December 9, 2012

நீர்ப்பறவை


பிராந்தியம் அல்லது தேசியம் சார்ந்ததொரு பிரச்சினை. அதனூடாகச் சொல்லப்படும் ஒரு காதல். காதலர்கள் சந்திக்கும் சங்கடங்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் அல்லது முடிவு என்ன - இதுதான் மணிரத்னம் படங்களின் டெம்ப்ளேட். கிட்டத்தட்ட இதே மாதிரியானதொரு டெம்ப்ளேட் கதையாக உருவாகி இருக்கிறது நீர்ப்பறவை.  

விஷ்ணுவைப் பார்த்தால் மீனவ இளைஞன் என்றே நம்ப முடியவில்லை. அவரது உடைகள் காலத்துக்கும் சூழலுக்கும் சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கின்றன. வெகுஜனத் திரைப்படங்களின் சாகச நாயகனுக்கும் விஷ்ணுவுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை. தண்ணியடித்து சலம்பிக் கொண்டிருப்பவர் ஒற்றைப் பார்வையில் காதல் வயப்படுகிறார். திருந்துகிறார். கட்டுமரத்தில் ஒரே நாளில் சிரமப்பட்டு ஏறி நின்று சர்க்கஸ் செய்கிறார். யாராலும் பிடிக்க முடியாத சுறா மீனைப் பிடிக்கிறார். 

காதலுக்காக ஊர் மக்களை எதிர்த்து நியாயம் கேட்கிறார். மீன் விற்கிறார். தரகு வேலை செய்பவன் தான் பிழைக்கத் தெரிந்தவன் என வசனம் பேசுகிறார். நாற்பது நாட்கள் படகில் மீன் பிடிக்கத் தடை விதித்தால் தூத்துக்குடி போய் உப்பளத்தில் வேலை பார்க்கிறார். சமுத்திரக்கனியின் உதவியோடு வல்லம் வாங்குகிறார். தமிழ்ப்படம் ஷிவா போல ஒரு காபி குடிப்பதற்குள் பணக்காரன் ஆகவில்லை என்பது மட்டுமே வித்தியாசம். 

அண்ணாமலை படத்தில் வினு சக்கரவர்த்தி ரவுடி எம் எல் ஏவாக வருவார். ரஜினி அவருக்கு அரசியல் என்றால் என்ன என்பதைப் புரிய வைத்தவுடன் திருந்தி விடுவார். பிற்காலத்தில் ரஜினி சிரமப்படும்போது அவருக்கு உதவி செய்வார். சூரியவம்சத்தில் ஆர்.சுந்தர்ராஜன். இது மாதிரி விக்கிரமன் படங்கள் எல்லாவற்றிலும் நாயகன் சிரமப்படும்போது உதவுவதற்கென்றே சில கதாபாத்திரங்கள் உலாவும். நீர்ப்பறவையில் உப்பளக்காரரும் அவரது தங்கையும்.

சாராயம் விற்பவளின் மகன் விஷச்சாராயம் குடித்து சாகக்கிடக்க நாயகன் காப்பாற்றுகிறார். அதோடு விட்டிருக்கலாம். அடுத்த காட்சியில் வடிவுக்கரசி (சாராயம் விற்பவர்) தனது சாராயப் பானையை உடைக்கிறார். நாயகன் மதுமீட்பு மருத்துவமனையில் அடைக்கப்படுகிறான். தனது கைகள் நடுங்காததைக் கண்டு தான் திருந்தி விட்டதை உணர்கிறான். யாராலும் பிடிக்க முடியாத மீனைப் பிடித்தவனிடம் நாயகி கேட்கிறாள் “யாராலுமே பிடிக்க முடியாத மீனை நீ பிடிச்சியாமே?”. திரும்பும் திசையெல்லாம் கிளிஷே காட்சிகள்.

இந்தப்படத்துக்கு நந்திதா தாசும் நாந்தான் கொன்னேன் எனும் வசனமும் படத்தை ஃப்ளாஷ்பேக்கில் சொல்லும் உத்தியும் எதற்கு? நடு நடுவே என் கணவர் அவ்வளவு காதலிச்சார் தெரியுமா என பேக்கிரவுண்டு வாய்ஸ் வேறு. மீனவர்கள் வாழ்வாதாரம் சார்ந்த விசயங்களைப் பேசும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரமும் படத்தோடு ஒட்டவில்லை. அரசியல் பேச வேண்டும் என்பதற்காக வெட்டி இட்டப்பட்ட கதாபாத்திரமாகத் தான் வந்து போகிறார். 

கடல்புறத்தில் வாசித்து நாயகிக்கு பெயர் வைக்கலாம். ஆழி சூழ் உலகிலிருந்து அனியம், வல்லம் செய்யும் தொழில், கடலில் இறங்கும் வல்லத்துக்கு செய்யப்படும் பூஜை என்றெல்லாம் அடித்து விடலாம். ஆனால் கதாபாத்திரங்களில் ஓரிருவராவது அந்த வட்டார வழக்கில் உரையாட வேண்டாமா? 

கல்லூரியில் நான் படித்த காலத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பெர்னாந்தோ நண்பர்கள் நிறைய இருந்தனர். பாசம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் எத்தனை தீவிரமானவ்ர்களோ அதேபோல கோபம் வந்தாலும் அவர்களை எளிதில் அடக்க முடியாது. ஆனால் நீர்ப்பறவையில் இயக்குனரால் அவர்களது சுபாவத்தின்   ஒரு துளியைக் கூட சரியாகக் காட்சிப்படுத்த முடியவில்லை. சரக்கைப் போட்டுவிட்டு புனிதமான சர்ச்சுக்குள் நுழைந்த நாயகன் நாயகியின் அருகில் படுத்துக் கொள்கிறான். ஒற்றைச் சலம்பலோடு அது முடிந்து போகிறது. மீனவர்கள் தவிர்த்து யாரும் கடலுக்குள் போகக்கூடாது எனச் சொல்பவரின் படகையே நாயகன்  திருடுகிறான். அதையும் பாதிரி எளிதில் மன்னிக்கிறார். காலம் காலமாக மீன் வியாபாரம் செய்பவர்களுக்குத் தெரியாத வித்தையாக நாயகன் ஊருக்குள் சென்று மீன் விற்கிறான். அதையும் யாரும் கேட்பதில்லை. ஆனாலும் உங்களுக்கு ரொம்பத் தைரியம் பாஸ். 

படத்தில் சொல்லும்படியான நல்ல விசயங்கள் - சுனைனா, சுனைனா, சுனைனா. அதுதான் அருளுக்கான வல்லம் என சமுத்திரக்கனி யாரோ போல சொல்லும்போது மெதுவாகக் கண்கள் கலங்கி நிற்கும் காட்சி - படத்தின் ஆகச்சிறந்த காட்சி. 

ஒளிப்பதிவும் இசையும் நன்றாய் அமைந்தும் இயக்குனர் அவற்றைச் சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டார். மீனவர் - இலங்கை ராணுவம் என மிக முக்கியமானதொரு பிரச்சினையை பின்புலனாக எடுத்துக் கொள்ளும்போது அதற்கான நியாயத்தைச் செய்ய வேண்டாமா? சாதாரண காதல் கதையைச் சொல்லத்தான் இத்தனை பில்டப்பா என்ற கடுப்புத்தான் மிஞ்சியது. என் படம் இவ்வளாவுதான் என்று சொல்லிவிட்டு சாதாரணமாகக் கமர்ஷியல் படம் எடுப்பவர்களே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

(படம் பார்த்த பின்பு விமர்சனம் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் டிவியில் வந்து இதுவொரு நேர்மையான படம் என்று கழுவி ஊற்றும் இயக்குனரின் மீதானக் கடுப்பே இவ்விமர்சனம். நண்பர்கள் பொறுத்தருள்க..)

October 8, 2012

உதிரிப்பூக்கள் - 18

ப்பாவோடு வண்டியில் ரயில்வே காலனி வழியே போய்க் கொண்டிருந்தேன். போலிஸ் லைன் அருகேயிருக்கும் தண்ணித் தொட்டியைத் தாண்டும்போது ஏதோ ஞாபகம் வந்தவர் வண்டியை நிறுத்தச் சொன்னார். செய்தேன். இறங்கிப் போனவர் நேராக அங்கிருந்த ள்ளத்தில் போய் அமர்ந்து கொண்டார். வெகு நேரமாக வராதவரை என்னவென்று போய்ப் பார்த்தால் மனிதருக்குக் கண்ணெல்லாம் கலங்கி இருந்தது.

என்னப்பா ஆச்சு?

என் கூட சின்ன வயசுல இருந்து ஒண்ணா இருந்தவன்யா.. தர்மராசுன்னு பேரு. போன மாசம் தவறிட்டான். இந்த வழியாப் போனோமா.. அவன் நெனப்பு வந்திருச்சு. நாங்க நாலஞ்சு பேரு கூட்டாளிங்க.. உங்களுக்கு அந்தக் கொழாயடி மாதிரி..   இந்தத் தொட்டிக்குக் கீழ தான் எல்லாரும் விழுந்து கெடப்போம். இன்னைக்கு அவனுக யாரும் இல்ல. நான் மட்டும்தான் கடைசி.

வண்ணதாசனுக்கு நடைபெற்ற "அந்நியமற்ற நதி" கூட்டத்தில் எஸ்ரா பேசிய வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வந்தன. "இடம் என்பது வெறும் இடம் மாத்திரம் அல்ல. அவை நினைவுகளின் மீதங்கள். காலம் மனிதர்களைக் கவர்ந்து போக இடம் மட்டும் அவர்களுடைய நினைவுகளைத் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு அர்த்தத்தை நமக்குத் தந்து போகிறது."

த்தனை சத்தியமான வார்த்தைகள்? நீருக்குள் கிடக்கும் கூழாங்கற்களாய் ஆழ் மனதில் உறைந்து கிடக்கும் நினைவுகளை மீட்டெடுத்து பைத்தியம் பிடித்ததென நம்மை அலைக்கழிப்பவை இடங்கள். கலைடாஸ்கோப் போல பார்ப்பவரின் தன்மைக்கேற்ப தனது இயல்பையும் இருப்பையும் அவை மாற்றிக் கொள்கின்றன. நிறங்களின் வழி கசிந்துருகும் சில கனவுகள் உயிர்ப்பாய் இருக்கின்றன. சில நம்பிக்கைகள் மொத்தமாய்த் தொலைந்து போகின்றன. வாழ்வின் அற்புத கணங்களை, நாம் இழந்த மனிதர்களை, சந்தோசங்களை, துக்கங்களை, துரோகங்களை என யாவற்றையும் உயிர்ப்பாய் வைத்திருப்பவை நாம் தாண்டிப்போகும் இடங்கள்தானே?

வ்வொரு முறையும் மதுரைக் கல்லூரி பாலத்தின் மீது போகும்போதும் என் கண்கள் சுப்பிரமணியபுரத்தின் சாலைகளில் வீழ்ந்து மீளும். என் வாழ்வின் மிக முக்கியமான காலகட்டம் அங்கேதான் கழிந்தது. உலகம் என்பது என்னவென்று எனக்கு சொல்லித் தந்தது அந்த இடம். இன்றிருக்கும் என்னை வடிவமைத்தது  என நான் அங்கிருந்த நாட்களைச் சொல்லலாம்.

நான் குடியிருந்த சாந்தா அத்தை காம்பவுண்டின் முதல் வீட்டில் இருந்த மீனாக்காவுக்கு பாட்டு என்றால் உயிர். தன் தங்கையோடு சேர்ந்து மேடைக் கச்சேரிகளில் பாடுபவர். இரவில் அவரது வீட்டின் உள்ளிருந்து எப்போதும் ஒரு மெல்லிய ஹம்மிங் கேட்டபடி இருக்கும். நானும் என் தங்கச்சியும் ஒரு நாள் இல்லைன்னா ஒருநாள் சூலமங்கலம் சிஸ்டர்ஸ் மாதிரி பிரமாதமா வருவோம்டா. மடியில் அமர்த்தி என் தலைகோதி பிரியமாகச் சொல்லுவார். இப்போது மீனாக்கா எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனால் கோவில் திருவிழா மேடைகளைக் கடக்கும்போதெல்லாம் அங்கு பாடிக் கொண்டிருப்பவர் மீனாக்காவாக இருக்கக்கூடாது என்று பதட்டமாக இருக்கும். 

எதைச் சாப்பிட்டாலும் வீட்டுக்குள் பேண்டு வைக்கிறார் என வாசலுக்குத் துரத்தப்பட்டவர் எதிர்வீட்டு சம்முவம் பாட்டையா. ரோட்டில் விளையாடும் பசங்களைத் திட்டிக் கொண்டே இருப்பார். மேலே பந்து விழுந்தால் எடுத்து வைத்துக் கொண்டுத் தர மாட்டார். அவரைக் கண்டாலே எங்களுக்கு எரிச்சலாக வரும். நான் வீடு காலி செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு என்னை வரச் சொன்னார் எனப் போயிருந்தேன். தன் தலைகாணிக்குக் கீழிருந்து ஒரு சின்ன டப்பாவை எடுத்துத் தந்தார். அது முழுக்க பழங்காலத்து நாணயங்கள். நான் சேகரிப்பது தெரிந்து எனக்காகக் கொடுத்து விட்டார். இன்னும் கொஞ்ச நாள்ள போகப் போறவன் எனக்கு எதுக்குய்யா, எங்க இருந்தாலும் நல்லா இரு எனக் கண்களில் கண்ணீர் மல்கியபடி கொடுத்த அந்த மனிதரின் பிள்ளைகள் மீதான பிரியம் அன்றுதான் புரிந்தது. அவர்  இன்னும் உயிரோடு இருப்பாரா? இல்லை அந்தக் கட்டில் இன்னும் வெளியேதான் கிடக்குமா? 

மொட்டை மாடியில் நின்றபடி நான் உன்னை விட்டுப் போக மாட்டேண்டா என அழுதவளின் ஈரத்தை இன்னும் உணர முடிகிறது தோள்களில். எனக்குக் கெட்ட வார்த்தை சொல்லித்தந்த குரு பால்வண்டி பாலாஜியும் பாதியில் படிப்பை விட்டு லேத்துக்குப் போன குட்டை குமாரும் என்ன ஆனார்கள்? சாந்தா அத்தையின் மூன்றாவது மகள் தான் காதலித்த ராஜசேகர் அண்ணனோடு ஓடிப்போனாளா இல்லையா? ரைஸ்மில் கிரவுண்டில் கட்டப்பட்ட பாலகுருகுலம் ஸ்கூலுக்குள் எங்காவது ஒரு ஓரத்தில் அவுட், சிக்ஸர் போன்ற அலறல்கள் இன்னும் கேட்குமா? நிறைய கேள்விகள் என் மனதுக்குள் ஓடியபடி இருக்கும். ஒருமுறை அந்தப் பகுதிக்குப் போய்ப் பார்க்கலாமா எனவும் தோன்றும். ஆனால் ஏதோவொரு இனம்புரியாத பீதியும் பதட்டமும் என்னை இன்றுவரை அங்கே போகவிடாமல் செய்தபடி இருக்கின்றன.

த்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம். அப்போது நான் சோலைஅழகுபுரத்தில் குடியிருந்தேன். ஸ்ரீனிவாசா தியேட்டருக்குப் பின்னால்  ஒரு காம்பவுண்டில் வீடு. அங்கே என் கூட்டாளியாக இருந்தவன் டோரி என்கிற வெங்கடேசன். ஒன்றரைக்கண் என்பதால் டோரி. ரொம்ப அப்பாவி. வீட்டுக்கு பயந்தவன். எனக்கு ரெண்டு வயது மூத்தவன். எங்கள் காம்பவுண்டுக்கு எதிர்வீட்டில் கோமதி, சோபனா என்று இரண்டு பிள்ளைகள். அண்ணா அண்ணா என்று என் மேல் உயிரை விடுவார்கள். பள்ளிக்குப் போகாத நேரங்களில் அவர்கள் வீட்டில்தான் தெருப்பிள்ளைகள் எல்லாம்  ஒன்று கூடி விளையாடுவோம்.

