January 26, 2012

உதிரிப்பூக்கள் - 4

வீட்டுக்குத் தெரியாமல் படம் பார்க்க ஆரம்பித்தபோது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்படி நான் பார்த்த முதல் படம் வான் டாமின் கிக் பாக்ஸர். மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் மூணேகால் ரூபாய் டிக்கட். தின்பண்டம் வாங்கித் தின்னச் சொல்லி சாயங்கால நேரங்களில் தரும் நாலணா எட்டணாக்கள் எல்லாம் சேர்த்து வைத்து இந்தச் சேட்டை. வார இறுதியில் ஏதாவது நண்பன் வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு எஸ்ஸாகி விடுவது வழக்கம்.

பத்மா தியேட்டரில் ஏதோ படம் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில்தான் வில்லாபுரத்தில் முதன்முதலாக அந்தத் தியேட்டரைப் பார்த்தேன். அழகான கவர்ச்சியான பெயர். முகப்பில் டிக்கட் விலை ஒரு ரூபாய், எழுபது பைசா, ஐம்பது பைசா என்பதாக எழுதி வைத்திருந்தார்கள். இந்தக் காலத்திலும் இத்தனை சீப்பாக டிக்கட் தருகிறார்களா என எனக்கு ஆச்சரியம். என்ன படம் என்று தேடினால் தியேட்டர் வாசலில் எந்தப் போஸ்டரும் காணவில்லை. ரொம்ப சிரமப்பட்டுத் தேடியதில் கவுண்டருக்கு வெளியே சின்னதாக கறுப்பு வண்ணப் போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தார்கள். அதிலும் படத்தின் பெயர் மட்டுமே இருந்தது யார் நடித்தது என்ன என்கிற எந்தத் தகவலும் இல்லை. அங்கே கண்டிப்பாக படம் பார்க்க வேண்டும் எனத் தீர்மானம் செய்து கொண்டேன்.

அடுத்த சனிக்கிழமை காலைக்காட்சிக்கு தியேட்டர் வாசலில் நின்றிருந்தேன். உள்ளே நுழைய முற்பட்டவனை வாட்ச்மேன் தடுத்து நிப்பாட்டினார்.

தம்பி எங்க போறீங்க..

அண்ணே உள்ளாற படம் பார்க்க..

அதெல்லாம் கூடாது. உன்னப் பார்த்தாப் பச்சப்புள்ள மாதிரித் தெரியுது. இங்கன இங்கிலிஷ் படம் ஓடுது. உனக்குப் புரியாது. அதனால ஒழுங்கா வீட்டுக்குப் போ..

எனக்கு அவமானமாகப் போய் விட்டது. உள்ளே நுழையக் கூடாது என்பதைக் காட்டிலும் பச்சப்புள்ள என்று சொன்னது ரொம்பவே வலித்தது. அன்றைக்கு ஒரு சத்தியம் செய்தேன்.

என்னைய உள்ள விடமாட்டேன்னு சொன்னீங்கள்லடா இதே தியேட்டர்ல நூறு படமாவாது பாக்குறேனா இல்லையான்னு பாருங்க.

பிற்காலத்தில் அந்த சத்தியத்தை நீரூபித்தும் காட்டினேன். அந்தத் தியேட்டரின் பெயர் - மது.

பிட்டுப்படம் பார்ப்போர் என ஓர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு எனத் தைரியமாகச் சொல்லலாம். அந்தத் தியேட்டர்களுக்கு மக்கள் படம் பார்க்க வரும் அழகே தனி. பெரும்பாலும் காலைக்காட்சிகள். டிக்கட் தரும்வரை கவுண்டர் காலியாகவே இருக்கும். ஏதோ பெரிய வேலை இருப்பது போல படம் பார்க்க வந்தவர்கள் எல்லாரும் வெளியே சுற்றிக் கொண்டிருப்பார்கள். கொடுக்க ஆரம்பித்தவுடன் சடசடவென தலையைக் குனிந்தபடியே உள்ளுக்குள் நுழைந்து டிக்கட் எடுத்து தியேட்டர் இருளுக்குள் காணாமல் போவார்கள். சின்னப் பயல்கள்தான் என்னவென்று தெரிந்து கொள்ள வருகிறார்கள் என்றால் எல்லாம் தெரிந்த பெரிசுகளும் எதற்காக இதற்குக் கிடந்து இப்படி அலைகிறார்கள் என எனக்குப் புரிவதேயில்லை. படம் போட்டுக் கொஞ்ச நேரம் ஆன பிறகு உள்ளே வருபவர்கள் தட்டித் தடவி சீட்டைத் தேடிப் பிடித்து உட்கார்ந்த மறுநிமிசம் பக்கத்து சீட்டில் இருப்பவரிடம் கேட்கும் முதல் கேள்வி சீன் எதுனாச்சும் போயிருச்சா என்பது இன்னும் பெரிய காமெடி.

பிட்டுப்படங்களைப் பொறுத்தவரை தொண்ணூறுகளே அவற்றின் பொற்காலம் என்று சொல்லலாம். ஷகிலாவும் ரேஷ்மாவும் சேர்ந்து லாலேட்டன்களுக்கும் மம்முக்காக்களுக்கும் இனிமா கொடுத்த காலமது. சின்ன இன்வெஸ்ட்மெண்ட் பெத்த லாபம் - இதுதான் பிட்டுப்படங்களின் தாரகமந்திரம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு மாடி வீடு, போதையேற்றும் அழகிகள் இரண்டு பேர், நாலு மங்குனி நாயகர்கள் இருந்தால் போதும் ஒரு படமே எடுத்து விடலாம். நல்ல பேமசான நடிகையை வைத்துத் தனியே சில காட்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்ற காட்சிகளோடு இணைத்து வைத்தால் வேலை முடிந்தது. பெரிய படங்களை எடுத்து அவை ஓடுமா ஓடாதா எனத் தெரியாமல் கையைச் சுட்டுக் கொள்வதை விட இதுமாதிரியான மினிமம் கியாரண்டி படங்களை ஓட்டுவதையே தியேட்டர்க்காரர்கள் அப்போது விரும்பினார்கள்.

வெளிநாட்டில் எடுக்கப்படும் பி கிரேடு ஆங்கிலப் படங்கள், நேரடித் தமிழ்ப் படங்கள், முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே எடுக்கப்படும் தமிழ்ப்படங்கள் என இவற்றிலும் நிறைய வகைகள் உண்டு. அதிலும் நம் தமிழ் மக்கள் செல்லம் கொஞ்சி செல்லம் கொஞ்சி ஆங்கிலம் பேசுவதைப் பார்க்க பெரிய கூத்தாக இருக்கும். படங்கள் எல்லாம் அதிகபட்சம் ஒரு மணி நேரம்தான் ஓடும் என்பதால் பெரிய அளவில் நேரத்தைச் சாப்பிடாது என்பது இதிலிருக்கும் இன்னொரு நல்ல விசயம். பின்நவீனத்துவம் என்று இன்று சொல்லப்படுவதெல்லாம் அந்தக் காலத்திலேயே செய்து காட்டியது இந்தத் தியேட்டர்கள்தான். படம் போட்டக் கொஞ்ச நேரத்திலேயே கிளைமாக்ஸ் வரும். அதன் பிறகு படத்தின் முதல் சீன். செத்துப் போனவன் பிழைத்து வந்து வசனம் பேசிக் கொண்டிருப்பான். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கண்டதும் ஓடிக் கொண்டிருக்கும். அது கிடக்கிறது கழுதை அதை எவன் பார்த்தான்?

துரையில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஏழு எட்டு தியேட்டர்கள் வரை இந்தப்படங்களை ஓட்டிய காலகட்டமும் இருந்தது. வில்லாபுரம் மது, முத்துப்பட்டி ராஜா, வண்டியூர் பழநிமுருகன், புதூர் லட்சுமி, சிம்மக்கல் ரூபா, அரசரடி ராம் விக்டோரியா, அண்ணா பஸ் ஸ்டாண்ட் ஹாஜிரா, பெரியார் நிலையம் தங்கரீகல். ஒவ்வொரு தியேட்டரும் படம் திரையிடுவதில் தங்களுக்கென சில வழிமுறைகளையும் வைத்திருப்பார்கள். அதில் எனக்கு ரொம்பப் பிடித்தது ராஜா தியேட்டர்.

முத்துப்பட்டியில் கம்மாய்க்குள் இருந்தது ராஜா தியேட்டர். மூன்று மாதம் ஓடும். மூன்று மாதம் சீல் வைத்துப் பூட்டிக் கிடக்கும். அதைத் தியேட்டர் என்று கூட சொல்ல முடியாது. இரண்டு பக்கமும் திறந்து கிடக்கும் ஒரு கூரைக் கொட்டாய். நான்கு வேட்டியை ஒன்றாக சேர்த்துக் கட்டிய திரை. ஆப்பரேட்டர் ரூமில் இருந்து எப்போதும் கிர்ர் என்று சத்தம் வந்தபடி இருக்கும். அந்த ரூமை ஒட்டி நான்கைந்து சேர் வரிசை. அடுத்ததாக சாய்வதற்கு முதுகில்லாத பென்ச்சுகள் கொஞ்சம் கிடக்கும். அதையும் தாண்டி வெறுமனே மண்ணைக் குவித்து வைத்திருப்பார்கள். சுவரில் ஓரமாக இரண்டு நைந்து போன ஸ்பீஇக்கர்கள். ஸ்டீரியோ எஃபெக்ட். தியேட்டரில் டிக்கட்டோ சைக்கிள் ஸ்டாண்டுக்கு டோக்கனோ கிடையாது. வெறுமனே வாசலில் இருக்கும் மனிதரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே நுழைவதுதான். அந்தத் தியேட்டரில் ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டுமே. மாலையும் இரவும். பகலில் தியேட்டருக்குள் வெளிச்சமாக இருக்கும் என்பதால் படம் போட முடியாது.

