June 22, 2011

கலைடாஸ்கோப் மனிதர்கள்

பெரியார் பேருந்து நிலையத்தின் வளைவில் இருக்கும் அந்த பைக் ஸ்டாண்டுக்குள் அவன் நுழைந்தபோது சாயங்காலம் மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. மொத்த இடத்தையும் அடைத்துக் கொண்டு நின்றிருந்த பைக்குகள் சிதறிப்போன சங்கிலியொன்றின் கண்ணிகளை ஞாபகப்படுத்தின. காலையில் விட்டுப்போன இடத்தில் தனது பைக்கைக் காணாமல் தேடத் துவங்கியவன் ஒரு ஓரமாக தூக்கி கடாசப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தான்.

ஊரின் மொத்த தூசியையும் எடுத்து அப்பியது போல பைக்கின் சீட் அலங்கோலமாக இருந்தது. இது போன்ற தருணங்களில் பயன்படுத்தவென எப்போதும் பைக்கில் சொருகி வைத்திருக்கும் துணியையும் காணவில்லை. யாரோ ஒரு நாதாரி எடுத்து விட்டிருக்கலாம். என்ன செய்வதெனத் தெரியாமல் அருகில் இருந்த வண்டிகளை நோட்டம் விட்டான். டிவிஎஸ் 50 ஒன்றில் நீட்ட துணி ஒன்று இருந்தது. அதை எடுத்து வண்டியைத் துடைத்தவன் சத்தமில்லாமல் தன் பைக்குள் போட்டுக் கொண்டான். இனிமேல் கிழிந்த துணியை வண்டியில் வைக்கக் கூடாது என்று தனக்குத்தானே சொல்லியபடி வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அம்மாவுக்கு மாதாமாதம் கொடுக்க வேண்டிய ஹோமியோபதி மாத்திரைகளை வாங்க கீழவாசல் வரை போக வேண்டி இருந்தது. காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டின் வழியே வண்டியை செலுத்தத் தொடங்கினான். வாகனங்களின் நெரிசல் ரொம்பவே அதிகமாக இருந்தது. மாலை வேளைகளில் இந்த சாலையில் வண்டியோட்டுவது போன்ற மடத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது என நினைத்துக் கொண்டவனை சூமென ஒரு ஸ்கூட்டி கடந்து போனது. அந்த வண்டியை ஓட்டிப்போன பெண் பின்னோக்கிய கோணத்தில் பார்க்க வெகு வடிவானவளாகத் தெரிந்தாள். அவள் முகத்தைப் பார்க்க வேண்டுமென்கிற ஆவல் இவனுக்குள் தோன்றியது. வண்டியை விரட்டினான்.

வேகத்தைக் கூட்டி வண்டியை அவளுக்கு முன்னால் கொண்டு சென்றவன் கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்த்தான். களையான முகம். மூக்கு குத்தியிருந்தது அவளுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தது. பகலில் பார்த்தால் இத்தனை அழகாக தெரிவாள் என அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் இரவும் அந்த சோடியம் விளக்கின் மஞ்சள் ஒளியும் அவளை ஒரு தேவதையென மாற்றியிருந்தன. சாதாரணமான ஒருவரைக் கூட அழகியாக மாற்றி விடும் ஆற்றல் அந்த பொன்மஞ்சள் நிறத்துக்கு இருக்கிறதென்பது அவன் நம்பிக்கை. இயற்கையின் மிக அற்புதமான படைப்பும் மிக மோசமான படைப்பும் எப்படி ஒன்றாக அமைந்தது என்கிற சந்தேகம் எப்போதும்போல அப்போதும் வர தனக்குள் சிரித்துக் கொண்டான்.

அவள் தெற்குவாசல் நோக்கிப்போக இவன் மேலமாசி வீதிக்குள் வண்டியைத் திருப்பினான். பெருமாள் கோவில் சந்தில் சாலையின் ஓரமாக இருந்த ”லலிதா பேப்பர் ஸ்டோர்ஸ்” கடையின் பெயர்ப்பலகையைப் பார்த்தபோது அவனுக்குத் தன் கல்லூரி ஞாபகம் வந்தது. அவன் புதிதாக ஒரு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்திருந்ததால் கூட வேலை பார்ப்பவர்கள் பற்றிய எந்த விவரமும் சரியாகத் தெரியாத சூழல். புதியவனான அவனோடு பேச யாரும் தயாராக இல்லாத நிலையில் ஓரளவுக்காவது மதித்துப் பேசிய ஜீவன்களில் லலிதாவும் ஒருவர். கணிதத்துறையில் பேராசிரியை. எனவே அவர் மீது அவனுக்கு நிறைய மதிப்பு இருந்தது.

அன்றைக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து முடிக்க வேண்டும் என்று ஒரு வேலையை முதல்வர் அவர்களுக்குத் தந்திருந்தார். கணிணியில் ஒன்றாக அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதுவரை செய்துமுடித்த எதையும் சேவ் செய்து பாதுகாக்காத நிலையில் அத்தனையும் தொலைந்து போயிருக்கும் என்பதை உணர்ந்த லலிதா மேடம் “அய்யா சேசுவே எல்லாம் போச்சே..” என்று தலையில் அடித்துக் கொண்டாள். இவன் வினோதமாக அவளைப் பார்த்தான். சற்று நேரம் கழித்து அவளிடம் கேட்டான்.

“நீங்க கிறிஸ்டினா மேடம்..”.

“இல்ல சார்.. மதமெல்லாம் மாறலை. ஆனா ஏசு மீது நம்பிக்கை உண்டு..”

அதன்பிறகு அவனால் லலிதாவோடு இயல்பாகப் பேச முடியவில்லை. பொதுவில் அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்றபோதும் இது மாதிரியான விஷயங்களில் அவனுக்கெனத் தனியாக சில கோட்பாடுகள் இருந்தன.

கடவுள் உண்டென நம்புகிறீர்கள் என்றால் அவருடைய முடிவையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்? ஒருவரே உண்மையான கடவுள் அனைவரும் அவருக்குப் பிரியமானவர் என்றால் எதற்காக இத்தனை மதங்கள்? எதற்காக நீங்கள் வேறு மதத்தில் பிறக்க வேண்டும் பின்பு உண்மையை உணர்ந்து கடவுளை அடைய வேண்டும்? நீங்கள் யார் எங்கே பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்தபின்புதானே பிறக்கிறீர்கள் பின்பு எதற்காக மதம் மாற வேண்டும்?

அது போல இருக்கும் மனிதர்கள் மீது கடும் வெறுப்பு அவனுக்குண்டு என்பதால் அதன் பிறகு லலிதா மேடமோடு அவனால் இயல்பாகப் பேச முடியவில்லை. என்ன ஏதென்றே புரியாமல் தன்னை அவன் ஒதுக்குவதில் அவருக்கு ரொம்பவே வருத்தம். அதை இன்று அவனிடம் நேரில் சொல்லவும் செய்து விட்டார். ஆனால் இவன் ஏதும் பேசாமல் வந்துவிட்டான்.

