October 16, 2010

நட்புக்காக - where is the friend's home (1987)

குழந்தைகள், ஞானிகள் மற்றும் கவிஞர்கள்.. இவர்கள் மூவரும் இருப்பதால்தான் இந்த உலகில் இன்னமும் மழை பெய்கிறது என்ற இசையின் கவிதையொன்றைப் படித்திருக்கிறேன். இந்த மூவரும் வாழும் உலகம் வேறு - வெகு இயல்பானதொரு உலகம் அது. இவர்களில் இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் குழந்தைகள். அவர்களின் உலகில் யாருக்கும் எந்தக் கவலைகளும் இல்லை.

குழந்தைகள் மனதில் குரோதமோ வன்மமோ கிடையாது. எதையும் பெரிதாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் எளிமையான முறையில் அணுகக் கூடியவர்கள். அதனால்தான் இன்று வரை பெரியவர்களால் குழந்தைகளின் உலகத்தில் எளிதாகப் பிரவேசிக்க முடிவதில்லை. குழந்தைகளைப் புரிந்து கொள்ள நாம் அவர்களைப் போலவே சிந்திக்க வேண்டும். ஆனால் அது நமக்கு இயலாததாகவே இருக்கிறது.

உங்கள் பள்ளிப்பருவத்தைப் பற்றி கேட்டால் சட்டென ஞாபகத்துக்கு வருவது என்னென்ன விஷயங்கள்? நண்பர்கள், ஆசிரியர்கள், நாம் செய்த சேட்டைகள் என சொல்வதற்கான எத்தனையோ இருக்கும். வீட்டுப்பாடம் செய்யாமல் போய் ஆசிரியரிடம் திட்டு வாங்காதவர்கள் நம்மில் யாரும் இருக்கிறோமா என்ன? அதுபோன்றதொரு மாணவனின் கதையைச் சொல்லும் படம்தான் "வேர் இஸ் தி பிரண்ட்ஸ் ஹோம்.."மூடப்பட்டு இருக்கும் கதவுக்குப் பின்னால் குழந்தைகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அது ஒரு வகுப்பறை. தான் சிறிது தாமதமாக வந்ததால் விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்களை ஆசிரியர் கடிந்து கொள்கிறார். பிறகு ஒவ்வொரு மாணவராக வீட்டுப்பாடத்தைத் திருத்தத் துவங்குகிறார். நெமத்சாதே என்கிற பையன் தன்னுடைய வீட்டுப்பாடத்தை நோட்டில் எழுதாமல் வெறும் தாளில் எழுதி வந்திருக்கிறான். ஆசிரியர் கோபத்தோடு அதைக் கிழித்துப் போடுகிறார். மாமா வீட்டுக்குப் போன இடத்தில் தன்னுடைய நோட்டை மறந்து வைத்து விட்டதால் தாளில் எழுதியதாக அவன் அழுதபடி சொல்கிறான்.

அருகில் அமர்ந்திருக்கும் அகமது வீட்டுப்பாடத்தை நோட்டில் அழகாக எழுதி இருப்பதை ஆசிரியர் பாராட்டுகிறார். பிறகு நோட்டில் எழுதுவதால் உண்டாகும் நன்மைகளையும் அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம் என்பதை விளக்கும் ஆசிரியர் மறுநாள் வீட்டுப்பாடம் எழுதாவிட்டால் நெமத்சாதேயை பள்ளியை விட்டு அனுப்பி விடுவேன் என்று சொல்கிறார். பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் சந்தோஷமாக வெளியே ஓடி வருகிறார்கள். அப்போது நெமத்சாதே கீழே விழுந்து விடுகிறான். சேறாகிப் போன உடைகளைக்கழுவ அவனுக்கு அகமது உதவி செய்கிறான்.

வீட்டுக்கு வரும் அகமது தாய்க்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு வீட்டுப்பாடம் செய்ய உட்காருகிறான். அப்போதுதான் தெரியாமல் நெமத்சாதேயினுடைய நோட்டும் தன்னிடம் இருப்பதைத் தெரிந்து கொள்கிறான். "வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் நாளைக்கு வெளியே அனுப்பி விடுவேன்" என்று ஆசிரியர் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. அந்த நோட்டைக் கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்று தன்னுடைய தாயிடம் சொல்கிறான் அகமது.

மற்றவனுடைய வீடு எங்கே இருக்கிறது என்ற கேட்கிறாள் அம்மா. அது "போஸ்தே" என்ற ஊரில் இருக்கிறது. அங்கே போக மலைக்கு மறுபக்கம் போக வேண்டும் என்பதால் அம்மா அகமதுவை போக வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள். மறுநாள் பள்ளியில் நோட்டைக் கொடுத்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறாள். அகமது எவ்வளவு சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை.

