June 1, 2011

நெடுங்குருதி - எஸ்ரா

இந்நாவல் நீலகண்டப்பறவை போல, அக்னிநதி போல காலமாற்றத்தின் மீது உருவாகி இருக்கிறது. சிறந்த இந்திய நாவல்களின் தரத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. முதன்முறையாக இந்நாவலில்தான் தமிழ் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

பிரபஞ்சன்

ஒரு மனிதனின் அடிப்படை இயல்புகளைத் தீர்மானிக்கக் கூடிய விஷயங்கள் எவையெவை என்று சொல்லலாம்... அவர்களின் பிறப்பு? குடும்ப சூழ்நிலைகள்? நண்பர்கள் அல்லது உறவினர்கள்? இவை போக, இது எல்லாவற்றையும் மீறிய ஒன்றும் இருக்கிறது. அது அவர்களின் ஊர்.. அவர்கள் வாழும் சூழ்நிலை.

இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னுடைய எட்டாவது வயதில் குடும்பத்தோடு மதுரை சுப்ரமணியபுரம் பகுதிக்கு குடிபுகுந்தோம். அதுவரை வீடு விட்டால் பள்ளி, பள்ளி விட்டால் வீடு.. இதுதான் நான். ஆனால் அங்கே குடிபோன பின்பு என்னுடைய இயல்புகளே மாறிப்போனது. புதிய நட்புகள், தெருவோரச் சண்டைகள், எப்போதும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கும் வசவுகள், தெரு முக்கில் உருட்டும் லங்கர்கட்டைகள், சூது, வகுப்புகளுக்கு மட்டம் போட்டு விட்டு சினிமா.. அந்தப் பகுதியின் இயல்புகளில் நானும் தொலைந்து போனவனாக இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் இன்றிருக்கும் நானாக மாறிய தருணங்கள் அவை.

சொந்த ஊரை விட்டு வெகுதூரம் விலகி இருக்கும் ஒவ்வொரு மனிதனின் மனிதிலும் எங்கோ ஒரு ஓரத்தில் தங்களின் ஊரைப் பற்றிய கனவுகளும் ஆசைகளும் ஒளிந்து கிடக்கின்றன. ஊர் என்பது வெறும் வசிப்பிடமாக மட்டும் இருப்பதில்லை. அது ஒவ்வொருவரின் உணர்விலும் கலந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. எத்தனை விதமான ஊர்களைப் பற்றி நம்முடைய இதிகாசங்களில், கதைகளில் படிக்கிறோம்? வெகு விசித்திரமான ஊர்களைப் பற்றிய கதைகளை என்னுடைய பால்யத்தில் கேட்டிருக்கிறேன். முழுக்க முழுக்க புதிர்களால் நிரம்பிய தெருக்களால் ஆன ஊர் ஒன்று இருந்ததாம். ஒருமுறை அதன் உள்ளே சென்று விட்டால் மீண்டு வெளியே வரவே இயலாதாம். இதைப் போலவே, பெண்கள் மட்டுமே வாழும் ஊர் ஒன்றும் இருந்ததாம். அதன் உள்ளே போகும் ஆண்கள் யாவரும் பெண்களாக மாறி விடுவார்களாம். மீண்டும் வெளியேறிச் செல்லும்போதுதான் ஆண்களாக மாறுவார்களாம். விந்தைதான் இல்லையா?

இவை எல்லாமே மனித மனத்தின் கற்பனைதான் என்றாலும், இதன் அடிப்படை ஒன்றுதான். ஒவ்வொரு ஊரும் தனக்கென ஒரு தனித்துவமான இயல்பைக் கொண்டதாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு மூர்க்கமான ஊரைப் பற்றியும், அங்கு வாழ்ந்த மனிதர்களின் கதைகளையும் சொல்லும் நாவல்தான் எஸ்.ராமகிருஷ்ணனின் "நெடுங்குருதி".

