பெருந்துறையில் வேலை பார்க்கும்போது என்னிடம் பயின்றவன் ரவிபிரகாஷ். தில்லியைச் சேர்ந்தவன். பொறியியல் என்பது படிப்பதல்ல கற்பது என்பதில் தீவிர நம்பிக்கை உடையவன். படிப்பு என்பதைத் தாண்டியும் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் ஆல் இந்தியா ரேடியோவில் அவனது வயலின் கச்சேரி கண்டிப்பாக இருக்கும். கல்லூரி ஆண்டுவிழா ஒன்றின்போது நானும் ரவியும் இணைந்து மாணவர்களின் நட்பைப் பற்றிய பாடல் ஒன்றை உருவாக்கினோம். அதிலிருந்து அவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவனாக மாறிப்போனான்.
கல்லூரி முடிந்து வெளியேறிப் போனபின்பாக ரவியோடு பெரிதாகத் தொடர்பு இல்லாமல் போனது. நானும் மதுரைக்கு வேறொரு கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தேன். திடீரென ஒரு நாள் அவனிடமிருந்து அழைப்பு வந்தது.
“நல்லா இருக்கியாடா..”
“நல்லா இருக்கேன் சார்.. நீங்க எப்படி இருக்கீங்க..”
“ரொம்ப நல்லா இருக்கேன். என்ன ரவி பண்ணிக்கிட்டு இருக்க..” அவன் படிக்கும்போதே இன்ஃபோசிஸில் வேலை கிடைத்திருந்தது. கண்டிப்பாக பெரிய பொறுப்புக்கு வந்திருப்பான் என்பது எனது நம்பிக்கை.
“தில்லிலதான் சார் இருக்கேன். இங்க ஒரு ஸ்கூல்ல பிசிக்ஸ் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.. ”
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கிடைத்த நல்ல வேலையை விட்டு விட்டு இவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவனிடம் கேட்கவும் செய்தேன்.
“நீங்கதான சார் அடிக்கடி சொல்வீங்க. மனசுக்குப் பிடிச்ச வேலை பாக்குற மாதிரி சந்தோசம் வேற எதுவும் கிடையாதுன்னு. சாஃப்ட்வேரை விடவும் எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. சாலஞ்சிங்கான வேலை. பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போதுதான் என் மனசுக்கு திருப்தியா இருக்கு. அதான் சார்.. பொருளாதார ரீதியா எனக்குப் பெரிய தேவைகள் இல்லாததனால ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. ”
நான் அமைதியாக இருந்தேன். ஆனால் அவன் சொன்னதைக் கேட்டபோது மனதுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. “பெருமையா இருக்குடா.. வேற என்ன சொல்றதுன்னு தெரியலை..”
“இருங்க சார்.. இன்னும் இருக்கு...” அவனுடைய மழலை கொஞ்சும் தமிழில் சொன்னவனுடைய குரலில் உற்சாகம் மிகுந்து வழிந்தது. “நேத்திக்கு எங்க பள்ளியில ஆண்டு விழா. இந்த வருடத்துக்கான சிறந்த ஆசிரியராக என்னைத் தேர்வு செஞ்சிருக்காங்க. ஆனா சத்தியமா அது என்னோட விருது கிடையாது சார். உங்களோடது.. that one is for you sir.. நீங்க இல்லைன்னா நான் கண்டிப்பா இங்க வந்திருக்க மாட்டேன். ரொம்ப நன்றி சார்..”