பேப்பர் கடையில் அவர் பெயரைப் பார்த்தவுடன் இவையெல்லாம் நினைவுக்கு வர தன் மீது அன்பு செலுத்தும் ஒருவரிடம் இதுபோலத்தான் நடந்து கொள்வது சரிதானாவென்கிற குழப்பம் அவனைப் பெரிதும் இம்சை செய்தபடி இருந்தது. ஏதேதோ யோசித்தவன் கடைசியாக தான் செய்வது சரிதானென சொல்லிக் கொண்டும் யாருக்காவும் எதற்காகவும் தன் கொள்கைகளை விட்டுத் தரமுடியாது என்று தனக்குள் சமாதானம் சொல்லியபடியும் வண்டியை செலுத்தினான்.

வழியில் வாடிக்கையாக அவன் புத்தகங்கள் வாங்கும் கடையின் முன்பாக வண்டியை நிறுத்தினான்.

“சுபா, இந்திரா எதுவும் வந்திருக்கா அண்ணே?”

“இல்லயே தம்பி..”

“சரி.. அப்போ ஒரு விகடன் மட்டும் கொடுங்க..”

“குமுதம்?”

“வேண்டாம்ணே.. விகடன் போதும்...”

தீவிரமாக புத்தகத்தின் கடைசிப் பக்க நையாண்டியில் பார்வையை ஓட்டியபடி வண்டியில் மீதமர்ந்தவனை அந்தக் குரல் கலைத்தது.

“தம்பி.. தம்பி..”

நிமிர்ந்து பார்த்த இடத்தில் அந்தப் பெரியவர் நின்று கொண்டிருந்தார். குறைந்தது அறுபது வயதிருக்கும். தலையில் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச முடியும் பங்கரையாகப் பறந்து கொண்டிருந்தது. அணிந்திருந்த கண்ணாடி எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்பது போல தொடுக்கிக் கொண்டிருந்தது. வாயில் வெகு சில பற்களே மிச்சமிருந்தன. கையில் துணிமணி போல ஏதோ வைத்திருந்தார்.

ஏதேனும் தர்மம் கேட்கப் போகிறாரோ என அவன் அவர் முகத்தைப் பார்த்தான். அவர் நடுங்கிய குரலில் பேசினார்.

“ஒரு சின்ன உதவி தம்பி. எனக்குக் தவுட்டு சந்தைல வீடு. வியாபாரம் எதுவும் இன்னைக்கு சரியில்லை. கொஞ்சம் கொண்டு போய் விடுறியா? பசி நேரம் கண்ண இருட்டிக்கிட்டு வருது..”

அந்தக் கடைசி வரிகள் அவனை உலுக்கிப் போட்டது. பசி ஒரு மனிதனை என்னவாக மாற்றுகிறது? யாரெனத் தெரியாதவனிடம் கூட உதவி கேட்பதை அது பொருட்படுத்துவதே இல்லை. அவருக்கு உதவலாம் என்றாலும் இவனுக்கு தன் வேலைகளை என்ன செய்வது என்று கவலையானது.

“இல்லைங்கைய்யா.. நான் அந்தப்பக்கம் போகல.. கீழவாசல்தான் போறேன்.. அங்கே விடட்டுமா..”

“அப்படிச் சொல்லாத தம்பி. கொஞ்சம் சுத்திப்போனா சரியாப்போச்சு..”

இப்போது அவனுக்கு எரிச்சலாக வந்தது. பெரியவர் தன்னை அதிகாரம் செய்வதைப்போல உணர்ந்தான். நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல நீங்கள் யாரென்கிற கேள்வி வந்தது. ஆனாலும் அவரை அப்படியே விட்டுப்போகவும் மனதில்லை. குழம்பியவனாக நின்றவன் சரியென ஒரு முடிவுக்கு வந்தவனாக அவரிடம் சொன்னான்.

“ஏறுங்க அய்யா.. போகலாம்..”

அவர் தடுமாறியபடி வண்டியில் ஏறிக் கொண்டார். வண்டியை ஓட்டினாலும் அவனுக்குள் அலைஅலையாக கேள்விகள் வந்தபடியே இருந்தன. எதற்காக நான் இவருக்கு உதவ வேண்டும்? எத்தனை பேரிடம் இவர் கேட்டிருப்பார்.. அவர்கள் எல்லாம் மாட்டேன் என்று சொல்லிவிட்டு போகும்போது என்னால் ஏன் அது முடியவில்லை? ஏன் என்னை ஒரு குற்றவுணர்ச்சி துரத்துகிறது? சரி இவருக்கு நான் உதவுகிறேன். ஆனால் இவரை மாதிரி எத்தனி பேர் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு எல்லாம் யார் உதவுவது? என்னாலும் எல்லாருக்கும் உதவ முடியுமா? ஒருவேளை இவரையும் என் தாத்தாவையும் ஒன்றாக உள்மனது ஒப்பிட்டுப் பார்ப்பதாலேயே நான் இப்படி நடந்து கொள்கிறேனா? அவனுக்கு குழப்பமாக இருந்தது. சில நேரங்களில் எதையும் யோசிக்காமல் விடுவதே நல்லதென கவனத்தை சாலையில் திருப்பினான்.

செயிண்ட் மேரிஸ் ஸ்கூலை வண்டி தாண்டியபோது பெரியவர் “நிறுத்துங்க தம்பி” என்று அவசரமாக சொன்னார்.

“ஏங்க.. தவுட்டு சந்தைன்னு சொன்னீங்க..”

“இல்ல தம்பி..” என்று அருகிலிருந்த ஹோட்டலைக் காண்பித்தவர்..."அங்கே போனா தெரிஞ்ச ஹோட்டல்.. ஏதாவது சாப்பிடக் குடுப்பாங்க.. சாப்பிட்டுப் போயிருவேன்..” என்றார்.

“வீட்டுல அவ மட்டும்தான் இருப்பா.. பிள்ளைங்க எல்லாம் வெளியூரு.. பொழப்புக்கு இந்த டவுசரு, ஜட்டி விக்கிற தொழிலப் பாக்குறேன். எல்லா நாளும் நாம் நினைக்கிற மாதிரி இருக்குறதில்லையே.. அது மாதிரி நாள்ல இப்படித்தான் ஓட்டிக்கிடுறது..”

வாய் சற்றே கோணியிருக்க இளித்தபடி அவர் சொன்னதக் கேட்டு அவனுக்கு என்னமோ செய்தது.

“ரொம்ப நன்றி தம்பி.. நான் வர்றேன்..” என்றபடி அவர் சாலையைக் கடந்து போனார். இவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் பின்புறத்தைத் தொட்டுப் பார்த்தான். பர்ஸ் பத்திரமாக இருந்தது. சட்டைப்பைக்குள் மொபைல் பத்திரமாக இருக்கிறதாவெனப் பார்த்தான். இருந்தது. நிம்மதியாக வண்டியைத் திருப்பினான்.

June 17, 2011

அவன் இவன் - திரைப்பார்வை

தந்தையின் ஸ்தானத்தில் இருக்கும் பெரிவர் ஒருவரின் சாவுக்குப் பழிவாங்கும் அவன் இவனின் கதை. எப்போதும் சாதாரண சூழலில் காணக்கிடைக்காத அசாதாரண விளிம்புநிலை மனிதர்களைப் படமாக்கும் பாலா இந்த முறையும் கிட்டத்தட்ட அதே மாதிரியான மனிதர்களோடு களம் இறங்கியிருக்கிறார். படம் கல்பாத்தி அகோரத்தின் தயாரிப்பு.

