும். பிறகு வேறொரு விளையாட்டு ஆரம்பித்து விடும். பெரும்பாலும் முழுப்பரிட்சை விடுமுறையில் பம்பர சீசனில் தான் எல்லாம் ஆரம்பிக்கும். அபிட்டு, அங்கோஷு, சாட்டை மேல சாட்ட வச்சு சொடக்சைன் என்பதான சத்தங்கள் தெருவெங்கும் நிரம்பி வழியும். பம்பரத்தைப் பொறுத்தவரை ஆக்கர்பார்தான் சரியான ஆட்டம். பத்து ரவுண்டு வரை உருட்டி இறுதியாகச் சிக்கிய பம்பரத்தை சாக்கடையில் ஊறப்போட்டு கல்லைத் தூக்கிப் போட்டு உடைப்பதில் இருக்கும் சுகமே அலாதி.

பம்பரம் முடிந்து அடுத்ததாக கோலிகுண்டு சீசன் தொடங்கும். அதன் பின்பாக தீப்பெட்டி அட்டை, சிகரெட் அட்டை, லாட்டரி சீட்டு என்று விதம் விதமான ஆட்ட சீசன்கள் வந்தப்டியே இருக்கும். தெருதெருவாக சுற்றி ஒரு குப்பைத் தொட்டி விடாமல் பொறுக்கி தீப்பெட்டி அட்டைகளும் சிகரெட் அட்டைகளும் சேகரிப்பதில் நண்பர்களுக்கு இடையே அடிதடி கூட நடக்கும். அதிலும் வெளிநாட்டு சிகரட் அட்டைகளுக்குக் கூடுதல் மவுசு வேறு. அதன் மதிப்பு மட்டும் கோடிகளில் இருக்கும். உள்ளூர் சிசர்ஸின் மதிப்பு வெறும் ஐம்பதுதான். சேகரித்த அட்டைகளைக் கொண்டு சில்லாக்கில் செதுக்கி ஆடுவது, பூவா தலையா ஆடுவது என்று ஆட்டங்கள் களைகட்டும். நடுவே உலக்கோப்பை ஃபுட்பால் அட்டை, கிரிக்கெட் அட்டை, ரெஸ்லிங் அட்டை என்று வந்தால் அதற்கெனத் தனி சீசன்.

த்தனை விளையாட்டுகள். இதை எல்லாம் நாம் ஆடி இருக்கிறோம் இப்படி ஒரு வாழ்க்கை வந்து இருக்கிறோம் என்று நினைக்கும்போதே உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் இன்றைக்குத் தெருக்களில் இவற்றில் எதையும் பார்க்க முடியவில்லை என்பதும் வருத்தமாக இருக்கிறது. ஹேண்ட் கிரிக்கெட்டிலும் வீடியோ கேம்சிலும் உட்கார்ந்து இருக்கும் இந்தக் காலப் பிள்ளைகளுக்கு மொட்டை மாடி நிலவில் அமர்ந்து காலாட்டுமணி கையாட்டுமணி ஒத்த முட்டையத் தின்னுட்டு ஊள முட்டையக் கொண்டுவா என்பதெல்லாம் வெறும் கதையாக மட்டுமே இருக்கும் என்று நினைக்கையில் பெருமூச்சு விடுவதைத் தாண்டி நாம் வேறென்ன செய்து விட முடியும்?