October 28, 2010

உக்கார்ந்து யோசிச்சது (28-10-10)

வல்லமை கூடி வடமென நரம்பேறி வல்வினை தீர்ந்து
நல்வளம் நகை கூட்டி சொல் திரண்டு சுகவீனம் மாய்ந்து
பொல்லா படுக்கை நீங்கி புதிர்விதி பொய்க்க வாய்ந்து
வெல்லவே வாழ்வு விரைந்தெழு சிறப்பே

மிக மோசமானதொரு சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடி வந்த என்னுடைய மாணவன் கவுதமுக்காக நண்பர் நேசமித்திரன் எழுதிய வரிகள்தான் மேலே இருப்பவை. கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்குப் பிறகு, இனி உயிருக்கு எந்த பயமுமில்லை என்று, நேற்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். இரண்டொரு நாட்களில் ஜெனரல் வார்டுக்கு மாற்றி விடலாம் என்றும் சொன்னார்கள்.

அவன் பழைய நிலைமைக்குத் திரும்ப சில காலம் ஆகலாம் என்றாலும் அவன் மீண்டு வந்ததில் அனைவருக்கும் ரொம்ப சந்தோசம். ரொம்பவும் இக்கட்டானதொரு நேரத்தில் உதவிய, அவனுக்குத் துணை நின்ற அத்தனை மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் என் நன்றி. அவனுக்காக வேண்டிக் கொண்ட, வேறெதுவும் உதவி வேண்டுமா என்று வினவிய, போனிலும் மின்னஞ்சலிலும் ஆறுதல் சொல்லிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

***************

பிரியத்துக்குரிய அண்ணன் பா.ரா அவர்களின் இல்லத் திருமணத்திற்கு மதுரைப் பதிவுலக நண்பர்களோடு போயிருந்தேன். திருமண நாளன்று கல்லூரிப் பணிகள் இருந்ததால் விசேஷத்துக்கு முதல் நாள் இரவே சிவகங்கை போய் விட்டோம். யாரோ ஒரு சின்னப் பையன் வந்து வாங்க கா.பா என்று வரவேற்றார். பிறகு அவர்தான் பா.ரா என்று சொன்னார்கள். மனிதர் அத்தனை இளமையாக இருக்கிறார். சுத்திப் போடுங்கண்ணே..

பிறகு பா.ராவின் வீட்டுக்குப் போய் சகோதரி மகாவைப் பார்த்து வாழ்த்தி விட்டு வந்தோம். மறுநாள் திருமணத்துக்கு நிறைய பதிவர்கள் வந்து இருந்தார்களாம். மிஸ் பண்ணி விட்டேன் என்பதில் கொஞ்சம் வருத்தம். அதே தினத்தில் நண்பர் ராஜனுக்கும் சென்னையில் திருமணம் நல்ல முறையில் நடந்திருக்கிறது. தம்பதிகள் இருவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகள்.

***************

மதுரை பெரியார் நிலையம் பாலத்தில் வண்டியில் போய்க் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஓரமாக நடந்து போய்க் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து விட்டார். அவரைச் சுற்றி உதவி செய்ய மூன்று நான்கு பேர் கூடி விட்டோம். அவர்களில் சாலைப் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்த காவல் அதிகாரி ஒருவரும் இருந்தார். பெரியவருக்கு ஓரளவு தெளிந்தவுடன் எங்கே போக வேண்டுமென விசாரித்தோம். அவருடைய வீடு பைபாஸில் இருக்கும் விபரத்தைக் கேட்டவுடன் அருகில் இருந்த ஒரு ஆட்டோ டிரைவர் தான் கொண்டு போய் விடுவதாகச் சொன்னார்.

ஆனால் பெரியவர் நடக்க முடியாத காரணத்தால் கூட யாரேனும் போக வேண்டியதாக இருக்கும். நானோ வண்டியை விட்டு வர முடியாது. டக்கென அந்த காவல் அதிகாரி தான் போய் வருவதாக தன்னுடைய மேலதிகாரிக்கு போனில் தகவல் சொல்லி மாற்று ஏற்பாடு செய்து விட்டுக் கிளம்பி விட்டார். காவலர்கள் என்றாலே பொதுமக்களைப் பாடாய்ப்படுத்துபவர்கள் என்றில்லாமல் இப்படியும் சில மனிதர்கள் இருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.