சேது பார்த்தபோது கொன்னுட்டாண்டா மனுஷன், யாரிந்த பாலா என கேட்கத் தோன்றியது. நந்தா வெளியான நேரம். படம் வெற்றி பெறுமா என்கிற ஒரு டிவி நிருபரின் கேள்விக்கு "அப்படி ஜெயிக்கும்னு நம்பிக்கை இல்லைன்னா ஏன் படம் எடுக்கப் போறேன்" என்று சொன்னார் பாலா. அந்த வெளிப்படையான பேச்சு எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது. நந்தா பார்த்த முதல் தடவை தல தப்பிச்சுட்டாருடா என்று சொன்னாலும் பின்பு பல நாட்களுக்கு அந்தப் படத்தைப் பற்றி புலம்பி நாலைந்து தடவை பார்த்தேன். பிதாமகனில் சூர்யா செத்தபோது நானும் அழுதிருக்கிறேன். நான் கடவுளின் திரைக்கதை பிடிக்கவில்லை என்னும்போதும் இப்படி ஒரு படத்தை பாலாவைத் தவிர தமிழில் வேறு யாராலும் எடுக்க முடியாது என நண்பர்களோடு சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் அவன் இவனின் பாலா? என்ன சொல்வது..



பாலாவின் படங்களில் ஒரு பொதுத்தன்மை இருக்கும். அவருடைய கதாபாத்திரங்களுக்கென எனத் தனியாக சில விஷயங்களை வைத்திருப்பார். வெகு கலகலப்பாக ஒரு கதாபாத்திரம் காட்டப்பட்டால் கண்டிப்பாக அது மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் அல்லது இறந்து போகும். படம் முடிந்து வரும்போது பார்ப்பவர்களின் மனதில் ஒரு வெறுமையை உணரச் செய்வதே பாலாவின் படங்களில் உத்தி. சேதுவில் பாண்டிமடத்துக்குப் போகுமுன்பு விக்ரமை சிரித்தபடி ஒரு குளோசப் ஷாட் காட்டுவார் பாருங்கள்.. அதே போலத்தான் பிதாமகனில் சூர்யாவின் மரணமும் நான் கடவுளில் காட்டப்படும் பிச்சைக்காரர்களின் உலகமும். பார்ப்பவர்கள் மனதை கனக்கக் செய்யும் அவருடைய முதல் நான்கு படங்களில் ஆதாரமாக ஒரு கதையும் அழுத்தமான சம்பவங்களும் இருக்கும். அவன் இவனில் இது எதுவுமே இல்லை என்பதுதான் பிரச்சினை.

எதை நோக்கி நகர்கிறது என்றே தெரியாத முதல் பாதி. விஷால் கலைஞனாக விரும்பும் திருடன். ஆர்யா பிழைப்புக்குத் திருடும் கேனையன். இருவரும் ஒரே அப்பாவின் வெவ்வேறு மனைவிக்குப் பிறந்தவர்கள். சண்டை போடுகிறார்கள். ஹைனஸ் என்றழைக்கப்படும் ஜி.எம்.குமாரோடு நெருக்கமாக இருக்கிறார்கள். நடுநடுவே காதலிக்கிறார்கள். பெரிய தவறொன்று செய்யும்போது இடைவேளை. பிறகு இரண்டாம் பாதியில் மறுபடியும் சும்மா சுத்துகிறார்கள். கடைசி பதினைத்து நிமிஷத்துக்கு முன்னாடி ஒரு வில்லன் வருகிறான். குமார் சாகடிக்கப்படுகிறார். பழிக்குப் பழி. சுபம்.

வெகு சாதாரணமான இந்தக் கதைக்கு பாலா தேவையா? பாலாவின் படமென்றால் இதெல்லாம் இருக்கும் என அவர் உருவாக்கிய பிம்பமே அவருக்கு இந்தப் படத்தில் மிகப்பெரிய எதிரியாக மாறியிருக்கிறது.



இந்தப்படத்தின் திரைக்கு முன்பான நாயகர்கள் இருவர். முதலில் விஷால். மாறுகண், குரலில் இருக்கும் இளகிய தன்மை, சட் சட்டென்று மாறும் பாவனைகள், பெண்களைப் போல அவர் வெளிப்படுத்தும் உடல்மொழி என நிறைய சிரமப்பட்டிருக்கிறார். சூர்யாவின் முன் விதவிதமாக நடித்துக் காட்டும் இடத்தில் பிரித்து எடுத்திருக்கிறார். இரண்டாவது நாயகன் ஜி.எம்.குமார். அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதம். எல்லாவற்றையும் இழந்தபின்னும் தன்னை நாட்டின் ராஜாவாக நம்பிக் கொண்டிருக்கும் குழந்தைமையும் தனக்கென மக்கள் வேண்டுமெனத் தேடியலையும் பதட்டமும் கலந்து உருவாக்கப்பட்டு இருக்கும் அவர்தான் படத்தின் மிக முக்கியமான மனிதர்.

ஆர்யா ஓவர் சவுண்ட். பிதாமகன் சூர்யாவின் ஜெராக்ஸ் மாதிரி இருக்கிறார். அவருடன் கூடவே வரும் சிறுவனின் செய்கைகள் முழுக்க முழுக்க எரிச்சல். மருந்துக்குக் கூட லாஜிக் பார்க்காத கதாநாயகிகள் ஜனனியும் மதுஷாலினியும். போலிஸ் ஏட்டான ஜனனி திருட்டுப் பயலான விஷாலை காரணமே இல்லாமல் காதலிக்கிறார என்றால் மதுஷாலினிக்கோ ஆர்யா குட்டிக்கரணம் அடிக்கச் சொல்வதால் காதல் வருகிறது. கெரகம்டா. இன்னும் எத்தனை படத்தில்தான் கல்லூரிக்குப் போகும் பெண்ணை அடாவடி நாயகன் கூப்பிட்டு மிரட்டிக் காதலிப்பதைக் காட்டுவார் பாலா? படத்தில் நேர்மையாக காட்டப்பு இருக்கும் ஒரே பாத்திரம் அம்பிகாவினுடையது. பீடி பிடிக்கிறார். மகன் அடிக்கும் குவார்ட்டரில் பங்கு கேட்கிறார். எல்லாவற்றையும் விட ஆர்யாவை அவர் அடிக்கும் கிண்டல்கள்.. அதிரடி.



போலீஸ்காரர்களைக் கேவலமாக, ஒன்னாம் நம்பர் லூசான்களாக காண்பிப்பதை தொழிலாகவே செய்து வருபவர் பாலா. இதில் இன்னும் ஒரு படி மேலே போய் திருடர்கள் திருடக் கூடாது எனக் கேட்டு எஸ். ஒருவர் ஊருக்கு கெடா வெட்டி விருந்து தருகிறார். ஏதேனும் திருட்டு நடந்தால் போலிஸ் இவர்கள் வீட்டுக்கு வந்து கெஞ்சி நிற்கிறது. ஆர்யாவும் விஷாலும் ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள மரத்தைத் திருடுகிறார்கள். ஆனால் ஏன் என்று ஒரு வார்த்தை கேட்காமல் வெளியே விட்டு விடுகிறது காவல்துறை. ஏன் பாலா இப்படி?

