December 31, 2011

நேசம் - புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு

வணக்கம் நண்பர்களே

பொன்வேண்டேன்,
பொருள் வேண்டேன்
மண் வேண்டேன்
மனை வேண்டேன்
நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும்
என்பதே அனைவரின் பிராத்தனையாக இருக்கும்


அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது, அதனிலும் கூன் குருடும் உடல் குறைபாடுகளும் இல்லாமல் பிறத்தல், அதையும் விட இன்று வாழ்நாள் முழுதும் எந்த வித உடல் பிணிகளும் இன்றி நல்நெடும்வாழ்வு வாழ்வதைவிட பெரிய செல்வம் ஏதும் இல்லை. எண்ணற்ற நோய்கள் வாழ்க்கை முறைகளினால் வந்தாலும் பெரும்பாலும் அவைகள் லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்வுமுறை நோய்களே.

இவ்வகை நோய்களின் ஏன் எதற்கு எப்படி என்றே அறியும் முன் உடலை அரித்து விடும் நோய்களில் ஒன்று கேன்சர் எனப்படும் புற்றுநோய். இன்று உலகம் எங்கும் இதனால் உயிர் விடுவோர் எண்ணிக்கை மற்ற அனைத்தையும் விட அதிகம். புற்றுநோய் வரக்காரணம் எவ்வளவோ இருக்கலாம், யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் வந்த பின் அதனுடைய பாதிப்பின் அளவையும் நோயின் தீவிரத்தைப்பொறுத்தும் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளது.

எல்லா நோயைப்போலவும் இதனையும் நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நூறு சதவீத குணப்படுத்தலாம். எப்படி கண்டறிவது என்பதே விழிப்புணர்வு.

இந்த புது வருடத்தில் சில நண்பர்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு நேசம், முழுக்க முழுக்க புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அதுகுறித்த நிகழ்வுகளுமாக இணையத்தில் உங்களின் ஆதரவுடன் ஆரம்பிக்கிறோம்.


நேசம் - அமைப்பில் இருந்து முதல் விழிப்புணர்வு அறிவிப்பு ஜனவரி முதல் அன்று வெளிவரும். புற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம்






நல்லதொரு முயற்சிக்கு ஆதரவாக நாமும் கைகொடுப்போம் நண்பர்களே.. இந்தப்பதிவை வாசிக்கும் மக்கள் ரீஷேர் செய்து உதவுங்க சாமிகளே...

December 29, 2011

மௌனகுரு - திரைப்பார்வை

கிரிக்கெட் ஆட்டத்தில் முதல்தர பேட்ஸ்மேன்கள் எல்லாம் சொதப்பி எடுக்க டெயில் எண்டர்கள் அடி பின்னி எடுத்தால் எப்படி இருக்கும்? இந்த வருடம் வெளியான பெருந்தலைகளின் படங்கள் எல்லாம் மக்களை கொத்தி எடுக்க எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து சிக்சர் அடித்திருக்கிறது மௌனகுரு. இந்த வருட ஆரம்பத்தில் யுத்தம் செய் அடுத்த காட்சிகள் என்னவாக இருக்கும் என்கிற ஒரு திரில்லர் ஃபார்மட்டில் வந்து மிரட்டியது என்றால் வருட இறுதியில் அதை எல்லாம் ரொம்பச் சாதாரணமாகத் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறது இந்தப்படம். அரசாங்கமும் அதிகாரமும் சேர்ந்தால் ஒரு மனிதனை எந்த அளவுக்குப் போட்டுத் தள்ள முடியும் என்பதைப் பேசுகிற கதைதான். ஆனால் திரைக்கதையும் சொன்ன விதமும் கிளாஸ்.



ஒரு பக்கம் எந்த வம்புக்கும் போகாத வந்த வம்பை விடாத இளைஞன் கருணா. கல்லூரிப் படிப்புக்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறான். வந்த இடத்தில் மச்சினியோடு காதல். அதே நேரம் விடுதியில் கூடப்படிக்கும் இன்னொரு மாணவனோடும் அவனுக்கு முட்டிக் கொள்கிறது. இன்னொரு பக்கம் ஒரு சாலை விபத்தில் கிடைக்கும் கோடிக்கணக்கான பணத்தை நான்கு போலிஸ்காரர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அது சம்பந்தமான வீடியோ ஆதாரம் பற்றிய பிரச்சினை ஒன்றில் கருணா எதிர்பாராமல் சிக்கிக் கொள்ள கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.

