Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

August 9, 2013

விட்டு விடுதலையாகி (2)



வலையுலகில் நுழைந்த ஆரம்ப காலம் தொட்டு மேவியை நான் நன்கறிவேன். தாம்பரம் ரயில் நிலையத்துக்குள் யாரேனும் ஆசாமி ஒரு கையில் மேலாண்மை புத்தகமும் இன்னொரு கையில் மேலாண்மை பொன்னுசாமியின் புத்தகமும் வைத்துக்கொண்டு இந்தியாவின் பொருளாதாரமும் இந்திரா பார்த்தசாரதியும் எனப் பேசியபடி கடந்து போனால் அவர்தான் மேவி என நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதை விளையாட்டாகவோ கேலியாகவோ சொல்லவில்லை. உண்மையில் இதுதான் அவருடைய இயல்பு. எல்லாவற்றிலும் புகுந்து புறப்படும் ஜீவன். அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம். மேலார்ந்த நட்பு என்பதைத் தாண்டி என் மீது அக்கறை செலுத்தும் மனிதர்களில் ஒருவர். நிறைய வாசிப்பவர். ஆனால் அந்த வாசிப்பு புறவயமாக மட்டும் இருப்பதில் எனக்கு எப்போதும் வருத்தமே.


பெருங்களத்தூரில் இருக்கும் மேவியின் வீட்டுக்கு நாங்கள் இருவரும் போய்ச் சேர்ந்தபோது மணி எட்டைத் தாண்டியிருந்தது. அண்ணியின் பிரசவத்துக்காக அவருடைய அம்மா வெளிநாடு போயிருக்க வீட்டில் அப்பா மட்டும் தனியாய் இருந்தார். வணக்கம் சொல்லியபடி உள்ளே நுழைந்தவனை அவர் வினோதமாகப் பார்த்ததன் காரணம் பிற்பாடு தெரிந்தது. இத்தனை வருடங்களில் நண்பர் என்கிற பெயரில் மேவி வீட்டுக்கு அழைத்து வந்திருந்த முதல் ஆள் நான். வீட்டைப் பற்றியும் வேலை பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு எங்களை சாப்பிடச் சொன்னார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென வெளியே சாப்பிட்டு விட்டுப் போயிருந்தோம். என்றாலும் அவரது திருப்திக்காக மீண்டும் ஒருமுறை உணவருந்தி விட்டு மாடிக்குச் சென்று கூடடைந்தோம்.


மறுநாள் காலை எழுந்தபோது எங்கு போவதென எந்தத் தீர்மானமும் இருக்கவில்லை. சட்டெனத்தான் அது தோன்றியது. பாண்டி செல்லலாம். எனக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று கடல். அதன் பிரம்மாண்டத்தின் முன் மனம் ஒன்றுமில்லாமல் கரைந்து போய் விடும் தருணங்கள் அற்புதமானவை. இதனை மேவியிடம் சொன்னபோது இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை எனத்தான் கேட்டார். 


“சரக்கடிக்காத மனிதரெல்லாம் எதற்கய்யா பாண்டிச்சேரி போகிறீர்?” 


இதற்கு என்னிடம் பதிலில்லை. கடலைப் பார்க்க வேண்டும், போகிறேன். முடிவு செய்தாயிற்று. 


“அதெல்லாம் சரி.. ஆனா அப்பா அடுத்து எங்க போறீங்கன்னு கேட்டா வேற ஏதாவது ஊரைச் சொல்லுங்க.. சரியா?”  தலையை ஆட்டி வைத்தேன்.


மேவியின் புத்தக அலமாரியிலிருந்து ஆதவனின் ராமசேஷனை உடனழைத்துக் கொண்டு கிளம்பினேன். அப்பாவிடம் விடைபெறும் சமயம்.


“அடுத்து எங்க தம்பி போறீங்க?”


பொய் சொல்லும்போதும் பொருந்தச் சொல்ல வேண்டும் இல்லையா? சட்டென அகநாழிகை வாசுவின் நினைவு வந்தது. 


“மதுராந்தகம் போகலாம்னு இருக்கேன்.. பெறகு கங்கை கொண்ட சோழபுரம்..”. 


“அங்க எல்லாம் எதுக்குப் போறீங்க? நண்பர்கள் யாரும் இருக்காங்களா?”


இங்குதான் என் நாவில் அமர்ந்திருந்த சனீஸ்வரன் நர்த்தனமாட ஆரம்பித்தான்.


“இல்லைங்க.. சும்மா ஒரு அனுபவத்துகாக..”


அவருக்கு சுத்தமாக நான் சொன்னது புரியவில்லை. ஒரு முறை என்னை மேலும் கீழும் பார்த்தார். பின்பு மேவியின் பக்கம் திரும்பி ஒரு பார்வை. இந்த மாதிரி மனிதர்கள்தான் உனக்குப் பழக்கம்? 


திண்டிவனத்தில் இறங்கி பாண்டி செல்லும் பேருந்தில் ஏறியாயிற்று. இதற்குமுன்பாக ஒரே ஒரு முறை மட்டுமே பாண்டி சென்றிருக்கிறேன், எனக்கு மிகப்பிரியமான தோழியோடு. கடலைத் தவிர்த்து வேறு எங்கு செல்லலாம் என யோசித்த போதுதான் நண்பர் மனோ.மோகனின் நினைவு வந்தது.


பைத்தியகாரியின் பட்டாம்பூச்சி எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் மனோ.மோகன் சமகாலக் கவிஞர்களில் முக்கியமானவர். பாண்டி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர். தேனியில் நடந்த ஒரு சிறுகதை விமர்சனக் கூட்டத்திலும், சேலத்தில் நடைபெற்ற கவிதைகள் விமர்சன அரங்கிலும் மதுரையில் ஒரு முறையும் அவரைச் சந்தித்து இருக்கிறேன்.


மனோவைப் பார்க்கலாம் என அலைபேசியில் அழைத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. வெயில், கணேசகுமாரன் என நண்பர்கள் பலரிடம் கேட்டும் பயனில்லை. கடைசியாகக் கலாப்ரியாவிடம் கேட்டேன். அவரும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனச் சொல்லி விட்டார். சரி, கடலோடு முடித்துக் கொள்வோம் என முடிவு செய்தது மனம். ஆனால் மிகச்சரியாக பேருந்து நிலையத்தில் இறங்கியபோது அலைபேசி அதிர்ந்தது. மனோ.மோகன். கலாப்ரியா ரமேஷ் பிரேதனுக்கு அழைத்து அங்கிருந்து தகவல் சொல்லி எப்படியோ என்னைப் பிடித்து விட்டிருந்தார்.


“என்ன நண்பா? திடீர் பிரயாணம்?”


“உங்க ஊர் கடலைப் பார்க்கணும் போல இருந்தது நண்பா..”


“பாருங்க.. ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்..”


நான் அதிகம் பார்த்திருக்கும் கடற்கரை எனச் சொன்னால் கன்னியாகுமரிதான். அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூர். ஆனால் என்னை மொத்தமாக அள்ளிக் கொண்ட கடல்கள் என்றால் அது தனுஷ்கோடியும் பாண்டியும். கண்ணுகெட்டிய தூரம் வரை மனிதர்கள் நடமாட்டமின்றி வேன்களின் டயர் தடங்கள் மட்டும் பயணிக்கும் தனுஷ்கோடி நமக்குள் வலியை விதைத்துப் போகும் என்றால் பாண்டியில் நான் உணர்ந்தது அமைதியை. நீளமான பெரிய அளவிலான கருங்கற்கள் நிரம்பிய கரையில் சற்றே உள்வாங்கி நீர் தெறிக்கும்படியாயிருந்த பாறை ஒன்றின் மீது சென்றமர்ந்தேன். 


கண்முன்னே மிகப்பரந்த நீலப்போர்வை. அங்கொன்றும் இன்கொன்றுமாய் மிதந்து செல்லும் படகுகள். மதிய வெயில் சற்றே மிதமாக அடித்துக் கொண்டிருந்தாலும் வெக்கை இருக்கவில்லை. காற்றில் ஆடும் தூசு மெல்ல மெல்ல வலுவிழந்து தரையில் வீழ்ந்தடங்குவதைப் போல மனம் சலனங்கள் நீங்கி அமைதியில் தொலைந்து போயிருந்தது. சுற்றிலும் இருந்த மனிதர்களைப் பார்த்தேன். பெரும்பாலானவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கடலின் முன்பாக நின்றபடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக்கணத்தின் அற்புதத்தை அனுபவிப்பதும் நினைவுகளை சேகரிப்பதும் தாண்டி அவற்றை ஆவணப்படுத்துவதில் மட்டும் ஏன் இத்தனை அவசரம்?
  

அங்கிருந்து கரையோரமாகவே மெதுவாய் நடக்கத் தொடங்கினேன். அங்கிங்கெனாதபடி எங்கும் சிதறிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும். இன்னும் சில வருடங்கள் கழித்து திரும்பி வந்தால் இந்த இடம் இதே மாதிரி இருக்காது என்பதாய்ப் பட்டது. சின்னதாய் ஒரு வலி. எத்தனை நேரம் நடந்திருப்பேன் எனத் தெரியாமல் கடற்கரையின் நீளத்தை குறுக்கும் நெடுக்குமாய் அளந்து கொண்டிருந்தேன். இப்போது ஓரளவு பழக்கமாகியிருந்த அந்தக் குரல் என்னை அழைத்தது. துணைவியாரோடு மனோ வந்து சேர்ந்திருந்தார்.


- பயணிப்போம்

August 5, 2013

விட்டு விடுதலையாகி

கொஞ்ச நாட்களாகவே மனம் அமைதியிழந்து தவித்து வந்தது. வீடு விட்டால் கல்லூரி, கல்லூரி விட்டால் வீடு, ஆராய்ச்சிப் படிப்புக் குழப்பங்கள் என செக்கு மாடாய் மாறிப் போனதான உணர்வு. மே மாத நடுவில் வந்து சேர்ந்த நகுலனின் வருகை சற்றே நெஞ்சை ஆற்றுப்படுத்தினாலும் வழக்கமான நாட்களிலிருந்து தப்பித்து வெளிக்கிளம்பும் எண்ணம் உள்ளிருந்து உறுத்தியபடியேதான் இருந்தது. 

மனதில் தோன்றியதை துணைவியாரிடம் சொன்னேன். தனக்குப் பிடிக்காதபோதும் எனக்காய் எல்லாவற்றையும் அனுசரித்துப் போகும் ஜீவன் இதற்கும் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆனால் ஒரேயொரு விண்ணப்பம் மட்டும் வைத்தாள். எக்காரணம் கொண்டும் இரவு நேரங்களில் பேருந்து நிலையம், மண்டபம் போன்ற பொது இடங்களில் தங்காமல் பத்திரமாய் இருக்க வேண்டும் என்பதுதான் அது. சரி என நன்றி கூறிக் கிளம்பினேன்.

நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது இலக்கில்லாமல் சுற்றி வரப் போகிறேன் என்பதைப் பகிர்ந்து கொண்டேன். உடன் அவர் கேட்டது..

“என்ன.. எஸ்ராவா.. தேசாந்திரியா?”

கண்டிப்பாக இல்லை. எஸ்ரா, கோணங்கி போன்றோரின் வாழ்க்கை மீது பொறாமை கலந்த காதல் உண்டென்றாலும்  ஒருபோதும் அவர்களைப் போல அலைந்து திரிவது எனக்குச் சாத்தியப்படாது. எங்கும் குட்டியைத் தூக்கிச் சுமக்கும் அழகர்மலை குரங்கைப் போல வீட்டின் நினைவுகளையும் நெருங்கின மனிதர்களையும் எப்போதும் சுமந்து திரிபவன் நான்.  இது என்னால் இயன்ற ஒரு சின்ன விடுபடல். அன்றாட வாழ்வில் தொலைந்து போகாமல் என்னை நான் தக்க வைத்துக் கொள்ள செய்திடும் சிறு முயற்சி. அவ்வளவே.