மாலை ஆறு மணிக்குப் பாடல்கள் போடத் தொடங்குவார்கள். அது தியேட்டர் திறந்து விட்டார்கள் என்பதற்கான சிக்னல். எனக்கு ரொம்பப் பிடித்த பாடலான தேவதை இளந்தேவியை முதல் முதலாக ராஜாவின் கொர கொர ஸ்பீக்கர்களில்தான் கேட்டேன். அந்தப் பாட்டு என்னப் படமென்றுத் தேடித்திரிந்து பதிந்தது தனிக்கதை. மிகச்சரியாக ஆறு நாப்பதுக்கு ராஜாவில் அந்தப் பாடல் ஒலிக்கும். அச்சம் என்பது மடமையடா.. அது ஒலித்தால் படம் போடப் போகிறார்கள் என்று அர்த்தம். எனக்கு எந்தப்படமும் முழுதாகப் பார்க்கத்தான் பிடிக்கும் என்பதால் முதலிலேயே போய் விடுவேன். ஆரம்ப நிலையில் தியேட்டருக்குள் அங்கொருவர் இங்கொருவராக நாலைந்து பேர் மட்டுமே இருப்பார்கள். ஏழரை மணிக்கு ஒரு மணி அடித்து இடைவேளைக்கு குண்டு பல்பை எரிய விடுவார்கள். ஐந்து நிமிட இடைவேளை முடிந்துத் திரும்பும்போது எங்கிருந்து வந்தார்கள் எனத் தெரியாமல் மொத்தத் தியேட்டரும் நிரம்பி வழியும். ஆனால் அத்தனை கூட்டம் இருந்தாலும் துளி சப்தம் இருக்காது. அடுத்த இருபது நிமிடங்கள் படத்துக்கு சம்பந்தமே இல்லாத சிலபல சமாச்சாரங்கள் ஓடி அடையும்வரை அந்த அமைதி அப்படியே இருக்கும்.

படம் சரி இல்லை என்றால் மற்ற தியேட்டர்களில் கத்திக் குமிக்கும் நம் மக்கள் ராஜாவில் மட்டும் தமக்குள் புலம்பியபடி கலைந்து போவார்கள். அதையும் மீறி சத்தம் போட்டால் சட்டென்று தியேட்டர்காரர்கள் கையில் கம்புடன் உள்ளே நுழைந்து விடுவார்கள். சத்தம் போட்டவனின் மொத்தக் குடும்பமும் கண்டமாகிப் போகும் அளவுக்கு அர்ச்சனை நடக்கும் என்பதாலேயே மக்கள் அமைதியாகப் போய் விடுவார்கள். மழைக்காலங்களில் கம்மாய் சேறும் சகதியுமாக இருக்க ரப்பர் செப்பல்களைத் தொலைத்தாலும் பரவாயில்லை என நீந்திப் போய் அங்கே படம் பார்த்த காலங்களை எப்போதும் மறக்க முடியாது.

நான் அதிகம் படம் பார்த்த தியேட்டர் மது. ஒரு கட்டத்தில் வாராவாரம் வெள்ளியென்று ரெகுலராக அங்கே போகும் கஸ்டமராக இருந்திருக்கிறேன். ஒரு வாரம் போக வில்லையென்றால் கூட சைக்கிள் ஸ்டாண்ட்காரரும் டிக்கட் கொடுப்பவரும் என்ன தம்பி உடம்பு முடியலையா எனக் கேட்கும் அள்வுக்கு நெருக்கம். மதுவில் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள். எட்டரை மணி காட்சிக்கு மட்டும் ஒரு படம் ஓடும். மற்ற நாலு காட்சியும் வேறு படம். மாப்ள எட்டரை மணி ஷோதான் ஸ்பெசலாம்டா கண்டிப்பா அது வேறு தினுசா இருக்கும் பாரேன் எனச் சொன்ன நண்பனை நம்பி நாங்கள் பார்த்த ஒரே எட்டரை ஷோவில் நடிகர் செந்தில் சிங்கப்பூர் போனக் கதையைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கு போட்ட பிட்டும் நாங்கள் ஏற்கனவே பார்த்ததாக இருக்க நண்பனுக்கு நல்ல அர்ச்சனை. என் வாழ்வில் நான் பார்த்த ஒரே எட்டரைக் காட்சி அதுதான்.

தங்கரீகலைப் பொறுத்தவரை நேரடி ஆங்கிலப்படங்கள் மட்டுமே. ரயில்வேயில் என் அப்பா கூட வேலை பார்க்கும் ஆட்கள் எல்லாம் வருவார்கள். நான் கவலையே படாமல் உள்ளே போவேன். என்னைப் பார்த்து அவர்கள் எல்லாரும் தலையில் முக்காடு போட்டுக் கொள்வார்களே தவிர நான் பயந்தது கிடையாது. பழநிமுருகன் ஒரு காலகட்டத்தில் இந்தப் படங்களில் தி பெஸ்ட் என்பதாக இருந்தது. இடைவேளைக்கு முன்புன் பின்பும் பத்துப் பத்து நிமிசம் பிட்டு ஓட்டிய ஒரே தியேட்டர். ராம்விக்டோரியா நகருக்கு உள்ளே இருந்ததால் பேருக்கு ஓட்டுவார்கள். ஆங்கிலப் படங்கள் போட்ட ரூபாவும் லட்சுமியும் தொண்ணூறுகளின் இறுதியிலேயே மூடிவிட்டார்கள். எல்லாத் தியேட்டர்களும் மூடிவிட்ட நிலையில் தைரியமாக படம் ப்ளஸ் பிட்டு ஓட்டிவந்த ஹாஜிராவும் சமீபமாக ஒரு வருடத்துக்கு முன்பாக மூடிவிட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு பண்பாட்டு நிகழ்வே முடிவுக்கு வந்து விட்டதைப் போன்ற உணர்வு.

த்தனை படங்களை தேடித் தேடி பார்த்திருப்பேன். அதனால் கிடைத்தது என்னவென்று யோசித்தால் ஒன்றுமே இல்லை. ஹேய் நாங்க எல்லாம் எத்தனை படம் பார்த்தவய்ங்கன்னு தெரியும்ல என்கிற அலப்பறை அன்றைக்கு பெரிதாக இருந்தது. அவ்வளவே. பீகாரில் நண்பர்களோடு பார்த்த படத்தில் சீன் பை சீன் நான் சொல்ல தலைவா நீங்க எங்கேயோ போயிட்டீங்க என்று அவர்கள் என் காலில் விழுந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. ஒரு கனவைப் போல எல்லாம் முடிந்தாகி விட்டது. இன்றைக்கு குறுந்தகடுகளும் இணையமும் மலிந்து விட்ட சூழலில் தியேட்டர்களில் பார்க்கும் படங்களின் தேவை இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் யார் எந்நேரம் பார்ப்போர்களோ என உயிரைக் கையில் பிடித்தபடி குறுகுறுப்போடு தியேட்டர்கள் தேடி அலைந்த காலம் திரும்பி வருமா?

னவுக்கன்னி என்றொரு படம் மதுவில் போட்டிருந்தார்கள். கூட்டம் அம்முகிறது. ஹவுஸ்புல். நிறைய பேருக்கு உட்கார இடமில்லை. நான் நண்பர்களோடு வாசலின் அருகே அமர்ந்து இருக்கிறேன். அப்போது வெளியே சில குரல்கள்.

யோவ்.. டிக்கட் இல்லைய்யா.. கெளம்புங்க..

அய்யா.. அய்யா.. அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. வாடிப்பட்டில இருந்து வண்டி கட்டி வந்திருக்கோம். ஒரு ஓரமா நின்னு பார்த்திட்டுப் போயிடுறோம். கொஞ்சம் பார்த்து செய்ங்க..

சரி சரி.. தொலைங்க..

சிரித்தபடி உள்ளே வந்தவர்களின் கண்களில் ஒளிந்து கிடக்கும் அந்த ஆர்வமும் பயமும் குறுகுறுப்பும் இன்றைக்கு மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. அது ஒரு அழகிய நிலாக்காலம்.

(கூகிள் ப்ளஸ்ஸில் இந்தப் பதிவுக்கான ஆரம்பத்தைத் தந்த நண்பர்கள் குசும்பன், சென்ஷி, முரளிக்கண்ணன், மேவி, மாம்ஸ் க ரா மற்றும் வேலன் அண்ணாச்சிக்கு..)

January 18, 2012

உதிரிப்பூக்கள் - 3

போன வாரம் புத்தகத் திருவிழாவுக்குப் போவதற்காக சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸில் டிக்கட் போட்டிருந்தேன். டிரையினில் என்னுடைய சீட்டைத் தேடிப்பிடித்து பையை வைத்து விட்டு ஆசுவாசமாக அமர்ந்தவன் என்னருகே இருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தேன். ஒரு சிலரைப் பார்த்தவுடன் என்ன ஏதேன்று தெரியாமலேயே பிடித்துப் போய்விடும் இல்லையா? அந்தப் பெண்ணும் அந்த ரகம்தான். வட்டமுகம். மாநிறம். ஒல்லி என்றோ தடிமன் என்றோ சொல்ல முடியாத இடைப்பட்ட உடல்வாகு. நீல வண்ணச் சுடிதாரும் அதே நிறத்தில் பூப்போட்ட துப்பட்டாவும் அணிந்திருந்தது அவளுக்கொரு தனி அழகைத் தந்தது. அதற்கும் மேலே அதே நிறத்தில் ஒரு ஜீன்ஸ் ஓவர்கோட் அணிந்து பார்க்க அத்தனை லட்சணமாக இருந்தாள்.

விளக்குகள் எல்லாம் அணைத்த பின்பாக அனைவரும் அவரவர் இருக்கைகளில் ஏறிப் படுத்துக் கொண்டோம். என்னுடையது அப்பர்பெர்த். எனக்கு எதிர்த்தாற்போல் இருந்த மிடில் பெர்த் அவளுக்கு. நான் இருந்த இடத்தில் இருந்து அவளை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவள் கையில் உயர்ரக செல்போன் ஒன்றை வைத்து வெகுநேரமாக என்னென்னமோ செய்து கொண்டிருந்தாள். அந்த இருட்டில் செல்போன் வெளிச்சத்தில் மின்னிய முகமும் அதில் உறைந்திருந்த சிரிப்பும் ஒருக்களித்து அவள் படுத்திருந்த வாகும் கோவில் சிலையென்று உயிர் பெற்று வந்ததென அவளை வேறொரு வடிவாய் மாற்றி இருந்தது. அவள் உறங்கிய பின்னரும் வெகுநேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மறுநாள் காலை தாம்பரத்தில் அவள் இறங்கிப் போன பின்பும் அவளுடைய முகமும் சிரிப்பும் என்றும் அழியாத சித்திரமாய் என்னுள் தேங்கி விட்டதை என்னால் உணர முடிந்தது. கூடவே என்னுள் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் சில நினைவுகளையும் அவள் கிளர்த்தி விட்டிருந்தாள்.

