May 25, 2011

சென்னையும் போடா வெண்ணையும் (2)

சென்னையிலிருந்து மதுரை வரும் வைகை எக்ஸ்பிரஸ். என்னுடைய முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து இருக்கிறேன். அன்ரிசர்வ்ட் டிக்கட் வாங்கியவர்கள் இடமின்றி கிடைத்த இடங்களில் எல்லாம் நின்று கொண்டிருக்கிறார்கள். எனக்கருகே ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். பார்க்கும்போதே திருநெல்வேலி அல்லது தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பது தெரிகிறது. ஒரு கையில் தனது பையையும் சாப்பாட்டையும் வைத்துக் கொண்டு இன்னொரு கையில் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு சாப்பிட முடியாமல் ரொம்ப சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

"அண்ணே இப்படி வந்து உக்கார்ந்து சாப்பிடுங்கண்ணே..”

பரவாயில்ல தம்பி.. இருக்கட்டும்..”

அட சும்மா வாங்கண்ணே.. எம்புட்டு நேரம்தான் நின்னுக்கிட்டே கைல சாப்பாட்ட வச்சுக்கிட்டு கதகளி ஆடுவீங்க.. வந்து உக்கார்ந்து சாப்பிடுங்க..”

சிரித்தபடியே வந்து உக்கார்ந்து பொறுமையாக சாப்பிட்டு முடித்தவர்ரொம்ப நன்றி தம்பிஎன்றபடியே எழுந்தார்.

தம்பிக்கு எந்த ஊரு..”

மதுரைண்ணே..”

நினச்சேன்.. நம்ம ஊரு பக்கமாட்டுத்தான் இருக்கும்னு.. பொறவென்ன.. இந்த மெட்ராஸ்காரப் பயலுவன்னா எவனும் இந்த மாதிரி ஒதவவா போறான்..”

எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாத, சக மனிதர்கள் மீது கவனம் செலுத்த நேரமில்லாத, தனக்கென மட்டுமெ வாழும் மக்கள்.

இதைப் பொதுவாகவே பெருநகரங்களில் இருக்கும் மனிதர்களின் மீதான குற்றச்சாட்டு எனக் கொண்டாலும் சென்னை என்றால் இப்படித்தான் இருக்கும் என்பதே பெரும்பாலான தென்மாவட்ட மக்களின் எண்ணமாக இருக்கிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. சென்னை எனத் தனியாக ஊர் எதுவும் கிடையாது மாறாக அது பல சிறு கிராமங்களின் மொத்தத் தொகுப்பே என்றும் அதை “வந்தேறிகளின் நகரம்” எனவும் கிண்டல் செய்வது எனது வழக்கம். இன்றைக்கு சென்னையின் எந்தப் பகுதிக்குப் போனாலும் அங்கே இருக்கக் கூடியவர்கள் பெரும்பாலும் வெளியூரைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அதுவும் இந்த பொறியியல் கல்லூரிகளின் அசுர வளர்ச்சிக்குப் பிறகு சென்னை முழுவதுமே வெளியூர் மக்களின் மிகப்பெரிய தங்கும் விடுதியாக மாறிப்போனது பெருங்கொடுமை.

சமீபமாக சென்னை வந்த போது எக்ஸ்பிரஸ் அவனியூவிற்குப் போய்வரும் வாய்ப்பு கிடைத்தது. சத்தியமாக நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என நம்ப முடியாமல் திகைத்துப் போனேன். காசை வைத்துக் கொண்டு என்ன செய்வதெனத் தெரியாமல் இத்தனை மக்கள் இருக்கிறார்களா எனத் திறந்த வாயை நான் கடைசி வரை மூடவே இல்லை. முந்தைய நாள் மகாபலிபுரத்தில் சாமி மூணு பத்து ரூபா சாமியோவ் என ஒரு நரிக்குறவப் பெண் விற்றுக் கொண்டிருந்த கிளிப் இங்கே அழகாய் ஒரு அட்டையில் மாட்டி வைக்கப்பட்டு தொண்ணூறு ரூபாய். குழந்தையின் தலைக்கு வைக்கும் பஞ்சுத் தலையணை ஆயிரத்து ஐநூறு ரூபாய். அதை எல்லாம் வாங்கவும் ஆளிருக்கிறது.