போவதென்று முடிவான பின்பு எங்கே போவது எனும் கேள்வி வந்தது. எங்கிருந்து தொடங்குவது என நிறைய யோசித்த பின்பு நான் பெரிதும் வெறுக்கும் நகரமான சென்னைக்கே முதலில் செல்வது எனத் தீர்மானித்தேன். கல்லூரி காலத்தோடு காணாமல் போன ஒரு சில நண்பர்களைப் பார்க்கலாம் என்பதோடு சென்னையின் மால்களில் சுற்ற வேண்டும் என்பதும் அதற்கு ஒரு காரணம். யாரும் உள்நுழையாத ஆடம்பரக் கடைகளுக்குள் எவரேனும் வர  மாட்டார்களா என மிருகத்தின் பசியை கண்களுள் தேக்கி நிற்கும் மால்களிலுள்ள கடைகளின் சிப்பந்திகளைப் பற்றிய ஒரு நடுக்கம் எனக்குள் உண்டு. அவர்களைப் பற்றிய கதை ஒன்றை எழுதும் எண்ணமும் உண்டு. ஆகவே சென்னைதான் ஆரம்பப்புள்ளி என முடிவானது.

சென்னை வந்து இறங்கியபின்பு நான் சந்திக்க விரும்பிய கல்லூரித் தோழனுக்கு அழைத்தேன். அது ஒரு சனிக்கிழமையாக இருக்க தான் சொந்த ஊருக்குப் போய் விட்டதாகச் சொன்னவன் சொல்லாமல் கொள்ளாமல் வந்ததற்காகக் கடிந்து கொண்டான். மற்றவர்களும் ஊரில் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பதாய் அவன் சொல்ல நண்பர்களைச் சந்திப்பது இனி சாத்தியப்படாது என்று தெரிந்தது. எந்த மாலுக்குச் செல்லலாம் என்கிற என் கேள்விக்கு புதிதாய்த் திறந்திருக்கும் ஃபோரம் மாலுக்குப் போகலாம் எனச் சொன்னான். நாள் முழுதும் அங்கே கழித்து விடலாம் ஆனால் இராத்தங்கலுக்கு என்ன செய்வது என்கிற புதுக்குழப்பம் வந்து சேர்ந்தது.

அடுத்து எங்கே போவது எனத் தெரியாது. சென்னையில் தான் இரவு தங்க வேண்டும். பணம் செலவழித்து அறையெடுத்துத் தங்க வசதி பற்றாது எனும் சூழலில் நான் நன்கறிந்த அல்லது அப்படி நம்பிக் கொண்டிருந்த சில நண்பர்களுக்கு அழைத்தேன். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன பதிலோ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒருவர் தனது அப்பாவைக் கேட்க வேண்டும் என்றார். ஒருவர் தனது வீட்டு முதலாளியிடம் அனுமதி பெற வேண்டும் எனச் சொன்னார். இன்னொருவர் மனைவி வீட்டில் இல்லாத காலத்தில் நண்பர்களைக் கூட்டி வந்தால் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும் என்றார். எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இறுதியில் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. ஒரு நிமிடம் எனது வீட்டின் நினைவு வந்து போனது.

பள்ளியின் இறுதி வருடக் காலம். முத்துக்குமார் என்றொரு நண்பன் என்னோடு படித்துக் கொண்டிருந்தான். ஒரு மதிய நேரம் அவனை வீட்டுக்குக் கூட்டிப் போயிருந்தேன். அம்மா வேலைக்குப் போயிருக்க வீட்டில் அம்மாச்சி மட்டும்தான் இருந்தார். வந்தவனுக்கும் சேர்த்து உணவு கொடுக்கும்படி அம்மாச்சியிடம் சொன்னேன். என்ன ஆளுகளோ என்னவோ என அவனுக்குத் தனியாக உணவு தர முடியாது என அவர் மறுத்து விட்டார். கோபம் கொண்டு எனது தட்டில் சோற்றைப் போட்டுக் கொண்டுபோய் அதிலேயே சாப்பிடும்படி சொல்லி இருவரும் சாப்பிட்டோம். மாலை வீடு திரும்பியபின் அம்மாவிடம் அம்மாச்சி போய் சொல்ல அவருக்குத் தான் திட்டு கிடைத்தது. 

சிறுவயது முதலே எனது வீட்டில் இப்படித்தான். நான் வைத்தது தான் சட்டம். கல்லூரிக் காலத்திலும் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருகிறேன் ஏற்ப்படுகள் செய்து வையுங்கள் என அம்மாவிடம் சொல்லி இருக்கிறேனே தவிர அழைத்து வரட்டுமா என்று அனுமதி கேட்டதில்லை. இப்படியான சூழலில் வளர்ந்தவனுக்கு மற்றவர்கள் சொன்ன காரணங்கள் சிரிப்பை வரவழைத்ததில் ஆச்சரியம் இல்லைதானே? 

நான் மேலே இருக்கும் அண்பர்கள் யாரையும் குற்றம் சொல்ல முற்படவில்லை. மாறாக நான் எத்தனை சுதந்திரத்தோடு வளர்க்கப்பட்டிருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்திய தருணம் அது என்பதைச் சொல்லவே ஆசைப்படுகிறேன். அந்தக்கணம் என் அம்மாவுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.பல நண்பர்களிடம் கேட்டு கடைசியாக நண்பர் மேவியின் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என முடிவானது. உடைமைகளை எடுத்துக் கொண்டு மாலுக்குக் கிளம்பினேன்.

- பயணிப்போம்




July 4, 2012

உக்கார்ந்து யோசிச்சது (04-07-12)

கவிஞர் சிபிச்செல்வன் மலைகள்.காம் எனும் இணைய இதழை நடத்தி வருகிறார். இதுவரைக்கும் ஐந்து இதழ்கள் வெளியாகி உள்ளன. தமிழின் மூத்த படைப்பாளிகளோடு புதிதாக எழுத வரும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளும் சேர்ந்து எனத் தரமான இணைய இதழாக வெளிவருகிறது மலைகள்.காம். சிபிச்செல்வனுக்கு வாழ்த்துகள். இதழை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்..

***************

சென்னை. நண்பரொருவரை சந்திப்பதற்காக சைதாப்பேட்டை ஆர்ச்சின் அருகே காத்துக் கொண்டிருந்தேன். நேரம் மதியம் மூன்றைத் தாண்டி விட்டிருந்தது. நல்ல பசி. நண்பர் வந்த பிறகு அவரோடு சேர்ந்துதான் ஹோட்டலுக்குப் போவதாகத் திட்டம். என்ன செய்வதெனத தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த இளநீர்க்கடை கண்ணில் பட்டது. நகர்ந்தேன். நாற்பது வயது மதிக்கக்கூடிய பெண்ணொருவர் அமர்ந்திருந்தார். முகம் கடு கடுவென இருந்தது.

இன்னா..

எளனி எவ்ளோக்கா..

ம்ம்ம்.. முப்பத்தஞ்சு ரூபா..

ரொம்பவே ஜாஸ்திதான். ஆனால் எனக்கோ கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. ஏதாவது குடித்தே ஆகவேண்டும் என்பது போன்ற நிலைமை.

சரிக்கா வெட்டுங்க..

தண்ணி மட்டும்தான் குடிக்க முடியும். அதுக்கப்புறம் காய வெட்டித் தர சொல்லக்கூடாது.. சரியா..

இது வேறா? சரிக்கா.. பரவாயில்ல.. வெட்டுங்க..

அந்த நேரத்துக்கு தாகம் படுத்திய பாட்டுக்கு இளநீர் அத்தனை அருமையாக இருந்தது. போன உயிர் மீண்டு வந்ததைப் போன்ற உணர்வு.

ரொம்ப நன்றிங்க அக்கா..

சொல்லி விட்டுப் பணத்தைக் கொடுத்தேன். அவர் என்னை விநோதமாகப் பார்த்தார்.

வெளியூரா... எந்தூரு..

ஆமாக்கா.. மதுரை. சும்மா நண்பர்களைப் பார்க்கலாம்னு வந்தேன்.

இரு என்று சைகை செய்தவர் இளனியை வெட்டித் தேங்காய் எடுத்துத் தந்தார். சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன். நில்லுப்பா என்று கூப்பிட்டவர் ஒரு பத்து ரூபாயை என்னிடம் திருப்பித் தந்தார். நான் புரியாமல் பார்த்தேன்.

இருபத்தஞ்சு ரூபா தான். வச்சுக்க..

அந்த அம்மாவின் முகத்தில் இப்போது சின்னதொரு சிரிப்பும் அமைதியும் இருந்தது. மீண்டும் ஒரு நன்றி சொல்லிக் கிளம்பினேன்.

***************

சென்னையில் இருக்கும் நண்பர் அவர். காமிக்ஸ் வாசிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர். கூட சில நண்பர்களை அழைத்துக் கொண்டு காமிக்ஸ் வேட்டைக்காக மதுரை வந்திருந்தவரை அவருடைய அறையில் போய் சந்தித்தேன். மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்த கச்சேரி இரவு பதினோரு மணி வரை தொடர்ந்து கொண்டே போனது. பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை.

அன்றைக்கு இரவு பனிரெண்டு மணிக்கு சென்னை திரும்பும் ரயிலில் நண்பருக்கு டிக்கட் புக் பண்ணி இருந்தது. எனவே கதை பேசி முடித்துக் கிளம்பும் சமயத்தில் பதினோரு மணிவாக்கில் இன்டர்காமில் ரிசப்சனுக்குக் கூப்பிட்டார்.

எனக்கு 12 மணிக்கு டிரெயின். நான் கெளம்பணும். பில் ரெடி பண்றீங்களா..

அதெல்லாம் முடியாது சார். இந்த நேரத்துல தான் எங்க ஹோட்டல்ல இன்னைக்கு நாளுக்கான அக்கவுண்ட்ஸ் எல்லாம் சரி பாப்போம். நீங்க 12 மணிக்கு மேல காலி பண்ணிக்கோங்க..

எங்களுக்கு அதிர்ச்சி. ஒரு வாடிக்கையாளரிடம் எப்படிப் பேசுவது என்கிற வரைமுறை இல்லையா? நான் இத்தனை மணிக்குத்தான் காலி செய்ய வேண்டும் என என்னைச் சொல்ல இவன் யார் என்று நண்பருக்கு பயங்கர கடுப்பு. அறையைக் காலி செய்து பூட்டிக் கொண்டு ரிசப்ஷனுக்குப் போனால் அங்கிருந்த அந்தப் பையன் அதையேதான் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான். தனக்கு ரயிலுக்கு நேரமாகி விட்டதாக நண்பர் சொன்னதை அவன் காதில் வாங்கிக் கொண்டதாகவேத் தெரியவில்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் எனக்குப் பொறுமை சுத்தமாகப் போய் விட்டது. நம் ஊருக்கு வந்திருக்கும் விருந்தாளியிடம் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா எனக் கத்த ஆரம்பித்தேன். நண்பரோ தனது விசிட்டிங் கார்டை எடுத்து மேஜை மேல் வைத்து நேரில் வந்து பணம் வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்து விட்டார். பிறகு ஹோட்டலின் மேனேஜர் வந்து புதுப்பையன் சார் அது இது என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இது சின்னதொரு எடுத்துக்காட்டே. இந்த ஒரு இடம் தான் என்றில்லை. எங்கே போனாலும் இன்றைக்கு வாடிக்கையாளரை யாரும் மதிப்பதே கிடையாது. சர்வீஸ் என்கிற ஒரு விசயமே அர்த்தம் இல்லாததாக மாறி விட்டது. நீ இல்லை என்றால் எனக்கு ஆயிரம் பேர் வருவார்கள் என்கிற மனநிலை தான் எல்லோருக்கும். யாரைக் குற்றம் சொல்வது?

***************

புனலும் மணலும் - .மாதவன் எழுதிய நாவல். தமிழும் மலையாளமும் கலந்த நாஞ்சில் வாடார மொழியில் எழுதப்பட்ட கதை. அங்குசாமி மூப்பர் ஆற்றங்கரையில் மணல் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்பவர். அவருடைய மனைவி தங்கம்மையின் மூத்த கணவனுக்குப் பிறந்த மகள் குரூபியாக இருக்கிறாள். அங்குசாமிக்கு எப்போதுமே அவளைப் பிடிப்பதில்லை. தங்கத்தின் மரணத்திற்குப் பிறகு மகளின் மீதான பொறுப்பு தன்னிடம் வந்து சேர தீராத துயரம் கொள்கிறார்.

சிறு வயதிலிருந்து அவரால் பாசத்துடன் வளர்க்கப்பட்ட தாமோதரன் தான் அந்தப் பெண்ணுக்கான ஒரே ஆறுதல். நாவலின் இறுதியில் மூப்பர், தாமோதரன், மூப்பரின் மகள் ஆகியோர் பிரயாணிக்கும் படகு சுழலில் சிக்கிக் கொள்கிறது. எல்லோரும் தப்பிப் பிழைத்திட மூப்பரின் மகள் மட்டும் காணாமல் போகிறாள். கரையேறிய மூப்பருக்குத் தன் காலை யாரோ நீருக்குள் பற்றியதும் உயிர் பயம் உந்தித் தள்ள தாம் அதை விலக்கி விட்டு மேலே வந்ததும் நினைவுக்கு வருவதோடு கதை முடிகிறது.

இன்றைய காலகட்டத்தோடு பெரிதும் பொருந்திப் போவதுதான் இந்தக் கதையின் பலமே. மனித மனத்தின் நிர்தாட்சான்யமும், தான் எதற்கும் இரங்கி விடக்கூடாது என்கிற மூப்பரின் அகந்தையும்தான் கதையின் அடிநாதம். மூப்பரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் மிக நுண்மையானது. ஒரு விஷயம் பிடிக்காமல் போனால் அது ஆயுசுக்கும் பிடிக்காமல் போகும் என்கிற அடிப்படையில் அவருக்குத் தன் மகளைப் பிடிக்காமலே போகிறது. உடல் நலமின்றி அவளுடைய ஆதரவில் தான் வாழ நேரும்போது தன்னையே வெறுக்கும் அளவுக்குத் தீவிரமாக இருக்கிறார் மூப்பர். இத்தனைக்கும் அவர் கெட்டவர் எல்லாம் கிடையாது. யாருமில்லாது வந்து நிற்கும் தாமோதரனைத் தன் மகன் போல வளர்க்கும் நல்ல உள்ளம் படைத்தவர் என நன்மைக்கும் தீமைக்குமான மெல்லியதொரு இடைவெளியில் மூப்பரின் மனம் இயங்குவது மிக அழகாக நாவலில் கையாளப் பட்டிருக்கிறது. கவிஞர் சுகுமாரன் எழுதியிருக்கும் அருமையான முன்னுரையுடன் காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளியாகி இருக்கும் புனலும் மணலும் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய நாவல்களில் ஒன்று.

***************

The Color Of Paradise - மஜீத் மஜிதி இயக்கிய திரைப்படம். இதுவும் ஒரு தந்தைக்கும் பிள்ளைக்குமான உறவைப் பேசும் படம்தான். சிறுவனான மொகமதுக்கு கண்பார்வை கிடையாது. மிகுந்த புத்தி கூர்மை உடைய, இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவன். அவனுடைய சகோதரிகளுக்கும் பாட்டிக்கும் அவனை ரொம்பவே பிடிக்கும். ஆனால் மறுமணம் செய்ய நினைக்கும் அவனது தந்தை ஹசீமுக்கோ பார்வையற்ற சிறுவன் தன் வாழ்க்கையில் பெரும் பாரமாக இருப்பானோ என்ற பயம். எனவே தனது மகனை ஒரு கண்பார்வையற்ற தச்சன் ஒருவரிடம் வேலைக்கு சேர்த்து விடுகிறான். பேரனைப் பிரிந்த துயரத்தில் பாட்டி இறந்து போகிறாள். இதை ஒரு கெட்ட சகுனமாக எண்ணிப் பெண் வீட்டார் ஹசீமின் திருமணத்தை நிப்பாட்டி விடுகிறார்கள்.

வேறு வழி இல்லாமல் தன் மகனை மீண்டும் வீட்டுக்கு ஹசீம் கூட்டி வரும் வழியில் மொகமது தவறி ஒரு காட்டாற்றில் விழுந்து விடுகிறான். அவனைக் காப்பாற்றுவதா வேண்டாமா எனத் தயங்கும் ஹசீம் மனம் மாறி தானும் ஆற்றுக்குள் குதிக்கிறான். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவரும் ஒரு ஓரமாகக் கரை சேருகிறார்கள். தன் மகன் இறந்து விட்டானோ என எண்ணித் துடிக்கும் ஹசீம் அவன் மீதானத் தன் அன்பை உணர மொகமதுவின் கைகள் அசையத் தொடங்குவதோடு படம் முடிகிறது.

பார்வையற்ற மொகமது இந்தப்படத்தில் சொல்லும் ஒரு வசனம் மிக முக்கியமானது. "எனது ஆசிரியர் சொல்வார்.. கடவுள் மிகுந்த கருணை மிக்கவர். உன் மீது அவருக்கு அளவில்லாத அன்பு என்று.. ஆனால் அது உண்மையில்லை. கடவுளுக்கு என் மீது அன்பு இருக்குமென்றால் ஏன் அவர் என் கண்களைப் பறித்தார்.." பதில் சொல்ல மாட்டாத பார்வையிழந்த தச்சன் அமைதியாக எழுந்து போகும் இந்த ஒற்றைக் காட்சிதான் படத்தின் அடிப்படை சாராம்சம்.

உடல் ஊனமுற்ற அல்லது மனம் பிறழ்ந்த குழந்தைகளைக் கொண்டிருக்கும் யாருக்கும் உண்டாகும் கேள்வியையும் மன உளைச்சலையும் பதிவு செய்திருக்கும் இப்படம் அதற்கான தீர்வு அன்பு ஒன்றுதான் என்பதையும் சொல்லிப் போகிறது. டத்தின் ஆரம்பம் முதலே மொகமது இயற்கையோடு தன் விரல்களால் பேசியபடி இருக்கிறான். படத்தின் இறுதியில் அவனுடைய அப்பா அன்பின் வலியை உணரும் தருணத்தில் மோகமத்தின் கைகள் பிரகாசிக்கத் தொடங்குகின்றன. அவனால் கடவுளோடு தொடர்பு கொள்ள முடிகிறது எனும்படியாக அமைக்கப்பட்டிருக்கும் இறுதிக்காட்சி அழகானதொரு கவிதை.

இரானிய இயக்குனர் மஜீத் மஜிதி பற்றிய நண்பர் சூர்யாவின் பதிவு இங்கே...

***************

சமீபமாக வாசித்ததில் பிடித்த கவிதை..

கதையின் காகம்

வெயில் வேகும் நிலத்தில்
பயணியொருவன்
விட்டுச்சென்ற
பானையின்
மிஞ்சிய அடிநீராய்
இருந்தேன்
வெகுநாட்களாக.
நிலமெங்கும் நீர்தேடி
தாகத்துடன்
ஒருநாள்
காகமும் வந்தது..
பானையின அடியில்
தன் அலகால் எட்டமுடியாத
என்னை
அன்பின்
கூழாங்கற்கள் கொண்டு
நிரப்பிப் பருகத் துணிந்தது
காகம்.
என் கடன் தீர்க்க
நானும் ஆரவாரித்துத் ததும்பினேன்..
என் உயிரின் வேகத்திலா
கூழாங்கல்லின் கனத்திலா
காகத்தின்
தாக தாபப் பரபரப்பிலா
தெரியவில்லை
பானை உடைந்தது
நான்
மீண்டும் கல்லாய் காய்ந்தேன்..

- ஷங்கர்ராமசுப்ரமணியன்

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

March 12, 2012

பெண்மை போற்றுவோம் - "என் விகடன்" பதிவு

(மகளிர் தினத்தை ஒட்டி போன வாரம் ஆனந்த விகடன் - என் விகடன் மதுரை பதிப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்..)

நான் எதற்கும் அஞ்சவில்லை. மாறாக, இதற்கெனவே நான் பிறந்ததாக உணர்கிறேன் - ஜோன் ஆஃப் ஆர்க்

என் வாழ்க்கை பெண்களால் ஆனது. சிறு வயது முதல் இன்று வரை பெண்களுடனேயே பெரும்பாலும் வளர்ந்துள்ளேன். பெண்களே எப்போதும் எனக்குப் பிடித்தமானவர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு பெண்ணின் பாதிப்பு என்னுடனே இருந்து வருகிறது. நான் என்று மட்டுமல்ல, நம் எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் பெரிய பாதிப்புகளை விட்டுச் செல்கிறார்கள். கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்ட அம்மா, வறுமையில் எனக்கான ஸ்கூல் ஃபீஸைக் கட்டிய மாட் மிஸ், எப்போதும் தோள் சாய்ந்து அழும் பால்ய சினேகிதி மீனாட்சி, வாழக் கற்றுத்தந்த தோழி சரோ.. எத்தனை எத்தனை பெண்கள். நான் இன்றிருக்கும் நானாய் இருப்பதில் இவர்கள் எல்லாருக்குமே பங்குண்டு.

உடைந்து போகும் தருணங்களில் எல்லாம் நான் சாய்ந்து கொள்ளும் தோள்களாகப் பெண்களே இருந்திருக்கிறார்கள். அது மாதிரியான சமயங்களில் நம்பிக்கை எனும் வார்த்தைக்கு அர்த்தமாக நான் அடையாளம் காணும் இரண்டு பெண்களைப் பற்றி இங்கே பேச ஆசைப்படுகிறேன். அதில் முதலாவதாக என்னுடைய மிக நெருங்கிய தோழியான சக்தி.

கடலூர் தான் சக்தியின் சொந்த ஊர். அவளை முதன்முதலில் அவள் அப்பா இறந்த வீட்டில்தான் பார்த்தேன். மின்சார வாரியத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சக்தியின் அப்பா திடீரென ஒரு இரவில் நெஞ்சு வலியில் இறந்து போனார். இரண்டு பெண் பிள்ளைகளில் சக்திதான் இளையவள். தெரிந்தவர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பக் கூட ஆளில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் குடும்பமே தவித்த நிலையில் வீட்டின் பொறுப்பை சக்தி ஏற்றுக் கொண்டாள். “எங்க அப்பாவுக்கு பையன் இல்லையேன்னு என்னைக்கும் குறை இருந்ததே இல்லை. நாந்தான் அவருக்கு பொண்ணு பையன் எல்லாமே..” நண்பர்களை உதவிக்கு அழைத்து நிலைமையைச் சொன்னாள். அந்த சங்கடமான நேரத்தில்தான் மற்றொரு நண்பர் மூலம் எனக்கும் அவளுக்குமான அறிமுகம் நடந்தது.