என்னுடைய கண்கள் கலங்கி இருந்தன. வாழ்வில் இதை விடப் பெரிதாக வேறென்ன கேட்டுவிட முடியும்? இது மாதிரியான தருணங்கள்தான் என்னை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாக நம்புகிறேன். சில சமயங்களில் மனம் கிடந்து அலைபாய்ந்தபடி இருக்கும். யாருமற்ற வெளியில் தான் மட்டும் தனித்து விடப்பட்டதென உணரும். ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் பெரும் தவறு செய்து விட்டோமோ? உடன் படித்தவர்கள் எல்லாம் பெரிய வேலையிலும் வெளிநாட்டிலும் வசதியாய் இருக்க நான் மட்டும் ஏன் இப்படி பொருளாதார ரீதியாகவும் பின் தங்கி விட்டேன் என்றெல்லாம் கேள்விகள் எழ மனம் ஆழ்ந்த துயரத்தில் விசனப்படும். அப்போதெல்லாம் எங்கிருந்தாவது வந்து சேரும் இதுபோன்ற மாணவர்களின் அன்புதான் என்னை மீட்டுக் கரைசேர்ப்பதாக இருந்திருக்கிறது.
இன்றுவரைக்கும் என்னால் மாணவர்களுடன் மட்டும்தான் நெருக்கமாக இருக்க முடிந்திருக்கிறது. உடன் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு, முகத்துக்கு முன் முதுகுக்குப் பின் என இரண்டு முகங்கள் இருப்பது போல, மாணவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களைப் பொருத்தவரைக்கும் பிடித்து விட்டால் இறுதி வரைக்கும் மறக்க மாட்டார்கள். பிடிக்கவில்லையென்றால் தலைகீழாய் நின்றாலும் வேலைக்கு ஆகாது. பெரும்பாலும் மாணவர்களோடு நம்முடைய அலைவரிசை ஒத்துப்போவதால் நமக்கு அவர்களோடு ஒட்டிக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. பெருந்துறையில் ஆண்டு விழாவின் போது நான் மேடையேறிப் பேசப் போக மாணவர்கள் விசிலடித்து களேபரம் செய்து இந்த அளவுக்கு மாணவர்களோடு பழகக்கூடாது என முதல்வர் திட்டுமளவுக்கு அந்த நெருக்கம் இருந்திருக்கிறது.
படித்து முடித்த இரண்டே மாதங்களில் கொடைக்கானலில் வேலைக்கு சேர்ந்து விட்டேன். ஆசிரியர் வேலை மீதிருந்த மதிப்போடு எப்போதும் மாணவர்களோடு ஒருவனாய் இருப்பது மனதை உற்சாகமாய் வைத்திருக்கும் என்பதும் நான் அந்தப் பணியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள். அப்போதெல்லாம் பொறுப்பு பற்றிய அக்கறை ஒன்றும் எனக்குக் கிடையாது. அங்கிருந்த மாணவர்களுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான் என்பதால் ஆட்டம்பாட்டம்தான் வேலை என்பதாக இருந்தது என் மனநிலை.
கோடை கல்லூரியில் இரண்டாம் வருட மாணவர்களுக்கு நான் வகுப்பாசிரியர். ஒருநாள் அந்த வகுப்பில் படிக்கும் பெண் ஒருவருடைய தந்தை என்னைப் பார்க்க வந்திருந்தார். குறைந்தபட்சம் ஐம்பது வயதிருக்கக்கூடிய அந்த மனிதர் நான் சென்றவுடன் சட்டென்று எழுந்து நின்று என்னை வணங்கவும் செய்தார். எனக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது. எங்கோ ஒரு ஊரில் நாங்கள் இருக்க எங்களுடைய பிள்ளையை உங்களை நம்பித்தான் விட்டுப் போகிறோம் ஒரு சகோதரன் என நீங்கள்தான் அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த சில நிமிடங்களை என்னால் வாழ்க்கைக்கும் மறக்க முடியாது. என்னுடைய பணியின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்ட தினம் அதுதான். என்னிடம் பாடம் படிக்கும் அத்தனை பிள்ளைகளும் என் நெருங்கின உறவுகள் எனும் உணர்வை எனக்குள் விதைத்தவர் அந்த மனிதர்.
