June 29, 2012

உதிரிப்பூக்கள் - 14

கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் பேருந்து. நண்பர் ஒருவரின் கல்யாணத்தில் கலந்து கொண்டு விட்டு தனிப்பட்ட அலுவல்களுக்காக சென்னை கிளம்ப வேண்டிய சூழல். திருமணத்திற்கு வந்திருந்த மற்றொரு நண்பர் தனக்கும் சென்னையில் வேலையிருப்பதாக உடன் சேர்ந்து கொள்ள இருவருமாகக் கிளம்பினோம். மட்ட மத்தியானம் பனிரெண்டு மணிக்கு நாங்கள் வண்டிக்குள் ஏறியபோது கிட்டத்தட்ட மொத்தப் பேருந்தும் காலியாக இருக்க வசதியான இடமாகப் பார்த்து அமர்ந்து கொண்டோம்.

எங்களுக்கு முன்சீட்டில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அதிகபட்சம் முப்பத்தைந்து வயதிருக்கலாம். பார்த்தவுடன் சட்டென்று ஈர்த்துக் கொள்ளக்கூடிய அழகு. ஆனால் அவரது முகத்தில் சின்னதொரு குழப்பம் தேங்கியிருந்தது. அத்தோடு அவர் அணிந்திருந்த ஆடைகள் எல்லாம் நெகிழ்ந்திருக்க வேறெங்கோ தொலைந்தவர் போல அமர்ந்திருந்தார். அவ்வப்போது தனது மொபைலை அருகில் இருப்பவர்களிடம் கொடுத்து ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு பெண் தனது அலைபேசியை இத்தனை பகிரங்கமாக மற்றவர்களிடம் தருகிறாரே என்று எங்களுக்கு குழப்பம். ஒரு மாதிரியான பெண்ணாக இருப்பாரோ அல்லது சற்றே மனநலம் குன்றியவரோ என எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

ண்ருட்டி அருகே ஒரு மோட்டலில் மதிய உணவுக்காக பேருந்து நின்றபோது மணி நான்கு. நாங்கள் இருவரும் உள்ளே சென்று வாய்க்கு விளங்காத தோசை இரண்டை பிய்த்துப்போட்டு வந்தபோது அந்த பெண்மணி அருகிலிருந்த கடையில் ஏதோ வாங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பற்றிப் பேசிச் சிரித்தபடி இருவரும் பேருந்துக்குள் ஏறினோம். வண்டி கிளம்பியபின்னரே வேகவேகமாக ஓடி வந்து ஏறியவரைப் பார்த்து ஏன் இவர் இத்தனை வினோதமாக நடந்து கொள்கிறார் என ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நண்பருக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.

சவுதியில் இருக்கும் நண்பரின் சகோதரர் அழைத்திருந்தார். பேச்சுவாக்கில் நண்பர் ஊரெல்லாம் எப்படி இருக்கிறது என சவுதி பற்றி விசாரிக்க முன்னாலிருந்த பெண்மணி இப்போது எங்களை ஆர்வமாகப் பார்ப்பதை நான் கவனித்தேன். நண்பர் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்த அந்தப் பெண் சட்டென்று நண்பரிடம் பேசினார்.

உங்களுக்கு சவுதில யாரையும் தெரியுமா சார்? ஊரெல்லாம் எப்படி? நானெல்லாம் அங்க போனா நிம்மதியா இருக்க முடியுமா..

யாரென்று தெரியாதவர் தானாக வழுவில் வந்து பேசுகிறாரே என்று எங்களுக்குக் குழப்பம். அவரோ எதையும் கவனிக்காமல் தொடர்ச்சியாக சவுதி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். நண்பரும் சில வருடங்கள் சவுதியில் இருந்திருந்தபடியால் ஊரைப் பற்றி அந்தப் பெண்மணிக்கு பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தார்.

ல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டபின்பு அந்தப்பெண் தன்னைப் பற்றிச் சொன்னார். ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவராம். கும்பகோணம் அருகே இருக்கும் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் உத்தியோகம் பார்க்கிறார் போல. கணவருக்கு இன்ஸ்பெக்டர் வேலை. ஒரே மகன் சென்னையில் இறுதி ஆண்டு பொறியியல் படிப்பில் இருக்கிறான். இவர் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்ப்பதால் வார இறுதிகளில் சென்னை சென்று குடும்பத்தோடு இருப்பது வழக்கமாம். அவர் ஆசிரியர் என்று சொன்னதுதான் தாமதம். நண்பர் என்னைப் பார்த்து ரகசியமாகச் சிரித்தபடி அந்தப்பெண்ணிடம் சொன்னார்.

