May 20, 2011

சென்னையும் போடா வெண்ணையும் (1)

சின்ன வயசுல இருந்தே, யாராவது என்கிட்ட தமிழநாட்டுலயே உனக்குப் பிடிக்காத ஊரு எதுன்னு கேட்டா யோசிக்காம பதில் சொல்லுவேன், மெட்ராஸ்னு. விவேக் ஒரு படத்துல சொல்ற மாதிரி எப்பவுமே சென்னை என்னைப் போடா வெண்ணைன்னுதான் சொல்லி இருக்கு. ஏன் பிடிக்காமப் போச்சுன்னு கேட்டா என்னத்த சொல்றது? நிறைய காரணங்கள். ஏழெட்டு வயசுல இருந்து சென்னையப் பத்திக் கேள்விப்பட்டது எல்லாமே தப்பான விஷயங்கள்தான்.

டேய் தம்பி மெட்ராஸுக்குப் போறப்ப மட்டும் ரொம்ப கவனமா இருக்கணும். ஏன்னா அந்த ஊருல பிக்பாக்கெட்டுங்க ஜாஸ்தி. அவனுங்க ரொம்ப மோசமானவனுங்க. நாம கொஞ்சம் அசந்தாப் போதும் மொத்தத்தையும் உருவிக்கிட்டு விட்டுருவானுங்க. பார்த்து சூதானமா இருக்கணும் புரிஞ்சதா? இதை சின்னப் பசங்ககிட்ட சொல்லாத பெருசுங்களே மதுரைல அந்தக்காலத்துல கிடையாது. அதே மாதிரி மெட்ராஸ்ல ஆட்டோக்காரங்களையும் நம்பவே கூடாது. இந்தா இருக்குற இடத்துக்கு ஊரெல்லாம் சுத்தி காசு புடுங்குவானுங்க. நம்மள சுத்தி இருக்குற எல்லாருமே இந்த மாதிரி எல்லாம் சொல்லும்போது நமக்கு அதை நம்புறதத் தவிர வேற வழியேது? ரொம்ப நாளைக்கு மெட்றாஸ் பூரா திருடங்க மட்டும்தான் இருப்பாங்கன்னு நான் நம்புன காலம் அது.

கொஞ்சம் கொஞ்சமா நமக்கு வெவரம் தெரிஞ்ச காலத்துல, வெறும் வார்த்தைகளால மட்டுமே அறிமுகம் ஆகி இருந்த மெட்ராஸ் பத்தி, ஊரு இப்படித்தான் இருக்கும்னு எனக்கு அறிமுகம் செஞ்சு வச்சது சினிமா. வாரம் ரெண்டு படம் பாக்குற குரூப் நாம. சினிமா நடிகனுக்கும் நடிகைக்கும் ரசிகர் மன்றம் வச்சு சேவை செய்யாத மக்கள் யாரும் இருக்கோமா என்ன? படத்துல அடிக்கடி காட்டுற இடங்களான பீச், அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி, உழைப்பாளர் சிலைன்னு நிறைய இடங்களைத் தியேட்டர்ல பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுலயும் சிவகுமார் நடிச்ச பாட்டொண்ணு பஸ்ல பாடுற மாதிரி வரும் “இந்தாம்மா மீன் மார்க்கெட்டெல்லாம் எறங்குன்னு” அந்தப்பாட்டு கூட நிறைய மெட்ராஸ சுத்திக் காமிச்சு இருக்கு. சினிமா மக்கள் குடியிருக்க கோடம்பாக்கம்தான் அப்போதைய காலத்துல எங்களுக்கு மெட்ராஸ்னு நம்பிக்கை. என்னதான் சினிமா நடிகங்களைப் பிடிச்சாலும் அந்த ஊரு மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காததாத்தான் அப்பவும் இருந்துச்சு.