பெரிய அளவில் நடிக்கத் தேவையில்லாத கதை என்பது இந்தப்படத்தில் அருள்நிதிக்கு நிறைய கைகொடுத்திருக்கிறது. அமைதியாக வந்து போவதும் போதை நிலையில் வெறித்துப் பார்ப்பதும் என்று படம் நெடுக ஒரே மாதிரியாக சுற்றுகிறார். ரவுடியை ஒரே அடியில் வீழ்த்துவது, போலிஸை அடித்து விட்டு ஸ்டேசனுக்குப் போவது, நடுரோட்டில் தனி ஆளாய் நின்று மனு தருவது, பேச முடியாத குழந்தைகளுடன் சைகையில் உரையாடுவது என ஹீரோயிசம் தெரியாத ஆனால் ஹீரோயிசம் சார்ந்த காட்சிகள் எல்லாமே நிறைவு. கடைசி காட்சியில் தான் என்ன தப்பு செய்தோம் என அலறும்போதுதான் வசனங்கள் அவருக்கு ஒட்டவே இல்லை. காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் இயல்பாக இருப்பது போலத் தோன்றியது. குறிப்பாக காபி நன்றாக இருந்தது என்று அண்ணி பார்க்காதபோது இனியாவிடம் சொல்லும் சீன், அப்புறம் அம்மாவுக்குத் தெரியாது என்று நினைத்து இனியா அருள்நிதியின் தலையைக் கோதி விட்டு செல்லும் காட்சி. நாயகிக்கு பெரிய அளவில் வேலையில்லை என்றாலும் மாடர்ன் உடையிலும் இனியா அழகு என்பதைப் பதிவு செய்ய வேண்டியது நம் முக்கியக் கடமையாகிறது.



ஓரம்போவின் சன் ஆஃப் கன் இந்தப்படத்தின் மெயின் வில்லன் ஜான் விஜய். அடக்கி வாசித்து அதகளம் செய்திருக்கிறார். செல்வம், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி என்று கூட வரும் போலிஸ்காரர்களும் பெர்ஃபெக்ட். மனநோய் விடுதியில் இருந்து நாயகனின் நண்பனாகும் பாத்திரத்தில் மணல்மகுடி முருகதாஸ் நாடக நிலத்தின் நடிப்பை வெள்ளித்திரைக்குக் கடத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவில் எனக்குத் தெரிந்து இதுவரை யாரும் பயன்படுத்தி இராத பாத்திரத்தில் உமா ரியாஸ். கர்ப்பிணியாக இருக்கும் போலிசாக வரும் அவர் பார்வையில் கதை நகர்வது அருமையான உத்தி.

சின்ன சின்ன விசயங்களில் கவனம் செலுத்தி இருக்கும் இயக்குனரின் உழைப்புக்குக் கிடைத்திருக்கும் வெற்றிதான் இந்தப்படம். மதுரை என்றவுடன் தெப்பக்குளத்தை காண்பிக்காமல் கீழக்குயில்குடி அழகர் கோயில் என்று போயிருப்பது, அட்டகாசமான அந்த இடைவேளைக்காட்சி, யார் திருடியது என்று எல்லாரையும் யோசிக்க வைத்து நினைக்காத இடத்தில் கொண்டு போய் அந்த முடிச்சினை அவிழ்ப்பது, நாயகன் அசாத்திய பலசாலி என்றெல்லாம் அடித்து விடாமல் தன்னால் இயன்ற வழியில் எதிரிகளைத் தாக்கிவிட்டு இயல்பாய் தன் முடிவினைத் தீர்மானிப்பது என படம் முழுக்க இயக்குனர் சாந்தகுமார் தன்னை நிரூபித்திருக்கிறார். ஒரு திரில்லர் படத்துக்கு ஒரு பாட்டுப் போதும் என்கிற அவர் தைரியத்தையும் பாராட்டலாம். ஆனால் அதில் தமனின் அனாமிகா பாட்டு அடியாகிப் போனதில் எனக்கு வருத்தமே.



சின்ன சின்ன ப்ளூப்பர்கள் , தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் பெண்ணின் கால்கள் உயரமாய் மிதப்பது, டாக்டருக்குப் படிக்கும் நாயகி எந்த நொட்டையும் சொல்லாமல் நாயகனை மனநோயாளி என நம்புவது, சற்றே தொய்வடையும் இரண்டாம் பாதி - இவற்றை எல்லாம் ரொம்பக் கஷ்டப்பட்டு யோசித்தால்தான் கண்டேபிடிக்க முடிகிறது. Edge of the seat thriller என்கிற வகையில் படம் பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டன என்று சொல்லும் மக்கள் எல்லோரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். அமைதியாக அசத்தி இருக்கும் சாந்தகுமார் தனது அடுத்தப்படத்தை தலைக்கோ தளபதிக்கோ செய்யாமல் இருந்தால் சந்தோசம்.