உறவினர்களுக்கு சொல்லியனுப்பவதில் ஆரம்பித்து கடைசி காரியம் வரை எல்லாவற்றையும் முன்னின்று அவளே செய்து முடித்தாள். எல்லாரையும் எதிர்த்துத் தன் அப்பாவுக்கு தானே கொள்ளி வைக்கும் தைரியமும் அவளுக்கு இருந்தது. காரியம் முடிந்து வந்தபோது உறவினர் யாரையும் காணவில்லை. ஆண்பிள்ளை இல்லாத வீட்டில் பொறுப்பு தங்கள் மீது வந்து விடுமோ என்கிற பயம். கலங்கி நின்ற அம்மாவுக்கு அப்போதும் ஆறுதலாக இருந்தது சக்திதான். அலைந்து திரிந்து அப்பாவின் வேலையை அக்காவுக்கு வாங்கிக் கொடுத்தாள். அடுத்ததாக லோன் வாங்கிக் கட்டிய வீட்டின் மீதான கடன் அவர்களைத் துரத்தியது. சக்தி பயப்படவில்லை. தமிழ்நாட்டின் தலைநகருக்கு வண்டி ஏறினாள். ஆறு மாத காலம் நாயாய் அலைந்து திரிய பேங்க் ஒன்றில் வேலை கிடைத்தது. கடுமையான உழைப்பு. இரண்டே வருடத்தில் வீட்டின் மீதான கடனை அடைத்தவள் அக்காவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தாள்.

இன்றைக்கு சக்தி சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி அம்மாவோடு நிம்மதியாக வாழ்கிறாள். புதுவீடு புகும் நிகழ்வன்று சக்தியின் அம்மா அழுதபடிக்கு சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது. “அவர் போனதோட என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன். ரொம்பப் பெருமையா இருக்குடி..”

எதிர்பாராத நிமிடமொன்றில் தோன்றும் தடைகளைப் புன்னகையோடு கடந்து செல்ல எனக்குக் கற்றுக்கொடுத்தவள் சக்திதான். இடைப்பட்ட காலத்தில் அவளுடைய எல்லா சுகதுக்கங்களிலும் உடனிருக்கும் ஆகச்சிறந்த தோழனாக நான் மாறியிருந்தேன். எப்போதும் அமைதியாக இருக்கும் சக்தி என்னோடு பேசும் நேரங்களில் மட்டும் இலகுவாக மனம் விட்டு சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த தோழி ஒருவர் அவளிடம் கேட்டிருக்கிறார்.

“ஏம்ப்பா.. அவந்தான் உன்னை நல்லாப் புரிஞ்சுக்கிட்டவனா இருக்கான்ல. அவனோட பேசும்போதுதான் நீயும் சந்தோசமா இருக்க. அப்புறம் ஏன் அவனக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது..?”

ஒரு நிமிடம் யோசித்தவள் மெதுவாகப் புன்னகைத்தபடி சொல்லி இருக்கிறாள்.

“எனக்கு எங்கப்பாவ ரொம்பப் பிடிக்கும். அதுக்காக நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? அவனும் எனக்கு அப்பா மாதிரித்தான்..”

ஒரு மனிதனுக்கு இதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்? நட்பு என்கிற இடத்தில் இருக்கும் ஒருவனைத் தன் அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும் அந்தப் பெண்ணின் அன்புக்கு கைமாறாக வாழ்வுக்கும் அவள் தோழனாய் இருப்பதைவிட நான் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?

சக்தியைப் போலவே நான் பார்த்து ஆச்சரியம் கொள்ளும் இன்னொரு மனுஷி ரம்யா அக்கா. இரண்டு வருடங்களுக்கு முன்பாக இணைய எழுத்துகளின் மூலமாக எனக்கு அறிமுகம் ஆனவர். விதி தன் மீது வீசிய கேலிகளை எல்லாம் நம்பிக்கை என்னும் ஆயுதம் கொண்டு சிரித்தபடி எதிர்கொண்ட அற்புதமானதொரு ஜீவன்.

அவருக்குக்கு சொந்த ஊர் ஹைதராபாத். படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை விடுமுறைக்கு உறவினர்கள் வீட்டுக்கு பாம்பே போயிருக்கிறார். அங்கே காபி போடலாமென்று பம்ப் ஸ்டவ்வைப் பற்ற வைக்கப் போய் அது வெடித்து உடம்பெல்லாம் தீக்காயம். முகம் மொத்தமாகக் கருகி விட்டது. நாற்பத்து ஆறு நாட்கள் மருத்துவமனையில் நரக வேதனைக்குப் பிறகு அக்கா இறந்து விட்டதாக அறிவித்து போஸ்ட்மார்ட்டத்துக்குக் கொண்டு போய் விட்டார்கள். ஆனால் அங்கே யாரோ ஒரு புண்ணியவான் முழங்காலில் லேசாக துடிப்பு இருப்பதைப் பார்த்துச் சொல்ல மறுபடி வார்டுக்குக் கொண்டு வந்து பிழைக்க வைத்தார்களாம். என்னுடைய போஸ்ட்மார்ட்டம் பேட்ஜ் நம்பர் பதிமூணு தெரியுமா என அடிக்கடி ரம்யா சிரித்தபடி சொல்வது உண்டு.

உயிர் பிழைத்தாயிற்று. ஆனால் இனி? தன்னால் நார்மலான வாழ்க்கை வாழ முடியாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முகத்தில் சர்ஜரி செய்ய வேண்டும். அதற்கு எக்கச்சக்கமாகப் பணம் வேண்டும். உறவினர்களின் உதவியை வேண்டாம் என மறுதலித்து விட்டு ரம்யாக்கா சென்னை வந்து சேர்ந்தார். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் புரோகிராமராக வேலை. கொஞ்சம் கொஞ்சமாக உழைப்பால் உயர்ந்து இன்றைக்கு அந்தக் கம்பெனிக்கு ரம்யாதான் ப்ராஜெக்ட் மேனேஜர். தன் மீது அக்கறை கொண்ட கலைச்செல்வி, சுரேஷ் ஆகியோரோடு ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். “நாம சந்தோசமா இருக்கணும். நம்மளச் சுத்தி இருக்குற மக்கள சந்தோசமா வச்சுக்கணும். முடிஞ்ச அளவுக்கு இல்லாதவங்களுக்கு உதவணும். போதாதா” என்கிற ரம்யா அக்காவின் எதிர்காலக் கனவு “ஆதரவற்ற மக்களுக்காக ஒரு இல்லம் அமைக்க வேண்டும்..”

எழுத்தின் மூலமாக மட்டுமே அறிந்த ரம்யாக்காவை சந்திக்க வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை. அவரைச் சந்திப்பதற்காக சென்னை போயிருந்தேன். ஆனால் அவர் வீட்டுக்குள் நுழையும்போது எனக்கு அப்படி ஒரு காய்ச்சல். இரண்டு நாட்களாகக் கண்களைத் திறக்கக் கூட முடியாமல் படுத்துக் கிடந்தேன். அந்த இரண்டு நாட்களும் என்னருகிலேயே இருந்து என் அம்மா இருந்திருந்தால் எப்படி என்னைப் பார்த்துக் கொண்டிருப்பாரோ அப்படிப் பார்த்துக் கொண்டார் அக்கா. ஒரு கணத்தில் அந்த அன்பின் வேகம் தாங்காமல் பொல பொலவென அழுதுவிட்டேன். ஆதரவாய்த் தோள் சாய்த்துக் கொண்டவர் அன்பாகச் சொனார்..”இதுக்கு எல்லாமா அழுவாங்க.. அக்கா அக்கான்னு வாய் நிறையக் கூப்படுறல.. உனக்காக இது கூடச் செய்யலைன்னா நான் என்னப்பா மனுஷி..” அந்த அன்புதான் ரம்யாக்கா. ஒவ்வொரு பெண்ணுக்கு உள்ளும் தாய்மை உண்டு என்பதை நான் உணர்ந்த கணம் அது. அன்றைய தினத்தையும் அவர் அன்பையும் என்னால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாது.

எல்லாக் கணங்களிலும் அன்பு நம்பிக்கை என ஏதோவொரு பெண் நம் நினைவுகளில் இடறிப் போகிறார். சமூகம் தனக்கான இடத்தை வழங்க மறுத்தாலும் தன் தேடலைத் தொடர்ந்தபடி உற்சாகமாகத் தன்னிருப்பை உறுதி செய்து கொள்ள முனையும் பெண்களின் போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றங்களைப் பெண்கள் உணரத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில் பாரதியின் வரிகளை நினைவு கூறுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். “மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா..” வாழ்க்கையின் எல்லாமுமாக இருக்கும் தன்னம்பிக்கைப் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

February 26, 2012

விக்கிரமங்கலம் - பசுமை நடை


மதுரையைச் சுற்றி இருக்கும் சமணப் படுகைகளுக்குப் போய் வரும் பசுமை நடை நிகழ்வுக்காக நண்பர்களோடு விக்கிரமங்கலம் போயிருந்தேன். ஞாயிறு அன்று முகூர்த்த தினமாக இருந்தபோதும் காலை ஏழு மணி போல நூற்றுக்கும் குறையாத நண்பர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழக வாசலில் குழுமி இருந்தார்கள். தொல்பொருள் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த சாந்தலிங்கம் அய்யா உடன்வர அங்கிருந்து கிளம்பி செக்கானூரணி, கொங்கர் புளியங்குளம் வழியாக விக்கிரமங்கலம் நோக்கி பயணித்தோம்.

ஊருக்குள் நுழைவதற்கு சற்று முன்பாகவே வந்து விடுகிறது சமணர் மலை. மலையின் பெரும்பாலான பகுதியை கிரனைட்காரர்கள் வெடி வைத்துத் தகர்த்திருக்கிறார்கள் என்பதால் ஆங்காங்கே பாறைகள் பெயர்ந்து மூளியாக இருக்கிறது. சற்றே உள்வாங்கும் காட்டுப் பகுதிக்குள் நடந்து போனால் சமணர் குகைகளைப் பார்க்க முடிகிறது. தரையிலிருந்து இருபதடி உயரத்தில் மலையில் இயற்கையாகவே அமைந்த இரண்டு குகைகள். அதைப் பார்த்துவிட்டு எதிர்த் திசையில் நடந்தால் நாம் வந்து சேரும் இடம் முதலைக்குளம் மலை. மிகுந்த சிரமங்களோடு மலையேறி வந்தால் இங்கும் அதிக எண்ணிக்கையிலான சமணப்படுகைகள் காணக்கிடைக்கின்றன.



குகைகளின் வாசலில் அமர்ந்து சாந்தலிங்கம் அய்யா இந்த வரலாற்று சிறப்பு மிக்க தலத்தின் முக்கியத்துவங்கள் குறித்துப் பேசினார்.

நாம் முதலில் போன இடத்தின் பெயர் ராக்காச்சிப் புடவு. இங்கே இரண்டு குகைகள் இருக்கின்றன. ஒரு குகையின் வாசலில்வேற்றாம்பூர் திருமனை செய்தவர்என்கிற பிராம்மி எழுத்துகளைக் காண முடியும். இங்கே வேற்றாம்பூர் எனும் ஊர் குறிப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மதுரையைச் சுற்றி வேற்றாம்பூர் என எந்த ஊரும் இல்லை. ஆகவே இது சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனத்துக்கு அருகினில் இருக்கும் வேற்றாம்பூர் எனக் கொள்ளலாம். திருமனை அல்லது எண்மனை என்பது அறிவார்ந்த மக்கள் நிரம்பிய சபை எனப் பொருள்படும். ஆக, வேற்றாம்பூர் என்கிற கிராமத்தில் வாழ்ந்த உயர்ந்த மக்கள் செய்து கொடுத்த கற்படுக்கை என அர்த்தமாகிறது.