கோமதியின் தோழியாகத்தான் கீதாஞ்சலி எங்களுக்கு அறிமுகமானாள். அவளுடைய அம்மா சின்ன வயதில் யாரோடோ ஓடிப்போய் விட்டாள் என்பதால் அவளுடைய அப்பாவுக்கு அவளைப் பிடிக்காது. தன் பாட்டியோடு வசித்து வந்தவள் நாங்கள் இருந்த ஏரியாவுக்கு வீடு மாற்றிக் கொண்டு வந்த கொஞ்ச நாளிலேயே எங்கள் எல்லோரோடும் ரொம்ப நெருக்கமாகி விட்டாள். நமக்கென ஒரு காதலி இருந்தால் தான் கவுரவம் எனத் தீவிரமாக நம்பியதோடு அதற்கான முயற்சிகளில் மனம் தளராமல் நான் ஈடுபட்டிருந்த பருவமது. ஆக நான் காதலிக்க வேண்டியவர்கள் வட்டத்துக்குள் கீதாவும் வந்து சேர்ந்ததில் எந்த ஆச்சரியமும் இருக்கவில்லை. 

எப்போதோ ஒருமுறை தனக்குக் கவிதைகள் பிடிக்கும் என கீதா சொல்லி இருந்தாள். ஆகவே கவிஞர் அவதாரம் எடுத்து அவளை கரெக்ட் செய்யலாம் என முடிவு செய்தேன். ஒரு அன்ரூல்டு நோட்டு முழுக்கக் கவிதைகள். “இந்தப் பூக்களின் வாசமெல்லாம் அந்த மாலையில் வாடி விடும் நம் காதலின் வாசமெல்லாம் எந்த நாளுமே முடிவதில்லை”. புதிய பாட்டாக எழுதினால் கண்டுபிடித்து விடுவாள் என்பதற்காக தேடித் தேடி பழைய பாடல் வரிகளாக எழுதி வைத்திருந்தேன். ஆனால் என் நேரத்துக்கு அந்த நோட்டு கீதாவின் கைகளில் போய்ச் சேர்வதற்கு முன்பாக என் அம்மாவிடம் சிக்கிக் கொண்டது. வாசித்து விட்டு என்ன கருமம்டா இது எனக் கிழித்துப் போட்டு விட்டார். இருந்தும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல என் முயற்சிகள் தொடர்ந்தபடி இருந்தன.

ஒரு மாலை நேரம் மொட்டை மாடியில் நானும் டோரியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கீதா வந்தாள். திடீரென ஒரு கடிதத்தை எடுத்து டோரியிடம் கொடுத்தவள் ஏதும் சொல்லாமல் போய் விட்டாள். அது ஒரு லவ் லெட்டர். எனக்கு உள்ளே ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இலவு காத்த கிளியின் நிலை உணர்ந்து மண்டை காய்கிறது. டோரியோ நடுங்கி விட்டான்.  வீட்டில் தெரிந்தால் கொன்று போடுவார்கள் எனவே நீயே போய் அவளிடம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று சொல்லி விடு என ஒதுங்கிக் கொண்டான். எனக்கு இது தேவைதானா?

ஸ்ரீநிவாசா தியேட்டரின் ஆளில்லா பின்புறத்தில் வைத்துதான் கீதாவிடம் பேசினேன். இது காதலிக்கும் வயசு கிடையாது என்பதையும் டோரி நிறைய பயப்படுவதையும் அவளிடம் சொன்னேன், ஆனால் அவள் புரிந்து கொள்வதாக இல்லை. இடையிடையே வேறு யாரையேனும் அவளை விரும்புகிறவர்களைக் கூட காதலிக்கலாமே என்றெல்லாம் பிட்டைப் போட்டும் அந்த தத்திக்கு எதுவும் விளங்கவில்லை. கடைசியில் கடுப்பாகிக் கத்தினேன்.நீ சின்னப் பொண்ணும்மா. இன்னும் வயசுக்குக் கூட வரல.. கொஞ்சம் யோசிச்சுச் செய். அதற்கு அவள் சொன்ன பதில்தான் எனக்கு பயங்கர அடி. நான் வயசுக்கு வரலைன்னு உங்களுக்குத் தெரியுமா. நான் அதிர்ந்து போனேன். தான் பெரிய பெண்ணாகிவிட்டது தெரிந்தால் அப்பாவிடம் சொல்லி யாருக்காவது கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என்பதற்காக அதை வீட்டில் சொல்லாமல் மறைத்திருக்கிறாள். ஒரு பெண்ணுக்கு இத்தனை தைரியம் இருக்கக்கூடும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏதும் பேச இயலாமல் திரும்பி விட்டேன்.

இது நடந்த இரண்டு மாதங்களில் கீதா காணாமல் போனாள். அவள் அப்பா எதற்கோ போட்டு அடித்ததால் ஓடிப் போய் விட்டாள் என்றும் வேறு யாரோ ஒரு பையனை இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள் என்றும் தற்கொலை செய்து கொண்டாள் எனவும் பல கதைகள் ஊருக்குள் நிலவின. ஆனால் அவள் மாயமாய் மறைந்து விட்டாள் என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு முறை அரவிந்த் தியேட்டர் - இப்போது ஸ்ரீனிவாசா தியேட்டரின் பெயர் இதுதான் - வழியாகப் போகும்போதும் அவளுடைய நினைவு வரும். அவளுடைய முகம் மனதில் நிழலாடும். ஒருவேளை டோரி அவளிடம் சரி எனச் சொல்லியிருந்தால் கூட அந்தப் பெண்பிள்ளையின் வாழ்க்கை வேறொன்றாக இருந்திருக்கலாம் என்கிற குற்றவுணர்ச்சி பெரும்பாரமாக மனதை அழுத்தும். ஆனால் என்ன செய்வது? முடிந்து போன சில விசயங்களை எப்போதும் நம்மால் மாற்ற முடிவதில்லை.

சிறு வயதிலிருந்தே பழனி எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். எப்படியும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது அங்கே போய் வருவது வழக்கம். அதுமாதிரியான சமயமொன்றில் சாமி கும்பிட்டு விட்டு படிகளில் இறங்கத் தொடங்கியபோதுதான் நான் அந்தப் பையனைப் பார்த்தேன். அதிகபட்சம் போனால் என்னைக் காட்டிலும் இரண்டு வயது கம்மியாக இருக்கக்கூடும் அவனுக்கு. பனிரெண்டு அல்லது பதிமூன்று சொல்லலாம். கையில் கொஞ்சம் லாட்டரி டிக்கட்டுகள் வைத்திருந்தான்.

சார் சார்.. அடுத்த வாரம் குலுக்கல் சார். வாங்கிக்குங்க சார். அதிர்ஷ்டலட்சுமி உங்களைத் தேடி வர்றா சார்.. ஒரு டிக்கெட் ரெண்ட் ரூவாதான் சார்.. வாங்குங் சார்...

அப்பாவுக்கு லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கமுண்டு. ஆனால் அதனால் அம்மாவோடு பெரும் சண்டை ஏற்பட்டு சமீபமாகத்தான் அந்தப் பழக்கத்தை விட்டிருந்தார். எனவே வேண்டாம் என்பதாகத் தலையசைத்தபடி என் கைகளைப் பிடித்துக் கொண்டு இறங்க ஆரம்பித்தார். ஆனால் அந்தப் பையனும் விடுவதாக இல்லை.

வீட்டுல ரொம்பக் கஷ்டப்படுறோம் சார். வித்துட்டுப்போனாதான் சார் இன்னைக்கு சாப்பாடு. அம்மா பாவம் சார். பொய் சொல்லல சார். வேணும்னா வீட்டுக்கு வந்து பாருங்க சார். வாங்கிக்கங்க சார்.. 

கிட்டத்தட்ட அடிவாரத்துக்கே வந்து விட்டோம். அந்தப் பையனும் திரும்பத் திரும்ப அதே பாட்டைப் பாடியபடி எங்கள் கூடவே வந்து கொண்டிருந்தான். எனக்கு மனசு கேட்கவில்லை.

அப்பா.. பாவம்ப்பா.. வாங்குங்கப்பா..

அப்பா ஏதோ யோசித்தவர் தனது பைக்குள் கைவிட்டு பத்து ரூபாயை எடுத்தார்.

எனக்கு டிக்கெட் வேண்டாம். இதை வச்சுக்கப்பா..

இதுவரை நீண்டிருந்த அந்தப் பையனின் கைகள் சட்டென பின்னிழுத்துக் கொண்டன. அவன் கண்கள் கலங்கி விட்டிருந்தன.

நீங்க டிக்கெட் வாங்கலைன்னாக் கூடப் பரவாயில்லை சார். ஆனா எனக்கு எந்தப் பிச்சையும் போட வேண்டாம் சார்..

அப்பா அமைதியாக அந்தப் பையனிடம் இருந்து ஐந்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார். சந்தோசமாக வாங்கிக் கொண்டவனின் கண்கள் இப்போது சிரித்தன. எனக்கு அந்தப் பையனை நினைக்கும்போது ரொம்பப் பெருமையாக இருந்தது. அதன் பின்பு ஒவ்வொரு முறையும் பழனிக்குப் போகும்போதெல்லாம் என் கண்கள் அவனைத் தேடும். அவனையொத்த சாயலுடைய பையன் எங்கேயாவது தென்படுவானா என்று மனம் கிடந்து அலைபாயும். ஆனால் அவன் என்னிடம் அகப்படவே மாட்டான்.

ஐந்தாறு வருடங்கள் பின்பாக - கொஞ்சம் கொஞ்சமாக நான் கடவுள் என்பதைக் கேள்வி கேட்கத் தொடங்கியிருந்த காலகட்டம் - அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் பழனிக்குப் போயிருந்தேன். நான், அம்மா, அப்பா மூவரும் யானைப் பாதையில் ஏறிக் கொண்டிருந்தோம். எதிரே ஒரு மனிதர் இறங்கி வந்து கொண்டிருந்தார். அழுதபடி கண்கள் எல்லாம் சிவந்து பார்க்கவே பாவமாக இருந்தார். தானாகப் புலம்பியபடி வந்த மனிதரிடம் என்ன ஆனதென்று அப்பா கேட்டார்.

எல்லாம் பிளான் பண்ணிப் பண்றாய்ங்க சார். கீழ கிடந்த லாட்டரி டிக்கட்ட விட்டுட்டுப் போறீங்க தம்பின்னு விக்கிறவன்கிட்ட எடுத்துக் கொடுத்தா.. அது உன்னைத் தேடித்தான் வந்திருக்கு.. வாங்கிக்கோன்னு கம்பெல் பண்ணுனானுங்க.. அடப் போங்கப்பா வேண்டாம்னு கெளம்புனா ஒரு கூட்டமா சுத்திக்கிட்டு அடிக்க வர்றானுக.. எல்லாம் ஒரே குரூப்பு போல.. சொல்லி வச்சுப் பண்றானுங்க.. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு வந்தா.. இங்கேயும்.. ச்சே.. வெறுத்துப் போகுது சார்..

இப்படி எல்லாம் கூடவா செய்வார்கள் எனும் ஆச்சரியத்தோடு மேலேறிப் போனால் சற்று தூரத்திலேயே டிக்கெட்காரர்களோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த இன்னொரு மனிதரைப் பார்க்க முடிந்தது. நான் அப்படியாக மட்டும் இருந்துவிடக் கூடாது என வேண்டியவனாக பிரச்சினை செய்து கொண்டிருந்தவர்கள் யாரெனப் பார்த்தேன். நடுவே எல்லாருக்கும் முன்பாக அந்த மனிதரின் சட்டையைப் பிடித்து வம்பு பண்ணிக் கொண்டிருந்தவன் - அவனேதான்.

அதன் பிறகு நான் பழனிக்குப் போகவேயில்லை.

சொல்லிக் கொண்டே போகலாம். ண்ணற்ற விதைகளைத் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் மாதுளை போல ஒவ்வொரு இடமும் தனக்குள் எண்ணிலடங்கா மனிதர்களையும் அவர்கள் சார்ந்த நினைவுகளையும் ஒளித்து வைத்திருக்கிறது.  இடங்கள் வெறும் இடங்கள் மட்டும் அல்ல. அவை நினைவுகளின் தாழ்வாரங்கள்.

September 21, 2012

உதிரிப்பூக்கள் - 17

ள்ளிப்படிப்பு முடித்து கல்லூரிக்குப் போகும் காலகட்டம். கோவை சிறுவாணி மலையடிவாரத்தில் இருந்த ஒரு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தது. என்னை ஹாஸ்டலில் கொண்டு சேர்க்க வந்த மக்களுக்கு பயங்கர சந்தோசம். அருமையான வசதிகளுடன் கூடிய கல்லூரி, தலைக்கு மேலே தவழ்ந்து போகும் மேகங்கள், மெல்லிய தூறலுடன் மழை, அற்புதமான சுற்றுச்சூழல் என எல்லாம் பார்க்கையில் அம்மாவுக்குப் பரம திருப்தி. பத்திரமா இருந்துக்கப்பா என்று ஒற்றை வார்த்தையோடு நிம்மதியாகக் கிளம்பிவிட்டார். ஆனால் நான் உள்ளுக்குள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன்.

கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் செட்டியைப் பார்க்கப் போயிருந்தேன் (ராம்பிரசாத் - ஞாபகம் இருக்கானா?). காரைக்காலில் ஒரு பிசியோதெரபி கல்லூரியில் சேர்ந்தவன் இரண்டே வாரங்களில் பயங்கரக் காய்ச்சலோடு ஊருக்குத் திரும்பி வந்திருந்தான். என்னடா ஆச்சு என்று கேட்டதற்கு ஓவென அழ ஆரம்பித்து விட்டான். காரணம் - ராகிங்.

கல்லூரியின் முதல் நாளே பத்து ஆசை சாக்லேட் ரேப்பர்களைக் கொடுத்து அவற்றின் நிறத்தை நீக்கித் தர வேண்டுமென சொல்லி இருக்கிறார்கள் சீனியர்கள். அதுவும் வாயால் சவைத்து சவைத்தே எடுக்க வேண்டுமாம். ஒரு துளி நிறம் மிச்சமிருந்தாலும் அதற்குத் தண்டனையாக மேலும் பத்து ரேப்பர்கள். ஆசை ரேப்பரில் எத்தனை நிறங்கள் இருக்கும் என்று தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேளுங்கள். அன்றைக்குப் பூராவும் ரேப்பர்களை சவைத்து சாயங்காலத்தின் போது வாயெல்லாம் வீங்கி இரண்டு நாட்கள் பயல் பேசமுடியாமல் கிடந்திருக்கிறான்.

எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை அவனுக்கு ஹாஸ்டலில் நடந்திருக்கிறது. முதலாம் வருட மாணவர்களை எல்லாம் ஒரு இருட்டு அறைக்குள் தள்ளி நிர்வாணமாக்கி இருக்கிறார்கள். பிறகு அவர்களில் ஒவ்வொருவராகப் போய் மற்றவர்களுடைய பிறப்புறுப்பின் அளவை ஸ்கேலால் அளந்து வர வேண்டும். கடைசியாக எல்லாரும் ஒரே மாதிரி அளந்திருக்கிறார்களா என்று சீனியர்கள் சரி பார்ப்பார்கள். தப்பாய் அளந்தவனுக்கு செமத்தியான அடியும் உதையும் கிடைக்கும். இதெல்லாம் தாங்கிக் கொள்ள மாட்டாமல் ஓடிவந்து விட்ட செட்டி அடுத்து கல்லூரிக்குப் போகவே மட்டேன் என அழும் அளவுக்கு பயந்து கிடந்தான். ஆக ராகிங் பற்றிய பயத்தில் நான் ததிங்கினத்தோம் போட்டுக் கொண்டிருந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லைதானே?

ல்லூரியின் முதல் நாள். மிகச்சரியாக இண்டெர்வெல் சமயத்தில் சீனியர்களிடம் சிக்கினேன். 

எந்த ஊருடா நீ?

மதுரைண்ணே..

ப்ர்ர்ர் என்று சிரித்து விட்டார்கள். அண்ணே என்கிற வார்த்தையின் பயன்பாடு அவர்களுக்கு அத்தனை கிண்டலானதாக இருந்தது.

மதுரையாம்... அண்ணேவாம்.. கெரகம்.. அது கிடக்கட்டும். நாங்க எல்லாம் உனக்கு அண்ணங்க தான? எங்க பேர் கேக்க மாட்டியா...

பரவாயில்லை ஒரு நேசபாவத்தோடு தான் இருக்கிறார்கள் என்று நம்பிக் கேட்டேன்.