முதல் பாதி சம்பவங்களின் கோர்வையை கொஞ்சமாவது ரசிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் எஸ்ராவின் வசனங்கள். தொடர்ச்சியாக சிரித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் பெண்கள் அணியும் பேண்டில் ஜிப் இருக்குமா என்கிற ரீதியிலான வசனம் எல்லாம் தேவையில்லை என்றே தோன்றுகிறது. யுவனின் டியோ டியோ டோலேவுக்கு விஷால் போடும் கெட்ட ஆட்டத்தில் தியேட்டரே குலுங்குகிறது. பின்னணி இசையும் ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவும் படத்துக்குத் தேவையான மூடைக் கொடுக்கின்றன.

கடைசி பத்து நிமிடத்துக்காக ஒரு மொத்த படத்தையும் பார்க்க முடியுமா? குமார் சாவதும் விஷாலின் நடிப்பும் கடைசி ரவுத்திரமும் இல்லையெனில் இந்தப்படம் ஒரு குப்பை என்று தைரியமாக சொல்லியிருப்பேன். ஆனால் அந்த கடைசி காட்சிகள் படத்தை கொஞ்சமே கொஞ்சம் காப்பாற்றுகின்றன. சத்தியமாக இது நமக்குத் தெரிந்த பாலாவின் படம் கிடையாது. ஒருவேளை அதுமாதிரியான பிம்பத்திலிருந்து வெளிவர பாலா எடுத்துக் கொண்ட முயற்சி என்றாலும் அவருக்கு இது தோல்வியே.

அவன் - இவன் - எவன்

June 13, 2011

டப்பிங் படங்கள்

"சொல்றே நீ என்ன என்கிட்டே..", "இருக்கு அழகா பொண்ணு ஒங்க வீட்ல.." இந்த ரீதியிலான காமெடி வசனங்களை ஹிந்தி டப்பிங் நாடகங்கள் வாயிலாக 90களில் தமிழ்நாட்டின் எல்லார் வீட்டின் வரவேற்பறைகளிலும் கேட்டு மகிழ்ந்து இருக்கிறோம். ஜுனூன் தமிழ் என புதிதாக ஒரு தமிழ் வடிவத்தையே உருவாக்கிய பெருமை டப்பிங் மக்களுக்கு உண்டு. ஆனாலும் தமிழ் சினிமாவில் டப்பிங் படங்கள் ஆரம்ப காலம் தொட்டே மிக முக்கியமான இடத்தைப் பிடித்து வந்திருக்கின்றன.

எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் டப்பிங் படம் விட்டாலாச்சார்யாவின் கந்தர்வக்கன்னி. மாயாஜாலப் படங்களின் மீதான ஒரு மோகத்தை எனக்குள் காந்தாராவ் நடித்த அந்தப்படம் விதைத்துப்போனது. அதன் பிறகு மாயமோதிரம், மாயத்தீவு ரகசியம், ஜகன்மோகினி என்று தேடித்தேடி பார்த்தேன். மதுரை முருகன் தியேட்டரில்தான் இந்தப்படங்கள் பெரும்பாலும் (செகண்ட்) ரிலீஸ் ஆகும். இது போன்ற மாயாஜாலப் படங்களில் பெரும்பாலும் ஒரே கதைதான். உலகையே ஆளத் துடிக்கும் மந்திரவாதி, ராஜகுமாரன் - குமாரி, ஒரு ஜோக்கர், அவரை விரட்டும் காதலி பேய், ஏழு கடல் தாண்டி ஒளிந்திருக்கும் தீயவனின் உயிர் என்று போய்க் கொண்டே இருக்கும்.



ஆனால் இவற்றில் பெரிய காமெடியே பேய்களுக்கு விட்டல் தரும் யுனிபார்ம் தான். ஒரு நீண்ட தலைகாணி உறை போன்ற துணியில் தைக்கப்பட்ட வெள்ளை அங்கிகளுக்குள் உடம்பு பிதுங்கி வழிய (அதுவும் ஆண் பேய் என்றால் ரொம்பக் கேவலமாக இருக்கும்..) பேய்கள் அடிக்கும் கூத்து எல்லாமே செம மொக்கையாக இருக்கும். கவர்ச்சி நடனம் என்கிற ஒன்றை பெரிய அளவில் பேச வைத்த பெருமையும் இந்த பேய் டான்சர்களுக்கே போய்க் சேர வேண்டும். கருமாந்திரம் பிடித்த காஸ்ட்யூமில் இருக்கும் பேய் நாயகனைக் கண்டால் கிளுகிளுப்பாக செம பிகராக மாறி விடும்.

ஜெயமாலினியை யாரும் மறக்க முடியுமா? ஜெகன்மோகினியில் அடுப்புக்குள் காலை வைத்து சமையல் செய்யும் காட்சி இன்றும் பேசப்படும் ஒன்று. அதை நமீதாவை வைத்து ரீமேக் செய்கிறேன் பேர்வழி எனப் படுத்தியது காலத்தின் கொடுமை. கடைசியாக வந்த மாயாஜாலப் படம் பாலகிருஷ்ணா, ரோஜா நடித்து வெளிவந்த வீரபிரதாபன் என்று ஞாபகம். கணவனே கண் கண்ட தெய்வத்தில் ஆரம்பித்து மணாளனே மங்கையின் பாக்கியம் வரை சகல மந்திரப் படங்களையும் உல்டா பண்ணி இருந்தார்கள். படம் பப்படம் - ஓடவில்லை. ஆனாலும் ஏழெட்டு வயதில் ஆரம்பித்த மாயஜால டப்பிங் படங்களின் மீதான பிரியம் இன்று வரை தொடர்கிறது.

இனி காலத்தில் கொஞ்சம் முன்னோக்கி பயணிப்போம். 90களின் ஆரம்பத்தில் ஒரு பெண் புயல் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டைத் தாக்கி டப்பிங் படங்களுக்கான வரவேற்பை அதிகரிக்க செய்தது. அது விஜயசாந்தி - படம் வைஜெயந்தி .பி.எஸ். அந்த ஒரு படம் நல்லா இருந்ததே என்று நம் மக்கள் போய்ப் பார்த்ததுதான் வினை. அடுத்து அவருடைய எல்லாப் படங்களையும் டப் செய்து நம்மைப் பாடாய்ப் படுத்தினார்கள். "டாஆஐஈஈஇ"என்று கேவலமாக கத்திக் கொண்டு அவர் பாய்ந்து பாய்ந்து அடித்ததைப் பார்த்து நம் பெண்கள் எல்லாம் வீட்டுக்குள் புருஷன்மாரைப் போட்டு மொத்தி எடுத்ததாக ஏஜன்சி தகவல்கள் சொன்னது. மறவர் மகள் என்ற படத்தில் அவரும் பாலகிருஷ்ணாவும் குத்த வைத்து அம்மியில் மசாலா அரைத்த காட்சியைப் பார்த்து காரம் தாங்காமல் தாய்க்குலம் எல்லாம் கண்ணீர் சிந்தி தியேட்டரே நீரில் மிதந்தது.



