Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

December 19, 2011

உக்கார்ந்து யோசிச்சது (19-12-11)

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நானெழுதும் “உக்கார்ந்து யோசிச்சது” இது. கடைசியாக இதனை எழுதியது மார்ச் 19 - மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கும் இன்றைக்கும் 19 என்பதொரு சின்ன ஆச்சரியம். கடுமையான வேலைப்பளு மற்றும் வலசை இதழுக்கான வேலைகள் என ஓடிக் கொண்டிருந்ததில் வலைப்பக்கத்தில் எழுதுவது வெகுவாகக் குறைந்து போய் விட்டது. பஸ்ஸில் வம்பளந்து கொண்டிருந்ததும் இன்னொரு காரணம். நல்ல வேளையாக இப்போது பஸ்ஸை இழுத்து மூடி விட்டார்கள். எனவே, என்னை நானே திருத்திக் கொண்டு இனித் தொடர்ச்சியாக எழுதும் எண்ணம். (நீ எழுதலைன்னு யாருடா அழுதான்னு சொல்லும் மக்களுக்கு கண்டிப்பாக கும்பிபாகம்தான்). நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் என் அனுபவங்கள் சார்ந்து தொடரொன்று எழுதவும் ஆசை இருக்கிறது. பார்க்கலாம்.

***************

நேற்று ஈரோட்டில் பதிவர் சங்கமம் இனிதே நடந்து முடிந்தது. ஒவ்வொரு வருடமும் எழுத்தின் மூலம் மட்டுமே நாம் அறிந்த நண்பர்களை நேரடியாய்ச் சந்தித்துப் பேசி அளவளாவும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் சங்கமம் அற்புதமான விசயம். இந்த வருடம் இன்னுமொரு சிறப்பாக பதிவுலகில் இயங்கி வரும் மக்களில் பதினைந்து நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவித்தது ஈரோட்டு நண்பர்களின் நல்ல மனதுக்கு எடுத்துக்காட்டு. வழக்கம்போல விருந்தோம்பலும் உணவு ஏற்பாடுகளும் அட்டகாசம் என களைகட்டியது. என்னை அவர்களில் ஒருவன் என உணரச்செய்யும் ஈரோடு தமிழ்ப்பதிவர் குழுமத்திற்கு எப்போதுமிருக்கும் எனதன்பும், வாழ்த்துகளும், நன்றியும்.

**************

ஆதி - பரிசல் - யுடான்ஸ் இணிந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது. பதிவுலக மக்களை ஊக்குவிக்கத் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் சவால் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் நம் நண்பர்களுக்கும், வெற்றி பெற்ற சக பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

***************

அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை வாசித்தேன். அமெரிக்காவில் அவர் தங்கியிருந்த சில மாதங்களின் அனுபவத்தை புனைவு கலந்து தந்திருக்கிறார். கிட்டத்தட்ட பயணக்கட்டுரை வடிவத்தில் வந்திருக்கக் கூடிய விசயத்தைப் புனைவாக மாற்றுகிற இடத்தில் ஜெயிக்கிறார் மனிதர். அலட்டிக்கொள்ளாத வெகு சாதாரணமான மொழி. சற்றே நான் லீனியராக சொல்லப்படும் அத்தியாயங்கள். வாசிக்கும்போது பெரிதாக ஏதும் தாக்கமில்லை. ஆனால் கடைசி அத்தியாயத்தில் அனைவரிடம் இருந்தும் அவர் விடைபெறும் காட்சியில் லேசாக எனக்கும் பாரமாக இருந்தபோதுதான் நானும் அவரோடு பயணித்தபடியே இருந்ததையும் நாவல் என்மீது ஏற்படுத்தி இருந்த பாதிப்பையும் உணர முடிந்தது. மாஸ்டர்ஸ்..:-))

***************

பாலாவின் அடுத்த படம் எரிதணல் என்பதாகச் சொல்கிறார்கள். 1930களில் ஆனைமலைத் தேயிலைத் தோட்டங்களில் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்த கூலித் தொழிலாளர்களின் கதை என்பதாகக் கேள்வி. இது உண்மையானால் கண்டிப்பாக அது பி.ஹெச்.டேனியலின் எரியும் பனிக்காடு நாவலின் அடிப்படையில் எடுக்கப்படும் படமாகத்தான் இருக்கும். ஏழாம் உலகம், நெடுங்குருதி (திருடர்களின் கிராமம்) எனத் தொடர்ச்சியாக நாவல்களைப் படமாக்கத் துணியும் பாலாவுக்கு வாழ்த்துகள்.

***************

யுவனுக்கு அவ்வளவாக நேரம் சரியில்லை என நினைக்கிறேன். கழுகு படத்தில் அசத்தியவர் ராஜபாட்டையிலும் வேட்டையில் பெரிதாகக் கோட்டை விட்டிருக்கிறார். பாடல்கள் எனக்கு அத்தனை பிடிக்கவில்லை. அடுத்த வாரம் மூன்று மற்றும் நண்பன் பாடல்கள் வெளியாக இருக்கின்றன. ஏழாம் அறிவில் சொதப்பிய ஹாரிஸ் என்ன செய்கிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம். என்னுடைய இந்த வார டாப் - 5 பாடல்கள்..

* ஹே அனாமிக்கா - மௌனகுரு
* பப்பப்பா பாப்பப்பா - வேட்டை
* பாதகத்தி - கழுகு
* எந்த உலகில் - 18 வயசு
* பொடிப்பையன் போலவே - ராஜபாட்டை

***************

நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக சாரதா ராஜன்ஸ் ஹோட்டலுக்குப் போயிருந்தேன். அணிந்திருந்தது கறுப்பு நிற வட்டக்கழுத்து தேநீர்ச்சட்டையும் (அதான்யா ரவுண்டு நெக்கு டி-ஷர்ட்) வெளிர்நீல நிற ஜீன்சும். அவரோடு பேசிவிட்டு வெளியே வரும் வழியில் நான்கைந்து இளைஞர்கள், இருபது இருபத்து இரண்டு வயதுக்குள் இருப்பவர்கள், வழியை மறித்து நின்றிருந்தார்கள். விலகிக் கொள்ளும்படி சொல்லிவிட்டுத் தாண்டி வருகையில் அவர்களில் ஒருவன் சொன்னது காதில் கேட்டது.

எப்படிப் போகுது பாரு.. மனசுக்குள்ள அடிதடி சத்யராஜ்னு நினைப்பு..

அடப்பாவிகளா... நினைச்ச மாதிரி உடுத்தக்கூட விடமாட்டீங்களா? நானும் யூத்துதான்யா.. நம்புங்கப்பா..:-)))

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ச்டு மீட் பண்ணுவோம்..:-)))

December 15, 2011

ஈரோடு பதிவர் சங்கமம் - 18.12.2011

பதிவுல தோழர்களே அனைவருக்கும் வணக்கம்..

கடந்த வருடம் ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு அற்புதமாக நடைபெற்றது. அதில் நிறைய பதிவர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான சந்திப்பு உருவாக்கி கொடுத்தீர்கள்..

இந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...


பதிவர் சந்திப்பு வருகிற 18.12.2011 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.

இடம் : ரோட்டரி சி.டி ஹால், பழையபாளையம், ஈரோடு.


பதிவர்களே இந்த அற்புமான சந்திப்பிற்கு வாங்க சங்கமிக்கலாம்...


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்....

தாமோதர் சந்துரு 93641-12303
ஆரூரன் - 98947-17185
கதிர் - 98653-90054
கார்த்திக் - 97881-33555
பாலாசி - 90037-05598
வால்பையன் - 99945-00540
ஜாபர் - 98658-39393
ராஜாஜெய்சிங் - 95785-88925
சங்கவி - 9843060707

November 1, 2011

கோணங்கி

ஒரு எழுத்தாளனுடைய வேர்கள் அவன் வாழும் மண்ணில் இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் அவன் எழுதித் தீர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. மாறாக தான் வசிக்கும் கிராமத்தின் எல்லையில் இருக்கும் மலையை அவன் பார்த்தபடியே இருக்கிறான். அம்மலை அவனுக்குள் எப்போதும் வளர்ந்தபடி உள்ளது. தான் பார்த்துணர்ந்த மலையின் சிறு துகள்களை காற்றில் அலைந்தபடி இருக்கும் அதன் வாசனைகளை அந்த எழுத்தாளன் எழுதினாலே போதுமானது.

- கோணங்கி

***************

சங்க காலப் பாடல்களில் மட்டுமே நீங்கள் அப்படி ஒரு கதாப்பாத்திரத்தைப் பற்றிக் கேள்விப்பட முடியும். யாதும் தனது ஊரே என்றபடி சுற்றியலைந்து பாடித் திரியும் ஒரு பாணன் - நாம் வாழும் இந்தக் காலகட்டத்திலும் அப்படி ஒரு மனிதன் இருக்க முடியும எனச் சொன்னால் நம்ப இயலுமா? ஆனால் அது மாதிரியானதொரு மனிதர்தான் கோணங்கி. சிறுபத்திரிக்கை என்னும் விஷயத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள் அனைவருக்கும் இன்னும் மீதமிருக்கும் ஒரே நம்பிக்கை அவர்தான்.

இப்போது இந்த இடத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். இங்கே சுவற்றில் ஒரு மரப்பல்லி பறந்து திரியும் தட்டானைப் பிடிக்கக் காத்திருக்கிறது. இதைக் கூட ஒரு புனைவாகப் பார்க்கும் மனிதர்தான் கோணங்கி. அவரைப் பொறுத்தவரை எல்லாமே புனைவுதான். இந்த மொத்த உலகையுமே அவர் ஒரு புனைவாகவே பார்க்கிறார். அந்தப் புனைவில் நீங்கள், நான், அவர் காணும் மனிதர்கள் தொடங்கி உயிரற்ற பொருட்கள் வரை.. ஏன்.. தன்னையும் கூட ஒரு புனைவாகவே பார்க்கக் கூடியவர்.

(நண்பர் திருச்செந்தாழையுடனான உரையாடலில் இருந்து)

***************

சாத்தூரில் மாது அண்ணன் வீட்டின் மொட்டை மாடியில்தான் நான் முதல் முதலாகக் கோணங்கியைச் சந்தித்தது. ஒரு வாசகர் என்கிற முறையிலே வெகு சம்பிரதாயமான சந்திப்பாக அது இருந்து. அதன் பிறகான சில நாட்களுக்குப் பின்பு நண்பர் சந்துரு காரைக்குடிக்கு வரும்படி நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது கோணங்கியை மதுரையில் இருந்து காரைக்குடிக்கு அழைத்துப் போகும் பொறுப்பு என்னை வந்தடைந்தது. தன்னுடைய எழுத்து என்னவாக இருக்கிறது என்பது பற்றியும் தன் பயணங்கள் பற்றியும் அந்த இரண்டு மணி நேரமும் கோணங்கி உரையாடியபடியே வந்தார். அவரை எனக்கு வெகு நெருக்கமானவராக மாற்றியது அந்தப்பயணம்தான்.

