April 29, 2010

ஒரு "சுறா-வலி" கிளம்பியதே..!!!

தமிழகத்தைத் தாக்க வரும் அடுத்த சுனாமி ரெடி. அட அதாங்க... நம்ம டாக்டரோட படம் நாளைக்கு ரிலீஸ் ஆகுதுல்ல.. இளைய தளபதியின் அடுத்த டெரர் அட்டாக் - சுறா. கடந்த ரெண்டு வாரமா டிரைலர் சன் டிவில சூப்பர் டூப்பர் ஹிட்டா போய்க்கிட்டு இருக்கு. நம்ம இராம. நாராயணன் கிட்ட படத்தக் கொடுத்து இருந்தா இந்நேரம் "மாய மீனின் மர்மத் தாக்குதல்"னு பேரு வச்சு ஊரையே ரெண்டாக்கி இருப்பாரு. கெட்டதுலயும் ஒரு நல்லது.. அப்படி எல்லாம் எதுவும் நடக்கல. சரி.. இவ்வளவு விஷயம் நடக்கும்போது நாம சும்மா இருக்க முடியுமா? கடமைல கரெக்டா இருக்கணும்ல.. சரி.. ஆட்டைய ஆரம்பிப்போமா?

சுறா படத்தின் கதை என்ன?

(விஜய் படத்துல கதை என்னன்னு கேக்குறாங்களே.. இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லையா?)

கதைப்படி நம்ம இளைய தறுதலைக்கு ஒரு பெஸ்ட் பிரண்டு. அவரு சீன நாட்டை சேர்ந்தவரு. வேலைக்கு வந்த இடத்துல அவருக்கு பிடிச்ச கெரகம்.. நம்ம டாக்டருக்கு பிரண்ட் ஆகிடுறாரு. பாஷையே தெரியலைன்னாலும் நீதாண்டா என் உயிர் நண்பன்னு நம்ம விஜய் அவரோட டூயட் பாடறாரு. (எப்படி வித்தியாசம் காமிச்சோம் பார்த்தீங்களா?) ஒரு தபா நம்ம சைனாக்காரரு.. பெரிய விபத்துல சிக்கி ஆஸ்பத்திரில கெடக்காரு. தன்னை பார்க்க வந்த விஜய் கிட்ட "நிக் மக் சுக் டக் அகோ பயோ" அப்படின்னு சொல்லிட்டு மண்டைய போட்டுடுறாரு.

தளபதி அப்படியே ஷாக் ஆகுறாரு. ஆகா.. நம்ம தோஸ்து என்ன சொல்லிட்டு செத்தான்னு தெரியலையேன்னு காண்டு ஆகி.. உண்மை என்னான்னு கண்டுபிடிக்க சைனாவுக்கே போறாரு. எப்படி போறாரு? கடல்ல சைக்கிள் ஓட்டிட்டு போறாரு. அதுதான்யா கெத்து. மீனெல்லாம் வழில மெரண்டு ஓடுது. அப்போ அந்தப் பக்கமா போட்ல வந்துக்கிட்டு இருக்குற தமன்னாவ ஒரு ஜெல்லி மீன்கிட்ட இருந்து காப்பாத்தி.. அப்புறம் என்ன? சுவிட்சர்லாந்துல டூயட்தான். கொஞ்ச நேரத்துல வில்லங்க எல்லாம் வராங்க. அவங்க யாருன்னு பார்த்தா.. எல்லாருமே சைனாவுல பெரிய ரவுடிங்க. எங்க தருதல நம்மா ஊருக்கு வந்து நம்மள எல்லாரையும் வேட்டை ஆடிடுவாரோன்னு பயந்து சண்டைக்கு வராய்ங்க. அப்படியே கடல்ல ஆறு சண்டை.. நடுவுல மூணு குத்துப் பாட்டு எல்லாம் முடிஞ்சு விஜய் சைனா வராரு. அங்க வந்து அவரோட பிரண்டு என்ன சொன்னாருன்னு கண்டுபிடிச்சு பார்த்தா..

"அட நாயே.. ஆக்சிஜன் ட்யூப்ல இருந்து கைய எடுடா லூசு.."

***************

படத்துல பஞ்ச டயலாக் பேசிப் பார்த்து இருப்பீங்க.. ஆனா நாங்க படம் பார்க்குறதுக்கே பஞ்ச வைப்போம்ல..

"சுறா" டிக்கட் வாங்குறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவ நல்லா யோசிச்சுக்கோ.. ஏன்னா.. தியட்டருக்கு உள்ள போனதுக்கு அப்புறம் நீ யோசிக்கவேமுடியாது..

***************

டிக்கட் கொடுக்குறவர்: ஐயா.. சுறா பட டிக்கட்ட யாருமே வாங்க வரலைங்க

முதலாளி: எல்லா டிக்கட்டையும் ஒரு ரூபாய்க்கு வித்துத் தள்ளுடா

டிக்கட் கொடுக்குறவர்: அய்யய்யோ.. அப்புறம் நாம போட்ட காச எப்படிங்க எடுக்குறது?

முதலாளி: டிக்கட் வாங்கிட்டு எல்லா பயலும் உள்ளே நுழைஞ்சவுடனே கதவ சாத்தி பூட்டு போடு.. படம் ஆரம்பிச்ச பத்து நிமிஷத்துல எல்லாரும் வெளிய போகணும்னு கதறுவானுங்க.. அப்போ ஆளுக்கு ஐநூறு ரூபா வாங்கிட்டு வெளிய விடு.. எப்பூடி?

***************

நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னது நம்ம அறிவாளி டாக்டர் விஜய்

நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - இது நம்ம மக்கள் சொன்னது.. ஹி ஹி ஹி

***************

விஜய் ஏன் ரொம்பக் கோவமா இருக்காரு?