நம் எல்லோருக்குமே இது மாதிரியான நிகழ்வுகள் நடந்திருக்கும் வாய்ப்புகள் உண்டு. எதேச்சையாக எங்காவது பார்த்திருப்போம். ஆனால் காலத்துக்கும் அவர்களை மறக்க முடியாமல் போய் விடும். யாரென்றே நாம் அறிந்திராத ஜீவன்கள் வெகு குறுகிய காலத்தில் நம் வாழ்வின் நினைவுகளில் ஒரு அங்கமாக மாறிப் போவதை என் வாழ்வில் நிறைய முறை அனுபவித்து இருக்கிறேன். பொதுவாகப் பெண்களே எப்போதும் எனக்குப் பிடித்தமானவர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு பெண்ணின் பாதிப்பு என்னுடனே இருந்து வருகிறது. பதின்மத்தில், குறிப்பாய் என்னுடைய பள்ளிக்காலத்தில், நான் சந்தித்த பெண்களும் அவர்களுடைய நினைவுகளும் எப்போதும் என்னால் மறக்க முடியாதவை.

நான் அப்போது ஐந்தாம் வகுப்பு பரீட்சை எழுதியிருந்தேன். எனக்கு விவரம் புரிய ஆரம்பித்து இருந்த சமயம். சுப்ரமணியபுரம் கல்லு சந்தில் நான்கு வீடுகள் இருந்த ஒரு காம்பவுண்டில் எங்கள் வீடு இருந்தது. எங்கள் வீட்டுக்கு அடுத்து இருந்த மீனாக்கா வீட்டுக்கு விடுமுறைக்கு வந்திருந்தவளின் பெயர் மீனாட்சி. என்னை விட ஒரு வயது கம்மி. வந்து இரண்டு மூன்று நாட்களிலேயே அவள் எனக்கு நெருங்கிய தோழியாகிப் போனாள். அந்த விடுமுறை முழுவதும் நான் அவளுடனே விளையாடிக்கழித்தேன். சாப்பாடு, தூக்கம் எல்லாமே ஒன்றாகத்தான். மற்ற பையன்கள் எல்லாம் கோபம் கொண்டு என்னோடு சண்டைக்கு வந்தபோதும் நான் கண்டு கொள்ள வில்லை. எனது வீட்டில் திருப்பதி சுற்றுலாவுக்குப் போனபோது கூட அவர்களோடு போக மறுத்து மீனாக்கா வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமளவுக்கு மீனாட்சி மீதான என் பிரியம் ரொம்பவே அதிகமாக இருந்தது.

எந்த ஒரு ஆரம்பத்துக்கும் முடிவு என்ற ஒன்று உண்டல்லவா? அந்தக் கோடை விடுமுறையும் முடிவுக்கு வந்தது . சிறிது நேரத்தில் மீனாட்சி ஊருக்கு கிளம்பப் போகிறாள். நானும் அவளும் மொட்டை மாடியில் தனியாக இருக்கிறோம். அவள் கண்களில் இருந்து கண்ணீர் மாலை மாலையாக வழிந்து கொண்டே இருக்கிறது. "நீ இல்லாம நான் எப்படிடா இருப்பேன்.. நாம ரெண்டு பேரும் ஒண்ணாவே இருக்க முடியாதா..?" அவளுக்கான பதில் என்னிடம் இல்லை. அவளையே வெறித்துப் பார்த்தபடி நிற்கிறேன். "நான் அடுத்த லீவுக்கும் இங்க வருவேன்.. நாம மறுபடி பார்க்கணும்டா.. என்னை மறந்துட மாட்டியே..?" முதல் முறையாக ஒரு ஜீவன் நான் அவள் கூடவே இருக்க வேண்டும் என விரும்புவதாகச் சொன்னது அப்போதுதான். நான் அழுது கொண்டே கொண்டே தலை அசைத்தேன். அதுதான் நான் அவளைக் கடைசியாக பார்த்தது. கிளம்பிப் போய் விட்டாள். இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீனாக்காவின் குடும்பமும் வீட்டை காலி பண்ணிக் கொண்டு போய் விட்டார்கள். எங்கோ வாழ்ந்து வரும் மீனாட்சிக்கு என்னை இப்போதும் நினைவிருக்குமா என்று தெரியவில்லை.

ன்னுடைய எட்டாம் வகுப்புக்காலம். சோலைஅழகுபுரத்தில் நான் வசித்தபோது எனக்கு எதிர்வீட்டில் ஒரு அய்யர் வீட்டுப்பெண் இருந்தாள். என்னை விட ஐந்தாறு வயது மூத்தவள். மொட்டை மாடியில் வடகம் காய வைத்துக் கொண்டிருந்தபோதுதான் அவளை முதல் முதலாய்ப் பார்த்தது. பார்த்தவுடன் அவளை எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது. அவள் மீது எனக்கிருந்த ஈர்ப்பை இன்னதென்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் எனக்குள் உருவாகி இருந்தது. அதன் பின்பாக அவள் வீட்டுப்பக்கம் போகும்போதெல்லாம் அவள் வீட்டின் ஜன்னல்களைப் பார்த்தபடி நடப்பது என் வழக்கமாகிப் போனது. எங்கிருந்தாவது அவள் முகம் தெரிந்திடாதா என ஆவலாக இருக்கும். முகம் தெரிந்துவிட்டால் அன்றைய தினம் மிகுந்த சந்தோசத்துடன் கழியும்.

எல்லா நாட்களையும் போல அதுவும் ஒரு நாளெனத்தான் எண்ணியிருந்தேன். பள்ளியிலிருந்து திரும்பி உடைமாற்றிக் கொண்டு அவள் வீட்டின் முன்பாக நின்று கொண்டேன். வெகுநேரம் நான் அங்கேயே பார்த்துக் கொண்டிருக்க சற்றும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் கதவைப் படாரென்று திறந்து கொண்டு அவள் வெளியே வந்தாள். முகமெல்லாம் சிவந்து கண்களில் கோபத்தோடு என்முன் நின்றவளிடம் என்ன சொல்வதெனத் தெரியாமல் பேயடித்தவன் போல அவளையே பார்த்தபடி இருந்தேன். இத்தனை நாளாக என்னிடம் பேச மாட்டாளா என நான் ஏங்கியவள் வாய் திறந்து முதன்முறையாகப் பேசினாள்.

“நானும் தெனமும் பார்த்துக்கிட்டே இருக்கேன்.. போறப்பயும் வர்றப்பயும் இங்கனயே பாக்குற.. நாங்க என்ன அவுத்துப் போட்டாத் திரியிறோம்.. இன்னொரு தரம் உன்னைய இந்தப்பக்கம் பார்த்தேன், வீட்டுல சொல்லிக் கொடுத்து கெட்ட பிரச்சினை ஆகிப்போகும்.. ஆமா..”

சடசடவெனப் பேசிவிட்டு உள்ளே போய்விட்டாள். இதற்கு அவள் பேசாமலேயே இருந்திருக்கலாம். அவள் பேசியதன் சாரம் எனக்குப் புரியவே வெகுநேரம் ஆனது. அது புரிந்தபோது அவள் மீது வைத்திருந்த பிரியமும் காணாமல் போயிருந்தது. அது அவள் பேசிய விதமா இல்லை நான் எதிர்பார்த்தது நடக்காத ஏமாற்றமா எனப் புரியவேயில்லை.

ராகினி எல்கேஜி முதலே என்னோடு பள்ளியில் ஒன்றாகப் படித்தவள். என்னுடைய அம்மாவும் அவளுடைய அம்மாவும் நெருங்கிய தோழிகளும் கூட. அவளைப் பற்றி வித்தியாசமான எண்ணங்கள் ஏதும் எனக்குள் இருந்தது கிடையாது. ஆனால் பத்தாம் வகுப்பு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வந்தபோது நான் அவளைப் பார்த்ததில் இருந்த வித்தியாசத்தை என்னால் உணர முடிந்தது. முன்னைப்போல அவளுடன் இயல்பாய் சிரித்துப் பேச முடியவில்லை. ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத தடை இருந்தாற்போல உணர்வு. ஆனாலும் அவளோடு பேச வேண்டும் எனவும் அவள் கூடவே இருக்க வேண்டும் என்றும் ஆசையாய் இருக்கும். அவள் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதாக என்னை வெகு தைரியமானவனாகவும் சரியானவனாகவும் அவள் முன்னே காட்டிக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கினேன். பட்டும் படாமலும் அவளுக்கும் அது புரிந்தே இருந்தது.

வருட முடிவில், இன்னும் சில தினங்களில் புத்தாண்டு எனும் சூழ்நிலையில், ராகினி தானாக என்னிடம் வந்து ஒரு பெட் கட்டினாள். உண்மையிலேயே எனக்குத் தைரியம் ஜாஸ்தி என்றால் என் பெயரில் அவளுக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்ப வேண்டும். அவ்வளவுதானே மேட்டர் விட்டேனா பார் என்று அழகான ஒரு வாழ்த்தை அட்டையை வாங்கி யுவர்ஸ் ஒன்லி யுவர்ஸ் என்று கையெழுத்துப் போட்டு அனுப்பி விட்டு ஹாயாக இருந்தேன். கண்டிப்பாக இன்னும் சில நாட்களில் நல்லது ஏதாவது நடக்கும் என்றும் நம்பினேன். நான் நினைத்தது போலவே சில விசயங்கள் நடந்தது. ஆனால் அது அத்தனை நல்லதாக இல்லை என்பதுதான் சோகம்.