காரைக்குடியில் நாங்கள் மொத்தம் ஆறு பேர் ஒன்று கூடினோம். சந்துரு, அழகுராஜா, நேசன், ஸ்ரீ, நான் மற்றும் கோணங்கி. எங்கு போவதென்ற வெகு நீண்ட குழப்பத்துக்குப் பின் அனைவரும் திருமயம் கோட்டையைச் சுற்றிப் பார்க்கலாம் எனக் கிளம்பினோம். ஆனால் வண்டி கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே ஒரு தெப்பக்குளத்தின் அருகில் நிற்க வேண்டியதானது. இளவயதில் நண்பர்களோடு தான் ஓடி விளையாடிய இடம் எனப் பழங்கதைகளுக்குள் மூழ்கிப்போன கோணங்கி டேய் சின்னச் சிதம்பரம் நீ எங்கடா இருக்க எனத் தன் பால்ய நண்பனைத் தேடி குளத்துக்குள் ஓடத் துவங்கினார். காலத்துள் பின்னோக்கிப் பிரயாணித்துக் கொண்டிருந்த ஒரு மனிதனின் தேடலுக்கு நாங்கள் அனைவரும் அங்கே சாட்சியாக நின்று கொண்டிருந்தோம்.

நினைவுகளில் தேங்கிப் போனவரைத் திருப்பியழைத்து ஆசுவாசப்படித்திக் கிளம்பிய எங்கள் வண்டி அடுத்ததாக நின்ற இடம் ஒரு இடுகாடு. அதன் அருகிலேயே ஒரு சிறுதெய்வக் கோவிலும் அதன் முகப்பில் உடைந்து போன மண்குதிரைகளும் நின்றிருந்தன. இதுதாண்டா நம்ம மண்ணு தம்பி எனக் கோணங்கி அந்த இடுக்காடின் உள்ளே போய் படுத்துக் கொண்டார். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவரின் கண்களில் சின்ன அளவிலான சிறு காய்கள் மணலில் கிடப்பது தென்பட மினுங்கும் கண்களோடு ஓடிப்போய் அவற்றை எடுத்துக் கொண்டார்.

இது என்னன்னு தெரியுமாடா தம்பி..

இல்லண்ணே..

இது ஒரு மரத்தோட காய்.. இதுல என்ன விசேசம்னா இதுல பேய்கள் தங்கும். நாம இப்போ இந்தக் காய்களைக் கொண்டு போய் நம்ம வீட்டுல விதைக்கிறோம். மரம் வளர்ந்து அதுல நிறைய பேய்கள் தங்கும். அப்படித் தங்கினாத்தான் நாம் இன்னும் நல்லா எழுத முடியும்.

இதுதான் எனக்குத் தெரிந்த கோணங்கி. அந்த அற்புதமான தினத்தின் முடிவில் இன்று இங்கிருக்கும் அனைவரும் என் தம்பிகள்டா என்று எங்களை அவர் கட்டியணைத்துக் கொண்டது எப்போதும் நினைவில் இருக்கும். குழந்தமைத்தன்மைக்கும் பித்துநிலைக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் கிடையாது. தனது குழந்தைமையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதுதான் கோணங்கியை இன்னும் தீவிரமாக செலுத்திக் கொண்டிருக்கிறதென நான் நம்புகிறேன்.

***************

நண்பர்கள் என்னிடம் சொன்னது இது. இதுவும் காரைக்குடியில் நடைபெற்றதுதான். ஒரு நாள் இரவில் தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார் கோணங்கி. திடீரென நடு இரவில் விழித்துக் கொண்டவர் நணபரை எழுப்பி இருக்கிறார். என்ன என்று கேட்ட மனிதரிடம் நகரில் பசித்த புலியொன்றின் நகக்கீறல்கள் எழுப்பும் ஒலியையும் அது தனித்தலைவதையும் தன்னால் உணர முடிகிறதெனச் சொல்லி இருக்கிறார். நகரத்துக்கு நடுவே எங்கிருந்து புலி வர முடியும் என சொல்லிய நண்பர் அது கோணங்கியின் பிரம்மை என்று சொல்லித் தூங்கி விட்டார். மறுநாள் தான் அங்கிருந்து சற்றுத் தொலைவில் புதிதாக வந்திருந்த சர்க்கஸ் கூட்டம் ஒன்று கூடாரம் அடித்திருந்ததும் அங்கே ஒரு புலி இருந்ததும் நண்பருக்குத் தெரிந்திருக்கிறது. தன்னுடைய புலன்களில் தன் மண்ணையும் காட்டின் வாசத்தையும் உணர்ந்த மனிதொருவராலேயே இது சாத்தியமாகக் கூடும் என அவர் சொல்லிச் சொல்லி வியந்திருக்கிறார். தான் பேசும் விஷயங்களுக்குத் எத்தனை நேர்மையாக இருக்கிறார் கோணங்கி என்பதற்காக நண்பர்கள் என்னிடம் இந்த நிகழ்வை அடிக்கடி சொல்வதுண்டு.