***************

நண்பனின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவனுடைய மனைவி சின்னக் குழந்தைகளுக்கு ட்யூஷன் நடத்திக் கொண்டிருந்தார். ஆத்திச்சூடி வரிகளை எழுதச் சொல்லி அவ்வையார் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்.

"எழுதுங்க.. தந்தையும் தாயும் பேண்.."

சிறிது நேரம் கழித்து ஒரு குழந்தை தான் எழுதிக் கொண்டு வந்ததை நீட்டியது. அதை வாசித்து எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

"தந்தையும் தாயும் பேய்.."

பாவம். அதற்கென்ன கஷ்டமோ? குழந்தைகள் எப்போதும் பொய் பேசாது என்பதுதான் நமக்கு எல்லோருக்கும் தெரியுமே..:-))

***************

ஒரு வாரமாக வீட்டில் இணைய இணைப்பு இல்லை. தினம் ஒரு படமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். the naked gun, rush hour போன்ற ஜாலி படங்களாகப் போய்க் கொண்டிருக்கிறது. 1988 யில் வெளிவந்த "வில்லோ (willow)" என்றொரு மாயாஜாலப் படம். வால் கில்மர் நடித்தது. ஜார்ஜ் லூகாஸின் கதை. இரண்டு தலை ராட்சத மிருகம், இரண்டு இன்ச் நீளமே இருக்கக் கூடிய மனிதர்கள் என்று சில முயற்சிகள் செய்திருக்கிறார்கள். இதையெல்லாம் எங்கள் தமிழ்ப் படங்களில் 50-60களிலேயே (மணாளனே மங்கையின் பாக்கியம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்) செய்து பார்த்தாச்சு போங்கப்பா என்றுதான் தோன்றியது. அதுவும் நம்ம விட்டாலாச்சார்யா படத்துக்கு ஏதும் ஈடு இணை உண்டா என்ன?

***************

மீதி வெள்ளித்திரையில் - தியோடர் பாஸ்கரனின் தமிழ்சினிமா பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு. ஆரம்பத்தில் மிக முக்கியமானதொரு புத்தகத்தை வாசிக்கிறோம் என்பதாக இருந்த உணர்வு போகப்போக காணாமல் போனது. ஒரு சில தகவல்கள் தவிர்த்து எல்லாமே ரொம்ப மேலோட்டமான கட்டுரைகள். அதேபோல மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தையே கட்டுரைகள் பேசுவதால் வரும் சலிப்பும் ஏற்படுகிறது.

ஆதலினால் - குங்குமத்தில் எஸ்ரா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. விஜயா வெளியீடு. "துணையெழுத்தில்" வந்த விஷயங்களையே வடிவம் மாற்றிக் கொடுத்திருக்கிறார் என்பது தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.

***************

"தா" படத்தின் பாடல்கள் ரொம்பப் பிடித்து இருக்கின்றன. ஸ்ரீ விஜய் என்கிற புதியவரின் இசை. "என்னைத் தொட்டுப்புட்டா", "ஏதோ ஒரு ஏக்கமோ" இரண்டு பாடல்களுமே மனதை அள்ளிக் கொள்ளுகின்றன. பாடல்களைக் கேட்க இங்கே சொடுக்குங்கள். அதுபோக இப்போது அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் - மந்திரப் புன்னகையின் "சட சட..". இந்தக் காதலைக் கண்டடைய எத்தனை காமம் கடந்து வந்தேன்... பாடல் வரிகளே போதை. வித்யாசாகர் அசத்தி இருக்கிறார்.

***************

முடிக்கிறது முன்னாடி..

வாத்தியார்: படிச்சு முடிச்சு நீங்க என்னவாக ஆசைப்படுறீங்க?

மாணவன்: நான் எம்.பி.பி.எஸ் படிச்சு போலிஸ் ஆகி நல்ல சாப்ட்வேர் கம்பெனில லாயரா ஒர்க் பெரிய பெரிய கட்டிடமா கட்டப் போறேன் சார்..

வாத்தியார்: அவ்வவ்.. என்ன தம்பி சொல்ற?