புத்தாண்டுக்கு இரண்டு நாட்கள் கழித்து இரண்டு பேர் காலை நேரத்தில் என் வீட்டுக்கு வந்து தனியே அழைத்துப் போனார்கள். ராகினிக்கு நான் அனுப்பிய அட்டை அவர்கள் கையில் இருந்தது. அவர்களில் ஒருவன் நான்கு வருடங்களாக அவளை விரும்பி வருகிறானாம். அவனிடம் என்னைக் கோர்த்து விடத்தான் அந்தப் பக்கி என்னை வாழ்த்து அட்டை அனுப்ப சொல்லியிருக்கிறாள். இது தெரியாமல் நானாக போய் சிக்கிக் கொண்டேன். ஒழுங்கா இருந்துக்க இல்லைன்னா வீட்டுல சொல்லி ஸ்கூல விட்டே தூக்கிடுவோம் என்று அந்தக் காட்டான்கள் மிரட்டி விட்டுப் போய் விட்டார்கள். திரும்பி வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்தில் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. நல்ல காய்ச்சல். டாக்டரிடம் போனால் உடம்புக்கு ஒன்றுமே இல்லை என்கிறார். பிறகு குரு தியேட்டரில் போய் மின்சாரக் கனவு பார்த்து அந்தக் காய்ச்சலை அடக்க வேண்டியதாகி விட்டது. அதற்குப் பின்பு பள்ளி இறுதிவரை ராகினி இருந்த பக்கம் கூட நான் தலை வைத்துப் படுக்கவில்லை என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

யில்வே காலனிக்கு நான் குடி போயிருந்த சமயம். ஜீவாநகரில் இருந்த எனது பள்ளிக்கு அரசரடியில்தான் பஸ் ஏற வேண்டும். விடுமுறை முடிந்து பள்ளிக்குப் போகவேண்டிய முதல் நாள். பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபோதுதான் எதிர் ஸ்டாப்பில் அவளைப் பார்த்தேன். தேவதை. நந்தவனத்தேரு படத்தில் வரும் ஸ்ரீநிதி போலவே இருந்தாள். என்னமோ அவளை ரொம்பப் பிடித்திருந்தது. டக்கென்று பள்ளிக்குப் போகும் திட்டத்தைக் கைவிட்டு அந்தப் பெண் போன பஸ்ஸில் ஏறிவிட்டேன். தொடர்ந்து போய் அவள் குலமங்கலம் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இதே வேலைதான். காலையில் பஸ் ஏறி அவளைப் பள்ளியில் விடுவது. எங்காவது சுற்றிவிட்டு மாலை ஆனவுடன் அவள் திரும்பி வரும்போதும் கூட வருவது. நான்காம் நாள் காலை நான் பஸ் ஸ்டாப்புக்குப் போனபோது அவள் இல்லை. குழப்பமாக நின்றிருந்த என்னை ஒரு பைக் கடந்து போனது. அவள் அந்த பைக்கில் பின்னாடி உட்கார்ந்து இருந்தாள். வண்டியை ஓட்டிப்போனவன் என்னை முறைத்தபடியே போனதாக எனக்குள் ஒரு உணர்வு. வேறுபுறமாகத் தலையைத் திருப்பிக் கொண்டேன். அதன்பிறகு நான் அவளை அந்த பஸ் ஸ்டாப்பில் பார்க்கவே முடியவில்லை.

த்தனை முகங்கள். எத்தனை நினைவுகள். விட்டால் சிந்துபாத் கதை மாதிரி இந்த நினைவுகள் போய்க் கொண்டே இருக்கும் என்பதால் இதை இங்கேயே நிறுத்திக் கொள்ளுவோம்.

ஊரிலிருந்து திரும்பியபிறகு வண்டியில் பார்த்த பெண் பற்றியும் பழைய நினைவுகள் குறித்தும் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சாமி சிரித்தபடி சொன்னான்.

“மாப்ள.. நாளப்பின்ன உனக்கு கல்யாணம் நிச்சயமானா ஆட்டோகிராஃப் சேரன் மாதிரிக் கிளம்பிடாதடா.. தாங்காது.. உன்ன வச்சு அந்தப் படத்த எடுத்தா முப்பதாறு மணி நேரம் ஓடும் போலயே.. தூ.. இதெல்லாம் ஒரு பொழப்பு..”

January 14, 2012

வேட்டை - திரைப்பார்வை

அய்யயயோ.. எங்களை யாராவது காப்பாத்துங்களேன்..

ப்ளீஸ்.. வேண்டாம்.. என்னை விட்டுருங்க..

என்னையப் பார்த்தா உனக்குப் பாவமா தெரியலையா..

நாங்க என்ன பாவம் செஞ்சோம்...

இந்த வசனம் எல்லாம் பொதுவாக தியேட்டரில் ஓடும் படங்களில் வருபவை. ஆனால் இதே வசனங்கள் தியேட்டரில் படம் பார்க்கும் மக்களிடம் இருந்து வந்தால்? அங்கே வேட்டை ஓடுகிறது என்று அர்த்தம்.



1990 களில் கே.பாக்யராஜ் அவசர போலிஸ் 100 என்றொரு படம் எடுத்தார். எம்.ஜி.ஆர் நடித்து வெளிவராத அண்ணா நீ என் தெய்வம் படத்தில் இருந்து சில காட்சிகளையும் இணைத்து இருப்பார். இரண்டு பாக்யராஜ்கள். அண்ணன் பயந்தாங்கொள்ளி. போலிசாக இருப்பார். தம்பி தைரியமானவர். தவறுகளை தைரியமாக தட்டிக் கேட்பவர். தம்பி செய்யும் வீரதீர செயல்களின் பலன் எல்லாம் அண்ணனுக்குக் கிடைக்கும். ஒரு கட்டத்தில் தம்பி ஆபத்தில் சிக்கிக் கொள்ள அண்ணனுக்கு வீரம் வந்து வில்லன்களை நொக்கி எடுக்க எல்லாம் சுபம். இந்த படத்தைத்தான் ரீமேக் செய்து ரசிகர்களை வேட்டை ஆடி இருக்கிறார் லிங்குசாமி.

கிட்டத்தட்ட வடிவேலு நடிக்க வேண்டிய கைப்புள்ள அண்ணன் கேரக்டரில் மாதவன். பார்க்கவே பாவமாக இருக்கிறது. வருகிறவன் போகிறவன் எல்லாரிடமும் அடி வாங்குகிறார். போதாக்குறைக்கு ஆர்யாவும் மாதவனை சந்தடி சாக்கில் ஒரு மிதி மிதித்துக் கொள்கிறார். கால்களில் அடிபட்டுக் கிடக்கும் மாதவனுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக ஆர்யா அடி வாங்கும் காட்சியில் தியேட்டரே சிரிக்கிறது. என்ன கொடுமை சார் இது? எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் சுற்றும் அதே ஆர்யா. பஞ்ச் பேசுவதும் சண்டை போடுவதும் மட்டுமே வேலை. நடுநடுவே வரும் காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்.



சமீரா ரெட்டியை தாவணியில் பார்த்தபோது தோன்றியது - முப்பது வருசத்துக்கு முன்னாடியே கல்யாணம் ஆகி இருக்க வேண்டியவ.. இன்னும் இப்படியே சுத்திக்கிட்டு இருக்கா. வாயாடிப் பெண்ணாக அவர் பேசும் வசனங்கள் எதுவுமே லிப் சின்க் ஆகாமல் படுத்தி எடுக்கிறது. அவரும் படத்தில் இருக்கிறார். அவ்வளவே. சமீராவின் தங்கையாக அமலா பால் ஆர்யாவின் ஜோடி. அவருடைய உடல்வாகுக்கு கவர்ச்சி காட்டினால் விளங்கவில்லை. ஆனால் மேக்கப் போட்ட அமலாவை விட மேக்கப் இல்லாத அந்தக் காந்தக் கண்களே அழகு. படத்தில் ஓரளவு ரசிக்கும்படியாக இருப்பவர் அவர் மட்டுமே. ஹீரோ எண்ட்ரி ஆகும்வரை டெர்ரர் மேனாகவும் அவர் வந்த பின்பு காமெடி பீசாகவும் மாறும் வழக்கமான வில்லனாக அசுதோஷ் ராணா. கடைசி காட்சி வரை டாய் டாய் என்று கத்திவிட்டு கிளைமாக்சில் செத்துப்போகும் ரொம்ப நல்ல மனிதர்.

மொத்த ரணகளத்திலும் ஒரே கிளுகிளுப்பு படம் முடிவதற்கு சற்று முன்னால் வரும் பப்பரப்பா பாப்பப்பா பாட்டு. அதைத் தவிர்த்து மற்ற பாடல்களில் எல்லாம் செமத்தியாக கோல் போட்டிருக்கிறார் யுவன்சங்கர் ராஜா. படத்துக்கு ஒளிப்பதிவு நீரவ் ஷா என்று டைட்டிலில் போட்டார்கள். வேறு எதுவும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சண்டைக் காட்சிகள் அமைத்த புண்ணியவான் யாரோ.. எங்கிருந்தாலும் வாழ்க. அத்தனை பேரும் ஆர்யா விரல் பட்டாலே பறக்கிறார்கள். சரி விட்டுரலாம்.. மொத்தக் கோலமுமே அலங்கோலம் எனும்போது இந்தப் புள்ளி சரியில்லை அந்த வண்ணம் சரியில்லை எனப் புலம்பி என்ன பிரயோஜனம்?



தமிழ் சினிமாவில் இரண்டு இயக்குனர்களை தகுதிக்கு மீறிப் புகழ்கிறார்கள் என்பது எனது எண்ணம். ஒருவர் கவுதம். இன்னொருவர் லிங்குசாமி. அதில் எந்தத் தவறும் இல்லை என மீண்டும் நிரூபித்து இருக்கிறார் லிங்குசாமி. மொக்கைக் கதை. செம மொக்கைத் திரைக்கதை. ஆனால் இந்தப் படத்தை எடுத்து விட்டு என்னமோ கிம் கி டுக் ரேஞ்சுக்கு ஒவ்வொரு சேனலாக வந்து அந்த ஆள் செய்கிற அலப்பரை இருக்கே.. முடியலைடா சாமி.

எட்டு வருசமாக விஜய் படம் பார்ப்பது கிடையாது. நண்பனுக்காக அதை மாற்ற வேண்டாமே என இந்தப் படத்துக்குப் போனேன். எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேண்டும்.

வேட்டை - அடப் போங்கையா.. படத்துக்குப் போனதுல ஒரே நல்ல விசயம் மசாலா கஃபே டிரைலர் மட்டும்தான்.

January 12, 2012

உதிரிப்பூக்கள் -2

யில்வே காலனியில் எனது குடும்பம் குடியேறியபோது நான் பத்தாவதை முடித்திருந்தேன். குடிபோன இரண்டே மாதங்களில் நாலைந்து நெருங்கிய நண்பர்களைச் சம்பாதிக்க முடிந்தது. எங்கள் நண்பர்கள் குழாம் எப்போதும் என் வீட்டு வாசலில் இருக்கும் குழாயடி ஒன்றில்தான் பழியாய்க் கிடக்கும். எனவே எங்கள் செட்டின் பெயராகவும் அதுவே முடிவானது - குழாயடி குரூப்ஸ்.

