April 2, 2015

வெயில் நினைவுகள் - 1

வெகு நாட்களாக பெங்களூருக்குப் போய் வரலாம் என போகன் சொல்லிக் கொண்டிருந்தார். கல்லூரியைக் காரணம் சொல்லி இதோ அதோ என்று போக்கு காட்டிக் கொண்டிருந்தேன். இறுதியாக அந்த சரித்திர நிகழ்வு போனவாரம் நடந்தே விட்டது. எங்கு போகிறோம், என்ன பயணத்திட்டம் என்பதெல்லாம் தெரியாது. எல்லாம் நண்பர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று போகன் சொல்லியிருந்தார். அவர் சொன்னது போலவே ஓசூரில் நாங்கள் போய் இறங்கியபோது அழைத்துப்போக கும்கி தன் காரோடு தயாராய் நின்றிருந்தார். வழியில் மேலும் இரு நண்பர்கள் இணைந்து கொண்டார்கள்.

பெங்களூர் என்று சொன்னாலும் நகருக்குள் போகாமல் அங்கிருந்து விலகி ஹாசன் என்கிற ஊரை நோக்கி விரைந்தது குளிரூட்டப்பட்ட வாகனம். கண்ணாடிக்கு வெளியே வெயில் மஞ்சள் நதியாய் வழிந்து கொண்டிருந்தது. உண்மையில் பெங்களூரையும் மைசூரையும் வைத்துக்கொண்டு கர்நாடகம் குறித்துத் தவறான கருத்துகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. தெருக்களின் முனைகளில் காத்திருப்பவர்களைப் போல இந்த நகரங்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் அவற்றின் பளபளப்பில் உண்மைகளைத் தேட மறக்கிறோம். கர்நாடகத்தின் உட்பகுதிகள் முழுமையும் வெறும் பொட்டல்காடுகள். பளபளக்கும் நாற்கர சாலைகள் தவிர்த்து மற்ற அடிப்படை வசதிகள் எதுவும் காணக்கிடைக்காத சின்ன சின்ன கிராமங்கள். ஆனால் கிட்டத்தட்ட எல்லா வீடுகளின் கூரைகளிலும் டிடிஹெச் ஆண்டெனாக்கள் துருத்தித் தெரிந்தன.

உடன் வந்திருந்த நண்பர் அசோக்குமார் தொடர்ச்சியான தனது கேள்விகளால் பிரயாணத்தின்போதான உற்சாகம் குன்றாமல் பார்த்துக்கொண்டார். பிசாசு படம் பற்றியும் எம்டிஎம்மின் விமர்சனம் குறித்தும் கேட்பதற்கு அவரிடம் நிறைய கேள்விகள் இருந்தன. “படம் எதார்த்தமாக இல்லை. எம்டிஎம் அத்தனை சிலாகித்து விமர்சிப்பதற்கான இடத்தில் அந்தப்படம் இருக்கிறதா” என்பதே அவருடைய பிரதான கேள்வி. எந்தவொரு கலையும் படைப்பாளியைத் தாண்டி பார்ப்பவர்களுடைய பார்வை சார்ந்தும் இயங்குபவை தானே? “கலை என்பது யதார்த்தத்தை மீறி இயங்குவதுதான். இருப்பதை அப்படியே சொல்ல கலைஞன் எதற்கு” என்றார் போகன். அதற்குப் பிறகு நண்பர் கேட்ட கேள்விதான் முக்கியமானது.. “ஒரு அழகான பெண் இறந்து போய் பிசாசாக மாறினாள் என்றல்லாது அழகற்ற குரூரமான பெண் ஒருத்தி இறந்து பேயானாள் என்று சொன்னால் இந்தப்படம் ஓடியிருக்குமா..” உளவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டிய கேள்வி.

எருது என்கிற எனது மொழிபெயர்ப்பு நூலுக்கான எதிர்வினைகள் ஏதும் வந்தனவா எனக் கேட்டார் போகன். பெரும்பாலும் இல்லை என்பதே என்னுடைய பதில். புத்தகத் திருவிழாவை ஒட்டி வெளியானதால் குறைந்தபட்சம் இந்த வெளிச்சமாவது கிடைத்தது. இல்லையெனில் அவ்வளவுதான். மேலும் மொழிபெயர்ப்புகளுக்கான இடம் என்பது தமிழ் இலக்கியச் சூழலில் என்னவாக இருக்கிறது? அந்நியனும் சொற்களும் நம் சூழலில் உருவாக்கிய அதிர்வுகளை யாராலும் மறுக்க முடியாது. போலவே மார்குவெசும் போர்கேசும் நம் மக்களின் மீது கொண்டிருக்கும் ஆதிக்கம் அளப்பரியது. ஆனால் ஒரு சில மொழிபெயர்ப்புகளை வாசிக்கும்போது தோன்றும் உணர்வுகளை என்னவென்று சொல்லுவது? 

சென்ற வருடம் புத்தகத் திருவிழாவில் இடாலோ கால்வினோ சிறுகதைகளின் மொழிபெயர்ப்பை வாங்கினேன். ஒரு கதையில் நாயகி பூங்காவில் நடந்து செல்லும்போது சில மலர்களைச் சுட்டிக்காட்டி ‘அந்த ஒன்று அந்த ஒன்று” என சொல்லிக் கொண்டே போகிறாள். எனக்கு விளங்க சற்று நேரமானது. “that one" தான் அங்கே அந்த ஒன்று என்று மாறியிருக்கிறது. “அது” என சொல்ல வேண்டிய இடத்தில் “அந்த ஒன்று”. வரிக்கு வரி என்கிற பெயரில் மொழியின் பயன்பாடு புரியாமால் தட்டையாக மொழிபெயர்ப்பதை என்னவென்று புரிந்து கொள்ளுவது? கடைசியாக வெளியான கல்குதிரையில் ஒரு சிறுகதையின் தலைப்பு - Night Face Off. “இரவை எதிர்கொள்ளுதல்” எனப் பொருள்படும் இதனை “இரவு முகம் மேலே” என்று மொழிபெயர்த்திருந்தார் தமிழின் மூத்த இலக்கியவாதிகளில் ஒருவர். இது போன்ற சிக்கல்களைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம். 

ஆனால் நம்பிக்கைக்குரிய புதிய மொழிபெயர்ப்பாளர்களை அடையாளம் காட்டச் சொன்னால் ஸ்ரீதர் ரங்கராஜையும் பாலகுமாரையும் ஜார்ஜையும் சொல்வேன். இவர்களில் இருவர் வலசையின் கண்டுபிடிப்பு என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.

பெங்களூரிலிருந்து 150 கிமீ தூரத்தில் இருக்கிறது ஹாசன் என்னும் நகரம். மதிய உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி மிக மோசமானதொரு சாலையில் பயணித்து ஹளபேடு வந்தடைந்தோம்.

(தொடரலாம்..)