அப்புறம்? சுறான்னு பேரு வச்சுட்டு குரங்கு நடிச்ச படம்னு சொல்லி டிஸ்கவரி சானலுக்கு வித்துட்டாங்களாம்..

***************

தமிழ் நடிகர்கள் vs இந்தியன் கிரிக்கட் டீம்

ரஜினி = சச்சின் (எப்பவுமே டாப்பு)
கமல் = கங்குலி (எக்கச்சக்கமான திறமை.. ஆனாலும் ஹிட் ஆக முடியல)
சூர்யா = யுவராஜ் (கொஞ்சம் திறமையோட லக்கும் உண்டு)
விக்ரம் = தோனி (எப்படியாச்சும் ஹிட் ஆகிடும்)
மாதவன் = ஸ்ரீ சாந்த் (மெகா பிளாப் ஆனாலும் எல்லாருக்கும் பிடிக்கும்)
அஜித் = சேவாக் (அடிச்சா சிக்சர் இல்லன்னா டக்கு)
விஜய் = அட.. இவன் பால் பொறுக்கிப் போடுற பயபுள்ளைப்பா..

***************

எஸ்.பி.ராஜ்குமார்: சார்.. சுறா - இந்தப் படம் கண்டிப்பா நூறு நாள் ஓடும் சார்..

விஜய் : சூப்பர் சார்.. அப்போ நூறாவது நாள் விழாவுல உங்களுக்கு ஒரு கார் வாங்கித் தாரேன்..

எஸ்.பி.ராஜ்குமார்: சார்.. சும்மா.. ஜோக் அடிக்காதீங்க சார்..

விஜய்: அடங்கோயால.. படம் நூறு நாள் ஓடும்னு யாருயா முதல்ல ஜோக் அடிச்சது?

***************

இந்த இடுகை எப்போ வரும், எப்போ வரும்னு என்னைத் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்த அண்ணன் அத்திரிக்கு சமர்ப்பணம்...

அப்புறம் அந்த டிஸ்கி ரொம்ப முக்கியம்ல.. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே.. ஏய்.. யாருப்பா அது.. பேசிக்கிட்டு இருக்கும்போதே நக்கலா சிரிக்கிறது? சொல்றத நம்புங்கையா.. சரி.. இதையும் மீறி என்னைத் திட்ட வரும் டாக்டரின் (வருங்கால) கழகக் கண்மணிகள் நாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தும்படி மிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..:-))))

April 19, 2010

உக்கார்ந்து யோசிச்சது (19-4-10)..!!!

"காரியம் ஆகுற வரைக்கும் காலைப் பிடிடா.. ஆனபிறகு தூக்கி மிதிடா.." - இது யாருக்குப் பொருந்துதோ இல்லையோ.. இணைய வசதி செய்து தரும் நிறுவனங்களுக்குக் கண்டிப்பா பொருந்தும் போல.. ரிலையன்ஸ் வயர் கட் ஆகி ஒரு வாரமாச்சு. கல்லூரியிலையும் கனெக்ஷன் இல்ல. நெட் இல்லாம மண்டை காயுது. நாயா அலஞ்சு பார்த்துட்டேன். மதிக்க மாட்டேங்குராய்ங்க.. "நாங்க தரோம் சார்னு" அடிச்சு பிடிச்சு வந்து அவங்க கனெக்ஷன் கொடுத்த காட்சி எல்லாம் கட் ஷாட்ல வந்து வந்து போகுது... அவ்வவ்... இப்படி பொலம்ப விட்டுட்டாய்ங்களே மக்கா..

இந்த அநியாயத்தக் கேக்க யாருமே இல்லையா?

***************

நிகழ்வு ஒண்ணு:

"கார்த்தி சார்.. இன்னைக்கு உங்க கிளாஸ்ல ஒரு பத்து நிமிஷம் எனக்குத் தர முடியுமா? ஒரு சின்ன டாபிக் நடத்த வேண்டி இருக்கு.."

"சாரி மேடம்.. நானே இன்னும் சிலபஸ் முடிக்கல..அதனால.."

"பரவாயில்ல சார்.. பார்த்துக்கலாம்.."

முதுகுக்குப் பின்னாடி

"பரதேசி.. என்னமோ இவன் மட்டும்தான் பாடம் நடத்துற மாதிரியும்.. மத்தவங்க எல்லாம் சும்மா சம்பளம் வாங்குற மாதிரியும்.. ஓவர் சீன்.. இவன் நடத்துற லட்சணம் எனக்குத்தெரியாதா?"

நிகழ்வு ரெண்டு:

"கார்த்தி சார்.. இன்னைக்கு உங்க கிளாஸ்ல ஒரு பத்து நிமிஷம் எனக்குத் தர முடியுமா? ஒரு சின்ன டாபிக் நடத்த வேண்டி இருக்கு.."

"ஒண்ணும் பிரச்சினை இல்ல மேடம்.. எடுத்துக்கோங்க.."

"ரொம்ப தாங்க்ஸ் சார்.."

முதுகுக்குப் பின்னாடி

"நான் சொல்லல.. அவன் எப்பவுமே இப்படித்தான்... கேட்டவுடனே கொடுத்துட்டான் பார்த்தியா? சும்மா பேருக்குத்தான் கிளாசுக்குப் போறான். பாடமே நடத்துறது கிடையாது.. டுபாக்கூரு.. இது கிட்ட படிக்கிற பசங்க எப்படி வெளங்கப் போகுது?"

அடப்பாவிகளா.. நான் என்னதாண்டா பண்ண?

***************

சமீபத்தில் என்னை மிகவும் எரிச்சல் அடைய வைத்த விளம்பரம் - டாடா டோகோமோ. அம்மா உட்கார்ந்து ஏதோ பண்ணிக் கொண்டிருக்கிறார். பின்னாடி சாமி பாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. அதாவது அவர் பாரம்பரியத்தை விரும்புகிறவர் என்று காட்டுகிறார்களாம். அப்போது அவளுடைய பெண் வருகிறாள்.