December 19, 2011

உக்கார்ந்து யோசிச்சது (19-12-11)

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு நானெழுதும் “உக்கார்ந்து யோசிச்சது” இது. கடைசியாக இதனை எழுதியது மார்ச் 19 - மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கும் இன்றைக்கும் 19 என்பதொரு சின்ன ஆச்சரியம். கடுமையான வேலைப்பளு மற்றும் வலசை இதழுக்கான வேலைகள் என ஓடிக் கொண்டிருந்ததில் வலைப்பக்கத்தில் எழுதுவது வெகுவாகக் குறைந்து போய் விட்டது. பஸ்ஸில் வம்பளந்து கொண்டிருந்ததும் இன்னொரு காரணம். நல்ல வேளையாக இப்போது பஸ்ஸை இழுத்து மூடி விட்டார்கள். எனவே, என்னை நானே திருத்திக் கொண்டு இனித் தொடர்ச்சியாக எழுதும் எண்ணம். (நீ எழுதலைன்னு யாருடா அழுதான்னு சொல்லும் மக்களுக்கு கண்டிப்பாக கும்பிபாகம்தான்). நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் என் அனுபவங்கள் சார்ந்து தொடரொன்று எழுதவும் ஆசை இருக்கிறது. பார்க்கலாம்.

***************

நேற்று ஈரோட்டில் பதிவர் சங்கமம் இனிதே நடந்து முடிந்தது. ஒவ்வொரு வருடமும் எழுத்தின் மூலம் மட்டுமே நாம் அறிந்த நண்பர்களை நேரடியாய்ச் சந்தித்துப் பேசி அளவளாவும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் சங்கமம் அற்புதமான விசயம். இந்த வருடம் இன்னுமொரு சிறப்பாக பதிவுலகில் இயங்கி வரும் மக்களில் பதினைந்து நண்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவித்தது ஈரோட்டு நண்பர்களின் நல்ல மனதுக்கு எடுத்துக்காட்டு. வழக்கம்போல விருந்தோம்பலும் உணவு ஏற்பாடுகளும் அட்டகாசம் என களைகட்டியது. என்னை அவர்களில் ஒருவன் என உணரச்செய்யும் ஈரோடு தமிழ்ப்பதிவர் குழுமத்திற்கு எப்போதுமிருக்கும் எனதன்பும், வாழ்த்துகளும், நன்றியும்.

**************

ஆதி - பரிசல் - யுடான்ஸ் இணிந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது. பதிவுலக மக்களை ஊக்குவிக்கத் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமும் சவால் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் நம் நண்பர்களுக்கும், வெற்றி பெற்ற சக பதிவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

***************

அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை வாசித்தேன். அமெரிக்காவில் அவர் தங்கியிருந்த சில மாதங்களின் அனுபவத்தை புனைவு கலந்து தந்திருக்கிறார். கிட்டத்தட்ட பயணக்கட்டுரை வடிவத்தில் வந்திருக்கக் கூடிய விசயத்தைப் புனைவாக மாற்றுகிற இடத்தில் ஜெயிக்கிறார் மனிதர். அலட்டிக்கொள்ளாத வெகு சாதாரணமான மொழி. சற்றே நான் லீனியராக சொல்லப்படும் அத்தியாயங்கள். வாசிக்கும்போது பெரிதாக ஏதும் தாக்கமில்லை. ஆனால் கடைசி அத்தியாயத்தில் அனைவரிடம் இருந்தும் அவர் விடைபெறும் காட்சியில் லேசாக எனக்கும் பாரமாக இருந்தபோதுதான் நானும் அவரோடு பயணித்தபடியே இருந்ததையும் நாவல் என்மீது ஏற்படுத்தி இருந்த பாதிப்பையும் உணர முடிந்தது. மாஸ்டர்ஸ்..:-))

***************

பாலாவின் அடுத்த படம் எரிதணல் என்பதாகச் சொல்கிறார்கள். 1930களில் ஆனைமலைத் தேயிலைத் தோட்டங்களில் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்த கூலித் தொழிலாளர்களின் கதை என்பதாகக் கேள்வி. இது உண்மையானால் கண்டிப்பாக அது பி.ஹெச்.டேனியலின் எரியும் பனிக்காடு நாவலின் அடிப்படையில் எடுக்கப்படும் படமாகத்தான் இருக்கும். ஏழாம் உலகம், நெடுங்குருதி (திருடர்களின் கிராமம்) எனத் தொடர்ச்சியாக நாவல்களைப் படமாக்கத் துணியும் பாலாவுக்கு வாழ்த்துகள்.

