April 30, 2012

உதிரிப்பூக்கள் - 11

நான் வேலை பார்க்கும் கல்லூரிக்குப் பின்புறம் ஒரு பெரிய பொட்டல்காடு இருக்கிறது. எந்நேரம் பார்த்தாலும் அங்கே ஏதாவது ஒரு குரூப் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும். டவுசர் போட்ட சின்னப்பையன் முதல் கைலி கட்டிய பெரிய மனிதன் வரை எந்த பாகுபாடும் இல்லாமல் அந்தக் கூட்டத்தில் இருப்பார்கள். மதிய நேரத்து மொட்டை வெயிலோ மழையோ அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது. எந்நேரமும் கிரிக்கெட்தான். எந்தக் கவலையும் இன்றி நாமும் அவர்களைப் போல விளையாட முடியவில்லையே என்று பொறாமையாக இருக்கும்.

இந்தியாவில் இன்று ஜாதி மற்றும் கரப்பான்பூச்சிக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் ஒன்றுதான் எல்லா இடங்களிலும் பரவலாக விரவிக் கிடக்கிறது. வெளியூர் மற்றும் வெளிமாநிலப் பயணங்களின் போதும் தெருவில் எனக்கு அதிகம் பார்க்கக் கிடைக்கும் விளையாட்டு கிரிக்கெட் தான். குறிப்பாக பி எல்லின் வருகை கிரிக்கெட்டை விளையாட்டு என்பதிலிருந்து வேறொரு இடத்துக்கு நகர்த்தி இருக்கிறது. சச்சினைத் தங்கள் கடவுள் எனக் கொண்டாடிய மக்களை, அவரை வீழ்த்தி விட்டால் போதும் கண்டிப்பாக நாம் ஜெயித்து விடலாம், எனப் பிரார்த்திக்க வைக்கும் நிலை இன்றைக்கு வந்தாகி விட்டது.

ரு மட்டையைக் கொண்டு பந்தை அடிக்க வேண்டும் என்பதாக எனக்கு கிரிக்கெட் அறிமுகம் ஆனபோது ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். அடுப்பெரிக்க வைத்து இருக்கும் விறகும் பிளாஸ்டிக் பந்தும்தான் நான் முதன்முதலில் கிரிக்கெட் ஆடிய உபகரணங்கள். யார் அதிகம் பேட் செய்வது என்கிற தகராறில் விறகு பேட் வாளாய் மாறி சண்டை போட்டு கட்டை விரல் நகத்தைப் பெயர்த்துக் கொண்டதுதான் எனது முதல் விழுப்புண். ஆறாவது படிக்கும் காலத்தில் சுப்பரமணியபுரம் ஏரியாவுக்கு மாறிய பிறகுதான் நான் சீரியசாக கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது.

பாலகுருகுலம் ஸ்கூல் பக்கத்தில் இருந்து ரைஸ்மில் கிரவுண்ட் தான் எங்கள் பிளேகிரவுண்ட். எதிர் வீட்டு ராஜசேகர் அண்ணனின் டீமில் என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். என்னுடைய பவுலிங்கும் ஃபீல்டிங்கும் ரொம்பக் கேவலமாக இருக்கும் பேட்டிங் கொஞ்சம் கேவலமாக இருக்கும் என்பதால் ஏழாவது அல்லது எட்டாவதாக இறக்கி விடுவார்கள். பெரும்பாலும் கீப்பருக்குப் பின்னால் நின்று பந்து பொறுக்கி போடுவதுதான் என்னுடைய முக்கியமான வேலை.

அன்றைக்கு பதினைந்து ஓவர்கள் கொண்டதொரு பால் மேட்ச். எங்கள் அணிதான் பேட்டிங். முதல் நான்கு ஓவருக்குள்ளேயே ஆறு விக்கெட் போயிந்தி. ஏழாவதாக நான் இறங்குகிறேன். எதிர் முனையில் இருக்கும் குட்டை குமார் நன்றாக விளையாடக் கூடியவன் என்பதால் எப்படியாவது அவுட் ஆகாமல் மட்டும் இருடா என்று என்னிடம் வந்து சொல்லிப் போனான். அன்றைக்குப் பார்த்து எனக்கு என்ன ஆனதோ தெரியவில்லை சன்னதம் வந்தாற்போல ஆடி விட்டேன்.

போடுகிற பந்தை எல்லாம் காலிலேயே குத்திக் கொண்டிருந்தது வசதியாகப் போக சிக்சும் ஃபோருமாகப் பறந்தது. எங்கள் ஆட்டம் முடிந்த போது நான் எண்பது ரன்னும் குமார் அறுபதும் அடித்து இருந்தோம். அபார வெற்றி. மக்கள் என்னைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அன்றிலிருந்து நானும் குட்டை குமாரும் அணியின் முக்கியமான இணையாக மாறி விட்டோம். எல்லாம் நல்ல படியாகப் போய்க் கொண்டிருந்தது, நான் குட்டை குமாரின் தங்கைக்கு லவ் லெட்டர் கொடுக்கும் வரை.

யில்வே காலனிக்கு வந்த பிறகு வேறொரு டீம். ஆனால் இங்கு நான்தான் கேப்டன். ரப்பர் பந்திலிருந்து பீஸ்பாலுக்கு நாங்கள் புரமோஷன் வாங்கியது இந்தக் காலத்தில்தான். காலனியின் வீதிகளில் விளையாட தனித்திறமை வேண்டும். கடுமையான விதிகளுக்கு உட்பட்டு களம் இறங்குவோம். வாதாமரம் தான் ஸ்டம்ப். ஓட்டின் மீது அடித்தால் அவுட். வேலி கட்டிய வீடுகளுக்குள் பந்து நேராய்ப் போய் விழுந்தாலும் அவுட். அதுவும் பந்து போய் விழும் வீடு துரைசானிகளின் வீடாய் இருந்தால் பந்தைத் திருப்பி வாங்குவதற்குள் தாவு தீர்ந்து விடும். நிறைய பேர் பந்தை அறுத்துத்தான் திருப்பித் தருவார்கள். திட்டிக் கொண்டே திரும்பி வருவோம்.

