December 9, 2012

நீர்ப்பறவை


பிராந்தியம் அல்லது தேசியம் சார்ந்ததொரு பிரச்சினை. அதனூடாகச் சொல்லப்படும் ஒரு காதல். காதலர்கள் சந்திக்கும் சங்கடங்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் அல்லது முடிவு என்ன - இதுதான் மணிரத்னம் படங்களின் டெம்ப்ளேட். கிட்டத்தட்ட இதே மாதிரியானதொரு டெம்ப்ளேட் கதையாக உருவாகி இருக்கிறது நீர்ப்பறவை.  

விஷ்ணுவைப் பார்த்தால் மீனவ இளைஞன் என்றே நம்ப முடியவில்லை. அவரது உடைகள் காலத்துக்கும் சூழலுக்கும் சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கின்றன. வெகுஜனத் திரைப்படங்களின் சாகச நாயகனுக்கும் விஷ்ணுவுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை. தண்ணியடித்து சலம்பிக் கொண்டிருப்பவர் ஒற்றைப் பார்வையில் காதல் வயப்படுகிறார். திருந்துகிறார். கட்டுமரத்தில் ஒரே நாளில் சிரமப்பட்டு ஏறி நின்று சர்க்கஸ் செய்கிறார். யாராலும் பிடிக்க முடியாத சுறா மீனைப் பிடிக்கிறார். 

காதலுக்காக ஊர் மக்களை எதிர்த்து நியாயம் கேட்கிறார். மீன் விற்கிறார். தரகு வேலை செய்பவன் தான் பிழைக்கத் தெரிந்தவன் என வசனம் பேசுகிறார். நாற்பது நாட்கள் படகில் மீன் பிடிக்கத் தடை விதித்தால் தூத்துக்குடி போய் உப்பளத்தில் வேலை பார்க்கிறார். சமுத்திரக்கனியின் உதவியோடு வல்லம் வாங்குகிறார். தமிழ்ப்படம் ஷிவா போல ஒரு காபி குடிப்பதற்குள் பணக்காரன் ஆகவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். 

அண்ணாமலை படத்தில் வினு சக்கரவர்த்தி ரவுடி எம் எல் ஏவாக வருவார். ரஜினி அவருக்கு அரசியல் என்றால் என்ன என்பதைப் புரிய வைத்தவுடன் திருந்தி விடுவார். பிற்காலத்தில் ரஜினி சிரமப்படும்போது அவருக்கு உதவி செய்வார். சூரியவம்சத்தில் ஆர்.சுந்தர்ராஜன். இது மாதிரி விக்கிரமன் படங்கள் எல்லாவற்றிலும் நாயகன் சிரமப்படும்போது உதவுவதற்கென்றே சில கதாபாத்திரங்கள் உலாவும். நீர்ப்பறவையில் உப்பளக்காரரும் அவரது தங்கையும்.

சாராயம் விற்பவளின் மகன் விஷச்சாராயம் குடித்து சாகக்கிடக்க நாயகன் காப்பாற்றுகிறார். அதோடு விட்டிருக்கலாம். அடுத்த காட்சியில் வடிவுக்கரசி (சாராயம் விற்பவர்) தனது சாராயப் பானையை உடைக்கிறார். நாயகன் மதுமீட்பு மருத்துவமனையில் அடைக்கப்படுகிறான். தனது கைகள் நடுங்காததைக் கண்டு தான் திருந்தி விட்டதை உணர்கிறான். யாராலும் பிடிக்க முடியாத மீனைப் பிடித்தவனிடம் நாயகி கேட்கிறாள் “யாராலுமே பிடிக்க முடியாத மீனை நீ பிடிச்சியாமே?”. திரும்பும் திசையெல்லாம் கிளிஷே காட்சிகள்.

இந்தப்படத்துக்கு நந்திதா தாசும் நாந்தான் கொன்னேன் எனும் வசனமும் படத்தை ஃப்ளாஷ்பேக்கில் சொல்லும் உத்தியும் எதற்கு? நடு நடுவே என் கணவர் அவ்வளவு காதலிச்சார் தெரியுமா என பேக்கிரவுண்டு வாய்ஸ் வேறு. மீனவர்கள் வாழ்வாதாரம் சார்ந்த விசயங்களைப் பேசும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரமும் படத்தோடு ஒட்டவில்லை. அரசியல் பேச வேண்டும் என்பதற்காக வெட்டி இட்டப்பட்ட கதாபாத்திரமாகத் தான் வந்து போகிறார். 

கடல்புறத்தில் வாசித்து நாயகிக்கு பெயர் வைக்கலாம். ஆழி சூழ் உலகிலிருந்து அனியம், வல்லம் செய்யும் தொழில், கடலில் இறங்கும் வல்லத்துக்கு செய்யப்படும் பூஜை என்றெல்லாம் அடித்து விடலாம். ஆனால் கதாபாத்திரங்களில் ஓரிருவராவது அந்த வட்டார வழக்கில் உரையாட வேண்டாமா? 