***************

காரைக்குடி பயணத்துக்குப் பிறகு பலமுறை கோணங்கியைச் சந்திக்கவும் கோவில்பட்டியில் அவர் வீட்டில் தங்கவும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பும் எனக்குள் அவர் மீதான அன்பையும் மதிப்பையும் அதிகப்படுத்தியே வந்திருக்கிறது. எப்போது அலைபேசியில் அழைத்தாலும் தம்பி பாண்டியன் என்று பாசமாய் அழைத்து கோணங்கி என்னிடம் கேட்கும் முதல் விசயம் வீட்டில் இன்னும் பூ தொடுக்கிறார்களா என்பதுதான். அவர் முதல்முறை என் வீட்டுக்கு வந்தபோது அம்மா பூ தொடுத்துக் கொண்டிருந்தார். அதை எடுத்துக் கொண்டு போய் என் பாட்டியிடம் கொடுத்த கோணங்கி என்னிடம் சொன்னது - இவர்கள்தான் இந்த வீட்டின் உண்மையான அடையாளம். இவர்களை நீங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இலக்கியம் என்பதையும் தாண்டி இன்றைக்கு என்னுடைய உறவுகளில் ஒன்றாக பிரியமான அண்ணனாக மாறி இருக்கும் கோணங்கிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

***************

நீங்கள் அவரை வியந்தோதலாம். விமர்சிக்கலாம். அன்பைப் பொழியலாம். திட்டித் தீர்க்கலாம். எதுவாயினும்.. தன்னைப் பற்றிய பாராட்டோ விமர்சனமோ.. அவை அனைத்தையும் சின்னதொரு புன்னகையோடு கடந்து போய் விடுவார். நம்மோட வேலை எழுதுறதுதான் தம்பி. அதை நம்மைச் சரியா செஞ்சாப் போதாதா? என்று முடித்து விடுவார். எல்லாவற்றுக்கும் ஒரு சிரிப்பு. அவ்வளவே. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத அந்தப் பேரன்புதான் கோணங்கி.

வெகு நாட்களாகவே கோணங்கி பற்றி எழுத வேண்டுமென இருந்தேன். இன்றைக்கு அதற்கான நேரம் கூடி வந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. காரணம் - இன்று (1-11-11) கோணங்கியின் பிறந்த நாள். மரியாதைக்கும் பிரியத்துக்கும் உரிய கோணங்கி அண்ணனுக்கு என் மனமார்ந்த அன்பும் வாழ்த்துகளும்..:-))))

November 3, 2010

ஹேப்பி பர்த்டே டு மீ :-)))

இன்றோடு "பொன்னியின் செல்வனு"க்கு இரண்டு வயது பூர்த்தி ஆகிறது. இந்த வலைப்பூவ சின்னப்புள்ள விளையாட்டு மாதிரி ஆரம்பிச்சது. இப்போப் பார்த்தா ரெண்டு வருஷம் ஆகிடுச்சுன்னு சொல்லும்போது ஆச்சரியமாவும் பிரமிப்பாவும் இருக்கு. நான் இவ்வளவு ஜல்லி அடிப்பேன்னு சத்தியமா நினச்சு கூட பார்த்தது இல்ல.. மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது நண்பர்களே.











சொந்தக்கதை சோகக்கதை, சினிமா, வாசிக்குற புத்தகம், சமூகத்துல என்னை பாதிக்குற விஷயங்கள், மொக்கைன்னு ஒண்ணு பாக்கி விடாம உள்ள தோணுற எல்லாமே எழுதி இருக்கிறேன். புரியற மாதிரி எழுதணும், சுவாரசியமாவும் இருக்கணும். இதைத்தான் என் அளவுகோலா வச்சிருக்கேன். என்னோட எழுத்துகள் மூலமா உங்ககூட நான் பேசுறேன். அவ்வளவுதான்..

நண்பர் திருச்செந்தாழை ஒரு விஷயத்த அடிக்கடி சொல்வாரு.. "உன் மனசுல தோணுற விஷயங்கள எந்த பாசாங்கும் இல்லாமநேர்மையா எழுது நண்பா.." அதன்படி இருக்கத்தான் முயற்சி பண்றேன். ஆரம்பத்துல இருந்த ஹிட்ஸ், பாலோவர் மோகம்லாம் இப்போ குறைஞ்சு போச்சு. ஓரளவு உருப்புடியா எழுதுறோமான்னு மட்டும்தான் பாக்குறேன்.

வலையுலகம் எனக்குத் தந்திருக்குற மிகப்பெரிய பொக்கிஷம் - என்னுடைய நட்புகள். நட்புங்கிறத மீறி உறவுன்னு சொல்லக் கூடிய மனிதர்கள். கிட்டத்தட்ட என் வாழ்வின் ஒரு அங்கமாகிப்போன அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அத்தோட பதிவுலக ரெண்டு வருஷத்துல நிறைய புது விஷயங்கள் கத்துக்கிட்டு இருக்கேன். வாசிக்குற பழக்கம் கொஞ்சமா அதிகரிச்சு இருக்கு. நிறைய உலகப்படங்கள தேடி தேடி பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன். ரொம்ப நிறைவாக உணருகிறேன்.

இந்த நேரத்துல மொதமொத என்னைக் கண்டுபிடிச்சு ஊக்கம் சொன்ன பிரேமை நினச்சு பார்க்கிறேன். “பிரேம்.. நீங்க மட்டும் இல்லைன்னா ஆளில்லாத கடையில யாருக்குடா டீ ஆத்தணும்னு அன்னைக்கே கடைய சாத்திட்டு கிளம்பி இருப்பேன். ரொம்ப நன்றி நண்பா..”

என்னோட ரம்பத்த தாங்கிக்கிட்டு இருக்குற, தாங்கப்போற அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. என்னோட இந்த சந்தோஷத்த உங்க எல்லார்கூடவும் சேர்ந்து பகிர்ந்துக்குறதுல ரொம்ப மகிழ்ச்சி நண்பர்களே..





சுவீட் எடு.. கொண்டாடு... ஹேப்பி பர்த்டே டு “பொன்னியின்செல்வன்”..!!!

பின்குறிப்பு 1: புதிய தலைமுறையில் வலைத்தளங்கள் பற்றிய கட்டுரையில் என்னையும் குறிப்பிட்டு இருக்கும் லக்கிக்கும், தகவலைப் பகிர்ந்து கொண்ட அண்ணன் ஜாக்கி சேகருக்கும் நன்றிகள் பல..