என் வாழ்வில் மறக்க முடியாத பயணம் எதுவெனக் கேட்டால் கோடைக்கல்லூரி மாணவர்களோடு நான் போய் வந்த டூரைச் சொல்லுவேன். மூன்றாம் வருட மாணவர்கள் என் நண்பனோடு கோவா கிளம்பிப் போக நாமும் எங்காவது போவோம் என இரண்டாம் வருட மாணவர்கள் ஒரே அடம். பெண் பிள்ளைகள் வருவார்கள் என்பதால் யாராவது ஒரு ஆசிரியையும் கண்டிப்பாக வரவேண்டும் எனத் தாளாளர் சொல்லிவிட்டார். நான் வரமாட்டேன் என்று சொன்ன ஒரு அம்மாவை வெறுமனே பெயர் தந்தால் போதும் என சமாதானம் செய்து அனுமதி பெற்றுக் கிளம்பினோம்.
மதுரைக்குப் பேருந்தில் வந்து என் வீட்டில் இரவு உணவை முடித்துக் கொண்டு நாங்கள் மாட்டுத்தாவணிக்கு வந்தபோது மணி இரவு பனிரெண்டு. நானும் என் நண்பனும் என இரண்டு ஆசிரியர்கள், எட்டு மாணவிகள் மற்றும் பத்து மாணவர்கள். எங்கு போகிறோம் என்கிற எந்த முடிவும் இல்லை. கையிலும் பெரிய அளவில் பணம் இல்லை. அப்போது ஆபத்பாந்தவனாய் கைட் ஒருவர் வந்து சேர எல்லோரும் கன்னியாகுமரி நோக்கி வேனில் பயணமானோம்.
காலையில் எங்களுக்குப் பொழுது திற்பரப்பு அருவியில் விடிந்தது. முடியுமட்டும் ஆடி விட்டு அங்கிருந்து தொட்டிப்பாலம். காலை உணவை முடித்துக் கொண்டு பத்மநாபபுரம் அரண்மனை. மதிய உணவுக்கு எங்கள் கூட்டம் கன்னியாகுமரி வந்து சேந்திருந்தது. நேராகக் கடலில் போய் இறங்கினால் பயங்கர ஆட்டம். சற்றே பலமானவர்கள் எல்லாம் தரையில் மீது நின்று கொள்ள அவர்கள் மேலே ஏறும் ஒரு கூட்டம் என பிரமிடுகள் உருவாக்கி விளையாட ஆரம்பிக்க கடலிலிருந்த மொத்தக் கூட்டமும் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அங்கே ஆடி முடித்து பாறைக்குப் போய் விவேகானந்தருக்கு ஒரு ஹாய் சொல்லிக் கோவிலையும் பார்த்துத் திரும்பினால் அடுத்ததாக ஒரு பெரிய பிரச்சினை எங்கள் முன்பாக இருந்தது. எங்கே போய்த் தங்குவது?
அதற்கு விடை ராமகிருஷ்ண மட வடிவில் கிடைத்தது. மூன்று பெரிய அறைகளைக் கொண்ட ஹால் வெறும் நூற்றைம்பது ரூபாய் வாடகைக்கு. முதல் ஹாலில் ஆண்கள் இருந்து கொண்டு நடுவில் இடைவெளி விட்டு கடைசி ஹாலில் பெண்பிள்ளைகள் தங்கிக் கொண்டார்கள். காலை சூரிய உதயம் பார்த்து விட்டுக் கிளம்பி நேராக சுசீந்தரம். அங்கே தானுமாலையனை தரிசித்து அங்கிருந்து கிளம்பி திருவனந்தபுரம். மிருகக்காட்சி சாலையும் கோளரங்கமும் முடிந்து வேலிக்குக் கிளம்பிப் போய் மீண்டும் தண்ணீரில் ஒரு ஆட்டம். கடைசியாக நாங்கள் பத்மநாபசாமி கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தபோது நடை சார்த்தும் நேரம் நெருங்கி விட்டிருந்தது.