கல்லூரியில் சேர்ந்தபின்பாக கிரிக்கெட் விளையாடுவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போனது. இன்றைக்கு கல்லூரி ஆண்டு விழாக்களில் எப்போதாவது மாணவர் ஆசிரியர் போட்டி வைத்தால் மட்டும் கலந்து கொள்வது என்கிற நிலைக்கு விளையாட்டு என்பது குறைந்து போய் விட்டது. இருந்தாலும் பால்யத்தின் பல இனிமையான நினைவுகளுக்கு கிரிக்கெட் விளையாட்டும் ஒரு காரணம் என்பதை என்னால் மறுக்க முடியாது. அதே நேரத்தில் சின்ன வயது நினைவுகள் மற்றும் கொண்டாட்டங்கள் பற்றிப் பேசும்போது கிரிக்கெட் தவிர்த்து சொல்வதற்கும் எங்களுக்கு நிறைய விளையாட்டுகள் இருந்தன.

ள்ளிக்கூடத்தில் பி டி பீரியட் என்று தனியாக ஒரு ஹவர் இருக்கும். அந்த நேரத்தில் விளையாடுவதற்கு என்று எங்கள் பள்ளிக்கென ஒரு ஸ்பெஷல் விளையாட்டு இருந்தது. மொத்த வகுப்பையும் இரண்டாகப் பிரித்து வரிசையாக ஆளுக்கொரு எண் கொடுத்து விடுவார்கள். இப்போது இரண்டு அணியிலும் தலா முப்பது எண்களைத் தாங்கிக் கொண்டு முப்பது பேர் இருப்போம். இரண்டு அணிக்கும் நடுவே ஒரு வட்டம் வரைந்து உள்ளுக்குள் ஒரு கர்ச்சீப்பை வைத்து விடுவார்கள். ஆட்டதுக்கு களம் ரெடி.

இப்போது நடுவராக இருக்கும் பி டி மாஸ்டர் ஒரு எண்ணை உரத்துச் சொல்வார். அந்த எண்ணுக்குரிய நபர்கள் இருவரும் வட்டதுக்கு அருகே வந்து விடுவார்கள். மற்றவர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அந்தக் கர்ச்சீப்பை எடுத்துக் கொண்டு மீண்டும் தங்கள் அணிக்குத் திரும்ப வேண்டும். அப்படி ஒருவர் எடுத்து வந்து விட்டால் அந்த அணிக்கு ஒரு பாயிண்ட். எடுத்தவர் அணியின் எல்லைக் கோட்டைத் தொடுவதற்குள் மற்றவர் இவரைத் தொட்டுவிட்டால் எதிரணிக்கு ஒரு பாயிண்ட். இப்படியாகப் போகும் ஆட்டத்தில் கிளுகிளுப்பே அழைக்கப்படும் எண்களுக்கு உரிய மக்கள் எதிர்பாலினத்தவர்களாக இருப்பதில்தான் இருக்கும். வாரம் பூராவும் இந்த ஒற்றை ஹவருக்காக காத்திருந்து விளையாடுவோம்.

ன்னுடைய நெருங்கிய சினேகிதிகள் எல்லாரும் எனக்கு சுப்பிரமணியபுரம் வந்த பிறகு கிடைத்தவர்கள். அங்கே இருந்த காலகட்டத்தில் நான் ஆண்பிள்ளைகளைக் காட்டிலும் பெண்களோடுதான் அதிகமாக விளையாடுவேன். தில்லி தில்லி பொம்மக்கா, கல்லா மண்ணா, கரண்ட் பாக்ஸ், வளையல் ஜோடி சேர்த்து ஆடுவது, சொட்டாங்கல், பிள்ளைப்பந்து, நாடு பிடிச்சு ஆடுவது என்று வித விதமான விளையாட்டுகளில் நேரம் போவதே தெரியாது. பசங்களோடு சேர்ந்து கொள்வதில்லை என்று பையன்கள் கண்ட மேனிக்கு வைவார்கள். இதை எல்லாம் பார்த்தால் பிழைப்பு நடக்குமா என்று போய்க் கொண்டே இருப்பேன்.

அந்தக் காலகட்டத்தில் எங்கள் ஏரியாப் பையன்களின் மத்தில் பிரபலமாக இருந்த விளையாட்டுக்களில் முக்கியமானது ரவுண்டு காத்து. ஏரியாவில் நின்று கொண்டிருக்கும் சைக்கிள்களில் எல்லாம் காற்றைப் பிடுங்கி விட்டுக் கொண்டே போவதுதான் விளையாட்டு. ஆட்டம் இரண்டு நாட்களுக்கு இரண்டு அணிகளுகு இடையே நடக்கும். முதல் நாள் டாசில் வென்ற அணி காத்துப் பிடுங்கப் போகும்போது எதிரணியில் இருந்து கணக்கெடுக்க ஒரு அம்பயரும் கூடவே போக வேண்டும். இரண்டாவது நாள் அடுத்த அணி வேட்டைக்குப் போகும். முடிவில் அதிகமான சைக்கிள் டயர்களைப் பதம் பார்த்தவர்களே வெற்றி பெற்றவர்கள். தோற்ற அணி மற்றவர்களுக்கு வடையும் டீயும் வாங்கித்தர வேண்டும். இன்னொரு முக்கியமான ஆட்டம் ரவுண்டு கண்ணாமூச்சி. ஏரியாவில் இருக்கும் பனிரெண்டு தெருக்களில் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம். தேடி வருபவன் எல்லாரையும் கண்டுபிடிக்க சில சமயங்களில் ஏழு எட்டு மணி நேரங்கள் ஆகும்.