அம்மா சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாமலேயே வீட்டுப்பாடம் செய்கிறான் அகமது. அப்போது வீட்டுக்கு வேண்டிய சாப்பாடை வாங்கி வரும்படி அம்மா சொல்கிறாள். இதுதான் சமயம் என்று அவளுக்குத் தெரியாமல் நண்பனுடைய நோட்டை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். நீண்டு வளைந்து போகும் மலைப்பாதையின் வழியாக வெகு தூரம் ஓடி போஸ்தேவை அடைகிறான். ஆனால் அங்கே நெமத்சாதேயின் வீடு எங்கிருக்கிறது என அவனுக்குத் தெரியவில்லை.

பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கும் அந்தக் கிராமத்தின் பல தெருக்களிலும் சுற்றித் திரிகிறான் அகமது. நெமத்சாதேயின் உறவுக்காரனான ஹெமதி வசிக்கும் வீட்டைத் தேடித் போகிறான். ஆனால் அந்த வீடோ பூட்டிக் கிடக்கிறது. வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் மலைப்பாதையில் இறங்கி தன்னுடைய ஊருக்கு வந்து விடுகிறான்.

வீட்டுக்குப் போகும் வழியில் அகமதுவின் தாத்தா அவனைப் பிடித்துக் கொள்கிறார். தனக்கு சிகரெட்டுகள் வாங்கி வரும்படி சொல்லும் தாத்தா இன்றைய பிள்ளைகள் கீழ்ப்படிதல் இல்லாதவர்களாக இருப்பதாக வருத்தப்படுகிறார். அங்கே ஜன்னல்கள், கதவுகள் செய்யும் ஒருவரைப் பார்க்கிறான் அகமது. அவருடையும் பெயரும் நெமத்சாதே தான் எனத் தெரிந்து கொண்டு அந்த மனிதனைப் பின்தொடர்கிறான். மலை மேலே குதிரையில் போகும் அந்த மனிதனைத் தொடர்ந்து மீண்டும் போஸ்தேவுக்கு வந்து சேர்கிறான்.

குதிரையில் போகும் மனிதனின் வீட்டுக்கு வந்து சேருகிறான் அகமது. அது அவன் தேடி வந்த வீடில்லை. மீண்டும் தேடத் துவங்குகிறான். அவன் சந்திக்கும் வயதான கொல்லனொருவன் தனக்கு நெமத்சாதேயின் வீடு தெரியும் என வழி சொல்லக் கிளம்புகிறான். இருவரும் பேசியபடியே நடக்கிறார்கள். வழியில் ஒரு சின்ன மலரை அகமதுவுக்கு பரிசாகத் தருகிறார் வயதானவர். அவர் காட்டும் வீடும் தவறானதாகவே இருக்கிறது.

தனக்கு நேரமாகி விட்டதால் அம்மா திட்டுவாள் என்று சொல்லி அவசரமாகக் கிளம்புகிறான் அகமது. வீட்டுக்குத் திரும்பி வந்து அமைதியாக உட்கார்ந்து இருக்கிறான். சாப்பாடு வேண்டாம் என மறுக்கிறான். தூங்கச் சொல்லும் அம்மாவிடம் தான் வீட்டுப்பாடம் செய்யப் போவதாக சொல்கிறான். தனியறையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கும் அவனுக்கு அருகே உணவை வைத்து விட்டுப் போகிறாள் அம்மா.

காலை. பள்ளிக்கூடம். ஆசிரியர் எல்லாருடைய வீட்டுப்பாடத்தையும் திருத்தத் துவங்குகிறார். அகமது இன்னும் வரவில்லை. பயந்தபடியே தான் எழுதி இருக்கும் தாள்களை எடுத்து மேஜையின் மீது வைக்கிறான் நெமத்சாதே. தாமதமாக உள்ளே நுழையும் அகமது அவன் அருகே வந்து உட்கார்ந்து கொள்கிறான்.

"ஆசிரியர் உன்னுடைய பாடத்தை திருத்தி விட்டாரா.. நான் உனக்காக அதை எழுதி விட்டேன்.."

ஆசிரியர் முதலில் அகமதை நோட்டைக் காட்டும்படி சொல்கிறார். பிறகு மற்றவனின் நோட்டைத் திருத்துகிறார். அந்த நோட்டுக்குள் வயதானவர் அகமதுக்குத் தந்த குட்டிப்பூ இருக்கிறது. "குட்.. நல்ல பையன்" என்று ஆசிரியர் நெமத்சாதேயைப் பாராட்டுவதோடு படம் முடிகிறது.

இரானின் முக்கிய இயக்குனரான அப்பாஸ் கிரோச்தமி இயக்கிய இந்தப்படம் 1987 இல் வெளியானது. மலை சரிவுகளில் கட்டப்பட்டு இருக்கும் வீடுகள், படிப்படியாக செதுக்கப்பட்டு இருக்கும் மலைப்பாதைகள், நடுத்தர வீடுகள் என இரானின் கிராம வாழ்க்கையை, அவர்களின் இயல்பான உலகத்தை இந்தப்படம் பதிவு செய்கிறது.

நான் பார்த்த படங்களிலேயே இந்தப்படம் போல பின்னணி இசை வெகு குறைவாக பயன்படுத்தப்பட்ட படம் எதுவுமே கிடையாது. பின்னணியில் முழுக்க முழுக்க இயற்கை சத்தங்கள் மட்டுமே இருக்க, அகமது மலைப்பாதையில் ஓடும் காட்சி மற்றும் இறுதிக்காட்சி என மூன்று இடங்களில் மட்டுமே பின்னணி இசை ஒலிக்கிறது
. ஒளிப்பதிவும் வெகு சாதாரணமானதே. ஒரு ஆவணப்படம் பார்க்கும் உணர்வைத்தான் தருகிறது.

குழந்தைகளைப் பற்றிப் பேசும் அதே நேரத்தில் இந்த படத்தில் காட்டப்படும் வயதானவர்களைப் பற்றிய விஷயங்களும் மிக முக்கியமானவை. சிறுவன் சொல்வதை கவனிக்கத் தயாராக இல்லாத பெரியவர்கள், சொல்வதை சரியாக செய்தாலும் குழந்தைகளை அடித்துத்தான் வளர்க்க வேண்டும் என்று சொல்கிற அகமதுவின் தாத்தா, நோய்வாய்ப்பட்டு கவனிக்க யாருமில்லாமல் இருக்கும் முதிய பெண், பேசக் கூட ஆளில்லாமல் தானாகக் கிளம்பி அகமதுடன் வரும் கொல்லன் என வாழ்க்கையில் நாம் கவனிக்கத் தவறும் நிறைய விஷயங்களை இந்தப் படம் பேசிப்போகிறது.

நல்ல கதை கிடைப்பதில்லை என்று சொல்லும் நம்மூர் மக்கள் இதைப் போன்ற படங்களைப் பார்க்க வேண்டும். ரொம்பவே சாதாரணமானக் கதை. கதை என்று சொல்வதை விட ஒரு நாளின் சம்பவங்கள். அவ்வளவுதான். மெதுவாக நகரும் படத்தின் திரைக்கதை நம்முடைய பொறுமையைக் கொஞ்சம் சோதிக்கிறது. குழந்தைகளிடம் நெருங்கிப் பழக நமக்கு அந்தப் பொறுமைதானே அவசியம். இந்தப்படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல விரும்புவதும் அதுதானோ என்னமோ?

9 comments:

லேகா said...

அறிமுகத்திற்கு நன்றி கார்த்திகை பாண்டியன்.அப்பாசின் "Taste Of Cherry " மிக சமீபத்தில் தான் பார்த்தேன்.குழந்தைகள் உலகம் சுவாரஸ்யம் குறையாதது...பார்க்கும் ஆவலை தூண்டும் திரைப்பார்வை.

தருமி said...

பிடித்த படம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

@lekha

நன்றி லேகா..
டேஸ்ட் ஆஃப் செர்ரி - பார்க்கணும்

@தருமி

ஆகா.. நீங்க பார்த்துட்டீங்களா அய்யா.. ரைட்டு..:)))

பிரபு . எம் said...

அப்பாஸின் திரைக்கதையைப் போன்றே மென்மையாக தொடுத்திருக்கிறீர்கள் பதிவை.. :)

//நல்ல கதை கிடைப்பதில்லை என்று சொல்லும் நம்மூர் மக்கள் இதைப் போன்ற படங்களைப் பார்க்க வேண்டும்.//

ஆமோதிக்கிறேன்!!

ஸ்ரீ said...

படம் பார்த்ததில்லை.இருப்பினும் உங்கள் விமர்சனம் பார்க்கத் தூண்டுகிறது.

கார்த்திகைப் பாண்டியன் said...

@பிரபு.எம்

வலிக்காமக் குத்தி இருக்கீங்க தல

@ஸ்ரீ

ஹி ஹி ஹி.. நேர்ல நீங்க என்ன சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும்ணே

Karthik said...

Supera eluthirukkeenga. Parkka try panrengna. :-)

நையாண்டி நைனா said...

/*நல்ல கதை கிடைப்பதில்லை என்று சொல்லும் நம்மூர் மக்கள் இதைப் போன்ற படங்களைப் பார்க்க வேண்டும்.*/

இப்ப அடிக்குற காப்பியே போதுங்க... பாவம் அந்த ப(ச)டங்க....

கார்த்திகைப் பாண்டியன் said...

@karthik

பாருப்பா.. நல்ல படம்..:-))

@நைனா

நம்மளால முடிஞ்சத கண்டிப்பா செய்யணும் தல..:-))