கல்லூரியில் நான் படித்த காலத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பெர்னாந்தோ நண்பர்கள் நிறைய இருந்தனர். பாசம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் எத்தனை தீவிரமானவ்ர்களோ அதேபோல கோபம் வந்தாலும் அவர்களை எளிதில் அடக்க முடியாது. ஆனால் நீர்ப்பறவையில் இயக்குனரால் அவர்களது சுபாவத்தின்   ஒரு துளியைக் கூட சரியாகக் காட்சிப்படுத்த முடியவில்லை. சரக்கைப் போட்டுவிட்டு புனிதமான சர்ச்சுக்குள் நுழைந்த நாயகன் நாயகியின் அருகில் படுத்துக் கொள்கிறான். ஒற்றைச் சலம்பலோடு அது முடிந்து போகிறது. மீனவர்கள் தவிர்த்து யாரும் கடலுக்குள் போகக்கூடாது எனச் சொல்பவரின் படகையே நாயகன்  திருடுகிறான். அதையும் பாதிரி எளிதில் மன்னிக்கிறார். காலம் காலமாக மீன் வியாபாரம் செய்பவர்களுக்குத் தெரியாத வித்தையாக நாயகன் ஊருக்குள் சென்று மீன் விற்கிறான். அதையும் யாரும் கேட்பதில்லை. ஆனாலும் உங்களுக்கு ரொம்பத் தைரியம் பாஸ். 

படத்தில் சொல்லும்படியான நல்ல விசயங்கள் - சுனைனா, சுனைனா, சுனைனா. அதுதான் அருளுக்கான வல்லம் என சமுத்திரக்கனி யாரோ போல சொல்லும்போது மெதுவாகக் கண்கள் கலங்கி நிற்கும் காட்சி - படத்தின் ஆகச்சிறந்த காட்சி. 

ஒளிப்பதிவும் இசையும் நன்றாய் அமைந்தும் இயக்குனர் அவற்றைச் சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டார். மீனவர் - இலங்கை ராணுவம் என மிக முக்கியமானதொரு பிரச்சினையை பின்புலனாக எடுத்துக் கொள்ளும்போது அதற்கான நியாயத்தைச் செய்ய வேண்டாமா? சாதாரண காதல் கதையைச் சொல்லத்தான் இத்தனை பில்டப்பா என்ற கடுப்புத்தான் மிஞ்சியது. என் படம் இவ்வளாவுதான் என்று சொல்லிவிட்டு சாதாரணமாகக் கமர்ஷியல் படம் எடுப்பவர்களே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

(படம் பார்த்த பின்பு விமர்சனம் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் டிவியில் வந்து இதுவொரு நேர்மையான படம் என்று கழுவி ஊற்றும் இயக்குனரின் மீதானக் கடுப்பே இவ்விமர்சனம். நண்பர்கள் பொறுத்தருள்க..)

8 comments:

எல் கே said...

ஹி ஹி ஹி ஹி

King Viswa said...

இதை, இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

// என் படம் இவ்வளாவுதான் என்று சொல்லிவிட்டு சாதாரணமாகக் கமர்ஷியல் படம் எடுப்பவர்களே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

(படம் பார்த்த பின்பு விமர்சனம் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் டிவியில் வந்து இதுவொரு நேர்மையான படம் என்று கழுவி ஊற்றும் இயக்குனரின் மீதானக் கடுப்பே இவ்விமர்சனம். நண்பர்கள் பொறுத்தருள்க..)//

இதுதான் என் பார்வையும். நம்ம பேரரசு படங்கள் எல்லாமே கமர்ஷியல் படங்களே. அவர் இதுபோல இரட்டைவேடம் போட்டு தன்னுடைய படங்களை தவறாக ப்ரொமோட் செய்வதில்லை.

சில இணையதளங்களில் நடிகைகளின் கவர்ச்சி படங்கள் என்று சொல்லி ஒரு லிங்க் அளித்து அங்கே சென்றால் விளம்பரம் மட்டுமே இருக்கும். அதைப்போன்ற மட்டமான விளம்பரவாதிகளுக்கும் இது போன்ற இயக்குனர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

ரவிச்சந்திரன் said...

நல்ல விமர்சனம் நண்பரே!
இது தான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு!
கையாள எடுத்துக்கொள்ளும் பொருளுக்கு நேர்மையாக இருந்தாலே போதும். ஆனால் பெரும்பாலும் அது நடப்பதில்லை. என்ன செய்ய?

கார்த்திக் சரவணன் said...

ஒரு காதல் படமாகவும் இல்லாமல் நாயகனின் வாழ்க்கையைக் காட்டும் படமாகவும் இல்லாமல் வந்திருக்கிறது. தமிழக மீனவர் பிரச்சனையை சொல்லவந்து பின்னர் அரைகுறையாக சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர்...

rajasundararajan said...

சுனைனா வாழ்க! அவர் இல்லைன்னா கா.பா. இன்னும் கடுப்பாகி இருப்பார் போலிருக்கே, நைனா!

சூனிய விகடன் said...

நீர்ப்பறவை படத்திலிருந்து நான் தெரிந்து கொண்ட ஒரு முக்கியமான விடயம்....தெரிந்து கொண்ட நீதி என்று கூடச் சொல்லலாம். " சரண்யா மாதிரி வயசானவங்க சொன்னா விஷ்ணு மாதிரியான வயசுப்பசங்க கேட்பதில்லை. சுனைனா மாதிரி வயசுப்புள்ளைங்க சொன்னாத்தான் கேக்குறாய்ங்க "

சில வதந்திக்கார்கள் சொல்றது மாதிரி மீன் புடிக்கிற ஆளுங்களைப் பத்தியோ..அல்லது மீனவர்களை சுட்டுக்கொல்றது பத்தியோ எடுக்கலீபா...அநியாயமா சீனு ராமசாமியப் பத்தித் தப்பாச் சொல்லிப்போடாதேன்கப்பா..


கும்மாச்சி said...

நல்ல விமர்சனம், இது மாதிரி படங்களுக்கு கட்டாயம் தேவை, தொடரத்து உங்களது சேவை.

தருமி said...

கொஞ்சம் குழப்பம் இருந்திச்சு - சில பதிவுகள் வாசித்து. நீங்கிரிச்சி.