இதே காலகட்டத்தில் இன்னொரு மனிதர் தெலுங்கு வழியாக தமிழுக்குள் நுழைந்தார். மீசைக்காரன் - டாக்டர் ராஜசேகர். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பேர் வைப்பதில் புரட்சி பண்ணிய பெருமகனார். "எவனா இருந்தா எனக்கென்ன", "எங்கடா உங்க எம்.எல்.", "அடேய் தான் பம் பாசக்" என்றெல்லாம் பெயர் வைத்து டெர்ரர் காட்டிய மனுஷன். இந்தப் படங்களுக்கு எல்லாம் வசனம் எழுத என்றே ஒரு புண்ணியவான் இருந்தார். பெயர் மருதகாசி என நினைக்கிறேன். பழைய காலத்துப் படங்களில் பெரிய ஆளாக இருந்தவர். டேய் என்று காட்டுக்கத்தல் கத்தும் டெக்னிக்கை, இன்றைக்கு எல்லா ரவுடி நாயகர்களும் சொல்வதை, ஆரம்பித்து வைத்தவர் இவராகத்தான் இருக்கும்.

தெலுங்கு மகாஜனங்களின் ரசனையே தனி. ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறு இங்கே.. ராத்திரி நேரம். காட்டு வழியே வரும் நாயகன் நாயகி. அடைமழை. ஒதுங்கி நிற்க ஆளில்லாத மண்டபம். ஈரம் சொட்ட சொட்ட செம செக்சியாக நாயகி நாயகனைப் பார்த்து உதட்டைக் கடிப்பாள். காய்ச்சல் வந்த மாதிரி கண்கள் எல்லாம் சொருகி கிட்டே வந்து நாயகன் அவள் தோளில் கை வைக்க.. ஆகா என நாம் நிமிர்ந்து உட்காருவோம். திடுமென எங்கிருந்து வந்தார்களெனத் தெரியாமல் ஒரு முப்பது ஜாரிகள் களத்தில் இறங்கி அவர்களோடு நாயகன் நாயகி மழையில் கும்மாங்குத்து டான்ஸ் ஆடுவார்கள் பாருங்கள்... அவர்கள் தலையில் இடி விழ. நாம் சகலமும் அடங்கி அமைதியாகி விடுவோம். ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.. டான்ஸ் என்றால் அது கொல்டி மக்கள்தான். பிஸ்து கிளப்புவார்கள்.

அவர்கள் ரசனைக்கு இன்னொரு சான்று. மன்னன் என்று ஒரு படம். தலைவர் நடித்தது. அதை மெகா ஸ்டார், நக்மா நடிக்கப் படமாக்கினார்கள்.(தமிழில் இது அர்ஜுன் என்று வெளியானது. நக்மா.. யம்மம்மா..) படம் சூப்பர் ஹிட். கொஞ்ச நாள் கழித்து நம்ம தலைவர் படத்தையும் தெலுங்கில் டப் செய்ய அது இன்னும் பெரிய ஹிட். ஒரே படத்தை இரண்டு தடவை எடுத்தாலும் வெற்றி பெறச் செய்யும் புண்ணிய ஆத்மாக்கள். கதை கச்சடா எல்லாம் எதுக்கு.. ரெண்டு பாட்டு நாலு பைட்டு மூணு கில்மா இருக்கா.. படம் பாரு மாமேய் எனச் சொல்லும் விச்ராந்தியான மக்கள். இன்றைக்கு தமிழ் சினிமா கூட அதை நோக்கித் தான் போய்க்கொண்டிருப்பது நமக்குத் தேவையில்லாத விஷயம்.

மந்திரம், கில்மா என்றெல்லாம் டப்பிங் பண்ணிக் கொண்டிருந்தபோது 2000த்தின் அருகாமையில் வெளிவரத் தொடங்கிய ஆங்கிலத் டப்பிங் படங்கள் புதியதொரு சகாப்தத்தை உருவாக்கின. ...லி என்ன பேசுறான்னே புரியல பேசியே கொல்றாண்டா, சண்டைன்னா அப்படி இருக்கணும் தெரியுமா ஆனா எதுக்கு சண்டை போடுறாங்கன்னுதான் தெரியல என்று பயங்கரமாக பீல் பண்ணி ஆங்கிலப் படம் பார்த்துக் கொண்டிருந்த நம் ஆட்களுக்கு, மெட்ராஸ் பாஷையில் பொளந்து கட்டும் கிரிஸ் டக்கரும் நெல்லை பாஷை பேசும் ஜாக்கி சானும் ரொம்பவே நெருக்கமாகிப் போனார்கள். பைரேட்ஸ் மாதிரியான படமெல்லாம் தமிழில் பார்க்கவிட்டால் சுத்தமாக எனக்கெல்லாம் ஒன்றுமே புரிந்திருக்காது. இருந்தாலும் "என்கிட்டே மோதாதே" பாட்டுக்கு ஜெட்லி டான்ஸ் ஆடுவது எல்லாம் விஜய் டிவியின் வன்கொடுமைதான் .



எனக்குத் தெரிந்த மட்டும் கிட்டத்தட்ட எல்லா வகையான டப்பிங் படங்கள் பற்றி பேசிவிட்டோம், ஒன்றைத் தவிர. சின்ன காசு பெத்த லாபம் என்கிற அதி தீவிர கொள்கையின்படி எடுக்கப்படும் நான்கு பேர் ஒரு ரூம் அஞ்சு நாள் ஷூட்டிங் படங்கள், முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே எடுக்கப்படும் தமிழ்ப் படங்கள் (lovers in blood, honeymoon) போன்றவைதான் அவை. ஆனால் அதை எல்லாம் பேசினால் அவனா நீயி எனும் பெரும்பிரச்சினை கிளம்பக் கூடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

கதைக்காகவும் நாயகிகளுக்காகவும் இனிமேல் டப்பிங் செய்வது ஒத்துவரும் எனத் தோன்றவில்லை. ரீமேக் என்கிற விஷயம் இன்றைக்குப் பெரிதாகி விட்ட நிலையில் இனிமேல் நாம் ஆங்கில டப்பிங் படங்களை மட்டும் பார்த்து திருப்தி அடைந்து கொள்ள வேண்டியதுதான் என்றே தோன்றுகிறது.

June 1, 2011

நெடுங்குருதி - எஸ்ரா

இந்நாவல் நீலகண்டப்பறவை போல, அக்னிநதி போல காலமாற்றத்தின் மீது உருவாகி இருக்கிறது. சிறந்த இந்திய நாவல்களின் தரத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. முதன்முறையாக இந்நாவலில்தான் தமிழ் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

பிரபஞ்சன்

ஒரு மனிதனின் அடிப்படை இயல்புகளைத் தீர்மானிக்கக் கூடிய விஷயங்கள் எவையெவை என்று சொல்லலாம்... அவர்களின் பிறப்பு? குடும்ப சூழ்நிலைகள்? நண்பர்கள் அல்லது உறவினர்கள்? இவை போக, இது எல்லாவற்றையும் மீறிய ஒன்றும் இருக்கிறது. அது அவர்களின் ஊர்.. அவர்கள் வாழும் சூழ்நிலை.

இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னுடைய எட்டாவது வயதில் குடும்பத்தோடு மதுரை சுப்ரமணியபுரம் பகுதிக்கு குடிபுகுந்தோம். அதுவரை வீடு விட்டால் பள்ளி, பள்ளி விட்டால் வீடு.. இதுதான் நான். ஆனால் அங்கே குடிபோன பின்பு என்னுடைய இயல்புகளே மாறிப்போனது. புதிய நட்புகள், தெருவோரச் சண்டைகள், எப்போதும் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கும் வசவுகள், தெரு முக்கில் உருட்டும் லங்கர்கட்டைகள், சூது, வகுப்புகளுக்கு மட்டம் போட்டு விட்டு சினிமா.. அந்தப் பகுதியின் இயல்புகளில் நானும் தொலைந்து போனவனாக இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் இன்றிருக்கும் நானாக மாறிய தருணங்கள் அவை.