அந்தக் காலகட்டத்தில்தான் மதுரையில் போஸ்டர் ஒட்டுவதும் ஃபிளக்ஸ் வைப்பதும் பிரபலமாகத் துவங்கி இருந்தது. விதவிதமாக ஒட்டப்படும் போஸ்டர்களும் அதில் காணப்படும் பட்டப்பெயர்களையும் பார்க்கும் போதெல்லாம் ஆவலாதியாக இருக்கும். நாமளும் நம்ம குரூப்ஸ் பேரைப் போட்டு ஜம்முன்னு போஸ்டர் அடிக்கணும்டா மாப்ள என எங்களுக்குள் பேசிக் கொள்வோம். அதற்கான முதல் வாய்ப்பு எனது நண்பன் சாமியின் அண்ணன் திருமணத்தின் போதுதான் கிடைத்தது.

எங்கள் நண்பர் சாமியின் இல்லத் திருவிழாவுக்கு வரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் - இவண்.. குழாயடி குரூப்ஸ். நான்கு பீஸ்களாக மெகா சைஸ் போஸ்டர் அடித்தோம். திருமணத்துக்கு முந்தைய நாள் இரவெல்லாம் அலைந்து திரிந்து அவற்றை ஒட்டிவிட்டு சாமியிடம் போய் டிரீட் கேட்டால் போங்கடா பொக்கைகளா என்றான். நாளைக்கு கல்யாண வீட்டுல சோறு போடுவாங்கள்ல அதான் ட்ரீட் என்று சொன்னவன் மேலும் கடுப்படித்தான். இதாவது பரவாயில்லை, என் கல்யாணத்துக்கு ஒருத்தனுக்கும் சாப்பாடு கிடையாது. அத்தனை பயலுக்கும் வெறும் கடலை மிட்டாயும் ஒரு கலரும்தாண்டி.. என்றவனைக் கொன்றால் என்ன என நண்பர்களுக்கு வெறியாய் வந்தது. ஆனால் எனக்குத் தெரியும். சாமி எப்பவுமே அப்படித்தான்.

சாமியின் நிஜப்பெயர் கார்த்தி. ஏற்கனவே நானொரு கார்த்தி இருந்ததால் அவன் குட்டை கார்த்தி நான் நெட்டை கார்த்தி. ஆனால் போஸ்டரில் அப்படிப் பெயர் போட முடியாதென்பதால் என்ன பட்டப்பெயர் வைக்கலாம் என யோசித்தபோது கிடைத்த பெயர் தான் சாமி. அவன் வருடா வருடம் அய்யப்ப சாமிக்கு மாலை போடுபவன். எனவே சாமி கார்த்தி. எங்கள் செட்டில் அப்போது செல் வைத்து இருந்தவன் நாந்தான். கறுப்புக் கலர் செங்கல் ஒன்று நோக்கியாவில் வந்ததே, ஞாபகம் இருக்கிறதா? ஆகவே நான் “செல்” கார்த்தி. எதைச் சொன்னாலும் வார்த்தைகளை மென்று விழுங்கும் “but" குமார், லூசு மாதிரியே தோற்றம் தரும் “மெனா” கண்ணன், வம்பு தும்புகளுக்கு அஞ்சாத “சிங்கம்” திராவிட மணி.. இதெல்லாம் போஸ்டரில் அடிக்கப்பட்ட பெயர்கள்.

சாமி ரொம்ப வித்தியாசமானவன். எந்நேரத்தில் எப்படி இருப்பான் என யாருக்கும் தெரியாது. இந்த யாருக்கும் என்பதில் அவனும் அடக்கம். ஒரு நேரம் பார்த்தால் உலகிலேயே சந்தோசமான மனிதன் அவன்தான் என்பதுபோல உற்சாகமாக இருப்பான். மறுசமயம் மொத்த வாழ்வையும் இழந்து தொலைத்தவன் போல தேமேவென்று இருப்பான். அது மாதிரியான நேரங்களில் யார் என்னவென்று பார்க்காமல் கடித்து வைப்பான். அதனால் நண்பர்களின் நடுவே அவனுக்கு “சைக்” என்றொரு செல்லப்பெயரும் உண்டு. அவன் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வேன் என்பதால் கூடுதலாகவே என்னிடம் கொஞ்சம் நெருக்கம் காட்டுவான்.

சாமி ஆள் எப்படி என்பதைச் சொல்ல ஒரே ஒரு நிகழ்வு போதும். அவனுக்கு சொந்த ஊர் விருதுநகர். அம்மன் கோவில் திருவிழா ஒன்று சித்திரை மாதத்தில் பிரமாதமாய் நடக்கும். நண்பர்கள் அனைவரையும் திருவிழாவுக்கு வரும்படிச் சொல்லிவிட்டு அவன் முதல் நாளே ஊருக்குப் போய்விட்டான். அவன் பேச்சை நம்பி அத்தனை பேரும் மறுநாள் மட்ட மத்தியானம் சாப்பிடாமல் அவன் வீட்டில் போய் நின்றால் ஆளைக் காணவில்லை. வீடும் பூட்டிக் கிடக்கிறது. போன் வசதியும் இல்லாமல் அவன் எங்கே போனான் என்றும் தெரியாமல் நாள் முழுக்கப் பரதேசிகளாய் அலைந்துவிட்டு மதுரைக்குத் திரும்பி வந்தோம். அதற்கு இரண்டு நாள் கழித்துத்தான் சாமி வந்தான். அத்தனை பேரும் அவனைச் சுற்றி நின்று கோரசாக கேட்டோம்.

என்னடா ஆச்சு?

அலட்டிக் கொள்ளாமல எல்லாரையும் ஒரு முறை பார்த்து விட்டு மெதுவாகச் சொன்னான்.

இல்லடா.. அன்னைக்கு வீட்டில் படுத்துக் கிடந்தேனா.. திடீர்னு உள்ள ஒரு குரல் கேட்டுச்சு. எந்திரிச்சு அப்படியே கோவிலுக்குப் போய்ட்டேன். உங்கள வரச்சொன்னது, அம்மாவ பேசச் சொன்னது.. எல்லாமே மறந்து போச்சு. நேத்துத்தான் வீட்டுக்குப் போகணும்னு தோணுச்சு.. கெளம்பி வந்துட்டேன்.. ரொம்ப அவதிப்பட்டீங்களாடா.. சரி.. லூஸ்ல விடுங்க..

டாய் அதை நாங்க சொல்லணும்டா என அவனை வெளுக்கக் கிளம்பிய நண்பர்களை அடக்கிட நான் ரொம்பவே சிரமப்பட வேண்டி இருந்தது.

ங்கள் மக்களில் யாருக்கும் தண்ணி அடிக்கும் பழக்கம் கிடையாது என்பதால் எங்கள் ட்ரீட்டுகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கும். நல்ல ஹோட்டலாக பார்த்து மூக்குப்பிடிக்கத் தின்பது, பிறகு நண்பர்கள் யாரேனும் ஒருவர் வீட்டில் சிடி போட்டுப் படம் பார்ப்பது. அது பெரும்பாலும் கில்மா படமாகத்தான் இருக்கும். யார் வீட்டிலாவது ஊருக்குப் போகிறார்கள் என்றால் நாங்கள் உடனே ட்ரீட்டுக்கு தயாராகி விடுவோம். சாமிதான் சிடி பிளேயர் ஸ்பான்சர் செய்பவன். அவனுடைய அண்ணா வெளிநாட்டில் வேலை பார்த்ததால் அப்போது அவன் வீட்டில் மட்டும்தான் பிளேயர் இருந்தது.

ஒருமுறை கண்ணன் வீட்டில் எல்லாரும் வெளியே கிளம்பிட நாங்கள் ட்ரீட்டுக்குத் தயாரானோம். பஜாரில் ஒருகடையில் சொல்லி வைத்து புத்தம்புதிய மலையாள சிடி ஒன்றை வாங்கியாயிற்று. சாமியைக் கூட்டி வரலாம் என்று நானும் கண்ணனும் வீட்டுக்குப் போனால் ஆள் உம்மென்று உக்கார்ந்து இருந்தான்.

அம்மா விருதுநகர் போறப்போ பிளேயர் வயரைக் கொண்டு போய்டாங்கடா.. இன்னைக்கு ஒண்ணும் முடியாது

டிவி மேல் பிளேயர் இருக்கிறது. வயரை மட்டும் அம்மா ஏண்டா கொண்டு போகிறார் என அவனிடம் கேட்கத் தோன்றியது. ஆனால் நான் கேட்டேன் என்றால் மேலே விழுந்து பிடுங்கி வைப்பான். திரும்பிப் பார்த்தால் கண்ணன் என்னையே முறைத்துக் கொண்டிருந்தான். என்ன செய்வதெனத் தெரியாமல் நான் அமைதியாக இருந்தேன். சிறிது நேரம் கழித்து என்ன நினைத்தானோ ஏது நினைத்தானோ சாமி திடீரென உள்ளே போனவன் கையில் வயரோடு வெளியே வந்தான்.

டேய் கார்த்தி.. அம்மா உள்ளாற அரிசிப்பெட்டில ஒளிச்சு வச்சு இருந்தது.. தேடி எடுத்துட்டேன்.. வா போகலாம்

சிரித்தபடி சொன்னவனை என்ன செய்ய முடியும்? தலையில் அடித்துக் கொண்டு கிளம்பினோம். சாமியின் பெரிய பிரச்சினையே இதுதான். இந்த நேரத்தில் இப்படித்தான் இருப்பான் என யாராலும் அவனை வரையறை செய்ய முடியாது.