பையன்கள் எல்லாரும் துண்டு வேட்டி எனக் கட்டிச் சமாளித்து விட்டார்கள். ஆனால் பெண்பிள்ளைகள் என்ன செய்வது? உடைகள் மாற்றிக் கொண்டு வர நேரமானால் நடையைச் சார்த்தினாலும் சார்த்தி விடுவார்கள். சட்டென்று பிள்ளைகள் அனைவரையும் தங்களுடைய துப்பட்டாவையே எடுத்து இடுப்பில் அணியச் சொல்லி ஒருவாறாக சமாளித்து உள்ளே நுழைந்து விட்டோம். நன்றாக தரிசனம் பார்த்து விட்டு வெளியே வந்து ஒரு ரோட்டுக் கடையில் அருமையான இரவு உணவு. ஆடியபடியும் பாடியபடியும் அங்கிருந்து கிளம்பி மதுரை வந்து சேர்ந்தோம். போகும்போது சாராக இருந்தவன் திரும்பி வரும்போது அனைவருக்கும் அண்ணனாகிப் போயிருந்தேன். அதற்குப் பின்பாக எத்தனையோ கல்லூரி டூர்களுக்குப் போய் வந்திருந்தாலும் திக்கு திசை அறியாது சுற்றி வந்த அந்த இரண்டு நாட்களை என்னால் என்றும் மறக்க முடியாது.
மாணவர்கள் பற்றிப் பேசும்போது என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். “நல்லாப் படிக்குற அமைதியான பசங்களைப் பத்தி கவலைப்படத் தேவையில்லை கார்த்தி. அவங்க எப்படின்னாலும் நமக்கு நெருக்கமாத் தான் இருப்பாங்க. ஆனா எல்லா கிளாஸ்லயும் ஒரு சில அடங்காத பசங்க இருப்பாங்க பாருங்க. அவங்களத்தான் நாம நமக்குக் குளோசா மாத்த முயற்சி பண்ணனும். அதை செஞ்சுட்டா சாதிச்சுட்டீங்கன்னு அர்த்தம்..”
மதுரையில் வேலை பார்த்த சமயம். மெக்கானிக்கல் பாடப்பிரிவுக்கு நான் ஒரு வகுப்புக்குப் போக வேண்டும். அங்கே போகுமுன்பாகவே சக ஆசிரியர்கள் பயமுறுத்தத் தொடங்கி விட்டார்கள். “ மோசமான செட்டு சார். ஒரு எட்டு பசங்க குரூப்பா இருப்பானுங்க. யாரையும் மதிக்க மாட்டானுங்க. பார்த்து நடந்துக்கோங்க..”. அவர்கள் சொன்னதுபோலவே தான் அந்த மாணவர்களும் இருந்தார்கள். பாடம் நடத்தும்போது ஏதாவது தொல்லை கொடுப்பது, வகுப்புக்கு நேரத்துக்கு வரமாலிருப்பது எனத் தொடர்ச்சியாய் பிரச்சினைகள். “அப்படிச் செய்யாதீங்கப்பா... நேரத்துக்கு வரக்கூடாதா..”. நான் எல்லாவற்றையும் சின்னச் சின்ன வார்த்தைகளோடு தாண்டிப் போய் விடுவேன். பொதுவாகவே எனக்கு யாரையும் திட்டத் தெரியாது என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விசயம்.
முதல் பருவத் தேர்வில் அவர்கள் அனைவருமே எனது பாடத்தில் தேர்வு பெற்றிருக்கவில்லை. வகுப்பில் விடைத்தாள்களைத் தரும்போது ஒரே வார்த்தைதான் நான் அவர்களிடம் சொன்னது. “அடுத்த முறை நன்றாக எழுதுங்கள்..” இரண்டாவது தேர்விலும் இதே கதை. அத்தனை பேரும் தோற்றுப் போயிருந்தார்கள். இப்போதும் நான் அதையேதான் சொன்னேன். “அடுத்த முறை..” இது நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் எட்டு பேரும் என்னைத் தனியாக வந்து சந்தித்தார்கள். நான் அவர்களை ஏதும் சொல்லாதது அவர்களுக்கு அத்தனை ஆச்சரியமாக இருந்தது.