விளையாட்டுகள் எல்லாவற்றுக்குமே சீசன் உண்டு. ஒரு விளையாட்டு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை ஓடும். பிறகு வேறொரு விளையாட்டு ஆரம்பித்து விடும். பெரும்பாலும் முழுப்பரிட்சை விடுமுறையில் பம்பர சீசனில் தான் எல்லாம் ஆரம்பிக்கும். அபிட்டு, அங்கோஷு, சாட்டை மேல சாட்ட வச்சு சொடக்சைன் என்பதான சத்தங்கள் தெருவெங்கும் நிரம்பி வழியும். பம்பரத்தைப் பொறுத்தவரை ஆக்கர்பார்தான் சரியான ஆட்டம். பத்து ரவுண்டு வரை உருட்டி இறுதியாகச் சிக்கிய பம்பரத்தை சாக்கடையில் ஊறப்போட்டு கல்லைத் தூக்கிப் போட்டு உடைப்பதில் இருக்கும் சுகமே அலாதி.

பம்பரம் முடிந்து அடுத்ததாக கோலிகுண்டு சீசன் தொடங்கும். அதன் பின்பாக தீப்பெட்டி அட்டை, சிகரெட் அட்டை, லாட்டரி சீட்டு என்று விதம் விதமான ஆட்ட சீசன்கள் வந்தப்டியே இருக்கும். தெருதெருவாக சுற்றி ஒரு குப்பைத் தொட்டி விடாமல் பொறுக்கி தீப்பெட்டி அட்டைகளும் சிகரெட் அட்டைகளும் சேகரிப்பதில் நண்பர்களுக்கு இடையே அடிதடி கூட நடக்கும். அதிலும் வெளிநாட்டு சிகரட் அட்டைகளுக்குக் கூடுதல் மவுசு வேறு. அதன் மதிப்பு மட்டும் கோடிகளில் இருக்கும். உள்ளூர் சிசர்ஸின் மதிப்பு வெறும் ஐம்பதுதான். சேகரித்த அட்டைகளைக் கொண்டு சில்லாக்கில் செதுக்கி ஆடுவது, பூவா தலையா ஆடுவது என்று ஆட்டங்கள் களைகட்டும். நடுவே உலக்கோப்பை ஃபுட்பால் அட்டை, கிரிக்கெட் அட்டை, ரெஸ்லிங் அட்டை என்று வந்தால் அதற்கெனத் தனி சீசன்.

த்தனை விளையாட்டுகள். இதை எல்லாம் நாம் ஆடி இருக்கிறோம் இப்படி ஒரு வாழ்க்கை வந்து இருக்கிறோம் என்று நினைக்கும்போதே உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் இன்றைக்குத் தெருக்களில் இவற்றில் எதையும் பார்க்க முடியவில்லை என்பதும் வருத்தமாக இருக்கிறது. ஹேண்ட் கிரிக்கெட்டிலும் வீடியோ கேம்சிலும் உட்கார்ந்து இருக்கும் இந்தக் காலப் பிள்ளைகளுக்கு மொட்டை மாடி நிலவில் அமர்ந்து காலாட்டுமணி கையாட்டுமணி ஒத்த முட்டையத் தின்னுட்டு ஊள முட்டையக் கொண்டுவா என்பதெல்லாம் வெறும் கதையாக மட்டுமே இருக்கும் என்று நினைக்கையில் பெருமூச்சு விடுவதைத் தாண்டி நாம் வேறென்ன செய்து விட முடியும்?

April 14, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - ஒரு பின்நவீனத்துவப் பார்வை

ரமணிசந்திரன் என்றொரு எழுத்தாளர் இருக்கிறார். தமிழில் இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நாவல்களை எழுதிக் கொண்டிருப்பவர். எனக்குத் தெரிந்த எல்லாப் பெண்களுக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். ஆனால், நான் வாசித்த வரையில், அவரிடம் இருப்பது ஒரே கதைதான். காதலாகிக் கசிந்துருகும் ஒரு ஆணும் பெண்ணும். பெரும்பாலும் அந்தப் பெண் ஏழையாகவும் ஆண் பணக்காரனாகவும் இருப்பார்கள். திடீரென ஆணுக்குப் பெண் மீது சந்தேகம் வந்து பிரிவார்கள். நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு இருவரும் சந்திக்கும்போது பெண் ஆணிடம் வேலை செய்திட வேண்டிய சூழல் நேரும். பிறகு அவனுடைய அண்மையை விட்டு விலகிட முடியாமல் அவள் தன்னைத் தொலைப்பதும் பிரச்சினைகள் தீர்ந்து பெரிய மனதோடு அவன் அவளை ஏற்றுக் கொள்வதும் எனக் கதை முடியும். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒற்றைக் கதையோடு தமிழ் சினிமாவை ஒரு கை பார்த்திடக் களம் இறங்கி இருக்கும் எம்.ராஜேஷின் மூன்றாவது படம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி.

பொறுப்பே இல்லாத ஒரு ஆண். வீட்டில் வம்பு வளர்ப்பதும் தண்ணி அடிப்பதும் பெண்கள் பின்னால் சுற்றுவதும் அன்றி வேறேதும் தெரியாதவன். அவனைக் கூட இருந்து வழிநடத்தும் நண்பன். தனது மகன் தப்பே செய்தாலும் கூடவே இருந்து ஊக்கம் தரும் அம்மா. எதேச்சையாகப் பார்க்கும் பெண்ணோடு காதல். அவளுடைய அப்பா கண்டிப்பாக காதலுக்கு எதிரியாக இருப்பார். தொடர்ச்சியான வழிதல் மற்றும் மோதலுக்குப் பிறகு உறுதியாகும் காதல். எல்லாம் நல்லபடியாக முடிந்தது எனும் நிலையில் நண்பனை முன்னிட்டு ஒரு பிரிவு. கடைசியில் காதலர்கள் ஒன்றுசேர சுபம். கதை என்கிற விசயத்தைப் பற்றி கவலையே படாது கொண்டாட்டத்தை நம்பிக் களம் இறங்கி இருக்குறார் இயக்குனர்.