திருப்பதி போறதுக்காக ட்ரெயின் மாறணுமேன்னு போனதுதான் நான் மொத தடவையா மெட்ராஸ் மண்ண மிதிச்சது. எக்மோருக்கு எதிர்த்தாப்டி இருந்த கடைங்கள எல்லாம் வேடிக்கை பார்த்ததோட சரி. எங்க தாத்தா கொடுத்த அஞ்சு ரூபா காச சட்டைப் பாக்கெட்டுக்குள்ள வச்சுக்கிட்டு அந்தப் பைய கைல பிடிச்சுக்கிட்டே சுத்துனது இப்பவும் ஞாபகம் இருக்கு. பிறகொரு தரம் வெளிமாநில டூர் போயிட்டுத் திரும்பி வர்ற வழியில மெட்ராஸ்ல ஹால்ட் அடிச்சி இருக்கேன். என் வாழ்க்கைல நான் என்னைக்கும் மறக்க முடியாத அடி வாங்கினது அப்பதான். ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி தான் போய் விழுமாம் கழனிப்பானையில துள்ளின்னு சொல்ற மாதிரி ஒரு கேசட் கடையில நானே திருடப் போய் செமத்தியா வாங்கிக் கட்டினேன். அதுவரைக்கும் பிடிக்காம மட்டும் இருந்த ஊரு அதுக்குப் பொறவு சுத்தமா பிடிக்காமப் போச்சு. வாழ்க்கையில இன்னொரு தரம் மெட்ராஸ்ங்கிற ஊருக்கு வரவே கூடாதுடான்னு அன்னிக்கு நினைச்சுக்கிட்டேன். ஆனா விதி யாரை விட்டது?

+2 முடிச்ச சமயம். நல்லாப் படிக்கிற பயபுள்ளைக்கு கணக்குல மார்க்கு கொறஞ்சு போச்சேன்னு வீட்டுல ஒரே கவலை. (181 வாங்கி இருந்தேன்). ஒடனே ரயில் ஏத்தி விட்டுட்டாய்ங்க போய் கல்வி அலுவலகத்துல மறுகூட்டல் விண்ணப்பம் கொடுத்துட்டு வான்னு. ரீவேல்யுவேஷன் அப்படின்னு ஒண்ணு இருக்குன்னு தெரியாம வண்டி பிடிச்சு நானும் வந்து இறங்கிட்டேன். கூடவே என் ஃபிரண்டும் வந்திருந்தான். ரெண்டு பேருமே ஊருக்குப் புதுசுன்னாலும் விசாரிச்சு பஸ் ஏறிட்டோம். ரெண்டரை ரூபா டிக்கட்டுக்கு ஊரையே சுத்திக் காமிக்குறாய்ங்க. எல்லா ஊர்லயும்தான் வெயில் அடிக்கும். ஆனா இந்த ஊர் வெயில் அந்தப் புழுங்கு புழுங்குது. மண்டை காய்ஞ்சு இறங்க வேண்டிய எடத்துல இறங்கி கழுத்துப் பகுதில கைய வச்சா கறுப்பு கறுப்பா படிஞ்சு கெடக்கு. கருமம் பிடிச்ச ஊருடான்னு திட்டிக்கிட்டே ஆபிசுக்குப் போனா தம்பி போய் ஊருப்பக்கம் பொழப்ப பாருங்க ஸ்கூலுக்கே ஃபார்ம் வரும்னு பொடணில அடிச்சு பத்தி விட்டாய்ங்க. மறுபடியும் மெட்றாஸ் மிஷன் ஃபெயிலியர்.

மீண்டும் மெட்ராஸ் வந்தது பொறியியல் கவுன்ஸிலிங் சமயத்துல. அடுத்த நாள் காலைல அண்ணா யுனிவர்சிட்டிக்குப் போகணும். மொத நாள் சாயங்காலம் படத்துக்குப் போகலாம்னு நானு, எங்க மாமா, என் ஃபிரண்டு, அவங்கப்பா எல்லாரும் கிளம்பி நாங்க தங்கி இருந்த இடத்துக்குப் பக்கத்துல இருந்த தேவி தியேட்டர் காம்ப்ளக்சுக்குப் போறோம். நாலு தியேட்டர்ல ஒண்ணுல காட்சில்லா, ஒண்ணுல அஜய் தேவ்கன் கஜோல் நடிச்ச ஹிந்திப்படம் (ஃப்ரென்ச் கிஸ்ஸோட காப்பி), இண்ணொன்னுல காதல் தேசம்னு நினைக்கிறேன், கடைசி தியேட்டர் என்ன படம்னு ஞாபகம் இல்ல. எல்லாப் படமும் ஹவுஸ்ஃபுல் போர்டு போட்டுட்டான். சரி பிளாக்ல வாங்கிப் போகலாம்னு விசாரிக்கப் போன மயக்கம் வராத குறைதான். ஒரு டிக்கட்டு 400 ஓவா. வெளங்குமா? டேய் முருகன் தியேட்டர்ல பத்து ரூபா காசுக்கு கால் மேல கால் போட்டு குஷன் சீட்டுல உக்கார்ந்து படம் பாக்குறவண்டா நானு. என்கிட்டப் போய்? போங்கடான்னு திரும்பி வந்தாச்சு. ஆக திரும்புற பக்கமெல்லாம் அடியாக் கெடச்சு எந்த விதத்திலயும் எனக்குப் பிடிக்காத ஊரா சென்னை இருந்துச்சு.

