October 28, 2010

உக்கார்ந்து யோசிச்சது (28-10-10)

வல்லமை கூடி வடமென நரம்பேறி வல்வினை தீர்ந்து
நல்வளம் நகை கூட்டி சொல் திரண்டு சுகவீனம் மாய்ந்து
பொல்லா படுக்கை நீங்கி புதிர்விதி பொய்க்க வாய்ந்து
வெல்லவே வாழ்வு விரைந்தெழு சிறப்பே

மிக மோசமானதொரு சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி வந்த என்னுடைய மாணவன் கவுதமுக்காக நண்பர் நேசமித்திரன் எழுதிய வரிகள்தான் மேலே இருப்பவை. கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்குப் பிறகு, இனி உயிருக்கு எந்த பயமுமில்லை என்று, நேற்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். இரண்டொரு நாட்களில் ஜெனரல் வார்டுக்கு மாற்றி விடலாம் என்றும் சொன்னார்கள்.

அவன் பழைய நிலைமைக்குத் திரும்ப சில காலம் ஆகலாம் என்றாலும் அவன் மீண்டு வந்ததில் அனைவருக்கும் ரொம்ப சந்தோசம். ரொம்பவும் இக்கட்டானதொரு நேரத்தில் உதவிய, அவனுக்குத் துணை நின்ற அத்தனை மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் என் நன்றி. அவனுக்காக வேண்டிக் கொண்ட, வேறெதுவும் உதவி வேண்டுமா என்று வினவிய, போனிலும் மின்னஞ்சலிலும் ஆறுதல் சொல்லிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

***************

பிரியத்துக்குரிய அண்ணன் பா.ரா அவர்களின் இல்லத் திருமணத்திற்கு மதுரைப் பதிவுலக நண்பர்களோடு போயிருந்தேன். திருமண நாளன்று கல்லூரிப் பணிகள் இருந்ததால் விசேஷத்துக்கு முதல் நாள் இரவே சிவகங்கை போய் விட்டோம். யாரோ ஒரு சின்னப் பையன் வந்து வாங்க கா.பா என்று வரவேற்றார். பிறகு அவர்தான் பா.ரா என்று சொன்னார்கள். மனிதர் அத்தனை இளமையாக இருக்கிறார். சுத்திப் போடுங்கண்ணே..

பிறகு பா.ராவின் வீட்டுக்குப் போய் சகோதரி மகாவைப் பார்த்து வாழ்த்தி விட்டு வந்தோம். மறுநாள் திருமணத்துக்கு நிறைய பதிவர்கள் வந்து இருந்தார்களாம். மிஸ் பண்ணி விட்டேன் என்பதில் கொஞ்சம் வருத்தம். அதே தினத்தில் நண்பர் ராஜனுக்கும் சென்னையில் திருமணம் நல்ல முறையில் நடந்திருக்கிறது. தம்பதிகள் இருவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள்.

***************

மதுரை பெரியார் நிலையம் பாலத்தில் வண்டியில் போய்க் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஓரமாக நடந்து போய்க் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து விட்டார். அவரைச் சுற்றி உதவி செய்ய மூன்று நான்கு பேர் கூடி விட்டோம். அவர்களில் சாலைப் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த காவல் அதிகாரி ஒருவரும் இருந்தார். பெரியவருக்கு ஓரளவு தெளிந்தவுடன் எங்கே போக வேண்டுமென விசாரித்தோம். அவருடைய வீடு பைபாஸில் இருக்கும் விபரத்தைக் கேட்டவுடன் அருகில் இருந்த ஒரு ஆட்டோ டிரைவர் தான் கொண்டு போய் விடுவதாகச் சொன்னார்.

ஆனால் பெரியவர் நடக்க முடியாத காரணத்தால் கூட யாரேனும் போக வேண்டியதாக இருக்கும். நானோ வண்டியை விட்டு வர முடியாது. டக்கென அந்த காவல் அதிகாரி தான் போய் வருவதாக தன்னுடைய மேலதிகாரிக்கு போனில் தகவல் சொல்லி மாற்று ஏற்பாடு செய்து விட்டுக் கிளம்பி விட்டார். காவலர்கள் என்றாலே பொதுமக்களைப் பாடாய்ப்படுத்துபவர்கள் என்றில்லாமல் இப்படியும் சில மனிதர்கள் இருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.

***************

நண்பனின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவனுடைய மனைவி சின்னக் குழந்தைகளுக்கு ட்யூஷன் நடத்திக் கொண்டிருந்தார். ஆத்திச்சூடி வரிகளை எழுதச் சொல்லி அவ்வையார் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்.

"எழுதுங்க.. தந்தையும் தாயும் பேண்.."

சிறிது நேரம் கழித்து ஒரு குழந்தை தான் எழுதிக் கொண்டு வந்ததை நீட்டியது. அதை வாசித்து எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

"தந்தையும் தாயும் பேய்.."

பாவம். அதற்கென்ன கஷ்டமோ? குழந்தைகள் எப்போதும் பொய் பேசாது என்பதுதான் நமக்கு எல்லோருக்கும் தெரியுமே..:-))

***************

ஒரு வாரமாக வீட்டில் இணைய இணைப்பு இல்லை. தினம் ஒரு படமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். the naked gun, rush hour போன்ற ஜாலி படங்களாகப் போய்க் கொண்டிருக்கிறது. 1988 யில் வெளிவந்த "வில்லோ (willow)" என்றொரு மாயாஜாலப் படம். வால் கில்மர் நடித்தது. ஜார்ஜ் லூகாஸின் கதை. இரண்டு தலை ராட்சத மிருகம், இரண்டு இன்ச் நீளமே இருக்கக் கூடிய மனிதர்கள் என்று சில முயற்சிகள் செய்திருக்கிறார்கள். இதையெல்லாம் எங்கள் தமிழ்ப் படங்களில் 50-60களிலேயே (மணாளனே மங்கையின் பாக்கியம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்) செய்து பார்த்தாச்சு போங்கப்பா என்றுதான் தோன்றியது. அதுவும் நம்ம விட்டாலாச்சார்யா படத்துக்கு ஏதும் ஈடு இணை உண்டா என்ன?

***************

மீதி வெள்ளித்திரையில் - தியோடர் பாஸ்கரனின் தமிழ்சினிமா பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு. ஆரம்பத்தில் மிக முக்கியமானதொரு புத்தகத்தை வாசிக்கிறோம் என்பதாக இருந்த உணர்வு போகப்போக காணாமல் போனது. ஒரு சில தகவல்கள் தவிர்த்து எல்லாமே ரொம்ப மேலோட்டமான கட்டுரைகள். அதேபோல மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தையே கட்டுரைகள் பேசுவதால் வரும் சலிப்பும் ஏற்படுகிறது.

ஆதலினால் - குங்குமத்தில் எஸ்ரா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. விஜயா வெளியீடு. "துணையெழுத்தில்" வந்த விஷயங்களையே வடிவம் மாற்றிக் கொடுத்திருக்கிறார் என்பது தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.

***************

"தா" படத்தின் பாடல்கள் ரொம்பப் பிடித்து இருக்கின்றன. ஸ்ரீ விஜய் என்கிற புதியவரின் இசை. "என்னைத் தொட்டுப்புட்டா", "ஏதோ ஒரு ஏக்கமோ" இரண்டு பாடல்களுமே மனதை அள்ளிக் கொள்ளுகின்றன. பாடல்களைக் கேட்க இங்கே சொடுக்குங்கள். அதுபோக இப்போது அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் - மந்திரப் புன்னகையின் "சட சட..". இந்தக் காதலைக் கண்டடைய எத்தனை காமம் கடந்து வந்தேன்... பாடல் வரிகளே போதை. வித்யாசாகர் அசத்தி இருக்கிறார்.

***************

முடிக்கிறது முன்னாடி..

வாத்தியார்: படிச்சு முடிச்சு நீங்க என்னவாக ஆசைப்படுறீங்க?