சொந்த ஊரை விட்டு வெகுதூரம் விலகி இருக்கும் ஒவ்வொரு மனிதனின் மனிதிலும் எங்கோ ஒரு ஓரத்தில் தங்களின் ஊரைப் பற்றிய கனவுகளும் ஆசைகளும் ஒளிந்து கிடக்கின்றன. ஊர் என்பது வெறும் வசிப்பிடமாக மட்டும் இருப்பதில்லை. அது ஒவ்வொருவரின் உணர்விலும் கலந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. எத்தனை விதமான ஊர்களைப் பற்றி நம்முடைய இதிகாசங்களில், கதைகளில் படிக்கிறோம்? வெகு விசித்திரமான ஊர்களைப் பற்றிய கதைகளை என்னுடைய பால்யத்தில் கேட்டிருக்கிறேன். முழுக்க முழுக்க புதிர்களால் நிரம்பிய தெருக்களால் ஆன ஊர் ஒன்று இருந்ததாம். ஒருமுறை அதன் உள்ளே சென்று விட்டால் மீண்டு வெளியே வரவே இயலாதாம். இதைப் போலவே, பெண்கள் மட்டுமே வாழும் ஊர் ஒன்றும் இருந்ததாம். அதன் உள்ளே போகும் ஆண்கள் யாவரும் பெண்களாக மாறி விடுவார்களாம். மீண்டும் வெளியேறிச் செல்லும்போதுதான் ஆண்களாக மாறுவார்களாம். விந்தைதான் இல்லையா?

இவை எல்லாமே மனித மனத்தின் கற்பனைதான் என்றாலும், இதன் அடிப்படை ஒன்றுதான். ஒவ்வொரு ஊரும் தனக்கென ஒரு தனித்துவமான இயல்பைக் கொண்டதாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு மூர்க்கமான ஊரைப் பற்றியும், அங்கு வாழ்ந்த மனிதர்களின் கதைகளையும் சொல்லும் நாவல்தான் எஸ்.ராமகிருஷ்ணனின் "நெடுங்குருதி".

வேம்பலை என்றொரு கிராமம். அங்கு வசிக்கும் வேம்பர்கள் என்ற மக்கள். இவர்களின் வாழ்க்கையைத்தான் இந்த நாவல் பதிவு செய்கிறது. குற்றப்பரம்பரை என்று சொல்லி ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தைப் பற்றிய பதிவு என்றும் சொல்லலாம். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளைத் தொட்டுச் செல்லும், ஒரு நூற்றாண்டு காலம் நீளும் கதையை வெகு இயல்பாக சொல்லிச் செல்கிறார் எஸ்ரா. அவருக்குப் பிரியமான வெயில், வேம்பு மற்றும் எறும்புகள்.. இந்த நாவல் எங்கும் இந்த மூன்றும்தான் நிறைந்து இருக்கின்றன.

கோடைக்காலம், காற்றடிக்காலம், மழைக்காலம் மற்றும் பனிக்காலம் என்று நான்காக பகுக்கப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். வேம்பர்களின் வாழ்வில் வசந்தமே கிடையாது என்று இதையும் ஒரு படிமமாகக் கொள்ளலாம். நான்கு காலங்கள் இருந்தும் கோடைக்காலமே நாவலின் பிரதானப் பகுதியாக இருக்கிறது. குறிப்பாக வெயில் மற்றும் அதன் வெம்மையை நெடுங்குருதியை வாசிக்கும் யாவராலும் உணர முடியும். எல்லாப் பகுதியிலுமே வெயிலும் கிட்டத்தட்ட ஒரு பாத்திரமாகவே நாவல் முழுவதும் வலம்வருகிறது. கதையின் மாந்தர்கள் எங்கு சென்றாலும் அவர்களோடு தானும் ஒருவராக வெயில் பயணிக்கிறது.

"வெயில் கூரையின் வழியாகத் தன் விரலை அசைத்தபடியே இருந்தது.."

"பூனைக்குட்டி வாசல் வரை வந்து நின்றது. வெயிலின் நீண்ட கிளைகள் விரிந்து வெளிச்சத்தில் கண் கூசுவதால் திரும்பவும் இருளுக்குள் போய் விட்டது"

"உக்கிரமான வெயில் கூட அவளது குரலைக் கேட்டதும் பயந்து ஒடுங்கிக்கொண்டது போல மப்பு போடத் துவங்கிய்து.."

"இளங்காலையின் வெயில் ஆற்று மணலில் எதையோ எழுதிக் கொண்டிருந்தது.."

"சாலையில் வெயில் வீழ்ந்து கிடந்தது.."

வளைந்து நெளிந்தும் ஊர்ந்து கொண்டும்... சாலைகளோடு பின்னிப் பிணைந்தும் கதையின் பாதையெங்கும் பயணித்தபடியே இருக்கிறது வெயில். வெயிலின் கொடுமை மற்றும் வெக்கையின் காரணமாகவே வேம்பலை மூர்க்கம் நிறைந்த கிராமமாக இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

நெடுங்குருதியில் மையப் பாத்திரங்கள் என்று யாருமில்லை. நாகு என்ற சிறுவனின் பார்வையில் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நாகுவின் தாய், தந்தை, அவனுடைய அக்கா வேணி, மற்றொரு சகோதரியான நீலா, சிறு குழந்தையாய் இருக்கும்போதே இறந்து போன அண்ணன் செல்வம் என ஒவ்வொருவராக அறிமுகம் ஆகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. இதுபோக அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்ற மனிதர்களில் ஒரு சிலரைப் பற்றிய கதைகளும் வருகின்றன.

உருப்புடியாய் எந்தத் தொழிலும் செய்யாத அய்யா.. அவரைக் கரித்துக் கொண்டே இருக்கும் அம்மா.. இவர்களைப் பார்த்து வளர்கிறான் நாகு. சிறு வயதில் அவனுடைய உற்ற தோழியாய் இருப்பவள் ஆதிலட்சுமி. பாம்பு கடித்து அக்கா நீலா இறந்து போக, பரதேசியாய் வீட்டை விட்டு ஓடிப்போகிறார் அய்யா. தாயுடன் தன் தாத்தா ஊருக்குக் கிளம்புகிறான் நாகு. தரகு வேலை பார்ப்பவனாகிறான். சாராயம், பெண்கள் என்று வாழ்பவனுக்கு மல்லிகா என்னும் பெண்ணோடு திருமணம் ஆகிறது. ஐயாவைக் கண்டுபிடித்து மீண்டும் வேம்பலைக்கே குடி வருகிறான். இந்த நேரத்தில்தான் குற்றப்பரம்பரைச் சட்டம் வேம்பர்கள் மீது ஏவப்படுகிறது. அதற்கு அடங்க மறுத்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகிறான் நாகு. ரத்னாவதி என்னும் பரத்தைக்கும் நாகுவுக்கும் பிறந்த திருமால் எல்லாம் தொலைத்தவனாக ஊரைப் பிரிந்து போகிறான். மல்லிகாவுக்கும் நாகுவுக்கும் பிறந்த பிள்ளை வசந்தா. ஒழுக்கம் கெட்ட தன் கணவனோடு மீண்டும் அவள் வேம்பலைக்குக் குடி வந்து, தன் கணவனின் பிள்ளைக்கு நாகு என்று பெயரிடுவதோடு முடிகிறது கதை. கசப்பின் மிகுதியால் நிரம்பி வழியும் மனிதர்களின் வாழ்க்கையைத் துல்லியமாகப் படம்பிடிக்கிறது இந்தப் புத்தகம்.