என்றாலும் மூன்றாம் காலனிய ஆதிக்கச் சிந்தனைகளுக்கு எதிரான உதிரிகளின் நடவடிக்கைகளைப் பதிவு செய்வதோடு சில பல புனித பிம்பங்களை உடைத்தெறிவதோடு நம்பப்பட்ட உண்மைகளையும் சொல்லப்பட்ட நியாயங்களையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவதாலும் குடி உடல்நலத்துக்குக் கேடு என்கிற வரிகளைச் சேர்த்துக் கொண்டு படம் முழுவதும் குடியைப் பிரதானப்படுத்தி இந்திய சென்சார் விதிகளை எள்ளி நகையாடுவதோடு எல்லாவற்றையும் பகடி செய்யும் நோக்குடன் மையத்தைச் சிதறடிக்கும் பின்நவீனத்துவப் போக்குகள் படம் முழுவதும் நிரம்பி வழிகின்றன என்கிற வகையிலும் ஒரு கல் ஒரு கண்ணாடி மிக முக்கியமான படமாக மாறுகிறது.

தமிழ் சினிமாவின் நாயகன் என்கிற கற்பிக்கப்பட்ட உண்மையின் பேருருவை ஒன்றுமில்லாததாக கலைத்துப் போட்டு உடன் வரும் நண்பனை முன்னிறுத்திப் புதியதொரு சகாப்தம் படைக்கிறார்கள். எதிலும் நிலையில்லாதவனாக யாராலும் நம்ப முடியாதவனாக நாயகனுடைய பாத்திரம் இருப்பது பின்காலனிய காலகட்டத்தின் மறுக்கவியலாக் கூறுகளைப் பிரதிபலிக்கிறது. இத்தனை காலம் உடற்பயிற்சி நடனத்தின் பிரதிநிதியாக தான் ஒருவன் மட்டுமே இருக்கிறோம் என்கிற கே.பாக்கியராஜின் இறுமாப்பையும் அவருடைய சர்வாதிகாரத்தையும் உதயநிதி ஸ்டாலின் என்கிற அஸ்திரத்தைக் கொண்டு வீழ்த்தி இருக்கிறார் இயக்குனர். காதல் சோகம் பாசம் கோபம் என எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியான முகம் கொண்டு நிற்பதன் மூலமாக புதுவிதமான நடிப்பு முறையையும் செய்து பார்த்திருக்கிறார்கள் எனும்போது இயக்குனரின் பரீட்சார்த்த ஆர்வங்களை நம்மால் வியக்காமல் இருக்க முடிவதில்லை. மோந்து பார்த்தாலே மட்டையாயிடுவாண்டா என்கிற வாய்மொழி வழக்காடலை முதன்முறையாக காட்சிப்படுத்திக் காட்டி இருக்கும் இயக்குனரின் தைரியம் அசாத்தியமானதும் கூட.

பிரதிக்கு உள்ளேயே பிரதியைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பது பின்நவீனத்துவத்தின் மற்றொரு முக்கியமான போக்கு. நாயகன், நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா மோத்வானியைப் பார்க்கும் முதல் தடவையிலேயே, பித்துப் பிடித்தவன் ஆகிறான். ஆனால் நாயகியைப் பெண் பார்க்க வரும் மற்றொரு பாத்திரத்தின் மூலமாக நீ சிரிச்சா கேவலமா இருக்கு நீ போட்டிருக்க டிரஸ் பச்சக் கலரு சிங்குச்சா ஆக மொத்தம் நீ ஆண்ட்டி மாதிரி இருக்க என்று நேரடியான விமர்சனங்களை முன்வைக்கிறார் அல்லது தன் மனதில் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தவும் செய்கிறார் இயக்குனர். ஆக ஒரு வகையில் இவ்வளவுதான் உன் தேர்வா என்று இந்த இடத்தில் நாயகனைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்.

சந்தானத்தின் பாத்திரம் இந்தப்படத்தின் உச்சபட்சக் கொண்டாட்டம். தமிழ் சினிமாவின் நண்பனை நேரடியாகப் பகடி செய்கிறதன் மூலம் இதுநாள் வரை சொல்லப்பட்ட நண்பர்களின் நியாயங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் பாத்திரம். தனது காதலியை அனுப்பி நண்பனின் காதலைக் கூறுபோடும் நண்பனின் குரூரத்தை இதுவரைக்கும் யாரும் தமிழில் சொன்னதில்லை என்றே சொல்லலாம். இறுதிக்காட்சியில் ஹன்சிகா திருமணத்தில் உதயநிதி ஆங்கிலத்தில் பொளந்துகட்ட அதை சந்தானம் மொழிபெயர்ப்பதும் பிரசங்கிப்பதும் வாழ்க்கை என்பதும் இது மாதிரியான எழுப்புதல் கூட்டங்களுக்கு ஒப்பானதுதான் எனச் சொல்லும் மிகக் கூர்மையான அங்கதம். ஆனாலும் படம் முழுதும் சந்தானம் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்தைப் பிரதி செய்ய முர்பட்டிருக்கிறார் என்பதைச் சின்னதொரு வருத்தத்தோடு இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது.

