என் வீட்டின் வரவேற்பறையில்
நாம் இருவரும் நாற்காலிகளில்
எதிரெதிரே அமர்ந்திருக்கிறோம்
அருந்திய பின்னும் நிரம்பி வழிந்தபடியே
இருக்கிறது உங்கள் தேநீர்க்கோப்பை
எரியம்புகளென பாய்ந்து கொண்டே
இருக்கின்றன வார்த்தைகள்
நான் அமைதியாக இருக்கிறேன்
நதியிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட மீனென
உங்களுடைய நான் என் முன்பாக
தத்தளித்துத் துடித்தபடி கிடக்கிறது
சின்னதொரு பார்வை
ஆதுரமாய் சில வார்த்தைகள்
தோள்சாய்க்கும் பேரன்பு
ஏதேனும் ஒன்று உங்களை
மீட்டெடுக்கக்கூடும் என்பதாய்
என் கண்களில் ஊடுருவிப் பார்க்கிறீர்கள்
அப்போதும்
நான் அமைதியாகவே இருக்கிறேன்
யுகங்களாய் கடந்துபோன சில
கணங்களுக்குப் பின் வேறென்ன
என்பதாய் என்னைப் பார்க்கிறீர்கள்
ஒன்றுமில்லை எனத் தலையசைக்கிறேன்
பின்பாக
எதுவும் பேசாமல்
நீங்கள் எழுந்து போனபின்னும்
நுரைத்துச் சுழன்றபடியே இருக்கிறது
பேசப்படாத வார்த்தைகளின்
அமில நீரூற்று
7 comments:
//பேசப்படாத வார்த்தைகளின்
அமில நீரூற்று//
ambuttu kovama..... ?
அருமையா இருக்குண்ணே..
அமில நீரூற்று நல்லாயிருக்கு கா.பா.
//வரவேற்பரையில்// ?
நாடோடி இலக்கியன்..
நன்றி நண்பா.. மாத்திட்டேன்..
வர வர வாத்தியோட பதிவு என்னை மாதிரி சாமான்யனுக்கு புரியாது போல....................................................
''அருந்திய பின்னும் நிரம்பி வழிந்தபடியே
இருக்கிறது உங்கள் தேநீர்க்கோப்பை
எரியம்புகளென பாய்ந்து கொண்டே
இருக்கின்றன வார்த்தைகள்
நான் அமைதியாக இருக்கிறேன்''
ஜென் கவிதை போல இருக்கே. வாழ்த்துகள்.
சொல்லபடாத சோகங்களின் வழி உணர்த்துது வரிகள் அருமை !
Post a Comment