மாணவன்: அடிங்கோய்யால.. எங்களுக்கு எத்தனை நாள் இதேமாதிரி புரியாமக் கிளாஸ் எடுத்திருப்ப?

அந்த வாத்தியார் நீங்கதான என்பது போன்ற கேள்விகள் தடை செய்யப்பட்டுள்ளன.. ஹி ஹி ஹி..

இப்போதைக்கு அவ்ளோதான்.. நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))

15 comments:

R. Gopi said...

மீதி வெள்ளித்திரையில் வரும் ஜெயகாந்தன் கட்டுரை நன்றாக இருக்கும். சாருவின் மகாநதி படத்திற்கான விமர்சனம் நன்றாக இருக்கும்.

பெரிய நக்கீரர்னு நினைப்பு. எப்ப பாரு ஏதாவது குத்தம் சொல்லிக்கிட்டே:)

ஆமாம், நான் எழுதின கதையே நல்லா இல்லைன்னு சொல்லிட்டீங்க. வேற எது நல்லா இருக்கும் உங்களுக்கு:)

Balakumar Vijayaraman said...

கௌதம் - மிக்க சந்தோஷம். :)
பா.ரா. - இனிய பயணம்
காவலர் - மனிதர்
குழந்தை - மழலை அழகு :)
படம் - :)
புத்தகம் - :(
ஜோக் - ம்ம்ம்

வார்த்தை said...

//காவலர்கள் என்றாலே பொதுமக்களைப் பாடாய்ப்படுத்துபவர்கள் என்றில்லாமல் இப்படியும் சில மனிதர்கள் இருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.//

அவருக்கு ஒரு சல்யூட்.
அடுத்த முறை அந்த காவலரை கடக்கும் பொழுது, முடிந்தால் அன்பு கூர்ந்து அவரிடம்
இது போல பதிவு எழுதியதையும் என் போன்ற முகம் தெரியாத பலர் அவரை பாராட்டியதையும் தெரிவிக்கவும்.
(எல்லா மனசும் ஒரு சின்ன அன்புக்கும், அங்கீகாரத்துக்கும் தானே ஏங்கி கெடக்கு)

Sriakila said...

//"தந்தையும் தாயும் பேய்.."

பாவம். அதற்கென்ன கஷ்டமோ? குழந்தைகள் எப்போதும் பொய் பேசாது என்பதுதான் நமக்கு எல்லோருக்கும் தெரியுமே..:-))
//

மிகச் சரியாக சொன்னீர்கள்.

Rajaraman said...

\\அவருக்கு ஒரு சல்யூட்.
அடுத்த முறை அந்த காவலரை கடக்கும் பொழுது, முடிந்தால் அன்பு கூர்ந்து அவரிடம்
இது போல பதிவு எழுதியதையும் என் போன்ற முகம் தெரியாத பலர் அவரை பாராட்டியதையும் தெரிவிக்கவும்.
(எல்லா மனசும் ஒரு சின்ன அன்புக்கும், அங்கீகாரத்துக்கும் தானே ஏங்கி கெடக்கு) //

வழி மொழிகிறேன். இதன்மூலம் அவரது சேவை மென்மேலும் பெருகும்..

Anonymous said...

//"தந்தையும் தாயும் பேய்.."// :))

தினம் ஒரு படமாகபார்த்துக் கொண்டிருக்கிறேன்.//
விமர்சனம் வருமா ?

பவள சங்கரி said...

இபபடிக்கூட மனிதர்களா........

☀நான் ஆதவன்☀ said...

:)))) ஜோக் கலக்கல்

கார்த்திகைப் பாண்டியன் said...

//Gopi Ramamoorthy said...
மீதி வெள்ளித்திரையில் வரும் ஜெயகாந்தன் கட்டுரை நன்றாக இருக்கும். சாருவின் மகாநதி படத்திற்கான விமர்சனம் நன்றாக இருக்கும்.//

கோபி.. நீங்க வேற ஏதோ புத்தகம் பத்தி சொல்றீங்கன்னு நினைக்கிறேன்.. இதுல அந்த மாதிரி கட்டுரைகள் ஏதும் இல்லப்பா..