மாணவன்: நான் எம்.பி.பி.எஸ் படிச்சு போலிஸ் ஆகி நல்ல சாப்ட்வேர் கம்பெனில லாயரா ஒர்க் பெரிய பெரிய கட்டிடமா கட்டப் போறேன் சார்..

வாத்தியார்: அவ்வவ்.. என்ன தம்பி சொல்ற?

மாணவன்: அடிங்கோய்யால.. எங்களுக்கு எத்தனை நாள் இதேமாதிரி புரியாமக் கிளாஸ் எடுத்திருப்ப?

அந்த வாத்தியார் நீங்கதான என்பது போன்ற கேள்விகள் தடை செய்யப்பட்டுள்ளன.. ஹி ஹி ஹி..

இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))

October 25, 2010

காதலுமாகி

எல்லோரையும் விட என்னை அதிகமாக அழ வைத்தவள் நீ.. அதனலாயே உன்னை இன்னும் அதிகமாகப் பிடிக்கிறது # காதல்

எல்லோருக்கும் ஏதோ ஒரு போதை தேவையாக இருக்கிறது. எனக்கு நீ.. # காதல்

நிறைய பேரு தமன்னா, தமன்னான்னு சொல்றாங்களே.. அவுங்க யாரு? புட்டண்ணா மாதிரி பெரிய டைரடக்கரா? # அறியாமை # நான் அப்புராணி..

வாழ்க்கையில மனுஷனுக்கு காதல் ஒரு தடவைதான் வரும்னு சொன்ன கேனப்பய யாரு # டவுட்டு

ஊடல் பொழுதுகளில், தவறை யார் செய்திருந்தாலும், முதலில் இறங்கி வந்து மன்னிப்பு கேட்பது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள் பெண்கள். கருமம், நாமும் அப்படியே நடித்துத் தொலைக்க வேண்டி இருக்கிறது # புலம்பல்ஸ் ஆப் இந்தியா

அய்யா சன் பிக்சர்ஸ் புண்ணியவான்களே.. தயவு செய்து தலைவரோட எந்திரன் படத்தை ஆகஸ்ட்ல மட்டும் ரிலீஸ் பண்ணாதீங்க.. ஏன்னா.. அதுக்கு ஒரு கறுப்பு ச(த)ரித்திரமே இருக்கு.. நாட்டுக்கு ஒரு நல்லவன்.. பாபா.. கடைசியா குசேலன்.. மறுபடியும்னா தாங்க முடியாது.. அவ்வ்வ்..# பகுத்தறிவு

அழகாக இருக்கும் பெண்கள் அழகாக இருப்பது எப்போதுமே ஆபத்து.. அவர்களுக்கல்ல.. ஆண்களுக்கு..# ஆண்ஈயம், ஆண்பித்தளை,ஆண்சொம்பு

மக்கு மகேஷ்.. சமீபத்துல இப்படி ஒரு மொக்க விளம்பரம் பார்த்ததே இல்ல.. விக்ரமுக்கு இது தேவையா? # மணப்புரம் பைனான்ஸ் ஒழிக

பொண்ணுங்க குனிஞ்ச தலை நிமிராம அடக்க ஒடுக்கமா இருக்குறது நல்ல பழக்கம்தான்.. ஆனா அதுக்காக டிராபிக்ல நட்டநடுரோட்டை கிராஸ் பண்ணும்போதும் அப்ப்ப்ப்படியே இருக்கணுமா? கருமம்டா சாமி... # கீழ விழுந்த கடுப்பு

உன்னால், உனக்காக, உன்மீது.. உண்டானது என் காதல் # காதல் ஜனநாயகம்

அம்மாவின் அருகாமையும், கவனிப்பும் கிடைப்பதற்காகவாவது அடிக்கடி காய்ச்சல் வர வேண்டும் # ஒரு ஹாஸ்டல் மாணவனின் பிரார்த்தனை

திருச்சியில் சேர்ந்த கூட்டம் வெறும் ஒன்றரை லட்சம்தான்.. முப்பது மாவட்டத்தில் இருந்து வந்த கூட்டத்தை விட திருச்சியில் இருந்தே அதிகக் கூட்டத்தைக் கூட்டுவொம் என நேரு சூளுரை.. கலைஞரை ஜெ திட்டியதைக் கேட்டு பெண்கள் கடும்கோபம்.. சாலையில் இருந்த தடுப்புகளை உடைத்து அட்டூழியம் பண்ணிய ரத்தத்தின் ரத்தங்கள்.. தண்ணீர் கிடைக்காமல் மயக்கம் போட்ட தொண்டர்களுக்கு முதலுதவி கூட செய்யாத கொடூரம்.. இரண்டாவது ரவுண்டிலும் கலைஞர் ஜெயிப்பாரா? - நக்கீரன் கட்டுரை # ஊடகங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதைத் தடுக்கவே முடியாதா..:-((((

ஆண்களின் இயலாமை, பெண்களின் ஆயுதம், குழந்தைகளின் தேசிய கீதம் # அழுகை

காலையில எட்டு மணிக்கு எந்திரிச்சு வரச் சொல்லி உசிர வாங்குரானுங்கன்னு பொலம்பிக்கிட்டே வர்ற மக்கள வச்சுத்தான் கொடி ஏத்த வேண்டியிருக்கு.. ஞாயிற்றுக்கிழமை வந்ததால ஒரு நாள் லீவு போச்சேன்னு குறை வேற.. இன்னைக்கு சுதந்திர தின உணர்வுங்கிரது வெறும் பேச்சளவிலதான் இருக்குன்னு நண்பன்கிட்ட பொலம்பினா சிரிச்சுக்கிட்டே சொல்றான்..”விடுறா மாப்ள.. பேச்சளவுலையாவது இருக்கே..”

ஹே ஹே..அடுத்த காமெடி.. தங்க நகை வெளம்பரத்துல இளைய தலைவலி.. ஒரே சென்டி”மெண்டல்” சீன்.. அய்யோ.. எனக்கு சிப்பு சிப்பா வருகுதே..:-)))

தீபாவளி, புதுவருஷப் பொறப்பு, நண்பர்கள் தினம்.. இது எல்லாத்துக்கும் மெசேஜ் அனுப்புறதுக்கு காசு பிடிக்கிற கருமாந்திர செல்போன் கம்பெனிக்காரனுவ.. சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் மதிக்கிறதே இல்ல.. பயபுள்ளைக நம்மளப் பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்காய்ங்க..:-(((

"வந்தே மாதரம்”ங்கிற தேச பக்திப் படத்துக்குக் கூட சினேகாவோட குளியலும் “கல கல”ன்னு குத்துப்பாட்டும் தேவையாயிருக்கு.. என்ன கொடுமை இது?

வாழ்க சுதந்திரம்.. வாழ்க பாரதம்..

காதலில் ஜெயித்தவனை விட, தோற்றுப்போன காதலின் நினைவுகளை சுமந்தபடி வாழ்பவன் பாக்கியசாலி # எப்படியெல்லாம் மனச தேத்திக்க வேண்டியிருக்கு.. அவ்வ்வ்வ்வ்

நீ வீசிப்போன ஒற்றைப் புன்னகையில் தொலைந்து போனவன் ஆகிறேன் நான்.. மீண்டுமொரு தரம் புன்னகை செய்.. தொலைந்தவனைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்கிறேன்..:-)))

”அஜித்துடன் வாய்ப்பு கிடைக்கும்போது பணியாற்றுவேன்” - குமுதத்தில் கவுதம் .“இனிமேல் அஜித் எனக்குத் தேவையில்லை” - விகடனில் கவுதம்

விகடன்ல வந்ததே உண்மையா இருக்கக் கடவதாக..

ஜக்குபாய் ஸ்டைல்ல தல சொல்லணும்னா..

“கடவுளே.. விஜயை நான் பார்த்துக் கொள்கிறேன்.. இந்த மொக்கை இயக்குனர்களிடம் இருந்து மட்டும் என்னைக் காப்பாற்று..”

