March 28, 2012

உதிரிப்பூக்கள் - 9

சி நாட்களுக்கு முன்பு ஒரு விசேசத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை போக வேண்டியிருந்தது. பரங்கிமலையில் இருக்கும் நண்பரொருவனின் அறையில் தங்கிக் கொள்வதாக ஏற்பாடு. அதிகாலை ரயிலில் நான் போய் இறங்கியபோது நண்பன் கிளம்பி வேலைக்குப் போய் விட்டிருந்தான். தனது அறையில் இருக்கும் நண்பர் என்னை கவனித்துக் கொள்வார் என்பதாகச் சொல்லி முகவரியையும் குறுந்தகவலாக அனுப்பி இருந்தான். அப்படி இப்படியென்று அலைந்து திரிந்து அந்த முகவரியைக் கண்டுபிடித்தேன்.

அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. நண்பனின் வீடு இருந்தது முதல் தளத்தில். மேலே ஏறிப் போனால் ஒரே தளத்தில் எதிரெதிராக இரண்டு வீடுகள். எண் எதுவும் சுவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நான் எது நண்பன் வீடெனத் தெரியாமல் குருட்டாம்போக்கில் ஒரு வீட்டின் மணியை அடித்து வைத்தேன். சற்று நேரத்துக்குப் பின் கதவு திறந்து ஒரு பெண் வெளியே வந்தார். முப்பது வயதிருக்கலாம். வெகு அமைதியான குரலில் யார் வேண்டுமென கேட்டவரிடம் என் நண்பனின் பெயரைச் சொன்னேன். கொஞ்சம் யோசித்துவிட்டு அப்படி யாரையும் தெரியாதெனச் சொல்லிவிட்டு சின்னதொரு சிரிப்போடு உள்ளே போய் கதவைச் சாத்திக்கொண்டார். ஆக எதிர்த்தாற்போல இருக்கும் வீடுதான் நண்பனின் வீடு என்பதை உறுதி செய்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.

அன்றைக்கு முழுவதும் எனக்கு ஒருமாதிரியாக இருந்தது. எதிர்த்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் கூடவா மனிதர்கள் இருப்பார்கள்? இது மாதிரியான அனுபவங்கள் எல்லாம் எத்தனையோ முறை கதைகளில் பத்திரிக்கைகளில் டிவிக்களில் எல்லாம் பேசப்பட்டு நமக்கு நன்றாகத் தெரிந்த விசயங்கள்தான். ஆனால் எனக்கு நேரடியாக நடப்பது இதுதான் முதல் தடவை. நகரங்களில் என்று தானில்லை. கிராமம் நகரம் என எல்லாப்பக்கமும் இதுதான் மறுக்கமுடியாத நிதர்சனம். பொதுவாகவே இன்றைக்கு சக மனிதர்கள் மீதான அக்கறை என்றால் என்ன என்று கேட்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

சாயங்காலம் வந்த நண்பனிடம் நடந்ததைச் சொன்னேன். அவன் “ஓ எதுத்த வீட்டுல குடி வந்துட்டாங்களா” என்று என்னிடமே ஆச்சரியமாகத் திரும்பிக் கேட்டான். வெளங்கிடும். “எப்படிடா மனுசனுக்கு மனுசன் பழகிக்காம இருக்கீங்க.. ஆத்திரம் அவசரம்னா என்னடா செய்வீங்க” என்கிற என் கேள்வியை வெகு சாதாரணமாக அவனால் கடந்து போக முடிந்தது. “அதெல்லாம் நடக்குறப்போ பார்த்துக்கலாம். மக்க மனுசாளை தெரிஞ்சு என்ன ஆகப்போகுது. காசு பணம் இருந்தா போதும் மச்சி. எல்லாம் தானா நடக்கும் ”

ஆகக் கடைசியில் எல்லாம் இங்கேதான் வந்து முடிய வேண்டுமா? பணம்தான் வாழ்க்கையில் பிரதானம் என்பது மட்டும்தான் உண்மையா? அன்பு நேசம் சக மனிதன் மீதான அக்கறை என்பதாகச் சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் காலத்தில் கரைந்து போய் விட்டனவா? உண்மையில் வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன என்பதான கேள்விகளை நான் எனக்குள் மீண்டும் ஒரு தரம் கேட்டுப் பார்க்கிறேன்.

வாழ்க்கை மீதான என் கண்ணோட்டத்தை மொத்தமாக மாற்றியவர் எஸ்.ராமகிருஷ்ணன். நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்ததில் அவருடைய எழுத்துக்குப் பெரும்பங்கு உண்டு. ஏன் நம்மால் இப்படி எல்லாம் இருக்க முடியாது என்கிற கேள்வியை எனக்குள் விதைத்து இதுமாதிரியான ஒரு வாழ்க்கையைத்தான் நாம் வாழ வேண்டும் எனக் கற்றுக் கொடுத்தவரும் அவரே. நான் வாசித்த எஸ்ராவின் முதல் எழுத்து விகடனில் வெளியான துணையெழுத்து தான். அப்போது நான் கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தேன். இப்போதும் அந்த பத்தி மிக நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அன்பின் விதைகள்.