உங்க பேரு என்னண்ணே?

முடிக்குமுன்பாக மண்டையைச் சேர்த்து அடி விழுந்தது.

அவனுக்கு நீதான் பேரு வச்சியா? ஒழுங்கா மரியாதையாக் கேளுடா..

எப்படிண்ணே கேக்கணும்?

மைட்டி மைட்டி சீனியர் சார் ஐயாம் அக்லி அக்லி ஜூனியர் சார் மே சார் ஐ சார் நோ சார் யுவர் சார் நேம் சார்.. இப்படிக் கேளுடா வெண்ண..

சுற்றி இருந்த பத்து அண்ணன்கள், பதினைந்து அக்காக்களிடம் எல்லாம் பேர் கேட்டு முடித்தபின்பு அடுத்த இம்சை ஆரம்பமானது. எங்கள் கல்லூரிக்கு என இருந்த பிரத்தியேகமான முறையில் சல்யூட் அடிக்க வேண்டும். எப்படி? அட்டென்ஷனில் நின்று இடது கையைத் தொடையிடுக்கில் இறுக்கிப்பிடித்து வானில் ஒரு தவ்வு தவ்வி அதே நேரத்தில் முழுதுமாய்ச் சுழன்று கீழிறங்கும் வேளையில் வலக்கையால் சல்யூட் அடிக்க வேண்டும். கேட்கும் போதே தலை சுற்றுகிறதா? அப்போது அதைச் செய்பவர்களுக்கு? சுற்றி இருக்கும் அத்தனை பேருக்கும் சல்யூட் அடி. ஆக இப்படி கோலாகலமாகத்தான் தொடங்கியது என் கல்லூரி வாழ்க்கை.

பெரும்பாலும் ராகிங் என்கிற பெயரில் அப்போது நடந்து கொண்டிருந்தது எல்லாம் பணம் பறிப்பதுதான். பணத்துக்காக பேயாய் அலையும் ஜீவன்களை நான் அங்குதான் முதலில் சந்தித்தேன். அன்றைய காலகட்டத்தில் என் செலவுக்காக அம்மாவால் மாதாமாதம் தர முடிந்தது வெறும் நூறு ரூபாய் மட்டுமே. பாக்கெட் வைத்த ஷார்ட்ஸ் போட்டு அதில் பணத்தை ஒளித்து வைத்திருப்பேன். ஆனால் எமப்பயல்கள் அதையும் தேடி எடுத்து விடுவார்கள். காசு போட்டு படத்துக்கு கூட்டிப் போகச் சொல்வார்கள். புதிதாய் ரிலீஸ் ஆன படங்களின் கேசட்கள் வாங்கி வா என்பார்கள். என் சுவாசக் காற்றே மட்டும் நாலைந்து கேசட்டுகள் என் சீனியர்களுக்கு அழுதிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

அதில் தமிழ் மாணவர்களைக் கூட ஒரு கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் நாம் கெஞ்சினால் மனம் இளகி விட்டு விடுவார்கள். ஆனால் தெலுங்கு மற்றும் மலையாள மாணவர்கள்தான் ரொம்பப் பாவம். அந்த  சீனியர்கள் எப்போதும் பத்து முதல் இருபது பேர் வரைக்கும் ஒரு கூட்டமாகத்தான் வருவார்கள். யார் நல்ல பசையுள்ள பார்ட்டி என்று பார்த்து அழைத்துப் போய் விடுவார்கள். அவர்கள் கேட்பதை எல்லாம் செய்து கொடுத்து விட்டால் அவன் பிழைத்தான். மறுத்துப் பேசினால் ஹாஸ்டலுக்குப் பின்னால் இருக்கும் காட்டுக்குள் கூட்டிப்போய் அடி நொறுக்கி விடுவார்கள். 

நான் பள்ளியில் படிக்கும்வரைக்கும் யாரும்  எதற்கும் என்னை அடித்தது இல்லை. முதல் வருடம் முழுவதும் அப்படி இப்படி என்று பணம் போனால் கூட யாரிடமும் அடி வாங்காமல் தப்பித்துக் கொண்டேன். அதில் எனக்கு பரம சந்தோசமும் பெருமையும் கூட. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து பெரிய மொத்தாக வாங்கப் போகிறேன் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

ரண்டாம் வருடம். லேட்டரல் பயல்கள் மீது எங்களுக்கு ஒரு காண்டு. நாங்கள் மட்டும் இத்தனை இம்சைப்பட்டு முதல் வருடம் படித்து விட்டு வருவோம், நீங்கள் நோகாமல் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து சீனியர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளுவீர்கள்? அப்படி எல்லாம் விட்டு விட முடியாது தம்பிகளா? அதனால் லேட்டரல் மக்களை நாங்களே ராகிங் செய்வது என முடிவானது. இந்த நாங்களே என்பது நான் மற்றும் எனது நான்கு அறை நண்பர்களைக் குறிக்கிறது எனக் கொள்க.

ஒரு நிறைந்த செவ்வாய்க்கிழமை இரவில் சுந்தரேசன் எங்களிடம் மாட்டினான். எப்படிடா குழந்தை பிறக்கும் எனக்கேட்டால் சாமி கொடுப்பார் என சொல்லுமளவுக்கு மிகப்பெரிய அப்பாவி அவன். எங்களுக்கும் அப்படி ஒரு ஆள்தான் தேவை. ஏனென்றால் அவன்தான் நாம் எத்தனை அடித்தாலும் திருப்பி அடிக்க மாட்டான் பாருங்கள். அன்றைக்கு ராத்திரி முழுக்க செம கூத்து. அவனை ஓட்டி எடுத்து விட்டோம். போதாக்குறைக்கு எங்கள் முதல் ராகிங் முயற்சியை எப்போதும் நினைவில் கொள்ளும் வகையில் அதைக் கேசட்டில் பதிவு செய்தும் வைத்துக் கொண்டோம்.

மறுநாள் காலை எட்டு மணி போல அவசரமாகக் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து ஃபைனல் இயர் ஸ்டூடண்ட் சேர்மன் அங்கே வந்தார்.

என்னடா சாமியாரே.. நேத்து ஒரே ஆட்டம் போல?

ஆமாண்ணே.. சும்மா விளையாட்டுக்கு..

அதனால் என்னடா.. விடு.. ஏதோ ரெக்கார்ட்லாம் பண்ணிங்களாம்.. போடு கொஞ்ச நேரம் ஜாலியாக் கேப்போம்..

கேசட் ஒரு இருபது நிமிடம் ஓடியிருக்கும். எதேச்சையாக சேர்மன் கேட்டார்.

இம்புட்டு பேக்கா இருக்கான். இந்த சுந்தரேசன் யாருன்னு தெரியுமாடா..

இல்லையே.. ஏண்ணே.. சிரித்தபடி கேட்டேன்.

அவன் என் தம்பிடா...

ன்றைக்கு இரவு சேர்மனின் அறைக்குள் நண்பர்கள் அனைவரும் மண்டியிட்டு அமர்ந்திருந்தோம். கேசட் ஓடிக் கொண்டிருக்க சுந்தரேசன் யார் யார் எதை எதைப் பேசியது என அடையாளம் காட்டிக் கொண்டிருந்தான். யார் என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் வந்து எங்களை அடித்துக் கொண்டிருந்தார்கள். 

இவனுங்க கெட்ட கேட்டுக்கு இண்ட்ர்னல் ராகிங்.. ஏண்டா?

ஒருவன் எங்கிருந்தாவது வருவான். நாங்கள் மண்டியிட்டு இருப்பதைப் பார்ப்பான். ஓங்கி முதுகைச் சேர்த்து ஒரு மிதி. அம்மா என்று கதறியபடி கீழே விழுந்தாலும் உடன் எழுந்து கொள்வோம். இல்லை என்றால் அதற்கும் அடிப்பார்கள். பிறகு பொறுமையாகக் கேப்பான்.

எதுக்குடா மாப்ள இவனுங்கள அடிக்கிறீங்க?

ஏண்டா டேய்.. எதுக்கு என்னன்னு கேட்டுட்டாவது அடிக்கக் கூடாதா? லூசுப்பயலுகளா.. அடிச்சுட்டுதான் கேப்பீங்களாடா? இது என் மைண்ட் வாய்ஸ். அன்றைக்கு இரவு ரூமுக்குத் திரும்பி வந்தபோது அத்தனை பேர் உடம்பும் புண்ணாகிப் போயிருந்தது. பேருக்குத் தூங்கி விட்டு காலையில் எழுந்தோம்.  அடுத்த குண்டு தயராக இருந்தது. 

மாப்ள. நேத்து அடிச்சது ஹாஸ்டல் சீனியர்களாம். இன்னைக்கு ராத்திரி டே ஸ்காலர்ஸ் வர்றாங்களாம்..

நாசமாப் போச்சு. நம்மால முடியாதுடா யப்பா. இதுக்கு மேல உடம்பு தாங்காது. மாலை கல்லூரி முடிந்தது சத்தம் போடாமல் கோவையில் இருந்த எங்கள் நண்பன் ஒருவனின் வீட்டுக்கு எஸ் ஆகி விட்டோம்.

ரவில்  எங்களைத் தேடிக் கொண்டு வந்தது நான்காம் வருட மாணவர்கள் அல்ல - மூன்றாம் வருட மாணவர்கள். எந்தக் கல்லூரியையும் போல எங்கள் கல்லூரியிலும் மூன்றாம் வருட மக்களுக்கும் நான்காம் வருட மக்களுக்கும் ஆகவே ஆகாது. ஹாஸ்டலில் ஒரு தப்பு நடந்தால் ஃபைனல் இயர் மட்டும்தான் தட்டிக் கேட்கலாமா, நாங்கள் கேட்கக் கூடாதா என்னும் உயரிய கொள்கையோடு எங்களைத் தேடி இருக்கிறார்கள். நாங்கள் கையில் சிக்கவில்லை. ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் எங்கள் பக்கத்து அறையில் இருந்த இன்னொரு நண்பனை பிடித்து நாயடி அடித்து விட்டார்கள். அங்குதான் ஆரம்பித்தது வினை.

எதிர்பாராதவிதமாக அவர்கள் அடித்தது அவன் உயிர்நிலையில் பட்டு விட்டது. வலி தாங்காமல் துடித்தவனை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். பரிசோதித்துப் பார்த்த டாக்டர் அவன் எழுந்து நடமாட ஆறு மாதங்கள் ஆகும் என்றும் அதன் பின்பும் அவன் ஆண்மையோடு இருப்பது சந்தேகம்தான் என்றும் சொல்லி விட்டார். மறுநாள் காலை இந்தத் தகவல் எங்களுக்கு வந்து சேர்ந்தபோது நாங்கள் அதிர்ந்து போனோம். கல்லூரிக்குத் திரும்பி வந்தால் இரண்டாம் வருட மாணவர்கள் ஸ்ட்ரைக். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை டிஸ்மிஸ் செய்யும் வரை போராட்டம். கடைசியில் கல்லூரி நிர்வாகம் ஆறு மூன்றாம் வருட மாணவர்களைக் கல்லூரியை விட்டுத் தூக்கிய பின்புதான் பிரச்சினை ஓய்ந்தது. எங்களை யாரும் இந்தக் களேபரத்தில் கவனிக்கவில்லை என்பதில் எங்களுக்கு ஒரு அல்ப நிம்மதி.

ல்லூரியில் எனது மூன்றாம் வருடம். எங்களுக்கும் ஃபைனல் இயர் மாணவர்களுக்கும் ஒரு மறைமுகப் போர் நடந்தபடி இருக்க அதை மீண்டும்  பெரிதாக்கிய பிரச்சினை இரண்டாம் வருட மாணவர்களின் வடிவில் வந்தது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் ஒரு பெண். அவளை ஒரு எலெக்ட்ரிக்கல் பையனும் மெக்கானிக்கல் பையனும் விரும்பி இருக்கிறார்கள். அவளோ அந்த எலெக்ட்ரிக்கல் பையனை விரும்பி இருக்கிறாள். காண்டாகிப் போன மெக்கானிக்கல் பையன் லேடிஸ் ஹாஸ்டல் வாசலில் வைத்தே அந்த எலெக்ட்ரிக்கல் பையனை அடி நொறுக்கி விட்டான். அவன் அழுது கொண்டே எங்களிடம் வந்தான். நாங்களும் அந்த மெக்கானிக்கல் பையனைக் கூப்பிட்டு மிரட்டி அனுப்பினோம். அந்தப் பக்கி அதை நேராக ஃபைனல் இயர் மக்களிடம் போய் சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டது. ஆக மீண்டும் எங்களுக்கும் சீனியர்களுக்கும் சண்டை.

ஃபிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மூன்றாம் வருட ஸ்டூடண்ட் சேர்மனின் கார் தீப்பற்றி எரிகிறது. அன்று மாலை எங்களிடம் சிக்கிய செக்யூரிட்டி ஒருவர் தீ வைத்தது நான்காம் வருட மாணவர்கள் என்பதையும் யார் யார் என்பதையும் சொல்லி விட்டார். மறுநாள் மாலை சீனியர்களை ஹாஸ்டலில் புகுந்து கதவுகளை எல்லாம் உடைத்து அடி நொறுக்குகிறோம். கல்லூரியின் மிகப்பெரிய தலைகள் எல்லாம் வந்து சண்டையை நிப்பாட்டும்படிக் கெஞ்சுகிறார்கள். யாரும் கேட்கத் தயாராக இல்லை.

வெகு சில எண்ணிக்கையில் சீனியர்கள். நாங்களோ அவர்களைப் போல மூன்று மடங்கு எண்ணிக்கையில் இருந்தோம். முந்தைய நாட்களின் ராகிங் கோபம் எல்லாம் சேர்ந்து கொள்ள கையில் டிராஃப்டரோடு வெறியாட்டம் போட்ட அந்த நேரத்தை இப்போது நினைத்துப் பார்க்கையில் வெட்கமாக இருக்கிறது. அடிதடி எல்லாம் ஓய்ந்த பின்பும் அன்றைய இரவு பதட்டமாக கழிந்தது.

புதன் அன்று என் அம்மாவுக்கு மதுரையில் கண் ஆபரேஷன். எனவே நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு செவ்வாயன்று காலை ஊருக்குக் கிளம்பினேன். பிரச்சினையின் காரணமாக கல்லூரிக்கு இரண்டு நாள் விடுப்பு விட்டிருந்ததும் எனக்கு வசதியாகப் போக ஹாயாக் கிளம்பி விட்டேன். அப்போது எல்லாம் முடிந்து விட்டதாக நான் நினைத்தது இரண்டே நாட்களில் பொய்யாகிப் போனது.

புதன்கிழமை இரவு ஒன்பது மணி போல மூன்றாம் வருட மாணவர்கள் நான்கு பேர் கோவைக்கு படத்துக்குப் போய்விட்டு பைக்கில் திரும்பி இருக்கிறார்கள். கல்லூரிக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பாக சீனியர்கள் அவர்களை மடக்கி விட்டார்கள். மூவர் மாட்டிக் கொள்ள ஒருவன் மட்டும் தப்பி வந்து ஹாஸ்டலில் இருந்த என் நண்பர்களிடம் சொல்லி விட்டான். உடன் அங்கிருந்து 94 பேர் கொண்ட ஒரு கூட்டம் கிளம்பி விட்டது. 

கல்லூரி விடுதியின் வாசலில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்திருக்கிறார் ஒரு கவர்மெண்ட் பஸ் டிரைவர். இப்போது பஸ்ஸை நீ எடுக்கிறாயா இல்லை நாங்கள் எடுக்கட்டுமா என மிரட்டி மொத்தக் கும்பலும் கிளம்பி அந்த இடத்துக்குப் போயிருக்கிறார்கள். கையில் ஹாக்கி ஸ்டிக், பேட், சைக்கிள் செயின் போன்ற ஆயுதங்களும்.