எப்போதும் தனது இசையை தானே மீண்டும் நகல் எடுக்கும் புனித இசைப்போராளி ஹாரிஸ் இந்தப் படத்திலும் தனது திருப்பணியை தெளிவாகச் செய்திருக்கிறார். கண்களை மூடிக் கொண்டு பின்னணி இசையைக் கேட்டால் அப்படியே கஜினியில் இருந்து உருவியது தெளிவாகப் புரியும். அதே போல மொத்தத் தியேட்டரையும் நடனமாட வைக்கும் - அத்தனை பாதிக்கப்பட்டவர்கள் இங்கே இருக்கிறார்கள் - வேணாம் மச்சான் வேணாம் பாடலை ஒரு படி மேலே போய் தேவா வடிவேலும் இணையின் வாடி பொட்டப்புள்ள வெளியே பாடலில் இருந்து உருவியதின் மூலம் மாறி வரும் காலப்போக்குக்குத் தகுந்தாற்போல தானும் மறக்கூடியவன் என்பதை அழகாகப் பதிவு செய்கிறார் ஹாரிஸ்.

அப்படியானால் இந்தப்படத்தின் ஆகப்பெரிய பிரச்சினை தான் என்ன? இயக்குனரின் மனம் ஆண்வயப்பட்டதாக இருக்கிறது. அது நாயகனின் எல்லா செயல்களையும் நியாயப்படுத்துகிறது. அவன் எத்தனை மோசமானவனாக வெட்டியான ஆளாக இருந்தாலும் பரவாயில்லை எந்த மறுதலிப்பும் இன்றி அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனப் பெண்ணை நிர்ப்பந்திக்கிறது. அழகான பெண்கள் மட்டுமே சாலையில் நடமாட வேண்டும் என்பதிலும் புற அழகே காதலை முடிவு செய்கிறது என்பதிலும் நாயகியைக் கட்டாயப்படுத்தி அவள் அன்பைப் பெற்றாலும் ஆணைப் பொறுத்தவரை எதுவும் சரிதான் என்பதிலும் தென்படுவதுஆண் என்னும் அகங்காரத்தின் உச்சம். இருபது வருடம் பேசாமல் இருந்த தன் கணவன் ஒற்றை வார்த்தை பேசியவுடன் இத்தனை வருடம் ஆதரவாக இருந்த பையனை நாயகனின் அம்மா வைவதும் கூட இயக்குனரின் ஆணாதிக்க மனத்தின் வெளிப்பாடே. இத்தனைச் சிக்கல்களை முன்வைத்து பார்க்கும்போது..

ஏய் ஏய் நிறுத்து.. எதுக்கு இவ்ளோ மெனக்கெடுற? படம் நல்லா இருக்கா இல்லையா? சூப்பரா இருக்கு தலைவா. ஜாலியா போய் கொண்டாடிட்டு ஜாலியா வரலாம். அவ்ளோதான. அப்புறம் எதுக்கு இப்படி ஜல்லியடிக்குற. போ.. போய் பொழப்பப் பாரு. அட.. இப்பப் பார்த்தீங்கன்னா.. விமர்சனத்துக்கு நடுவுல நீங்களும் எழுதுறவரும் பேசிக்கிறீங்க பாருங்க. இது கூட பின்நவீனத்துவக் கூறுதான். அதாவது.. கீழைத்தேய மரபுல என்ன சொல்றாங்கன்னா.. டேய்.. அடிவாங்காம ஓடிப் போயிரு, இத்தோட முடிச்சுக்குவோம்.

ஒரு கல் ஒரு கண்ணாடி - கொண்டாட்டம்

April 9, 2012

உதிரிப்பூக்கள் - 10

சின்னப் பிள்ளையாய் இருந்த காலத்தில் இருந்தே ஆசிரியர் பணி மீது எனக்கு மிகுந்த ஈர்ப்பு உண்டு. அதற்குக் காரணம் இந்திரா அம்மா. என் அம்மாவின் உடன்பிறந்த தங்கை. தமிழ்ப் பேராசிரியை. விளாங்குடியில் ஒரு யூனியன் ஸ்கூலில் பணி. இருபத்தைந்து வருடங்கள் வேலை பார்த்த பிறகு சமீபமாகத்தான் ஓய்வு பெற்றார்.

வீட்டுக்கு வரும் மாணவர்கள் இந்திரா அம்மாவுக்குத் தரும் மரியாதையும் ஆசிரியர் பணியின் மீது அம்மாவுக்கு இருந்த பெருமையும் என்னையும் பற்றிக் கொண்டதில் ஆச்சரியம் இல்லை. பொறியியல் படிப்பில் சேர்ந்த போதே எனது முடிவு தெளிவாக இருந்தது. படிப்பு முடிந்தவுடன் நான் ஆசிரியராகப் போகிறேன்.

இன்றைக்கு நான் விரும்பிய வேலையை முழுமனதாகச் செய்து வரும் திருப்தி எனக்கு இருக்கிறது. என்னுடைய ஆசிரியர்கள் என்னிடம் எப்படி இருக்க வேண்டும் என நான் விரும்பினேனோ, அது மாதிரியான ஒரு ஆசிரியராகவே இருக்க முயற்சிக்கிறேன். பாடங்களைக் காட்டிலும் அதனை நடத்தும் ஆசிரியரைப் பிடித்து விட்டாலே போதும், மாணவர்கள் எளிதில் படித்து விடுகிறார்கள் என்பதாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். அத்தோடு , படிப்பு என்பதைத் தாண்டி, ஒரு மாணவனை நல்ல மனிதனாக உருவாக்குவதும் ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதும் ஆசிரியர்களே என்பதையும் தீவிரமாக நம்புகிறேன்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை நல்லவர் கெட்டவர் என்றெல்லாம் கிடையாது. பிடிக்கும் பிடிக்காது அவ்வளவே. ஏதேனும் ஒரு விசயம் பிடித்துப் போய்விட்டால் வாழ்வில் கடைசி வரைக்கும் மறக்க முடியாதவர்களாக அவர்கள் ஆகி விடுவார்கள். அது மாதிரியான நிறைய மனிதர்கள் என் வாழ்வில் உண்டு.