வேம்பலை என்றொரு கிராமம். அங்கு வசிக்கும் வேம்பர்கள் என்ற மக்கள். இவர்களின் வாழ்க்கையைத்தான் இந்த நாவல் பதிவு செய்கிறது. குற்றப்பரம்பரை என்று சொல்லி ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தைப் பற்றிய பதிவு என்றும் சொல்லலாம். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளைத் தொட்டுச் செல்லும், ஒரு நூற்றாண்டு காலம் நீளும் கதையை வெகு இயல்பாக சொல்லிச் செல்கிறார் எஸ்ரா. அவருக்குப் பிரியமான வெயில், வேம்பு மற்றும் எறும்புகள்.. இந்த நாவல் எங்கும் இந்த மூன்றும்தான் நிறைந்து இருக்கின்றன.

கோடைக்காலம், காற்றடிக்காலம், மழைக்காலம் மற்றும் பனிக்காலம் என்று நான்காக பகுக்கப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். வேம்பர்களின் வாழ்வில் வசந்தமே கிடையாது என்று இதையும் ஒரு படிமமாகக் கொள்ளலாம். நான்கு காலங்கள் இருந்தும் கோடைக்காலமே நாவலின் பிரதானப் பகுதியாக இருக்கிறது. குறிப்பாக வெயில் மற்றும் அதன் வெம்மையை நெடுங்குருதியை வாசிக்கும் யாவராலும் உணர முடியும். எல்லாப் பகுதியிலுமே வெயிலும் கிட்டத்தட்ட ஒரு பாத்திரமாகவே நாவல் முழுவதும் வலம்வருகிறது. கதையின் மாந்தர்கள் எங்கு சென்றாலும் அவர்களோடு தானும் ஒருவராக வெயில் பயணிக்கிறது.

"வெயில் கூரையின் வழியாகத் தன் விரலை அசைத்தபடியே இருந்தது.."

"பூனைக்குட்டி வாசல் வரை வந்து நின்றது. வெயிலின் நீண்ட கிளைகள் விரிந்து வெளிச்சத்தில் கண் கூசுவதால் திரும்பவும் இருளுக்குள் போய் விட்டது"

"உக்கிரமான வெயில் கூட அவளது குரலைக் கேட்டதும் பயந்து ஒடுங்கிக்கொண்டது போல மப்பு போடத் துவங்கிய்து.."

"இளங்காலையின் வெயில் ஆற்று மணலில் எதையோ எழுதிக் கொண்டிருந்தது.."

"சாலையில் வெயில் வீழ்ந்து கிடந்தது.."

வளைந்து நெளிந்தும் ஊர்ந்து கொண்டும்... சாலைகளோடு பின்னிப் பிணைந்தும் கதையின் பாதையெங்கும் பயணித்தபடியே இருக்கிறது வெயில். வெயிலின் கொடுமை மற்றும் வெக்கையின் காரணமாகவே வேம்பலை மூர்க்கம் நிறைந்த கிராமமாக இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

நெடுங்குருதியில் மையப் பாத்திரங்கள் என்று யாருமில்லை. நாகு என்ற சிறுவனின் பார்வையில் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாகுவின் தாய், தந்தை, அவனுடைய அக்கா வேணி, மற்றொரு சகோதரியான நீலா, சிறு குழந்தையாய் இருக்கும்போதே இறந்து போன அண்ணன் செல்வம் என ஒவ்வொருவராக அறிமுகம் ஆகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. இதுபோக அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்ற மனிதர்களில் ஒரு சிலரைப் பற்றிய கதைகளும் வருகின்றன.

உருப்புடியாய் எந்தத் தொழிலும் செய்யாத அய்யா.. அவரைக் கரித்துக் கொண்டே இருக்கும் அம்மா.. இவர்களைப் பார்த்து வளர்கிறான் நாகு. சிறு வயதில் அவனுடைய உற்ற தோழியாய் இருப்பவள் ஆதிலட்சுமி. பாம்பு கடித்து அக்கா நீலா இறந்து போக, பரதேசியாய் வீட்டை விட்டு ஓடிப்போகிறார் அய்யா. தாயுடன் தன் தாத்தா ஊருக்குக் கிளம்புகிறான் நாகு. தரகு வேலை பார்ப்பவனாகிறான். சாராயம், பெண்கள் என்று வாழ்பவனுக்கு மல்லிகா என்னும் பெண்ணோடு திருமணம் ஆகிறது. ஐயாவைக் கண்டுபிடித்து மீண்டும் வேம்பலைக்கே குடி வருகிறான். இந்த நேரத்தில்தான் குற்றப்பரம்பரைச் சட்டம் வேம்பர்கள் மீது ஏவப்படுகிறது. அதற்கு அடங்க மறுத்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகிறான் நாகு. ரத்னாவதி என்னும் பரத்தைக்கும் நாகுவுக்கும் பிறந்த திருமால் எல்லாம் தொலைத்தவனாக ஊரைப் பிரிந்து போகிறான். மல்லிகாவுக்கும் நாகுவுக்கும் பிறந்த பிள்ளை வசந்தா. ஒழுக்கம் கெட்ட தன் கணவனோடு மீண்டும் அவள் வேம்பலைக்குக் குடி வந்து, தன் கணவனின் பிள்ளைக்கு நாகு என்று பெயரிடுவதோடு முடிகிறது கதை. கசப்பின் மிகுதியால் நிரம்பி வழியும் மனிதர்களின் வாழ்க்கையைத் துல்லியமாகப் படம்பிடிக்கிறது இந்தப் புத்தகம்.