சீனியர்கள் தங்கியிருந்த வீட்டுக்குப் பெயர் வொயிட் ஹவுஸ். அவர்கள் கிட்டத்தட்ட இருபது பேர். எனது நண்பர்கள் அங்கே போய் இறங்க பயங்கரக் களேபரம். கண்டபடி சண்டை நடந்திருக்கிறது. விமல் என்று ஒரு சீனியர். அருமையாக நடனம் ஆடுபவர். கோவையின் மைக்கேல் ஜாக்சன் என்று சொல்வோம். சைக்கிள் செயின் பற்றி இழுத்ததில் அவருடைய வலது கண் தெறித்துப் போனது. சீனியர்கள் அடித்ததில் என் நண்பன் மைக்கேலுக்கு காது கேட்காமல் போனது. எல்லாவ்ற்றுக்கும் மேலே, தன்னையும் அடித்து விடுவார்களோ என பயந்து ஓடிய சீனியர் சுந்தர் என்பவர், தரையோடு தரையாக இருந்த கிணற்றுக்குள் விழுந்து செத்துப் போனார்.

ம்மாவின் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து நான் வெள்ளியன்று ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். போன் வந்தது.

மாப்ள.. ஐடிசி டா.. சீனியருங்க நம்ம மேல கொலவெறில இருக்காங்க.. பார்த்துக்க..

புலனாய்வு பத்திரிக்கைககள் எல்லாம் கண்டபடி எழுதின. ஆண்களுக்கு ராகிங். பெண்களுக்கு ரேப்பிங். பயங்கரக் கல்லூரி. கொலைவெறி கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள். என்ன சொல்வதன்றே தெரியவில்லை. நண்பர்களில் 36 பேர் டிஸ்மிஸ். 50 பேர் சஸ்பெண்ட். அங்கே இருந்தவன் இல்லாதவன் என்று கணக்கில்லாமல் யார் மீதெல்லாம் கல்லூரிக்கு கடுப்பு இருந்ததோ அவர்களை எல்லாம் தாளித்து எடுத்து விட்டார்கள்.

அம்மாவுக்கு ஆபரேஷன் இல்லாதிருந்தால் ஒருவேளை நானும் அவர்களில் ஒருவராய் இருந்திருக்கலாம். என்னை அன்று காப்பாற்றியது எதுவென்று இதுவரைக்கும் எனக்குத் தெரியவில்லை. அத்தோடு அடங்கியவர்கள்தான் நாங்கள். அதற்குப் பிறகு நான்காம் வருடம் முடிக்கும் வரை ஒரு சத்தம் கிடையாது. கல்லூரி நிர்வாகமும் எங்களுக்கு எந்த பிளேஸ்மெண்டும் வராமல் பார்த்துக் கொண்டது. இன்றைக்கு யோசிக்கும்போது எல்லாமே பைத்தியக்காரத்தனம் என்பது புரிகிறது. வருடங்களில் பின்னோக்கிப் பிரயாணித்து சில விசயங்களை, சில தவறுகளை மாற்றி விட வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் முடியவில்லை. அமைதியாகச் சிரித்தபடி இருக்கிறது காலம்.




August 9, 2012

உதிரிப்பூக்கள் - 16

கோவையில் ஒரு கருத்தரங்கத்திற்காக இரண்டு வாரங்கள் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் தங்கிட நேர்ந்தபோது அந்த மனிதருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கொடைக்கானலில் இருக்கும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்தார். அவரும் வாசிக்கக் கூடியவர் என்பதோடு அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் எஸ்ரா என்கிற கூடுதல் தகுதியும் இருக்க அவரை என்னால் எளிதில் நட்பாக்கிக் கொள்ள முடிந்தது.

இரண்டு வாரப் பழக்கத்தில் குடும்ப விவகாரங்களைக் கூட விரிவாகப் பேசுமளவுக்கு நாங்கள் நெருக்கமான நண்பர்களாக மாறியிருந்தோம். நண்பருடைய திருமணம் காதல் திருமணம். தன்னுடைய மனைவி பற்றிப் பேசும்போது அவருக்கு அத்தனை சந்தோசம். தனக்காக உறவுகள் சொத்து அத்தனையும் விட்டு வந்தவர் என்பதால் அவருக்காகத் தான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று பெருமையாகச் சொல்வார். ஆனால் அவர் பேசும்போதெல்லாம் நான் ஒரு விசயத்தை மட்டும் கவனித்து வந்தேன். தன் மனைவி பற்றி எத்தனை பேசினாலும் அவருடைய பெயரை மட்டும் மனிதர் சொல்லவே மாட்டார்.

ஒரு முறை பொறுக்க மாட்டாமல் அவரிடம் கேட்டே விட்டேன். “ஏன்யா வீட்டுக்காரம்மா பத்தி இவ்ளோ சொல்றீங்க அவங்க பேர் என்னய்யா...” ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போன மனிதர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு அது கெடக்கு தலைவா அதப் போய்க் கேட்டுக்கிட்டு என்று ஏதோ சொல்லி சமாளித்தபடி அந்த விசயத்தைத் தாண்டிப் போய் விட்டார். அவர் மனைவி பெயரைக் கேட்பதை விரும்பவில்லை என்று உணர்ந்து கொண்ட பின்பாக நானும் அதைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டேன்.

இன்னும் இரண்டு நாட்களில் கருத்தரங்கம் முடிந்து அவரவர் வீட்டுக்குக் கிளம்ப வேண்டும். வந்திருந்த நண்பர்கள் எல்லாரும் கொண்டாட்டமாக மது அருந்தப் போகலாம் என ஒன்றாய்க் கிள்ம்பினார்கள். நான் வழக்கம் போல சைட் டிஷ்களை சேகரித்துக் கொண்டு ஒதுங்கினேன். கோடை நண்பர் அன்றைக்கு சரியான சுதி. மிகுந்த சிரமப்பட்டுத்தான் அவரை அறைக்குக் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது. படுக்க வைத்தால் படுக்காமல் மனிதன் புலம்பத் தொடங்கினார்.

“அவ ஏன் நண்பா அப்படிப் பண்ணினா? அவளால என் வாழ்க்கை இப்படி நாசமாப் போச்சே..”

“என்ன நண்பா.. யார் என்ன பண்ணினா..”

“நீங்க ரொம்ப நல்லவர் நண்பா.. உங்ககிட்ட கூட சொல்ல முடியாமப் பண்ணிட்டாளே..”

“யோவ்.. யாரு உன்னைய என்னய்யா பண்ணினா..”

“ஊரு உலகத்துல எத்தனையோ பேரு இருக்கப்போ அவ ஏன் அந்தப் பேரை வச்சுக்கிட்டா.. அவ எதுல வேணா நடிக்கட்டும் என்ன வேணா பண்ணட்டும்.. ஆனா அந்தப்பேர எதுக்கு வச்சுக்கிட்டா.. அவளாலதான என்னால என் பொண்டாட்டி பேரை யாருக்கிட்டயும் சொல்ல முடியலை.. அவளை விடக்கூடாது.. ஏய்ய்...”

யாரோ ஒரு நடிகையின் பொருட்டுதான் அவரால் தனது மனைவியின் பெயரை எங்கேயும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “அப்படி என்னதான்யா உம்ம பொண்டாட்டி பேரு..”

“ஷகிலா..”

ள்ளியில் படிக்கும்போது தமிழ் துணைப்பாடப் பிரிவில் “பெயரில் என்ன இருக்கிறது” என்றொரு கதை படித்ததாக ஞாபகம். மனிதருக்கு மனம்தான் முக்கியம் பெயரல்ல என்கிற ரீதியில் அந்தக்கதை இருக்கும். ஆனால் அந்தக் கதையின் கருத்தோடு என்னால் ஒத்துப் போக முடிவதில்லை. பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் எல்லாம் இருக்கிறது. பெயர் என்பது வெறும் பெயர் மட்டும் அல்ல. அது ஒரு அடையாளம். பல நினைவுகளுக்கான திறவுகோல். எங்கோ நாம் கேள்விப்படும் அல்லது பெயர்ப்பலகைகளில் பார்க்கும் பெயர்கள் நம் மனதுக்குள் ஏற்படுத்தும் அதிர்வலைகள்தான் எத்தனை எத்தனை?

என்னுடைய உண்மையான பெயரான கார்த்திகேயப் பாண்டியனை பள்ளியில் சேர்க்கும் விண்ணப்பப் படிவம் நிரப்பும்போது தவறுதலாக கார்த்திகைப் பாண்டியன் என்பதாய் எழுதப்போக அதுவே நிரந்தமாகிப் போனது. அந்தத் தவறைச் செய்தவர் ஜேம்ஸ் அங்கிள். எனக்குப் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர். நான் படித்த செவந்த் டே பள்ளியின் முதல்வர். பள்ளிக்கூடத்தில் எனக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்த மனிதர்.

என்னுடைய பெயரைக் கிண்டல் செய்வதில் அவருக்கு அத்தனை சந்தோசம். தீபாவளிப் பாண்டியன், பொங்கல் பாண்டியன் என்று எல்லாப் பண்டிகைகளையும் வம்புக்கு இழுப்பார். நான் கோபத்தில் சிணுங்கியபடி அழுதால் அதையும் கிண்டல் செய்து சிரிப்பார். தப்பாக எழுதியது நீங்கள்தானே என்று நான் குற்றம் சுமத்தினாலும் கண்டு கொள்ளவே மாட்டார். தீபாவளியும் பண்டிகை, கார்த்திகையும் பண்டிகை எப்படிக் கூப்பிட்டால் என்ன என்று எகடாசி பேசுபவரை என்ன செய்வது? என்னுடைய எட்டாம் வகுப்பில் மாற்றலாகி வேறு ஊருக்குப் போகும்வரைக்கும் என்னை அவர் கிண்டல் செய்வது நிற்கவே இல்லை.

சில தினங்களுக்கு முன்பு அவருடைய வீட்டைத் தேடிக் கண்டுபிடித்துப் போயிருந்தேன். கிட்டத்தட்ட பதினைந்து வருட இடைவெளி என்றாலும் அறிமுகம் செய்து கொண்டவுடன் என்னைக் கண்டுபிடித்து விட்டார். “நான் உனக்குச் சொல்லிக் கொடுத்த காலம் போய் நீ இப்போ சொல்லித் தர்றியா.. சந்தோசம்டா..” வெகுநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்றுக் கிளம்பினேன். சட்டென அந்தக் குரல் கேட்டது.

“டே தீபாவளிப் பாண்டியா..”

திரும்பிப் பார்த்தேன். ஜேம்ஸ் அங்கிள் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.

“மறந்துட்டியோன்னு.. ச்சும்மா.. பழைய ஞாபகங்கள்.. போயிட்டு வா..”

ன்னோடு சிறுவயது முதல் பள்ளியில் ஒன்றாகப் படித்தவன் ராம்பிரசாத். என் ஆரம்பகால குற்றங்களான வீட்டில் காசு திருடுவதிலும் கில்மா படம் பார்க்கப் போவதிலும் அய்யாதான் நம்முடைய கூட்டாளி. அவனுடைய இனிஷியல்கள் எஸ்.டி. என்றிருக்கும். அதை வேகமாகச் சொன்னால் செட்டி என்பதாக வரும். அதனால் பள்ளியில் படிக்கும் பையன்கள் எல்லாரும் சேர்ந்து அதையே அவனுக்கு பட்டப்பெயராகவும் வைத்திருந்தோம்.

ஒருமுறை உயிரியல் வகுப்பில் எய்ட்ஸ் பற்றிப் பாடம் நடத்திவிட்டு ஹெச்.ஐ.வி வைரசை தெர்மாக்கோல் மாடலாக செய்து எடுத்து வரும்படி ஆசிரியர் சொல்லி இருந்தார். இது மாதிரியான வேலைகள் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் செட்டியோடு சேர்ந்து செய்யலாம் என்று முடிவானது. ஒரு சனிக்கிழமை காலை அவனுடைய வீட்டில் ஆஜராகி விட்டேன். தெர்மக்கோல் அட்டைகள், ஜிகினா என்று வேலை கனஜோராக நடந்து கொண்டிருக்கையில் பிரசாத்தின் அம்மா என்னிடம் வாயைக் கொடுத்தார்.

“என்னடா பண்றீங்க.. இது என்னது..”

“அத்தை.. இது ஒரு வைரஸ்.. இதாலதான் எயிட்ஸ் வருது..”

“அதெல்லாம் சரி.. இது ஆம்பளையா பொம்பளையாடா..”

அங்கேதான் சனி என் நாவில் சம்மணம் போட்டு அமர்ந்து இருக்கிறான் என்பதை கவனிக்கத் தவறி விட்டேன். ஏதோ விளையாட்டாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு சொன்னேன்.

“அதெல்லாம் இல்லை.. நம்ம பிரசாத் மாதிரி.. எல்லாம் கலந்தது..”

சொல்லி முடிப்பதற்கும் அவர் கையில் வைத்து அரிந்து கொண்டிருந்த காய்கறித் தட்டு பறப்பதற்கும் ரொம்பச் சரியாக இருந்தது. யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்ன என்று மூச்சிரைக்க அவர் கத்த ஆரம்பித்தார். ஏதோ தவறாக சொல்லி விட்டோம் என்பது மட்டும் உள்ளுக்குள் உறைக்க விடுவிடுவென்று வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன். மறுநாள் காலையில் பிரசாத் அம்மா என் வீட்டுக்கே வந்து விட்டார்.

“கார்த்தியம்மா.. உங்க பையன் என் பையன ஒம்போதுன்னு சொல்லிட்டான்..” ஓவென்று அழுதபடி சொன்னவரின் கண்களில் கண்ணீர் மாலை மாலையாய் வழிந்து கொண்டிருந்தது. என் அம்மா என்னென்னவோ சொல்லி சமாதானம் பண்ணியும் வேலைக்கு ஆகவில்லை. சரி நம்மால் ஆனதைச் செய்வோம் என்று அவர் முன்னால் போனேன்.

“மன்னிச்சுருங்க அத்தை... தெரியாமச் சொல்லிட்டேன்..”

“நீ பாட்டுக்கு ஸ்கூல்ல போயி இது மாதிரி பேசினீன்னா எம்மவன் பேரு என்ன ஆகும்..”

சொல்லியபடி மூக்கைச் சிந்தியவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

“அடச்சே.. இதுக்குத்தான் இவ்ளோ அழுதீங்களா.. பயப்படாதீங்க அத்தை.. ஸ்கூல்ல ஏற்கனவே அவனுக்கு இன்னொரு பேரு இருக்கு.. செட்டின்னு.”

கொஞ்சமாக சிணுங்கிக் கொண்டிருந்தவர் இதைக் கேட்டவுடன் இன்னும் அதிகமாகக் கத்த ஆரம்பித்து விட்டார். பிறகுதான் தெரிந்தது அவர்கள் அந்த இனம்தானாம். நான், பிரசாத், என் அம்மா எல்லாரும் சேர்ந்து அவரை சமாதானம் செய்வதற்குள் வாழ்க்கையே வெறுத்துப் போனது. அதன் பிறகு நான் செட்டியின் வீட்டுக்குப் போவதையே வெகுவாகக் குறைத்துக் கொள்ளும் அளவுக்கு அந்தப் பெயர் என்னைப் பழிவாங்கியதை என்னவென்று சொல்வது?

றாவது படிக்கும்போது சுப்பிரமணியபுரம் கல்லு சந்துக்கு குடிபோன சமயத்தில்தான் எனக்கு பர்பி அறிமுகமானது. அவனுடைய இயற்பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. நாலைந்து பொத்தல்கள் விழுந்த பனியன். சாயம் போன நிறத்தில் ஒரு அரை டவுசர். எப்போதும் முகத்தில் வழிந்து கொண்டிருக்கும் எண்ணெய். இதுதான் பர்பி. என்னைக் காட்டிலும் இரண்டு வயது அதிகம். என்றபோதும் சற்றே மூளை வளர்ச்சி குறைவு. நாம் சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளுவான். ஆனால் பதில் சொல்வதற்காகப் பேசினான் என்றால் கோர்வையாக இருக்காது. அவன் கூடவே ஒரு நாட்டு நாயும் சுற்றிக் கொண்டிருக்கும். அதற்கு ராஜா என்று பெயர். பர்பி ஒரு இடத்தில் இருக்கிறான் என்றால் ராஜாவும் அங்கேயே இருக்கும் என்பதும் போல அவனுக்கும் அதற்கும் அத்தனை நெருக்கம்.