நான் கல்லூரி இறுதி ஆண்டை முடித்தபோது சாமி வேலைக்கு சேர்ந்திருந்தான். சாமியின் அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டு அவனுக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தந்தார். சாமியையும் சும்மா சொல்லக் கூடாது. வெளியில் எப்படி இருந்தாலும் வேலையில் மிகச் சரியாக இருப்பான். கேங்மேன் வேலை என்றால் ரயில்வே மக்களில் நிறையப்பேர் தயங்குவார்கள். ஆனால் சாமி அதை எந்த முகச் சுளிப்பும் இல்லாமல் செய்தான். சென்னையில் மூன்று ஆண்டுகள் ஆஃபிசர் ஒருவர் வீட்டில் எடுபிடி வேலை பார்க்கவேண்டி வந்தபோதும் அவன் கலங்கவே இல்லை. ஊருக்குத் திரும்புகையில் ஆள் பாதியாக இளைத்து வந்தவனைக் கண்டு நாங்கள் எல்லோரும் அதிர்ந்து போனோம். ஆனால் அவன் அதை இயல்பாக எடுத்துக் கொண்டான். கடைசியாக ஒரு நல்ல நாளில் அவனுடைய வேலை உறுதியாக மதுரைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தான்.

வேலை கிடைத்தாயிற்று. அடுத்தது கல்யாணம்தானே. கோவில்பட்டியில் பெண் பார்த்து சாமிக்கு நிச்சயம் செய்தார்கள். பூ வைத்துவிட்டு வந்த இரண்டாம் நாளில் இருந்து பயபுள்ளயைக் கையில் பிடிக்க முடியவில்லை. எந்நேரமும் செல்போனும் கையுமாக சுற்றிக் கொண்டிருந்தான். எதிலும் பிடிப்பு இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவனுக்குள் இப்படி ஒரு மாற்றம் நடந்ததில் எங்கள் அனைவருக்குமே சந்தோசம். எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருப்பதாக நாங்கள் நம்பினோம். அப்போதுதான் அது நடந்தது. பெண்ணினுடைய அப்பா எதிர்பாராமல் நோயில் விழுந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் மனிதர் ஒரு வாரத்துக்கு மேல் பிழைக்க மாட்டார் என்று சொல்லி விட்டார்கள்.

விசயத்தைக் கேள்விப்பட்ட சாமியின் அம்மா இந்தத் திருமணம் நடக்க வேண்டுமா என யோசிக்க ஆரம்பித்து விட்டார். பெண்ணின் அப்பா இல்லாமல் போனால் கல்யாணம் எல்லாம் யார் எடுத்துச் செய்வார்? பொருளாதார ரீதியாக தனது மகன் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்கிற கவலை அவருக்கு. ஆனால் சாமி அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் எனத் தீர்மானமாக இருந்தான். அழுதுபிடித்துப் பேசி அம்மாவிடம் சம்மதம் வாங்கினான். குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாக பெண்ணுடைய அப்பாவின் கண் முன்னாடியே கல்யாணத்தை நடத்தி விடலாம் என முடிவு செய்தோம்.

திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்த தினம் சாமியின் பிறந்தநாளாக இருந்தது. விருதுநகரில் வெகு சில மக்களின் முன்னிலையில் அவன் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான். அங்கிருந்து கிளம்பி மணமக்கள் கோவில்பட்டி மருத்துவமனையில் இருக்கும் மனிதரைக் காணக் கிளம்பிப் போனார்கள். சாமியோடு நானும் கூடப் போயிருந்தேன். ஆனால் நாங்கள் போய்ச் சேர்ந்த கால் மணி நேரத்துக்கு முன்பாகவே அவர் இறந்திருந்தார். சாமியின் பிறந்தநாளே அவனது திருமண நாளாகவும் அவனது மாமனார் இறந்த நாளாகவும் மாறிப்போனது.

எல்லோரும் அழுதுக் கொண்டிருக்க நானும் சாமியும் ஓரமாக ஒதுங்கி நின்றோம். ஒரு கட்டத்தில் உடைந்து போனவன் என் தோளில் சாய்ந்து அழத் தொடங்கினான்.

கடைசில பார்த்தியாடா.. அடிக்கடி சொல்வேன்ல.. என் கல்யாணத்துல நான் சொன்ன மாதிரியே யாருக்கும் சாப்பாடு கிடையாது. வெறும் கடலை மிட்டாயும் கலரும்தான்.


January 6, 2012

உக்கார்ந்து யோசிச்சது (06-01-12)

இரண்டு நாட்களுக்கு முன்பாக பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெரியவர் என்னைப் பார்க்க வந்திருந்தார்.

“வணக்கம் தம்பி..”

“வணக்கம் சார்.. சொல்லுங்க..”

“தம்பி.. எம்பொண்ணு இந்த வருசத்தோட +2 முடிக்கப்போகுது. என்ஜினியரிங் படிக்கணும்னு சொல்றா. அதைக் கொண்டு போய் ********* காலேஜுல சேர்க்கலாம்னு இருக்கேன். அதான் காலேஜு எப்படி இருக்கும்னு உங்களக் கேக்கலாம்னு..”

“நல்ல காலேஜ்தாங்க.. படிச்சு முடிக்கும்போது வேலை எல்லாம் வாங்கிக் கொடுத்துருவாங்க.. ஆனா பிள்ளைங்கள அவங்க ஒரு இயந்திரம் மாதிரித்தான் நடத்துவாங்க. ரொம்பப் படுத்துவாங்க. அத்தோட எக்கச்சக்க கண்டிப்புகள் வேற.. அவங்க சேர்மேன் பப்ளிக் மீட்டிங்கலயே நான் என் கல்லூரிய ஜெயில் மாதிரித்தான் நடத்துவேன்னு சொல்லுறவரு.. அதை மட்டும் யோசிச்சுக்கங்க..”

“ஆகா.. அப்படியா.. அங்கதான் தம்பி நம்ம பிள்ளைய சேர்க்கணும்..”

எனக்கு பக்கென்றது. “என்னங்க சொல்றீங்க..”

“அட ஆமாப்பா.. அப்புறம் பொம்பளப் பிள்ளைய எப்படி கட்டுப்பெட்டியா வளர்க்குறது.. நாம பாட்டுக்கு ஃப்ரீயா வுடப்போய் அதுக நம்ம தலைல மண்ண அள்ளிப் போட்டுட்டா.. விடுங்க.. வேலை வாங்கித் தர்றாங்கல.. போதும்.. சந்தோசமா அங்கேயே கொண்டு போய் சேர்த்துடுறேன்..”

பிள்ளைகளின் உணர்வுகள் பற்றியோ அவர்கள் நல்ல மனிதர்களாக வருவது எல்லாமோ அவசியமில்லை கட்டுப்பாடாக இருந்து வேலை கிடைத்தால் போதும் என்கிற மனநிலையில் பெற்றோர்கள் இருக்கும்வரை நமது கல்விமுறையோ கல்லூரிகளோ மாறுவதற்கான எந்த வாய்ப்பும் கிடையாது என்றே தோன்றுகிறது.

***************

இதுவும் மதுரையில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பற்றியதுதான். டிப்ளமோவில் 95% வாங்கிய மாணவி அவர். அரசு உதவி பெற்ற ஒரு பொறியியல் கல்லூரியில் அவருக்கு சீட் கிடைத்து இருக்கிறது. அந்த நேரத்தில் இந்தக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தங்கள் கல்லூரியில் சேர்ந்து கொள்ளும்படியாகவும் நன்றாகப் படிக்கிறபடியால் கல்லூரிக் கட்டணம் எதுவும் தர வேண்டியதில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல மனது என்று நம்பி அந்தப் பெண்ணும் அங்கேயே சேர்ந்து இருக்கிறார். ஒரு செமஸ்டர் முடிந்து பரிட்சை தொடங்கும் நேரம். ஹால் டிக்கட் வாங்கப் போன பெண்ணிடம் பெரிய தொகை ஒன்றைச் சொல்லி அதைக் கட்டினால்தான் பரிட்சை எழுத முடியும் என நிர்வாகம் சொல்ல அந்தப் பெண் திகைத்துப் போயிருக்கிறார். ஏழ்மையில் வாடும் தன்னால் அந்தப் பணத்தைக் கட்ட முடியாது எனச் சொல்லி கல்லூரியில் இருந்தே விலகி விட்டார். அவருடைய மதிப்பெண்ணைக் கொண்டு மீண்டும் எங்காவது நல்ல கல்லூரியில் சேர முடியும்தான். ஆனால் வீணாய்ப் போன இந்த ஒரு வருடம்? மனிதர்களின் பணத்தாசைக்கு அளவே கிடையாதா என்று நொந்து கொள்வதைத் தவிர நாம் என்ன செய்ய முடியும்.

***************

இந்தப் புது வருடம் எனக்கு நல்ல படியாகவே பிறந்து இருக்கிறது. வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் எனது கதையும் தேர்வாகி இருக்கிறது. போன வருட இறுதியில், அச்சில் முதன்முதலாக என் எழுத்தை நான் பார்த்தது, மாதவ் அண்ணனின் “கிளிஞ்சல்கள் பறக்கின்றன” மற்றும் ”பெருவெளிச் சலனங்கள்” தொகுப்புகளின் வாயிலாகத்தான். இப்போது, மீண்டும் ஒரு முறை, வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில், என் கதையைத் தெரிவு செய்திருக்கிறார்கள். தொடர்ச்சியாகப் பதிவர்களை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் வம்சி பதிப்பகத்துக்கும் மாதவ் அண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நான் பெரிதும் மதிக்கும் என் சக பதிவர்களான ராகவன், கிரிதரன், போகன், ஸ்ரீதர், பாலாசி, ஹேமா, லதாமகன் (மத்தவங்க பேர் சொல்லலைன்னு கோபிச்சுக்காதீங்கப்பா) மற்றும் நான் வலையுலகில் எழுதக் காரணமான அதிஷா ஆகியோரோடு இணைந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதில் கூடுதல் மகிழ்ச்சி. யதார்த்தம் என்பதைத் தாண்டி வேறெதையும் பெரிதாகப் பேசாத எனது கதை நடுவர்களுக்குப் பிடித்ததில் எனக்கே சற்று ஆச்சரியம்தான். தேர்ந்தெடுத்த தமிழ்நதி, பிரபஞ்சன் மற்றும் நாஞ்சில் நாடன் ஆகியோருக்கும் என் நன்றிகள். வெற்றி பெற்ற நண்பர்கள், போட்டியில் பங்கு கொண்ட மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

***************

மதுரேய்…

மதுரை மீது தீராக் காதல்கொண்ட ஒருவரின் வலைப்பதிவுகள். மதுரையின் சித்திரவீதிகள் பற்றிய பதிவு ஆகட்டும், ‘பஞ்சபாண்டவ மலையில் பசுமைநடைக்குறிப்புகள்’ எனும் பதிவாகட்டும், ‘அரிட்டாபட்டி மலை ஏன் பாதுக்காக்கப்பட வேண்டும்?’ என்கிற பதிவாகட்டும் அனைத்திலும் வாசகனோடு நேரடியாக உரையாடுவதைப் போன்ற வசீகர மொழிநடை!