தீராத வேட்கையோடு பாய்ந்தோடும் காட்டாறு போகும் பாதையெல்லாம் தன்னுடைய கிளைகளை உருவாக்கிக் கொண்டே போவது போல, நெடுங்குருதியின் பாதையில் பல்வேறு கிளைக்கதைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

வேம்பலை ஒரு கற்பனை கிராமம். சரி.. ஆனால் அங்கு இருப்பதாக சித்தரிக்கப்படும் மனிதர்கள் உண்மையானவர்கள். இந்த மண்ணில் நிஜமாகவே வாழ்ந்தவர்கள். அவர்கள் அந்த ஊருக்கு வந்ததெப்படி? கொற்கைப் பாண்டியனின் வீரர்களிடம் இருந்து தப்பி வந்தவர்கள் என்று ஆரம்பிக்கிறது அவர்களின் வரலாறு.

வெல்சி துரை என்னும் ஆங்கில அதிகாரியால் சிறைப்பட்டு சாகும் வேம்பர்களால்தான் முதன் முறையாக வேம்பலையில் பயம் விதைக்கப்படுகிறது. அதன் பிறகு பதவி உயர்வு பெற்று வெளியூர் செல்லும் வெல்சியும் மனச்சிதைவுக்கு ஆளாகி செத்துப்போகிறான். ஆனால் அவன் விட்டுச் சென்ற சோகமும் துயரமும் எப்போதும் தீராததாக வேம்பலையை பீடித்துக் கொள்கிறது.

வேம்பலையின் சுவாரசியமான மனிதர்களில் ஒருவன் சிங்கி. வாலிபத்தில் அனைவரும் பயப்படும் திருடனாக இருந்தவன். இருந்தும் சிறு பிள்ளைகளிடம் திருடுவதில்லை எனத் தனக்கென சில கொள்கைகளைக் கொண்டவனாக இருக்கிறான். ஒரு முறை காலில் காயம்பட்டு சாகக் கிடப்பவனைப் பண்டார மகள் ஒருத்தி காப்பாற்ற, சொந்த ஊரையும் திருட்டையும் மறந்து அவளோடு தங்கி விடுகிறான். ஆனால் வயதாக வயதாக பண்டார மகள் மூர்க்கம் கொண்டவளாக மாறிப் போகிறாள். தொட்டதெற்கெல்லாம் சிங்கியை கரித்துக் கொட்ட ஆரம்பிக்கிறாள். எனவே அவளைப் பிரிந்து சிங்கி மீண்டும் வேம்பலைக்கே வந்து வாழத் துவங்குகிறான்.

நிகழ்காலத்தில் இரண்டு கண்ணிலும் பார்வை இழந்து போனவனாக தன மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான் சிங்கி. அவ்வப்போது அவனுக்கு பழக்கமான குருவனின் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. சிங்கியும் குருவனும் ஆடு புலி ஆட்டம் ஆடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். குருவன் பத்து வருடங்களுக்கு முன்பே செத்துப் போனவன். எனவே இங்கே குருவனின் குரல் மரணத்தின் அடையாளமாகவே சொல்லப்படுகிறது என நினைக்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு முறை ஆட்டம் ஆரம்பித்து முடியுமுன்னே குருவன் காணாமல் போகிறான். அத்தோடு சிங்கியும் குருவனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் முனைப்பாகவே இருப்பது மனிதனுக்கு சாவின் மீதாக இருக்கும் பயத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