அந்த சந்தில் இருக்கும் எல்லா பிள்ளைகளுக்கும், நான் உட்பட, விளையாட்டில் ஊறுகாய் என்றால் அது பர்பிதான். அப்போது நாங்கள் ரவுண்டு கண்ணாமூச்சி என்றொரு விளையாட்டு விளையாடுவோம். சுப்பிரமணியபுரத்தில் இருக்கும் பனிரெண்டு சந்துகளில் எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளலாம் என்பது ஆட்ட விதிமுறை. பட்டு வருபவன் அத்தனை பேரையும் கண்டு பிடிப்பதற்குள் மண்டை காயும் என்பதால் எப்போதும் இதில் பர்பிதான் சூதாக சிக்க வைக்கப்படுவான். சந்து முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குப் போய் ஆயிரம் எண்ணி முடித்தபின் தான் பட்டு வர வேண்டும். என்னுடைய ரவுண்டு கண்ணாமூச்சி சரித்திரத்தில் ஒவ்வொரு தடவையும் ஆயிரம் வரைக்கும் முழுமையாக எண்ணக்கூடிய ஒரே ஆள் பர்பி மட்டுமே.

ஒவ்வொரு முறையும் ஆட்டம் முடிய குறைந்தது மூன்று மணி நேரமாவது ஆகும். எப்படியும் யாராவது பர்பிக்கு ஐஸ் வைத்து விட்டோம் என்றால் ஆட்டம் முதலில் இருந்து தொடங்கும். அப்படி இல்லாமல் என்றாவது அவன் எல்லாரையும் கண்டுபிடித்து விட்டான் என்றால் அன்றைய ஆட்டம் அத்தோடு முடிந்து விடும். மறுநாள் ஆட்டம் தொடங்கும்போது பர்பி மீண்டும் பட்டு வருவான். அவன் மக்களைத் தேடி வரும் அழகே தனி. திடீரென ஆள் காணாமல் போய் விடுவான். ரொம்ப நேரமாகியும் ஆளைக் காணோமே என நாம் குழம்பி வெளியே வந்தால் போர்வை மூடி கால் விந்தி விந்தி நடந்து நம்மைத் தாண்டிப் போகும் ஆள் சட்டென்று நெருங்கி வந்து ஒண்ணு என்பான். பார்த்தால் அது பர்பியாக இருக்கும். ராஜா உடன் வந்தால் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம் என்பதால் அதை எங்காவது விட்டு வந்திருப்பான். ரவுண்டு கண்ணாமூச்சி என்றுதானில்லை எங்களுடைய எல்லா விளையாட்டுகளையும் சுவாரசியமாய்ச் செய்தவன் பர்பி. ஒரு டீ வாங்கிக் கொடுத்தால் போதும் அவனை என்ன வேலை செய்யச் சொன்னாலும் செய்வான் என்பது தெருவில் இருந்த அனைவருக்கும் வசதியாகப் போனது. ஆகமொத்தம் சிறியவர் பெரியவர் என தெருவில் இருந்த அனைவருக்கும் மிக நெருக்கமான உறவாக அவன் இருந்தான்.

திடீரென ஒருநாள் காலை தூக்கத்தில் இருந்த என்னை எழுப்பி பர்பி செத்துப் போனதாக என அம்மா சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது எப்படி நடந்தது? காலையில் எழுந்ததும் வழக்கம் போல காலைக் கடன்களை முடிக்க பர்பி ரயில்வே டிராக் பக்கம் போயிருக்கிறான். உடன் ராஜாவும் போயிருக்கிறது. டிராக்கின் ஓரமாக இருவரும் உட்கார்ந்து இருக்க ரயில் வரும்போது தண்டவாளத்தின் மீது ராஜாவின் வால் கிடந்திருக்கிறது. ரயில் அதன் மீது ஏறும் தருணத்தில் யாராவது தொடும்போது நாம் சட்டெனத் திரும்புவதுபோல சட்டென ராஜா திரும்ப உள்ளிழுக்கப்பட்டு விட்டது. ராஜா என்று கத்திக் கொண்டே பர்பியும் ரயிலுக்கு உள்ளே பாய்ந்து விட்டான் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்.

பாகம் பாகமாகப் பிரிந்து கிடந்த பர்ர்பியைப் போய்ப் பார்க்க வேண்டாம் என எனது அம்மா தடுத்து விட்டார். இரங்கல் தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் ஒன்றில்தான் அவனது பெயரை முதல்முதலாகப் பார்த்தேன். “மரண அஞ்சலி - செல்வம் என்கிற பர்பி”. இப்போதும் சாலையில் விளையாடும் பிள்ளைகளைக் கடந்து போகும் போதெல்லாம் பர்பியின் நினைவுகள் மனதுக்குள் கிளர்ந்தெழுந்து கண்ணீரை வரவழைக்கும்.

தை எழுதும் இவ்வேளையில் நண்பர்கள் தொடங்கி பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் வரை ஒருவர் விடாமல் எல்லாருக்கும் வைத்த பட்டப்பெயர்கள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. எப்போதும் என்னைக் கோத்திரி என்றே கூப்பிடும் பால்வண்டி என்கிற பாலாஜி, என்னை எவனாவது பட்டப்பெயர் சொல்லிக் கூப்பிட்டீங்க அழுதுருவேன் என்று கதறும் மண்டையன் என்கிற சிங்கம் என்கிற திராவிடமணி, ஒரே அறையில் நான்கு வருடம் ஒன்றாக இருந்து விட்டு காதலுக்காக என்னைத் தூக்கியெறிந்த மொட்டை என்கிற தேவா, எல்லாரையும் சிரிக்க வேண்டும் என்ப்தே தன் லட்சியமெனச் சொல்லும் மெனா என்கிற முத்துக்கண்ணன், என் பிரியத்துக்குரிய சைக்கோ சரவணன், சாமி கார்த்தி, வீனா கூனா குமார், தலைவன் வெங்கடேசன், மசாஜ் செர்வீஸ் மாரி, இனிலன் எனும் குட்டிச் சாத்தான் என எத்தனையோ பெயர்களும் அவர்கள் சார்ந்த நினைவுகளும் நிலழென என் கண்முன்னே ஆடியபடி இருக்கின்றன. சொன்னேன் இல்லையா? பெயர் என்பது நம் மனதின் நினைவுகளுக்கான திறவுகோல்.

July 26, 2012

உதிரிப்பூக்கள் - 15

பெருந்துறையில் வேலை பார்க்கும்போது என்னிடம் பயின்றவன் ரவிபிரகாஷ். தில்லியைச் சேர்ந்தவன். பொறியியல் என்பது படிப்பதல்ல கற்பது என்பதில் தீவிர நம்பிக்கை உடையவன். படிப்பு என்பதைத் தாண்டியும் இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் ஆல் இந்தியா ரேடியோவில் அவனது வயலின் கச்சேரி கண்டிப்பாக இருக்கும். கல்லூரி ஆண்டுவிழா ஒன்றின்போது நானும் ரவியும் இணைந்து மாணவர்களின் நட்பைப் பற்றிய பாடல் ஒன்றை உருவாக்கினோம். அதிலிருந்து அவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவனாக மாறிப்போனான்.

கல்லூரி முடிந்து வெளியேறிப் போனபின்பாக ரவியோடு பெரிதாகத் தொடர்பு இல்லாமல் போனது. நானும் மதுரைக்கு வேறொரு கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தேன். திடீரென ஒரு நாள் அவனிடமிருந்து அழைப்பு வந்தது.

“நல்லா இருக்கியாடா..”

“நல்லா இருக்கேன் சார்.. நீங்க எப்படி இருக்கீங்க..”

“ரொம்ப நல்லா இருக்கேன். என்ன ரவி பண்ணிக்கிட்டு இருக்க..” அவன் படிக்கும்போதே இன்ஃபோசிஸில் வேலை கிடைத்திருந்தது. கண்டிப்பாக பெரிய பொறுப்புக்கு வந்திருப்பான் என்பது எனது நம்பிக்கை.

“தில்லிலதான் சார் இருக்கேன். இங்க ஒரு ஸ்கூல்ல பிசிக்ஸ் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.. ”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கிடைத்த நல்ல வேலையை விட்டு விட்டு இவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவனிடம் கேட்கவும் செய்தேன்.

“நீங்கதான சார் அடிக்கடி சொல்வீங்க. மனசுக்குப் பிடிச்ச வேலை பாக்குற மாதிரி சந்தோசம் வேற எதுவும் கிடையாதுன்னு. சாஃப்ட்வேரை விடவும் எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. சாலஞ்சிங்கான வேலை. பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போதுதான் என் மனசுக்கு திருப்தியா இருக்கு. அதான் சார்.. பொருளாதார ரீதியா எனக்குப் பெரிய தேவைகள் இல்லாததனால ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. ”

நான் அமைதியாக இருந்தேன். ஆனால் அவன் சொன்னதைக் கேட்டபோது மனதுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. “பெருமையா இருக்குடா.. வேற என்ன சொல்றதுன்னு தெரியலை..”

“இருங்க சார்.. இன்னும் இருக்கு...” அவனுடைய மழலை கொஞ்சும் தமிழில் சொன்னவனுடைய குரலில் உற்சாகம் மிகுந்து வழிந்தது. “நேத்திக்கு எங்க பள்ளியில ஆண்டு விழா. இந்த வருடத்துக்கான சிறந்த ஆசிரியராக என்னைத் தேர்வு செஞ்சிருக்காங்க. ஆனா சத்தியமா அது என்னோட விருது கிடையாது சார். உங்களோடது.. that one is for you sir.. நீங்க இல்லைன்னா நான் கண்டிப்பா இங்க வந்திருக்க மாட்டேன். ரொம்ப நன்றி சார்..”

ன்னுடைய கண்கள் கலங்கி இருந்தன. வாழ்வில் இதை விடப் பெரிதாக வேறென்ன கேட்டுவிட முடியும்? இது மாதிரியான தருணங்கள்தான் என்னை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பதாக நம்புகிறேன். சில சமயங்களில் மனம் கிடந்து அலைபாய்ந்தபடி இருக்கும். யாருமற்ற வெளியில் தான் மட்டும் தனித்து விடப்பட்டதென உணரும். ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் பெரும் தவறு செய்து விட்டோமோ? உடன் படித்தவர்கள் எல்லாம் பெரிய வேலையிலும் வெளிநாட்டிலும் வசதியாய் இருக்க நான் மட்டும் ஏன் இப்படி பொருளாதார ரீதியாகவும் பின் தங்கி விட்டேன் என்றெல்லாம் கேள்விகள் எழ மனம் ஆழ்ந்த துயரத்தில் விசனப்படும். அப்போதெல்லாம் எங்கிருந்தாவது வந்து சேரும் இதுபோன்ற மாணவர்களின் அன்புதான் என்னை மீட்டுக் கரைசேர்ப்பதாக இருந்திருக்கிறது.

இன்றுவரைக்கும் என்னால் மாணவர்களுடன் மட்டும்தான் நெருக்கமாக இருக்க முடிந்திருக்கிறது. உடன் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு, முகத்துக்கு முன் முதுகுக்குப் பின் என இரண்டு முகங்கள் இருப்பது போல, மாணவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களைப் பொருத்தவரைக்கும் பிடித்து விட்டால் இறுதி வரைக்கும் மறக்க மாட்டார்கள். பிடிக்கவில்லையென்றால் தலைகீழாய் நின்றாலும் வேலைக்கு ஆகாது. பெரும்பாலும் மாணவர்களோடு நம்முடைய அலைவரிசை ஒத்துப்போவதால் நமக்கு அவர்களோடு ஒட்டிக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. பெருந்துறையில் ஆண்டு விழாவின் போது நான் மேடையேறிப் பேசப் போக மாணவர்கள் விசிலடித்து களேபரம் செய்து இந்த அளவுக்கு மாணவர்களோடு பழகக்கூடாது என முதல்வர் திட்டுமளவுக்கு அந்த நெருக்கம் இருந்திருக்கிறது.

டித்து முடித்த இரண்டே மாதங்களில் கொடைக்கானலில் வேலைக்கு சேர்ந்து விட்டேன். ஆசிரியர் வேலை மீதிருந்த மதிப்போடு எப்போதும் மாணவர்களோடு ஒருவனாய் இருப்பது மனதை உற்சாகமாய் வைத்திருக்கும் என்பதும் நான் அந்தப் பணியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள். அப்போதெல்லாம் பொறுப்பு பற்றிய அக்கறை ஒன்றும் எனக்குக் கிடையாது. அங்கிருந்த மாணவர்களுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான் என்பதால் ஆட்டம்பாட்டம்தான் வேலை என்பதாக இருந்தது என் மனநிலை.

கோடை கல்லூரியில் இரண்டாம் வருட மாணவர்களுக்கு நான் வகுப்பாசிரியர். ஒருநாள் அந்த வகுப்பில் படிக்கும் பெண் ஒருவருடைய தந்தை என்னைப் பார்க்க வந்திருந்தார். குறைந்தபட்சம் ஐம்பது வயதிருக்கக்கூடிய அந்த மனிதர் நான் சென்றவுடன் சட்டென்று எழுந்து நின்று என்னை வணங்கவும் செய்தார். எனக்கு ஒருமாதிரியாகப் போய்விட்டது. எங்கோ ஒரு ஊரில் நாங்கள் இருக்க எங்களுடைய பிள்ளையை உங்களை நம்பித்தான் விட்டுப் போகிறோம் ஒரு சகோதரன் என நீங்கள்தான் அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த சில நிமிடங்களை என்னால் வாழ்க்கைக்கும் மறக்க முடியாது. என்னுடைய பணியின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்து கொண்ட தினம் அதுதான். என்னிடம் பாடம் படிக்கும் அத்தனை பிள்ளைகளும் என் நெருங்கின உறவுகள் எனும் உணர்வை எனக்குள் விதைத்தவர் அந்த மனிதர்.

ன் வாழ்வில் மறக்க முடியாத பயணம் எதுவெனக் கேட்டால் கோடைக்கல்லூரி மாணவர்களோடு நான் போய் வந்த டூரைச் சொல்லுவேன். மூன்றாம் வருட மாணவர்கள் என் நண்பனோடு கோவா கிளம்பிப் போக நாமும் எங்காவது போவோம் என இரண்டாம் வருட மாணவர்கள் ஒரே அடம். பெண் பிள்ளைகள் வருவார்கள் என்பதால் யாராவது ஒரு ஆசிரியையும் கண்டிப்பாக வரவேண்டும் எனத் தாளாளர் சொல்லிவிட்டார். நான் வரமாட்டேன் என்று சொன்ன ஒரு அம்மாவை வெறுமனே பெயர் தந்தால் போதும் என சமாதானம் செய்து அனுமதி பெற்றுக் கிளம்பினோம்.

மதுரைக்குப் பேருந்தில் வந்து என் வீட்டில் இரவு உணவை முடித்துக் கொண்டு நாங்கள் மாட்டுத்தாவணிக்கு வந்தபோது மணி இரவு பனிரெண்டு. நானும் என் நண்பனும் என இரண்டு ஆசிரியர்கள், எட்டு மாணவிகள் மற்றும் பத்து மாணவர்கள். எங்கு போகிறோம் என்கிற எந்த முடிவும் இல்லை. கையிலும் பெரிய அளவில் பணம் இல்லை. அப்போது ஆபத்பாந்தவனாய் கைட் ஒருவர் வந்து சேர எல்லோரும் கன்னியாகுமரி நோக்கி வேனில் பயணமானோம்.

காலையில் எங்களுக்குப் பொழுது திற்பரப்பு அருவியில் விடிந்தது. முடியுமட்டும் ஆடி விட்டு அங்கிருந்து தொட்டிப்பாலம். காலை உணவை முடித்துக் கொண்டு பத்மநாபபுரம் அரண்மனை. மதிய உணவுக்கு எங்கள் கூட்டம் கன்னியாகுமரி வந்து சேந்திருந்தது. நேராகக் கடலில் போய் இறங்கினால் பயங்கர ஆட்டம். சற்றே பலமானவர்கள் எல்லாம் தரையில் மீது நின்று கொள்ள அவர்கள் மேலே ஏறும் ஒரு கூட்டம் என பிரமிடுகள் உருவாக்கி விளையாட ஆரம்பிக்க கடலிலிருந்த மொத்தக் கூட்டமும் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அங்கே ஆடி முடித்து பாறைக்குப் போய் விவேகானந்தருக்கு ஒரு ஹாய் சொல்லிக் கோவிலையும் பார்த்துத் திரும்பினால் அடுத்ததாக ஒரு பெரிய பிரச்சினை எங்கள் முன்பாக இருந்தது. எங்கே போய்த் தங்குவது?