இவரும் வாத்தியார்தான். காலேஜ்ல.. இப்போத்தான் முனைவர் படிப்பு படிச்சுக்கிட்டு இருக்கார்.

அப்படியா சார்? ரொம்ப சந்தோசம். உங்களுக்குத் தெரியாதா என்ன? நானாவது ஸ்கூல்ல இருக்கேன். நீங்க காலேஜ். உங்களுக்குத் தெரியாததா.. எத்தனை அரசியல் இருக்கும் தெரியுமா இந்த முனைவர் பட்டம் வாங்குறதுக்குள்ள..

அவர் தொடர்ச்சியாகப் பேசியபடியே இருந்தார். தான் பட்ட கஷ்டங்கள், உடன் வேலை பார்க்கும் மக்களின் பொறாமை, பல்கலையின் இழுத்தடிப்பு.. நிறுத்தாமல் அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அது நெருடலாக இருக்கவில்லை. ஒரு சிறுபிள்ளை கதை சொல்லுவது போல அத்தனை ஆவலுடன் சொல்லியபடியே இருந்தார். அந்நிய மனிதர்களிடம் பேசுகிறோம் என்கிற எந்த உணர்வும் இல்லாமல் அவர் பேசிக் கொண்டிருந்தது அவர் மீது எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் உண்டு பண்ணியிருந்தது. இன்றைக்கு ஊர் போய்ச் சேர பொழுதுபோக்கிற்கு ஆள் கிடைத்தாயிற்று என்பதாக அவர் பேசுவதைக் கவனித்தபடி இருந்தோம். அவருக்குத் தெரிந்த தோழி ஒருவர் சவுதியில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இருந்தார் என்பதாலேயே எங்களிடம் சவுதி பற்றி விசாரித்ததாகக் கடைசியாகச் சொன்னார். எல்லாம் கேட்டுவிட்டுப் பொறுமையாகச் சொன்னேன்.

உங்களுக்கு பணம் பெரிசாத் தேவையில்லைன்னா நீங்க இப்பப் பார்த்துக்கிட்டு இருக்குற வேலையை விடாதீங்க மேடம். இதுவும் கவர்மெண்ட் வேலைதானே? அதனால இதுலயே இருக்கலாம். எங்கேயோ ஒரு நாட்டுல ஊர் பேர் தெரியாம யாருக்காக சம்பாதிக்கிறீங்களோ அவங்களை விட்டு விலகிக் கிடக்குறது நல்லாவா இருக்கும்? அதை விட முக்கியம்.. உங்களை மாதிரி திறமையானவங்க கிராமப்புற பள்ளிகள்ள இருக்க மாணவர்களுக்கு செய்யுற சேவைதான் பெரிசு. அந்தப் பிள்ளைங்க பெரிய கல்லூரிகள்ல சேர்ந்து உற்சாகமா உங்கக்கிட்ட வந்து நன்றி சொல்றதை விட என்ன பெரிய சந்தோசம் வாழ்க்கைல கிடைக்கப் போகுது?

ஆமாம் என்பதாக சந்தோசமாகத் தலையை அசைத்தவர் நீங்க சொல்றது சரிதான் சார் நான் இங்கேயே இருந்துடப் போறேன் என்று ஒரு குழந்தையின் குதூகலத்துடன் சொன்னார். நிமிடத்துக்கு நிமிடம் சட்டென்று மாறும் அவருடைய மனநிலை எனக்கு சுத்தமாகப் புரிபடவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று சிரித்து வைத்தேன்.

ற்று நேரம் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென ஏதோ ரகசியம் பேசுவது போல என்னை அருகில் வரும்படி அழைத்தார். நான் அவர் அருகே நகர்ந்தேன்.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நான் இன்னைக்கு சென்னை போறது எங்க வீட்டுல யாருக்கும் தெரியாதே..

சிரித்தபடி சொன்னவரை நான் அதிர்ச்சியாகப் பார்த்தேன். பேருந்து சென்னையை அடையும்போது எப்படியும் இரவு பத்து மணியாகி விடும். அந்நேரத்துக்கு மேல் இவர் எங்கே போவார்? என்ன சொல்கிறார் இவர்?

என்னோட ஸ்கூல்ல படிச்ச ஃபிரெண்டு ஒருத்தி அமெரிக்காவுல இருந்து வந்திருக்கா சார். அவளைப் பார்க்கத்தான் போய்க்கிட்டு இருக்கேன். என் வீட்டுல சொன்னா அவர் அலோ பண்ண மாட்டாரு. அதான் சொல்லாமப் போய்க்கிட்டு இருக்கேன்.

