May 29, 2012

உதிரிப்பூக்கள் - 12

ல்லூரி முடிந்து வெளியே வந்த போது வானத்தில் மேகங்கள் திரண்டு கொண்டிருந்தன. கடந்த சில நாட்களாகவே மதுரையில் நல்ல மழை. வீட்டுக்கு நனையாமல் போய் விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வண்டியைக் கிளப்பினேன். தெப்பக்குளத்தை நெருங்கியபொழுது மொபைல் அடித்தது. வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினேன். போனில் அம்மா.

"தம்பி, வரும்போது ஒரு லிட்டர் நல்லெண்ணையும், கொஞ்சம் சின்ன வெங்காயமும் வாங்கிட்டு வர்றியா?"

அம்மா எப்போதாவதுதான் என்னிடம் இது போல சொல்வது உண்டு.

"சரிம்மா..."

வாடிக்கையாக எண்ணெய் வாங்கும் கடை கீழவாசலில் இருக்கிறது. அவர்களிடமே வெங்காயம் எங்கே வாங்குவது என்று விசாரித்தேன். அருகில் இருக்கும் சந்துக்குள் செல்ல வேண்டும் என்றார்கள். வண்டியைத் திருப்பினேன். மழை லேசாகத் தூர ஆரம்பித்து இருந்தது.

நான் வெங்காய மண்டியை அடைவதற்கும் மழை வலுப்பதற்கும் சரியாக இருந்தது. அவசரமாக வண்டியை நிறுத்தி விட்டு கடையின் வாசலில் நின்று கொண்டேன். வெளியே காய வைத்து இருந்து வெங்காயத்தை எல்லாம் ஒரு வயதான பாட்டி பெருக்கி எடுத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் கடையின் உள்ளே மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தார். மழை ரொம்பப் பெரிதாக பெய்யத் தொடங்கியது.

"தம்பி, அப்படி வாசல்ல நின்னீங்கன்னா நனைஞ்சிடுவீங்க.. இப்படி உள்ள வந்து நில்லுங்க.." உள்ளே இருந்தவர் அழைத்தார். அவர்தான் கடையின் முதலாளியாக இருக்கக் கூடும்.

"இல்லண்ணே... பரவாயில்ல.. கால்ல ஷூ போட்டிருக்கேன்.. நீங்க வேலை பாக்குற எடம்.."

"அதனால என்ன தம்பி.. எல்லாம் நம்ம மனசுதான்... மனுஷனத்தான் முதல்ல மதிக்கணும்.. சும்மா உள்ள வாங்க.."

டைக்கு உள்ளே போய் நின்று கொண்டேன். ஒரு பெரிய அறை. அதன் முக்கால்வாசி இடத்தை வெங்காய மூட்டைகளும், பூண்டு மூட்டைகளும் அடைத்துக் கொண்டிருந்தன. ஒரு டேபிள், சேர். அதன் மேலே கொஞ்சம் சாமி படங்கள். பக்கத்திலேயே ஒரு எடை போடும் எந்திரம்.

"நீங்க ...... ஸ்கூல்லையா தம்பி வேலை பாக்குறீங்க?" அவர் கேட்டபோது தான் நான் கழுத்தில் கிடக்கும் அடையாள அட்டையை இன்னும் கழட்டவில்லை என்பதையே கவனித்தேன்.

"இல்லண்ணே.. நான் காலேஜ்ல வேலை பாக்குறேன்.. ஸ்கூல், காலேஜ் எல்லாமே ஒரே நிர்வாகம்தான்.."

"ஏன் கேட்டேன்னா தம்பி.. எம்பிள்ளைங்க ரெண்டும் உங்க ஸ்கூல்லதான் படிக்குதுங்க.. அதுக்காக கேட்டேன்.."

"அப்படியா.. சரிங்கண்ணே..." சிரித்துக் கொண்டே மழையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அப்போது ஹோவென சத்தம் போட்டவாறே ஒரு சிறுவர்கள் கூட்டம் சைக்கிள் டயரை உருட்டியபடிக்கு மழையில் ஆடிக் கொண்டே போனார்கள். அடித்து ஊற்றும் மழையை அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

"கொடுத்து வச்சவங்க.. இல்லையா தம்பி..?"

"கண்டிப்பாண்ணே..வாழ்க்கைல வளரவே கூடாது.. எப்பவும் சின்னப் பசங்களாவே இருந்துடணும்.."

"அப்படி எல்லாம் இல்ல தம்பி..” பெருமூச்சு ஒன்று அவரிடம் இருந்து வெளிப்பட்டது. “எல்லாம் சூழ்நிலையைப் பொறுத்துதான்.. என்னோட பிள்ளைங்களுக்கும் இந்த வயசுதான்.. ஆனா அதுங்க இந்த மாதிரி ஆடிப் பாடி சிரிச்சு விளையாண்டு நான் பார்த்ததே இல்ல.. நாமதான் வியாபாரத்துக்கு வந்துடோம்.. நம்ம பிள்ளைங்களாவது நல்லா படிக்கட்டும்னு பெரிய ஸ்கூல்ல சேர்த்து விட்டா அவங்க பிள்ளைங்கள செக்கு மாடா ஆக்கிட்டாங்க.. காலைல எட்டுல இருந்து சாயங்காலம் அஞ்சு வரைக்கும் ஸ்கூல்.. ஸ்கூல் விட்டு வந்தவுடனே டியூஷனுக்குப் போயிட்டு ஒன்பது மணிக்குத்தான் வரும்ங்க.. அதுக்கு அப்புறம் கொஞ்சம் டிவி.. தூங்கிடும்ங்க... இதுதான் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு தம்பி.."

