August 9, 2013

விட்டு விடுதலையாகி (2)



வலையுலகில் நுழைந்த ஆரம்ப காலம் தொட்டு மேவியை நான் நன்கறிவேன். தாம்பரம் ரயில் நிலையத்துக்குள் யாரேனும் ஆசாமி ஒரு கையில் மேலாண்மை புத்தகமும் இன்னொரு கையில் மேலாண்மை பொன்னுசாமியின் புத்தகமும் வைத்துக்கொண்டு இந்தியாவின் பொருளாதாரமும் இந்திரா பார்த்தசாரதியும் எனப் பேசியபடி கடந்து போனால் அவர்தான் மேவி என நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இதை விளையாட்டாகவோ கேலியாகவோ சொல்லவில்லை. உண்மையில் இதுதான் அவருடைய இயல்பு. எல்லாவற்றிலும் புகுந்து புறப்படும் ஜீவன். அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம். மேலார்ந்த நட்பு என்பதைத் தாண்டி என் மீது அக்கறை செலுத்தும் மனிதர்களில் ஒருவர். நிறைய வாசிப்பவர். ஆனால் அந்த வாசிப்பு புறவயமாக மட்டும் இருப்பதில் எனக்கு எப்போதும் வருத்தமே.


பெருங்களத்தூரில் இருக்கும் மேவியின் வீட்டுக்கு நாங்கள் இருவரும் போய்ச் சேர்ந்தபோது மணி எட்டைத் தாண்டியிருந்தது. அண்ணியின் பிரசவத்துக்காக அவருடைய அம்மா வெளிநாடு போயிருக்க வீட்டில் அப்பா மட்டும் தனியாய் இருந்தார். வணக்கம் சொல்லியபடி உள்ளே நுழைந்தவனை அவர் வினோதமாகப் பார்த்ததன் காரணம் பிற்பாடு தெரிந்தது. இத்தனை வருடங்களில் நண்பர் என்கிற பெயரில் மேவி வீட்டுக்கு அழைத்து வந்திருந்த முதல் ஆள் நான். வீட்டைப் பற்றியும் வேலை பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு எங்களை சாப்பிடச் சொன்னார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென வெளியே சாப்பிட்டு விட்டுப் போயிருந்தோம். என்றாலும் அவரது திருப்திக்காக மீண்டும் ஒருமுறை உணவருந்தி விட்டு மாடிக்குச் சென்று கூடடைந்தோம்.


மறுநாள் காலை எழுந்தபோது எங்கு போவதென எந்தத் தீர்மானமும் இருக்கவில்லை. சட்டெனத்தான் அது தோன்றியது. பாண்டி செல்லலாம். எனக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் ஒன்று கடல். அதன் பிரம்மாண்டத்தின் முன் மனம் ஒன்றுமில்லாமல் கரைந்து போய் விடும் தருணங்கள் அற்புதமானவை. இதனை மேவியிடம் சொன்னபோது இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை எனத்தான் கேட்டார். 


“சரக்கடிக்காத மனிதரெல்லாம் எதற்கய்யா பாண்டிச்சேரி போகிறீர்?” 


இதற்கு என்னிடம் பதிலில்லை. கடலைப் பார்க்க வேண்டும், போகிறேன். முடிவு செய்தாயிற்று. 


“அதெல்லாம் சரி.. ஆனா அப்பா அடுத்து எங்க போறீங்கன்னு கேட்டா வேற ஏதாவது ஊரைச் சொல்லுங்க.. சரியா?”  தலையை ஆட்டி வைத்தேன்.


மேவியின் புத்தக அலமாரியிலிருந்து ஆதவனின் ராமசேஷனை உடனழைத்துக் கொண்டு கிளம்பினேன். அப்பாவிடம் விடைபெறும் சமயம்.


“அடுத்து எங்க தம்பி போறீங்க?”