நான் ஏதும் பேசாமல் இருக்க அவரே தொடர்ந்தார்.

கல்யாணம் ஆனப்போ எனக்கு பதினேழு வயசு சார். அவ்வளவா விவரம் இல்லாத வயசு. அவர்தான் எனக்கு எல்லாம்னு இருந்தேன். அவரும் நல்லவருதான். ஆனா ரொம்ப பொசசிவ் டைப் சார் அவரு. நான் வேற யார்கூடயும் பேசிறக்கூடாது. உடனே கோபம் வந்திரும். என்னையப் போட்டு அடிப்பாரு. உன்னோட அன்பு எல்லாம் மொத்தமா எனக்குத்தான். வேற யாரும் இருக்கப்போய்த்தானே நீ அவங்க கூட பழகுறன்னு சொல்லி யார்கூடவும் அண்ட விட மாட்டாரு. எங்க அம்மா அப்பாக்கிட்ட கூட பேச வேண்டாம்னு சொல்லிட்டாருன்னா பாருங்க. நானும் அப்படியே இருந்து பழகிட்டேன். ஒருநாள் எங்கம்மா எல்லாத்தையும் மீறி வீட்டுக்கு வந்திருந்தாங்க. நான் அவங்க மடியில படுத்துட்டு இருக்குறதை அவர் பார்த்துட்டாரு. மறுநா அம்மா போன பிறகு என்ன பண்ணினாரு தெரியுமா..

பேசிக்கொண்டே இருந்தவர் தனது இடைச்சீலையை சற்றே நகர்த்திக் காட்ட நாங்கள் அதிர்ந்து போனோம். நீளக்கோடு போல சூடு போட்ட மிகப்பெரிய தழும்பு அங்கே இருந்தது. அந்த மனிதரின் ரவுத்திரம் ஒரு புறம் என்றால் இந்தப்பெண் இத்தனை வெட்ட வெளிச்சமாக நம்மிடம் ஏன் இதை எல்லாம் சொல்ல வேண்டும் என்கிற அதிர்ச்சி ஒரு புறமுமாக நானும் நண்பரும் பேச்சற்று அமர்ந்திருந்தோம்.

இப்படித்தான் சார் ஏதாவது அறிவில்லாம செஞ்சிடுவாரு. அப்புறம் கெடந்து சாரி சாரின்னு கெஞ்சிக்கிட்டு இருப்பாரு. ஏதோ பொம்பளைப் பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல்ங்கிறதால என்னை வேலைக்கு விட்டுருக்கார். இல்லைனா அவ்ளோதான். இதுல ஃபிரெண்டு வர்றா பாக்கப்போறேன்னு சொன்னா என்னை விட்டுட்டுத்தான மறுவேலை பாப்பாரு. அதான் சொல்லாமப் போறேன். அவர்கிட்ட நாளைக்குத்தான் கும்பகோணத்துல இருந்து வர்றேன்னு சொல்லி இருக்கேன். எனக்கு ரொம்ப தைரியம்தான். இல்லை சார்?

நானும் நண்பரும் சங்கடமாக சிரித்து வைத்தோம். பேச்சை மாற்றுவோம் என நண்பர் அவரிடம் கேட்டார். ஸ்கூல் நேரம் போக மத்த நேரம் ஹாஸ்டல்ல என்னங்க பண்ணுவீங்க? இதைக் கேட்டபோது அந்தபெண்ணின் கண்களில் ஒரு ஒளி தோன்றி மறைந்தது.

உங்கக்கிட்ட ஒரு விசயம் சொல்லலையே? நான் நல்லாப் பாடுவேன் சார். ஹாஸ்டல்ல ஒரு வீணை வச்சிருக்கேன். அதுதான் என்னோட ஒரே ஃப்ரெண்டு. மனசு சந்தோசமா இருந்தாலும் சோகமா இருந்தாலும் நமக்கு பாட்டுத்தான் சார் எல்லாமே. இப்போ ஒரு பாட்டு பாடட்டுமா..