இரண்டாவதாக நாம் இப்போது நின்றிருப்பது முதலைக்குளம் மலை. இந்தப் பகுதியை பொதுமக்கள் பஞ்சபாண்டவர் குகை என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் எங்கெல்லாம் சமணப்படுகைகள் இருக்கிறதோ அந்த இடங்கள் எல்லாமே பொதுவாக பஞ்சபாண்டவர் குகை எனச் சொல்லப்படுவதன் பின்னாலிருக்கும் உளவியல் மிக முக்கியமானது. இந்தப்பகுதியில் கிட்டத்தட்ட பத்து கல்வெட்டுகள் வரை கிடைக்கின்றன. அவற்றில் எல்லாம் குவிரன் எனும் வார்த்தை பொதுவாக காணக்கிடைக்கிறது. இது குபேரன் எனும் வடமொழிச் சொல்லின் மருவாக இருக்கக்கூடும். அதே போல ஒரு குகையின் வாயிலில்எண்வூர் செழிவின் ஆதன்எனும் வாசகம் இருக்கிறது. இதில் சொல்லப்பட்டிருக்கும் எண்வூர் எதுவெனத் தெரியவில்லை. செழிவின் என்பது செழியன் என்பதாகவும் ஆதன் என்பது செய்தவனின் பெயராகவும் இருக்கலாம். இன்னொரு படுகையின் மீது அந்தை பிகன் மகன் ஆதன் என்று பொறிக்கப்பட்டுள்ளது. பிகன் என்கிற தந்தையின் மகனான ஆதன் என்று இதற்குப் பொருள்.

வரலாற்று ரீதியாக இந்தக் குகைகள் மிக முக்கியமானவை. கீழக்குயில்குடி, யானைமலை போன்ற பகுதிகளில் இருக்கும் குகைகள் கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு கட்டப்பட்டவை. ஆனால் இந்தப் படுகைகளோ 2300 வருடங்களுக்கு முந்தைவை. கி.மு காலத்தைச் சேர்ந்தவை. இங்கு வாழ்ந்த சமணர்கள் மீண்டும் இங்கே திரும்பி வந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை. இன்னொரு முக்கியமான தகவல், இந்தக் குகைகள் பண்டைய காலத்தில் நடைபெற்ற வணிகத்துக்கு முக்கிய சாட்சியாக இருக்கின்றன என்பதாகும்.


புத்தம் பெருவணிகர்கள் மற்றும் கடல் சார்ந்த வணிகத்தைப் பெரிதும் ஆதரித்தது. எனவேதான் காஞ்சி போன்ற இடங்களில் புத்தவிகாரைகள் தோன்றின. ஆனால் சமணர்களை உள்ளூர் வணிகர்கள் ஆதரித்தனர். கேரளத்துக்கும் (சேர நாடு) மதுரைக்கும் (பாண்டிய நாடு) இருந்த வணிகத் தொடர்பை இந்த சமணக் குகைகளின் புவியியல் அமைப்பு தெளிவாகச் சொல்லும். இடுக்கி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட அகஸ்டஸ் சீசரின் முகம் பொறித்த காசுகள் போலவே கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையத்திலும் கிடைத்து இருக்கின்றன. அதே வழியில் தொடர்ந்து வந்தால் சின்னமனூர், வீரபாண்டி ஆகிய ஊர்களில் சமண கோயில்கள் இருப்பதை நாம் பார்க்கலாம். இதன் தொடர்ச்சியாகவே விக்கிரமங்கலம், கொங்கர் புளியங்குளம் என்று சமணர்கள் வாழ்ந்து வந்திருக்க வேண்டும். ஆக இந்த சமணக்குகைகள் மிக முக்கியமான வரலாற்று ஆவணங்கள்.

பிறகு சமணம் குறித்த நண்பர்களின் கேள்விகளுக்கு அய்யா பதில் சொன்னார். அதில் கழுவேற்றம் பற்றி அவர் சொன்னது மிக முக்கியமான தகவல். எட்டாம் நூற்றாண்டு போல எண்ணாயிரம் சமணர்கள் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள். இதற்கு கல்வெட்டிலோ, இலக்கியத்திலோ எந்த ஆதாரமும் இல்லை. நான்கு நூற்றாண்டுகள் கழித்துத்தான் பெரியபுராணத்தில் இது பதிவு செய்யப்படுகிறது. மேலும் தக்கையாகப்பரணி எனும் ஒரு நூலில் மட்டுமே இது குறித்தான விவரங்கள் காணக்கிடைக்கின்றன. மேலும் சில நூற்றாண்டுகள் கழித்து ஆவுடையார் கோயில் போன்ற சில இடங்களில் இது குறித்தான ஓவியங்கள் வனையப்பட்டன. சமணர்கள் சைவத்தின் வருகையால் பாதிக்கப்பட்டது உண்மை ஆனால் கழுவேற்றம் நடந்தது என்பதை நம்மால் தீர்க்கமாகச் சொல்ல முடியாது.

தனிப்பட்ட முறையில் ஆசிவகம் பற்றியும் களப்பிரர் பற்றியும் சாந்தலிங்கம் அய்யாவிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். வெகு சுவாரசியமானத் தகவல்களைச் சொன்னார். விடைபெறும்போது மதுரையின் பாண்டி சாமி குறித்து அவர் சொன்னதுதான் அட்டகாசம். தமிழின் காவல் தெய்வங்களில் பாண்டி முனி என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஒன்று அது புத்தசாமி அல்லது சமணர்களின் அருகன். அவருக்குத்தான் மீசையை ஒட்டி பாண்டியாக்கி விட்டர்கள் என்றார். ஒருகணம் நெஞ்சடைத்ததற்கு எனது பெயரும் கூடக் காரணமாக இருக்கலாம். (பாண்டி சாமிக்கு வேண்டிக் கொண்டு பிறந்ததாலே தான் நான் பாண்டியன் ஆனேன்..)

பசுமை நடை முடிந்து மலையில் இருந்து இறங்கிய பின்பு நண்பர்கள் அனைவருக்கும் அருமையான காலை உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு கட்டு கட்டி விட்டுக் கிளம்பினோம்.

மிகுந்த சிரமங்களுக்கு இடையேயும் தொடர்ச்சியான தங்களின் முயற்சிகளின் மூலம் இந்த பசுமை நடை நிகழ்வினை அற்புதமாக நடத்திக் கொண்டிருக்கும் நண்பர் .முத்துகிருஷ்ணனுக்கும் அவரது குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

January 6, 2012

உக்கார்ந்து யோசிச்சது (06-01-12)

இரண்டு நாட்களுக்கு முன்பாக பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெரியவர் என்னைப் பார்க்க வந்திருந்தார்.

“வணக்கம் தம்பி..”

“வணக்கம் சார்.. சொல்லுங்க..”

“தம்பி.. எம்பொண்ணு இந்த வருசத்தோட +2 முடிக்கப்போகுது. என்ஜினியரிங் படிக்கணும்னு சொல்றா. அதைக் கொண்டு போய் ********* காலேஜுல சேர்க்கலாம்னு இருக்கேன். அதான் காலேஜு எப்படி இருக்கும்னு உங்களக் கேக்கலாம்னு..”

“நல்ல காலேஜ்தாங்க.. படிச்சு முடிக்கும்போது வேலை எல்லாம் வாங்கிக் கொடுத்துருவாங்க.. ஆனா பிள்ளைங்கள அவங்க ஒரு இயந்திரம் மாதிரித்தான் நடத்துவாங்க. ரொம்பப் படுத்துவாங்க. அத்தோட எக்கச்சக்க கண்டிப்புகள் வேற.. அவங்க சேர்மேன் பப்ளிக் மீட்டிங்கலயே நான் என் கல்லூரிய ஜெயில் மாதிரித்தான் நடத்துவேன்னு சொல்லுறவரு.. அதை மட்டும் யோசிச்சுக்கங்க..”

“ஆகா.. அப்படியா.. அங்கதான் தம்பி நம்ம பிள்ளைய சேர்க்கணும்..”

எனக்கு பக்கென்றது. “என்னங்க சொல்றீங்க..”

“அட ஆமாப்பா.. அப்புறம் பொம்பளப் பிள்ளைய எப்படி கட்டுப்பெட்டியா வளர்க்குறது.. நாம பாட்டுக்கு ஃப்ரீயா வுடப்போய் அதுக நம்ம தலைல மண்ண அள்ளிப் போட்டுட்டா.. விடுங்க.. வேலை வாங்கித் தர்றாங்கல.. போதும்.. சந்தோசமா அங்கேயே கொண்டு போய் சேர்த்துடுறேன்..”

பிள்ளைகளின் உணர்வுகள் பற்றியோ அவர்கள் நல்ல மனிதர்களாக வருவது எல்லாமோ அவசியமில்லை கட்டுப்பாடாக இருந்து வேலை கிடைத்தால் போதும் என்கிற மனநிலையில் பெற்றோர்கள் இருக்கும்வரை நமது கல்விமுறையோ கல்லூரிகளோ மாறுவதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது என்றே தோன்றுகிறது.

***************

இதுவும் மதுரையில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பற்றியதுதான். டிப்ளமோவில் 95% வாங்கிய மாணவி அவர். அரசு உதவி பெற்ற ஒரு பொறியியல் கல்லூரியில் அவருக்கு சீட் கிடைத்து இருக்கிறது. அந்த நேரத்தில் இந்தக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தங்கள் கல்லூரியில் சேர்ந்து கொள்ளும்படியாகவும் நன்றாகப் படிக்கிறபடியால் கல்லூரிக் கட்டணம் எதுவும் தர வேண்டியதில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல மனது என்று நம்பி அந்தப் பெண்ணும் அங்கேயே சேர்ந்து இருக்கிறார். ஒரு செமஸ்டர் முடிந்து பரிட்சை தொடங்கும் நேரம். ஹால் டிக்கட் வாங்கப் போன பெண்ணிடம் பெரிய தொகை ஒன்றைச் சொல்லி அதைக் கட்டினால்தான் பரிட்சை எழுத முடியும் என நிர்வாகம் சொல்ல அந்தப் பெண் திகைத்துப் போயிருக்கிறார். ஏழ்மையில் வாடும் தன்னால் அந்தப் பணத்தைக் கட்ட முடியாது எனச் சொல்லி கல்லூரியில் இருந்தே விலகி விட்டார். அவருடைய மதிப்பெண்ணைக் கொண்டு மீண்டும் எங்காவது நல்ல கல்லூரியில் சேர முடியும்தான். ஆனால் வீணாய்ப் போன இந்த ஒரு வருடம்? மனிதர்களின் பணத்தாசைக்கு அளவே கிடையாதா என்று நொந்து கொள்வதைத் தவிர நாம் என்ன செய்ய முடியும்.

***************

இந்தப் புது வருடம் எனக்கு நல்ல படியாகவே பிறந்து இருக்கிறது. வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது கதையும் தேர்வாகி இருக்கிறது. போன வருட இறுதியில், அச்சில் முதன்முதலாக என் எழுத்தை நான் பார்த்தது, மாதவ் அண்ணனின் “கிளிஞ்சல்கள் பறக்கின்றன” மற்றும் ”பெருவெளிச் சலனங்கள்” தொகுப்புகளின் வாயிலாகத்தான். இப்போது, மீண்டும் ஒரு முறை, வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில், என் கதையைத் தெரிவு செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாகப் பதிவர்களை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வம்சி பதிப்பகத்துக்கும் மாதவ் அண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் பெரிதும் மதிக்கும் என் சக பதிவர்களான ராகவன், கிரிதரன், போகன், ஸ்ரீதர், பாலாசி, ஹேமா, லதாமகன் (மத்தவங்க பேர் சொல்லலைன்னு கோபிச்சுக்காதீங்கப்பா) மற்றும் நான் வலையுலகில் எழுதக் காரணமான அதிஷா ஆகியோரோடு இணைந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதில் கூடுதல் மகிழ்ச்சி. யதார்த்தம் என்பதைத் தாண்டி வேறெதையும் பெரிதாகப் பேசாத எனது கதை நடுவர்களுக்குப் பிடித்ததில் எனக்கே சற்று ஆச்சரியம்தான். தேர்ந்தெடுத்த தமிழ்நதி, பிரபஞ்சன் மற்றும் நாஞ்சில் நாடன் ஆகியோருக்கும் என் நன்றிகள். வெற்றி பெற்ற நண்பர்கள், போட்டியில் பங்கு கொண்ட மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

***************

மதுரேய்…

மதுரை மீது தீராக் காதல்கொண்ட ஒருவரின் வலைப்பதிவுகள். மதுரையின் சித்திரவீதிகள் பற்றிய பதிவு ஆகட்டும், ‘பஞ்சபாண்டவ மலையில் பசுமைநடைக்குறிப்புகள்’ எனும் பதிவாகட்டும், ‘அரிட்டாபட்டி மலை ஏன் பாதுக்காக்கப்பட வேண்டும்?’ என்கிற பதிவாகட்டும் அனைத்திலும் வாசகனோடு நேரடியாக உரையாடுவதைப் போன்ற வசீகர மொழிநடை!