ன்னுடைய மொத்த பள்ளிப்படிப்பும் ஜீவாநகரில் இருக்கும் செவந்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளியில்தான் முடிந்தது. நான் எல் கே ஜி சேர்ந்த போது அங்கே ஆசிரியராக சேர்ந்தவர் குருராஜ் சார். +2 படித்து முடிக்கும்வரை எனக்கு பள்ளியில் நல்லதொரு ஆசானாகவும் நண்பராகவும் இருந்தவர்.

நல்ல படிய வாரிய சுருட்டை முடி. பெரும்பாலும் வெள்ளை சட்டை கருப்பு பேண்ட். முகத்தில் எப்போதும் தொலைந்து போகாத சிரிப்பு. அத்தனைப் பெற்றோரிடமும் தன்மையாகப் பழகக் கூடியவர். இதெல்லாம்தான் குருராஜ் சாருக்கான அடையாளங்கள். மற்ற ஆசிரியர்கள் மாணவர்கள் பற்றிக் குறை சொல்லும்போதெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் மனிதர் என்பதால் எங்கள் எல்லாருக்குமே சாரை ரொம்பப் பிடிக்கும்.

எந்தப் பிரச்சினை என்றாலும் தைரியமாகப் பகிர்ந்து கொள்ளக் கூடிய நல்ல மனிதர் என்றாலும் எனக்கு அவரிடம் பிடிக்காத ஒரு விசயமும் இருந்தது. அது அவருடைய தீவிரமான கடவுள் விசுவாசம். மதம் சார்ந்த என்னுடைய நம்பிக்கைகளோ அப்போது வேறு மாதிரி இருந்தன. உங்க நம்பிக்கைகளை உங்களோட வச்சுக்கோங்க சார் என்றால் மனிதர் கேட்க மாட்டார். நல்ல விசயத்தையும் உண்மையையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தாண்டா நான் இங்க வந்திருக்கேன் என்று திருப்பி அடிப்பார். வகுப்பில் எங்களுக்கு மாரல் பாடங்கள் நடத்துவது அவர்தான் என்பதால் பைபிளில் இருந்து கதை கதையாகச் சொல்வார். கூடவே சில ஏவுகணைகளும் வரும்.

முப்பத்து முக்கோடி தேவர்கள்னு சொல்றாங்களே.. அவங்க எல்லாம் யாரு தெரியுமா? ஆதியில கடவுள்கிட்ட நூறு கோடி தேவதைகள் இருந்தாங்க. அதுல லூசிஃபர்னு சொல்ற சாத்தான் பிரிஞ்சு வந்து போது மூணுல ஒரு பங்கு தேவதைகள் அவனோட போயிட்டாங்க. அவங்கதான் இந்த முப்பத்து முக்கோடி தேவர்கள். புரியுதா.. அத்தனையும் பேய்டா தம்பிகளா..”

அது எப்படிறா அவரு நம்ம சாமியை எல்லாம் சாத்தான்னு சொல்லலாம் என்று பையன்கள் உள்ளுக்குள் சடைத்துக் கொண்டாலும் சார் கதை சொல்லும் அழகுக்காகவே கிளாஸ் களைகட்டும். அவ்வப்போது தனது வாழ்க்கையில் நடந்ததாக சில சம்பவங்களையும் எடுத்து விடுவார்.

எப்பவும் வண்டியை காம்பவுண்டுக்கு வெளில நிறுத்துவேன். நேத்தைக்கு சாயங்காலம் மனசுக்குள்ள ஒரு குரல். வேணாம் வண்டியை உள்ளே நிறுத்துன்னு. சரின்னு நானும் வண்டியை வீட்டுக்கு உள்ள நிறுத்திட்டேன். காலைல எழுந்து பார்த்தா காம்பவுண்ட்ல இருந்த அத்தனை வீட்டுலயும் வண்டி திருட்டு போயிருக்கு. நம்ம வண்டி மட்டும் தப்பிச்சிருச்சு. எல்லாம் கடவுளோட கிருபைதான்ப்பா”.

அது எப்படி சார் உங்க ஒருத்தருக்கு மட்டும் உதவிட்டு தான் படைச்ச மத்த எல்லாரையும் அவதிப்பட வைக்கிறவரு நல்ல சாமியா இருக்க முடியும்?” குனிந்து கொண்டு ஆனந்தகிருஷ்ணன் கத்துவான்.

யாருடா அந்த லூசுப்பய.. ஏசுவையே சந்தேகப்படுறதுஎனக் கோபப்படுவார். ஆனால் அதெல்லாம் சில நிமிசம்தான். பிறகு மீண்டும் சாந்தசொரூபியாக மாறி கதையைத் தொடர ஆரம்பித்து விடுவார். கிளாசுக்கு வெளியே முற்றிலும் வேறொரு நபராக மாறி அனைவருக்கும் நெருக்கமான மனிதராக இருப்பார்.

பள்ளி முடியும் தினம். ஆசிரியர்கள் சார்பில் எங்கள் அனைவருக்கும் ஃபேர்வெல் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்வு முடிந்து ஒவ்வொருவர் பற்றியும் குருராஜ் சார் பேசிக்கொண்டே வந்தார். கடைசியாக என்னைப் பற்றி அவர் சொன்னதுதான் அன்றைய ஹைலைட்.

நேற்றைக்கு இரவு கிறிஸ்துவோடு பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார். கண்டிப்பாக ஒருநாள் கார்த்தி உண்மையானதொரு கிருஸ்துவனாக மாறுவான்..” கிளாசே கொல்லென்று சிரித்து விட்டது.

மனிதர் அசையாமல் மீண்டும் சொன்னார். “எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் ரொம்ப நல்லவன். உண்மையை உணர்ந்து அவன் ஒருநாள் கண்டிப்பா கடவுளை ஏத்துக்குவான்”.