ஆனால் பின்னாளில், என் வாழ்வின் அதிமுக்கியமானதாக நான் கருதும் நட்பு சென்னையில்தான் இருக்கும் என்பதையோ, நான் பெரிதும் வெறுத்த அந்த ஊருக்கே இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை விரும்பி செல்லக் கூடிய நிலை வருமென்பதையோ அப்போது நான் அறிந்திருக்க வில்லை.

(சென்னை நினைவுகள் தொடரும்..)

12 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

சென்னைய சுத்தி காமிச்சுடிங்க...நன்றி..


எனது வலைப்பூவில்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வரலாறு!

தமிழ்வாசி பிரகாஷ் said...

சென்னை அனுபவம் தொடருமா?

எப்ப..எப்ப...?

Unknown said...

சென்னைய பார்ததே இல்லப்பா நான்..

Please Visit this link..
http://anbudansaji.blogspot.com/2011/05/i-love-you.html

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்றி பிரகாஷ்.. அடுத்த பாகம் திங்கள்கிழமை ரிலீஸ்..:-))

சரோ.. நன்றிங்க..

அன்புடன் சஜீ.. நன்றி.. உங்க தளத்தையும் வாசிக்கிறேன்..

நன்றி ரத்னவேல் சார்..

மேவி... said...

அழுத்தமா எதையுமே சொல்லலையே .ஒரு கோர்வையா இல்லை


நீங்க இந்த பதிவை மனம் ஒன்றி எழுதவில்லை போல் இருக்கு

கார்த்திகைப் பாண்டியன் said...

மேவி.. சமீப காலமா இந்த பின்னூட்டம் உங்களோட டெம்ப்ளேட் ஆகிக்கிட்டு இருக்கு.. ஏன்னு தெரியல..:-((

Mahi_Granny said...

சென்னையில பொண்ணு பார்த்து இருக்கீங்களோ

தருமி said...

//அதிமுக்கியமானதாக நான் கருதும் நட்பு//

ஓ! அப்டியா?? சரி .. சரி ..

மேவி... said...

"கார்த்திகைப் பாண்டியன் said...
மேவி.. சமீப காலமா இந்த பின்னூட்டம் உங்களோட டெம்ப்ளேட் ஆகிக்கிட்டு இருக்கு.. ஏன்னு தெரியல..:-((

May 21, 2011 9:37 PM"


என்னான்னு தெரியல காபா ...அப்படி தோணுது ... உங்களது பதிவுக்காக ரொம்ப ஆவலுடன் காத்து இருந்து படிப்பதினால் வருகிற ஏமாற்றமான்னு தெரியல

P.P.S.Pandian said...

அண்ணே நானும் மதுரைக்காரன் தான் . நான் பெங்களூருலிருந்து சென்னைக்கு மாறுதலில் வர தவியை தவிச்சுக்கிட்டு இருக்கிற இந்த நேரம் பாத்தா உங்க "சென்னையும் போடா வெண்ணையும்" படிக்கணும் . சிங்கரச் சென்னை குறித்த கனவுகளை சிதைச்சிடீன்களே

கார்த்திகைப் பாண்டியன் said...

பாண்டியன்..
இது என்னோட கருத்து மட்டும்தான். நீ எப்படி இப்படி சொல்லப் போச்சு, சென்னை எவ்ளோ நல்ல ஊர் தெரியுமான்னு என்னை buzz ல வெளுத்துக்கிட்டு இருக்காங்க.. தைரியமா நம்ம ஊருக்கு வாங்க நண்பா.. பார்த்துக்கலாம்..