"அம்மா.. நான் உங்ககிட்ட ஒண்ணு காட்டணும்.."

"என்னமா"

உடனே திரும்பி தான் அணிந்திருக்கும் குர்தாவைத் தூக்கி முதுகை காட்டுகிறாள் மகள். அங்கே பிருஷ்ட பாகத்துக்கு சற்று மேலே ஏதோ ஒரு டாட்டூ. ஒரு நிமிஷம் திகைத்துப் போகும் அம்மா சுதாரித்துக் கொண்டு "நல்லா இருக்குமா" என்கிறார். மகளுக்காக தன்னை மாற்றிக் கொள்கிறார் என்பதுவரை கான்சப்ட் எல்லாம் சரிதான். அதற்காக காட்டுவதற்கு வேறு விஷயமே இல்லையா? கருமம்.. இன்னும் விளம்பரத்தில் என்ன என்னத்தைக் காட்டப் போறாய்ங்களோ ?

அவ்வ்வ்வவ்வ்வ்.... முடியல

***************

"சுறா" படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். அடப்பாவிகளா? எதுக்கும் ஒரு அளவு வேண்டாமா? வந்து பேசுனவுங்க எல்லாரும் சன் பிகச்சர்ஸ் க்ரூப்புக்கு ஓசியில விளம்பரம் பண்ணிட்டுப் போனாய்ங்க. அதை விடக் கொடுமை, ஒவ்வொரு தடவையும், கலாநிதி மாறன் பேரைச் சொல்லும்போதும், சன் பிக்சர்ஸ் பேரை சொல்லும் போதும், இவங்களே போட்டுக்கிட்ட கைத்தட்டல் சத்தம். என்னத்த சொல்ல? மற்றபடி பாடல்கள் பற்றி.. பொம்மாயியும் நான் நடந்தால் அதிரடியும் டாப். மத்தது எல்லாம் டூப். அதே போல மதராசப்பட்டிணம் பாடல்கள் கூட அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எல்லாமே சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி போட்டு இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் ஏமாற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் மீண்டும் பையா, அங்காடித்தெரு என்று செட்டிலாகிவிட்டேன்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..

***************

ஒரு குட்டி கதை..

ஒரு குருவும், சிஷ்யனும் மாட்டு வண்டியில் ஏறி தங்கள் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். வழியில் ஒரு பெண் தனியாக நின்று கொண்டிருந்தாள். தன்னை வழியில் இருக்கும் ஊரில் இறக்கி விடும்படி கேட்டுக் கொண்டாள். சிஷ்யன் குருவின் முகத்தைப் பார்த்தான். அதில் எந்த சலனமும் இல்லை. அந்தப் பெண்ணை ஏறிக் கொள்ளச் சொன்னார். வழியில் அந்தப் பெண் இறங்கிக் கொண்டு நன்றி சொல்லிச் சென்றாள். சிறிது நேரத்துக்குப் பிறகு சிஷ்யன் குருவிடம் கேட்டான்.

"குருவே, நீங்கள் ஏன் அந்தப் பெண்ணை வண்டியில் ஏற்றிக் கொண்டீர்கள்.. நம் துறவு விதிகளுக்கு அது எதிரானது இல்லையா..?"

துறவி இப்போதும் சலனமில்லாமல் சொன்னார்.

"நான் அந்தப் பெண்ணை அங்கேயே இறக்கி விட்டு வந்து விட்டேனே.. நீ மட்டும் ஏன் இன்னும்..?"

அப்படிப் போடு அருவாள..

***************

"மீட்சி" பழைய இதழ் ஒன்று கிடைத்தது. பாதசாரி எழுதிய "காசி" என்கிற சிறுகதையை வாசித்து முடித்தபோது மனது கனத்துப் போனது. இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாத, தெரியாத ஒரு மனிதனின் கதை. எஸ்ராவின் "உறுபசி" சம்பத்தின் ஞாபகம் வந்து போனது. அடுத்த புத்தக விழாவில் பாதசாரியின் எழுத்துக்களை தேடிப் பிடித்து வாங்க வேண்டும்.

மனிதர்களில் எத்தனை நிறங்கள்

***************

முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு சில முடியலத்துவம்... (நன்றி: செல்வா)

--> என்னதான் நாம செகப்பா இருந்தாலும் நம்ம நிழல் கருப்பாத்தான் இருக்கும்

--> என்னதான் டிவி விடிய விடிய ஓடினாலும் ஒரு இன்ச் கூட நகராது

--> தூங்குறதுக்கு முன்னாடி தூங்கப் போறேன்னு சொல்லலாம்.. ஆனா.. எந்திரிக்கிறதுக்கு முன்னாடி எந்திரிக்கப் போறேன்னு சொல்ல முடியுமா?

--> செருப்பு இல்லாம நாம நடக்க முடியும்.. ஆனா.. நாம இல்லாம செருப்பு நடக்க முடியுமா?

எல்லாமே குறுந்தகவல்களில் வந்தவை... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க?

எப்பூடி.. இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

April 12, 2010

உங்கள் நாகரீகம் நாசமாய்ப் போகட்டும்..!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் நான் நுழைந்தபோது இரவு மணி ஒன்பதேகால் ஆகி விட்டிருந்தது. ஈரோடு செல்வதற்கான ஏற்காடு எக்ஸ்பிரஸ் பத்தேமுக்காலுக்குத்தான் கிளம்பும். அது வரை என்ன செய்வதெனத் தெரியவில்லை. எங்கும் ஜனத்திரள். கிடைத்த இடத்தை எல்லாம் ஆக்கிரமித்து இருந்தார்கள். வெக்கையில் உடல் அவிந்து விடும் போல இருந்தது. சற்று நேரம் எங்கேயாவது சாவகாசமாக "குளு குளு கூலில்" அமர்ந்தால் நன்றாக இருக்கும் போலத் தோன்றியது... அட அதாங்க.. .சி. எங்கே போகலாம்? சட்டென்று ரயில் நிலையத்திலேயே அமைந்திருக்கும் சரவண பவனின் ஞாபகம் வந்தது.