***************

யுவனுக்கு அவ்வளவாக நேரம் சரியில்லை என நினைக்கிறேன். கழுகு படத்தில் அசத்தியவர் ராஜபாட்டையிலும் வேட்டையில் பெரிதாகக் கோட்டை விட்டிருக்கிறார். பாடல்கள் எனக்கு அத்தனை பிடிக்கவில்லை. அடுத்த வாரம் மூன்று மற்றும் நண்பன் பாடல்கள் வெளியாக இருக்கின்றன. ஏழாம் அறிவில் சொதப்பிய ஹாரிஸ் என்ன செய்கிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம். என்னுடைய இந்த வார டாப் - 5 பாடல்கள்..

* ஹே அனாமிக்கா - மௌனகுரு
* பப்பப்பா பாப்பப்பா - வேட்டை
* பாதகத்தி - கழுகு
* எந்த உலகில் - 18 வயசு
* பொடிப்பையன் போலவே - ராஜபாட்டை

***************

நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக சாரதா ராஜன்ஸ் ஹோட்டலுக்குப் போயிருந்தேன். அணிந்திருந்தது கறுப்பு நிற வட்டக்கழுத்து தேநீர்ச்சட்டையும் (அதான்யா ரவுண்டு நெக்கு டி-ஷர்ட்) வெளிர்நீல நிற ஜீன்சும். அவரோடு பேசிவிட்டு வெளியே வரும் வழியில் நான்கைந்து இளைஞர்கள், இருபது இருபத்து இரண்டு வயதுக்குள் இருப்பவர்கள், வழியை மறித்து நின்றிருந்தார்கள். விலகிக் கொள்ளும்படி சொல்லிவிட்டுத் தாண்டி வருகையில் அவர்களில் ஒருவன் சொன்னது காதில் கேட்டது.

எப்படிப் போகுது பாரு.. மனசுக்குள்ள அடிதடி சத்யராஜ்னு நினைப்பு..

அடப்பாவிகளா... நினைச்ச மாதிரி உடுத்தக்கூட விடமாட்டீங்களா? நானும் யூத்துதான்யா.. நம்புங்கப்பா..:-)))

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ச்டு மீட் பண்ணுவோம்..:-)))

December 15, 2011

ஈரோடு பதிவர் சங்கமம் - 18.12.2011

பதிவுல தோழர்களே அனைவருக்கும் வணக்கம்..

கடந்த வருடம் ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு அற்புதமாக நடைபெற்றது. அதில் நிறைய பதிவர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான சந்திப்பு உருவாக்கி கொடுத்தீர்கள்..

இந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...


பதிவர் சந்திப்பு வருகிற 18.12.2011 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.

இடம் : ரோட்டரி சி.டி ஹால், பழையபாளையம், ஈரோடு.


பதிவர்களே இந்த அற்புமான சந்திப்பிற்கு வாங்க சங்கமிக்கலாம்...


மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்....

தாமோதர் சந்துரு 93641-12303
ஆரூரன் - 98947-17185
கதிர் - 98653-90054
கார்த்திக் - 97881-33555
பாலாசி - 90037-05598
வால்பையன் - 99945-00540
ஜாபர் - 98658-39393
ராஜாஜெய்சிங் - 95785-88925
சங்கவி - 9843060707

December 13, 2011

ஏழாம் அறிவு

(மாத இதழ் ஒன்றுக்காக எழுதிய பதிவு. அவர்கள் எதிர்பார்த்த விமர்சனமாக தமிழுணர்வைப் பேசும் படத்தைப் பாராட்டும் விதமாக எதுவும் இல்லையென்று பிரசுரிக்கவில்லை.)

ஏழாம் அறிவு

கஜினி என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்துக்குப் பிறகு முருகதாஸ் - சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் ஏழாம் அறிவு. இந்த வருடம் வெளியான எந்தத் தமிழ்ப் படத்துக்கும் இந்த அளவுக்கு விளம்பரமும் எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. "தமிழனே மறந்த ஒரு தமிழரின் பெருமையைப் பேசி இருக்கிறோம். படம் பார்த்து வெளியே வரும் ஒவ்வொருவரும் நானொரு தமிழன் என மார் தட்டிச் சொல்லிக் கொள்ளலாம்" என பாடல் வெளியீட்டு விழாவில் முருகதாஸ் கொளுத்திப்போட பக்கென்று பற்றிக் கொண்டது நெருப்பு. இந்த பிரமாண்ட எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா?