உடையலங்காரம், நுனி நாக்கு ஆங்கிலம், பாவனை, பொருள் வாங்கும் வசதி என எல்லாமே ஏதோ எனக்கு சென்னைக்கு உள்ளேயே வேறொரு நகரத்தில் நான் இருக்கும் உணர்வை ஏற்படுத்தின. ஒரு சாதாரணமான நடுத்தரப்பட்ட தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவன் இது போலதொரு இடத்துக்கு வருவானாயின் இயல்பாகவே அவனுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் வலிமை இந்த இடங்களுக்கு உண்டு என்பதை அன்று நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். இத்தனைக்கும் ஓரளவுக்கு உருப்படியான சம்பளம் வாங்கும் எனக்கே இந்த கதி என்றால் மற்றவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. நானெல்லாம் லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினால் கூட இப்படியொரு இடத்துக்கு வந்து மனதார செலவு செய்வேன் எனத் தோன்றவில்லை.

அடுத்தபடியாக என்னைப் பெரிதும் பயம் கொள்ளச் செய்வது பரபரப்பும் பதட்டமும் நிறைந்த சென்னை நகரின் வீதிகள் . அதிலும் அங்கே வாகனம் ஓட்டும் மனிதர்கள் எல்லாம் வேற்று கிரகங்களைச் சேர்ந்தவர்களோ என்னும் பயம் நம் பதட்டத்தை இன்னும் அதிகமாக்கும். மதுரை காமராசர் சாலையில் வண்டி ஓட்டிப் பழகினால் உலகில் எங்கும் வண்டி ஓட்டிவிடலாம் என்று சொல்வார்கள். அவர்களை எல்லாம் கொண்டு போய் சென்னையில் விட்டால் தெரியும். நூறு மீட்டருக்கொரு முறை சிக்னல். ஒவ்வொரு சிக்னலிலும் பத்து நிமிடம். விளங்கிடும். அதனாலேயே முடிந்த அளவுக்கு சென்னையில் சுத்த ரயிலை மட்டுமே பயன்படுத்துவேன். மின்சார ரயில் என்கிற ஒரு விஷயம் மட்டும் இல்லையானால் சென்னை நகரமே நாறிப் போய் விடும் என்பது எனது தீவிர நம்பிக்கை.

சரி வெங்காயம்.. சென்னையைப் பிடிக்கவில்லை என்பதற்கு இத்தனை காரணங்கள் சொன்ன உனக்கு பிடிக்கும் எனச் சொல்வதற்கு ஒரு விஷயம் கூட இல்லையா என்றால்.. இருக்கிறது. கடல். அகண்ட கடலின் முன் நிற்கும் கணம் நாமெல்லாம் ஒன்றுமேயில்லை எனும் எண்ணம் உள்ளே அலையடித்துக் கொண்டேயிருக்கும். காலை நேரக் காற்றில் ஆள் நெருக்கடி இல்லாமல் மண்ணைக் கால்களால் அலைந்தபடி நண்பர்களோடு பேசிக்கொண்டே மெதுவாக நடந்து போவது ஒரு சுகானுபவம். என் வாழ்வின் அருமையான சில கணங்களை பேரன்பு கொண்ட என் நட்புகளோடு அங்கே கொண்டாடி இருக்கிறேன்.

கடைசியாக.. பிடிக்கும் பிடிக்காது என்பதை மீறி சென்னை என் வாழ்வின் ஒரு அங்கமாகிப் போன நகரம். இப்போதும் என் நண்பர்களை சந்திக்கும் பொருட்டு அடிக்கடி சென்னைக்கு வந்து போய்க் கொண்டுதானிருக்கிறேன். அதில் என் நண்பனொருவன் அடிக்கடி சொல்லுவான் “ஓவரா இந்த ஊரைத் திட்டுறே இல்ல.. மகனே ஒருநாள் இல்ல ஒருநாள் நீ இங்கயே வந்து தங்குற மாதிரி வரும் பாரு..” அவனது சாபம் பலிக்குமா எனத் தெரியவில்லை. அப்படி பலிக்குமாயின் மிகவும் சந்தோஷப்படக்கூடிய முதல் ஆளாகவும் நான்தான் இருப்பேன்.

8 comments:

அ.மு.செய்யது$ said...

சிந்திக்க வைத்த பதிவு.

சென்னையிலே பிற‌ந்து வ‌ள‌ர்ந்த‌வ‌ன் என்றாலும் ஒரு சில‌ விஷ‌ய‌ங்க‌ளில்
எனக்கே சென்னை ஒரு மோசமான நகரமாக யோசிக்க வைத்திருக்கிறது.

ம‌ரியாதை துளியும் கிடையாது.குறிப்பாக‌ ஆட்டோ டிரைவ‌ர்க‌ள்,ப‌ஸ் க‌ண்ட‌க்ட‌ர்க‌ள்,டிக்கெட்டையும் மீத‌ சில்ல‌றையையும் தூக்கி எறியும் ர‌யில்வே ஊழிய‌ர்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.சென்னையைப் போன்ற மற்ற பெருநகரங்களில் இதை உணர்ந்த ஞாபகம் இல்லை.