நான் ஏதும் பேசாமல் அவர் முகத்தை பார்த்தேன். அதில் ஒரு சின்ன வேதனை இருந்தது. அவரே தொடர்ந்தார்.

"ஏதோ ஏன் வீட்டுக்காரம்மா இருக்குற தைரியத்துலதான் தம்பி என் பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு.. அது பொறுமையா பிள்ளைங்கள பார்த்துக்குரதாலத்தான் நான் நிம்மதியா இருக்கேன்.. பிள்ளைங்க கூட சேர்ந்து வெளிய கொள்ள போக முடியல.. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் அதுங்களுக்கு லீவு.. ஆனா அன்னைக்கு நான் லைனுக்கு போனாத்தான் கலெக்ஷன்... யாருக்காக சம்பாதிக்கிறோமோ, அவங்க கூட சந்தோஷமா இருக்க முடியாட்டி எதுக்கு இந்த வாழ்க்கைன்னு ரொம்பக் கோபமா வருது தம்பி.."

எளிமையாக அவர் பேசினாலும் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை என்னை சுட்டது.

"ஏதோ உங்க கிட்ட பேசணும்னு தோணுச்சு தம்பி.. தப்பா எடுத்துக்காதீங்க.."

"அய்யய்யோ.. என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க... உங்க கூட பேசுனதுல எனக்கும் சந்தோஷம்தாண்ணே .."

அவர் முகம் கொஞ்சம் தெளிவு அடைந்தது. மழை கொஞ்சம் சிறுத்திருக்க எனக்குத் தேவையான வெங்காயத்தை வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

"இருங்க தம்பி.. மழைல நனையாமப் போங்க.." என்று சொல்லியவாறே அவருடைய ஹெல்மட்டைக் கொடுத்தார். "நேரம் கிடைக்குறப்ப திருப்பிக் கொண்டு வந்து கொடுங்க.." நன்றி சொல்லி வாங்கிக் கொண்டேன்.

னதுக்குள் அந்த மனிதர் சொன்ன விஷயங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. இந்த வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் தான் என்ன? வாழ்க்கையை நாம் துரத்திக் கொண்டிருக்கிறோமா அல்லது வாழ்க்கை நம்மை துரத்துகிறதா? மழைத்துளிகள் முகத்தில் அறைய வண்டியைக் கிளப்பினேன்.

9 comments:

மேவி... said...

யோவ் கல்யாணத வைச்சுகிட்டு, பதிவு எதுக்கு எழுதுறீரு ??? போய் ஆக வேண்டிய வேலைய பாருய்யா

குடுகுடுப்பை said...

கல்யாணத்துக்கப்புறம் பொண்டாட்டி துரத்தும்போது தெரியும்னேண்

திவாண்ணா said...

ரெண்டுமில்லை. ஓடிப்பிடிச்சு விளையாடிகிட்டு இருக்கோம்! சில சமயம் நாம ஜெயிக்கிறோம். சில சமயம் அது..... :-))

mohamed salim said...

வாழ்க்கை நம்மை துரத்துகிறதா? மழைத்துளிகள் முகத்தில் அறைய வண்டியைக் கிளப்பினேன்.

விதியின் கைகள் எழுதி செல்லும் எல்லாம் அவரவர் மனநிலையை பொறுத்தது

gauss said...

Sorry that I am writing in English but I think that this is a feeling that everyone who is not living the way he wants is going to feel one day or the other in his/her life. If a person has decided that this is what he/she is going to do then he/she has to stick to that decision and there is no room for such laments. If he/she regrets his/her decision then he/she has all the powers to change his/her path. Neither does life chase you nor are you chasing life, it is about how you want to live your life and pursuing it.

muthukumaran said...

நல்ல கதை... உங்கள் இல்வாழ்க்கை இனிமையாக அமைய என் வாழ்த்துக்கள்..

கிருஷ்ணா வ வெ said...

இன்றைய உண்மை நிலை.
வருத்தபடதான் முடிகிறது.

உங்கள் திருமணத்திற்கு எனது உள்ளம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

KSGOA said...

இனிய இல்லற வாழ்க்கைக்கு மனம்
நிறைந்த வாழ்த்துகள்!!!!!

gannenbabb said...

Seminole Hard Rock Hotel and Casino - Mapyro
Find the Seminole Hard Rock Hotel 상주 출장안마 and 울산광역 출장샵 Casino in Robinsonville, MS. See activity, search 용인 출장샵 for 구미 출장마사지 travel 과천 출장샵 deals, and discounts online.