சில மாதங்களுக்கு முன்பு நண்பர் மேவி என்னை யூடியூபில் இருக்கும் இங்கமார் பெர்க்மானின் செவன்த் சீல் என்னும் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். மனிதனும் மரணமும் ஆடும் செஸ் ஆட்டம் என்பது போன்ற கதையது. சிங்கி பற்றிய நெடுங்குருதியின் மிக அற்புதமான இந்தப் பகுதியைப் படிக்கும்போது எனக்கு அந்தப்படம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

கடைசியாக ரத்னாவதி. பரத்தை என்றானபோதும் நாகுவை உண்மையாக நேசிப்பவள். பார்க்கும் மனிதர்களில் எல்லாம் நாகுவைத்தான் அவள் தேடித்திரிகிறாள். அவனுடைய பிள்ளையை தானாக விரும்பி பெற்றுக் கொள்ளுகிறாள். நாகு இறந்துபோன பின்பு மதுரைக்கு வந்து ஒரு பால்கடையை வைத்து வாழ ஆரம்பிக்கிறாள். தன் பிள்ளை திருமாலுக்காக வாழ முடிவு செய்தாலும், காமத்தின் நீண்ட நிழல் அவளை விடாமல் துரத்துகிறது. பூபாலனை மணம் முடிக்கிறாள். அவள் வாழ்வில் மகிழ்ச்சி திரும்பியதாக நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் பூபாலன் அநியாயமாக செத்துப் போகிறான். காலம் அவளை மீண்டும் சேற்றுக்குள் வீசி எறிகிறது.

மகனைப் பிரிந்து திரும்பி வர இயலாத ஒரு பாதையில் ரத்னா பயணிக்கத் துவங்குகிறாள். இறுதியில், கடைசிவரைத் தன்னுடைய மகனின் முகத்தைக் கூடப் பார்க்காமல், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். நிறைவேறாத ஆசைகளில் தங்களைத் தொலைத்த எல்லா மனிதர்களின் பிரதிநிதியாகவும் ரத்னாவதி இருக்கிறாள். கடை வைத்து கவுரவமாக வாழும் ரத்னாவை கோபுரத்தின் மீதிருந்து பார்க்கும் கந்தர்வனின் சிலை, அவள் மீண்டும் வேசித் தொழில் செய்யத் தொடங்கியவுடன் தன் முகத்தைத் திருப்பிக் கொள்வது.. அழகான படிமம்.

நாகுவின் அப்பாவோடு போய் என்ன ஆனான் என்றே தெரியாத பக்கிர், பிழைப்புத் தேடி வந்த இடத்தில் முறைதவறி வாழத் தொடங்கும் பக்கிரின் மனைவி, கால்கள் நடமாட இயலாத நிலையில் இருந்தாலும் ஊரில் நடக்கும் எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் ஆதிலட்சுமி, வேணியைக் காதலித்துத் தோற்கும் திருமா, நாகுவைத் தன் மகனைப் போல் வளர்க்கும் தரகர் தாத்தா, புதைத்து வைத்த புதையலை பூதம் காப்பது போல ஊர்ந்து திரியும் லட்சுமணன், ரத்னாவதியின் தோழி ஜெயராணி மற்றும் அவளின் அத்தை, சிறு வயதில் இருந்தே தாயின் அன்பு கிட்டாமல் வளரும் திருமால், தத்துவம் பேசித் திரியும் திருமாலின் நண்பன் பவுல், நாம் ரெண்டு பெரும் ஒரே ஆளை கட்டிக்கிடலாம் என்று கேட்கும் வசந்தாவின் தோழி ஜெயக்கொடி.. எத்தனை எத்தனை விதமான மனிதர்கள்? நாட்டார் தெய்வம் ஒன்றின் வருகையால் பணக்காரனாகும் காயாம்பூ, அதே தெய்வத்தால் ஒன்றுமில்லாதவனாக ஆகிப் போவதை என்னவென்று சொல்வது? வேம்பலையின் சாலைகளில் வழிந்தோடும் கசப்பு, அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கையிலும் நிரம்பி இருக்கிறது.