அதற்கு விடை ராமகிருஷ்ண மட வடிவில் கிடைத்தது. மூன்று பெரிய அறைகளைக் கொண்ட ஹால் வெறும் நூற்றைம்பது ரூபாய் வாடகைக்கு. முதல் ஹாலில் ஆண்கள் இருந்து கொண்டு நடுவில் இடைவெளி விட்டு கடைசி ஹாலில் பெண்பிள்ளைகள் தங்கிக் கொண்டார்கள். காலை சூரிய உதயம் பார்த்து விட்டுக் கிளம்பி நேராக சுசீந்தரம். அங்கே தானுமாலையனை தரிசித்து அங்கிருந்து கிளம்பி திருவனந்தபுரம். மிருகக்காட்சி சாலையும் கோளரங்கமும் முடிந்து வேலிக்குக் கிளம்பிப் போய் மீண்டும் தண்ணீரில் ஒரு ஆட்டம். கடைசியாக நாங்கள் பத்மநாபசாமி கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தபோது நடை சார்த்தும் நேரம் நெருங்கி விட்டிருந்தது.

பையன்கள் எல்லாரும் துண்டு வேட்டி எனக் கட்டிச் சமாளித்து விட்டார்கள். ஆனால் பெண்பிள்ளைகள் என்ன செய்வது? உடைகள் மாற்றிக் கொண்டு வர நேரமானால் நடையைச் சார்த்தினாலும் சார்த்தி விடுவார்கள். சட்டென்று பிள்ளைகள் அனைவரையும் தங்களுடைய துப்பட்டாவையே எடுத்து இடுப்பில் அணியச் சொல்லி ஒருவாறாக சமாளித்து உள்ளே நுழைந்து விட்டோம். நன்றாக தரிசனம் பார்த்து விட்டு வெளியே வந்து ஒரு ரோட்டுக் கடையில் அருமையான இரவு உணவு. ஆடியபடியும் பாடியபடியும் அங்கிருந்து கிளம்பி மதுரை வந்து சேர்ந்தோம். போகும்போது சாராக இருந்தவன் திரும்பி வரும்போது அனைவருக்கும் அண்ணனாகிப் போயிருந்தேன். அதற்குப் பின்பாக எத்தனையோ கல்லூரி டூர்களுக்குப் போய் வந்திருந்தாலும் திக்கு திசை அறியாது சுற்றி வந்த அந்த இரண்டு நாட்களை என்னால் என்றும் மறக்க முடியாது.

மாணவர்கள் பற்றிப் பேசும்போது என்னுடைய நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். “நல்லாப் படிக்குற அமைதியான பசங்களைப் பத்தி கவலைப்படத் தேவையில்லை கார்த்தி. அவங்க எப்படின்னாலும் நமக்கு நெருக்கமாத் தான் இருப்பாங்க. ஆனா எல்லா கிளாஸ்லயும் ஒரு சில அடங்காத பசங்க இருப்பாங்க பாருங்க. அவங்களத்தான் நாம நமக்குக் குளோசா மாத்த முயற்சி பண்ணனும். அதை செஞ்சுட்டா சாதிச்சுட்டீங்கன்னு அர்த்தம்..”

மதுரையில் வேலை பார்த்த சமயம். மெக்கானிக்கல் பாடப்பிரிவுக்கு நான் ஒரு வகுப்புக்குப் போக வேண்டும். அங்கே போகுமுன்பாகவே சக ஆசிரியர்கள் பயமுறுத்தத் தொடங்கி விட்டார்கள். “ மோசமான செட்டு சார். ஒரு எட்டு பசங்க குரூப்பா இருப்பானுங்க. யாரையும் மதிக்க மாட்டானுங்க. பார்த்து நடந்துக்கோங்க..”. அவர்கள் சொன்னதுபோலவே தான் அந்த மாணவர்களும் இருந்தார்கள். பாடம் நடத்தும்போது ஏதாவது தொல்லை கொடுப்பது, வகுப்புக்கு நேரத்துக்கு வரமாலிருப்பது எனத் தொடர்ச்சியாய் பிரச்சினைகள். “அப்படிச் செய்யாதீங்கப்பா... நேரத்துக்கு வரக்கூடாதா..”. நான் எல்லாவற்றையும் சின்னச் சின்ன வார்த்தைகளோடு தாண்டிப் போய் விடுவேன். பொதுவாகவே எனக்கு யாரையும் திட்டத் தெரியாது என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விசயம்.

முதல் பருவத் தேர்வில் அவர்கள் அனைவருமே எனது பாடத்தில் தேர்வு பெற்றிருக்கவில்லை. வகுப்பில் விடைத்தாள்களைத் தரும்போது ஒரே வார்த்தைதான் நான் அவர்களிடம் சொன்னது. “அடுத்த முறை நன்றாக எழுதுங்கள்..” இரண்டாவது தேர்விலும் இதே கதை. அத்தனை பேரும் தோற்றுப் போயிருந்தார்கள். இப்போதும் நான் அதையேதான் சொன்னேன். “அடுத்த முறை..” இது நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் எட்டு பேரும் என்னைத் தனியாக வந்து சந்தித்தார்கள். நான் அவர்களை ஏதும் சொல்லாதது அவர்களுக்கு அத்தனை ஆச்சரியமாக இருந்தது.

“நீங்க எங்களைக் கண்டமேனிக்குத் திட்டுவீங்கன்னு நினைச்சோம் சார்..”

“எதுக்குப்பா.. நீங்க சின்னப் பசங்களா.. உங்களைக் காட்டிலும் அதிகமா உங்க வாழ்க்கையப் பத்தி நான் கவலைப்பட்டுறப் போறேனா.. ஆனா ஒண்ணு.. எல்லாத்தையும் தாண்டி நீ வாழ்க்கைல நல்லபடியா வந்துட்டா கண்டிப்பா உன்னைக் காட்டிலும் அதிகமா சந்தோசப்படுறவனா நான் இருப்பேன்..”

நான் பேசி முடித்தபோது அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். பொறியியல் படிக்க விருப்பமில்லாது கல்லூரிக்கு வந்தவர்கள், கல்லூரியின் சட்டதிட்டங்கள் பிடிக்கவில்லை எனச் சொல்வதற்கு அவர்களிடம் அத்தனை விசயங்கள் இருந்தன. இதுநாள் வரைக்கும் அவற்றைக் கேட்க யாருமில்லை என்பதுதான் அவர்களுடைய பிரச்சினை. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு பொறுமையாக எடுத்துச் சொல்ல அமைதியாகக் கேட்டவர்கள் அதன் பின் மொத்தமாக மாறிப் போனார்கள். கல்லூரி முடியும்வரைக்கும் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள் இன்றைக்கு சமூகத்தில் மிக முக்கிய பணிகளில் நல்ல விதமாக செட்டில் ஆகி இருக்கிறார்கள்.

மாணவர்களுக்குப் பாடம் சொல்லுகையில் நடக்கும் கூத்துகளை வேறு யாராலும் மிஞ்ச முடியாது. நான் பாடம் நடத்தும்போது பெரும்பாலும் நடைமுறையில் இருந்து எடுத்துக்காட்டுகளைச் சொல்லுவேன். அது சொல்ல வரும் விசயத்தை அவர்கள் எளிதில் புரிந்து கொள்ள உதவும். ஆனால் அதிலும் கந்திரகோலம் செய்து வைக்கும் நண்பர்கள் உண்டு. ஒரு முறை மைக்ரோபிராசசர் பற்றி நடத்தும்போது இண்டரப்ட் எனும் பாடம் குறித்து விளக்க தபால்காரர் வீட்டுக்கு தபால் எடுத்து வரும் முறையைச் சொல்லி பாடத்தை நடத்தினேன். ஆனால் அதை அப்படியே புரிந்து கொண்ட ஒரு பிரகஸ்பதி பரீட்சையில் இப்படி எழுதி இருந்தது. “தபால்காரர் வீட்டுக்கு வருகிறார். வந்து உங்கள் வாசல் மணியை அடிக்கிறார். டிங் டிங். நீங்கள் கதவைத் திறந்து தபாலை வாங்கிக் கொண்டு கையெழுத்து போடுகிறீர்கள். அவர் சென்று விடுகிறார்.” கடைசி வரைக்கும் அதில் பிராசசர் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இதுதான் கதையை மட்டும் கேட்டு விட்டு கருத்தை கோட்டை விடுவதென்பது.

இது இன்னொரு கூத்து. அது ஒரு செய்முறை வகுப்பு. மோட்டார்கள் பற்றி பாடம் நடத்தி விட்டுக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

“மோட்டார்ல எதுக்கு ஸ்டார்ட்டர் பயன்படுத்துறோம்?”

“சார்.. அது சார்... ஸ்டார்ட் பண்ண சார்..”

ஆகா. ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறார்கள். “அப்படி இல்லப்பா.. நீ ஒரு பொறியாளர். இந்த மாதிரி பொத்தம்பொதுவாப் பேசக் கூடாது. டெக்னிக்கலாப் பேசணும். புரிஞ்சுதா.. இப்போ சொல்லு.. எதுக்கு ஸ்டார்ட்டர்?”

“மோட்டாரை டெக்னிக்கலா ஸ்டார்ட் பண்ண சார்..”

இதற்கெல்லாம் எங்கு போய் முட்டிக் கொள்வது? சொல்லப்போனால் இதெல்லாம் வெறும் சாம்பிள்தான். இதை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல விசயங்கள் விடைத்தாள் திருத்தும்போது நடக்கும்.

ந்தோசம், கோபம், ஆதங்கம், உற்சாகம் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கொண்டதுதான் ஆசிரியர் மாணவருக்கு இடையேயான உறவு. என் வாழ்வின் அர்த்தம் இதுவாகவே இருக்க முடியும் என நம்பியே இந்த பணிக்கு வந்தேன். இன்றுவரைக்கும் அது தொடர்ந்தபடியே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு அலைபேசியில் லாவண்யா அழைத்து இருந்தாள். திண்டுக்கல்லில் என்னிடம் பாடம் பயின்றவள். மேல்படிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தவரைக்கும் எனக்கு அவளைத் தெரியும். பேசும்போதே குரல் அத்தனை குதூகலமாக ஒலித்தது.

“அண்ணா.. எனக்கு இங்க சென்னைல வேலை கிடைச்சிருச்சி. சாஃப்ட்வேர் லைன்ல வேலை. இப்போத்தான் ஹெச் ஆர் முடிஞ்சு கன்ஃபர்ம் பண்ணினாங்க. உடனே கூப்பிடுறேன்..”

“ரொம்ப சந்தோசம்டா.. அம்மாக்கிட்ட சொன்னியா..” அவளுக்கு அப்பா கிடையாது. அவளுடைய அம்மாவை எனக்கு ரொம்ப நன்றாகத் தெரியும்.

“இல்லைண்ணா.. முதல்ல உங்களுக்குத்தான். ஏதோ உங்ககிட்டதான் முதல்ல சொல்லணும்னு தோணுச்சு. எனக்கு இங்கிலீஷ் வரல்லைன்னு சொன்னப்போ எனக்காக எவ்ளோ சிரமப்பட்டீங்க.. எவ்ளோ நேரம் எனக்காகப் பேசி இருப்பீங்க.. இதை உங்ககிட்ட சொல்றதுதான் சரின்னு பட்டது.. நான் இப்படிப் பண்றதுதான் சரின்னு அம்மாவும் சொல்வாங்க.. அதான்..”

தான் பார்க்கும் வேலையை உண்மையாக நேசிப்பவனுக்கு இதைக் காட்டிலும், இந்த அன்பைக் காட்டிலும் பிடித்தமானதாக வேறென்ன இருக்க முடியும்?

ங்கெங்கோ அலைந்து திரிந்து இப்போது சிவகங்கை கல்லூரியில். போன வாரம் இறுதி வருட மாணவர்களுக்காக ஒரு குழு விவாதம் நடத்தினோம். யாரும் சரியாகப் பேசவில்லை. ஆங்கிலத்தில் பேசும் திறன் இல்லை என்கிற ஒன்றின் காரணமாகவே எப்படி தென்மாவட்ட மாணவர்கள் பெரிய கம்பெனிகளால் நிராகரிக்கப்படுகிறார்கள் என்று வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன். வாய்ப்பு மறுக்கப்பட்ட நானறிந்த நண்பர்கள் பற்றிச் சொல்லும்போது என்னையும் மீறி குரல் தழுதழுத்துப் போனது. இத்தனை சொன்னதற்காகவாவது அடுத்த முறை விவாதம் நடக்கும்போது யாராவது ஒருவர் ஒழுங்காகப் பேசினால் எனக்கு சந்தோசம் என்பதாகச் சொல்லி விட்டு வந்தேன். நேற்று மாலை ஒரு அழைப்பு வந்தது. நான்காம் வருட மாணவன் அவன்.

“சார்.. புக் செண்டர்ல இருக்கேன். எந்த டிக்சனரி வாங்குனா நல்லது சார்..?”

பயணங்கள் இன்னும் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

July 4, 2012

உக்கார்ந்து யோசிச்சது (04-07-12)

கவிஞர் சிபிச்செல்வன் மலைகள்.காம் எனும் இணைய இதழை நடத்தி வருகிறார். இதுவரைக்கும் ஐந்து இதழ்கள் வெளியாகி உள்ளன. தமிழின் மூத்த படைப்பாளிகளோடு புதிதாக எழுத வரும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளும் சேர்ந்து எனத் தரமான இணைய இதழாக வெளிவருகிறது மலைகள்.காம். சிபிச்செல்வனுக்கு வாழ்த்துகள். இதழை வாசிக்க இங்கே சொடுக்குங்கள்..

***************

சென்னை. நண்பரொருவரை சந்திப்பதற்காக சைதாப்பேட்டை ஆர்ச்சின் அருகே காத்துக் கொண்டிருந்தேன். நேரம் மதியம் மூன்றைத் தாண்டி விட்டிருந்தது. நல்ல பசி. நண்பர் வந்த பிறகு அவரோடு சேர்ந்துதான் ஹோட்டலுக்குப் போவதாகத் திட்டம். என்ன செய்வதெனத தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த இளநீர்க்கடை கண்ணில் பட்டது. நகர்ந்தேன். நாற்பது வயது மதிக்கக்கூடிய பெண்ணொருவர் அமர்ந்திருந்தார். முகம் கடு கடுவென இருந்தது.

இன்னா..

எளனி எவ்ளோக்கா..

ம்ம்ம்.. முப்பத்தஞ்சு ரூபா..

ரொம்பவே ஜாஸ்திதான். ஆனால் எனக்கோ கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. ஏதாவது குடித்தே ஆகவேண்டும் என்பது போன்ற நிலைமை.

சரிக்கா வெட்டுங்க..

தண்ணி மட்டும்தான் குடிக்க முடியும். அதுக்கப்புறம் காய வெட்டித் தர சொல்லக்கூடாது.. சரியா..

இது வேறா? சரிக்கா.. பரவாயில்ல.. வெட்டுங்க..

அந்த நேரத்துக்கு தாகம் படுத்திய பாட்டுக்கு இளநீர் அத்தனை அருமையாக இருந்தது. போன உயிர் மீண்டு வந்ததைப் போன்ற உணர்வு.

ரொம்ப நன்றிங்க அக்கா..

சொல்லி விட்டுப் பணத்தைக் கொடுத்தேன். அவர் என்னை விநோதமாகப் பார்த்தார்.

வெளியூரா... எந்தூரு..

ஆமாக்கா.. மதுரை. சும்மா நண்பர்களைப் பார்க்கலாம்னு வந்தேன்.

இரு என்று சைகை செய்தவர் இளனியை வெட்டித் தேங்காய் எடுத்துத் தந்தார். சாப்பிட்டு விட்டுக் கிளம்பினேன். நில்லுப்பா என்று கூப்பிட்டவர் ஒரு பத்து ரூபாயை என்னிடம் திருப்பித் தந்தார். நான் புரியாமல் பார்த்தேன்.

இருபத்தஞ்சு ரூபா தான். வச்சுக்க..

அந்த அம்மாவின் முகத்தில் இப்போது சின்னதொரு சிரிப்பும் அமைதியும் இருந்தது. மீண்டும் ஒரு நன்றி சொல்லிக் கிளம்பினேன்.