பின்குறிப்பு 2: நண்பர்கள் அனைவருக்கும் (அட்வான்ஸ்) தீபாவளி நல்வாழ்த்துகள்..

June 8, 2010

திருமண வாழ்த்துகள் - பிரதாப் பெஸ்கி..!!!

"எவனோ ஒருவன்" என்கிற பெயரில் பதிவுலகில் இயங்கி வரும் அன்புக்குரிய நண்பர் பிரதாப் பெஸ்கியின் திருமணம் நேற்று மதுரையில் (07-06-2010) இனிதே நடைபெற்றது. ஞாயிறுக்கிழமை இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர் முரளிக்கண்ணன் கலந்து கொண்டார். நேற்று காலை நடைபெற்ற மணவிழாவுக்கு தருமி ஐயாவையும் அழைத்துக் கொண்டு போயிருந்தேன். மணமக்களுக்கு நம் பதிவுலக நண்பர்களின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை சொல்லி வந்தோம். திருமண விழாவில் எடுக்கப்பட்ட ஒரு சில படங்கள் உங்கள் பார்வைக்கு..

மண்டபம் - அலங்காரங்களுடன் மணமேடை


வெள்ளை சட்டை அணிந்து வந்த நாதஸ்வரம் - பெஸ்கி..



ஐயா.. டை எல்லாம் கட்டி போஸ் கொடுக்குறேன்.. கொஞ்சம் நல்லா போட்டோ புடிங்க சாமி



மாப்பிள்ளை பெஸ்கியும் சகோதரி ஜெனிபரும்..



பயபுள்ளைய பத்திரமா வச்சு காப்பாத்துவேணுங்க..:-)))



எடுடா மேளம்.. அடிடா தாளம்.. கட்டுறா தாலிய



மாப்ள கொஞ்சம் நல்லாத்தான் சிரிச்சா என்னவாம்..



மாலை மாத்துறாங்கோவ்..



கொஞ்சம் குனிப்பா.. எட்ட மாட்டேங்குது..



கல்யாணத்துக்குப் போன நாட்டாமைங்க.. (கா.பா, கிறுக்கல் கிறுக்கன், தருமி)

பின்குறிப்பு 1: கடைசிப்படம் முழுக்க முழுக்க விளம்பரத்துக்காக மட்டுமே டுக்கப்பட்டது.

பின்குறிப்பு 2: ஏன் கமெண்ட் எல்லாம் சிகப்புல இருக்கு..? அது ஆபத்தின் நிறமாச்சே.. கல்யாணத்துக்கும் இதுக்கும் ஏதோ உள்குத்து இருக்கானு குறியீடு தேடும் மக்களின் வீட்டுக்கு ஸ்பெஷலாக ஆட்டோ அனுப்பப்படும்..:-)))

பின்குறிப்பு 3: எல்லார் கல்யாணத்துக்கும் போற.. உனக்கு எப்போன்னு கேட்க தடை விதிக்கப்படுகிறது.. (யாராவது வீட்டுல வந்து பேசுங்கப்பா.. அவ்வவ்வ்வ்வ்)

உங்களுடைய வாழ்த்துகளையும் சொல்லுங்க நண்பர்களே..:-))))

May 26, 2010

உக்கார்ந்து யோசிச்சது (26-05-10)..!!!

பிரியத்துக்குரிய பதிவுலக நண்பர் "அப்பாவி முரு" என்கிற முருகேசனின் திருமணம் இன்று சின்னாளபட்டியில் இனிதே நடைபெற்றது. அவருக்கும் மணமகள் ரேவதி அவர்களுக்கும் உள்ளங்கனிந்த நல்வாழ்த்துகள்.



(பயபுள்ளைய ஏதாவது பற்பசை விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கலாமோ?)

மதுரையில் இருந்து நானும் சீனா ஐயாவும் போயிருந்தோம். சென்னையில் இருந்து ரம்யாக்கா, கலை அக்கா மற்றும் சித்தர் ஆகியோர் வந்திருந்தார்கள். பதிவுகளில் வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் தன்னுடைய சார்பில் நன்றியை சொல்லும்புடி அண்ணன் முருகேசன் ஆணையிட்டதற்கு இணங்க, ஒரு பெரிய நன்றிங்கோவ்....

***************

இன்றைக்கு திருமண பந்தத்தில் அடி எடுத்து வைக்கும் மற்றொரு நண்பர்.. நவீன தமிழ் கவிதைகளில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கி இருக்கும் நண்பர் நரன். நேற்றைக்கு அவருடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி விருதுநகரில் நடைபெற்றது. ஸ்ரீதரும் நானும் போயிருந்தோம். இசை, செல்மா ப்ரியதர்ஷன், யவனிகா ஸ்ரீராம், மணிவண்ணன், தேவேந்திர பூபதி, ஸ்ரீஷங்கர் எனப் பல இலக்கியவாதிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் தேவதச்சனும் வந்து இருந்தார். நிறைய விஷயங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் முடிந்தது. பூவோடு சேர்ந்த நாரும் என்பது போல மேடையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக ஏறியபோது “இவர்கள் என்னுடைய எழுத்தாள நண்பர்கள்” என்று நரன் தனது துணைவியாரிடம் அறிமுகம் செய்தபோது ரொம்ப வெட்கமாக இருந்தது. கூகிலாண்டவருக்கும் பிளாகருக்கும் நன்றி.