இன்று மாலை கல்லூரியில் இருந்து திரும்பி வரும் வழியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பத்து வயது சிறுவனொருவனைப் பார்த்தேன்.. சத்தமாக ஒரு பாடலைப் பாடியபடி சந்தோஷமாக போய்க் கொண்டிருந்தான்.. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவனுக்கு இடது கை முழங்கைக்கு கீழே சுத்தமாக இல்லை.. ஆனால் அதன் சுவடுகள் ஏதுமின்றி அவன் பாட்டுக்கு மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்தான்.. ஏனொ தெரியவில்லை.. அவனைப் பார்க்கும்போது ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இன்னொரு பக்கம் சோகமாகவும் இருந்தது.. இன்னதென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு..:-(((

காதல்ங்கிறது ஒரு மேஜிக் மாதிரி.. யாருக்கு வேணும்னாலும் எப்போ வேணும்னாலும் வரலாம்.. இப்போதைக்கு, அந்த யாரோ, நானாக் கூட இருக்கலாம்..:-)))

(buzz அப்பப்போ கிறுக்கிட்டு இருந்ததோட தொகுப்பு)

October 22, 2010

ஒரு எழுத்தாளனின் (சோகக்) கதை - 2

ஒரு எழுத்தாளனின் (சோகக்) கதை - 1

எழுத்தாளர் ஆக "நமக்கு நாமே" திட்டம்னு முடிவு பண்ணியாச்சு. ஆனா எங்க இருந்து ஆரம்பிக்கிறது?

முதல்ல எழுதுறதுக்கான சூழலை உருவாக்கணும்.

வீட்டுல என்னோட அறைல இருந்த ஜன்னலை எல்லாம் நல்லா திரை போட்டு மூடியாச்சு. எல்லாமே மூடி இருந்தாத்தான் எழுதுறதுக்கு மூடு வரும். காமா சோமான்னு சுவத்துல பூரா கிறுக்கனும். அப்புறம் அடுக்கி வச்சு இருந்த துணிகள், சாமான் எல்லாத்தையும் கலைச்சுப்போட்டு வீடு முழுக்க பரப்பி விட்டாச்சு. பப்பரக்கான்னு ஒழுங்கு இல்லாமக் கிடந்தாத்தானே கட்டுடைத்தல், பின் நவீனத்துவம், பின்னாத நவீனத்துவம் எல்லாமே.. "உனக்கு மறை கிறை கழண்டு போச்சா.."அம்மா திட்டினபோதுதான் நிம்மதியா இருந்தது. அப்போ ஒழுங்காத்தான் எல்லாத்தையும் உருப்புடாமப் பண்ணியிருக்கோம்.

அடுத்தது, எழுத்தாளனுடைய உடமைகள்.

அழுக்கு ஜிப்பா
இத்துப் போன ஜோல்னா பை
நல்ல தடியான கண்ணாடி
காந்தி காலத்து பேனா
கிலோ கணக்குல பேப்பர்
காயலான் கடை சைக்கிள்

செட் பிராப்பர்டி எல்லாத்தையும் எறக்கியாச்சு. அத்தோட கைல பேனாவோட வானத்த வெறிக்கிற மாதிரி, ஜிப்பாவோட சைக்கிள் ஒட்டிக்கிட்டு வர மாதிரி, ஆளே இல்லாத ரோட்டுல அலப்பறையா நடந்து வர மாதிரி போட்டோவும் எடுத்தாச்சு. பின்ன.. நாளைக்கு நம்ம கதை விகடன், குமுதம்ல எல்லாம் வரும்போது தேவைப்படும்ல.

என்னதான் நான் பெரிய ஆளா இருந்தாலும் நல்ல எழுத்தாளனுக்கு வாசிப்பனுபவம் முக்கியம். அதனால மைய நூலகத்துல மெம்பர் ஆகிட்டேன். யாருமே படிக்காத புத்தகங்கள் எங்க இருக்குன்னு தேடித் பிடிச்சு படிக்க ஆரம்பிச்ச போதுதான் அவர் எனக்கு அறிமுகமானாரு. புரட்சிக் கவிஞர் இடிமுட்டி. ஆகா.. நமக்கு புரட்சிக் கலைஞர் தெரியும்.. அது யாருடா இந்த புரட்சிக் கவிஞர்?

புத்தகத்த எடுத்துப் பார்த்தவன் அப்படியே மிரண்டுட்டேன். முப்பது நாற்பது பேரு முன்னுரை எழுதி இருக்காங்க. இடிமுட்டியின் இடிமுழக்கம்னு ஒருத்தர் ஆய்வு நூல் எழுதி இருக்காராம். என் புத்தகங்களின் மீதான ஆய்வுகள் பற்றிய கருத்துத் தெறிப்புகள்னு இடிமுட்டியே ஒரு புத்தகம் போட்டிருக்காரு. அடேங்கப்பா.. ரொம்பப் பெரிய ஆள்தான் போலன்னு படிக்க ஆரம்பிச்சேன்.

முதல் கவிதையே டெர்ரர்தான்.

ஓ உலக இளைஞனே
பார்க்க எடுப்பாக
இருப்பதை விட
நாலு பேருக்கு
எடுத்துக்காட்டாக நீ
இருந்தால் நாடு செழிக்கும்

அடுத்தது பெண்களுக்கான அறைகூவல்.

இன்றைய மங்கை
அவள்
பொங்கி வரும் கங்கை
தோழியே உனக்குத்
தொல்லை கொடுப்பவனை
தோல்செருப்பால்
தொரத்தி தொரத்தி அடி

காதல் கவிதைகள்ல எப்படி பட்டையைக் கெளப்புறாரு பாருங்க..

பூவும் பொண்ணும் ஒண்ணு
அறியாதவன் வாயில மண்ணு

வானில் இருப்பது வெண்மதி
என் காதலே எனக்கு வெகுமதி

ஐயோ ஐயோ.. எனக்குப் படிக்க படிக்க சந்தோஷமா இருக்கு. கவிதை எழுதுறது இம்புட்டு ஈசின்னா கண்டிப்பா நாமளும் கவிஞன் ஆகிடலாம்டா.. கஷ்டப்பட்டு அவரோட வீட்டைக் கண்டுபிடிச்சு போயிட்டேன்.

"எழுத்தாளன் ஆகணும்னு ஆசை சார். யாரையுமே பார்க்கக் கூடாதுன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா உங்க புத்தகத்தைப் படிச்ச பின்னாடி... முடியல.. அதான் ஓடோடி வந்துட்டேன்.."

மனுஷனைக் கைல பிடிக்க முடியல. உள்ளே போய் ஒரு நூறு, இருநூறு புத்தகத்த எடுத்துட்டு வந்தாரு. எல்லாமே வாரமலர், குடும்ப மலர் மாதிரியான புத்தகங்கள். எல்லாத்துலையும் அவர் கவிதையும், கதையும் வந்திருக்காம்.

"கவிதை எழுதுறது ரொம்ப ஈசி தம்பி. இப்போப் பாருங்க.. நாலு திசை இருக்கு. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் மறைகிறான். வடக்கும் தெற்கும் எப்போதும் ஒன்று கூடுவதே இல்லை. அவ்வளவுதான். இதையே கொஞ்சம் மாத்திப் பாருங்க.. கவிதை ரெடி.."

இதை.. இதை.. இதை.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

"உங்கள சுத்தி இருக்குற விஷயங்கள நல்லா கவனிச்சாலே போதும். அப்புறம் எழுதுங்க.. கதையும் கவிதையும் ஊத்து மாதிரி.. சும்மா அப்படியே உங்க நாபிக்கமலத்துல இருந்து பீறிக்கிட்டு வரும்"

எனக்கு புல்லரிக்குது. அவருக்கு நன்றி சொல்லிட்டு வந்தேன். வெளில வானத்துல ஒரு காக்கா கத்திக்கிட்டே பறந்து போகுது. உடனே எழுதுனேன் ஒரு கவிதை.

காகமே
இந்தக் கேடு கெட்ட மனிதர்களோடு
பேச மாட்டேன் என
சொல்வதற்காகத்தான்
(டூ)கா (டூ)கா
என்று கரைகிறாயோ?