//பெரிய நக்கீரர்னு நினைப்பு. எப்ப பாரு ஏதாவது குத்தம் சொல்லிக்கிட்டே:)ஆமாம், நான் எழுதின கதையே நல்லா இல்லைன்னு சொல்லிட்டீங்க. வேற எது நல்லா இருக்கும் உங்களுக்கு:)//

குத்தம் சொல்லணும்னு இல்ல.. படிச்சதுல பிடிக்குது பிடிகள.. அவ்ளோதான்.. மத்தபடி உங்க கதைய படிச்சா நக்கீரரே டெர்ரர் ஆகிடுவாரு சாமி.. நான் என்னத்த சொல்ல..:-)))

//வி.பாலகுமார் said...
கௌதம் - மிக்க சந்தோஷம். :)
பா.ரா. - இனிய பயணம்
காவலர் - மனிதர்
குழந்தை - மழலை அழகு :)
படம் - :)
புத்தகம் - :(
ஜோக் - ம்ம்ம்//

இதும் நல்லாத்தான் இருக்கு. நன்றி பாலா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வார்த்தை said...
அவருக்கு ஒரு சல்யூட். அடுத்த முறை அந்த காவலரை கடக்கும் பொழுது, முடிந்தால் அன்பு கூர்ந்து அவரிடம் இது போல பதிவு எழுதியதையும் என் போன்ற முகம் தெரியாத பலர் அவரை பாராட்டியதையும் தெரிவிக்கவும்.
(எல்லா மனசும் ஒரு சின்ன அன்புக்கும், அங்கீகாரத்துக்கும் தானே ஏங்கி கெடக்கு)//

//Rajaraman said...
வழி மொழிகிறேன். இதன்மூலம் அவரது சேவை மென்மேலும் பெருகும்..//

கண்டிப்பாங்க.. தினமும் கல்லூரிக்குப் போகும்போது அவரைப் பார்க்கிறேன்.. சின்னதாய் ஒரு சிரிப்பு.. ரெண்டு பேருக்குமே சந்தோஷமா இருக்கு..:-)))

//Sriakila said...
மிகச் சரியாக சொன்னீர்கள்.//

;-))))

கார்த்திகைப் பாண்டியன் said...

//Balaji saravana said...
விமர்சனம் வருமா ?//

பயப்படாதீங்க பாலாஜி.. விமர்சனம் எல்லாம் கிடையாதுப்பா..;-))

//நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
இபபடிக்கூட மனிதர்களா........//

ஏங்க.. சந்தோஷமாத்தான் சொல்லுங்களேன்..;-))

//ஆதவன் & சென்ஷி//

நன்றி மக்களே..

மேவி... said...

நல்ல எழுதிருக்கீங்க தல ....

ரொம்ப சோர்வாய் இருப்பதால் பெரிய பின்னோட்டம் போடமுடியல

மதுரை சரவணன் said...

good ... ungkal muyarchchi, maanavarkal piraarththanai, ammaanavanai kaappaarri ullathu. anaihthum arputham.

Unknown said...

//அந்த வாத்தியார் நீங்கதான என்பது போன்ற கேள்விகள் தடை செய்யப்பட்டுள்ளன.. ஹி ஹி ஹி..//

:))

கவுதமுக்கும், காவலருக்கும் வாழ்த்துக்கள்.

ராஜன் திருமணத்துக்கு (வரவேற்புக்கு) நேரில் வாழ்த்து சொல்லியாச்சு. பா.ரா மகளுக்கும், மருமகனுக்கும் வாழ்த்துக்கள்!

கார்த்திகைப் பாண்டியன் said...

@டம்பி மேவீ said...

பெரிய பின்னூட்டம் போடணும்னு ஏதும் கட்டாய்ச்சட்டம் எல்லாம் இங்க கிடையாது ராசா..:-))

@சரவணன்

நன்றி தலைவரே

//தஞ்சாவூரான் said...
ராஜன் திருமணத்துக்கு (வரவேற்புக்கு) நேரில் வாழ்த்து சொல்லியாச்சு. பா.ரா மகளுக்கும், மருமகனுக்கும் வாழ்த்துக்கள்!//

நேர்ல போயிருந்தீங்களா.. ரொம்ப சந்தோஷம் நண்பா..