“நீங்க எங்களைக் கண்டமேனிக்குத் திட்டுவீங்கன்னு நினைச்சோம் சார்..”
“எதுக்குப்பா.. நீங்க சின்னப் பசங்களா.. உங்களைக் காட்டிலும் அதிகமா உங்க வாழ்க்கையப் பத்தி நான் கவலைப்பட்டுறப் போறேனா.. ஆனா ஒண்ணு.. எல்லாத்தையும் தாண்டி நீ வாழ்க்கைல நல்லபடியா வந்துட்டா கண்டிப்பா உன்னைக் காட்டிலும் அதிகமா சந்தோசப்படுறவனா நான் இருப்பேன்..”
நான் பேசி முடித்தபோது அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். பொறியியல் படிக்க விருப்பமில்லாது கல்லூரிக்கு வந்தவர்கள், கல்லூரியின் சட்டதிட்டங்கள் பிடிக்கவில்லை எனச் சொல்வதற்கு அவர்களிடம் அத்தனை விசயங்கள் இருந்தன. இதுநாள் வரைக்கும் அவற்றைக் கேட்க யாருமில்லை என்பதுதான் அவர்களுடைய பிரச்சினை. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு பொறுமையாக எடுத்துச் சொல்ல அமைதியாகக் கேட்டவர்கள் அதன் பின் மொத்தமாக மாறிப் போனார்கள். கல்லூரி முடியும்வரைக்கும் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள் இன்றைக்கு சமூகத்தில் மிக முக்கிய பணிகளில் நல்ல விதமாக செட்டில் ஆகி இருக்கிறார்கள்.
மாணவர்களுக்குப் பாடம் சொல்லுகையில் நடக்கும் கூத்துகளை வேறு யாராலும் மிஞ்ச முடியாது. நான் பாடம் நடத்தும்போது பெரும்பாலும் நடைமுறையில் இருந்து எடுத்துக்காட்டுகளைச் சொல்லுவேன். அது சொல்ல வரும் விசயத்தை அவர்கள் எளிதில் புரிந்து கொள்ள உதவும். ஆனால் அதிலும் கந்திரகோலம் செய்து வைக்கும் நண்பர்கள் உண்டு. ஒரு முறை மைக்ரோபிராசசர் பற்றி நடத்தும்போது இண்டரப்ட் எனும் பாடம் குறித்து விளக்க தபால்காரர் வீட்டுக்கு தபால் எடுத்து வரும் முறையைச் சொல்லி பாடத்தை நடத்தினேன். ஆனால் அதை அப்படியே புரிந்து கொண்ட ஒரு பிரகஸ்பதி பரீட்சையில் இப்படி எழுதி இருந்தது. “தபால்காரர் வீட்டுக்கு வருகிறார். வந்து உங்கள் வாசல் மணியை அடிக்கிறார். டிங் டிங். நீங்கள் கதவைத் திறந்து தபாலை வாங்கிக் கொண்டு கையெழுத்து போடுகிறீர்கள். அவர் சென்று விடுகிறார்.” கடைசி வரைக்கும் அதில் பிராசசர் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இதுதான் கதையை மட்டும் கேட்டு விட்டு கருத்தை கோட்டை விடுவதென்பது.
இது இன்னொரு கூத்து. அது ஒரு செய்முறை வகுப்பு. மோட்டார்கள் பற்றி பாடம் நடத்தி விட்டுக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.
“மோட்டார்ல எதுக்கு ஸ்டார்ட்டர் பயன்படுத்துறோம்?”
“சார்.. அது சார்... ஸ்டார்ட் பண்ண சார்..”
ஆகா. ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறார்கள். “அப்படி இல்லப்பா.. நீ ஒரு பொறியாளர். இந்த மாதிரி பொத்தம்பொதுவாப் பேசக் கூடாது. டெக்னிக்கலாப் பேசணும். புரிஞ்சுதா.. இப்போ சொல்லு.. எதுக்கு ஸ்டார்ட்டர்?”
“மோட்டாரை டெக்னிக்கலா ஸ்டார்ட் பண்ண சார்..”