பள்ளி முடித்த பின்பாக கல்லூரி, வேலை என்று சில பல வருடங்களாக சாரைப் பார்க்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு திடீரென்றுதான் அது தோன்றியது. நாம் படித்த பள்ளிக்குப் போய்ப் பார்த்தால் என்ன? கிளம்பிப் போனேன். பள்ளி நிறையவே மாறி இருந்தது. பிரைமரி ஸ்கூல் தனியாகவும் மேல்நிலை வகுப்புகள் தனியாகவும் என்று பிரித்திருந்தார்கள்.

பிரைமரி ஸ்கூலின் ஹெட் மாஸ்டராக குருராஜ் சார். அவருக்கு முதலில் என்னை அடையாளம் தெரியவில்லை. இன்னார் என்று சொன்னதும் ரொம்ப சந்தோசப்பட்டார். நானும் ஆசிரியராகத்தான் இருக்கிறேன் என்றதும் மனிதருக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்து வந்து கட்டிக் கொண்டார். நிறைய நேரம் மகிழ்ச்சியாக அவரோடு உரையாடி விட்டுக் கிளம்பினேன். வெளியேறும்போது தயங்கியபடிக் கேட்டார்.

இப்பவாவது கடவுளை ஏத்துக்கிட்டியாடா..”

சிரித்தபடி சொன்னேன். “இல்லை சார். முந்தி ஏசு கடவுள் இல்லைன்னு உங்கக்கிட்ட வம்பு வளர்ப்பேன். இப்பவெல்லாம் கடவுளே இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.”

அடப்பாவி.. நீ மாறுவ. கண்டிப்பா ஏசு உன்னை ரட்சிப்பார்”. சிரித்தபடி இதைச் சொன்னபோது அவர் கண்களில் பல வருடங்கள் முன்பாகப் பார்த்த அதே நம்பிக்கையும் கருணையும். இன்னுமா இந்த உலகம் என்னைய நம்புது?

ருணாச்சலக் கவிராயர் - சிறுகுறிப்பு வரைக

இவர் தமிழின் புகழ்பெற்றக் கவிஞர். சிவபெருமானைப் பார்த்து அதாண்டா இதாண்டா அருணாச்சலம் இவந்தாண்டா எனப் பாடியதால் இந்தப் பெயர் பெற்றார்

பரிட்சையில் இப்படி எழுதி வைத்தால் எந்த ஆசிரியருக்காவது கோபம் வராமல் இருக்குமா? எல்லாருமே கொந்தளித்து விடுவார்கள், ஒரே ஒருவரைத் தவிர. அவர் கஜேந்திரன் சார். எட்டாவது முதல் பனிரெண்டாப்பு வரைக்கும் எனக்குத் தமிழ் சொல்லித்தந்த மகாத்மா. அவர் வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே நான் அவருக்கு ரொம்ப நெருக்கமானவனாக ஆகி விட்டிருந்தேன்.

அப்போதெல்லாம் பணம் கொடுத்துப் புத்தகங்கள் வாங்க முடியாத சூழலில் எனது வீடு இருந்தது. கஜா சாருக்கு இது தெரியும் என்பதால் பள்ளி முடிந்ததும் அவரது வீட்டுக்கு என்னையும் கூட்டிக் கொண்டு போவார். அவர் வீட்டில் எல்லாப் பத்திரிக்கைகளும் வாங்குவார்கள் என்பதால் அங்கேயே அமர்ந்து எல்லாவற்றையும் வாசித்த பின்பு கிளம்புவேன். பள்ளிக்கான புத்தகங்களையும் தன் செலவில் அவரே வாங்கிக் கொடுப்பார். ஆக மொத்தம் வகுப்பில் அவருடைய செல்லப்பிள்ளை நான். அதனாலேயே வகுப்புக்குள் எனக்கு கஜா சாரின் ஒற்றன் என்கிற பட்டப்பெயர் கூட இருந்தது.

கஜா சார் பாடம் நடத்தும் அழகே தனி. சினிமா மீது அவருக்கு இருந்த பிரியம் அலாதியானது. பைத்தியம் என்று கூட சொல்லலாம். ஆகவே அவர் எல்லாவற்றுக்கும் சினிமாவில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு சொல்லுவார். பாஞ்சாலி சபதம் பற்றிப் பாடமா? கிருஷ்ணன் பற்றி சொல்ல வேண்டுமா? அவருக்கு உடனே என்.டி.ராமாராவ் ஞாபகம் வந்துவிடும். கட்டபொம்மன் பற்றிய வரலாற்றுப் பாடமா? சிவாஜியைப் போல உறுமிக் கொண்டே மொத்த வசனத்தையும் பேசிக் காட்டுவார். மொத்தத்தில் அவர் கிளாசுக்குள் இருந்தால் நேரம் போவதேத் தெரியாது.

நான் +2 முடிக்கிற நிலையில் இருந்தபோது சாருக்குத் தூத்துக்குடிக்கு மாற்றல் ஆனது. அவர் கிளம்பிப் போனபோதுதான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ஆசிரியருக்காக நான் அழுதது. இப்போது சார் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ் மீதான எனது ஆர்வத்தைக் கண்டறிந்து என்னை உற்சாகப்படுத்திய கஜா சாரை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.