வந்து இருந்தவர்களில் படு ஜாலியான மனிதராக பட்டையைக் கிளப்பியவர் செல்மா ப்ரியதர்ஷன். லீனா மணிமேகலை, யவனிகா ஆகியோரின் கவிதைகளை செல்மா வாசித்த விதம் அட்டகாசம். என்னை மிகவும் ஆச்சரியம் கொள்ள வைத்தவர் யவனிகாதான். இளைஞர்களோடு இயைந்து செயல்படக்கூடிய உள்ளமும் நட்பு நிறைந்த நெஞ்சமும் எல்லாருக்கும் வாய்த்து விடாது. அந்த வகையில் யவனிகா கொடுத்து வைத்த மனிதர். நாங்கள் விடை பெற்றுக் கிளம்பும்போது மனிதர் அமைதியாக இரண்டே வரிகளில் சொன்னார்.. "இங்கே எதற்குமே அர்த்தங்கள் கிடையாது.. நம்முடைய நட்பும் அர்த்தங்களை மீறிய ஒன்றாக இருக்கட்டும்..சந்திப்போம்.." அருமையான பொழுதுகள்.

நரன்.. நன்றி நண்பா.. உனக்கு என் வாழ்த்துகள்..:-))))

***************

இரண்டு நாட்களுக்கு முன்பு.. மட்ட மத்தியான வேலை. கல்லூரி பணிகளுக்காக அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். சரியான தாகம். சரி ஒரு இளநியைக் குடிப்போம் என்று ஒரு தள்ளுவண்டிக் கடையில் ஒதுங்கினேன்.

"எவ்வளவுண்ணே..?"

"பதினஞ்சு, இருபதுங்க.."

"சரிண்ணே.. நிறைய தண்ணி இருக்கிற மாதிரி இருபதுல ஒண்ணு கொடுங்க.."

"வேண்டாம் சார்.. தண்ணி நிறைய வேணும்னா பதினஞ்சுலையே வாங்கிக்குங்க.. இருபதுல எல்லாம் தேங்காதான் சார்.."

உண்மையைப் பேசி வியாபாரம் செய்யும் அந்த மனிதரைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

"எளனி வரத்து எல்லாம் எப்படிண்ணே இருக்கு..?"

"எங்க தம்பி.. நேரடியா எடுக்கலாம்னா மதுரைல எங்கயும் தோப்பு இல்ல.. எல்லா இடத்தையும் பிளாட் போட்டு வித்துட்டாங்க.. தேனீ, போடி இங்க இருந்துதான் எளனி வருது.. அதனால எல்லாரும் புரோக்கர் பயலுக கைல மாட்டி சீரழியுறோம்.. காலைல இருந்து வெயிலுல காஞ்சாலும் காய்க்கு ரெண்டு ரூபா கூட கிடைக்கிறது இல்ல.. என்ன பண்ண சொல்லுங்க.."

அவர் தன்னுடைய பிரச்சினையை சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். எனக்கோ அவர் சொன்ன இன்னொரு விஷயம்தான் பெரிதும் உதைத்தது. மதுரையில் இருக்கிற தோப்புகள் எல்லாமே காலியா? இதே நிலை எல்லா ஊர்களுக்கும் பரவ எததனை நாள் ஆகப் போகிறது? ஏற்கனவே ஒவ்வொன்றாக காலி பண்ணிக் கொண்டிருக்கிறோம்.. ஹ்ம்ம்ம்.. என்னமோ போடா மாதவா..

***************

சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல விஷயம் கிடைக்கும் அல்லவா? அதுதான் அம்பாசமுத்திரம் அம்பானியில் நடந்து இருக்கிறது. கருணாஸ் இசையில் "பூப்பூக்கும்" என்ற வெஸ்டன் டைப் பாட்டும், "தண்ட தண்ட பாணி.. " பாட்டும் டாப். "ஒத்தக்கல்லு" போன்ற கிராமத்து பாடல்களையும் அழகாக கொடுத்து இருக்கிறார். நன்றாக இருக்கும் என நம்பிய "பாணா காத்தாடி"யில் யுவன் கோல் போட்டிருக்கிறார். பாடல்கள் ஓகே ரகம்தான். அதே நேரத்தில்.. சிங்கம் படத்தின் பாடல்களையும் ரொம்பவே எதிர்பார்த்தேன். ஆனால் தேவி ஸ்ரீ பிரசாத் அல்வா கொடுத்து விட்டார். அத்தனையும் வெளங்காத பாட்டு. சன் டிவி புண்ணியத்தில் ஏதாவது ஒன்றிரண்டு ஹிட் ஆகலாம். டிரைலர் பார்க்கும்போதே மனிதனுக்கு கண்ணைக் கட்டிக் கொண்டு வருகிறது. யூ டூ சூர்யா?

***************

இந்த மாத உயிர் எழுத்து இதழில் வெளியான நரனின் கவிதை ஒன்று உங்கள் பார்வைக்கு..