வாய்ப்பு வசதிகளைப் பெருக்கி கொள்ள மற்ற ஊர்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் சென்னைக்கு இடம்பெயரும் யாராக இருந்தாலும், இந்த பழக்க வழக்கங்கள் தொற்றிக் கொள்ளும் அபாயம் எப்போதுமிருக்கிறது.

Anonymous said...

அப்பப்போ வந்து போன உங்களுக்கே இப்படினா .. சுமார் 12 ஆண்டு சென்னையில் வாழ்ந்த நானெல்லாம் பாவம் பண்ணாலும் நேரே சொர்க்கம் தான். நரகத்தைத் தான் சென்னையிலேயே பார்த்துட்டேமே !!!

இருந்தாலும் சென்னை மீது அலாதி பிரியம் தான் மெரினா, ஸ்பென்ஸர், கன்னிமாரா லைப்ரரி, விருகம்பாக்கம், கேகே நகர் பார்க், அபிராமி மால், சென்னைப் பல்கலைக் கழகம், எம்சிசி காலேஜ், அடையார் எல்லாமும் கலந்த அனுபவமும் இன்னமும் இருக்கு ... சென்னைக்கு கொஞ்சம் வெளியே போனா அட ! இது சென்னையா என்னும் அளவுக்கு வயல்களும், கடற்கரைகளும், குளங்களும், ஏரிகளும் இருக்கு .. என்னக் கொடுமை எல்லாம் சீக்கிரமே காணமல் போய்விடும் போலிருக்கு ..

Balakumar Vijayaraman said...

ஒரு வேளை, சென்னை புகுந்த வீடா ஆகிருமோ! :)

Anonymous said...

Key-hole view.

There is a humungous floating population in Chennai. 'Floating population' refers to people who use the city as their stop over. There s also a chunk of population, who live in the city for studies, or employment etcf or a few years and return, and they that use the city only to extract maximum material entertainment in quickies in their leisure hours. These sections treat the city as a man his condom: use and throw. No wonder, they develop scant regard for the city or have any attachment. No further wonder, if the city retaliates by offering them with prostitutes and price rise. they deserve.

U seem to have run into some of them or ogled at them. They could’nt give u the real picture of the city. I’m afraid, u urself hav become 1 of them. Perhaps, as ur friend said, and u endorsed, a longer duration of residence in the city, say for a decade, will make u know it better.

U haven’t explored the cultural and intellectual scene of the city - no other city in TN offers that. It is vibrant. Not only during the winter Margazhi month but round the year. Ur own city s disappointing. Compared to other metros in India, Chennai fare far better as a cultural and intellectual city. Good education is the hall mark of this city. Recently added feather is Medical tourism.

I lived only for a short period of 3 years in the city, that too, in my callow youth; but thank God, apart from attraction to the opposite sex in which I squandered some time, my exploration into the cultural and intellectual life of the city was very rewarding and ever-lasting. My interest in ancient Tamil literature and the awsome religion called Srivaishanvaism was born only in this city.

Price rise? People from outside come to this city to make their purchases because it caters to all sections of society in price ranges. It is not a flat city as u seem to imagine. It is diverse and life is lived on many planes. And no single definition fits the city. Proletariat and bourgeoisie, lowest and upper castes – all can feel free and happy in their own way.

There r, however, some defects as pointed out by a few here. With a little circumspection and experiences u can overcome them. As Johnson said, u cant go to police with a complaint of burglary of your house if u had slept keeping the doors and windows open during the previous night. Who is to blame? U or the robbers? asks Johnson.

Finally, I’m just like u – from the southernmost tip of Indian peninsula, who came to the city with all horror-stories!

Unknown said...

என்னத்த சொல்ல, எல்லா பேரு நகரங்களும் இப்பிடித்தான், எல்லோருக்கும் அவங்க பிரச்சனைய பார்க்கவே நேரம் இல்ல,

நேசமித்ரன் said...

Blogger வி.பாலகுமார் said...

ஒரு வேளை, சென்னை புகுந்த வீடா ஆகிருமோ! :)//

சேம் பிஞ்ச் :)))

Mahi_Granny said...

சுத்தி வளைக்காம நேரா சொல்லுங்கள் பொண்ணு அங்கே தன் பார்த்திருக்காங்க (பார்த்திருக்கிறேன் ) என்பதை .

cheena (சீனா) said...

அன்பின் கா.பா - பாலா, நேசன் மற்றும் மஹி கிரானி கூறீயதை வரிக்கு வரி வழி மொழிகிறேன். நான் சென்னையில் 34 ஆண்டுகள் வசித்திருக்கிறேன். நட்புடன் சீனா