பொய் சொல்லும்போதும் பொருந்தச் சொல்ல வேண்டும் இல்லையா? சட்டென அகநாழிகை வாசுவின் நினைவு வந்தது. 


“மதுராந்தகம் போகலாம்னு இருக்கேன்.. பெறகு கங்கை கொண்ட சோழபுரம்..”. 


“அங்க எல்லாம் எதுக்குப் போறீங்க? நண்பர்கள் யாரும் இருக்காங்களா?”


இங்குதான் என் நாவில் அமர்ந்திருந்த சனீஸ்வரன் நர்த்தனமாட ஆரம்பித்தான்.


“இல்லைங்க.. சும்மா ஒரு அனுபவத்துகாக..”


அவருக்கு சுத்தமாக நான் சொன்னது புரியவில்லை. ஒரு முறை என்னை மேலும் கீழும் பார்த்தார். பின்பு மேவியின் பக்கம் திரும்பி ஒரு பார்வை. இந்த மாதிரி மனிதர்கள்தான் உனக்குப் பழக்கம்? 


திண்டிவனத்தில் இறங்கி பாண்டி செல்லும் பேருந்தில் ஏறியாயிற்று. இதற்குமுன்பாக ஒரே ஒரு முறை மட்டுமே பாண்டி சென்றிருக்கிறேன், எனக்கு மிகப்பிரியமான தோழியோடு. கடலைத் தவிர்த்து வேறு எங்கு செல்லலாம் என யோசித்த போதுதான் நண்பர் மனோ.மோகனின் நினைவு வந்தது.


பைத்தியகாரியின் பட்டாம்பூச்சி எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கும் மனோ.மோகன் சமகாலக் கவிஞர்களில் முக்கியமானவர். பாண்டி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர். தேனியில் நடந்த ஒரு சிறுகதை விமர்சனக் கூட்டத்திலும், சேலத்தில் நடைபெற்ற கவிதைகள் விமர்சன அரங்கிலும் மதுரையில் ஒரு முறையும் அவரைச் சந்தித்து இருக்கிறேன்.


மனோவைப் பார்க்கலாம் என அலைபேசியில் அழைத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. வெயில், கணேசகுமாரன் என நண்பர்கள் பலரிடம் கேட்டும் பயனில்லை. கடைசியாகக் கலாப்ரியாவிடம் கேட்டேன். அவரும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனச் சொல்லி விட்டார். சரி, கடலோடு முடித்துக் கொள்வோம் என முடிவு செய்தது மனம். ஆனால் மிகச்சரியாக பேருந்து நிலையத்தில் இறங்கியபோது அலைபேசி அதிர்ந்தது. மனோ.மோகன். கலாப்ரியா ரமேஷ் பிரேதனுக்கு அழைத்து அங்கிருந்து தகவல் சொல்லி எப்படியோ என்னைப் பிடித்து விட்டிருந்தார்.


“என்ன நண்பா? திடீர் பிரயாணம்?”


“உங்க ஊர் கடலைப் பார்க்கணும் போல இருந்தது நண்பா..”


“பாருங்க.. ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்..”


நான் அதிகம் பார்த்திருக்கும் கடற்கரை எனச் சொன்னால் கன்னியாகுமரிதான். அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூர். ஆனால் என்னை மொத்தமாக அள்ளிக் கொண்ட கடல்கள் என்றால் அது தனுஷ்கோடியும் பாண்டியும். கண்ணுகெட்டிய தூரம் வரை மனிதர்கள் நடமாட்டமின்றி வேன்களின் டயர் தடங்கள் மட்டும் பயணிக்கும் தனுஷ்கோடி நமக்குள் வலியை விதைத்துப் போகும் என்றால் பாண்டியில் நான் உணர்ந்தது அமைதியை. நீளமான பெரிய அளவிலான கருங்கற்கள் நிரம்பிய கரையில் சற்றே உள்வாங்கி நீர் தெறிக்கும்படியாயிருந்த பாறை ஒன்றின் மீது சென்றமர்ந்தேன். 