படம் ஐந்தாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது. பல்லவ இளவரசனான போதிதர்மர் தற்காப்புக் கலைகளிலும் மருத்துவத்திலும் தேர்ந்த பயிற்சி உடையவர். அஷ்டமா சித்துகளில் ஒன்றான ஐம்பூதங்களையும் கட்டுப்படுத்தும் அசித்துவம் கற்றவர். தன் குருமாதாவின் கட்டளையை ஏற்று சீனதேசம் செல்கிறார். கொள்ளை நோயிலிருந்தும் தீய சக்திகளிடம் இருந்தும் சீன மக்களைக் காப்பாற்றுகிறார். அவர்களுக்கு தன் வித்தைகளையும் மருத்துவத்தையும் பயிற்றுவிக்கிறார். அவர் தங்கள் மண்ணில் புதைக்கப்பட்டால் நாடு நலமாக இருக்கும் என நம்பும் சீன மக்களின் வேண்டுகோளை ஏற்று விஷம் உண்டு அங்கேயே மரித்துப் போகிறார். தாமோ என்று இன்றைக்கும் சீன மக்கள் புத்தருக்கு இணையாக அவருக்குக் கோயில் கட்டி வழிபாட்டு வருகிறார்கள்.

நிகழ்காலத்தில் சுருதி ஒரு ஆராய்ச்சி மாணவி. போதிதருமரைப் பற்றியும் அவரது மரபணுக்கள் பற்றியும் அறிந்து கொண்டு அவரது வம்சாவழித் தோன்றலான சூர்யாவைத் தேடி வருகிறார். சர்க்கஸில் பணிபுரியும் சூர்யா சுருதியக் காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால் சுருதியோ ஆராய்ச்சிக்காகவே சூர்யாவை பயன்படுத்த நினைக்கிறார். இந்நிலையில் இந்தியாவில் தொற்று நோயைப் பரப்பவும் போதிதருமரை மீண்டும் கொண்டு வரத் துடிக்கும் சுருதியைக் கொல்லவும் ஒரு சீன உளவாளியை அவர்களது அரசாங்கம் அனுப்பி வைக்கிறது. கடைசியில் நீதி வென்றதா என்பதும் போதி தருமர் மீண்டும் வந்தாரா என்பதும்தான் ஏழாம் அறிவின் கதை.



போதிதருமர் என்கிற இதுவரை யாரும் அதிகம் பேசாத விஷயத்தைப் பேசத் துணிந்த இயக்குனருக்குப் பாராட்டுகள். ஆனால் ஒரு படத்தின் வெற்றிக்கு அது மட்டும் போதாது. மிக அருமையான கதைக்களன், எந்த செலவும் செய்யத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர், தமிழ் சினிமாவின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், அர்ப்பணிப்புடன் கூடிய நடிகர்கள் என எல்லாம் கூடி வந்திருக்கும் நிலையில் ஏழாம் அறிவு தமிழின் மிக முக்கியமான படமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை என்பதே சோகமான விஷயம். படத்திற்கு செய்யப்பட விளம்பரமே அதற்கு எதிராக மாறி இருக்கிறது. இது வெறுமனே ஒரு வணிகப்படம் என வெளியாகி இருந்தால் இத்தனை ஏமாற்றம் இருந்திருக்காது. தமிழின் முதல் படம் என்கிற தொனியில் பேசிவிட்டு வெகு சாதாரணமானதொரு படத்தைத் தந்திருக்கிறார் முருகதாஸ்.

படத்தில் நம்பகத்தன்மை சார்ந்து எக்கச்சக்கமான கேள்விகள். படத்துக்காக நிறைய ஆராய்ச்சி செய்த மாதிரியெல்லாம் தெரியவில்லை. இணையத்தில் கிடைத்த ஒன்றிரண்டு தகவல்களை வைத்தே ஒப்பேற்றி இருக்கிறார்கள். போதிதருமரைப் பற்றிய பகுதி கதையோடு ஒன்றி வராமல் ஒரு ஆவணப்படம் போல வருகிறது. அவர் எதற்கு சீனாவுக்குப் போகிறார் என்பதற்கு நோய் இந்தியாவுக்குப் பரவாமல் இருக்க என சுருதி சொல்லும் ஒரு காட்சி இருக்கிறது. அப்படியானால் நோய் பரவும் என்பது தீர்க்கதரிசனமா? சர்க்கஸில் சூர்யா வேலை செய்கிறார் என்கிறார்கள். எந்தவொரு சர்க்கஸும் ஒரு மாதத்துக்கு மேல் ஒரே ஊரில் இருக்காது. பிறகெப்படி சூர்யா மூன்று மாதங்களாக சென்னையில் சுருதியின் பின்னால் திரிந்து கொண்டிருக்கிறார்? சமகால நவீன இளைஞனாக வரும் சூர்யா சர்க்கஸில் வேலை செய்பவர் என்பதை நம்பவே நமக்கு கஷ்டமாக இருக்கிறது. நோக்குவர்மம் மூலமாக மொத்தக் கூட்டத்தையும் வில்லன் கட்டுப்படுத்துவதும் ஓரளவுக்கு மேல் சலிப்படைய வைக்கிறது. பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு கற்ற குங்க்பூ கலையை ஒருவர் பார்ப்பதன் மூலமே சண்டை போட வைக்க முடியுமானால் என்னாவது? முன்னூறு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு இந்திய அரசாங்கத்தையே காட்டிக் கொடுக்கும் பேராசிரியர் தன் தகவல்களை அடுத்தவர் பார்க்கும் வண்ணம் கணினியில் இத்தனை எளிதாக விட்டுச் செல்லுவாரா? பதில் தெரியாத கேள்விகள்.



