August 26, 2011

வலசை - நேசமும் நன்றிகளும்

கோவில்பட்டியிலிருந்து மதுரை வரும் பேருந்தொன்றில், மே மாதத்தின் ஒரு ஞாயிறு பின்மதியப்பொழுதில், உரையாடியபடி வந்து கொண்டிருந்தோம் நேசனும் நானும். திசையறியாப் பறவைகளென எங்கெங்கோ சுற்றி வந்த பேச்சு இறுதியாக இன்றைய தமிழ் இலக்கியச் சூழலின் மீதாக வந்து நின்றது.

தங்களுக்கென ஒரு குழுவை வைத்துக் கொண்டு சில இதழ்கள் செய்யும் அரசியலும், திறமையிருப்பினும் அர்த்தமில்லாக் காரணங்களுக்காக ஒதுக்கப்படும் இளம் படைப்பாளிகளும் என சூழலின் பயங்கரம் குறித்தான எங்களிருவரின் பார்வையும் ஒன்றாக இருந்தது எங்களுக்கே ஆச்சரியம். வெறுமனே பேசிக் கொண்டிராமல் ஏதேனும் செய்ய வேண்டும் தலைவரே என்பதே எங்களுடைய அன்றைய தீர்மானமாக இருந்தது. இதுவே வலசைக்கான முதல் விதையாகவும் மாறியது.

அந்தப் பிரயாணத்துக்குப் பின்பாக, மிகச்சரியாகப் பத்து நாட்களுக்குப் பிறகு, நேசனிடமிருந்து அழைப்பு வந்தது. நண்பா நாம் ஒரு சிற்றிதழை ஆரம்பிக்கிறோம். சரி, நல்ல விஷயம்.. களத்தில் இறங்க முடிவு செய்து விட்டோம்... எந்த விதத்தில் நாம் தனித்துத் தெரியப் போகிறோம்? இதுவே எங்கள் முன்பாக இருந்த முதல் கேள்வி.

இன்றைக்குத் தமிழில் மொழிபெயர்ப்பு சார்ந்து அதிக முயற்சிகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. அப்படியே வந்தாலும் அயல்நாட்டு எழுத்தாளர்களைப் பேசும்போதும் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பேசி வருகிறோம். இதை மாற்ற வேண்டும். எத்தகைய வித்தியாசமான முயற்சிகள் உலக இலக்கியத்தில் நடைபெற்று வருகின்றன என்பதை எல்லாம் பேசும் இதழாக இது வரவேண்டும் என முடிவானது.

சரியாக ஜூன்-15 அன்று இதழுக்கான படைப்புகள் சார்ந்த தெரிவு தொடங்கியது. நாவல் அறிமுகங்கள், கவிதைகள் மற்றும் சிறுகதைகள் என ஒவ்வொன்றாகத் தெரிவாகி நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரைக்கும் பெரிய அளவிலோ தொழில் முறையாகவோ மொழிபெயர்ப்பு அதிகம் செய்திடாத நம் நண்பர்களிடமே படைப்புகள் தரப்பட்டன. எங்களைப் பெரிதும் ஆச்சரியப்படுத்தும் வகையில் எத்தனை துரிதமாக முடியுமோ அத்தனை துரிதமாக மொழிபெயர்ப்புகள் எங்களை வந்தடைந்தன.

ஆரம்பத்தில் நகுலினி என்பதாக இருந்த இதழின் தலைப்பு பின்பு மிகப்பொருத்தமான ஒன்றாக வலசையாக மாறியது. உடல் மற்றும் உடல் மீதான அரசியல் என்பது முதல் இதழின் மையமாக உறுதியானது. ஓவியர் அபராஜிதனுடனான நேர்காணல், தொழில்முறையாக ஒரு மொழிபெயர்ப்பாளர் சந்திக்கும் பிரச்சினைகள், நாடகக் கலைஞர்களுக்கான .முருகபூபதியின் கடிதம் என எல்லாம் இணைந்து இதழைப் பூர்த்தி செய்தன.


இன்றைக்கு வலசையின் முதல் இதழ் வெளியாகி இருக்கும் சூழலில் இதற்காக உழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். படைப்புகளை மொழிபெயர்த்த நண்பர்கள் - ரிஷான் ஷெரிப், ஸ்ரீ, சபரிநாதன், விதூஷ், பாலகுமார், தருமி, ஜெ.சாந்தாராம், ஜ்யோவ்ராம் சுந்தர், கவிதா முரளிதரன், அசதா, சித்தார்த் வெங்கடேசன், கென், பத்மஜா நாராயணன், லதா ராமகிருஷ்ணன் - ஓவியங்கள் வரைந்த ஞானப்பிரகாசம், .முருகபூபதி, தாரணி பிரியா, தமிழ்ப்பறவை பரணி, ராஜன் ராதாமணாளன் - வடிவமைப்பில் உறுதுணையாக இருந்த தாரணி பிரியா - நேர்காணல்களில் உதவிய கிருஷ்ண பிரபு, விஷ்ணு.. அனைவருக்கும் வலசையின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ழ கபேயில் நடந்த பதிவர் கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் பெருமளவில் உதவிய நண்பர்கள் அப்துல்லா அண்ணன், மயில்ராவணன், விதூஷ் ஆகியோருக்கும் ""வுக்கு வந்து எங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட அத்தனை பதிவுலக நண்பர்களுக்கும் வலசை தன் நன்றியைப் பதிவு செய்கிறது.