கண்முன்னே மிகப்பரந்த நீலப்போர்வை. அங்கொன்றும் இன்கொன்றுமாய் மிதந்து செல்லும் படகுகள். மதிய வெயில் சற்றே மிதமாக அடித்துக் கொண்டிருந்தாலும் வெக்கை இருக்கவில்லை. காற்றில் ஆடும் தூசு மெல்ல மெல்ல வலுவிழந்து தரையில் வீழ்ந்தடங்குவதைப் போல மனம் சலனங்கள் நீங்கி அமைதியில் தொலைந்து போயிருந்தது. சுற்றிலும் இருந்த மனிதர்களைப் பார்த்தேன். பெரும்பாலானவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு கடலின் முன்பாக நின்றபடி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக்கணத்தின் அற்புதத்தை அனுபவிப்பதும் நினைவுகளை சேகரிப்பதும் தாண்டி அவற்றை ஆவணப்படுத்துவதில் மட்டும் ஏன் இத்தனை அவசரம்?
  

அங்கிருந்து கரையோரமாகவே மெதுவாய் நடக்கத் தொடங்கினேன். அங்கிங்கெனாதபடி எங்கும் சிதறிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும். இன்னும் சில வருடங்கள் கழித்து திரும்பி வந்தால் இந்த இடம் இதே மாதிரி இருக்காது என்பதாய்ப் பட்டது. சின்னதாய் ஒரு வலி. எத்தனை நேரம் நடந்திருப்பேன் எனத் தெரியாமல் கடற்கரையின் நீளத்தை குறுக்கும் நெடுக்குமாய் அளந்து கொண்டிருந்தேன். இப்போது ஓரளவு பழக்கமாகியிருந்த அந்தக் குரல் என்னை அழைத்தது. துணைவியாரோடு மனோ வந்து சேர்ந்திருந்தார்.


- பயணிப்போம்

5 comments:

வேல்முருகன் said...

பயணம் அனுபவம் அருமை, அதுவும் கடல் சார்ந்த அனுபவம் என்றும் மறக்காது, கட்டுரை படிக்கும் போது நேரில் சென்று வந்த உனர்வை தந்தது.

King Viswa said...

தொடரவும் ........

Unknown said...

super sir

by
JOTHIDA EXPRESS

WWW.SUPERTAMILAN.BLOGSPOT.IN

saamaaniyan said...
This comment has been removed by the author.
saamaaniyan said...

இன்றுதான் உங்களின் வலைப்பூவை காணும் வாய்ப்பு அமைந்தது !

படிக்கும்போது நானும் உங்களுடன் இந்த பயணத்தில் பங்கேற்றது போன்ற சுகானுபவம் !

“சரக்கடிக்காத மனிதரெல்லாம் எதற்கய்யா பாண்டிச்சேரி போகிறீர்?”

" அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ! " வசனத்துக்கு முன்னரே தமிழ்நாடெங்கும் பரவிய கேள்வி இது ! பாண்ட்டிச்சேரியை பற்றிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் cliché !

" அங்கிருந்து கரையோரமாகவே மெதுவாய் நடக்கத் தொடங்கினேன். அங்கிங்கெனாதபடி எங்கும் சிதறிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும். இன்னும் சில வருடங்கள் கழித்து திரும்பி வந்தால் இந்த இடம் இதே மாதிரி இருக்காது என்பதாய்ப் பட்டது... "

காரைக்கால்காரனான எனக்கு பாண்டியும் நன்கு புழக்கம். உங்களின் வார்த்தைகள் முற்றிலும் சரி ! இயற்கையை வன்புணர்வதில் மனிதனுக்கு இணை மனிதன் தான் !

நன்றி
சாமானியன்.
saamaaniyan.blogspot.fr