தீபாவளிப் பாண்டியன் பொங்கல் பாண்டியன் எனக் கிண்டல் செய்தபடி இருக்கும் சுந்தர்சிங் ஹெட்மாஸ்டர், மவுன கீதங்கள் சரிதாவை ஞாபகப்படுத்தும் மாரியம்மாள் மிஸ், உங்க பையன் பெரிய ரவுடியா ஸ்ட்ரைக் எல்லாம் பண்ணுவானா என்று என் அம்மாவிடம் முறைத்த வில்சன் சார், கணக்கு சரியாகப் போடாவிட்டால் கையின் ஆடுசதையைப் பிடித்துக் கிள்ளி வைக்கும் முத்துசிதம்பரம் சார், ரோட்டில் அடிபட்டுக் கிடந்த பிள்ளைக்கு ரத்ததானம் செய்து விட்டு லேட்டாக ஸ்கூலுக்கு வர நீ நல்ல மனுசனா வருவடா என்று தோள் சாய்த்து அணைத்துக் கொண்ட விஜயகுமார் சார், படம் சரியாக வரையாமல் வந்த ராம்பிரசாத்தை ஏதோ எடக்காக கேள்வி கேட்டான் என்று நிஜமாகவே எத்தி ஃபுட்பால் ஆடி மாணவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்த மணிமாறன் சார் (என் வாழ்வில் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காமல் போன ஒரே மனிதர்), அர்த்தமே இல்லாமல் என்னை அடித்தார் என்பதற்காக நண்பர்களோடு சேர்ந்து பெரியாரில் வைத்து நாங்கள் அடி பொளந்த சுரேஷ் சார் (எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என இன்றைக்கும் நான் அதற்காக வருந்துவதுண்டு).. எத்தனை எத்தனை மனிதர்கள் ஞாபகத்தின் அடுக்குகளில் இருந்து கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார்கள்.

பள்ளியில் இருந்த மாதிரி நான் கல்லூரியில் ஆசிரியர்களோடு நெருக்கமாக இருந்தது இல்லை. மிஸ் என்பது இல்லாமல் போய் மேடம் எனச் சொல்வதே சங்கடமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதே போலவே சார்களும் முடிந்த அளவு மாணவர்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள் என்பதால் பெரிய அளவில் யாரோடும் பழக்கம் இருந்தது கிடையாது. ஆனால் கல்லூரி காலத்தில் ஒரு ஆசிரியையோடு நடந்த மோதல் காலம் முழுதும் என்னைத் துரத்தும் என்பது மட்டும் எனக்குத் தெரியாமல் போய் விட்டது.

ந்த மேடமின் பெயர் ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவருக்கு நாங்கள் வைத்த பட்டப்பெயர் “டெட்பாடி”. பாடம் நடத்தினாலும் சரி, சிரித்தாலும் சரி, கோபப்பட்டாலும் சரி.. எல்லாவற்றுக்குமே முகத்தில் ஒரே உணர்ச்சிதான். உம்மென்று இருப்பார். எனவே அவர் பெயர் செல்லமாக டெட்பாடி.

ஐந்தாவது செமெஸ்டரில் எனக்கு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் அவர்தான் எடுத்தார். அந்த செமஸ்டர் முழுக்க கலை நிகழ்வுகளைச் சாக்காக வைத்து நான் வகுப்புக்கே போகவில்லை. வகுப்புக்கள் முடிய ஒரு வாரம் இருக்கும்போதுதான் முதல் முறையாக நம் டெட்பாடியின் கிளாசில் போய் அமர்ந்தேன். உள்ளே நுழைந்தவர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்.

“தம்பி, இது இன்ஸ்ட்ருமெண்டேசன் கிளாசுப்பா..”

“தெரியும் மேடம். நானும் இந்த கிளாஸ் தான்..”

“அப்படியா. நான் உன்னை இங்க பார்த்ததே இல்லையே? எங்க உன் நோட்டை எடு பார்க்கலாம்..”

உக்கும். முதல் நாள் அன்றுதான் கிளாசுக்கே வருகிறேன். இதில் எந்த நோட்டுக்குப் போக? அமைதியாக எழுந்து நின்றேன். நீயெல்லாம் என்ன டாஷுக்குப் படிக்க வருகிறாய் என்கிற ரீதியில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். இதெல்லாம் நமக்குப் புதுசா என்ன? கண்டு கொள்ளாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் திட்டி திட்டிக் களைத்துப் போனவர் வகுப்பை விட்டு வெளியே போகும்படி சொன்னார். நான் அசராமல் உள்ளேயே நின்றிருந்தேன். வெறுத்துப் போய் நெருங்கி வந்தவர் என்னிடம் தீர்க்கமாகச் சொன்னார்.

“என்ன திமிரா? என் கையில் இருபது மார்க் இண்டர்னல் இருக்கு தெரியும்ல?”

என்னால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் திருப்பிச் சொன்னேன். “தெரியும் மேடம். அதே நேரம் என் கையில் எம்பது மார்க் எக்ஸ்டர்னல் மார்க் இருக்கு. நான் எழுதி பாஸ் ஆகிக்குறேன்” சொல்லி முடித்த கையோடு வகுப்பை விட்டு வெளியேறினேன்.

பிறகு அவர் துறைத்தலைவரிடம் போய் புகார் சொன்னதும் என்மீது பிரியம் கொண்ட துறைத்தலைவர் அவன் நல்ல பையன் படிச்சுடுவான் ஏதோ தெரியாமப் பண்ணிட்டான் என எனக்காக்ப் பரிந்து பேசி காப்பாற்றி விட்டதும் வரலாறு. அன்றைக்கு பிரச்சினை ஓய்ந்து வெளியே வரும்போது டெட்பாடி என்னிடம் சொன்னது. “வாத்தியார மதிக்காத நீயெல்லாம் நல்லாவா இருக்கப் போற. கண்டிப்பா இதுக்காக வருத்தப்படுவ..”

சரி. இதை எல்லாம் நான் ஏன் இப்போது சொல்ல வேண்டும்? கடந்த பத்து வருடமாக நான் வாத்தியாராகத்தான் இருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் நான் எடுக்கும் பாடங்களில் கட்டாயமான ஒன்றாக இருப்பது - கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மட்டுமே. சும்மாவா சொன்னார்கள்? ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.