சாயங்காலம் நண்பர்களோடு சேர்ந்து டிபன் சாப்பிட்டு இருந்ததால் பெரிதாகப் பசியில்லை. ஆனாலும் போய் பேருக்கு எதையாவது சாப்பிட்டு விட்டு, கொஞ்ச நேரம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு வரலாம் எனத தோன்றியதால், அங்கேயே போகலாம் என முடிவு செய்தேன். படியேறிச் சென்று கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால், அடங்கொய்யால.... இதுக்கு ஸ்டேஷன்ல இருந்த கூட்டமே பரவா இல்லை போலேயே.. மண்டை காய்ந்து போனது. ஏசி போட்டிருக்கிறார்கள் என்று யாராவது சொன்னால்தான் தெரியக்கூடும். உள்ளே அத்தனை வெப்பம். அத்தனையும் மனிதர்களின் மூச்சு. என்ன செய்வது? திரும்பி வந்த வழியே போய் விடலாமா என்றால் மனசு கேட்கவில்லை. மறுநாள் காலை ஈரோடு செல்லும் வரை பசிக்காமல் இருக்க வேண்டுமே. எதையாவது வயிற்றுக்குப் போட்டுச் செல்வோம் என்று உள்ளே நுழைந்தேன்.

எல்லா டேபிளிலும் கூட்டம். மக்கள் வெயிட்டிங்கில் இருந்தார்கள். சாப்பிட்டு முடித்தவர்கள் எழுந்து கொள்ள, சட சடவென அடுத்த குரூப் அந்த இடத்தை பிடித்துக் கொண்டது. நானும் போய் ஓரிடத்தில் நின்று கொண்டேன். என்னருகே ஒரு குடும்பம் நின்று கொண்டு அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். மொத்தம் நான்கு பேர். அம்மா, அப்பா, மகன் மற்றும் மகள். மகனுக்கு பத்து வயதிருக்கும், மகளுக்கு பனிரெண்டு இருக்கலாம். ஆள் யாரும் பார்ப்பதற்கு நம்மூர் ஆட்கள் போலவே இல்லை. டி -ஷர்ட், ஸ்லீவ்லெஸ், அரைக்கால் சட்டை என்று நவநாகரீகமாக உடை அணிந்து இருந்தார்கள். சரி.. வெளிமாநிலத்தவர் போல என்று நினைத்துக் கொண்டேன்.

நாங்கள் நின்று கொண்டிருந்த டேபிள் காலியானது. (மொத்தம் ஆறு பேர் அமரக் கூடியது) பேசிக் கொண்டிருந்த பெரியவர் வேக வேகமாக போய் அமர்ந்து கொண்டார். அவரது குடும்பமும் தொடர்ந்தது. நான் டேபிளின் மறுமுனையில் அமர்வதற்காக சென்றேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார்.

"Excuse me, we are four.." (மன்னியுங்கள்.. நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம்..)

நான் பொறுமையாகத் திருப்பி சொன்னேன்..

"ya.. i do know that.. am moving to the other side of the table.." (சரி.. எனக்கும் தெரியும்.. நான் மேஜையின் மறுமுனையில்தான் அமரப் போகிறேன்..)

அவர் தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே திரும்பிக் கொண்டார். ஒரு வேளை அவர்களுடைய தனிமையை நான் குலைப்பதாக நினைத்துக் கொண்டாரோ என்னமோ? நான் அமைதியாக டேபிளின் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டேன். எனக்கெதிரே இருந்த மற்றொரு இருக்கையில் ஒரு வயதான பெண்மணி வந்து அமர்ந்து கொண்டார். இதற்கும் பெரியவர் ஏதோ முனக, அவருடைய மனைவி அவரை சமாதானம் செய்துகொண்டிருந்தார்.

நான் என்னுடைய கவனத்தை அந்த சிறுவன் சிறுமியிடம் திருப்பினேன். இருவருமே அருமையான ஆங்கிலத்தில் பேசினார்கள். அவர்களுடைய தாய் நடுநடுவே "சொல்றேன்ல.. கேளுங்க.." என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. இவர்களுடைய தாய்மொழி தமிழ் தானா?

குழந்தைகளுடைய மொழியும், ஆங்கில உச்சரிப்பும் அத்தனை அபாரமாக இருந்தது. அவர்களுடைய தாய்மொழி தமிழ்தான் என்பதை என்னால் அடையாளம் காணவே முடியவில்லை. சிறு குழந்தையாய் பேசத் தொடங்கியது முதலே ஆங்கிலத்தில் பேசப் பழகி விடுகிறார்கள். இதனால்தான் பிறரை ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளுவதில் இவர்களுக்கு எந்த சிரமும் இருப்பதில்லை. நம்ம ஊரு மாணவர்களின் பிரச்சினையே இதுதானே.. ஹ்ம்ம்ம்.

சிறிது நேரத்தில் பேரர் வந்து என்ன வேண்டும் என்று கேட்டார். நான் எனக்கு புரோட்டா குருமாவும், என்னெதிரே இருந்த பெண் தோசையும் ஆர்டர் செய்தோம். அருகில் இருந்த குடும்பம் சோலா பூரி, மினி இட்லி , அது இது, லொட்டு லொசுக்கு என்று என்னென்னவோ சொன்னார்கள். பேரர் கேட்டுக் கொண்டு கிளம்பிப் போனார்.