படத்தில் சுவாரசியமான விஷயங்களும் இல்லாமல் இல்லை. நோய் தாக்கிய குழந்தையை போதிதருமர் காப்பாற்றும் காட்சியும் தன் குழந்தை உயிரோடு வருவதைக் கண்டு மகிழ்ச்சி பொங்க ஓடி வரும் தாயும் கொள்ளை அழகு. யானைக்கு வைத்தியம் பார்க்க அண்ணா சாலையில் அழைத்துப் போகும் சூர்யா சுருதிக்கு உதவுவது, அலைபேசியின் மூலம் சுருதியின் காதலை அறிந்து கொள்வது முதலியன ரசனையான காட்சிகள். ஒருவனின் மனதை மட்டும் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என ஜானி சொல்லி தாமோ என மதகுரு உறுமும் காட்சியும், கண்பார்வையின் மூலம் தனக்குத் தேவையான விஷயங்களை வாங்கி சூர்யாவைத் தேடி ஜானி வரும் காட்சிகளும் அட்டகாசம். ஆனால் இது போன்ற காட்சிகள் படத்தில் வெகு குறைவாகவே இருக்கின்றன.

முதல் பாதி கதை நாயகியின் பார்வையில் சொல்லப்படுகிறது. இரண்டாம் பாதி எதிர்நாயகனான சீன உளவாளியின் பார்வையில் செல்கிறது. இது மாதிரியானதொரு படத்தின் கதை நாயகனாக சூர்யா. போதிதருமன் வேடத்துக்காக நிறைய உழைத்து இருக்கிறார். உடம்பை இரும்பாக்கி கண்களில் வழியும் கருணையோடு அந்தக் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். தற்காப்புக் கலைகளில் பயிற்சி எடுத்து, சர்க்கஸ் கலைஞனாக நடிக்க பயிற்சி மேற்கொண்டு என நிறைய சிரமப்பட்டு இருக்கிறார். கமலின் மகள் சுருதி தமிழ் பேசத்தெரிந்த அழகான பெண் என்றாலும் அவருடைய தமிழ் உச்சரிப்பு பார்க்கும் மக்களை எரிச்சல் கொள்ள வைக்கிறது. படத்தின் அட்டகாசமான அம்சம் எதிர்நாயகனாக வரும் ஜானி திரையன். தீவிரமான தன் பார்வையின் மூலமே மிரட்டி எடுக்கிறார்.



படத்தின் மிகப்பெரிய ஏமாற்றம் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. டாக்சி டாக்சி பாடலை வேறு வடிவில் ரிங்கா ரிங்காவாகத் தந்திருக்கிறார். குழந்தைகளுக்கான பாடலைப்போல ஒலிக்கிறது சீனப்பாடல். உணர்வுகளை தட்டி எழுப்பவேண்டிய இன்னும் என்ன தோழா சுத்தமாக எடுபடவில்லை. முன் அந்திச் சாரல் நீ, யம்மா யம்மா ஆகிய பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் படத்தில் தவறான இடங்களில் புகுத்தப்பட்டு இருக்கின்றன. பின்னணி இசை கடும் இரைச்சல் கூடவே எரிச்சலும். ரவி சந்திரனின் ஒளிப்பதிவு போதிதருமர் பகுதியினை மேலும் அழகாக்குகிறது. ஒரு தமிழ்ப்படத்தில் எந்த அளவுக்குச் சிறப்பாக முடியுமோ அந்தளவுக்கு சிறப்பாக சண்டைக் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் பீட்டர் ஹெயின். என்றாலும் பல ஆங்கில குங்க்பூ படங்கள் பார்த்த மக்களுக்கு இது அத்தனை ரசிக்காது. முதல் பாடலுக்கு ஆயிரம் நடனக்கலைஞர்கள், யம்மா யம்மா பாடலுக்கு போட்ட இரண்டு கோடி ரூபாய் அரங்கம் என வீணான பணத்தை சண்டைக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் வரைகலையை மெருகூட்டப் பயன்படுத்தி இருக்கலாம்.