இதழுக்கான வாழ்த்துகளும், இதழைப் பற்றிய கருத்துரைகளும் தொடர்ச்சியாக வரத் துவங்கி இருக்கின்றன. புத்தகம் பற்றிய கலந்துரையாடல் விரைவில் மதுரையில் நடைபெறும். இது பற்றிய விரிவான இடுகை இன்னும் சில தினங்களில்.

புத்தகம் கிடைக்கும் இடங்கள்

நியூ புக் லேண்ட்ஸ்
52 சி கீழ்த்தளம்
பனகல் பார்க் அருகில்
டி நகர்
சென்னை

டிஸ்கவரி புக் பேலஸ்
எண் 6, மகாவீர் காம்ப்ளக்ஸ்,
முதல் தளம் முனுசாமி சாலை
கே கே நகர் மேற்கு
சென்னை

திரு.வடகரை வேலன்
கோவை
அலைபேசி: 8012577337

பாரதி புக் ஹவுஸ்
பெரியார் பேருந்து நிலையம் காம்ப்ளக்ஸ்
(மேல்மாடியில்)

செம்மொழி புத்தகக் கடை
கே.எம். காம்ப்ளக்ஸ்
ராம்நகர், பைபாஸ்ரோடு,
மதுரை.

புத்தகம் பற்றிய விமர்சனங்களில் சரி தவறு என எல்லாவற்றையும் கணக்கில் வைத்துக்கொண்டு அடுத்த இதழை இன்னும் சிறப்பாகக் கொண்டு வரவேண்டும் என எண்ணுகிறோம். அதற்கான அன்பும் ஆதரவும் எப்போதும் நம் நண்பர்களிடம் உண்டு எனவும் நம்புகிறோம். மீண்டும் அனைவருக்கும் எங்கள் நேசமும் நன்றிகளும்.

பிரியமுடன்,
நேசமித்திரன்
கார்த்திகைப்பாண்டியன்

13 comments:

Raju said...

மனமார்ந்த‌ வாழ்த்துகள்!

குடந்தை அன்புமணி said...

இதழுக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்...

குடந்தை அன்புமணி said...

பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...
பதிவர்களின் படைப்புகளை மட்டுமே தாங்கி வரும் பதிவர் தென்றல் முதல் இதழில் இடம்பெறும் படைப்பாளிகள்...

Balakumar Vijayaraman said...

மனமார்ந்த வாழ்த்துகள் கார்த்தி.

செய்கின்ற முயற்சியில் நேர்மையும், அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும், பொறுமையும் இருக்கையில் நிச்சயம் உயரம் தொடுவீகள்.

ஸ்வர்ணரேக்கா said...

மொழிபெயர்ப்பு என்னும் களத்தை தேர்ந்தெடுத்தது மிக நன்று.. முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

CS. Mohan Kumar said...

ரொம்ப பெரிய விஷயம் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அடுத்த இதழ்களுக்கு என்னிடமிருந்து பங்களிப்பு வேண்டுமெனில் அவசியம் சொல்லுங்கள். எனக்கு தமிழை தவிர ஆங்கிலம் மட்டும் தான் தெரியும்

selventhiran said...

நல்ல விஷயம்!

Unknown said...

மனமார்ந்த வாழ்த்துகள்

மேவி... said...

ஒரு சிறுகதை எழுதிட செக்கோவ் சில விஷயங்களை சொல்லிருக்கார் .... சிறந்த சிறுகதைகளுக்கான மேற்கோள், உதாரணங்கள் ...என்று சிறுகதை பற்றிய ஆய்வு கட்டுரை ஓன்று அடுத்த வலசையில் வருமா ???

அன்பேசிவம் said...

அட்டகாசம் நண்பா!
இது என்ன சஸ்பென்ஸா வைக்கனும்ன்னு வச்சி வெளியிடுறிங்களா? இப்படி முயற்சி எடுத்திருக்கிங்கன்னு பகிர்ந்துக்கவேயில்லையே? போகட்டும்.

அருமையான முயற்சி,நேசனுக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் நல்லா புல்லா பண்ணுங்க என்னால எதுவும் உதவ முடிஞ்சா செய்றேன். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

உணவு உலகம் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ’எறும்பு’ ராஜகோபால் மூலம் தங்கள் தளம் மற்றும் புதிய முயற்சி குறித்து அறிந்து கொண்டேன்.

Anonymous said...

வாழ்த்துக்கள் நண்பா!

jeya said...

great job karthi!!