January 5, 2011

கூடு

தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் அந்த டாக்சி ஸ்டாண்டில் கூடுவதை நானும் எனது இரண்டு நண்பர்களும் வாடிக்கையாகிக் கொண்டிருந்தோம். நாளெல்லாம் வயிற்றுப்பாட்டுக்காக நகரத்தின் சந்து பொந்தெல்லாம் அலைந்து திரிந்து சோர்ந்து வரும் எங்களுக்கு, ஒன்றாய்ப் பேசி மகிழும் அந்தப் பொழுதுகள், கூண்டுப் பறவைகள் வானத்தின் வாசம் தேடும் சிற்சில கணங்கள்.

இந்த ஊரைச் சுத்துன கழுதைக்கு வேறெந்த ஊரும் பிடிக்காது என்று கொண்டாடப்படும் மதுரையின் குடிமக்கள் நாங்கள். மதுரையும் நகரம் எனவோ கிராமம் என்றோ வரையறுக்க முடியாததொரு ஊர். நவீன பாணி கட்டிடங்களும் நூற்றாண்டு பழமையான வீடுகளும் மாறி மாறி காணக் கிடைக்கும். ஊரின் பழமைக்கு சாட்சியாக இன்னும் ரயில்வே ஸ்டேஷனின் எதிர்ப்புறம் இருக்கும் மங்கம்மாள் சத்திரம் பல கதைகள் சொல்லும். ஆனால் தூங்கா நகரம் இன்றைக்கு தூசி நகரம்.

சத்திரத்தின் பக்கவாட்டில் போகும் டவுன் ஹால் ரோட்டின் காலேஜ் ஹவுஸ்க்கு எதிரில் நாங்கள் கூடும் டாக்சி ஸ்டாண்டு இருந்தது. பச்சை நிற வர்ணமடித்த நான்கைந்து இரும்புக் கம்பங்கள் தாங்கிப் பிடிக்கும் ஒரு ஆஸ்பெடாஸ் கூரை. ஓரமாக குவிந்து கிடக்கும் நைந்து போன பழைய ட்யூபுகள். கூரையின் கம்பிகளில் தன்னுடைய கூட்டை அமைத்துக் கொண்டிருந்த குருவியின் குவிக் குவிக் சத்தம் மட்டும் எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

ஸ்டாண்டின் உள்ளே சீருடையணிந்த பள்ளிப் பிள்ளைகளென வரிசையாக அணிவகுத்து நிற்கும் வெள்ளை நிற அம்பாசிடர்கள். விதவிதமான வசதிகளோடு எத்தனை கார்கள் வந்தாலும் நெடுந்தூரப் பயணம் என்றாலே மக்களுக்கு அது அம்பாசிடர்தான். அதிகபட்சமாக ஒரே நேரத்தில் ஐந்து கார்களை நிப்பாட்டுவதற்கான இடம் அந்த ஸ்டாண்டில் இருந்தது.

எப்போது பார்த்தாலும் மூன்று அல்லது நான்கு வண்டிகள் ஸ்டாண்டில் நின்று கொண்டே இருக்கும். வண்டியின் டிரைவர்களுக்கும் எங்களுக்கும் இடையே நல்லதொரு நேசபாவம் இருந்தது. எப்போது பார்க்கும்போதும் அவர்கள் முகத்தில் எங்களுக்கான சிரிப்பை ஒளித்து வைத்திருந்தார்கள். அந்த டிரைவர்களில் சிலர் தங்கள் மனைவிமாரை விடவும் அதிகமாக அந்தக் கார்களை காதலிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். தாம் குளிக்கிறோமோ இல்லையோ கார்களை அழகாகக் கழுவி துடைத்து பராமரிக்கும் வழக்கம் அவர்களுக்கு இருந்தது.

எங்களுக்கு ரொம்பவும் நெருக்கமான தன்ராஜ் அண்ணனுக்கு வீடென்று ஒன்று உண்டாவெனவே யாருக்கும் தெரியாது. அவருடைய கார்தான் அவருக்கு வீடு. சவாரி இல்லாத நாட்களில் ஸ்டாண்டு படு பயங்கரமாக களை கட்டும். சீட்டாட்டம், கோலி என விளையாட்டுகளில் டிரைவர்களுக்கு பொழுது போகும். தோற்பவர்கள் மற்றவர்களுக்கான சாப்பாட்டு செலவுகளையும் சரக்குக்கான தேவையையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஆட்டத்தின் விதிமுறை. இது மாதிரியான தினங்களில் அதிகம தோற்பது தன்ராஜ் அண்ணனாகத் தான் இருக்கும். எல்லாருக்கும் அவர் சரக்கு வாங்கும்போது அவர்களோடு நாங்களும் கலந்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்கும் அவர்களுக்கும் நெருக்கம் இருந்தது.