சின்னதொரு கதைக்கரு, நாட்டுக்கு நீதி சொல்வது, காட்சிகளில் தேவையில்லாத பிரமாண்டம் என எல்லாவற்றையும் வணிகரீதியாகக் கலந்து தரும் ஷங்கரின் சூத்திரத்தை முயன்று பார்த்திருக்கிறார் முருகதாஸ். ஆனால் தடுமாறும் திரைக்கதையால் பாதிக்கிணறு தான் தாண்டி இருக்கிறார். படத்தில் தமிழுணர்வு பற்றி நிறைய பேசினாலும் உணர்வு ரீதியாக அதைப் பார்வையாளனுக்குக் கடத்த முடியாத வியாபார நோக்கமே இருப்பதாகப் படுகிறது. கடைசியாக படத்தைப் பற்றி என்ன சொல்வது? எதிர்ப்பார்ப்புகளை மறந்துவிட்டு சாதாரண வணிகப்படம் என்கிற ரீதியில் ஏழாம் அறிவை ஒரு முறை பார்க்கலாம்.


December 9, 2011

ஒஸ்தி - திரைப்பார்வை

ஹிந்தியில் ஒரே அடிதடி வன்முறைப் படங்களாக வந்து கொண்டிருந்த நேரத்தில் வெளியானது தபாங். அலட்டிக் கொள்ளாமல் சாகசங்கள் செய்யும் கோமாளி போலிஸ்காரராக சல்மான் பின்னியெடுக்க படமும் பட்டையைக் கிளப்பியது. ஆனால் தபாங் ஓடியதற்கு முக்கிய காரணம் - எப்போதாவதுதான் ஹிந்தியில் இதுமாதிரி படம் வரும். ஆனால் தமிழில் வெளிவரும் மூன்றில் நான்கு படங்கள் இந்த மாஸ் மசாலா வகையறா என்பதால் தமிழில் இந்தப்படத்தை மறுவுருவாக்கம் செய்தால் நன்றாக இருக்காது என நினைத்திருந்தேன். ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்யாக்கி ஒஸ்தியை நன்றாகவே தந்திருக்கிறார்கள் சிம்புவும் தரணியும்.



கெட்டவர்களிடம் திருடி ஏழைகளுக்கு உதவும் ரவுடி போலிஸ் சிம்பு. தன் தாயின் மீது பிரியம் கொண்டிருந்தாலும் அவருடைய இரண்டாவது கணவரையும் தம்பியையும் போட்டியாகக் கருதி வெறுப்பவர். தேர்தலில் மக்களுக்குப் பணம் கொடுத்து ஜெயிக்க ஆசைப்படும் அராஜக அரசியல்வாதி சோனு சூத். இருவருக்கும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தில் சிம்பு எப்படி ஜெயிக்கிறார் என்பதே ஒஸ்தி.

நான் கண்ணாடி மாதிரிலே என்று வசனம் பேசியபடி படம் முழுமைக்கும் கூலர்ஸ் போட்டுத் திரியும் சிம்பு. அலட்டலான உடல்மொழியில் அப்படியே சல்மானைக் கொண்டு வர முயன்று ஜெயித்தும் இருக்கிறார். செமையாக டான்ஸ் ஆடுகிறார் (வானம் படத்தில் அனுஷ்காவின் தொடைகளைப் பிடித்து ஆடிய சிம்பு இந்தப்படத்தில் இரண்டு ஜீப்களை நிறுத்தி அந்தரத்தில் ஆடியிருப்பது முன்னேற்றம்). பறந்து பறந்து அடிக்கிறார். பைக் ஜீப் என்று வித்தை காட்டுகிறார். இறந்து போன அம்மாவைப் பார்த்துத் துடிக்கையிலும் மருத்துவமனையில் இருக்கும் அப்பாவிடம் பேசும் காட்சியிலும் நன்றாக நடிக்கிறார். இப்படி படம் பூராவுமே சிம்பு நிறையக்கிறார்”. திருநெல்வேலி ஸ்லாங் சிம்புவுக்கு அருமையாகப் பொருந்துகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் சிம்பு பேசும்போது குறளரசன் ஞாபகம் வந்து தொலைக்கிறது. கதாநாயகி நல்லா நடிச்சாத்தான் ஆச்சுன்னு யாரு சொன்னா. ச்சும்மா வந்து நின்னே மனதை அள்ளுகிறார் ரிச்சா. மனுஷனாப் பொறந்துதுக்கு அவர் இடுப்புக்கு கொலுசாப் பொறந்திருக்கலாம் எனத் தியேட்டருக்குள் பெருமூச்சு விட்ட பலருள் அடியேனும் ஒருவன்.