அடுத்து நடந்தது எல்லாம் சரித்திரம் நண்பா. என்னோட வாழ்க்கைய நான் எலக்கியத்துக்கே அர்ப்பணிக்க முடிவு பண்ணிட்டேன். ஒரு நாளைக்கு இருபத்தெட்டு மணி நேரமும் எழுத்துத்தான். விடுறதில்லை. எலக்கியத் திமிங்கலம்னு பேரு வாங்காம விடுறதில்லை. கண்ணுல பாக்குற எல்லாத்தையும் பதிவு பண்ண ஆரம்பிச்சேன். மனுஷன், மரம், நாய், நரி, நண்டு , நட்டுவாக்கிளி.. எதையும் விட்டுவைக்கல.

ஒவ்வொரு கதையும், கவிதையும் நான் இந்த நாட்டுக்குத் தந்த பொக்கிஷம். ஆனா இந்த பாழாப்போன தமிழ்ச்சூழல்ல எழுத்தாளன யாரு மதிக்கிறா? நான் பத்திரிக்கைகளுக்கு அனுப்பின கதைய எல்லாம் ஒரு பயலும் மதிக்கல. சரி.. அவனுங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான். அதுக்காக நான் எழுதாம இருக்க முடியுமா?

வீட்டுலதான் நம்மள ஒரு கணக்காவே எடுத்துக்கலைன்னா.. இந்த சேக்காளிப் பயலுவ.. "அது நம்ம பக்கமாத்தான் வருதுன்னு" ஜுராசிக் பார்க்கப் பார்த்த மாதிரி அவனுகளும் நம்மள கண்டாலே ஓடுறானுங்க. அப்படி அவனுகள நான் என்னத்த கேட்டுட்டேன்? ஏண்டா.. என் எழுத்த எல்லாம் புத்தகமா போடுறீங்களான்னு கேட்டேன். இது ஒரு குத்தமா? சரி விடுங்க பாஸ்.. இவங்க எப்பவுமே இப்படித்தான். இதெல்லாம் பார்த்தா எழுத்தாளன் ஆக முடியுமா?

இந்த உலகத்துக்கு என்னை நிரூபிக்கிற வரைக்கும் இந்த லட்சியப்பயணம் கண்டிப்பா தொடரும் பாஸ். அப்புறம்.. நீங்க தப்பா நினைக்கலைன்னா உங்ககிட்ட ஒண்ணு கேட்கலாமா? ஹி ஹி ஹி.. நீங்க ஏன் என்னோட புத்தகத்த போடக்கூடாது? ஹலோ ஹலோ.. எங்க ஓடுறீங்க..

(நகைச்சுவைக்காக மட்டுமே.. யாரையும் குறிப்பிடுவது அல்ல.. நீங்க யாரையாவது பொருத்திப் பார்த்தா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.. அப்புறம் கவிதைகளுக்கான காப்பிரைட்ஸ் - கானா பானா)

October 18, 2010

ஒரு எழுத்தாளனின் (சோகக்) கதை

முடிவு பண்ணி விட்டேன். வேறு வழியே இல்லை. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வீட்டில் வெட்டிப்பயல், தண்டம் என்றெல்லாம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பது? உருப்புடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும். ஆமாம். அதனால் நான் எழுத்தாளராகப் போகிறேன்.

சுப்.. அப்படி எல்லாம் சிரிக்கக் கூடாது. நான் என் அம்மாவிடம் இதைச் சொன்னபோது அவரும் இப்படித்தான் சிரித்தார். "நீ திருந்தவே மாட்டியாடா?" என்று அட்வைஸ் வேறு. பரவாயில்லை. கண்ணம்மாவுக்குத் தெரியுமா கதை எழுதுபவனின் அருமை. என்னடா இந்த சின்னப் பையனுக்கு இவ்ளோ அறிவான்னு உங்கள் எல்லாருக்கும் பொறாமை.

ஏதாவது செய்யணும்னு முடிவு பண்ணிட்ட.. அது ஏன் கதை எழுதணும்னு தோணுச்சு?

அப்படி கேளுங்க.. சின்ன வயசுல இருந்தே எனக்குள்ள ஒரு பொறி இருந்திருக்குங்க (ஆயுத பூஜைக்கு தரது கிடையாது). சிறுவர் மலர், பாப்பா மலர்ல எல்லாம் நிறைய கதை வாசிச்சுக்கிட்டே இருப்பேனாம். ஸ்கூல்ல என்னோட பரீட்சை பேப்பரைத் திருத்தி முட்டை போடுற வாத்திமாருங்க கூட நீ கதை எழுதத்தாண்டா லாயக்குன்னுதான் திட்டுவாங்கன்னா பாருங்களேன்.

எல்லாத்துக்கும் மேல, அன்னைக்கு ராத்திரி நான் ஒரு கனவு கண்டேன். ஒரு பெருசு நமக்கு சால்வை எல்லாம் போத்தி "எழுத்தாளர் குல திலகம் வாழ்க" அப்படின்னு சொல்றார். அப்படியே திகைப்புல முழிச்சு பார்த்தா மணி காலைல அஞ்சு மணி. எப்பவுமே அதிகாலைல காணுற கனவு பலிக்கும்னு சொல்லுவாங்க. அதனாலத்தான் நான் முடிவு பண்ணினேன் - எழுத்தாளர் ஆகுறதுன்னு...

முடிவு எடுத்தாச்சு. ஆனா என்ன எழுதுறது எதப்பத்தி எழுதுறது? யாருக்கிட்ட கேக்கலாம்? கழுதை கெட்டா குட்டிச்சுவரு. நேரா நம்ம நண்பர்கள்கிட்ட போய் நின்னேன். எல்லாப்பயலும் எங்கம்மா மாதிரியே சிரிச்சானுங்க- ஒருத்தனைத் தவிர. குமார் - நீதாண்டா என் உயிர் நண்பன். அவன் சொந்தமா பழைய பேப்பர் கடை வச்சிருக்கான்கிற விவரம் நமக்குத் தேவை இல்லாதது.

"டேய் மாப்ள... எந்த வேலைய செய்யும்போதும் முன்னோர்களோட அறிவுரை அவசியம்டா.. இப்போ நீ ஏதாவது எழுதனும்னா ஏற்கனவே எழுதிக்கிட்டு இருக்குற ஒருத்தரோட வழிகாட்டுதல் வேணும்டா.."

எனக்கு அப்படியே உடம்பு புல்லரிச்சுப் போச்சு. ஒரு நிமிஷத்துல அவன் சோனியா காந்தி மாதிரியும் நான் மன்மோகன் மாதிரியும் ஒரு உணர்வு. (எப்பவுமே கிருஷ்ணர் - அர்ஜுனனைத் தான் சொல்லனுமா?)

"யாரடா மாப்ள போய்ப் பார்க்கலாம்?"

"எங்க தெருவுல செல்வம் அண்ணன்னு ஒருத்தர் இருக்காரு.. எனக்குத் தெரிஞ்சு பதினஞ்சு வருஷமா எழுதிக்கிட்டு இருக்காரு.. அவரப் போய் பார்ப்போம்டா.."

நாங்கள் போனபோது செல்வம் அண்ணன் அவர் வீட்டில் அதிபயங்கர சிந்தனையில் இருந்தார்.

"வா குமாரு.. தம்பி யாரு.."

"நம்ம பயதானே.. எழுதிப் பழகணும்னு ஆசைப்படுறான்.. அதான் உங்க கூட சேர்த்து விடலாம்னு.."

அண்ணனின் கண்கள் ஒரு வினாடி பெருமையில டாலடிச்சது.

"செஞ்சிரலாம் தம்பி.. நம்ம கிட்ட வந்துட்டீங்க இல்ல.. இனிமேல் உங்களுக்கு எல்லாமே ஜெயம்தான்.. ஊருக்குள்ள நம்மளப் பத்திக் கேட்டுப் பாருங்க.. கதை கதையா சொல்லுவாங்க.. எம்.ஜி.யார் ஜெயிச்ச்சதுக்குக் காரணம் என்ன.. எல்லாம் நம்ம எழுத்துத்தானே.."