அந்த சிறுவன் அவனுடைய தாயிடம் திரும்பி சொன்னான்.

(அவர்கள் ஆங்கிலத்தில் பேசியதை நான் தமிழில் சொல்கிறேன்..)

"இவ்வளவு பெரிய ஹோட்டலில் ஏன் இப்படி பஞ்சப் பரதேசிகளை எல்லாம் பேரராக வைக்கிறார்கள்?"

எனக்கு சுருக்கென்றது. அந்த பேரரின் உருவத்தையும், அவரது உடைகளையும் பார்த்து அந்தச் சிறுவன் இப்படி கேட்டிருக்கிறான். காலையில் இருந்து தொடர்ச்சியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஓயாமல், ஓரிடத்தில் நிற்காமல், அலைந்து திரிந்து பார்க்கும் வேலை. இததனைக்கும் அவருடைய ஆடைகள் எல்லாம் கொஞ்சம் கசங்கி இருந்தாலும் சுத்தமாகத்தான் இருந்தன. வந்தவர்களிடம் எல்லாம் சிரித்த முகத்தோடு பேசித்தான் ஆர்டர் எடுத்தார். அவரைப்போய்?

எனக்கு இப்போது அந்தப் பையனின் மேல் கொஞ்சம் எரிச்சல் வந்தது. அவன் கேள்விக்கு அவனுடைய தாயார் என்ன பதில் சொல்கிறார் என்று கவனித்தேன்.

"விடும்மா.. இதெல்லாம் சகஜம்.. அப்புறம் அந்தப் பஞ்சப்பரதேசிகளும் பிழைக்கணும் இல்லையா.. நாம அடுத்த தடவை இன்னும் நல்ல ஹோட்டலாப் போகலாம்.."

எனக்கு ஓடிப்போய் அவர்களை அப்பினால் என்ன என்று தோன்றியது. அவன்தான் சின்னப்பையன்.. தெரியாமல் பேசுகிறான் என்றால்.. இவர்கள் வளர்ந்தவர்கள்தானே? கடுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டேன். எனக்கான புரோட்டா வந்தவுடன் சாப்பிடத் தொடங்கினேன்.

அவர்கள் கேட்ட ஐட்டங்கள் வர சற்றே லேட்டானது. இப்போது அந்தப் பெண்ணின் முறை.

"அம்மா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் பாரேன். அந்தப் பரதேசி வருவான்.. மேடம்.. நீங்கள் கேட்ட உணவு வகைகள் எல்லாம் முடிந்து விட்டன அல்லது இல்லை என்று சொல்வான் பாரேன்.."

இதை சொல்லும்போது அந்தப் பெண்ணின் முகம் அஷ்ட கோணலாக இருந்தது. அந்த பேரர் இப்படித்தான் பேசுவாராம். முகத்தை சுருக்கி காண்பிக்கிறாளாம். உடன் சுற்றி அமர்ந்து இருந்த மூவரும் சிரிக்கத் தொடங்கி விட்டனர்.

சரியாக அதே நேரத்தில் அந்த பேரர் அவர்களுக்கான உணவு வகைகளைக் கொண்டு வந்தார். உடனே அந்தப் பையன் சொன்னான்.

"சாத்தான்.. நினைத்தவுடன் வந்து விட்டான் பாரேன்.."(Think of the devil..)

அதற்கு மேல் அங்கே என்னால் உட்கார முடியவில்லை. விருட்டென்று எழுந்து கொண்டேன். பில்லைக் கொடுத்து விட்டு, அத்தனை கூட்டத்திற்கு நடுவிலும் கனிவுடன் நடந்து கொண்ட அந்த மனிதருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன்.

அவர்களை எதுவும் கேட்காமல் வந்து விட்டோமே என்று என் மீதே எனக்கு கோபமாக வந்தது. அத்தோடு இவர்களைப் போய் நாகரீகமானவர்கள், விஷயம் தெரிந்த மனிதர்கள் என்றெல்லாம் நினைத்து விட்டோமே என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. சக மனிதனை மதிக்கத் தெரியாத... அவர்களின் வலியை உணரத் தெரியாத.. தங்களைப் போலத்தானே அவர்களும் என்று புரிந்து கொள்ளாத பிள்ளைகள்.. அதை அவர்களுக்கு உணர்த்தாமல் தானும் சேர்ந்து ஆட்டம் போடும் பெற்றோர்கள். இதுதான் நாகரீகமா.. புற அழகு ஒன்றை மட்டுமே கவனிப்பதும், மனிதம் மறப்பதும்.. இதுதான் மேல்தட்டு வர்க்கத்தின் நாசூக்கா? இதுதான் உங்கள் நாகரீகம் எனில்..

அந்த நாகரீகம் நாசமாய்ப் போகட்டும்.

April 9, 2010

உதவுங்கள் நண்பர்களே..!!!

சமீபத்தில் நான் வாசித்த இரண்டு விஷயங்கள் நெஞ்சை பதற வைத்தன. என்னாலான சிறு உதவிகளை நான் செய்து விடுகிறேன். உங்களால் முடிந்த உதவியை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்கள் என்னும் நம்பிக்கையோடு...

நண்பர் உமாகதிரின் பதிவில் இருந்து...

சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை. எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.


எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்போது அவன் எழுந்து நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. காரணம் விபத்து. ஒரு விடுமுறை நாளின் காலையின் வீட்டின் மாடியில் குச்சி வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சுவர் அருகே ஆறடி தூரத்தில் அதிக மின்சக்திகளை தாங்கிச்செல்லும் மின் கம்பிகளை அந்த குச்சியால் தொட்டுவிட்டான்.

பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பிஞ்சின் கை கால்கள் கருகத்தொடங்கிவிட்டன. சுதாரிப்பதற்குள் முடிந்துவிட்டன. இப்போது அவனுக்கு தோள்பட்டை வரை ஒரு கையும் தொடை வரை ஒரு காலும் கருகிவிட்டன. மற்றொரு காலில் ஒரு விரல்கூட மிஞ்சவில்லை. மற்றொரு கையில் இரண்டு விரல்களில் மட்டுமே செயல்பாடு உள்ளது. ஆனால் அவனது முகத்தில் இருக்கும் பிரகாசம் மட்டும் குறையவே இல்லை. தனக்கு இப்படி ஆகிவிட்டது குறித்த கவலைகூட அவனுக்கு கிடையாது. மிகுந்த தன்னம்பிக்கை உடைய சிறுவன்.

கடந்த நான்கு மாதங்களில் தங்களது சக்திக்கும் மீறியே செலவு செய்து விட்டனர். தற்போது செயற்கைக் கை கால்கள் பொருத்த நிதி தேவைப்படுகிறது. இட்லிவடை பகுதியில் இதைப்போன்ற செய்திகள் முன்பே படித்திருக்கிறேன், உதவியும் இருக்கிறேன். இந்த செய்தியை தங்களது தளத்தின் வெளியிட்டு அந்த எளிய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைத்தால் மிகுந்த சந்தோஷமடைவேன். நண்பர்களே உங்களால் முடிந்த உதவியை செய்து அந்தக்குடும்பத்தில் ஒளியேற்றுங்கள்.



விபத்திற்கு முன்பும் விபத்திற்கு பின்பான அந்த சிறுவனின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

முதல் படம் தனது இரு சகோதரிகளுடன் சுமன் என்கிற சுரேந்தர். இரண்டாவது படம் விபத்திற்குப் பின்....

வங்கிக்கணக்கு விவரங்கள் கீழே

Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan
Branch : Kacharapalayam
city : Kallakurichi Taluk


முகவரி :

P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kachirapalayam post
kallakurichi tk
villuppuram dt

நண்பர் கதிரைத் தொடர்பு கொள்ள - 9791460680

வடகரை வேலன் அண்ணாச்சியின் பதிவில் இருந்து...

முத்துராமனுக்கு உதவி தேவை


முத்துராமன் அறியப்பட்ட எழுத்தாளர். நல்ல சிறுகதையாளர். வயது 33. கிழக்கு பதிப்பகத்திலும், ‘தமிழக அரசியல்’ இதழிலும் பணியாற்றியவர். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார். போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் டாக்டர். சௌந்தரராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக நண்பர்கள் உதவியினால் டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

முத்துராமனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது தாயார் ஜெகதீஸ்வரி தனது சிறுநீரகத்தை அளிக்க இருக்கிறார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பணம் கிடைக்கும் பட்சத்தில், ஏப்ரல் 2010லேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிடலாம்.

அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.


முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :

ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.

நீங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்தால் இந்தச் செய்தியை வெளியிட்டு அல்லது நண்பர்களுக்கு forward செய்து உதவலாம்.

April 7, 2010

தமிழ்ப்படம் - ஒண்ணு இல்ல.. பத்து..!!!

"அங்காடித் தெரு" பற்றிய என்னுடைய திரைப்பார்வையில் இப்படி எழுதி இருந்தேன் - "என் வாழ்வில் நான் பார்த்த மிகச் சிறந்த பத்து தமிழ்ப் படங்களின் வரிசையில் கண்டிப்பாக அங்காடித் தெருவும் இருக்கும்." இதைப் படித்தவுடன் நம்ம தருமி ஐயாவுக்கு ஒரு சின்ன ஆசை. எல்லோரும் தங்களுக்கு மிகவும் பிடித்த பத்து படங்களைப் பற்றி எழுதினால் என்ன என்பதுதான் அது. அவரே முதல் ஆளாக எழுதியும் விட்டார். சங்கிலிப்பதிவாக எழுதும்படி என்னை அழைத்ததற்கு நன்றி அய்யா.

தமிழில் வந்த சிறந்த பத்து படங்கள் என்றால் அது சிரமம். எனவே ரொம்பவெல்லாம் யோசிக்காமல் என் மனதுக்கு தோன்றிய, நான் ரசித்த படங்களைப் பற்றி எழுதுகிறேன்.

முள்ளும் மலரும்

சூப்பர் ஸ்டாரின் ஆகச் சிறந்த படம். ரஜினியின் தேர்ந்த நடிப்பு இந்தப் படத்தைப் போல வேறு எந்தப் படத்திலும் வெளிப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. மகேந்திரனின் யதார்த்தமான இயக்கம், இளையராஜாவின் அற்புதமான இசை என்று படம் பட்டையைக் கிளப்பும். குறிப்பாக கிளைமாக்ஸ். "வள்ளி.. இவனுங்க எல்லாம் யாரோ ஏதோ.. ஆனா நீ.. என் கூடப் பொறந்தவ.. என் தங்கச்சி.. நீ கூடவா என்ன விட்டுட்டுப் போற.." திமிரோடு பேசும் ரஜினியும், ஷோபாவின் கிளாஸ் நடிப்பும், "டுங் டக் டுங் டக் டுங்குடுங்கு டுங் டாக்" என்று இன்னதென்று சொல்ல முடியாத ஒரு வாத்தியத்தில் இசைக்கும் ராஜாவின் பின்னணி இசையும்.. சொல்லும்போதே புல்லரிக்கிறது.