- ஆனந்த விகடன், 11.01.12, வரவேற்பறை பகுதி


நண்பர் மதுரை வாசகனின் வலைப்பதிவு பற்றிய அறிமுகம் இந்த வாரம் விகடனில் வெளியாகி இருக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..:-))

****************

போன வாரம் கல்லூரி வேலையாக திருவண்ணாமலை போயிருந்தபோது வம்சி பதிப்பகத்துக்கும் ஒரு விசிட் போயிருந்தேன். அவர்களின் புத்தகக் கிடங்கின் உள்ளே போய்த் துலாவியதில் எளிதில் கிடைக்காத நிறைய நல்ல புத்தகங்கள் கிடைத்தன. எம்.ஜி.சுரேஷ் மற்றும் தமிழவனின் நாவல்கள், பிரேம்-ரமேஷின் கவிதைத் தொகுப்புகள், எஸ்.ஷங்கரநாராயணனின் சிறுகதைத் தொகுப்புகள். ஜி கே எழுதிய மர்ம நாவல் என்கிற தமிழவனின் நாவலை வாசித்து முடித்திருக்கிறேன். அரசர் காலத்தில் நடக்கும் கதையின் வழியே ஈழம் சார்ந்த சமகாலப் பிரச்சினைகளையும் மதம் மனிதனின் மேல் செலுத்தும் வன்முறையையும் மனிதமனம் கொள்ளும் விகாரங்களையும் விரிவாகப் பேசும் நாவல். சுவாரசியத்துக்கும் குறைவில்லை. முடிந்தால் தமிழவனுடைய மற்ற நாவல்களையும் வாசிக்க வேண்டும். நண்பர்கள் யாரேனும் அவருடைய புத்தகங்களை வைத்திருந்தால் கொடுத்து உதவுங்கள் மக்களே...

***************

சமீபமாக வாசித்ததில் பிடித்தது..

இன்னும் தாதி கழுவாத

இன்னும்
தாதி கழுவாத
இப்பொழுதுதான் பிறந்த குழந்தையின் -
பழைய சட்டை என்று ஏதும் இல்லை
பழைய வீடு என்றும் ஏதும் இல்லை
மெல்லத் திறக்கும் கண்களால்
எந்த உலகை
புதுசாக்க வந்தாய், செல்லக்குட்டி, அதை
எப்படி ஆக்குகிறாய், என் தங்கக்குட்டி

- தேவதச்சன் (கடைசி டினோசர் தொகுப்பிலிருந்து)

**************

கொலவெறியோடு அநிருத் காணாமல் போய்விடுவார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அந்த எண்ணம் தவறென்று நிரூபித்து இருக்கிறது மூன்று. போ நீ போ, சொல்லு நீ ஐ லவ் யூ, கண்ணழகானு எல்லாப் பாடல்களிலும் மனிதர் பிரித்து மேய்ந்திருக்கிறார். குறிப்பாக "A Life Full of Love" என்கிற தீம் ம்யூசிக் சான்சே இல்லை. மனிதர் தொடர்ச்சியாக நல்ல பாடல்களைத் தர வாழ்த்துகள். என்னுடைய லிஸ்டில் இந்த வார டாப் ஐந்து பாடல்கள்..

நண்பன் - என் ஃபிரண்டப் போல யாரு
மூணு - போ நீ போ
வேட்டை - தையத் தக்கா
மயக்கம் என்ன - பிறை தேடும்
STR - Love Anthem

***************

முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரே ஒரு மொக்கை..

வாழ்க்கையின் மிக முக்கியமான ஏழு படிநிலைகள் என்னன்னா

-> படிப்பு
-> விளையாட்டு
-> பொழுதுபோக்கு
-> காதல்
->
->
-> பாஸு.. அம்புட்டுத்தான்.. மீதி எங்கன்னு தேடுறீங்களா.. அதான் காதல் வந்தா மத்தது எல்லாம் நாசமாப் போயிருமே? அப்புறம் எப்படி..

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))

January 4, 2012

உதிரிப்பூக்கள் - 1

ரொம்ப நாளாகவே இப்படி ஒரு தொடர் எழுத வேண்டுமென்று ஆசை. சமீபமாக விகடனில் வெளியான மூங்கில் மூச்சு வாசித்த பின்பாக அந்த ஆசை இன்னும் அதிகமாகி விட, இதோ, ஆரம்பித்து விட்டேன். என்னால் மறக்க முடியாத மனிதர்கள், நான் நேசித்தவர்கள், என்னைச் செலுத்துபவர்கள், அளவிட முடியாத அன்பு, சந்தித்த துரோகங்கள் என என் எல்லா அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் தொடர் இது. என் வாழ்வை திரும்பிப் பார்க்கும் இந்தப் பயணத்தில் என்னோடு நீங்களும்...

***************

சில நாட்களுக்கு முன்பாக மீனாட்சி கோயில் வெளி வீதிகளில் அந்த மனிதரைப் பார்த்தேன். கசங்கிய வேட்டியும் கிழிந்த சட்டையுமாக வெளிறிய முகத்துடன் வருவோர் போவோரிடம் எல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்த முகமாகத் தெரிந்த அவரை அடையாளம் புரிந்தவுடன் அதிர்ந்து போனேன். அது ஜக்கையா பெரியப்பா. சின்ன வயதில் நான் குடியிருந்த காம்பவுண்டு வீட்டின் ஓனர்.

பெரியப்பா மிலிட்டரியில் இருந்தவர். திரும்பி வந்தபின்பு எந்நேரமும் தண்ணி என்பதால் எப்போதும் அவர் கண்கள் சிவந்தே இருக்கும். அவரைக் கண்டாலே காம்பவுண்டில் இருக்கும் சிறுபிள்ளைகள் எல்லாம் தெரித்து ஓடுவோம். ஆனால் விடாமல் துரத்தி வந்து தூக்கிக் கொண்டு போய் எல்லோருக்கும் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார். குறிப்பாக என்மீது கொஞ்சம் ஜாஸ்தியாகவே அன்பு. என் அம்மாவை மதினி என்றுதான் கூப்பிடுவார். கஷ்டகாலங்களில் எங்களுக்கு ரொம்ப உதவியாக இருந்த மனிதர். வீடு மாறியபின்பு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களோடு தொடர்பு இல்லாமல் போயிருந்தது.

நான் அவரருகே சென்றேன். திரும்பி என்னை வினோதமாகப் பார்த்தவர் யாரென்று தெரியாமல் என்னிடமும் ஆரம்பித்தார்.

“ஊருக்கு வந்த இடத்துல பணத்தைத் தொலைச்சுட்டேன். பசிக்குது.. கொஞ்சம் காசு குடுத்தீங்கன்னா..”

எனக்கு வலித்தது. பேர் சொல்ல மூன்று பிள்ளைகள், வருமானத்துக்குப் பத்து வீடு என நிம்மதியாக இருந்த மனிதர் எப்படி இப்படி ஆனார்?

“பெரியப்பா.. என்னை அடையாளம் தெரியலையா.. நான் கார்த்தி பெரியப்பா.. உங்க வீட்டுல குடியிருந்தோமே.. ஞாபகம் இருக்கா.. அன்னபூரணத்தம்மா பேரன்..”

ஒரு நிமிடம் அவர் கண்கள் ஒளிர்ந்து அடங்கின. சட்டெனப் பதட்டமாகிப் போனார். முகம் இருண்டு போனது.

“நீங்க வேற யாருன்னோ நினைச்சுக்கிட்டு என்கிட்டப் பேசுறீங்க தம்பி.. எனக்கு உங்களைத் தெரியாது..”

அவசர அவசரமாக சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிப்போனார். போகும்போது அவர் திரும்பி திரும்பிப் பார்த்ததும் அந்தக் கண்களில் இருந்த வலியையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

காலத்துக்கு எந்தக் கருணையும் கிடையாது. அது காட்டாறு போல தன் கண்ணில் படும் எல்லாவற்றையும் அடித்துப் போகிறது. தக்கை போல மனிதர்கள் அதில் மிதந்தபடி போகிறார்கள். வெகு சிலரால் மட்டுமே கரையேற முடிகிறது. மற்றவர்கள் எல்லாம் தாங்கள் இருந்த சுவடின்றி காற்றோடு கரைந்து போகிறார்கள். நல்லவர், கெட்டவர், பிரபலம், யாருக்குமே தெரியாதவர்.. எந்தப் பாகுபாடும் இல்லாமல் காலமெனும் சூறாவளி கலைத்து வீசிய மனிதர்கள்தான் எத்தனை எத்தனை?

வாழ்ந்து கெட்ட மனிதர்களின் கதை கொடுமையானது. சோகமும் விரக்தியும் நிரந்தரமாக அவர்களின் கண்களில் தேங்கி விடுகின்றன. விடாமல் துரத்தும் அறிந்தவர்களின் பார்வையிலிருந்து தங்களை மறைத்துக் கொள்ள அவர்கள் படும்பாடு வார்த்தைகளில் சொல்லி மாளாது. சொல்லப்போனால் சாவை விடக் கொடுமையான தருணங்கள் அவை.

வாழ்ந்து கெட்ட மனிதர்கள் என்றால் பொருளாதார ரீதியாகத்தான் என்றல்ல. சேது படத்தில் எங்கே செல்லும் இந்தப்பாதை பாடலுக்கு முன்பாக பாலா ஒரு ஷாட் வைத்திருப்பார். ஒரு நொடிக்கும் குறைவாக விக்ரமின் சிரிக்கும் அழகான முகத்தைக் காட்டிவிட்டு காட்சி பாண்டிமடத்துக்கு மாறும். அங்கே மனநோய் பாதிக்கப்பட்ட விக்ரமின் உருவத்தைக் காட்டும்போது நமக்கு நெஞ்சை உலுக்கும்.

நாம் நன்கு பார்த்துப் பழகிய மனிதர்கள் நம் கண்முன்னே நாசமாய்ப் போவது பெருங்கொடுமை. என் வீட்டிலேயே அப்படி ஒரு மனிதர் இருந்தார் - என் தாத்தா.