இந்த இசம், அந்த இசம் என்று நெடுங்குருதியை வகைப்படுத்த எனக்குத் தெரியாது. யதார்த்தம், கனவுலகம், மாய யதார்த்தம் என மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது கதை. அவ்வளவே. நாம் காணும் நிஜ வாழ்வின் நிதர்சனங்களை பதிவு செய்யும் அதே வேளையில், விவரிக்க இயலாத கனவுகளின் பக்கங்களையும் மீள்மாய உலகின் (நன்றி:ஜெயமோகன்) நம்ப முடியா சம்பவங்களையும் அழகியலோடு நம் பார்வைக்கு வைக்கிறார் எஸ்ரா.

பண்டார மகள் இறந்து போய் கிடக்கிறாள். அவள் உள்ளங்கையில் இருக்கும் தேள் சிங்கியின் உடம்பில் ஏறிக் கொள்ளுகிறது. அவனால் அந்தத் தேளின் உபத்திரவத்தைத் தாங்கவே முடிவதில்லை. அதேபோலத்தான் சிங்கியும் செத்துப் போன குருவனும் விளையாடும் காட்சிகளும். தானிய குலுக்கைக்குள் போட்டும் சாகாத மனுஷியாகவே இருக்கும் முதிர்ந்த சென்னம்மாவின் கதையும் ஒரு புதிர்த்தன்மையுடன் இருக்கிறது.

பாலைவனம் போல வெடித்து கிடக்கும் இடங்களின் நடுவே எப்போதும் குளிர்ந்த நீர் சுரந்து கொண்டே இருக்கும் துறவியின் சமாதி, ஊரில் இருக்கும் பெண்கள் பிடிக்கும் தண்ணீர் குடங்கள் எல்லாம் காலியாகிப் போவது, ஊருக்குள் பெயர் தெரியாத புழுக்கள் உண்டாவது, எங்கிருந்தோ வானில் இருந்து வரும் கொக்குக் கூட்டத்தால் அந்தப் புழுக்கள் அழிவது, மீன்களோடும் தவளையோடும் பேசித் திரியும் சின்னஞ்சிறு திருமால் என இந்திய நாட்டின் தொன்மையான கதைகளில் இருக்கும் மாயத்தன்மையை நாவலின் பல இடங்களில் நம்மால் காண இயலுகிறது.

இத்தனைக்குப் பிறகு, இந்த நாவலின் குறைகள் என்று எதைச் சொல்லலாம்?

முதலாவதாக நாவலின் கதை நடைபெறும் காலம் மற்றும் இடம். கதையின் பின்பாதியில் இருக்கும் விவரணைகளைப் பார்க்கும்போது இது மதுரையைச் சுற்றி நடக்கும் கதை என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால் எப்போது நடைபெறுகிறது என்பதைத் தெளிவாக வரையறுத்துச் சொல்ல இயலவில்லை. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நடக்கும் கதை எனக் கொண்டால் ஒரு சில இடங்களில் இருக்கும் விவரங்கள் சற்றே வசதிகள் அதிகம் உள்ளதைப் போல சொல்வதால் சிறிது குழப்பம் ஏற்படுகிறது.

இரண்டாவதாக, கதையின் அடிநாதமாக இருக்கும் குற்றப்பரம்பரைச் சட்டம் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கலாம். என்ன மாதிரியான நெருக்கடிகளுக்கு மக்கள் ஆளானார்கள்.. அவர்களுடைய எதிர்ப்பு எத்தகையதாக இருந்தது என்ற எந்தத் தகவல்களும் முழுமையாக சொல்லப்படவே இல்லை. அப்படி இருப்பின் இது சரித்திரத்தைப் பதிவு செய்யும் மிக முக்கியமான நாவலாக இருந்திருக்கும்.

மூன்றாவதாக, புற சூழல் பற்றிய வர்ணனைகள் இந்த நாவலில் மிகவும் கம்மியாகவே காணக் கிடைக்கிறது. மனிதர்களையும், அவர்களின் குணங்களையும் முக்கியமாகப் பேசுவதே எஸ்ராவின் எல்லாப் புத்தகங்களிலும் காணக் கிடைக்கும் யுத்தி. அதுவே இங்கும் நடந்து இருக்கிறது.