எனக்குப் புரியவில்லை. "அது எப்படிண்ணே.."

"பின்ன.. ஊருல ஒரு சுவரு விடாம புடிச்சு புரட்சித் தலைவர் வாழ்கன்னு எழுதி பட்டையக் கிளபிட்டோம்ல.. இப்பக் கூட பாருங்க.. அடுத்தத் தேர்தல்ல நீங்க நமக்குத் தான் எழுதணும்னு ரெண்டு கட்சிக்காரனும் உசிர வாங்குறானுங்க.. அதான் யார் பக்கம் போகலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.."

"என்னது.. செல்வம் சுவத்துல விளம்பரம் எழுதுறவரா? டேய்.. குமார் என்னடா இது?"

நான் காண்டாக குமாரைப் பார்த்தபோது அவன் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். செல்வத்திடம் அப்புறம் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டுக் கிளம்பினோம். தெருவில் நடந்தபோது ரெண்டு பேரும் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை.

"சரி விடுறா.. இப்போ அடுத்து என்ன செய்யலாம்?"

நாங்கள் அடுத்து போன இடம் ரேடியோ ஸ்டேஷன்ல வேலை பார்க்குற குன்னனோட வீடு.

"வாங்க தம்பி.. எழுத்தாளர் ஆகணுமா? ரொம்ப சந்தோசம். ஆர்வம்தான் முக்கியம். இந்த புத்தகத்த எல்லாம் பார்த்துக்கிட்டு இருங்க.. எல்லாத்துலையும் நாம் எழுதி இருக்கோம்ல.. வந்திடுறேன்."

அவர் கொடுத்த புத்தகத்துல எந்தக் கதைலயும் அவர் பேரும் இல்லை. குமார் வாங்கி பார்த்தான்.

"டேய் இங்க பாருடா.."

"உலகின் ஏழு அதிசயங்களில் தாஜ்மகால் இந்தியாவில் உள்ளது. காக்கை தனக்காக கூடு கட்டிக் கொள்ளாது. பாம்புக்கு காதுகள் கிடையாது. எல்லாமே துணுக்குடா.. இதத்தான் இந்த ஆளு எழுதுவான் போல.."

சிரித்துக் கொண்டே குன்னன் வந்தார்.

"த்தம்பி.. இந்தாங்க நான் பதிப்பிச்ச புக்கு.."

எனக்கு அதை பார்த்தவுடன் திக்கென்றிருந்தது.

"ரேடியோ ரிப்பேர் செய்வது எப்படி?"

"நூறு நாட்களில் பணக்காரன் ஆவது எப்படி?"

எழுதியவர் பேரா.குன்னன் என்று வேறு போட்டிருந்தது.

"ஹி ஹி.. அப்படி போட்டாத்தான் தம்பி ஒரு மரியாதை.."

எனக்கு அழுகையே வரும் போல இருந்தது. குமாரைப் பார்த்தேன். அவனும் பேய் அறைந்த மாதிரித்தான் இருந்தான். நானும் குமாரும் கிளம்பும்போது அந்தாளு சொன்னது இன்னும் வயித்தெரிச்சல்.

"என்னை மாதிரியே நல்ல எழுத்தாளரா வர வாழ்த்துகள்.."

ரெண்டு பேரும் மண்டை காய்ஞ்சு வழியே வந்தோம்.

"குமார்.. இனிமே மத்தவங்கள நம்பி பிரயோஜனம் இல்ல.. நானா முயற்சி பண்ணி எழுதப் போறேன்.."

அவனுக்கு அப்படியே ஜிவ்வுன்னு இருந்திருக்கும் போல. என்னை கட்டிக் கொண்டான்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

- சோகம் தொடரும்

October 16, 2010

நட்புக்காக - where is the friend's home (1987)

குழந்தைகள், ஞானிகள் மற்றும் கவிஞர்கள்.. இவர்கள் மூவரும் இருப்பதால்தான் இந்த உலகில் இன்னமும் மழை பெய்கிறது என்ற இசையின் கவிதையொன்றைப் படித்திருக்கிறேன். இந்த மூவரும் வாழும் உலகம் வேறு - வெகு இயல்பானதொரு உலகம் அது. இவர்களில் இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் குழந்தைகள். அவர்களின் உலகில் யாருக்கும் எந்தக் கவலைகளும் இல்லை.

குழந்தைகள் மனதில் குரோதமோ வன்மமோ கிடையாது. எதையும் பெரிதாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் எளிமையான முறையில் அணுகக் கூடியவர்கள். அதனால்தான் இன்று வரை பெரியவர்களால் குழந்தைகளின் உலகத்தில் எளிதாகப் பிரவேசிக்க முடிவதில்லை. குழந்தைகளைப் புரிந்து கொள்ள நாம் அவர்களைப் போலவே சிந்திக்க வேண்டும். ஆனால் அது நமக்கு இயலாததாகவே இருக்கிறது.

உங்கள் பள்ளிப்பருவத்தைப் பற்றி கேட்டால் சட்டென ஞாபகத்துக்கு வருவது என்னென்ன விஷயங்கள்? நண்பர்கள், ஆசிரியர்கள், நாம் செய்த சேட்டைகள் என சொல்வதற்கான எத்தனையோ இருக்கும். வீட்டுப்பாடம் செய்யாமல் போய் ஆசிரியரிடம் திட்டு வாங்காதவர்கள் நம்மில் யாரும் இருக்கிறோமா என்ன? அதுபோன்றதொரு மாணவனின் கதையைச் சொல்லும் படம்தான் "வேர் இஸ் தி பிரண்ட்ஸ் ஹோம்.."



மூடப்பட்டு இருக்கும் கதவுக்குப் பின்னால் குழந்தைகளின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அது ஒரு வகுப்பறை. தான் சிறிது தாமதமாக வந்ததால் விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்களை ஆசிரியர் கடிந்து கொள்கிறார். பிறகு ஒவ்வொரு மாணவராக வீட்டுப்பாடத்தைத் திருத்தத் துவங்குகிறார். நெமத்சாதே என்கிற பையன் தன்னுடைய வீட்டுப்பாடத்தை நோட்டில் எழுதாமல் வெறும் தாளில் எழுதி வந்திருக்கிறான். ஆசிரியர் கோபத்தோடு அதைக் கிழித்துப் போடுகிறார். மாமா வீட்டுக்குப் போன இடத்தில் தன்னுடைய நோட்டை மறந்து வைத்து விட்டதால் தாளில் எழுதியதாக அவன் அழுதபடி சொல்கிறான்.

அருகில் அமர்ந்திருக்கும் அகமது வீட்டுப்பாடத்தை நோட்டில் அழகாக எழுதி இருப்பதை ஆசிரியர் பாராட்டுகிறார். பிறகு நோட்டில் எழுதுவதால் உண்டாகும் நன்மைகளையும் அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம் என்பதை விளக்கும் ஆசிரியர் மறுநாள் வீட்டுப்பாடம் எழுதாவிட்டால் நெமத்சாதேயை பள்ளியை விட்டு அனுப்பி விடுவேன் என்று சொல்கிறார். பள்ளி முடிந்தவுடன் மாணவர்கள் சந்தோஷமாக வெளியே ஓடி வருகிறார்கள். அப்போது நெமத்சாதே கீழே விழுந்து விடுகிறான். சேறாகிப் போன உடைகளைக்கழுவ அவனுக்கு அகமது உதவி செய்கிறான்.

வீட்டுக்கு வரும் அகமது தாய்க்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு வீட்டுப்பாடம் செய்ய உட்காருகிறான். அப்போதுதான் தெரியாமல் நெமத்சாதேயினுடைய நோட்டும் தன்னிடம் இருப்பதைத் தெரிந்து கொள்கிறான். "வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் நாளைக்கு வெளியே அனுப்பி விடுவேன்" என்று ஆசிரியர் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. அந்த நோட்டைக் கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்று தன்னுடைய தாயிடம் சொல்கிறான் அகமது.