- ஆனந்த விகடன், 11.01.12, வரவேற்பறை பகுதி


நண்பர் மதுரை வாசகனின் வலைப்பதிவு பற்றிய அறிமுகம் இந்த வாரம் விகடனில் வெளியாகி இருக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..:-))

****************

போன வாரம் கல்லூரி வேலையாக திருவண்ணாமலை போயிருந்தபோது வம்சி பதிப்பகத்துக்கும் ஒரு விசிட் போயிருந்தேன். அவர்களின் புத்தகக் கிடங்கின் உள்ளே போய்த் துலாவியதில் எளிதில் கிடைக்காத நிறைய நல்ல புத்தகங்கள் கிடைத்தன. எம்.ஜி.சுரேஷ் மற்றும் தமிழவனின் நாவல்கள், பிரேம்-ரமேஷின் கவிதைத் தொகுப்புகள், எஸ்.ஷங்கரநாராயணனின் சிறுகதைத் தொகுப்புகள். ஜி கே எழுதிய மர்ம நாவல் என்கிற தமிழவனின் நாவலை வாசித்து முடித்திருக்கிறேன். அரசர் காலத்தில் நடக்கும் கதையின் வழியே ஈழம் சார்ந்த சமகாலப் பிரச்சினைகளையும் மதம் மனிதனின் மேல் செலுத்தும் வன்முறையையும் மனிதமனம் கொள்ளும் விகாரங்களையும் விரிவாகப் பேசும் நாவல். சுவாரசியத்துக்கும் குறைவில்லை. முடிந்தால் தமிழவனுடைய மற்ற நாவல்களையும் வாசிக்க வேண்டும். நண்பர்கள் யாரேனும் அவருடைய புத்தகங்களை வைத்திருந்தால் கொடுத்து உதவுங்கள் மக்களே...

***************

சமீபமாக வாசித்ததில் பிடித்தது..

இன்னும் தாதி கழுவாத

இன்னும்
தாதி கழுவாத
இப்பொழுதுதான் பிறந்த குழந்தையின் -
பழைய சட்டை என்று ஏதும் இல்லை
பழைய வீடு என்றும் ஏதும் இல்லை
மெல்லத் திறக்கும் கண்களால்
எந்த உலகை
புதுசாக்க வந்தாய், செல்லக்குட்டி, அதை
எப்படி ஆக்குகிறாய், என் தங்கக்குட்டி

- தேவதச்சன் (கடைசி டினோசர் தொகுப்பிலிருந்து)

**************

கொலவெறியோடு அநிருத் காணாமல் போய்விடுவார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அந்த எண்ணம் தவறென்று நிரூபித்து இருக்கிறது மூன்று. போ நீ போ, சொல்லு நீ ஐ லவ் யூ, கண்ணழகானு எல்லாப் பாடல்களிலும் மனிதர் பிரித்து மேய்ந்திருக்கிறார். குறிப்பாக "A Life Full of Love" என்கிற தீம் ம்யூசிக் சான்சே இல்லை. மனிதர் தொடர்ச்சியாக நல்ல பாடல்களைத் தர வாழ்த்துகள். என்னுடைய லிஸ்டில் இந்த வார டாப் ஐந்து பாடல்கள்..

நண்பன் - என் ஃபிரண்டப் போல யாரு
மூணு - போ நீ போ
வேட்டை - தையத் தக்கா
மயக்கம் என்ன - பிறை தேடும்
STR - Love Anthem

***************

முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரே ஒரு மொக்கை..

வாழ்க்கையின் மிக முக்கியமான ஏழு படிநிலைகள் என்னன்னா

-> படிப்பு
-> விளையாட்டு
-> பொழுதுபோக்கு
-> காதல்
->
->
-> பாஸு.. அம்புட்டுத்தான்.. மீதி எங்கன்னு தேடுறீங்களா.. அதான் காதல் வந்தா மத்தது எல்லாம் நாசமாப் போயிருமே? அப்புறம் எப்படி..

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))

December 19, 2011

உக்கார்ந்து யோசிச்சது (19-12-11)

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நானெழுதும் “உக்கார்ந்து யோசிச்சது” இது. கடைசியாக இதனை எழுதியது மார்ச் 19 - மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கும் இன்றைக்கும் 19 என்பதொரு சின்ன ஆச்சரியம். கடுமையான வேலைப்பளு மற்றும் வலசை இதழுக்கான வேலைகள் என ஓடிக் கொண்டிருந்ததில் வலைப்பக்கத்தில் எழுதுவது வெகுவாகக் குறைந்து போய் விட்டது. பஸ்ஸில் வம்பளந்து கொண்டிருந்ததும் இன்னொரு காரணம். நல்ல வேளையாக இப்போது பஸ்ஸை இழுத்து மூடி விட்டார்கள். எனவே, என்னை நானே திருத்திக் கொண்டு இனித் தொடர்ச்சியாக எழுதும் எண்ணம். (நீ எழுதலைன்னு யாருடா அழுதான்னு சொல்லும் மக்களுக்கு கண்டிப்பாக கும்பிபாகம்தான்). நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் என் அனுபவங்கள் சார்ந்து தொடரொன்று எழுதவும் ஆசை இருக்கிறது. பார்க்கலாம்.

***************

நேற்று ஈரோட்டில் பதிவர் சங்கமம் இனிதே நடந்து முடிந்தது. ஒவ்வொரு வருடமும் எழுத்தின் மூலம் மட்டுமே நாம் அறிந்த நண்பர்களை நேரடியாய்ச் சந்தித்துப் பேசி அளவளாவும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் சங்கமம் அற்புதமான விசயம். இந்த வருடம் இன்னுமொரு சிறப்பாக பதிவுலகில் இயங்கி வரும் மக்களில் பதினைந்து நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவித்தது ஈரோட்டு நண்பர்களின் நல்ல மனதுக்கு எடுத்துக்காட்டு. வழக்கம்போல விருந்தோம்பலும் உணவு ஏற்பாடுகளும் அட்டகாசம் என களைகட்டியது. என்னை அவர்களில் ஒருவன் என உணரச்செய்யும் ஈரோடு தமிழ்ப்பதிவர் குழுமத்திற்கு எப்போதுமிருக்கும் எனதன்பும், வாழ்த்துகளும், நன்றியும்.

**************

ஆதி - பரிசல் - யுடான்ஸ் இணிந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது. பதிவுலக மக்களை ஊக்குவிக்கத் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் சவால் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் நம் நண்பர்களுக்கும், வெற்றி பெற்ற சக பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

***************

அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை வாசித்தேன். அமெரிக்காவில் அவர் தங்கியிருந்த சில மாதங்களின் அனுபவத்தை புனைவு கலந்து தந்திருக்கிறார். கிட்டத்தட்ட பயணக்கட்டுரை வடிவத்தில் வந்திருக்கக் கூடிய விசயத்தைப் புனைவாக மாற்றுகிற இடத்தில் ஜெயிக்கிறார் மனிதர். அலட்டிக்கொள்ளாத வெகு சாதாரணமான மொழி. சற்றே நான் லீனியராக சொல்லப்படும் அத்தியாயங்கள். வாசிக்கும்போது பெரிதாக ஏதும் தாக்கமில்லை. ஆனால் கடைசி அத்தியாயத்தில் அனைவரிடம் இருந்தும் அவர் விடைபெறும் காட்சியில் லேசாக எனக்கும் பாரமாக இருந்தபோதுதான் நானும் அவரோடு பயணித்தபடியே இருந்ததையும் நாவல் என்மீது ஏற்படுத்தி இருந்த பாதிப்பையும் உணர முடிந்தது. மாஸ்டர்ஸ்..:-))

***************

பாலாவின் அடுத்த படம் எரிதணல் என்பதாகச் சொல்கிறார்கள். 1930களில் ஆனைமலைத் தேயிலைத் தோட்டங்களில் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்த கூலித் தொழிலாளர்களின் கதை என்பதாகக் கேள்வி. இது உண்மையானால் கண்டிப்பாக அது பி.ஹெச்.டேனியலின் எரியும் பனிக்காடு நாவலின் அடிப்படையில் எடுக்கப்படும் படமாகத்தான் இருக்கும். ஏழாம் உலகம், நெடுங்குருதி (திருடர்களின் கிராமம்) எனத் தொடர்ச்சியாக நாவல்களைப் படமாக்கத் துணியும் பாலாவுக்கு வாழ்த்துகள்.

***************

யுவனுக்கு அவ்வளவாக நேரம் சரியில்லை என நினைக்கிறேன். கழுகு படத்தில் அசத்தியவர் ராஜபாட்டையிலும் வேட்டையில் பெரிதாகக் கோட்டை விட்டிருக்கிறார். பாடல்கள் எனக்கு அத்தனை பிடிக்கவில்லை. அடுத்த வாரம் மூன்று மற்றும் நண்பன் பாடல்கள் வெளியாக இருக்கின்றன. ஏழாம் அறிவில் சொதப்பிய ஹாரிஸ் என்ன செய்கிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம். என்னுடைய இந்த வார டாப் - 5 பாடல்கள்..

* ஹே அனாமிக்கா - மௌனகுரு
* பப்பப்பா பாப்பப்பா - வேட்டை
* பாதகத்தி - கழுகு
* எந்த உலகில் - 18 வயசு
* பொடிப்பையன் போலவே - ராஜபாட்டை

***************

நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக சாரதா ராஜன்ஸ் ஹோட்டலுக்குப் போயிருந்தேன். அணிந்திருந்தது கறுப்பு நிற வட்டக்கழுத்து தேநீர்ச்சட்டையும் (அதான்யா ரவுண்டு நெக்கு டி-ஷர்ட்) வெளிர்நீல நிற ஜீன்சும். அவரோடு பேசிவிட்டு வெளியே வரும் வழியில் நான்கைந்து இளைஞர்கள், இருபது இருபத்து இரண்டு வயதுக்குள் இருப்பவர்கள், வழியை மறித்து நின்றிருந்தார்கள். விலகிக் கொள்ளும்படி சொல்லிவிட்டுத் தாண்டி வருகையில் அவர்களில் ஒருவன் சொன்னது காதில் கேட்டது.

எப்படிப் போகுது பாரு.. மனசுக்குள்ள அடிதடி சத்யராஜ்னு நினைப்பு..

