November 15, 2008

வாரணம் ஆயிரம் - விமர்சனம்!!!



வாரணம் ஆயிரம் - மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்திருக்கும் திரைப்படம். வெற்றி பெற்ற கவுதம் - ஹாரிஸ் ஜெயராஜ் - சூர்யா கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறார்கள். பெரும் ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கினால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு இளைஞனின் வாழ்க்கையை பதிவு செய்ய முயன்று இருக்கிறார்கள். அதனூடாக தந்தை-மகன் பாசம், காதல், சோகம், தன்னை தானே உணரும் பருவம் என அனைத்தையும் சொல்ல முற்பட்டுள்ளார் கவுதம். படத்தின் முடிவில் நமக்கு ஆயாசமே ஏற்ப்படுகிறது.


கிருஷ்ணாவின் மகன் சூர்யா(இரண்டும் சூர்யா தான்). கிருஷ்ணா இறக்கும் காட்சியில் படம் தொடங்குகிறது. தொலைவில் ஒரு மிஷனில் இருக்கும் மேஜர் சூர்யாவிற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவரின் நினைவுகள் வாயிலாக படம் விரிகிறது. பள்ளி மாணவனாக, பின்பு கல்லூரியில் படிக்கும் இளைஞனாக சூர்யா. ஒரு சந்திப்பில் மேக்னாவிடம் (சமீரா ரெட்டி) மனதை பறிகொடுக்கிறார். விக்ரமன் படம் போல ஐந்தே நிமிடங்களில் வீட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கிறார். தாய் தந்தை உதவியோடு அமெரிக்கா சென்று அவள் இதயத்தில் இடம்பிடிக்கிறார்.ஆனால் ஒரு விபத்தில் மேக்னா இறந்து போகிறாள். சோகத்தில் சூர்யா போதை மருந்திற்கு அடிமை ஆகிறார். பின்பு அதிலிருந்து மீண்டு காஷ்மீர் செல்கிறார். அங்கு தீவிரவாதிகளிடம் இருந்து ஒரு குழந்தையை மீட்கிறார். பிறகு ராணுவத்தில் சேர்கிறார். இதன் நடுவே தன்னை காதலிக்கும் ப்ரியாவை (ரம்யா) திருமணம் செய்கிறார். அப்பாவிற்கு உடல் நலம் இல்லாமல் போகிறது. தொண்டையில் கான்சர். தான் விரைவில் திரும்பி வருவதாக சொல்லி சூர்யா ஒரு மிஷனுக்காக கிளம்புகிறார். இதோடு படம் மீண்டும் நிகழ் காலத்திற்கு வருகிறது. வேலையே முடித்த உடன் சென்று தனது தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்கிறார். இதோடு படம் முடிகிறது. இதை சொல்றதுக்கே கண்ணை கட்டுகிறதே.. பார்த்தால்?...


சூர்யா - ஒரே வார்த்தையில் சொல்வதானால்.. அற்புதம். ரொம்ப மெனக்கட்டிருக்கிறார். உடலை குறைத்து, கூட்டி, சிக்ஸ் பாக் என மிகவும் உழைத்து இருக்கிறார். உணர்வுகளை வெளிப்படுத்துவதாகட்டும், சின்ன சின்ன சேட்டைகளிலும் மிளிர்கிறார். இரண்டு ரோல்களிலும் வித்தியாசத்தை காட்டியுள்ளார் . அப்பாவுக்கு மட்டும் ஒப்பனை சரியாக பொருந்தவில்லை. மற்றபடி சூர்யா அசத்துகிறார். அவரின் நடிப்பு விழலுக்கு இறைத்த நீராக போனது தான் கொடுமை. மூன்று நாயகிகளில் ரம்யாவிற்கு தான் முதலிடம். பக்கத்து வீட்டு பெண்ணை போல இருக்கிறார். சிம்ரன் அம்மாவாக வந்து போகிறார். சமீரா ரெட்டி..முதிர் கன்னி போல தோற்றம் கொண்ட இவரைப் பார்த்து சூர்யா இவ்வளவு உருக வேண்டாம் எனத் தோன்றுகிறது.


படத்தின் பெரிய பலம் இசை. தாமரையின் வரிகளில் எல்லா பாடல்களுமே நன்றாக உள்ளன. எனினும் பாடல்களை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் மண்டை காய வைக்கிறது. குறிப்பாக முன்தினம், அஞ்சல பாடல்கள் நம்மை பாடாய் படுத்துகின்றன. காதலி இறந்த சோகத்தில் வரும் பாடலாக அஞ்சலை பாடல் நம்மை கொலைவெறி கொள்ள செய்கிறது. பாடல்களுக்கு நடனம் அமைத்தவரை ஓட விட்டு கல்லால் அடிக்கத் தோன்றுகிறது. பின்னணி இசையில் பெரிதும் மெனக்கடவில்லை ஹாரிஸ். கவுதமுடன் இது தான் கடைசி படம் என்பதால் இது போதும் என் நினைத்து விட்டாரோ என்னவோ. ரத்னவேலு ஒளிப்பதிவு. பாதி படம் இருட்டிலேயே இருப்பது போல ஒரு உணர்வு. ஒவ்வொரு ஷாட் முடியும் போதும் திரை இருண்டு போவது எரிச்சலைதான் தருகிறது. எடிட்டிங் -ஆண்டனி. முடிந்ததை செய்து இருக்கிறார். பேசுபவர்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே பேசி கொண்டிருப்பதால் நாம் பார்ப்பது தமிழ் படம் தானா என சந்தேகம் வருகிறது.


தந்தை மகனுக்கு இடையே உள்ள நெருக்கத்தை எந்த காட்சிகளுமே சொல்லாத நிலையில் நம்மால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. இதுதான் இந்த படத்தின் பெரும் பலவீனம். கவுதம் ஆங்கில படங்கள் பார்ப்பதை குறைத்து கொண்டு தமிழர்களுக்காக படம் எடுக்க வேண்டும். படத்தின் நீளம் மூன்று மணி நேரத்தையும் தாண்டி செல்கிறது. படம் ரொம்ப மெதுவாக போவதால் நம்மால் தாங்க முடியவில்லை. தனது தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பணம் செய்து இருக்கிறார் கவுதம். அதற்கு நாம் தானா கிடைத்தோம்?


ஆக மொத்தத்தில்..


வாரணம் ஆயிரம் - பார்க்காமல் இருக்க காரணம் ஆயிரம்....

No comments: