October 18, 2011

வாகை சூட வா - திரைப்பார்வை

2005-06 வாக்கில் நான் திண்டுக்கல்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம். அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சாவடி அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. வேடசந்தூரில் இருந்து கரூர் போகும் வழியில் இருந்த சின்ன ஊர் அது. காட்டுக்கு உள்ளே நாலைந்து கிலோமீட்டர் தாண்டி அங்கே போக வேண்டும். மின்சாரம் தவிர்த்து வேறெந்த வசதியும் கிடையாது. ஊரில் மொத்தம் 150 பேர்களே இருந்தார்கள். அனைவருமே வயதானவர்கள்தான். என்னவென்று விசாரித்தால் இளைஞர்களும் சிறுவர்களும் கூலி வேலை தேடி வெளியூர் போய் விடுவார்களாம். வருடத்துக்கு ஒரு முறை பண்டிகைக் காலத்தில் மட்டுமே வருவார்களாம். படிப்பு என்பதெல்லாம் சுத்தமாகக் கிடையாது. வசதிகள் எல்லாம் பெருகி விட்ட, ஊடகங்கள் மறைமுகமாக ஆட்சி புரியத் தொடங்கி விட்ட இந்தக் காலத்திலும் இப்படி ஒரு கிராமமா என எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நவீனங்கள் பெருகிய இந்த சமயத்திலும் கூட இப்படி ஒரு கிராமம் இருக்க முடியுமென்றால் எந்த வசதியுமற்ற அறுபதுகளில் நம் தமிழ் கிராமங்கள் என்னவாக இருந்திருக்கும்? அது மாதிரியான ஒரு கிராமத்தின் கதையை அச்சு அசலாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது வாகை சூட வா.



படிப்பறவற்ற கிராமம் ஒன்றில் வாத்தியார் ஒருவரின் வருகையாலும் கல்வி கற்ற பிள்ளைகளாலும் ஏற்படும் மாற்றங்கள்தான் வாகை சூட வாவின் கதை. கிராமங்கள் என்றாலே பச்சைப் பசேலென இருக்கும் என்பதான கற்பிதங்களை உடைத்து உள்ளதை உள்ளபடி காண்பிக்கும் திரைப்படங்கள் வர ஆரம்பித்து இருப்பது ஆரோக்கியமான விஷயம். ஒரு செங்கல் சூளை - அதை ஒட்டிய கிராமம் எப்படி இருக்கும்.. அங்கிருக்கும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நேர்மையாகக் காண்பித்து இருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் மிக முக்கியமான கதாபாத்திரம் - குருவிக்காரனுடையது. தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் மூப்பன் என்று ஒருவர் உண்டு. அந்த மக்களுக்கு வழிகாட்டியாக, ஊரின் வரலாறு தெரிந்த முக்கியமான மனிதராக அவர் இருப்பார். அத்தகைய மூப்பன்தான் வாகை சூட வாவின் குருவிக்காரன். அந்த மண்ணின் சுவை அறிந்து மக்களை அங்கே கொண்டு வந்து சேர்த்தாலும் மனிதர்களின் வருகை காரணமாக அழிந்த வனங்களின் பொருட்டு தன் தவறை உணர்ந்து புத்தி பேதலித்த நிலையில் இருப்பவன். குருவி சத்தம் கேட்குது என்று அலறியபடியும், மழை வரப்போவதை அறிவித்துக் கொண்டும், நான் போகப்போறேன் நீ இருப்பியா எனத் தன் மரணத்தை உணர்ந்து விமலிடம் சொல்லும்போதும்.. தொன்மையான, மாயம் நிறைந்ததொரு கதாபாத்திரமாக அது மாறி விடுகிறது. இதுவரை தமிழ்த் திரையில் அதிகம் பேசப்பட்டிராத இத்தகைய பாத்திரத்தி இயக்குனர் கையாண்டிருப்பது மிக முக்கியமானது.



இரண்டாவதாக, காதலை வெகு துல்லியமாக இந்தப்படம் போல சமீபத்தில் வேறு எந்தப்படமும் பேசியதில்லை என்று சொல்லலாம். ஊருக்குப் புதிதாக வந்த வாத்தியாரிடம் எத்தனை பணம் கறக்கலாம் எனத் திட்டம் போடுகிற நாயகி. ஆனால் போகப்போக, தான் வாழும் இடமும் தன்னைச் சுற்றி இருக்கும் மக்களோடும் ஒப்பிடும்போது, நாயகனின் உருவ அழகு சார்ந்தும் பொருளாதாரரீதியாகவும் ஈர்க்கப்பட்டுஅவன்பால் காதல் கொள்கிறாள். நாயகனின் நிலை இதற்கு முற்றிலும் நேர்மாறானது. அவள் தன்னை மணந்து கொள்ளும்படி நேரடியாகக் கேட்டும் கூட, படத்தின் இறுதி வரைக்கும், அவனுக்கு அவளின் மீது காதலென எதுவும் கிடையாது. கடைசியில் அந்தக் கிராமமே தனது வாழ்க்கை என்றானபிறகு தன்னைப் பார்த்துக் கொள்ளவும் உறவாடவும் ஒரு துணை தேவையாக இருக்கிறது. இத்தகைய சூழலில் தனக்காகக் காத்து நிற்கும் நாயகியின் மீது அவனுக்கு காதல் உண்டாகிறது. ஆக, உணர்வுகள் அன்பு என்பதெல்லாம் தாண்டி, தேவைகள் சார்ந்து மனிதன் காதலிக்கத் தொடங்கி விட்டதை வெகு அழகாக இந்தப் படம் பதிவு செய்கிறது.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாமே தங்களுடைய பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக கிராமத்துக் குழந்தைகளாக வரும் சிறுவர்கள். கால் நடக்க முடியாமல் ஆட்டின் முன் பாய்ந்து நிற்கும் சிறுவனில் தொடங்கி மண்ணைத் தின்று விட்டு விமலைத் தன் தந்தையிடம் மாட்டிவிடும் சிறுவன் கிராமத்து வெள்ளந்திப் பிள்ளைகள் நம் மனதை அள்ளிக் கொள்கிறார்கள். குழந்தைகளின் படிப்புக்காக தன் வாழ்வையே தியாகம் செய்யும் வாத்தியாராக விமல். விதைக்காமலே அறுவடை செய்வது தவறு என்பதை உணர்ந்து பிள்ளைகளுக்குத் தன்னால் இயன்றதைச் சொல்லித் தரும் பாத்திரத்தில் இயல்பாகப் பொருந்துகிறார். கொஞ்சம் கஸ்துரியும் கொஞ்சம் ரஞ்சிதாவும் கலந்து செய்த நாயகி இனியா. குறும்புக்கார கிராமத்துப் பெண். அலங்காரம் எதுவுமில்லாமல் அழுந்த வாரிய கூந்தல், இழுத்துச் சுற்றிய தாவணி, கதை பேசும் கண்கள், சார் சார் எனக் கொஞ்சி நம் மனதை கொள்ளை கொள்கிறார். கணக்குப் போடும் டூநாலெட்டாக வரும் தம்பி ராமையா, குருவிக்காரனாக வரும் குமரவேல், பத்திர எழுத்தாளர் பாக்கியராஜ் என எல்லாருமே தங்கள் பங்களிப்பை அழகாகச் செய்திருக்கிறார்கள்.



கதையில் என்னால் ஏற்றுக் கொள்ள இயலாத ஒரே பாத்திரம் ஆண்டையாக வரும் பொன்வண்ணன். செங்கல்களை எறிந்து தம் பெருமை சொல்வதும் ஆரம்பத்தில் கண்டுகொள்லாமல் இருந்துவிட்டு பின்பு வாத்தியாரை அடித்து விரட்டுங்கள் என்பதும் அத்தனை ஒட்டவில்லை. அத்தனை பெரிய பண்ணையார் ஒரு சாதாரண பத்திர எழுத்தர் சொன்னதும் தனக்கு பொன்முட்டையிடும் வாத்துகளென இருக்கும் கிராமத்து மக்களை ஒன்றும் சொல்லாது கிளம்பிப் போவதும் நம்ப முடியாத ஒன்ரு. இருந்தபோதும், இங்கே படம் கல்வி என்பது ஒரு சமூகத்தை எப்படி மாற்றும் என்பதைப் பேசுகிறதே தவிர, அதிகாரத்தை எதிர்க்கும் மக்கள் சமூகம் குறித்தல்ல என்னும் சூழலில் நாம் இதை எளிதில் கடந்து போக முடிகிறது.

கதையில் காட்டியிருக்கும் கவனத்தைத் தாண்டி தொழில்நுட்ப ரீதியாகவும் இதுவொரு முக்கியமான படம். 60களில் நடக்கும் கதை என்பதால் கலை இயக்குனர் ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். தோல் வார் மாட்டிய ரேடியோ பொட்டி, சிலோன் ரேடியோ ஒலிபரப்பும் பாடல்கள், கையால் காப்பிப்பொடி அரைக்கும் இயந்திரம், அந்தக்காலத்தின் பத்திரிக்கைகள், லொட லொட என உருண்டு வரும் பிளஷர் கார் என பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். புது இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு இன்னும் பலம். சர சர சாரைக் காத்து பாடலும், அது படமாக்கப்பட்டு இருக்கும் விதமும் திரையில் ஒரு கொண்டாட்டம். நான் பெரிதும் எதிர்பார்த்த போறானே பாடல் ரொம்ப சாதாரணமாகப் படம் பிடிக்கப்பட்டு இருப்பது சின்னதொரு வருத்தம். இயக்குனரின் கண்களாகச் செயல்பட்டு வெகு அழகாகப் படத்தை நகர்த்திப் போகிறது ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு.

சென்ற வருடம் பலத்த ஆரவாரத்தோடு வெளியான பல படங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் வந்து பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் களவாணி. என்றாலும், சாதாரணமானதொரு நகைச்சுவைப்படம் என்பதைத் தாண்டி, அந்தப்படம் என்னை பெரிதும் ஈர்க்கவில்லை. ஆனால் வாகை சூட வா மூலமாகத் தன்னை தமிழின் தனித்துவமிக்க படைப்பாளிகளில் ஒருவராகப் பதிவு செய்திருக்கிறார் சற்குணம். திரைக்கதையின் முதல் பாதி நாயகியின் காதலையும் நாயகனின் குழப்பமான மனதையும் பேச, இரண்டாம் பாதி கிராமத்தில் நாயகனால் ஏற்படும் விழிப்புணர்வைப் பேசுகிறது. மெதுவாகவும் அழுத்தமாகவும் தான் சொல்ல வந்த விஷயத்தை மிகச் சரியாக சொல்லிப் போகிறார் இயக்குனர். அந்த ஊரில் இப்படி எடுக்கிறார்கள், இவர்கள் அப்படி எடுக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களைப் பார்த்து நாமும் நம் மண்ணை அற்புதமாகப் படம் பிடிக்கலாம் என்று செய்து காட்டி இருக்கும் இயக்குனர் சற்குணத்துக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

October 5, 2011

நான் அமைதியாக இருக்கிறேன்

என் வீட்டின் வரவேற்பறையில்
நாம் இருவரும் நாற்காலிகளில்
எதிரெதிரே அமர்ந்திருக்கிறோம்
அருந்திய பின்னும் நிரம்பி வழிந்தபடியே
இருக்கிறது உங்கள் தேநீர்க்கோப்பை
எரியம்புகளென பாய்ந்து கொண்டே
இருக்கின்றன வார்த்தைகள்
நான் அமைதியாக இருக்கிறேன்
நதியிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட மீனென
உங்களுடைய நான் என் முன்பாக
தத்தளித்துத் துடித்தபடி கிடக்கிறது
சின்னதொரு பார்வை
ஆதுரமாய் சில வார்த்தைகள்
தோள்சாய்க்கும் பேரன்பு
ஏதேனும் ஒன்று உங்களை
மீட்டெடுக்கக்கூடும் என்பதாய்
என் கண்களில் ஊடுருவிப் பார்க்கிறீர்கள்
அப்போதும்
நான் அமைதியாகவே இருக்கிறேன்
யுகங்களாய் கடந்துபோன சில
கணங்களுக்குப் பின் வேறென்ன
என்பதாய் என்னைப் பார்க்கிறீர்கள்
ஒன்றுமில்லை எனத் தலையசைக்கிறேன்
பின்பாக
எதுவும் பேசாமல்
நீங்கள் எழுந்து போனபின்னும்
நுரைத்துச் சுழன்றபடியே இருக்கிறது
பேசப்படாத வார்த்தைகளின்
அமில நீரூற்று