மற்றவனுடைய வீடு எங்கே இருக்கிறது என்ற கேட்கிறாள் அம்மா. அது "போஸ்தே" என்ற ஊரில் இருக்கிறது. அங்கே போக மலைக்கு மறுபக்கம் போக வேண்டும் என்பதால் அம்மா அகமதுவை போக வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள். மறுநாள் பள்ளியில் நோட்டைக் கொடுத்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறாள். அகமது எவ்வளவு சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை.

அம்மா சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாமலேயே வீட்டுப்பாடம் செய்கிறான் அகமது. அப்போது வீட்டுக்கு வேண்டிய சாப்பாடை வாங்கி வரும்படி அம்மா சொல்கிறாள். இதுதான் சமயம் என்று அவளுக்குத் தெரியாமல் நண்பனுடைய நோட்டை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். நீண்டு வளைந்து போகும் மலைப்பாதையின் வழியாக வெகு தூரம் ஓடி போஸ்தேவை அடைகிறான். ஆனால் அங்கே நெமத்சாதேயின் வீடு எங்கிருக்கிறது என அவனுக்குத் தெரியவில்லை.

பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கும் அந்தக் கிராமத்தின் பல தெருக்களிலும் சுற்றித் திரிகிறான் அகமது. நெமத்சாதேயின் உறவுக்காரனான ஹெமதி வசிக்கும் வீட்டைத் தேடித் போகிறான். ஆனால் அந்த வீடோ பூட்டிக் கிடக்கிறது. வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் மலைப்பாதையில் இறங்கி தன்னுடைய ஊருக்கு வந்து விடுகிறான்.

வீட்டுக்குப் போகும் வழியில் அகமதுவின் தாத்தா அவனைப் பிடித்துக் கொள்கிறார். தனக்கு சிகரெட்டுகள் வாங்கி வரும்படி சொல்லும் தாத்தா இன்றைய பிள்ளைகள் கீழ்ப்படிதல் இல்லாதவர்களாக இருப்பதாக வருத்தப்படுகிறார். அங்கே ஜன்னல்கள், கதவுகள் செய்யும் ஒருவரைப் பார்க்கிறான் அகமது. அவருடையும் பெயரும் நெமத்சாதே தான் எனத் தெரிந்து கொண்டு அந்த மனிதனைப் பின்தொடர்கிறான். மலை மேலே குதிரையில் போகும் அந்த மனிதனைத் தொடர்ந்து மீண்டும் போஸ்தேவுக்கு வந்து சேர்கிறான்.

குதிரையில் போகும் மனிதனின் வீட்டுக்கு வந்து சேருகிறான் அகமது. அது அவன் தேடி வந்த வீடில்லை. மீண்டும் தேடத் துவங்குகிறான். அவன் சந்திக்கும் வயதான கொல்லனொருவன் தனக்கு நெமத்சாதேயின் வீடு தெரியும் என வழி சொல்லக் கிளம்புகிறான். இருவரும் பேசியபடியே நடக்கிறார்கள். வழியில் ஒரு சின்ன மலரை அகமதுவுக்கு பரிசாகத் தருகிறார் வயதானவர். அவர் காட்டும் வீடும் தவறானதாகவே இருக்கிறது.

தனக்கு நேரமாகி விட்டதால் அம்மா திட்டுவாள் என்று சொல்லி அவசரமாகக் கிளம்புகிறான் அகமது. வீட்டுக்குத் திரும்பி வந்து அமைதியாக உட்கார்ந்து இருக்கிறான். சாப்பாடு வேண்டாம் என மறுக்கிறான். தூங்கச் சொல்லும் அம்மாவிடம் தான் வீட்டுப்பாடம் செய்யப் போவதாக சொல்கிறான். தனியறையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கும் அவனுக்கு அருகே உணவை வைத்து விட்டுப் போகிறாள் அம்மா.

காலை. பள்ளிக்கூடம். ஆசிரியர் எல்லாருடைய வீட்டுப்பாடத்தையும் திருத்தத் துவங்குகிறார். அகமது இன்னும் வரவில்லை. பயந்தபடியே தான் எழுதி இருக்கும் தாள்களை எடுத்து மேஜையின் மீது வைக்கிறான் நெமத்சாதே. தாமதமாக உள்ளே நுழையும் அகமது அவன் அருகே வந்து உட்கார்ந்து கொள்கிறான்.

"ஆசிரியர் உன்னுடைய பாடத்தை திருத்தி விட்டாரா.. நான் உனக்காக அதை எழுதி விட்டேன்.."

ஆசிரியர் முதலில் அகமதை நோட்டைக் காட்டும்படி சொல்கிறார். பிறகு மற்றவனின் நோட்டைத் திருத்துகிறார். அந்த நோட்டுக்குள் வயதானவர் அகமதுக்குத் தந்த குட்டிப்பூ இருக்கிறது. "குட்.. நல்ல பையன்" என்று ஆசிரியர் நெமத்சாதேயைப் பாராட்டுவதோடு படம் முடிகிறது.

இரானின் முக்கிய இயக்குனரான அப்பாஸ் கிரோச்தமி இயக்கிய இந்தப்படம் 1987 இல் வெளியானது. மலை சரிவுகளில் கட்டப்பட்டு இருக்கும் வீடுகள், படிப்படியாக செதுக்கப்பட்டு இருக்கும் மலைப்பாதைகள், நடுத்தர வீடுகள் என இரானின் கிராம வாழ்க்கையை, அவர்களின் இயல்பான உலகத்தை இந்தப்படம் பதிவு செய்கிறது.

நான் பார்த்த படங்களிலேயே இந்தப்படம் போல பின்னணி இசை வெகு குறைவாக பயன்படுத்தப்பட்ட படம் எதுவுமே கிடையாது. பின்னணியில் முழுக்க முழுக்க இயற்கை சத்தங்கள் மட்டுமே இருக்க, அகமது மலைப்பாதையில் ஓடும் காட்சி மற்றும் இறுதிக்காட்சி என மூன்று இடங்களில் மட்டுமே பின்னணி இசை ஒலிக்கிறது
. ஒளிப்பதிவும் வெகு சாதாரணமானதே. ஒரு ஆவணப்படம் பார்க்கும் உணர்வைத்தான் தருகிறது.

குழந்தைகளைப் பற்றிப் பேசும் அதே நேரத்தில் இந்த படத்தில் காட்டப்படும் வயதானவர்களைப் பற்றிய விஷயங்களும் மிக முக்கியமானவை. சிறுவன் சொல்வதை கவனிக்கத் தயாராக இல்லாத பெரியவர்கள், சொல்வதை சரியாக செய்தாலும் குழந்தைகளை அடித்துத்தான் வளர்க்க வேண்டும் என்று சொல்கிற அகமதுவின் தாத்தா, நோய்வாய்ப்பட்டு கவனிக்க யாருமில்லாமல் இருக்கும் முதிய பெண், பேசக் கூட ஆளில்லாமல் தானாகக் கிளம்பி அகமதுடன் வரும் கொல்லன் என வாழ்க்கையில் நாம் கவனிக்கத் தவறும் நிறைய விஷயங்களை இந்தப் படம் பேசிப்போகிறது.

நல்ல கதை கிடைப்பதில்லை என்று சொல்லும் நம்மூர் மக்கள் இதைப் போன்ற படங்களைப் பார்க்க வேண்டும். ரொம்பவே சாதாரணமானக் கதை. கதை என்று சொல்வதை விட ஒரு நாளின் சம்பவங்கள். அவ்வளவுதான். மெதுவாக நகரும் படத்தின் திரைக்கதை நம்முடைய பொறுமையைக் கொஞ்சம் சோதிக்கிறது. குழந்தைகளிடம் நெருங்கிப் பழக நமக்கு அந்தப் பொறுமைதானே அவசியம். இந்தப்படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல விரும்புவதும் அதுதானோ என்னமோ?