ஸ்டாண்டின் டிரைவர்களுக்கு எல்லாம் கமலாதான் அன்னலட்சுமி. அவளுடைய இட்லிக்கடை ஸ்டாண்டின் இடப்புறமாக இருந்தது. கடை என்று சொல்லி விட்டதாலேயே பெரிதாக எதுவும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். ஒரு தார்ப்பாலின் சீட்டு, அதன் கீழே இரண்டு பேர் கல்லில் குத்த வைத்து உட்காருவதற்கான வசதி, இட்டிலிக்குண்டா, நான்கைந்து தட்டுகள், ஒரு இத்துப்போன வாளி (கை கழுவ) மற்றும் ஒரு பிளாஸ்டிக் குடம் (குடிக்க). சின்னக் கடையாக இருந்தாலும் அந்தப் பகுதியில் கூலி வேலை பார்க்கும் எல்லோருக்கும் அதுதான் ஸ்டார் ஹோட்டல்.

கமலாவுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி என்பதை விசாரித்து தெரிந்து கொண்டிருந்தோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு காதலென நம்பி யார் கூடவோ மதுரைக்கு ஓடி வந்தவள். கூட வந்தவன் சகலத்தையும் கறந்து விட்டு கழண்டு கொள்ள நடுத்தெருவில் நின்றிருக்கிறாள். வயிற்றுப்பாட்டுக்கு உதவிய சிலரால் இந்தக்கடை வைத்து இன்றைக்கு சொல்லிக் கொள்ளும்படியான வாழ்க்கை.

அவள் கடையின் மீதங்களைத் திண்டு உயிர் வாழ கற்றுக் கொண்டிருந்தது ஒரு கறுப்பு நாய். தெனக்கரத் தின்று விட்டு ஸ்டாண்டிலேயே படுத்துக் கிடக்கும். தெரியாத ஆட்கள் கடையை நெருங்கினாலோ ஸ்டாண்டுக்கு உள்ளே வந்தாலோ அது போடும் கூச்சலில் ஊரே அதிரும். கமலா ஒருத்தியின் குரலுக்குத்தான் அடங்கும். இரவு நேரங்களில் அதுதான் கடைக்கு காவல்.

நாலு வருஷம் முன்பு வரை கடைதான் அவளுடைய வீடாகவும் இருந்து வந்தது. இப்போது காக்காத்தோப்பில் வாடகைக்கு வீடு. (எத்தனை நாள் தான் தெருவிலேயே கிடக்குறது?) அங்கேயே சில பெண்களை வைத்து தொழில் செய்து வருவதாகவும் கேள்வி. ஆனால் அதை அவளிடம் கேட்கும் தைரியம் எங்களில் யாருக்கும் இல்லை.

டாக்சி டிரைவர்கள் தவிர்த்து கமலாவின் மிக முக்கியமான கஸ்டமர் முருகேசன். டாக்சி
ஸ்டாண்டின் எதிரே இருந்த புதிய உலகம் புத்தகக்கடையின் உரிமையாளர். அவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும். பிள்ளைகள் எல்லாரும் வெளிநாட்டில் போய் தங்கிவிட இவர் பொழுது போகாமல் இந்த புத்தகக்கடையை நடத்தி வந்தார். ரோட்டில் உள்தள்ளி இருக்கும் அந்தக் கடைக்கு புத்தகம் வாங்க ஆட்கள் வந்து யாரும் பார்த்து இல்லை. ஆனால் அதைப் பற்றி முருகேசன் என்றைக்குமே கவலைப்பட்டது கிடையாது.