இதற்கெல்லாம் எங்கு போய் முட்டிக் கொள்வது? சொல்லப்போனால் இதெல்லாம் வெறும் சாம்பிள்தான். இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல விசயங்கள் விடைத்தாள் திருத்தும்போது நடக்கும்.
சந்தோசம், கோபம், ஆதங்கம், உற்சாகம் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கொண்டதுதான் ஆசிரியர் மாணவருக்கு இடையேயான உறவு. என் வாழ்வின் அர்த்தம் இதுவாகவே இருக்க முடியும் என நம்பியே இந்த பணிக்கு வந்தேன். இன்றுவரைக்கும் அது தொடர்ந்தபடியே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அலைபேசியில் லாவண்யா அழைத்து இருந்தாள். திண்டுக்கல்லில் என்னிடம் பாடம் பயின்றவள். மேல்படிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தவரைக்கும் எனக்கு அவளைத் தெரியும். பேசும்போதே குரல் அத்தனை குதூகலமாக ஒலித்தது.
“அண்ணா.. எனக்கு இங்க சென்னைல வேலை கிடைச்சிருச்சி. சாஃப்ட்வேர் லைன்ல வேலை. இப்போத்தான் ஹெச் ஆர் முடிஞ்சு கன்ஃபர்ம் பண்ணினாங்க. உடனே கூப்பிடுறேன்..”
“ரொம்ப சந்தோசம்டா.. அம்மாக்கிட்ட சொன்னியா..” அவளுக்கு அப்பா கிடையாது. அவளுடைய அம்மாவை எனக்கு ரொம்ப நன்றாகத் தெரியும்.
“இல்லைண்ணா.. முதல்ல உங்களுக்குத்தான். ஏதோ உங்ககிட்டதான் முதல்ல சொல்லணும்னு தோணுச்சு. எனக்கு இங்கிலீஷ் வரல்லைன்னு சொன்னப்போ எனக்காக எவ்ளோ சிரமப்பட்டீங்க.. எவ்ளோ நேரம் எனக்காகப் பேசி இருப்பீங்க.. இதை உங்ககிட்ட சொல்றதுதான் சரின்னு பட்டது.. நான் இப்படிப் பண்றதுதான் சரின்னு அம்மாவும் சொல்வாங்க.. அதான்..”
தான் பார்க்கும் வேலையை உண்மையாக நேசிப்பவனுக்கு இதைக் காட்டிலும், இந்த அன்பைக் காட்டிலும் பிடித்தமானதாக வேறென்ன இருக்க முடியும்?
எங்கெங்கோ அலைந்து திரிந்து இப்போது சிவகங்கை கல்லூரியில். போன வாரம் இறுதி வருட மாணவர்களுக்காக ஒரு குழு விவாதம் நடத்தினோம். யாரும் சரியாகப் பேசவில்லை. ஆங்கிலத்தில் பேசும் திறன் இல்லை என்கிற ஒன்றின் காரணமாகவே எப்படி தென்மாவட்ட மாணவர்கள் பெரிய கம்பெனிகளால் நிராகரிக்கப்படுகிறார்கள் என்று வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வாய்ப்பு மறுக்கப்பட்ட நானறிந்த நண்பர்கள் பற்றிச் சொல்லும்போது என்னையும் மீறி குரல் தழுதழுத்துப் போனது. இத்தனை சொன்னதற்காகவாவது அடுத்த முறை விவாதம் நடக்கும்போது யாராவது ஒருவர் ஒழுங்காகப் பேசினால் எனக்கு சந்தோசம் என்பதாகச் சொல்லி விட்டு வந்தேன். நேற்று மாலை ஒரு அழைப்பு வந்தது. நான்காம் வருட மாணவன் அவன்.
“சார்.. புக் செண்டர்ல இருக்கேன். எந்த டிக்சனரி வாங்குனா நல்லது சார்..?”
பயணங்கள் இன்னும் தொடர்ந்தபடியே இருக்கின்றன.