October 14, 2010

அழிக்கப்படும் புராதனங்கள்

சிதறாமல் அமர்வாரா ஜைனர்?
ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை


புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே.

கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை.

மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள் தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே

collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in
மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்
To
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.

(நண்பர் ஆரூரன் விசுவநாதனின் பதிவிலிருந்து..)

October 7, 2010

காதல் அழிவதில்லை

அவர்கள் அந்த மலை சிகரத்தின் உச்சியில் நின்றிருந்தார்கள். அவன் அவள் அவர்கள். அவன் அவளுடைய கைகளை இறுகப் பற்றியிருந்தான். இருவரின் முகத்திலும் வேதனையின் கசப்பு மிகுந்திருந்தது. அவர்கள் குதிக்கத் தயாரான நேரத்தில்தான் அந்தக் குரல் கேட்டது.

"ஹேய்ய்ய்ய்ய்ய்ய்...."

அவர்கள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். அங்கே அந்தப் பெண் சிரித்தபடி நின்றிருந்தாள்.

"எக்காரணம் கொண்டும் நீங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க மாட்டேன். ஆனால் அதற்கு முன்னர் உங்களோடு சிறிது நேரம் உரையாட முடியுமா?"

அவள் பேச்சில் இருந்த உறுதி அவர்களை என்னமோ செய்தது. அவர்கள் குழப்பத்தோடு இறங்கி வந்தார்கள். இப்போது அந்தப் பெண்ணை நெருக்கத்தில் பார்க்க முடிந்தது. சற்றே வித்தியாசமாக உடை அணிந்திருந்தாள். களையான யாரையும் எளிதில் கவரக்கூடிய முகம். உதடுகளின் ஓரம் ஒட்டியிருந்த அந்தப் புன்னகை இன்னும் அழகு.

"இப்படி இந்த மரத்தின் கீழே அமர்ந்து கொள்வோமா?"

அமர்ந்தார்கள்.

"எதற்காக இந்த தற்கொலை முடிவு?"

"வேறன்ன.. எல்லாம் இந்த பாழாப்போன காதல்தாங்க.."

"உங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?"

"சொல்றேங்க... இவங்கப்பா ஊர்லையே பெரிய பணக்காரரு.. நாங்களும் வசதியான குடும்பம்தான்.. இவளக் காலேஜ்ல பார்த்து லவ் பண்ணினேன்.. இவ இல்லாம நான் இல்லைன்னு ஆகிப்போச்சு.. ரெண்டு பேர் வீட்டுலையுமே வசதி ஜாஸ்திங்கிரதால பிரச்சினை வராதுன்னு நம்பினோம்.."

"பிறகு..?"

"ஆனா எல்லாத்துக்கும் மேல தமிழன் கண்டுபிடிச்ச ஒரு விஷயத்த நாங்க மறந்துட்டோம்.. அது சாதி.. நான் கீழ்சாதியாம்.. அதனால பொண்ணு தர மாட்டேன்னு இவங்கப்பா சொல்லிட்டாரு.. நம்ம சாதியப் பத்தித் தப்பாப் பேசுனவன் பொண்ணு உனக்கு அவசியமான்னு எங்கப்பாவும் ஆட ஆரம்பிச்சுட்டாரு.. அதனால் வீட்டை விட்டு வந்தாச்சு.. என்ன பண்றதுன்னு தெரியல.. அதான் சாவுலையாவது ஒண்ணு சேருவோமேன்னு.. "

"நீங்கள் சொல்வதும் நியாயம்தான்.. ஆனால் ஒரே ஒரு கேள்வி.. செத்துப் போவதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்க முடியும் என நினைக்கிறீர்கள்?"

""எங்க அப்பாக்களுக்கு வலிக்கும்ல.. ஏன்டா இவங்களை சேர்த்து வைக்கலைன்னு காலம் பூரா அவங்க வருத்தப்படணுங்க.."

"ஹ்ம்ம்.. வீட்டை விட்டு வந்து எத்தனை நாளாகிறது?"

"ஒரு வாரமாச்சு.. ஏன் கேக்குறீங்க.."

"இந்த ஒரு வாரத்தில் எப்போதாவது உங்கள் வீட்டில் உங்களைத் தேடிக்கொண்டு வந்தார்களா?"

முதன்முறையாக அவன் முகத்தில் சிறிய குழப்பம் தோன்றியது.

"ம்ஹூம்.. இல்லைங்க.."

"உங்களை வருத்திக் கொள்வதை நான் தவறு சொல்ல மாட்டேன். ஆனால்.. உங்கள் கஷ்டத்தால் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று சொல்பவர்களுக்காக நீங்கள் உங்களை அழித்துக் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது..?"

"..."

"இப்படிப்பட்ட, உங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மக்களுக்காக நீங்கள் மாய்ந்து போகத்தான் வேண்டுமா? உலகிலேயே அதிக தைரியம் தற்கொலை செய்து கொள்ளத்தான் தேவைப்படும்.... உங்களுக்கு அதற்கான தைரியமே இருக்கும்போது வாழ வேண்டும் என்றால் போராடுவதா முடியாது?"

"ஆமாங்க.. இவங்க சொல்றதுலயும் நியாயம் இருக்கு.."அந்தப் பெண் முதல் முறையாகப் பேசினாள்.

"இந்த வாழ்க்கை எத்தனை அழகானது தெரியுமா?" அவள் பேசத் தொடங்கினாள். பேசி முடித்தபோது அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.

"நல்ல நேரத்துல வந்து எங்களைக் காப்பாத்துனீங்க.. ரொம்ப நன்றி.. இவங்க முன்னாடி நாங்க கண்டிப்பா வாழ்ந்து காட்டுவோம்.."சொல்லும்போதே அவன் நா தழுதழுத்தது.

"இந்த நம்பிக்கை என்றைக்கும் இருக்க வேண்டும். எனக்கு அது போதும். புதிய வாழ்க்கையைத் தொடங்க இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.. "

அந்தப் பெண் திரும்பி நடக்கத் தொடங்கினாள். சட்டென ஞாபகம் வந்தவனாக அவன் அவளைக் கூப்பிட்டான். அவள் நின்றாள்.

"எங்களுக்கு இவ்ளோ உதவி பண்ணினீங்க.. உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே.."

அவள் விரக்தியாகச் சிரித்தாள்.

"நானும் உங்களைப் போல தகுதி பார்க்காமல் காதலித்தவள்தான். என் அதீத அன்பே என் காதலரின் மரணத்துக்கு காரணமாகிப் போனது. நானும் ஒரு சில மருந்துகளை ஒன்றாகக் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். ஆனால் என் கேட்ட நேரம் பிழைத்துக் கொண்டேன். ஒவ்வொருவர் வாழ்விற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். அன்று முதல் என்னால் இயன்றவரை காதல் ஜோடிகளை ஒன்று சேர்த்து வாழ வைத்து வருகிறேன். நான் காப்பாற்றும் 3 ,88 ,76,543 ஆவது ஜோடி நீங்கள்.."

அவன் முழித்தான்.

"புரியலையே.."

"சில விஷயங்கள் புரியாமலிருப்பதே நல்லது.. நான் கிளம்புகிறேன்.."

"ஹலோ.. உங்க பேரென்னன்னு சொல்லவே இல்லையே.."

அவள் மெல்லிய புன்னகையோடே சொன்னாள்.

"அமராவதி.."

October 4, 2010

பரத்தை கூற்று

இன்றைய சமூகத்தில் அடிமை வழக்கங்கள் ஒழிந்து விட்டதாக சொல்கிறோம், ஆனால் அது உண்மையல்ல. அவை இன்றும் இருக்கின்றன, ஆனால் பெண்கள் மட்டுமே அதற்கு ஆட்படுத்தப்படுகிறார்கள்.. அதன் பெயர்தான் விபச்சாரம்.

- விக்டர் ஹ்யூகோ

நண்பனொருவனோடு பேசிக் கொண்டிருந்தேன். அவன் வெகு நாட்களாக ஒரு பெண்ணை ஒருதலையாய்க் காதலித்து வந்தான்.