முதல் மரியாதை

மத்திம வயதில் தோன்றும் காதலை கிராமத்துப் பின்னணியில் பாரதிராஜா சொன்ன விதம் ரொம்பவே பிடித்திருந்தது. குறிப்பாக சிவாஜியின் நடிப்பு. கல்லைத் தூக்கும் காட்சி, மீன் சாப்பிடும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். படத்தில் பிடித்த இன்னொரு விஷயம் - வடிவுக்கரசி. இயல்பாக செய்திருப்பார். மறக்க நினைக்கும் ஒரே காட்சி - டேய்ய்ய்ய்ய் என்று கத்திக்கொண்டே ராதா சத்யராஜைக் கொல்லுவது. நிறைய சினிமாத்தனங்கள் இருந்தாலும் உள்ளத்தைத் தொட்ட படம்.

முகவரி

அஜித்துக்கு என்னை ரசிகனாக்கிய படம். இசையமைப்பாளர் ஆக விரும்பும் ஒருவனுடைய வாழ்க்கையை அழகாகப் படமாக்கி இருப்பார்கள். ரகுவரன், விஸ்வநாத், சித்தாரா, ப்ரீத்தா என்று அஜித்தின் குடும்பமும் அவர்களின் தியாகங்களும் நெஞ்சைத் தொடும். கிளைமாக்ஸ் நிதர்சனம். படத்தில் மனதில் நிற்கும் காட்சி - குடும்பத்தோடு வானவில் பார்க்கும் காட்சி.

பூவே உனக்காக

அப்பா தயாரிக்கும் சீன் படங்களில் மட்டும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த விஜயை புதிய பாதைக்கு திருப்பிய விக்கிரமனின் படம். தமிழில் வெளிவந்த பல காதல் படங்களுக்கும் முன்னோடி. எக்கச்சக்கமான கிளேஷக்கள், மொக்கை நகைச்சுவை என்பதையும் மீறி நிறைவான படம். கிளைமாக்சும், காதல் பற்றிய வசனங்களும்.. டாப் கிளாஸ்.

உள்ளம் கொள்ளை போகுதே

சுந்தர்.சி இயக்கத்தில் பிரபுதேவா, கார்த்தி, அஞ்சலா நடித்த அருமையான காதல் படம். (இந்தப்படம் லிஸ்டில் இருப்பதில் ஒரு சூது இருக்கிறது..) கார்த்தி வந்து போகும் கொஞ்ச நேரத்தில் பட்டாசு கிளப்பி இருப்பார். தான் ஒரு நல்ல நடிகர் என்பதை பிரபுதேவா நிரூபித்த படம். கார்த்திக்ராஜா இசையில் எல்லாப் பாட்டுமே நன்றாக இருக்கும். ஆனாலும் படம் ஓடவில்லை...:-(((((

சேது

இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கிய படம். பொருத்தமான நடிகர்கள், திகைக்க வைக்கும் திரைக்கதை, கண்கள் கலங்கும் கிளைமாக்ஸ் என பாலா தன்னை அறிமுகம் செய்து கொண்ட படம். ராஜாவின் பின்னணி இசைதான் இந்தப் படத்திலும் ஹைலைட். எல்லோருக்கும் விக்ரம் காதலை சொல்லும் காட்சிதான் படத்தில் பிடித்ததாக சொல்வார்கள். ஆனால் அதைவிட.. ஸ்ரீமன் விக்ரமிடம் பேசும் காட்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும். "அவங்களுக்கு நம்மள விட்டா யாருடா இருக்கா? நாம பிரண்ட்ஸ்டா.. இத்தனை வருஷமா நம்ம காலையே சுத்திக்கிட்டு இருக்கவங்க.." அட்டகாசம்.

அன்பே சிவம்

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் கமல் என்பதை யாராலும் மறுக்க முடியாது. படம் வெளிவரும்வரை கமலின் மேக்கப் பற்றி யாருக்குமே தெரியாது. அந்த தைரியம்தான் கமல். முதல் தடவை பார்த்தபோது அதிர்ந்து போனேன். தான் ரத்தம் தந்து காப்பாற்றிய சிறுவன் வழியிலேயே இறந்து போக மாதவன் ரோட்டில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். அவர் அருகிலேயே கமல் உட்கார்ந்து இருப்பார். அப்போது கேமிரா கமலின் முகத்துக்கு பக்கவாட்டில் இருக்கும். பேசுவதில் சிரமம் காரணமாக அவருடைய கழுத்து நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொள்ளுவதை காட்டுவார்கள். அதன் பின்பு கமழும் மாதவனும் பேசும் வசனங்கள்.. மதன் பின்னி இருப்பார். அதே போல கிளைமாக்சும் அருமை.

நந்தா

சேது தந்த நம்பிக்கையோடு, மிகுந்த எதிர்பார்ப்புகளோடு நந்தாவுக்கு போனேன். அதுவும் அஜித் நடிக்க மறுத்து பின்பு சூரியா நடித்த படம். ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தால் படம் என்னவோ போல் இருந்தது. ஒன்றுமே பிடிக்கவில்லை. நல்லவேளை தல தப்பிச்சுட்டருடா என்று சொல்லியவாறு வீட்டுக்கு வந்தேன். ஆனால் ஏதோ ஒன்று எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு தாயே தன் மகனை கொல்வாளா.. என்ன படம் இது என வருவோர் போவோர் எல்லோரிடமும் புலம்பி கொண்டிருந்தபோது, நண்பன் கேட்டான். "என்னடா படம் நல்லா இல்லன்னு சொல்லிட்டு ரெண்டு நாளா அதப்பத்திய புலம்பிக்கிட்டு இருக்க? " அப்போதுதான் எனக்கே உரைத்தது. நந்தா என்னை எந்த அளவுக்கு பாதித்தது என்று நானே பிறகு தான் உணர்தேன். பின்பு தான் கோவை பல்லவி திரை அரங்கத்தில் ஒரே நாளில் மூன்று காட்சிகள் பார்த்தேன். செம படம்.