***************

சென்னையில் இருக்கும் நண்பர் அவர். காமிக்ஸ் வாசிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர். கூட சில நண்பர்களை அழைத்துக் கொண்டு காமிக்ஸ் வேட்டைக்காக மதுரை வந்திருந்தவரை அவருடைய அறையில் போய் சந்தித்தேன். மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்த கச்சேரி இரவு பதினோரு மணி வரை தொடர்ந்து கொண்டே போனது. பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை.

அன்றைக்கு இரவு பனிரெண்டு மணிக்கு சென்னை திரும்பும் ரயிலில் நண்பருக்கு டிக்கட் புக் பண்ணி இருந்தது. எனவே கதை பேசி முடித்துக் கிளம்பும் சமயத்தில் பதினோரு மணிவாக்கில் இன்டர்காமில் ரிசப்சனுக்குக் கூப்பிட்டார்.

எனக்கு 12 மணிக்கு டிரெயின். நான் கெளம்பணும். பில் ரெடி பண்றீங்களா..

அதெல்லாம் முடியாது சார். இந்த நேரத்துல தான் எங்க ஹோட்டல்ல இன்னைக்கு நாளுக்கான அக்கவுண்ட்ஸ் எல்லாம் சரி பாப்போம். நீங்க 12 மணிக்கு மேல காலி பண்ணிக்கோங்க..

எங்களுக்கு அதிர்ச்சி. ஒரு வாடிக்கையாளரிடம் எப்படிப் பேசுவது என்கிற வரைமுறை இல்லையா? நான் இத்தனை மணிக்குத்தான் காலி செய்ய வேண்டும் என என்னைச் சொல்ல இவன் யார் என்று நண்பருக்கு பயங்கர கடுப்பு. அறையைக் காலி செய்து பூட்டிக் கொண்டு ரிசப்ஷனுக்குப் போனால் அங்கிருந்த அந்தப் பையன் அதையேதான் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான். தனக்கு ரயிலுக்கு நேரமாகி விட்டதாக நண்பர் சொன்னதை அவன் காதில் வாங்கிக் கொண்டதாகவேத் தெரியவில்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் எனக்குப் பொறுமை சுத்தமாகப் போய் விட்டது. நம் ஊருக்கு வந்திருக்கும் விருந்தாளியிடம் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா எனக் கத்த ஆரம்பித்தேன். நண்பரோ தனது விசிட்டிங் கார்டை எடுத்து மேஜை மேல் வைத்து நேரில் வந்து பணம் வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்து விட்டார். பிறகு ஹோட்டலின் மேனேஜர் வந்து புதுப்பையன் சார் அது இது என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

இது சின்னதொரு எடுத்துக்காட்டே. இந்த ஒரு இடம் தான் என்றில்லை. எங்கே போனாலும் இன்றைக்கு வாடிக்கையாளரை யாரும் மதிப்பதே கிடையாது. சர்வீஸ் என்கிற ஒரு விசயமே அர்த்தம் இல்லாததாக மாறி விட்டது. நீ இல்லை என்றால் எனக்கு ஆயிரம் பேர் வருவார்கள் என்கிற மனநிலை தான் எல்லோருக்கும். யாரைக் குற்றம் சொல்வது?

***************

புனலும் மணலும் - .மாதவன் எழுதிய நாவல். தமிழும் மலையாளமும் கலந்த நாஞ்சில் வாடார மொழியில் எழுதப்பட்ட கதை. அங்குசாமி மூப்பர் ஆற்றங்கரையில் மணல் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்பவர். அவருடைய மனைவி தங்கம்மையின் மூத்த கணவனுக்குப் பிறந்த மகள் குரூபியாக இருக்கிறாள். அங்குசாமிக்கு எப்போதுமே அவளைப் பிடிப்பதில்லை. தங்கத்தின் மரணத்திற்குப் பிறகு மகளின் மீதான பொறுப்பு தன்னிடம் வந்து சேர தீராத துயரம் கொள்கிறார்.

சிறு வயதிலிருந்து அவரால் பாசத்துடன் வளர்க்கப்பட்ட தாமோதரன் தான் அந்தப் பெண்ணுக்கான ஒரே ஆறுதல். நாவலின் இறுதியில் மூப்பர், தாமோதரன், மூப்பரின் மகள் ஆகியோர் பிரயாணிக்கும் படகு சுழலில் சிக்கிக் கொள்கிறது. எல்லோரும் தப்பிப் பிழைத்திட மூப்பரின் மகள் மட்டும் காணாமல் போகிறாள். கரையேறிய மூப்பருக்குத் தன் காலை யாரோ நீருக்குள் பற்றியதும் உயிர் பயம் உந்தித் தள்ள தாம் அதை விலக்கி விட்டு மேலே வந்ததும் நினைவுக்கு வருவதோடு கதை முடிகிறது.

இன்றைய காலகட்டத்தோடு பெரிதும் பொருந்திப் போவதுதான் இந்தக் கதையின் பலமே. மனித மனத்தின் நிர்தாட்சான்யமும், தான் எதற்கும் இரங்கி விடக்கூடாது என்கிற மூப்பரின் அகந்தையும்தான் கதையின் அடிநாதம். மூப்பரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் மிக நுண்மையானது. ஒரு விஷயம் பிடிக்காமல் போனால் அது ஆயுசுக்கும் பிடிக்காமல் போகும் என்கிற அடிப்படையில் அவருக்குத் தன் மகளைப் பிடிக்காமலே போகிறது. உடல் நலமின்றி அவளுடைய ஆதரவில் தான் வாழ நேரும்போது தன்னையே வெறுக்கும் அளவுக்குத் தீவிரமாக இருக்கிறார் மூப்பர். இத்தனைக்கும் அவர் கெட்டவர் எல்லாம் கிடையாது. யாருமில்லாது வந்து நிற்கும் தாமோதரனைத் தன் மகன் போல வளர்க்கும் நல்ல உள்ளம் படைத்தவர் என நன்மைக்கும் தீமைக்குமான மெல்லியதொரு இடைவெளியில் மூப்பரின் மனம் இயங்குவது மிக அழகாக நாவலில் கையாளப் பட்டிருக்கிறது. கவிஞர் சுகுமாரன் எழுதியிருக்கும் அருமையான முன்னுரையுடன் காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளியாகி இருக்கும் புனலும் மணலும் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய நாவல்களில் ஒன்று.

***************

The Color Of Paradise - மஜீத் மஜிதி இயக்கிய திரைப்படம். இதுவும் ஒரு தந்தைக்கும் பிள்ளைக்குமான உறவைப் பேசும் படம்தான். சிறுவனான மொகமதுக்கு கண்பார்வை கிடையாது. மிகுந்த புத்தி கூர்மை உடைய, இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவன். அவனுடைய சகோதரிகளுக்கும் பாட்டிக்கும் அவனை ரொம்பவே பிடிக்கும். ஆனால் மறுமணம் செய்ய நினைக்கும் அவனது தந்தை ஹசீமுக்கோ பார்வையற்ற சிறுவன் தன் வாழ்க்கையில் பெரும் பாரமாக இருப்பானோ என்ற பயம். எனவே தனது மகனை ஒரு கண்பார்வையற்ற தச்சன் ஒருவரிடம் வேலைக்கு சேர்த்து விடுகிறான். பேரனைப் பிரிந்த துயரத்தில் பாட்டி இறந்து போகிறாள். இதை ஒரு கெட்ட சகுனமாக எண்ணிப் பெண் வீட்டார் ஹசீமின் திருமணத்தை நிப்பாட்டி விடுகிறார்கள்.

வேறு வழி இல்லாமல் தன் மகனை மீண்டும் வீட்டுக்கு ஹசீம் கூட்டி வரும் வழியில் மொகமது தவறி ஒரு காட்டாற்றில் விழுந்து விடுகிறான். அவனைக் காப்பாற்றுவதா வேண்டாமா எனத் தயங்கும் ஹசீம் மனம் மாறி தானும் ஆற்றுக்குள் குதிக்கிறான். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவரும் ஒரு ஓரமாகக் கரை சேருகிறார்கள். தன் மகன் இறந்து விட்டானோ என எண்ணித் துடிக்கும் ஹசீம் அவன் மீதானத் தன் அன்பை உணர மொகமதுவின் கைகள் அசையத் தொடங்குவதோடு படம் முடிகிறது.

பார்வையற்ற மொகமது இந்தப்படத்தில் சொல்லும் ஒரு வசனம் மிக முக்கியமானது. "எனது ஆசிரியர் சொல்வார்.. கடவுள் மிகுந்த கருணை மிக்கவர். உன் மீது அவருக்கு அளவில்லாத அன்பு என்று.. ஆனால் அது உண்மையில்லை. கடவுளுக்கு என் மீது அன்பு இருக்குமென்றால் ஏன் அவர் என் கண்களைப் பறித்தார்.." பதில் சொல்ல மாட்டாத பார்வையிழந்த தச்சன் அமைதியாக எழுந்து போகும் இந்த ஒற்றைக் காட்சிதான் படத்தின் அடிப்படை சாராம்சம்.

உடல் ஊனமுற்ற அல்லது மனம் பிறழ்ந்த குழந்தைகளைக் கொண்டிருக்கும் யாருக்கும் உண்டாகும் கேள்வியையும் மன உளைச்சலையும் பதிவு செய்திருக்கும் இப்படம் அதற்கான தீர்வு அன்பு ஒன்றுதான் என்பதையும் சொல்லிப் போகிறது. டத்தின் ஆரம்பம் முதலே மொகமது இயற்கையோடு தன் விரல்களால் பேசியபடி இருக்கிறான். படத்தின் இறுதியில் அவனுடைய அப்பா அன்பின் வலியை உணரும் தருணத்தில் மோகமத்தின் கைகள் பிரகாசிக்கத் தொடங்குகின்றன. அவனால் கடவுளோடு தொடர்பு கொள்ள முடிகிறது எனும்படியாக அமைக்கப்பட்டிருக்கும் இறுதிக்காட்சி அழகானதொரு கவிதை.

இரானிய இயக்குனர் மஜீத் மஜிதி பற்றிய நண்பர் சூர்யாவின் பதிவு இங்கே...

***************

சமீபமாக வாசித்ததில் பிடித்த கவிதை..

கதையின் காகம்

வெயில் வேகும் நிலத்தில்
பயணியொருவன்
விட்டுச்சென்ற
பானையின்
மிஞ்சிய அடிநீராய்
இருந்தேன்
வெகுநாட்களாக.
நிலமெங்கும் நீர்தேடி
தாகத்துடன்
ஒருநாள்
காகமும் வந்தது..
பானையின அடியில்
தன் அலகால் எட்டமுடியாத
என்னை
அன்பின்
கூழாங்கற்கள் கொண்டு
நிரப்பிப் பருகத் துணிந்தது
காகம்.
என் கடன் தீர்க்க
நானும் ஆரவாரித்துத் ததும்பினேன்..
என் உயிரின் வேகத்திலா
கூழாங்கல்லின் கனத்திலா
காகத்தின்
தாக தாபப் பரபரப்பிலா
தெரியவில்லை
பானை உடைந்தது
நான்
மீண்டும் கல்லாய் காய்ந்தேன்..

- ஷங்கர்ராமசுப்ரமணியன்

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

June 29, 2012

உதிரிப்பூக்கள் - 14

கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் பேருந்து. நண்பர் ஒருவரின் கல்யாணத்தில் கலந்து கொண்டு விட்டு தனிப்பட்ட அலுவல்களுக்காக சென்னை கிளம்ப வேண்டிய சூழல். திருமணத்திற்கு வந்திருந்த மற்றொரு நண்பர் தனக்கும் சென்னையில் வேலையிருப்பதாக உடன் சேர்ந்து கொள்ள இருவருமாகக் கிளம்பினோம். மட்ட மத்தியானம் பனிரெண்டு மணிக்கு நாங்கள் வண்டிக்குள் ஏறியபோது கிட்டத்தட்ட மொத்தப் பேருந்தும் காலியாக இருக்க வசதியான இடமாகப் பார்த்து அமர்ந்து கொண்டோம்.

எங்களுக்கு முன்சீட்டில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அதிகபட்சம் முப்பத்தைந்து வயதிருக்கலாம். பார்த்தவுடன் சட்டென்று ஈர்த்துக் கொள்ளக்கூடிய அழகு. ஆனால் அவரது முகத்தில் சின்னதொரு குழப்பம் தேங்கியிருந்தது. அத்தோடு அவர் அணிந்திருந்த ஆடைகள் எல்லாம் நெகிழ்ந்திருக்க வேறெங்கோ தொலைந்தவர் போல அமர்ந்திருந்தார். அவ்வப்போது தனது மொபைலை அருகில் இருப்பவர்களிடம் கொடுத்து ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு பெண் தனது அலைபேசியை இத்தனை பகிரங்கமாக மற்றவர்களிடம் தருகிறாரே என்று எங்களுக்கு குழப்பம். ஒரு மாதிரியான பெண்ணாக இருப்பாரோ அல்லது சற்றே மனநலம் குன்றியவரோ என எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

ண்ருட்டி அருகே ஒரு மோட்டலில் மதிய உணவுக்காக பேருந்து நின்றபோது மணி நான்கு. நாங்கள் இருவரும் உள்ளே சென்று வாய்க்கு விளங்காத தோசை இரண்டை பிய்த்துப்போட்டு வந்தபோது அந்த பெண்மணி அருகிலிருந்த கடையில் ஏதோ வாங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பற்றிப் பேசிச் சிரித்தபடி இருவரும் பேருந்துக்குள் ஏறினோம். வண்டி கிளம்பியபின்னரே வேகவேகமாக ஓடி வந்து ஏறியவரைப் பார்த்து ஏன் இவர் இத்தனை வினோதமாக நடந்து கொள்கிறார் என ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நண்பருக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.

சவுதியில் இருக்கும் நண்பரின் சகோதரர் அழைத்திருந்தார். பேச்சுவாக்கில் நண்பர் ஊரெல்லாம் எப்படி இருக்கிறது என சவுதி பற்றி விசாரிக்க முன்னாலிருந்த பெண்மணி இப்போது எங்களை ஆர்வமாகப் பார்ப்பதை நான் கவனித்தேன். நண்பர் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்த அந்தப் பெண் சட்டென்று நண்பரிடம் பேசினார்.

உங்களுக்கு சவுதில யாரையும் தெரியுமா சார்? ஊரெல்லாம் எப்படி? நானெல்லாம் அங்க போனா நிம்மதியா இருக்க முடியுமா..

யாரென்று தெரியாதவர் தானாக வழுவில் வந்து பேசுகிறாரே என்று எங்களுக்குக் குழப்பம். அவரோ எதையும் கவனிக்காமல் தொடர்ச்சியாக சவுதி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். நண்பரும் சில வருடங்கள் சவுதியில் இருந்திருந்தபடியால் ஊரைப் பற்றி அந்தப் பெண்மணிக்கு பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தார்.

ல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டபின்பு அந்தப்பெண் தன்னைப் பற்றிச் சொன்னார். ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவராம். கும்பகோணம் அருகே இருக்கும் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் உத்தியோகம் பார்க்கிறார் போல. கணவருக்கு இன்ஸ்பெக்டர் வேலை. ஒரே மகன் சென்னையில் இறுதி ஆண்டு பொறியியல் படிப்பில் இருக்கிறான். இவர் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்ப்பதால் வார இறுதிகளில் சென்னை சென்று குடும்பத்தோடு இருப்பது வழக்கமாம். அவர் ஆசிரியர் என்று சொன்னதுதான் தாமதம். நண்பர் என்னைப் பார்த்து ரகசியமாகச் சிரித்தபடி அந்தப்பெண்ணிடம் சொன்னார்.

இவரும் வாத்தியார்தான். காலேஜ்ல.. இப்போத்தான் முனைவர் படிப்பு படிச்சுக்கிட்டு இருக்கார்.

அப்படியா சார்? ரொம்ப சந்தோசம். உங்களுக்குத் தெரியாதா என்ன? நானாவது ஸ்கூல்ல இருக்கேன். நீங்க காலேஜ். உங்களுக்குத் தெரியாததா.. எத்தனை அரசியல் இருக்கும் தெரியுமா இந்த முனைவர் பட்டம் வாங்குறதுக்குள்ள..