அடப்பாவிகளா... நினைச்ச மாதிரி உடுத்தக்கூட விடமாட்டீங்களா? நானும் யூத்துதான்யா.. நம்புங்கப்பா..:-)))

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ச்டு மீட் பண்ணுவோம்..:-)))

November 1, 2011

கோணங்கி

ஒரு எழுத்தாளனுடைய வேர்கள் அவன் வாழும் மண்ணில் இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் அவன் எழுதித் தீர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. மாறாக தான் வசிக்கும் கிராமத்தின் எல்லையில் இருக்கும் மலையை அவன் பார்த்தபடியே இருக்கிறான். அம்மலை அவனுக்குள் எப்போதும் வளர்ந்தபடி உள்ளது. தான் பார்த்துணர்ந்த மலையின் சிறு துகள்களை காற்றில் அலைந்தபடி இருக்கும் அதன் வாசனைகளை அந்த எழுத்தாளன் எழுதினாலே போதுமானது.

- கோணங்கி

***************

சங்க காலப் பாடல்களில் மட்டுமே நீங்கள் அப்படி ஒரு கதாப்பாத்திரத்தைப் பற்றிக் கேள்விப்பட முடியும். யாதும் தனது ஊரே என்றபடி சுற்றியலைந்து பாடித் திரியும் ஒரு பாணன் - நாம் வாழும் இந்தக் காலகட்டத்திலும் அப்படி ஒரு மனிதன் இருக்க முடியும எனச் சொன்னால் நம்ப இயலுமா? ஆனால் அது மாதிரியானதொரு மனிதர்தான் கோணங்கி. சிறுபத்திரிக்கை என்னும் விஷயத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள் அனைவருக்கும் இன்னும் மீதமிருக்கும் ஒரே நம்பிக்கை அவர்தான்.

இப்போது இந்த இடத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். இங்கே சுவற்றில் ஒரு மரப்பல்லி பறந்து திரியும் தட்டானைப் பிடிக்கக் காத்திருக்கிறது. இதைக் கூட ஒரு புனைவாகப் பார்க்கும் மனிதர்தான் கோணங்கி. அவரைப் பொறுத்தவரை எல்லாமே புனைவுதான். இந்த மொத்த உலகையுமே அவர் ஒரு புனைவாகவே பார்க்கிறார். அந்தப் புனைவில் நீங்கள், நான், அவர் காணும் மனிதர்கள் தொடங்கி உயிரற்ற பொருட்கள் வரை.. ஏன்.. தன்னையும் கூட ஒரு புனைவாகவே பார்க்கக் கூடியவர்.

(நண்பர் திருச்செந்தாழையுடனான உரையாடலில் இருந்து)

***************

சாத்தூரில் மாது அண்ணன் வீட்டின் மொட்டை மாடியில்தான் நான் முதல் முதலாகக் கோணங்கியைச் சந்தித்தது. ஒரு வாசகர் என்கிற முறையிலே வெகு சம்பிரதாயமான சந்திப்பாக அது இருந்து. அதன் பிறகான சில நாட்களுக்குப் பின்பு நண்பர் சந்துரு காரைக்குடிக்கு வரும்படி நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது கோணங்கியை மதுரையில் இருந்து காரைக்குடிக்கு அழைத்துப் போகும் பொறுப்பு என்னை வந்தடைந்தது. தன்னுடைய எழுத்து என்னவாக இருக்கிறது என்பது பற்றியும் தன் பயணங்கள் பற்றியும் அந்த இரண்டு மணி நேரமும் கோணங்கி உரையாடியபடியே வந்தார். அவரை எனக்கு வெகு நெருக்கமானவராக மாற்றியது அந்தப்பயணம்தான்.

காரைக்குடியில் நாங்கள் மொத்தம் ஆறு பேர் ஒன்று கூடினோம். சந்துரு, அழகுராஜா, நேசன், ஸ்ரீ, நான் மற்றும் கோணங்கி. எங்கு போவதென்ற வெகு நீண்ட குழப்பத்துக்குப் பின் அனைவரும் திருமயம் கோட்டையைச் சுற்றிப் பார்க்கலாம் எனக் கிளம்பினோம். ஆனால் வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே ஒரு தெப்பக்குளத்தின் அருகில் நிற்க வேண்டியதானது. இளவயதில் நண்பர்களோடு தான் ஓடி விளையாடிய இடம் எனப் பழங்கதைகளுக்குள் மூழ்கிப்போன கோணங்கி டேய் சின்னச் சிதம்பரம் நீ எங்கடா இருக்க எனத் தன் பால்ய நண்பனைத் தேடி குளத்துக்குள் ஓடத் துவங்கினார். காலத்துள் பின்னோக்கிப் பிரயாணித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனின் தேடலுக்கு நாங்கள் அனைவரும் அங்கே சாட்சியாக நின்று கொண்டிருந்தோம்.

நினைவுகளில் தேங்கிப் போனவரைத் திருப்பியழைத்து ஆசுவாசப்படித்திக் கிளம்பிய எங்கள் வண்டி அடுத்ததாக நின்ற இடம் ஒரு இடுகாடு. அதன் அருகிலேயே ஒரு சிறுதெய்வக் கோவிலும் அதன் முகப்பில் உடைந்து போன மண்குதிரைகளும் நின்றிருந்தன. இதுதாண்டா நம்ம மண்ணு தம்பி எனக் கோணங்கி அந்த இடுக்காடின் உள்ளே போய் படுத்துக் கொண்டார். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவரின் கண்களில் சின்ன அளவிலான சிறு காய்கள் மணலில் கிடப்பது தென்பட மினுங்கும் கண்களோடு ஓடிப்போய் அவற்றை எடுத்துக் கொண்டார்.

இது என்னன்னு தெரியுமாடா தம்பி..

இல்லண்ணே..

இது ஒரு மரத்தோட காய்.. இதுல என்ன விசேசம்னா இதுல பேய்கள் தங்கும். நாம இப்போ இந்தக் காய்களைக் கொண்டு போய் நம்ம வீட்டுல விதைக்கிறோம். மரம் வளர்ந்து அதுல நிறைய பேய்கள் தங்கும். அப்படித் தங்கினாத்தான் நாம் இன்னும் நல்லா எழுத முடியும்.

இதுதான் எனக்குத் தெரிந்த கோணங்கி. அந்த அற்புதமான தினத்தின் முடிவில் இன்று இங்கிருக்கும் அனைவரும் என் தம்பிகள்டா என்று எங்களை அவர் கட்டியணைத்துக் கொண்டது எப்போதும் நினைவில் இருக்கும். குழந்தமைத்தன்மைக்கும் பித்துநிலைக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் கிடையாது. தனது குழந்தைமையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதுதான் கோணங்கியை இன்னும் தீவிரமாக செலுத்திக் கொண்டிருக்கிறதென நான் நம்புகிறேன்.

***************

நண்பர்கள் என்னிடம் சொன்னது இது. இதுவும் காரைக்குடியில் நடைபெற்றதுதான். ஒரு நாள் இரவில் தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார் கோணங்கி. திடீரென நடு இரவில் விழித்துக் கொண்டவர் நணபரை எழுப்பி இருக்கிறார். என்ன என்று கேட்ட மனிதரிடம் நகரில் பசித்த புலியொன்றின் நகக்கீறல்கள் எழுப்பும் ஒலியையும் அது தனித்தலைவதையும் தன்னால் உணர முடிகிறதெனச் சொல்லி இருக்கிறார். நகரத்துக்கு நடுவே எங்கிருந்து புலி வர முடியும் என சொல்லிய நண்பர் அது கோணங்கியின் பிரம்மை என்று சொல்லித் தூங்கி விட்டார். மறுநாள் தான் அங்கிருந்து சற்றுத் தொலைவில் புதிதாக வந்திருந்த சர்க்கஸ் கூட்டம் ஒன்று கூடாரம் அடித்திருந்ததும் அங்கே ஒரு புலி இருந்ததும் நண்பருக்குத் தெரிந்திருக்கிறது. தன்னுடைய புலன்களில் தன் மண்ணையும் காட்டின் வாசத்தையும் உணர்ந்த மனிதொருவராலேயே இது சாத்தியமாகக் கூடும் என அவர் சொல்லிச் சொல்லி வியந்திருக்கிறார். தான் பேசும் விஷயங்களுக்குத் எத்தனை நேர்மையாக இருக்கிறார் கோணங்கி என்பதற்காக நண்பர்கள் என்னிடம் இந்த நிகழ்வை அடிக்கடி சொல்வதுண்டு.

***************

காரைக்குடி பயணத்துக்குப் பிறகு பலமுறை கோணங்கியைச் சந்திக்கவும் கோவில்பட்டியில் அவர் வீட்டில் தங்கவும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பும் எனக்குள் அவர் மீதான அன்பையும் மதிப்பையும் அதிகப்படுத்தியே வந்திருக்கிறது. எப்போது அலைபேசியில் அழைத்தாலும் தம்பி பாண்டியன் என்று பாசமாய் அழைத்து கோணங்கி என்னிடம் கேட்கும் முதல் விசயம் வீட்டில் இன்னும் பூ தொடுக்கிறார்களா என்பதுதான். அவர் முதல்முறை என் வீட்டுக்கு வந்தபோது அம்மா பூ தொடுத்துக் கொண்டிருந்தார். அதை எடுத்துக் கொண்டு போய் என் பாட்டியிடம் கொடுத்த கோணங்கி என்னிடம் சொன்னது - இவர்கள்தான் இந்த வீட்டின் உண்மையான அடையாளம். இவர்களை நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இலக்கியம் என்பதையும் தாண்டி இன்றைக்கு என்னுடைய உறவுகளில் ஒன்றாக பிரியமான அண்ணனாக மாறி இருக்கும் கோணங்கிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

***************

நீங்கள் அவரை வியந்தோதலாம். விமர்சிக்கலாம். அன்பைப் பொழியலாம். திட்டித் தீர்க்கலாம். எதுவாயினும்.. தன்னைப் பற்றிய பாராட்டோ விமர்சனமோ.. அவை அனைத்தையும் சின்னதொரு புன்னகையோடு கடந்து போய் விடுவார். நம்மோட வேலை எழுதுறதுதான் தம்பி. அதை நம்மைச் சரியா செஞ்சாப் போதாதா? என்று முடித்து விடுவார். எல்லாவற்றுக்கும் ஒரு சிரிப்பு. அவ்வளவே. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத அந்தப் பேரன்புதான் கோணங்கி.

வெகு நாட்களாகவே கோணங்கி பற்றி எழுத வேண்டுமென இருந்தேன். இன்றைக்கு அதற்கான நேரம் கூடி வந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. காரணம் - இன்று (1-11-11) கோணங்கியின் பிறந்த நாள். மரியாதைக்கும் பிரியத்துக்கும் உரிய கோணங்கி அண்ணனுக்கு என் மனமார்ந்த அன்பும் வாழ்த்துகளும்..:-))))

September 25, 2011

ஒரு இலக்கியப் பேரொளியும் பின்னே ஞானும்

ஹலோ. கார்த்திகைப்பாண்டியன் இருக்காரா?

வணக்கம். நாந்தான் சார் பேசுறேன். சொல்லுங்க.

வணக்கம் தம்பி. உங்களுக்கு அந்தியைத் தெரியுமா?

ஓ தெரியுமே. சாயங்காலம் சூரியன் மறையறதுக்கு முன்னாடி..

தம்பி தம்பி.. அது இல்லை தம்பி..

அப்புறம்?

நான் சொல்றது எழுத்தாளர் அந்தி. கேள்விப்பட்டது இல்லையா?

இல்லீங்களே?

என்ன தம்பி இப்படிச் சொல்லிட்டீங்க? அவர் ஒரு இலக்கியப் பேரொளிப்பா. இதுவரைக்கும் 22 தொகுப்பு வந்திருக்கு. எட்டு சிறுகதைத் தொகுதி, பனிரெண்டு கவிதைத் தொகுப்பு.. கூடவே ரெண்டு நாவலும்.

ஓகோ. சரிங்க..

இருங்க.. நீங்க புத்தகம் எல்லாம் வாசிப்பீங்க தான?

நல்லாவே வாசிப்பேங்க..