தவமாய் தவமிருந்து

சின்ன வயதில் அப்பாவின் அன்பு என்பது கிடைக்கப் பெறாத எனக்கு, ஒவ்வொரு முறை இந்தப் படம் பார்க்கும்போதும், ஏன் நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிட்டவில்லை என்று கண்ணீர் முட்டிக் கொண்டு வரும். சேரன் எடுத்திலேயே இதுதான் பெஸ்ட் என்பது என் கருத்து. தீபாவளிக்கு முந்தின தினம் போஸ்டர் ஒட்டும் ராஜ்கிரணை எண்ணும்போதே கண்கள் ஈரம் ஆகின்றன.

பொற்காலம்

சேரனின் இன்னுமொரு அருமையான படம். மெதுவாக நகரும் அழகான திரைக்கதை, நல்ல நடிப்பு.. "நீ உன் தங்கச்சிக்கு நல்ல அழகான பையனாத்தான் பார்த்த.. எங்கள மாதிரி கருப்பன் எல்லாம் உன் கண்ணுக்குத் தெரியல இல்ல?" வடிவேலு பேசும் இந்த வசனம் ரொம்பப் பிடிக்கும். ஒத்துக் கொள்ள முடியாத கிளைமாக்ஸ் என்றாலும்.. என்னை ரொம்பவே பாதித்த ஒன்று.

எழுதி முடித்து விட்டு பார்த்தால், எல்லாமே உணர்வுப்பூர்வமான படங்கள். பொழுதுபோக்கு என்பதையும் மீறி, எதோ ஒரு விஷயத்தை சொன்ன படங்கள். (ஹ்ம்ம்.. உண்மையிலேயே நமக்கு வயசு ஆகிடுச்சோ?) இன்னும் லிஸ்டில் நிறைய இருந்தாலும், பத்து படங்கள் மட்டுமே சொல்லி இருக்கிறேன். இந்த சங்கிலிதொடரில் இணைந்து கொள்ளும்படி நான் அழைக்க விரும்புவது..

டக்ளஸ் "ராஜூ"

ஜெட்லி

முகிலன்

(பின்னூட்டம் போடும் நண்பர்களும் தங்களுக்குப் பிடித்த படங்களின் பட்டியலை சொல்லலாமே..)

April 5, 2010

இதுவும் கடந்து போகும்..!!!

"நேத்து மேட்ச் பார்த்தீங்களா? முரளி விஜய் பட்டையக் கிளப்பிட்டான்ல.. அடிச்ச எல்லா ஷாட்டுமே கிளாஸ்.. அவன் இப்படிக் கூட விளையாடுவானான்னு எனக்கு ஒரே ஆச்சரியம்.."

"நேத்து மூத்தவள வந்து பார்த்துட்டு போயிருக்காங்க.. என்ன சொல்லப் போறாங்கன்னு ஒரே கவலையா இருக்கு.."

"உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லா நடக்கும்.."

"சும்மா தேவையில்லாம பேசிக்கிட்டு இருந்த.. பல்லப் பேத்துடுவேன்.. எங்க ஆளையும் உங்க ஆளு மாதிரி நினைச்சியா..? பாட்டு எல்லாம் சூப்பரா இருக்கு தெரியும்ல.."

"ஐயோ பாவம்.. சின்ன வயசாத் தெரியுது.."

"அந்தம்மா இப்படி டம்மியா இருக்குறவரைக்கும் அவரு கவலையே பட வேண்டாம் சார்.. பாருங்க.. கண்டிப்பா அடுத்த தடவையும் அவங்க தான் ஜெயிப்பாங்க.. என்ன கட்சிக்கு உள்ள இருக்குற தலைவலி தான் அவரப் போட்டு பாடாப்படுத்துது.."

"யார் எப்படி போனா என்னங்க.. நீங்களும் நானும் வேலைக்கு போய் கஷ்டப்பட்டாத்தான் நம்ம வீட்டுல கஞ்சி.."

"எப்பத்தான் கிளியர் பண்ணுவாங்களாம்?"

"கரெக்டா பரீட்சை நேரத்துல தான் இந்த கட்டைல போறவனுங்க கிரிக்கட் விளையாடுவானுங்க? சனிப்பயலுக.. ஒரு நாடகம் ஒழுங்காப் பார்க்க முடியுறது இல்லை.."

"ஒவ்வொரு தடவையும் டெபாசிட் காலி.. இவரு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மக்களோட கூட்டணின்னு உளறிக்கிட்டு இருப்பாரோ?"

"லேட்டாப்போனா அரை நாள் சம்பளம் சார்.. ச்சீ.. பரதேசிங்க.. நம்ம பொழப்பக் கெடுக்குரதுக்கே வர்றாய்ங்க சார்.."

"ஆனாலும் இந்த வருஷம் வெயில் ரொம்பவே ஜாஸ்திதான் சார்.. பேசாம லீவு போட்டுட்டு பேமிலியோட எங்காவது போயிட்டு வரலாம்னு இருக்கேன்.."

"எல்லா எடத்துலயும் காசக் கொடுத்து ஜெயிச்சா.. என்னா சார் நடக்குது இங்க? அப்புறம் என்ன வெங்காயத்துக்கு ஜனநாயகம் பத்தி பேசணும்?"

"வண்டில ஏறிட்டா ஏதோ ராக்கெட்டுல போறதா நெனப்பு.. அப்புறம் எப்படி?"

அனுதாபங்கள், கவலைகள், புலம்பல்கள், விரக்தி, அரசியல், குடும்பம்.. அத்தனையும்.. ஆனால் இது எதுவுமே தெரியாமல்....

ஓரமாகக் கிடந்த பைக்கில் இருந்து சற்றே விலகி, தன் உதிரம் கொண்டு தானே வரைந்த நவீன ஓவியத்தின் ஊடாக தாறுமாறாக விழுந்து கிடந்தது, சற்றுமுன் வரை அவனாக இருந்த அது.