"ஏண்டா மாப்ள.. அந்தப் பொண்ணு என்னடா ஆனா? சொன்னியா இல்லையா?"

"பச்ச்.. விடுறா மாப்ள.. அது ஒரு ரூட்டுடா.. அதப் பத்திப் பேசாத.."

எனக்கு அதிர்ச்சி.

"என்னடா.. ஏன் இப்படி சொல்ற.."

"அவ வேற யாரையோ லவ் பண்றாளாம்.. தே******"

நான் இங்கு என் நண்பன் சொன்னது சரி, தவறு என்பது பற்றி பேச விழையவில்லை. மாறாக அவனது பேச்சில் ஒளிந்திருக்கும் ஒரு பொது புத்தியைப் பற்றியே பேச விழைகிறேன். ஒரு பெண்ணைப் பிடிக்கவில்லை. அவளை அசிங்கப்படுத்த வேண்டும். என்ன செய்யலாம்? ரொம்ப எளிது.. ஒற்றை வார்த்தையில் அவள் ஒரு தே**** என்று சொன்னால் வேலை முடிந்தது.

வேசை - தேவரடியாள் என்பது பின்னர் தே***வாக மாறியது.. அந்த வார்த்தையில் இருக்கும் வன்மமும் வலியும்.. தங்கள் உடலையே முதலீடாக வைத்து பிழைப்பு நடத்தும் பாலியல் தொழிலாளிகள் பற்றிய நம் மதிப்பீடு என்னவாக இருக்கிறது? பாலியல் தொழிலாளிகள் இல்லாவிட்டால் இந்த சமூகம் எப்படி இருக்கும்? அவர்களுக்கு இந்த சமுதாயத்தில் என்ன இடம் இருக்கிறது? சமுதாயம் பற்றிய அவர்கள் பார்வை என்னவாக இருக்கும்? இப்படியாக.. நாம் கேட்க நினைக்கின்ற ஆனால் கேட்கத் தயங்குகின்ற கேள்விகள் நிறையவே உண்டு.

இந்தக் கேள்விகளுக்கான விடை தேடும் முயற்சியாகவே சி.சரவணகார்த்திகேயனின் "பரத்தை கூற்றை" அணுகமுடிகிறது. பொதுவெளியில் தைரியமாக பேச முடியாத விஷயமாகவே இன்றுவரை இருக்கும் பாலியல் தொழிலாளிகள் பற்றிய தன்னுடைய கருத்துக்களை இந்தப் புத்தகத்தில் CSK ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார்.

கற்பு பற்றிய தன்னுடைய பார்வை, வேசிகளின் வரலாறு, பெண்களின் மீதான மறைமுகத் தாக்குதல், சங்க இலக்கியத்தில் காணப்படும் பரத்தையர் கூற்று, நவீன இலக்கியத்தில் காணப்படும் பதிவுகள் என சகலத்தையும் அலசிப்போகும் ஆசிரியரின் மிக நீண்டதொரு பூர்வ பீடிகையுடன் ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம். "நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு கணத்தில் விபச்சாரியாக நடந்து கொள்கிறோம் - மனதாலும் உடலாலும்". என்னை மிகவும் கவர்ந்த வார்த்தைகள் இவை. அதைப் போலவே புத்தகத்துக்கான தலைப்பை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதையும் சுவாரசியமாகவே சொல்லி இருக்கிறார்.

ஜி.நாகராஜனின் வரிகளை முன்னுரையாகக் கொண்டும், வித்தியாசமானதொரு கடவுள் வாழ்த்து பாடியும் ஆரம்பிக்கிறது புத்தகம். மொத்தம் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும், முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும், மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும், நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும், பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும். ஒவ்வொரு திணைக்கும் முப்பது கவிதைகள் என மொத்தம் நூற்றைம்பது கவிதைகள்.

ஒரு வேசியின் பார்வையில் சமுதாயம் என்பதே பெரும்பாலான கவிதைகளின் உள்ளர்த்தமாக இருக்கிறது. இந்தக் கவிதைகளில் காணக் கிடைக்கும் எள்ளலும், அதன் ஊடான கோபமுமே இந்த மொத்தப் புத்தகத்தின் சாரம் என்று சொல்லலாம். இதுதான் நிதர்சனம் என்று பட்டவர்த்தனமாக முகத்தில் அடிக்கின்றன கவிதைகள்.

என்ன இருந்தாலும்
எம் மகளிரைப் போல்
ஆண்களை உறவுக்கு
அழைக்கும் மறுக்கும்
உரிமையில்லையுன்
இல்லக்கற்பரசிகட்கு

கொடுப்பினை
வேண்டும்
கற்போடு
வாழ்வதற்கும்

புழுவோ மண்ணோ
கழுகோ நெருப்போ
தின்னப் புகும் முன்
நீயும் ருசித்துப் போ

விபச்சாரம்
என்பதும்
பெண்ணுரிமை

காசின்றிப்
புணரத் தேவை
காதல்

வாசிக்கும்போதே நமக்கு பல்வேறான உணர்வுகளைத் தூண்டி விட்டு.. நாமும் இதில் ஒரு பகுதிதானே, இதைப் பற்றி நம்மால் என்ன செய்து விட முடியும் என்கிற குற்றவுணர்ச்சியும், சின்னதொரு வலியும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

இந்தப் புத்தகத்தின் குறைகள் என்று எதைச் சொல்லலாம்? எல்லா விஷயங்களுமே வேசை - சமுதாயம் என்கிற ஒரு பரிமாணத்தை மட்டுமே பேச முற்படுவதாக எனக்கொரு உணர்வு. எத்தகைய சூழல்களில் பெண்கள் வேசைத்தனத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.. விரும்பி வருபவர்களின் மனநிலை எப்படி இருக்கும்.. அவர்களின் அக உலகம் குறித்தான பார்வை இந்தப் புத்தகத்தில் அவ்வளவாக சொல்லப்படவில்லை. அதேபோல கவிதைகளின் வடிவமும்... ஒரு சில கவிதைகள் வெறும் ஸ்டேட்மென்டாக முடிந்து போகின்றன.

தேவைப்பட்டால்
தயங்க மாட்டோம் -
வீதியிலிறங்கிக்
கூவியழைக்கவும்

உறவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்- வீணில்
உண்டு கழித்திருப்போரை
நிந்தனை செய்வோம்

அசர அடிக்கும் கவிதைகளுக்கு நடுவே இது போன்ற ஒரு சில விஷயங்களும் அங்கங்கே வந்து விழுவதைத் தவிர்த்திருக்கலாம். கிட்டத்தட்ட நானூறு கவிதைகளில் இருந்து இந்தக் கவிதைகளைத் தேர்ந்து எடுத்திருப்பதாக ஆசிரியர் சொல்கிறார். கவிதைகளில் தேர்ந்தெடுப்பதில் இன்னும் கூடக் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என்கிற எண்ணத்தை இது போன்ற கவிதைகள் தோற்றுவிக்கின்றன.

கடைசியாக - "பரத்தை கூற்றை" வாசிக்கும் யாருக்கும் காமக் கடும்புனலின் ஞாபகம் வருவது நிச்சயம். ஆனால் இரண்டு புத்தகங்களின் தளமும் வேறு. பரத்தை கூற்று வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் கவன ஈர்ப்புக்காகவும் எழுதப்பட்டு இருக்கும் புத்தகம் அல்ல. மாறாக நாம் ஒதுக்கி வைத்திருக்கும், மதிக்க மறுக்கும் சமுதாயத்தின் ஒரு அங்கத்தையும் அவர்களின் உணர்வுகளையும் ஆவணப்படுத்துவதற்கான முயற்சி. அதில் CSK சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியும் பெற்றிருக்கிறார். புத்தகத்தை வெளியிட்டு இருக்கும் "அகநாழிகை" பதிப்பகத்துக்கு வாழ்த்துகள்.

பரத்தை கூற்று
சி.சரவணகார்த்திகேயன்
அகநாழிகை வெளியீடு
விலை - ரூ.50/-