அவரிடம் இல்லாத புத்தகங்களாக விசாரித்துக் கொண்டு சில தோழர்கள் அவரது கடைக்கு வருவார்கள். அவர்களே அவருடைய மிகப்பெரிய பேச்சுத்துணையாக இருந்தார்கள். டாக்சி ஸ்டாண்டின் டிரைவர்களுக்கும் அவர்களை நன்றாகத் தெரிந்திருந்தது. பகல் பொழுதை எல்லாம் பேசிக் கழிக்க அவர்களுக்கு அந்த ஸ்டாண்டும் கமலாவின் கடையும் மிக உதவியாக இருந்தன.

ஆரம்பம் முதலே எங்களுக்கும் முருகேசனுக்கும் ஏழாம் பொருத்தம்தான். பொதுவில் அவர் யாரையும் நம்பாதவராகவே இருந்தார். இரவில் கடையைப் பூட்டுவதில் அவருக்கு வித்தியாசமானதொரு பழக்கம் இருந்தார். முதலில் ஷட்டரை இறக்கிப் பூட்டுவார். சிறிது தூரம் செல்வார். பிறகு மீண்டும் வந்து பூட்டை ஒரு முறை பரிசோதித்துப் பார்ப்பார். திருப்தி இல்லாதவராக கடையைத் திறந்து ஒரு முறை மீண்டும் எல்லாவற்றையும் சரி பார்ப்பார். கடைசியாக கடையை பூட்டிக் கொண்டு புறப்படுவார். இதைத் தன் தினசரி கடமையாகவே அவர் கொண்டிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பிருந்து அவனை நாங்கள் ஸ்டாண்டில் பார்த்து வருகிறோம். கிழிந்த உடைகள். எப்போதும் வானத்தையே வெறிக்கும் பார்வை. வாயைத் திறந்து ஏதும் பேசவோ கேட்கவோ மாட்டான். எப்போதாவது பசித்தால் அருகில் இருக்கும் கடைகளில் சென்று கையை நீட்டுவதொடு சரி. யாரவன் எங்கிருந்து வந்தான் என்பதை யாரும் அறிந்திருக்க வில்லை. ஆனால் அவனும் ஸ்டாண்டைத் தன் வசிப்பிடமாகிக் கொண்டான்.

இரவு நேரத்தில் நடைபாதைக்கும் முருகேசனின் கடைக்கும் இருக்கும் இடைவெளியில் அவன் படுத்துக் கொள்ளுவதைப் பார்த்திருக்கிறோம். சிறிது நேரத்திலேயே அனிச்சை செயலாக அவனுடைய கைகள் கால்சராய்க்குள் போய் விடும். ஆரம்பத்தில் டிரைவர்கள் அவனைக் கடுமையாகத் திட்டுவதோடு இழுத்துப் போட்டு அடித்தது கூட உண்டு. ஆனால் அவன் எதையும் பொருட்படுத்தாதவனாக இருந்தான். காலப்போக்கில் அதுதான் அவனுடைய இயல்பென ஏற்றுக் கொள்ள டிரைவர்களும் பழகி விட்டார்கள்.

நாங்கள் கதை பேசி பிரியும்போது மணி பத்தைத் தாண்டி விடும். அதன் பிறகான பின்னிரவில் டாக்சி ஸ்டாண்டின் நிறமே மாறி விடும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். கார்களின் பின்புற இருளில் அசைவுகளும் சிரிப்பொலியும் பெருகும். பஸ் ஸ்டாண்டிலும், ரயில்வே ஸ்டெஷனிலும் தங்களுக்கான கிராக்கிகளைக் கண்டுகொள்ளும் ரூட்டுகளும் அஜக்குகளும் செலவின்றி ஒதுங்குவதற்கான இடமாக அந்த ஸ்டாண்டையே பயன்படுத்தி வந்தார்கள். சிறுவர்கள் பொட்டலங்களோடு சுற்றுவதையும் வேணுமா அண்ணே என கிண்டலாக எங்களைக் கேட்பதும் வெகு இயல்பான விஷயமாக இருந்தது.

எதைத் தேடித் திரிகிறோம் எனத் தெரியாமலே அலைந்து திரியும் நாங்கள், டிரைவர்கள், கமலா உட்பட நாங்கள் அறிந்த மனிதர்கள் என எல்லோருமே ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதவர்களாகவே இருந்தோம். ஆனால் எங்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சின்னதொரு இழையாக அந்த டாக்சி ஸ்டாண்டு இருந்து வந்தது.

அந்த
டாக்சி ஸ்டாண்டைத்தான் சாலையை அகலமாக்குவதாக சொல்லி இரண்டு நாட்களுக்கு முன்பாக இடித்து விட்டார்கள்.

ஏதும் பேச இயலாதவர்களாக சாலையின் முனையில் நின்று கொண்டிருந்தோம். கண்களில் யாருமில்லா வெறுமை மட்டுமே நிறைந்து கிடந்தது. எப்போதும் அங்கே நிற்கும் கார்கள் இன்று இல்லை. காற்றில் கரைந்தவர்களாக அந்த டிரைவர்கள் காணாமல் போயிருந்தார்கள். கமலாவின் கடை இருந்த இடத்தில் தார்ப்பாலின் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அந்தக் கருப்பு நாய் மட்டும் அங்கே சுற்றி சுற்றி வந்தது. புத்தகக்கடை மூடி கிடக்க அதன் வாசலில் இருந்த கிறுக்கனையும் காணவில்லை.

குருவியின் கூட்டிலிருந்து பிய்த்து எறியப்பட்ட முற்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக் கிடந்தன. ஒவ்வொரு முறை காரை கிளப்பும்போதும் வெளிவரும் புகையினால் உண்டான கறுப்புக் கறை மட்டுமே ஸ்டாண்டின் பின்புற சுவரில் பாக்கி இருந்தது. இன்னும் சில நாட்களில் அதுவும் இல்லாமல் போய்விடக் கூடும்.

13 comments:

சங்கவி said...

கால மாற்றத்தை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்...

ஸ்வர்ணரேக்கா said...

நடை நல்லாயிருக்குங்க...

Balaji saravana said...

மிகச் சிறப்பான நடை கா.பா!

வானம்பாடிகள் said...

class

தருமி said...

கதை அப்டின்னாலே தாண்டிப்போற பழக்கம வந்து கொஞ்ச காலம் ஆகிப் போச்சு. இதை வாசிக்க ஆரம்பித்த பின் 'கீழே வைக்க' முடியவில்லை. நிழற்படமா .. அழகா .. அடுக்கடுக்கா .. நல்லா இருக்கு.

நான் போட்ட முந்திய பின்னூட்டத்தை உண்மையாக்கியமைக்கு நன்றி.

♠ ராஜு ♠ said...

Good One.

pappu said...

details.... நல்ல அடர்த்தியா விவரணைகள். இப்படி இருந்தாதான் கதை படிக்கவே மூடிருக்கு!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

கார்த்திகைப் பாண்டியன் said...

சங்கவி
நான் சொல்ல வந்தது அது இல்லை தலைவரே.. இது வேற..:-))

ஸ்வர்ணரேக்கா
ரொம்ப நன்றிங்க

நன்றி பாலாஜி சரவணா

பாலா சார்
இதுதான்..:-)) ரொம்ப நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

தருமி
அய்யா.. மனம் திறந்து பாராட்டுறீங்களே.. இது போதும்.. ஓரளவுக்கு நீங்க எதிரபார்த்த மாதிரி இருந்ததுங்கிறதுல சந்தோஷம்..:-))

ராஜூ
நன்றிம்மா..

பப்பு
நன்றி.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்.. டயலாக்கே இல்லாத இதெல்லாம் ஒரு கதையான்னு இப்போத்தான் நண்பர் ஒருத்தர் திட்டினார்..:-))

அருணா மேடம்..
ரொம்ப நன்றிங்க..

ஆ.ஞானசேகரன் said...

///குருவியின் கூட்டிலிருந்து பிய்த்து எறியப்பட்ட முற்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக் கிடந்தன. ஒவ்வொரு முறை காரை கிளப்பும்போதும் வெளிவரும் புகையினால் உண்டான கறுப்புக் கறை மட்டுமே ஸ்டாண்டின் பின்புற சுவரில் பாக்கி இருந்தது. இன்னும் சில நாட்களில் அதுவும் இல்லாமல் போய்விடக் கூடும். //


ஆகா அருமையான நடை
வாழ்த்துகள் நண்பா
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

குமரை நிலாவன் said...

அருமையான நடை நண்பா

ஸ்ரீ said...

/கூண்டுப் பறவைகள் வானத்தின் வாசம் தேடும் சிற்சில கணங்கள்.//
உங்க நண்பன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை அண்ணே.