வைஸ்ராய் மார்ஷலின் டைரிக்குறிப்பு - 1

வைஸ்ராய் மார்ஷலின் டைரிக்குறிப்பில்
1853 சூன் 7 ஆம் தேதி
137 ஆம் பக்கம்
வேட்டையில் அவர் சுட்டு வீழ்த்திய
வங்கப் புலியொன்றின் குறிப்பு இருந்தது.
7 வயது நிரம்பியிருந்த தருணத்தில்
அது வீழ்த்தப்பட்டது.
கொல்கத்தா அருங்காட்சியகத்தில் இப்பவும்
வைஸ்ராயின் டைரி இருக்கிறது.
இரண்டு அறைகள் தாண்டி
கீழே குறிப்புகள் ஒட்டப்பட்ட
கண்ணாடி பேழைக்குள்
வரியோடிய அப்புலியின் உடல்
பாடம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
டைரிக் குறிப்பில்
சுட்டு வீழ்த்தப்படதைச் சொல்லும் வரிக்கு
இரண்டு வரிக்கு முன்னால்
உறுமலுடன்
புலி இன்னமும் உயிருடன் இருக்கிறது.
வைஸ்ராயின் வேட்டையை புகழ்ந்துரைப்பவனையும்
முகத்திற்கு நேராய் வைத்து புகைப்படம் எடுப்பவனையும்
பேழையை உடைத்து தாக்க நினைக்கிறது புலி.
பல நூறு மைல்கள் தாண்டி கானகத்திற்குள்
அதன் எலும்புகளை வைத்துப் பழங்குடியோருவன்
தோல் கருவியொன்றை இசைக்கிறான்.
எலும்புகளற்ற புலியால் அசையாமல்தான்
அசைய முடிகிறது.

***************

முடிக்கிறதுக்கு முன்னாடி.. கொஞ்சம் லொள்ளு..

கல்யாணம் ஆன புதுசுல மாப்பிள்ளைப் பையன் தன்னோட பொண்டாட்டி நம்பரை செல்லுல இப்படி பதிவு பண்ணினான்.. "என்னோட உயிர்.."

ஒரு வருஷத்துக்குப் பிறகு "என்னோட மனைவி.."

அஞ்சு வருஷம் கழிச்சு "வீடு.."

பத்து வருஷம் கழிச்சு "ஹிட்லர்.."

இருபது வருஷம் கழிச்சு "ராங் நம்பர்.."

ஹி ஹி ஹி.. என்னடா மேல எல்லாருக்கும் திருமண வாழ்த்து சொல்லிட்டு கீழே இப்படி ஒரு சூது இருக்கேன்னு யாரும் யோசிச்சா.. அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல..

இப்போதைக்கு அவ்ளோதான் நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))

May 20, 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. ரம்யாக்கா..!!!


பதிவுலகைப் பொறுத்தவரை, தன்னம்பிக்கை என்ற வார்த்தைக்கு அர்த்தம்.. ரம்யா அக்கா. அவருடைய தளத்தின் பெயரான "Will To Live" என்பதே அதற்கு சாட்சி. எத்தகைய இக்கட்டான சூழலில் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்று சந்தோஷமாக சொல்லக்கூடிய தைரியமான மனுஷி. நட்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் ரம்யாக்கா, கலை அக்கா மற்றும் சித்தரின் நட்பு மூலமாக புரிந்து கொண்டேன் என்று கூட சொல்லலாம். அத்தனை நல்ல, அன்பான மனிதர்கள். எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி அன்பை மட்டும் தரக்கூடிய பிரியத்துக்குரிய ரம்யா அக்காவிற்கு இன்று பிறந்த நாள்.. என்னோடு இணைந்து நீங்களும் வாழ்த்துங்கள் நண்பர்களே..!!!

***************

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சேட்டைக்கார நண்பர் தினசரி வாழ்க்கை "மேவிக்கும்" அன்பான வாழ்த்துகள்..!!!

January 1, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!


அன்பின் நண்பர்களே.. ஒவ்வொரு புது வருடமும் நமக்குள் நம்பிக்கையை விதைக்கிறது.... கடந்து போன வருடத்தின் காயங்களை மறந்து சந்தோஷங்களை மட்டும் நெஞ்சில் நிறுத்துவோம்.. பிறக்கும் இந்தப் புது வருடத்தில் நம் கனவுகள் எல்லாம் ஈடேறட்டும்..எங்கும் அன்பு செழிக்கட்டும்.. அமைதி பரவட்டும்.. பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!












October 15, 2009

தீபாவளி தீபாவளிதான்..!!!

பண்டிகைகள் கொண்டப்படுவதன் அடிப்படை அர்த்தம் என்ன? வேலையின் பொருட்டோ, வேறு ஏதேனும் காரணங்களை முன்னிட்டோ திசைக்கொன்றாய் சிதறிக் கிடக்கும் உறவினர்களும் நண்பர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களின் அன்பை பரிமாறிக் கொள்வதற்காகத்தான். நம் தமிழ்நாட்டில் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடுகிறோம். பொங்கலைத்தான் தமிழர் திருநாள் என்றும் சொல்கிறோம். இருந்தாலும் தீபாவளி நம் வீட்டுக்கு கொண்டு வரும் மகிழ்ச்சிக்கும் சந்தோசத்துக்கும் அளவே கிடையாது.

என்னைப் பொறுத்தவரை தீபாவளிக்கு முந்தைய நாள் இரவுகள் எப்போதுமே விசேஷமானவை. என்னுடைய ரயில்வே காலனி நண்பர்கள் எல்லோரோடும் சேர்ந்து கொண்டு மதுரையின் கடைவீதிகளில் விடிய விடிய சுத்துவேன். இரவு ஒன்பது மணிக்கு உள்ளே நுழைந்தால் எப்படியும் வீடு திரும்ப காலை நான்கு மணியாகிவிடும். ரயில்வே காலனியில் எங்கள் குழுவுக்கு "குழாயடி க்ரூப்ஸ்" என்று பெயர். தெருமுக்கில் இருக்கும் குழாயடியில் தான் எங்கள் டாப்பு என்பதால் இந்தக் காரணப்பெயர். குழுவில் மொத்தம் ஐந்து உறுப்பினர்கள். (அதில் மூவருக்கு இப்போது திருமணம் ஆகிவிட்ட காரணத்தால் இந்த வருடம் அவர்களால் இரவு வெகுநேரம் வரை சுத்த முடியாத நிலை வந்து விட்டது. அடுத்த வருடம் என் கதை என்னவாகுமோ... ஹ்ம்ம்ம்ம்.)