நாங்கள் என்ன ஏதென்று சொல்வதற்குள் அவர் கண்களை மூடி ஹம் பண்ண ஆரம்பித்து இருந்தார். தன்னுடைய கட்டுப்பாட்டில் அவர் இல்லை என்பது போலாக கண்கள் செருகி இருந்தன. சற்று நேரத்தில் இனிமையான குரலில் அற்புதமாகப் பாடத் தொடங்கினார். இரவும் நிலவும் வளரட்டுமே... எங்களைத் தவிர்த்து பேருந்தில் இருந்த வெகு சிலரும் என்ன இது என்பதாக அவரைப் பார்த்தபடி இருந்தார்கள். தன்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்கிற எந்தப் பிரஞ்கையும் இல்லாமல் அவர் பாடிக் கொண்டிருந்தார். பாடல் முடிந்தபோது எங்களையும் அறியாமல் நாங்கள் கைகளைத் தட்டிக் கொண்டிருந்தோம். அவருடைய குரல் அத்தனை அருமையாக இருந்தது.

ரொம்ப அற்புதமாப் பாடுறீங்க.. சான்சே இல்லைங்க..

அதனாலத்தாங்க அவர் என்னைப் பாடக்கூடாதுன்னு சொல்லிச் சொல்லி அடிப்பாரு. பத்து வருசம் கழிச்சு வெளியாளுங்க முன்னாடி நான் பாடுறது இதுதான் முதல் தடவை தெரியுமா... ரொம்ப நன்றிங்க..

இதைச் சொன்னபோது அவரது கண்களில் நீர் கோர்த்திருந்தது. நான் இன்னும் கொஞ்சம் பாடட்டுமா என்றவரிடம் சரி என்றோம். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அருமையான பழைய பாடல்களைப் பாடியபடி வந்தவர் வெகுநேரம் கழித்தே ஆசுவாசமானார்.

ந்தப்பயணத்துல இப்படி ஒரு மனுசியைச் சந்திப்போம்னு நினைச்சுக்கூடப் பார்க்கலீங்க என்றார் நண்பர். ஆமாங்க, நல்லாப் படிச்சு இருக்கீங்க. வாழ்க்கைல கஷ்டப்பட்டாலும் இன்னைக்கு சமூகத்துல ஒரு கவுரமான இடத்துக்கு வந்திருக்கீங்க. இனியாவது உங்களுக்கு பிடிச்சமான விசயங்களை செஞ்சுக்கிட்டு நல்லா சந்தோசமா இருக்க முய்ற்சி பண்ணுங்க என்று அவரிடம் சொன்னேன். பதிலுக்கு அவர் விரக்தியாய் சிரித்தபடி சொன்னார்.

சந்தோசமாவா.. இந்த சமூகம் விடும்னா நினைக்கிறீங்க.. ஒரு பொண்ணு சங்கடத்துல இருந்தா அதை எப்படி பயன்படுத்த முடியும்னு தான் சார் இந்த உலகம் பார்க்கும். போன வருசம் எங்க ஸ்கூலுக்கு ஒரு சீஃப் ஆபிசர் வந்திருந்தார். என்னை விடப் பத்து வயசு சின்னப்பையன் தான். ஸ்கூல் பத்தி நான் கொடுத்த பிரசெண்டேஷன் அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நம்ம டவுன் ஸ்கூலுக்கும் இதே மாதிரி ஒண்ணு ரெடி பண்ணனும்னு சொல்லி என்னைக் கூப்பிட்டார். சரின்னு நானும் போனேன்.

ராத்திரி ஏழு மணிக்கு மேல காட்டு வழில கார்ல போய்க்கிட்டு இருக்கோம். அவர் ஓட்டிக்கிட்டு வர நான் பக்கத்துல உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கேன். திடீர்னு பார்த்தா ஏசியோட அளவு ஏகமாக் கூடுது. பயங்கரக் குளிர். என்னமோ பேசிக்கிட்டே இருந்தவரு சட்டுன்னு என் கையப் பிடிச்சுக்கிட்டாரு. எனக்கு ஒண்ணும் புரியலை. ஆனா கொஞ்சம் சந்தோசமா இருந்தது. அதுக்கப்புறம் அவரோட பேசுறதுக்கு ஒரு செல்போன் வாங்கித் தந்தாரு. கொஞ்ச நாள் சந்தோசமாப் பேசிக்கிட்டு இருந்தோம். என்னோட கஷ்டங்களை எல்லாம் பகிர்ந்துக்க நான் சாஞ்சுக்க ஒரு தோள் கிடச்சாச்சுன்னு சந்தோசமா இருந்தேன்.