வேம்பிலை கள்வர்கள் வாழும் ஒரு மூர்க்கமான ஊர். சரி.. ஆனால் அங்கு வேம்பர்கள் மட்டும் இல்லையே? அது போக சாயக்காரர்கள்... மற்ற ஜனங்கள் எல்லாம் வந்ததெப்படி? அந்த ஊரின் அமைப்பு எப்படி இருக்கும்? நாவலில் இவற்றுக்கு பதில் இல்லை. ஒவ்வொரு ஊராகப் போய் தூங்கி, அந்த ஊரின் இயல்புகளைப் பேசும் மனிதனை உபபாண்டவத்திலும் சந்தித்ததாக ஞாபகம்.

கடையாக நாவலின் நீளம். என்னைப் பொறுத்தவரை நாகுவின் மரணத்தோடு நாவல் முற்றுப்பெறுகிறது. எனினும் காலம் காலமாக சாபம் நீடிக்கிறது என்பதைச் சொல்லும் விதமாக, நாகுவின் வாரிசுகளான திருமால் மற்றும் வசந்தாவின் பாடுகளைச் சொல்லும்போது சற்றே அயர்ச்சி ஏற்படுதைபோல எனக்கொரு உணர்வு.

"எந்தவொரு கதையின் முடிவையும் வாசகனே தீர்மானிக்கிறான்... கூடுதலாக சில பக்கங்களை எழுதிப் பார்க்கலாம்.. இல்லையெனில் முன்னதாகவே முடிக்கலாம்.." சமீபத்தில் எஸ்ரா எழுதிய ஒரு பத்தியில் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. சிற்சில குறைகள் இருப்பினும், நாவலின் தெளிவான நடையும் எஸ்ராவின் கதை சொல்லும் முறையும் அவற்றை மறக்கடிக்கின்றன.

நாவலை வாசித்து முடித்தபின்னும் வேம்பலையும், அதன் மனிதர்களும் இன்னும் நெஞ்சை விட்டு நீங்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். ஏன் இத்தனை கஷ்டங்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது என்று மனம் அரற்றுகிறது.. அந்த உணர்வை உருவாக்குவதுதான் எஸ்ராவின் வெற்றி. கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

நெடுங்குருதி
உயிர்மை வெளியீடு
இரண்டாம் பதிப்பு - செப்டம்பர் 2005
விலை - 275/-

(இது ஒரு மீள்பதிவு)

3 comments:

மேவி... said...

மீள் பதிவுக்கு ஏன் நிறைய பேர் திரும்ப VOTE போட்டு இருக்காங்க .....
நீங்க மீள்பதிவு போட்டிருக்கீங்க .... நாங்களும் அதை மீள் வாசிப்பு செய்ய வேண்டுமா ?????

அ.மு.செய்யது said...

வாசித்து முடித்த மறுகணமே எழுதிய பதிவு என்பதாலோ என்னவோ, எஸ்.ரா வின் அழுத்தமான பதிப்பு இந்த பதிவிலும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

பாராட்டுக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

//மேவி said...
மீள் பதிவுக்கு ஏன் நிறைய பேர் திரும்ப VOTE போட்டு இருக்காங்க .....
நீங்க மீள்பதிவு போட்டிருக்கீங்க .... நாங்களும் அதை மீள் வாசிப்பு செய்ய வேண்டுமா ?????//

ஒரு நாலு நல்ல மனுஷன் ஓட்டு போட்டாத் தப்பாய்யா? எஸ்ரா பத்தி எத்தன தடவை வேணும்னாலும் மீள்வாசிப்பு செய்யலாம் மேவி..

//அ.மு.செய்யது said...

வாசித்து முடித்த மறுகணமே எழுதிய பதிவு என்பதாலோ என்னவோ, எஸ்.ரா வின் அழுத்தமான பதிப்பு இந்த பதிவிலும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

பாராட்டுக்கள்.//

செய்யது.. இது நீங்க பதிவுலகுல இருந்து காணாமப் போன காலத்துல எழுதினது.. எப்பவுமே என்னோட எழுத்துல அவர் பாதிப்பு இருக்கிறது சகஜம், இதுல அவரைப் பத்தி எழுதும்போது கேக்கவா வேணும்?