தீராத வேட்கையோடு பாய்ந்தோடும் காட்டாறு போகும் பாதையெல்லாம் தன்னுடைய கிளைகளை உருவாக்கிக் கொண்டே போவது போல, நெடுங்குருதியின் பாதையில் பல்வேறு கிளைக்கதைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

வேம்பலை ஒரு கற்பனை கிராமம். சரி.. ஆனால் அங்கு இருப்பதாக சித்தரிக்கப்படும் மனிதர்கள் உண்மையானவர்கள். இந்த மண்ணில் நிஜமாகவே வாழ்ந்தவர்கள். அவர்கள் அந்த ஊருக்கு வந்ததெப்படி? கொற்கைப் பாண்டியனின் வீரர்களிடம் இருந்து தப்பி வந்தவர்கள் என்று ஆரம்பிக்கிறது அவர்களின் வரலாறு.

வெல்சி துரை என்னும் ஆங்கில அதிகாரியால் சிறைப்பட்டு சாகும் வேம்பர்களால்தான் முதன் முறையாக வேம்பலையில் பயம் விதைக்கப்படுகிறது. அதன் பிறகு பதவி உயர்வு பெற்று வெளியூர் செல்லும் வெல்சியும் மனச்சிதைவுக்கு ஆளாகி செத்துப்போகிறான். ஆனால் அவன் விட்டுச் சென்ற சோகமும் துயரமும் எப்போதும் தீராததாக வேம்பலையை பீடித்துக் கொள்கிறது.

வேம்பலையின் சுவாரசியமான மனிதர்களில் ஒருவன் சிங்கி. வாலிபத்தில் அனைவரும் பயப்படும் திருடனாக இருந்தவன். இருந்தும் சிறு பிள்ளைகளிடம் திருடுவதில்லை எனத் தனக்கென சில கொள்கைகளைக் கொண்டவனாக இருக்கிறான். ஒரு முறை காலில் காயம்பட்டு சாகக் கிடப்பவனைப் பண்டார மகள் ஒருத்தி காப்பாற்ற, சொந்த ஊரையும் திருட்டையும் மறந்து அவளோடு தங்கி விடுகிறான். ஆனால் வயதாக வயதாக பண்டார மகள் மூர்க்கம் கொண்டவளாக மாறிப் போகிறாள். தொட்டதெற்கெல்லாம் சிங்கியை கரித்துக் கொட்ட ஆரம்பிக்கிறாள். எனவே அவளைப் பிரிந்து சிங்கி மீண்டும் வேம்பலைக்கே வந்து வாழத் துவங்குகிறான்.

நிகழ்காலத்தில் இரண்டு கண்ணிலும் பார்வை இழந்து போனவனாக தன மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான் சிங்கி. அவ்வப்போது அவனுக்கு பழக்கமான குருவனின் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. சிங்கியும் குருவனும் ஆடு புலி ஆட்டம் ஆடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். குருவன் பத்து வருடங்களுக்கு முன்பே செத்துப் போனவன். எனவே இங்கே குருவனின் குரல் மரணத்தின் அடையாளமாகவே சொல்லப்படுகிறது என நினைக்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு முறை ஆட்டம் ஆரம்பித்து முடியுமுன்னே குருவன் காணாமல் போகிறான். அத்தோடு சிங்கியும் குருவனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் முனைப்பாகவே இருப்பது மனிதனுக்கு சாவின் மீதாக இருக்கும் பயத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

சில மாதங்களுக்கு முன்பு நண்பர் மேவி என்னை யூடியூபில் இருக்கும் இங்கமார் பெர்க்மானின் செவன்த் சீல் என்னும் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். மனிதனும் மரணமும் ஆடும் செஸ் ஆட்டம் என்பது போன்ற கதையது. சிங்கி பற்றிய நெடுங்குருதியின் மிக அற்புதமான இந்தப் பகுதியைப் படிக்கும்போது எனக்கு அந்தப்படம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

கடைசியாக ரத்னாவதி. பரத்தை என்றானபோதும் நாகுவை உண்மையாக நேசிப்பவள். பார்க்கும் மனிதர்களில் எல்லாம் நாகுவைத்தான் அவள் தேடித்திரிகிறாள். அவனுடைய பிள்ளையை தானாக விரும்பி பெற்றுக் கொள்ளுகிறாள். நாகு இறந்துபோன பின்பு மதுரைக்கு வந்து ஒரு பால்கடையை வைத்து வாழ ஆரம்பிக்கிறாள். தன் பிள்ளை திருமாலுக்காக வாழ முடிவு செய்தாலும், காமத்தின் நீண்ட நிழல் அவளை விடாமல் துரத்துகிறது. பூபாலனை மணம் முடிக்கிறாள். அவள் வாழ்வில் மகிழ்ச்சி திரும்பியதாக நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் பூபாலன் அநியாயமாக செத்துப் போகிறான். காலம் அவளை மீண்டும் சேற்றுக்குள் வீசி எறிகிறது.

மகனைப் பிரிந்து திரும்பி வர இயலாத ஒரு பாதையில் ரத்னா பயணிக்கத் துவங்குகிறாள். இறுதியில், கடைசிவரைத் தன்னுடைய மகனின் முகத்தைக் கூடப் பார்க்காமல், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். நிறைவேறாத ஆசைகளில் தங்களைத் தொலைத்த எல்லா மனிதர்களின் பிரதிநிதியாகவும் ரத்னாவதி இருக்கிறாள். கடை வைத்து கவுரவமாக வாழும் ரத்னாவை கோபுரத்தின் மீதிருந்து பார்க்கும் கந்தர்வனின் சிலை, அவள் மீண்டும் வேசித் தொழில் செய்யத் தொடங்கியவுடன் தன் முகத்தைத் திருப்பிக் கொள்வது.. அழகான படிமம்.

நாகுவின் அப்பாவோடு போய் என்ன ஆனான் என்றே தெரியாத பக்கிர், பிழைப்புத் தேடி வந்த இடத்தில் முறைதவறி வாழத் தொடங்கும் பக்கிரின் மனைவி, கால்கள் நடமாட இயலாத நிலையில் இருந்தாலும் ஊரில் நடக்கும் எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் ஆதிலட்சுமி, வேணியைக் காதலித்துத் தோற்கும் திருமா, நாகுவைத் தன் மகனைப் போல் வளர்க்கும் தரகர் தாத்தா, புதைத்து வைத்த புதையலை பூதம் காப்பது போல ஊர்ந்து திரியும் லட்சுமணன், ரத்னாவதியின் தோழி ஜெயராணி மற்றும் அவளின் அத்தை, சிறு வயதில் இருந்தே தாயின் அன்பு கிட்டாமல் வளரும் திருமால், தத்துவம் பேசித் திரியும் திருமாலின் நண்பன் பவுல், நாம் ரெண்டு பெரும் ஒரே ஆளை கட்டிக்கிடலாம் என்று கேட்கும் வசந்தாவின் தோழி ஜெயக்கொடி.. எத்தனை எத்தனை விதமான மனிதர்கள்? நாட்டார் தெய்வம் ஒன்றின் வருகையால் பணக்காரனாகும் காயாம்பூ, அதே தெய்வத்தால் ஒன்றுமில்லாதவனாக ஆகிப் போவதை என்னவென்று சொல்வது? வேம்பலையின் சாலைகளில் வழிந்தோடும் கசப்பு, அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கையிலும் நிரம்பி இருக்கிறது.