ஆனா அவன் அப்படி மட்டும் நினைக்கலைன்னு பிறகுதான் தெரிஞ்சுது. எப்பப் பேசினாலும் ரூம் போடலாமான்னுதான் கேப்பான். நான் என்னோட வலிகளை பகிர்ந்துக்கணும்னு சொன்னா ஒதுங்கிப் போயிடுவான். ஒரு கட்டத்துல எனக்குப் புரிஞ்சு போச்சு. நான் அவனை முழுசா நேசிச்சேன். ஆனா அவன் என் உடம்பு மேல தான் குறியா இருந்திருக்கான். அவனைச் சும்மா விடக்கூடாது. அன்னைக்கு நடந்தது ஒரு கனவுதான்னு முடிவு பண்ணினேன். அந்த ராத்திரில அவன் எனக்கு முத்தம் கொடுத்தது ஒரு அம்மாவுக்கு குழந்தை குடுத்த மாதிரி இருந்துட்டுப் போகட்டும். ஏண்டா தேவுடியா பையா.. உனக்கு உடம்பு வேணும்னா யாருக்கிட்டயாவது போறதுதானே? எதுக்குக் காதல்னு சொல்லி என்னை ஏமாத்தணும். அவனைத் தலை முழுகினதோட சரி.. அதுக்கப்புறம் யாரையும் நம்புறது கிடையாது சார்...

சரசரவென மழை பெய்வது போல அவர் சொல்லி முடித்தபோது நானும் நண்பரும் பேய் அறைந்தது போல அமர்ந்திருந்தோம்.

ரொம்ப சந்தோசமா இருக்கு சார். என் மனசுல இருக்க கசட எல்லாம் யாருகிட்டயாவது சொல்லி அழாம உள்ளயா வெச்சு வெந்து போயிருப்பேன். ஆனா நல்லவேளையா இன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தேன். ஒரு பொண்ணுக்கு தனியா மனசு இருக்குனு என்னை மதிச்சு யாரோ ஒருத்தி பேசுறதை நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் கேட்டதே பெரிசு சார். நாம எல்லாரும் ஒரே வேவ்லென்த்ல இருக்குறதால நீங்க என்னைப் புரிஞ்சுக்கிட்டீங்க. உங்ககிட்ட என் பாரம் எல்லாம் எறக்கி வச்சுட்டேன்னு நிம்மதியா இருக்கு சார்..

ங்களுக்கு அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவருடைய எல்லா செயல்களையும் சரி என்று சொல்ல முடியாதென்றாலும் அவருடைய நிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே அவருடைய செயல்களுக்கான நியாயம் புரியவரும். அவருடைய சூழல் அவரை இதை எல்லாம் செய்ய வைத்திருக்கிறது என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க பேருந்து நிலையம் வந்து விட்டது. எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டதோடு அவரும் இறங்க உதவி செய்தோம். ரொம்ப அயர்ச்சியாக இருப்பதால் ஒரு காபி வாங்கித் தர முடியுமா எனக்கேட்டார். கேண்டினில் போய் காபி வாங்கிக் கொண்டு வந்தேன். ஏதும் பேசாமல் மெதுவாக அதை அருந்தி முடித்தவர் கிளம்பினார்.

போயிட்டு வர்றேன். கடைசி வரைக்கும் என் பேரைக் கூட நீங்க கேக்கலை பாருங்க.. ரொம்பப் பெருமையா இருக்கு சார். பிரயாணத்துல பார்த்தோம். பேசுனோம். சந்தோசமா அப்படியே பிரிஞ்சுடலாம். வர்றேன் சார்..

எங்களை நீங்கி அந்தப்பெண் நடக்கத் தொடங்கினார். காருக்குள் நடந்த சம்பவத்தைக் கேட்டபின்பு அவருடைய அலைபேசி எண்ணை வாங்கலாமா என் எனக்குத் தோன்றியதை அவரிடம் கூப்பிட்டு சொல்லலாமா என்று நினைத்தேன். வேண்டாம். யாரேனும் ஒரு சிலராவது அவருடைய உலகத்தில் நல்லவராக இருக்கட்டும் எனத் தோன்ற அமைதியாக நின்றிருந்தேன். அவர் பேருந்து நிலையத்தில் ஜனத்திரளுக்குள் நுழைந்து காணாமல் போனார்.

4 comments:

கிருஷ்ணா வ வெ said...

மனதை நெகிழ வைத்து விட்டது தலைவரே.
இப்படியும் சில மனிதர்கள்.

கோவை நேரம் said...

நெகிழ்வாய் இருக்கிறது

Robert said...

காருக்குள் நடந்த சம்பவத்தைக் கேட்டபின்பு அவருடைய அலைபேசி எண்ணை வாங்கலாமா என் எனக்குத் தோன்றியதை அவரிடம் கூப்பிட்டு சொல்லலாமா என்று நினைத்தேன்.//
இதை நேர்மையாய் எழுதுவதற்கு தைரியம் வேணும் பாஸ்..

மேவி... said...

கிளாஸ் ...