ராஜ்மகால் கண்ணுச்சாமி எனச் சொன்னால்தான் அவரை எல்லாருக்குமே தெரியும். 1965 இல் மதுரையில் ராஜ்மகால் ஆரம்பிக்கும்போது அங்கே இருந்தது ரெண்டே பேர். ஓனரும் என் தாத்தாவும். சிவகங்கையில் இருந்த சொத்துகளை எல்லாம் உறவினர்கள் அபகரித்துக் கொள்ள அம்மாச்சியோடும் ஐந்து பிள்ளைகளோடும் தாத்தா மதுரைக்கு வேலைக்கு வந்தபோது அவருடைய சம்பளம் வெறும் முப்பத்தைந்து ரூபாய். தனது கடின உழைப்பால் நல்ல இடத்துக்கு வந்தவர்.

நான் பிறந்தபோது வீட்டில் சில பிரச்சினைகளால் அம்மாவும் அப்பாவும் பிரிந்து இருந்த நேரம். எனவே சிறுவயதில் என் தாத்தாவிடம்தான் வளர்ந்தேன். அப்பாக்கள் இல்லாத வீட்டில் பையன்களுக்கு தாத்தாதானே எல்லாம்? இப்போதும் அம்மா என்னை தனது இன்னொரு அப்பா என்றே சொல்லுவார். என்னுடைய நடையில் ஆரம்பித்து பேச்சு வரை நிறைய இடங்களில் தாத்தாவின் சாயல்தான். நான் என்றால் அவருக்கு அத்தனை பிரியம்.

நாலைந்து வயது இருக்கும்போது உடம்புக்கு முடியாமல் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கிறார்கள். குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்கிறது. என்னைப் பார்க்கவ்ரும் தாத்தா எப்போதும் கால்மாட்டுப் பக்கம் வராமல் தலைமாட்டுப் பக்கம்தான் வருவாராம். என் பார்வையில் பட்டுவிட்டால் அவ்வளவுதான். தூக்கச் சொல்லி காட்டுக்கத்தாய் கத்துவேனாம். வேறு யாரையும் மதிக்கக் கூட செய்யாதவன் தாத்தா வந்தால் மட்டும் அப்படி ஒரு அடம் என அம்மா பெருமையாக சொல்லிச் சொல்லி ஆத்துப் போவார்.

என்னைப் பொறுத்தவரைக்கும் தாத்தா என்றால் கம்பீரம். அவர் வேலைக்குக் கிளம்பும் அழகையே நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கலாம். எப்போதும் அணிவது வெள்ளை வேட்டி வெள்ளை சட்டைதான். குளித்து விட்டு கதர் வேட்டியை கட்டிக்கொண்டு வருவார். அவர் முன்னாடி கண்ணாடியும் குட்டிக் குட்டி டப்பாக்களில் விபூதி, சந்தனம், குங்குமம் ஆகியவை இருக்கும். முதலில் விபூதியை எடுத்து நெற்றி முழுக்கப் பூசிக் கொள்வார். பிறகு சின்னதொரு கம்பியின் மூலம் குழைத்த சந்தனத்தைக் கொண்டு நெற்றியில் மேலும் கீழுமாய் இரண்டு வரிகள். கடைசியாக குங்குமம் இந்த இரண்டு வரிகளுக்கும் மத்தியில். பின்பு சட்டையை அணிந்து கொள்வார். அந்தக் கதர்ச் சட்டையில் அணியும் பித்தான்கள் தனியாகக் கோர்க்கப்பட்டு ஒரு தனி மோஸ்தரில் இருக்கும். அதைத் தினமும் நான்தான் அவருக்குக் கொண்டு போய்த் தருவேன். உடைகளை அணிந்து தயாரானபின் என்னைக் கொண்டு வந்து பள்ளிக்கு ரிக்ஷாவில் ஏற்றிவிட்டபின்பு தான் அவர் வேலைக்குக் கிளம்புவார்.

நான் வேலைக்குப் போனபின்பு வாங்கிய முதல் சம்பளத்தில் அவருக்கு ஒரு கடிகாரம் வாங்கிக் கொடுத்தேன். என் பேரன் வாங்கித் தந்தது என்று கடையில் இருக்கும் எல்லாரிடமும் அவர் கூட்டிக் கொண்டு போய் பெருமையாகச் சொன்னது இப்போதும் நினைவில் இருக்கிறது.

தாத்தாவுக்கு தியாகராஜா பாகவதர் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக டிவியே பார்க்காதவர் பாகவதர் படம் அல்லது பாட்டு என்றால் மட்டும் ஓடோடி வந்து விடுவார். தங்கத்தட்டில் சாப்பிட்ட மனுஷன்.. கடைசி காலத்துல கண்ணு போய் சமயபுரம் கோவில்ல உக்கார்ந்து இருதப்போ எவனோ ஒரு ரூவா பிச்சை போட்டுட்டுப் போனானாம். ரொம்பப் பாவமா.. சொல்லும்போதே தாத்தாவின் கண்கள் ஈரமாகி விடும். கிட்டத்தட்ட அதே மாதிரியான சூழலுக்கு காலம் தன்னையும் தள்ளி விடும் என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

எல்லா விதத்திலும் எனக்கு ஆதரவாகவும் ஆதர்ஷமாகவும் இருந்த தாத்தா மொத்தமாக மாறும் காலமும் வந்தது. எனது மாமாவின் கல்யாணத்தில் தாத்தா எடுத்த சில முடிவுகள் தவறாக மாறிப்போயின. இப்படி ஒரு கணவன் மனைவியா என்றிருந்த என் தாத்தாவும் அம்மாச்சியும் பிரிந்தார்கள். தாத்தா ஒரு மகன் வீட்டிலும் அம்மாச்சி எங்கள் வீட்டிலும் இருப்பது என முடிவானது. அது அவருக்கு முதல் அடி.

முதுமை காரணமாக கண்பார்வை மங்கலாகிக் கொண்டு வரவே வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்கட்டும் என மாமா சொன்னது தாத்தாவுக்கு விழுந்த இரண்டாவது அடி. இத்தனை நாட்கள் தன்னைச் செலுத்திக் கொண்டிருந்த வேலைக்குத் தன்னால் போகமுடியாது என்பதை ஒத்துக் கொள்ள மாட்டாமல் அவர் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் பிறழத் தொடங்கியது.

அமைதியாக வீட்டுக்குள் உட்கார்ந்து இருப்பார். திடீரென அழுவார். அனைவரும் சேர்ந்து அவரைக் கொலை செய்ய பார்ப்பதாக புலம்புவார். வீட்டுக்குள் யாரெனத் தெரியாத மனிதர்கள் வந்து போவதாக அவர் பேச ஆரம்பித்த நாட்களில் மாமாவின் வீட்டுக்குள் புயல் வீசத் துவங்கியது. இதற்கு மேலும் அவரை வீட்டில் வைத்துக் கொள்ள முடியாது என பெரிய மாமா ஒரு முதியோர் காப்பகத்தில் கொண்டு போய் விட்டு விட்டார். விஷயம் தெரிந்து நானும் அம்மாவும் அங்கே போனபோது பார்த்த பயங்கரமான காட்சி என் வாழ்க்கைக்கும் என்னைத் துரத்திக் கொண்டிருக்கும். சுவரின் மூலையில் ஒரு கட்டிலில் வீசி எறியப்பட்ட மூட்டை போலத் தாத்தா படுத்துக் கொண்டிருந்தார். எனது மனதில் ஒருகணம் கம்பீரமாக நடந்து போகும் தாத்தா வந்து போனார். உடைந்தழுது அவரைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம். பின்பு அவர் இறக்கும்வரை எனது தங்கையின் வீட்டில்தான் இருந்தார்.

ஏன் தாத்தா இப்படி எல்லாம் பேசுறீங்க என்று நாம் கோபமாகக் கத்தினால் கூட அது உறைக்காமல் சிரித்தபடி அமர்ந்திருக்கும் தாத்தாவின் சித்திரம் எனக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வாழ்க்கை ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது. அவர்தான் இவரா என நம்ப முடியாதபடிக்கு எல்லாவற்றையும் திருப்பிப் போடுகிறது. அப்போதெல்லாம் எனக்குத் தோன்றுவது இதுதான். நமக்கும் இந்த நிலை வந்து மற்றவர் நம்மீது பரிதாபம் கொள்ளும் முன்பாக செத்துப் போய் விட வேண்டும். எப்போதும் இதுதான் என்று மோசமான நிலையில் இருப்பது வேறு. ஆனால் எல்லாவிதத்திலும் நல்லபடியாக இருந்துவிட்டு பின்பு நாசமாகும் கொடுமை வாழ்வில் யாருக்கும் வரவே கூடாது.

கோடைக்கானலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம். அங்கே கழிவறை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் இருப்பார். யார் என்ன வேலை சொன்னாலும் முகம் சுழிக்காமல் செய்வார். செய்த வேலைக்கு நன்றி சொன்னாலும் சின்னதொரு புன்னகையோடு கடந்து போவார். ரொம்ப நல்ல மாதிரியான மனிதர்.

ஒரு சனிக்கிழமை இரவு நண்பர்கள் எல்லோரும் சுதியேற்றிக் கொண்டிருக்க நான் வழக்கம்போல அவர்களோடு சேர்ந்து சைடு டிஷைக் காலி செய்து கொண்டிருந்தேன். அப்போது அவர் அந்தப்பக்கமாக வர அவரையும் ஜமாவில் சேர்த்துக் கொண்டது நண்பர் குழு.

சிறிது நேரத்துக்குப் பின்பு நண்பர்கள் அனைவரும் வற்புறுத்த மனிதர் பாடத் தொடங்கினார். எல்லாம் ஐம்பது அறுபதுகளின் பாடல்கள். அருமையான குரல்வளமும் அற்புதமானத் தமிழ் உச்சரிப்பும். என்னால் நம்ப முடியவில்லை. நடு இரவு வரை தொடர்ந்த கச்சேரிக்குப் பின்பு நண்பர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு ரொம்ப நாளைக்குப் பிறகு அன்று சந்தோசமாக உணர்ந்ததாக சொல்லிப்போனார்.

அவர் போனபின்பு என்னதான்னாலும் பரம்பரை மிச்சம் இருக்கும்ல என்றார் நண்பரொருவர். அப்படியா, யாருங்க அவரு என்று ஆர்வமாகக் கேட்டேன்.

உடுமலை நாராயண கவியோட பேரன்.