என்ன வாசிப்பீங்க?

குமுதம், விகடன், கல்கி, அப்புறம்..

தம்பி தம்பி. நான் சொல்றது இது இல்லைப்பா. இது இலக்கியப் பத்திரிக்கை. இ ல க் கி ய ப் பத்திரிக்கை. புரியுதா?

ஏதோ புரியுது. ஆனா புரியலீங்க.

புரியலையா? ஹ்ம்ம்ம்.. அப்புறம் எதுக்கு உங்க நம்பர் தந்து பேசச் சொன்னாங்க. எங்கேயோ ஏதோ தப்பு நடந்து போச்சே.

என்னங்க நீங்களாப் பேசுறீங்க?

அதில்லை தம்பி. நாங்க ஒரு இலக்கியப் பத்திரிக்கை கொண்டு வரப் போறோம். உழைப்பால் உயர்வோம்னு பேரு. தனிச் சுற்றுக்கு மட்டும். அது பத்தி பேசலாம்னுதான் கூப்பிட்டேன். சரி விடுங்க. நீங்க அதுக்குச் சரிப்பட்டு வர மாட்டீங்க.

அப்படிங்களா அய்யா.. மன்னிச்சுக்கோங்க.. அப்புறம் ரொம்ப நேரமா ஒரு இலக்கியப் பேரொளி... அந்தி பத்தி சொன்னீங்களே? அவர் யாருங்க அய்யா..

அட அது நாந்தாப்பா.. போனை வை சாமி..

எல்லாம் முடிஞ்சு போச்சு. தப்பிசாண்டா பாண்டியன்.

July 25, 2011

இது என்ன ஊர் - சிங்கப்பூர் (5)

நண்பர் அப்பாவி முரு என்கிற முருகேசன் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவரு. பிரியத்துக்குரிய ரம்யாக்கா மூலமாக எனக்குப் பழக்கம். முதல் முறை மதுரை காளவாசலில் இருக்கும் ஜெயராம் பேக்கரியில்தான் பார்த்துக்கிட்டோம். பிரியமான, எளிமையான மனுஷன். நானும் ஸ்ரீயும் ஒருமணி நேரம் மொக்கை போட்டு அப்புறமா அனுப்பி வச்சோம். அதுக்கப்புறமும் மனுஷன் நம்ம பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டார்னுதான் நினச்சேன். ஆனா விதி யார விட்டது? இரண்டாவது முறை நான் அவரப் பார்த்தது அவருக்கு ஆயுள் தண்டனை விதிச்சப்ப, அவரோட கல்யாணத்துல. ஒரு மனிதன் கடைசியாக சிரிச்சதுக்கு நாமளும் சாட்சியா இருந்ததில சின்ன சந்தோசம்.

சமீபமாக அவர் சென்னை வந்துட்டார்னு நான் நினச்சுக்கிட்டு இருந்ததால சிங்கை பயணத்தப்ப எனக்கு அவர் ஞாபகமே இல்லை. ஆனால் சிங்கை குழும மடலில் நான் வர்றது தெரிஞ்சவுடனே போன் செஞ்சு செல்லச் சண்டை போட்டாரு. நீ வாய்யா பார்த்துக்கலாம்னு சொன்னவரோடத்தான் புதன்கிழமை நான் சிங்கை ஜூவுக்குப் போறதுன்னு முடிவாச்சு. புதன் காலை சாவகாசமாக பஸ்ஸைப் பிடித்து முரு சொன்ன வாயில நுழையாத ஏதோ ஒரு ஸ்டேஷனுக்கு கிளம்புனேன். மனுசர் பாதிவழியிலேயே பஸ்ஸில ஏறிட்டார்.



முதலில் கொஞ்ச நேரத்துக்கு ஆளை அடையாளமே தெரியல. வீட்டு சாப்பாடு கல்யாண பூரிப்புனு மனுஷன் நல்லா சதை போட்டிருக்கார். ஊர்க்கதையெல்லாம் பேசிக்கிட்டு குறிப்பிட்ட இண்டர்சேஞ்சுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த வங்கில சின்னதொரு வேலையை முடிக்க முரு போக நான் அங்கிருந்த ஷாப்பிங் மால்களில் சுத்திக்கிட்டு இருந்தேன். இருப்பதிலேயே டிவி தான் ரொம்பவே சல்லிசு. 42” டிவி எல்லாம் வெறும் முப்பதாயிரம் ரூபாய்க்குத் தர்றாய்ங்க. இருக்கப்பட்டவர்கள் பட்டாசு கிளப்பலாம். நாம எங்கிட்டு?

பப்பரப்பே என்று கடைகளையும் அங்கிருந்த அரையாடை மஞ்சள் மைனாக்களையும் சாவகாசமா பராக்கு பார்த்துக்கிட்டு இருந்தப்ப முரு வேலை முடிச்சு வந்தாரு. நண்பா இங்க இருக்குற ஹோட்டல்ல ஹக்கியான் - மீ அப்படின்னு ஒரு ஐட்டம் செமையா இருக்கும் வாங்க சாப்பிட்டுட்டு போவோம்னு இழுத்துட்டுப் போனார். ஏற்கனவே சீன உணவைப் பார்த்து டர்ராகிக் கிடந்தாலும் நண்பர் கூப்பிடும்போது மறுக்க முடியாதுன்னு போயாச்சு.

சூடா ரெண்டு பிளேட் வாங்கிட்டு வந்தார் மனுஷன். ஏதோ தொன்னைல வழிய வழிய கொடுத்த நூடுல்ஸ். ஆக்டோபஸ்ஸும் எறாலும் போட்டதாம். அதென்னமோ சீனாக்காரன் எல்லாம் நூடுல்ஸ தண்ணிவாக்குலதான் சாப்பிடுறாய்ங்க. நமக்கு அது ஆக மாட்டேங்குது. பரிதாபமா வேடிக்கை பார்க்கிறேன். தலைவன் பாட்டுக்கு சாப்ஸ்டிக் எடுத்து பட்டையக் கிளப்பிக்கிட்டு இருக்கார். மெதுவா எடுத்து வாயில போடுறேன். முடியல. எறா பச்சையா கெடக்கு. நூடுல்ஸ் ஒழுகுது. ங்கொய்யால.. பாண்டியா ஆசைக்கு வாங்கிட்டு இது உனக்குத் தேவையா? கொஞ்ச நேரத்துல அவரா நம்ம மூஞ்சி கொடுத்த எஃபெக்ட பார்த்துட்டு பிடிக்கலைன்னா வச்சிருங்கன்னு சொன்னாரு. அதுதாண்டா சான்சுன்னு எஸ்கேப்.



அங்க இருந்து கிளம்பி ஜூ. மொத்தம் மூணு விஷயம் - ஜூ, காட்டுக்குள்ள ராத்திரி சஃபாரி, பறவைகள் சரணாலயம். நேரமின்மை காரண்மா நாம் ஜூ மட்டும் பாக்குறதுன்னு உள்ள போயிட்டோம். இதுவரைக்கும் பொட்டக்காடுல அங்கனங்கன மிருகங்கள் நடமாடிக்கிட்டு இருக்குற ஜூவைத்தான் பார்த்து இருக்கேன். ஆனா சிங்கை ஜூ சான்சே இல்லை. சரணாலயமே ஏதோ மழைக்காடுகள் மாதிரித்தான் இருக்கு. அடர்காட்டுக்குள்ள நடந்து போற மாதிரியான உணர்வைக் கொண்டு வந்திடுறாங்க. நாங்க போன அன்னைக்கு மழையும் சேந்துக்க எடமே செமையா இருந்துச்சு. மத்தியானம் கேஎஃப்சியோட சாப்பாடு.

கண்ணாடிக்கு அந்தப்பக்கம் ரொம்ப நெருக்கத்துல போற மெகா சைஸ் முதலைகள், கிட்டக்க வந்து உருமுற சிறுத்தைகள் - சிங்கங்கள், நானூறு வருஷம் வாழுற ஆமைங்க, கொமோடோ டிராகன், வெள்ளைப்புலிகள், கங்காரு, மேலே வலையால் கூரை போடப்பட்ட பறவைகள் கூண்டு (ஜுராசிக் பார்க் எஃபெக்ட்), சிலந்தி மாதிரியான குட்டி இன்செக்ட்ஸ், வித விதமா நம்ம சொந்தக்காரங்க என எக்கச்சக்கமான மிருகங்கள். வழக்கம்போல பயத்தின் காரணமா பாம்புப் பண்ணைக்கு மட்டும் நான் போகலை. முருவுக்கு அதைச் சொல்லி என்னைக் கிண்டல் பண்ணினதுல அப்படியோரு குஷி.

மக்களைக் கவரக்கூடிய விதமா மூணு முக்கியமான ஷோ இருக்கு. “மழைக்காடுகள் திரும்பித் தாக்குகின்றன”ன்னு ஒரு நிகழ்ச்சி. காட்டை அழிக்குற மனுஷனோட பேராசைய மிருகங்கள் எதிர்த்து போராடுறதா கான்சப்ட். ராடண்ட்ஸ், குரங்குகள், பறவைகள்னு பட்டாசா இருந்தது. நாய்கள், கிளிகள் வச்சு குழந்தைகளுக்காகவே ஒரு நிகழ்ச்சி. அப்புறம் கடைசி நிகழ்ச்சிதான் எல்லாத்துலையும் டாப். சீல்களை வச்சு பண்றாங்க. அருமையா பழக்கப்படுத்துன கடல் சிங்கங்கள். நகைச்சுவையாவும் அதே நேரம் யோசிக்கிற மாதிரியான நல்ல நிகழ்ச்சிகள்.



சாயங்காலம் ஜூவுல இருந்து வெளியேறி முருவோட வீடு. கொஞ்ச நேரம் அங்க இருந்து நண்பர்களோட பேசிட்டு இருந்தேன். நம்ம ஊருல இருந்து காராச்சேவ வாங்கிட்டுப் போயி டப்பால போட்டுத் திங்கிற அளவுக்கு பயபுள்ளைங்க சாப்பாட்டுக்கு காஞ்சு கிடக்குதுங்க. ஒரு நல்ல டீ சாப்பிட்டுட்டு முருகிட்ட இருந்து விடைபெற்று அவரோட நண்பர் கூட காரேறி ஜம்முன்னு ஸ்டேஷனுக்கு வந்து எறங்கியாச்சு. வழில மலேஷியா எல்லைய வேற சுத்திக் காமிச்சாரு அந்த நல்ல மனுஷன். அவருக்கிட்டயும் சொல்லிக்கிட்டு அங்கயிருந்து கெளம்பி நேரா சைனாடவுன். அங்கன நண்பர் ரோஸ்விக் நம்மகூட சேர்ந்துக்கிட்டாரு.

க்யூட்டா சின்ன சின்ன கீ-செயின் எல்லாம் பொறுக்கிட்டு வந்தப்ப மழை வந்துருச்சு. அந்த ஏரியாவுல எக்கச்சக்கமான மசாஜ் பார்லர். வாழ்க்கைல நல்லவனா இருந்து என்னத்த சாதிச்சோம் பேசாம உள்ள நுழைஞ்சிடுவோமான்னு சின்ன நப்பாசை. ஹ்ம்ம்.. அதுக்கெல்லாம் துப்பு வேணும். நமக்கு அது துளி கூட கிடயாது. வேறென்ன. பெருமூச்சுதான். வர்ற வழியில சிங்கப்பூரோட சகல கில்மாக்களும் நடக்குற கிளார்க் குவே பகுதிய எட்டக்க நின்னு வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துட்டுக் கெளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். ரைட்டு.. வெற்றிகரமா மூணு நாள் முடிஞ்சது.

அடுத்தது எங்க ராசா ? செந்தோசா.

(பிரயாணிப்போம்..)