அவர் தொடர்ச்சியாகப் பேசியபடியே இருந்தார். தான் பட்ட கஷ்டங்கள், உடன் வேலை பார்க்கும் மக்களின் பொறாமை, பல்கலையின் இழுத்தடிப்பு.. நிறுத்தாமல் அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அது நெருடலாக இருக்கவில்லை. ஒரு சிறுபிள்ளை கதை சொல்லுவது போல அத்தனை ஆவலுடன் சொல்லியபடியே இருந்தார். அந்நிய மனிதர்களிடம் பேசுகிறோம் என்கிற எந்த உணர்வும் இல்லாமல் அவர் பேசிக் கொண்டிருந்தது அவர் மீது எங்களுக்கு ஒரு ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் உண்டு பண்ணியிருந்தது. இன்றைக்கு ஊர் போய்ச் சேர பொழுதுபோக்கிற்கு ஆள் கிடைத்தாயிற்று என்பதாக அவர் பேசுவதைக் கவனித்தபடி இருந்தோம். அவருக்குத் தெரிந்த தோழி ஒருவர் சவுதியில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இருந்தார் என்பதாலேயே எங்களிடம் சவுதி பற்றி விசாரித்ததாகக் கடைசியாகச் சொன்னார். எல்லாம் கேட்டுவிட்டுப் பொறுமையாகச் சொன்னேன்.

உங்களுக்கு பணம் பெரிசாத் தேவையில்லைன்னா நீங்க இப்பப் பார்த்துக்கிட்டு இருக்குற வேலையை விடாதீங்க மேடம். இதுவும் கவர்மெண்ட் வேலைதானே? அதனால இதுலயே இருக்கலாம். எங்கேயோ ஒரு நாட்டுல ஊர் பேர் தெரியாம யாருக்காக சம்பாதிக்கிறீங்களோ அவங்களை விட்டு விலகிக் கிடக்குறது நல்லாவா இருக்கும்? அதை விட முக்கியம்.. உங்களை மாதிரி திறமையானவங்க கிராமப்புற பள்ளிகள்ள இருக்க மாணவர்களுக்கு செய்யுற சேவைதான் பெரிசு. அந்தப் பிள்ளைங்க பெரிய கல்லூரிகள்ல சேர்ந்து உற்சாகமா உங்கக்கிட்ட வந்து நன்றி சொல்றதை விட என்ன பெரிய சந்தோசம் வாழ்க்கைல கிடைக்கப் போகுது?

ஆமாம் என்பதாக சந்தோசமாகத் தலையை அசைத்தவர் நீங்க சொல்றது சரிதான் சார் நான் இங்கேயே இருந்துடப் போறேன் என்று ஒரு குழந்தையின் குதூகலத்துடன் சொன்னார். நிமிடத்துக்கு நிமிடம் சட்டென்று மாறும் அவருடைய மனநிலை எனக்கு சுத்தமாகப் புரிபடவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று சிரித்து வைத்தேன்.

ற்று நேரம் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென ஏதோ ரகசியம் பேசுவது போல என்னை அருகில் வரும்படி அழைத்தார். நான் அவர் அருகே நகர்ந்தேன்.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நான் இன்னைக்கு சென்னை போறது எங்க வீட்டுல யாருக்கும் தெரியாதே..

சிரித்தபடி சொன்னவரை நான் அதிர்ச்சியாகப் பார்த்தேன். பேருந்து சென்னையை அடையும்போது எப்படியும் இரவு பத்து மணியாகி விடும். அந்நேரத்துக்கு மேல் இவர் எங்கே போவார்? என்ன சொல்கிறார் இவர்?

என்னோட ஸ்கூல்ல படிச்ச ஃபிரெண்டு ஒருத்தி அமெரிக்காவுல இருந்து வந்திருக்கா சார். அவளைப் பார்க்கத்தான் போய்க்கிட்டு இருக்கேன். என் வீட்டுல சொன்னா அவர் அலோ பண்ண மாட்டாரு. அதான் சொல்லாமப் போய்க்கிட்டு இருக்கேன்.

நான் ஏதும் பேசாமல் இருக்க அவரே தொடர்ந்தார்.

கல்யாணம் ஆனப்போ எனக்கு பதினேழு வயசு சார். அவ்வளவா விவரம் இல்லாத வயசு. அவர்தான் எனக்கு எல்லாம்னு இருந்தேன். அவரும் நல்லவருதான். ஆனா ரொம்ப பொசசிவ் டைப் சார் அவரு. நான் வேற யார்கூடயும் பேசிறக்கூடாது. உடனே கோபம் வந்திரும். என்னையப் போட்டு அடிப்பாரு. உன்னோட அன்பு எல்லாம் மொத்தமா எனக்குத்தான். வேற யாரும் இருக்கப்போய்த்தானே நீ அவங்க கூட பழகுறன்னு சொல்லி யார்கூடவும் அண்ட விட மாட்டாரு. எங்க அம்மா அப்பாக்கிட்ட கூட பேச வேண்டாம்னு சொல்லிட்டாருன்னா பாருங்க. நானும் அப்படியே இருந்து பழகிட்டேன். ஒருநாள் எங்கம்மா எல்லாத்தையும் மீறி வீட்டுக்கு வந்திருந்தாங்க. நான் அவங்க மடியில படுத்துட்டு இருக்குறதை அவர் பார்த்துட்டாரு. மறுநா அம்மா போன பிறகு என்ன பண்ணினாரு தெரியுமா..

பேசிக்கொண்டே இருந்தவர் தனது இடைச்சீலையை சற்றே நகர்த்திக் காட்ட நாங்கள் அதிர்ந்து போனோம். நீளக்கோடு போல சூடு போட்ட மிகப்பெரிய தழும்பு அங்கே இருந்தது. அந்த மனிதரின் ரவுத்திரம் ஒரு புறம் என்றால் இந்தப்பெண் இத்தனை வெட்ட வெளிச்சமாக நம்மிடம் ஏன் இதை எல்லாம் சொல்ல வேண்டும் என்கிற அதிர்ச்சி ஒரு புறமுமாக நானும் நண்பரும் பேச்சற்று அமர்ந்திருந்தோம்.

இப்படித்தான் சார் ஏதாவது அறிவில்லாம செஞ்சிடுவாரு. அப்புறம் கெடந்து சாரி சாரின்னு கெஞ்சிக்கிட்டு இருப்பாரு. ஏதோ பொம்பளைப் பிள்ளைங்க படிக்கிற ஸ்கூல்ங்கிறதால என்னை வேலைக்கு விட்டுருக்கார். இல்லைனா அவ்ளோதான். இதுல ஃபிரெண்டு வர்றா பாக்கப்போறேன்னு சொன்னா என்னை விட்டுட்டுத்தான மறுவேலை பாப்பாரு. அதான் சொல்லாமப் போறேன். அவர்கிட்ட நாளைக்குத்தான் கும்பகோணத்துல இருந்து வர்றேன்னு சொல்லி இருக்கேன். எனக்கு ரொம்ப தைரியம்தான். இல்லை சார்?

நானும் நண்பரும் சங்கடமாக சிரித்து வைத்தோம். பேச்சை மாற்றுவோம் என நண்பர் அவரிடம் கேட்டார். ஸ்கூல் நேரம் போக மத்த நேரம் ஹாஸ்டல்ல என்னங்க பண்ணுவீங்க? இதைக் கேட்டபோது அந்தபெண்ணின் கண்களில் ஒரு ஒளி தோன்றி மறைந்தது.

உங்கக்கிட்ட ஒரு விசயம் சொல்லலையே? நான் நல்லாப் பாடுவேன் சார். ஹாஸ்டல்ல ஒரு வீணை வச்சிருக்கேன். அதுதான் என்னோட ஒரே ஃப்ரெண்டு. மனசு சந்தோசமா இருந்தாலும் சோகமா இருந்தாலும் நமக்கு பாட்டுத்தான் சார் எல்லாமே. இப்போ ஒரு பாட்டு பாடட்டுமா..

நாங்கள் என்ன ஏதென்று சொல்வதற்குள் அவர் கண்களை மூடி ஹம் பண்ண ஆரம்பித்து இருந்தார். தன்னுடைய கட்டுப்பாட்டில் அவர் இல்லை என்பது போலாக கண்கள் செருகி இருந்தன. சற்று நேரத்தில் இனிமையான குரலில் அற்புதமாகப் பாடத் தொடங்கினார். இரவும் நிலவும் வளரட்டுமே... எங்களைத் தவிர்த்து பேருந்தில் இருந்த வெகு சிலரும் என்ன இது என்பதாக அவரைப் பார்த்தபடி இருந்தார்கள். தன்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்கிற எந்தப் பிரஞ்கையும் இல்லாமல் அவர் பாடிக் கொண்டிருந்தார். பாடல் முடிந்தபோது எங்களையும் அறியாமல் நாங்கள் கைகளைத் தட்டிக் கொண்டிருந்தோம். அவருடைய குரல் அத்தனை அருமையாக இருந்தது.

ரொம்ப அற்புதமாப் பாடுறீங்க.. சான்சே இல்லைங்க..

அதனாலத்தாங்க அவர் என்னைப் பாடக்கூடாதுன்னு சொல்லிச் சொல்லி அடிப்பாரு. பத்து வருசம் கழிச்சு வெளியாளுங்க முன்னாடி நான் பாடுறது இதுதான் முதல் தடவை தெரியுமா... ரொம்ப நன்றிங்க..

இதைச் சொன்னபோது அவரது கண்களில் நீர் கோர்த்திருந்தது. நான் இன்னும் கொஞ்சம் பாடட்டுமா என்றவரிடம் சரி என்றோம். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அருமையான பழைய பாடல்களைப் பாடியபடி வந்தவர் வெகுநேரம் கழித்தே ஆசுவாசமானார்.

ந்தப்பயணத்துல இப்படி ஒரு மனுசியைச் சந்திப்போம்னு நினைச்சுக்கூடப் பார்க்கலீங்க என்றார் நண்பர். ஆமாங்க, நல்லாப் படிச்சு இருக்கீங்க. வாழ்க்கைல கஷ்டப்பட்டாலும் இன்னைக்கு சமூகத்துல ஒரு கவுரமான இடத்துக்கு வந்திருக்கீங்க. இனியாவது உங்களுக்கு பிடிச்சமான விசயங்களை செஞ்சுக்கிட்டு நல்லா சந்தோசமா இருக்க முய்ற்சி பண்ணுங்க என்று அவரிடம் சொன்னேன். பதிலுக்கு அவர் விரக்தியாய் சிரித்தபடி சொன்னார்.

சந்தோசமாவா.. இந்த சமூகம் விடும்னா நினைக்கிறீங்க.. ஒரு பொண்ணு சங்கடத்துல இருந்தா அதை எப்படி பயன்படுத்த முடியும்னு தான் சார் இந்த உலகம் பார்க்கும். போன வருசம் எங்க ஸ்கூலுக்கு ஒரு சீஃப் ஆபிசர் வந்திருந்தார். என்னை விடப் பத்து வயசு சின்னப்பையன் தான். ஸ்கூல் பத்தி நான் கொடுத்த பிரசெண்டேஷன் அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நம்ம டவுன் ஸ்கூலுக்கும் இதே மாதிரி ஒண்ணு ரெடி பண்ணனும்னு சொல்லி என்னைக் கூப்பிட்டார். சரின்னு நானும் போனேன்.

ராத்திரி ஏழு மணிக்கு மேல காட்டு வழில கார்ல போய்க்கிட்டு இருக்கோம். அவர் ஓட்டிக்கிட்டு வர நான் பக்கத்துல உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கேன். திடீர்னு பார்த்தா ஏசியோட அளவு ஏகமாக் கூடுது. பயங்கரக் குளிர். என்னமோ பேசிக்கிட்டே இருந்தவரு சட்டுன்னு என் கையப் பிடிச்சுக்கிட்டாரு. எனக்கு ஒண்ணும் புரியலை. ஆனா கொஞ்சம் சந்தோசமா இருந்தது. அதுக்கப்புறம் அவரோட பேசுறதுக்கு ஒரு செல்போன் வாங்கித் தந்தாரு. கொஞ்ச நாள் சந்தோசமாப் பேசிக்கிட்டு இருந்தோம். என்னோட கஷ்டங்களை எல்லாம் பகிர்ந்துக்க நான் சாஞ்சுக்க ஒரு தோள் கிடச்சாச்சுன்னு சந்தோசமா இருந்தேன்.

ஆனா அவன் அப்படி மட்டும் நினைக்கலைன்னு பிறகுதான் தெரிஞ்சுது. எப்பப் பேசினாலும் ரூம் போடலாமான்னுதான் கேப்பான். நான் என்னோட வலிகளை பகிர்ந்துக்கணும்னு சொன்னா ஒதுங்கிப் போயிடுவான். ஒரு கட்டத்துல எனக்குப் புரிஞ்சு போச்சு. நான் அவனை முழுசா நேசிச்சேன். ஆனா அவன் என் உடம்பு மேல தான் குறியா இருந்திருக்கான். அவனைச் சும்மா விடக்கூடாது. அன்னைக்கு நடந்தது ஒரு கனவுதான்னு முடிவு பண்ணினேன். அந்த ராத்திரில அவன் எனக்கு முத்தம் கொடுத்தது ஒரு அம்மாவுக்கு குழந்தை குடுத்த மாதிரி இருந்துட்டுப் போகட்டும். ஏண்டா தேவுடியா பையா.. உனக்கு உடம்பு வேணும்னா யாருக்கிட்டயாவது போறதுதானே? எதுக்குக் காதல்னு சொல்லி என்னை ஏமாத்தணும். அவனைத் தலை முழுகினதோட சரி.. அதுக்கப்புறம் யாரையும் நம்புறது கிடையாது சார்...

சரசரவென மழை பெய்வது போல அவர் சொல்லி முடித்தபோது நானும் நண்பரும் பேய் அறைந்தது போல அமர்ந்திருந்தோம்.

ரொம்ப சந்தோசமா இருக்கு சார். என் மனசுல இருக்க கசட எல்லாம் யாருகிட்டயாவது சொல்லி அழாம உள்ளயா வெச்சு வெந்து போயிருப்பேன். ஆனா நல்லவேளையா இன்னைக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தேன். ஒரு பொண்ணுக்கு தனியா மனசு இருக்குனு என்னை மதிச்சு யாரோ ஒருத்தி பேசுறதை நீங்க ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் கேட்டதே பெரிசு சார். நாம எல்லாரும் ஒரே வேவ்லென்த்ல இருக்குறதால நீங்க என்னைப் புரிஞ்சுக்கிட்டீங்க. உங்ககிட்ட என் பாரம் எல்லாம் எறக்கி வச்சுட்டேன்னு நிம்மதியா இருக்கு சார்..

ங்களுக்கு அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவருடைய எல்லா செயல்களையும் சரி என்று சொல்ல முடியாதென்றாலும் அவருடைய நிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே அவருடைய செயல்களுக்கான நியாயம் புரியவரும். அவருடைய சூழல் அவரை இதை எல்லாம் செய்ய வைத்திருக்கிறது என்று நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க பேருந்து நிலையம் வந்து விட்டது. எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டதோடு அவரும் இறங்க உதவி செய்தோம். ரொம்ப அயர்ச்சியாக இருப்பதால் ஒரு காபி வாங்கித் தர முடியுமா எனக்கேட்டார். கேண்டினில் போய் காபி வாங்கிக் கொண்டு வந்தேன். ஏதும் பேசாமல் மெதுவாக அதை அருந்தி முடித்தவர் கிளம்பினார்.

போயிட்டு வர்றேன். கடைசி வரைக்கும் என் பேரைக் கூட நீங்க கேக்கலை பாருங்க.. ரொம்பப் பெருமையா இருக்கு சார். பிரயாணத்துல பார்த்தோம். பேசுனோம். சந்தோசமா அப்படியே பிரிஞ்சுடலாம். வர்றேன் சார்..

எங்களை நீங்கி அந்தப்பெண் நடக்கத் தொடங்கினார். காருக்குள் நடந்த சம்பவத்தைக் கேட்டபின்பு அவருடைய அலைபேசி எண்ணை வாங்கலாமா என் எனக்குத் தோன்றியதை அவரிடம் கூப்பிட்டு சொல்லலாமா என்று நினைத்தேன். வேண்டாம். யாரேனும் ஒரு சிலராவது அவருடைய உலகத்தில் நல்லவராக இருக்கட்டும் எனத் தோன்ற அமைதியாக நின்றிருந்தேன். அவர் பேருந்து நிலையத்தில் ஜனத்திரளுக்குள் நுழைந்து காணாமல் போனார்.