ராத்திரி ஒன்பது மணிக்கு முன்பாகவே நண்பர்கள் அனைவரும் பெரியார் பேருந்து நிலையத்துக்கு அருகேயுள்ள சர்ச்சின் வாசலில் கூடி விடுவோம். அங்கிருந்து டவுன் ஹால் ரோட்டின் வழியாக உள்ளே நுழைந்து, ஏதாவதொரு புரோட்டாக் கடையில் செட்டில் ஆகிவிடுவோம். முதலில் ஆர்டர் செய்வது ஒரு முழு பொறித்த கோழியாக இருக்கும். (ஆளுக்கு ஒண்ணெல்லாம் கிடையாதப்பா.. மொத்த க்ரூப்புக்கும் சேர்த்துத்தான் ஒண்ணு..) அதன் பின்னர் செட்டு, புரோட்டா, தோசை என அவரவருக்கு வேண்டியதை வாங்கி அமுக்கி விட்டுக் கிளம்ப வேண்டியதுதான்.

கட்டபொம்மன் சிலை அருகே போய் நின்றாலே போதும். நாம் நடந்தெல்லாம் போக வேண்டாம். அங்கிருக்கும் மக்கள் கூட்டம் நம்மைத் தானாகவே நகர்த்தத் தொடங்கி விடும். நடைபாதை எங்கும் கடைகள். தீபாவளிக்காகவே முளைத்தவை. நமக்குப் பண்டிகை. ஒரு சிலருக்கோ அதுவே வாழ்வின் ஆதாரம். எல்லாவிதமான கடைகளும் இருக்கும். அறுபது ரூபாய்க்கு விற்கும் குடைகள், டார்ச்சுகள், மிதியடிகள், பனியன் ஜட்டி, பிளாஸ்டிக் பொருட்கள், பட்டாசுகள், பழங்கள், தட்டுமுட்டு சாமான்கள் என அந்தக் கடைகளில் கிடைக்காத பொருட்களே இருக்காது என சொல்லாம்.

திருப்பூரில் மொத்த லாட்டில் வாங்கிய டீஷர்ட், சட்டைகளை கட்டில்களின் மீது போட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள். ஷோரூமில் "peter england, derby" என்றால் நடைபாதைகளில் அவற்றுக்குப் பெயர் "peter english, derchy" என்றிருக்கும். விலையும் ஐம்பது ரூபாயோ அல்லது நூறு ரூபாயாகவோ தான் இருக்கும். கடை போட்டிருப்பவர்கள் எல்லோரும் அதிகாலை நேரங்களில் தான் தங்களுடைய குடும்பத்துக்கு தேவையானதை வாங்கத் தொடங்குவார்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக சிலமுறை தமுக்கம் வரை நடந்தே போக வேண்டியிருக்கும்.

நண்பர்கள் யாருக்கேனும் உடை வாங்க வேண்டி இருந்தால் வாங்கிக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் நடுஇரவில் மழை பெய்யாமல் இருக்காது. நடைபாதை வியாபாரிகள் எல்லோரும் மழை பெய்தால் அடித்துப் பிடித்துக் கொண்டு தங்களுடைய கடைகளை தார்ப்பாயினால் மூடி விடுவார்கள். மழை விட்டபின்பு மீண்டும் கடைகள் திறக்கப்படும். எங்காவது ஒதுங்கி இருந்து விட்டு மழை நின்றவுடன் மீண்டும் நடக்கத் தொடங்குவோம். அதிகாலை நெருங்கும்போது ஒரு டீயைப் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்புவோம்.

இரண்டு மணிநேரம் தான் தூக்கம். சரியாக ஆறு மணிக்கு அம்மா எழுப்பி விட்டு விடுவார்கள். குளித்து விட்டு வந்தால் சுட சுட இட்டிலியும் கறிக்குழம்பும் ரெடியாக இருக்கும். ஒரு கட்டு கட்டிவிட்டு ஊர் சுற்றக் கிளம்பலாம். ஒவ்வொரு உறவினர் வீடாகப் போய் ஆசிர்வாதம் வாங்கி விட்டு கலெக்ஷனைப் போட்டால் அன்றைய பொழுதுக்கான செலவுக்கு காசு கிடைத்துவிடும். போகிற இடங்களில் எல்லாம் வடை, ஸ்வீட், காரம் வேறு பட்டையைக் கிளப்பும். நடுவில் போனில் பலரிடம் இருந்தும் வாழ்த்துகள் வந்து சேரும்.

மத்தியானம் வீட்டுக்கு வந்து ஒரு சின்ன தூக்கம். சாயங்காலம் பசங்களோட சேர்ந்து ஒரு படம். பட்டாசு வெடிச்ச காலம் எல்லாம் முடிஞ்சு போச்சு. அப்படியே வெடி போடனும்னு ஆசைப்பட்டாலும், கரிமேடு மார்கெட்டுக்குப் போய் கொஞ்சம் வெங்காய வெடிய வாங்கிக்க வேண்டியது. யார் யாரை எல்லாம் பிடிக்காதோ, அவங்க வீட்டு சுவத்துல அடிச்சி வெடிக்க வேண்டியது. அம்புட்டுத்தான்.

வீட்டாரோடு கழிக்கும் சந்தோஷமான பொழுதுகள், நண்பர்களோடு கொண்டாட்டம் என எப்பவுமே "தீபாவளி தீபாவளிதான்". நண்பர்கள், சகோதர சகோதரிகள் , இணைய வாசகர்கள் - அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீப ஒளி பெருகி எல்லோரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்..!!!