இந்த இசம், அந்த இசம் என்று நெடுங்குருதியை வகைப்படுத்த எனக்குத் தெரியாது. யதார்த்தம், கனவுலகம், மாய யதார்த்தம் என மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது கதை. அவ்வளவே. நாம் காணும் நிஜ வாழ்வின் நிதர்சனங்களை பதிவு செய்யும் அதே வேளையில், விவரிக்க இயலாத கனவுகளின் பக்கங்களையும் மீள்மாய உலகின் (நன்றி:ஜெயமோகன்) நம்ப முடியா சம்பவங்களையும் அழகியலோடு நம் பார்வைக்கு வைக்கிறார் எஸ்ரா.

பண்டார மகள் இறந்து போய் கிடக்கிறாள். அவள் உள்ளங்கையில் இருக்கும் தேள் சிங்கியின் உடம்பில் ஏறிக் கொள்ளுகிறது. அவனால் அந்தத் தேளின் உபத்திரவத்தைத் தாங்கவே முடிவதில்லை. அதேபோலத்தான் சிங்கியும் செத்துப் போன குருவனும் விளையாடும் காட்சிகளும். தானிய குலுக்கைக்குள் போட்டும் சாகாத மனுஷியாகவே இருக்கும் முதிர்ந்த சென்னம்மாவின் கதையும் ஒரு புதிர்த்தன்மையுடன் இருக்கிறது.

பாலைவனம் போல வெடித்து கிடக்கும் இடங்களின் நடுவே எப்போதும் குளிர்ந்த நீர் சுரந்து கொண்டே இருக்கும் துறவியின் சமாதி, ஊரில் இருக்கும் பெண்கள் பிடிக்கும் தண்ணீர் குடங்கள் எல்லாம் காலியாகிப் போவது, ஊருக்குள் பெயர் தெரியாத புழுக்கள் உண்டாவது, எங்கிருந்தோ வானில் இருந்து வரும் கொக்குக் கூட்டத்தால் அந்தப் புழுக்கள் அழிவது, மீன்களோடும் தவளையோடும் பேசித் திரியும் சின்னஞ்சிறு திருமால் என இந்திய நாட்டின் தொன்மையான கதைகளில் இருக்கும் மாயத்தன்மையை நாவலின் பல இடங்களில் நம்மால் காண இயலுகிறது.

இத்தனைக்குப் பிறகு, இந்த நாவலின் குறைகள் என்று எதைச் சொல்லலாம்?

முதலாவதாக நாவலின் கதை நடைபெறும் காலம் மற்றும் இடம். கதையின் பின்பாதியில் இருக்கும் விவரணைகளைப் பார்க்கும்போது இது மதுரையைச் சுற்றி நடக்கும் கதை என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால் எப்போது நடைபெறுகிறது என்பதைத் தெளிவாக வரையறுத்துச் சொல்ல இயலவில்லை. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நடக்கும் கதை எனக் கொண்டால் ஒரு சில இடங்களில் இருக்கும் விவரங்கள் சற்றே வசதிகள் அதிகம் உள்ளதைப் போல சொல்வதால் சிறிது குழப்பம் ஏற்படுகிறது.

இரண்டாவதாக, கதையின் அடிநாதமாக இருக்கும் குற்றப்பரம்பரைச் சட்டம் பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கலாம். என்ன மாதிரியான நெருக்கடிகளுக்கு மக்கள் ஆளானார்கள்.. அவர்களுடைய எதிர்ப்பு எத்தகையதாக இருந்தது என்ற எந்தத் தகவல்களும் முழுமையாக சொல்லப்படவே இல்லை. அப்படி இருப்பின் இது சரித்திரத்தைப் பதிவு செய்யும் மிக முக்கியமான நாவலாக இருந்திருக்கும்.

மூன்றாவதாக, புற சூழல் பற்றிய வர்ணனைகள் இந்த நாவலில் மிகவும் கம்மியாகவே காணக் கிடைக்கிறது. மனிதர்களையும், அவர்களின் குணங்களையும் முக்கியமாகப் பேசுவதே எஸ்ராவின் எல்லாப் புத்தகங்களிலும் காணக் கிடைக்கும் யுத்தி. அதுவே இங்கும் நடந்து இருக்கிறது.

வேம்பிலை கள்வர்கள் வாழும் ஒரு மூர்க்கமான ஊர். சரி.. ஆனால் அங்கு வேம்பர்கள் மட்டும் இல்லையே? அது போக சாயக்காரர்கள்... மற்ற ஜனங்கள் எல்லாம் வந்ததெப்படி? அந்த ஊரின் அமைப்பு எப்படி இருக்கும்? நாவலில் இவற்றுக்கு பதில் இல்லை. ஒவ்வொரு ஊராகப் போய் தூங்கி, அந்த ஊரின் இயல்புகளைப் பேசும் மனிதனை உபபாண்டவத்திலும் சந்தித்ததாக ஞாபகம்.

கடையாக நாவலின் நீளம். என்னைப் பொறுத்தவரை நாகுவின் மரணத்தோடு நாவல் முற்றுப்பெறுகிறது. எனினும் காலம் காலமாக சாபம் நீடிக்கிறது என்பதைச் சொல்லும் விதமாக, நாகுவின் வாரிசுகளான திருமால் மற்றும் வசந்தாவின் பாடுகளைச் சொல்லும்போது சற்றே அயர்ச்சி ஏற்படுதைபோல எனக்கொரு உணர்வு.

"எந்தவொரு கதையின் முடிவையும் வாசகனே தீர்மானிக்கிறான்... கூடுதலாக சில பக்கங்களை எழுதிப் பார்க்கலாம்.. இல்லையெனில் முன்னதாகவே முடிக்கலாம்.." சமீபத்தில் எஸ்ரா எழுதிய ஒரு பத்தியில் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. சிற்சில குறைகள் இருப்பினும், நாவலின் தெளிவான நடையும் எஸ்ராவின் கதை சொல்லும் முறையும் அவற்றை மறக்கடிக்கின்றன.

நாவலை வாசித்து முடித்தபின்னும் வேம்பலையும், அதன் மனிதர்களும் இன்னும் நெஞ்சை விட்டு நீங்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். ஏன் இத்தனை கஷ்டங்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது என்று மனம் அரற்றுகிறது.. அந்த உணர்வை உருவாக்குவதுதான் எஸ்ராவின் வெற்றி. கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

நெடுங்குருதி
உயிர்மை வெளியீடு
இரண்டாம் பதிப்பு - செப்டம்பர் 2005
விலை - 275/-

(இது ஒரு மீள்பதிவு)