அடுத்ததாக சந்தானம். முதல் பாதியில் சிம்புவுக்கு முட்டுக் கொடுக்கும் இன்னொரு நாயகன். நெடுவாலி பாட்டில் சிம்புவைப் போலவே ஆடிக் கலாய்க்கிறார். யாரு இவன்.. கோவா பட பிரேம்ஜி மாதிரியே இருக்கான். அவர் பேசும் ஒரு வரி வசனங்கள் எல்லாமே நச். வில்லனாக சோனு சூத். உப்புக்கு சப்பாணி. சிம்புவிடம் அடிவாங்கச் சாக ஒரு வில்லன் வேண்டும் என்பதற்காக படத்தில் இருக்கிறார். கிளைமாக்சில் சிம்புவின் சிக்ஸ் பேக்கை காட்ட வேண்டும் என நினைத்தவர்கள் இவரை சட்டை போடச் சொல்லி இருந்தால் சிம்பு கொஞ்சம் எடுபட்டிருப்பார். ஜித்தன் ரமேஷ் சிம்புவின் தம்பியாக நிறைவாக நடித்து இருக்கிறார். போக படத்தில் நாசர், ரேவதி, சரண்யா மோகன், மயில்சாமி, தம்பி ராமையா எனப் பெரிய பட்டாளமே உண்டு.

படத்தின் பாடல்கள் எல்லாமே செம குத்து. ஒரே மாதிரியாக இசையமைக்கும் தமனிடம் கூடத் தன்னால் நல்ல பாடல்கள் வாங்க முடியும் எனக் காட்டி விட்டார் சிம்பு. பாடல்களைப் படமாக்கிய விதத்திலும் அசத்தி விட்டார்கள். குறிப்பாக நெடுவாலியும் க்யூட் பொண்டாட்டியும். வசனம் எழுதிய புண்ணியவான் யார் என்று தெரியவில்லை. தபாங்கிலிருந்து விலகி தமிழுக்கு பொருந்தும்படியாக நீட்டாக எழுதி இருக்கிறார். நிறைய டபுள் மீனிங்கும் உண்டு. அலம்பல் சாதாரணமாகவே சிம்புவிடம் ஜாஸ்தி என்பது அவர் பேசும் வசனங்களுக்கு இன்னும் அதிகமாகப் பொருந்துகிறது. உங்கள் கடமை உணர்வைப் பார்த்து காவல்துறை வியக்கிறது. எப்போதும் போல ஒளிப்பதிவாளர் கோபிநாத் தரணியின் ஆள் என்பதை நிரூபித்து இருக்கிறார்.



ஹிந்திப் படத்திலிருந்து சண்டைக் காட்சிகள் தவிர்த்து வேறு எதையும் பெரிய அளவில் மாற்றாமல் அப்படியே படமாக்கி இருக்கிறார் தரணி. குருவிக்கு முன்புவரை மாஸ் கதநாயாகர்களின் டார்லிங்காக இருந்தவர். சின்னதொரு சறுக்கலுக்குப் பிறகு இந்தப்படத்தில் விட்டதைப் பிடித்திருக்கிறார். லாஜிக், இது எப்படி வந்தது, ஒரு குண்டு கூட சிம்பு மீது படாதா எனக் கேள்வி கேட்பவர்கள் எல்லாம் ஒதுங்கிப் போங்கள். இது உங்களுக்கான படமல்ல. இரண்டு மணி நேரம் ஆட்டம் பாட்டம் சண்டை எனக் கொண்டாட நினைக்கும் மக்களுக்கான படம் - ஒஸ்தி. ஒரு அழகான மசாலா எண்டெர்டெயினராகப் படத்தை எடுத்திருக்கும் தரணிக்கு வாழ்த்துகள்.

December 7, 2011

விஷ்ணுபுரம் விருது விழா 2011

வணக்கம். தமிழின் மூத்த படைப்பாளுமைகளை கவுரவிக்கும் பொருட்டுவிஷ்ணுபுரம் விருதுகள்கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது.

கடந்த ஆண்டு இவ்விருது எழுத்தாளர் . மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னம் தலைமையில் கோவையில் நிகழ்ந்த விழாவில் .மாதவன் படைப்புலகம் குறித்து ஜெயமோகன் எழுதியகடைத்தெருவின் கலைஞன்எனும் நூலும் வெளியிடப்பட்டது.

2011ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 18ம் தேதி கோவையில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. விழாவில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பூமணியை வாழ்த்த இருக்கிறார்கள். விழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம்.

தாங்கள் வருகை தந்து விழாவினைச் சிறப்பிப்பதோடு, விழா குறித்த செய்தியினை தங்களது பத்திரிகை / தொலைக்காட்சி / வலைதளம் / முகநூல் வெளியிடச் செய்து உதவுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

மிக்க அன்புடன்,
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.




தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்


எழுத்தாளர் ஜெயமோகன்,
வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்
எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்,
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,
இயக்குனர் பாரதிராஜா
எழுத்தாளர் பூமணி

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)