எஸ்ரா வசிக்கும் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளிக்கூட காவல்காரர் ஒருநாள் ஐம்பது ரூபாய்க்கு மணியார்டர் எடுத்துக் கொண்டு வந்திருப்பார். யாருக்குப் பணம் அனுப்புகிறீர்கள் என்று விசாரிக்கும் எஸ்ராவுக்கு அவர் பத்திரிக்கையில் வெளியாகி இருக்கும் உதவி தேவை எனும் விளம்பரம் ஒன்றைக் காட்டுவார். “நம்மள மாதிரி மனுசங்க உதவுவாங்கன்னுதான சார் விளம்பரம் கொடுக்குறாங்க” என்கிற அவரது வார்த்தைகள் எஸ்ராவுக்குள் ஏன் இது ந்மக்குத் தோன்றவில்லை என்கிற தீராத குற்றவுணர்வை உண்டாக்கி விடும்.

அதற்கு சில நாட்களுக்குப் பின்பு அந்த காவலரைத் தேடி ஒரு பெண்ணும் சிறுமியும் கிளம்பி வருவார்கள். அது அந்த உதவி கேட்ட மனிதரின் மனைவியும் பிள்ளையும். அவர் நல்லபடியாக சுகமாகி இருக்க அவருக்கு உதவிய அத்தனை பேருக்கும் நன்றி சொல்வதற்காக அவர்கள் கிளம்பி வந்து இருப்பார்கள். இந்த மாதிரியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதாக எஸ்ரா வியந்து சொல்வதோடு அந்த பத்தி முடியும்.

இதனைப் படித்து முடித்து விட்டு இரண்டு நாட்கள் அழுதபடி இருந்தேன். என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிப்போட்ட தருணம் அது. ஏன் இது மாதிரி எல்லாம் எனக்குத் தோன்ற வில்லை, இதுநாள் வரை நான் என்ன மாதிரியாக வாழ்ந்திருக்கிறேன் என்றெல்லாம் அந்த எழுத்துகள் என்னை சுயவிசாரணை செய்து கொள்ள வைத்தது. வாழ்க்கையில் நாம் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதான எண்ணங்களை எல்லாம் எனக்குள் விதைத்ததும் அந்தக்காலம்தான். பணத்தின் பின்னால் ஓடுவதைக் காட்டிலும் அன்பு செய்யும் மனிதர்களை சம்பாதித்தால் போதும் எனத் தீர்மானம் செய்து கொண்டேன்.

அந்த எழுத்துகள் உண்மையோ பொய்யோ, அது மாதிரியாக மனிதர்கள் சாத்தியமா இல்லையா என்பதை மீறி என்னை மிகவும் பாதித்தது துணையெழுத்தின் அந்தக் கட்டுரை. ஆனால், அன்பின் விதைகளில் பார்த்தது போல, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சக மனிதனுக்கு உதவி செய்தால் போதும் என்கிற நல்ல மனம் கொண்ட மனிதர்களை என் வாழ்வில் நான் சந்திப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

டிசம்பர் 2006. நான் கொங்கு கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த நேரம். வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஹாஸ்டல் வாழ்க்கை. கல்லூரி நகரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி இருந்தது. ஏதேனும் அவசரத் தேவைக்கு டவுனுக்கு போக வேண்டுமானால் நேரத்துக்கு பஸ் வசதி கூட கிடையாது. கேன்டீன் சாப்பாடும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எல்லாவற்றையும் உத்தேசித்து மதுரையில் இருந்து பைக்கை கொண்டு போய் ஹாஸ்டலில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

வெகு தூரத்துக்கு வண்டியில் செல்வது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனவே மதுரையில் இருந்து ஈரோட்டுக்கு வண்டியை ஓட்டிப்போக முடிவு செய்தேன். அன்று கிறிஸ்துமஸ் தினம். லீவுக்கு மதுரையில் இருந்தேன். பைக்கை மத்தியான ட்ரைனுக்கு புக் செய்து விட்டதாகவும், அதே ட்ரைனில் நானும் போக இருப்பதாகவும் வீட்டில் சொல்லி விட்டுக் கிளம்பினேன். வாடிப்பட்டி வரும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நெடுஞ்சாலை வெறிச்சோடிக் கிடந்தது. வெயிலும் அவ்வளவாக இல்லை. எனக்கு பிடித்த பாடல்களை ஹம் செய்தவாறே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன்.

திடீரென எங்கிருந்து வந்ததென தெரியாமலே ஒரு கார் சாலையின் வளைவில் இருந்து வெளிப்பட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிரேக் போட்டால் பின்னால் வரும் பஸ்காரன் தட்டி விடக் கூடும். சட்டென வண்டியை சாலையை விட்டு இறக்கினேன். இறங்கின இடம் மணல் பிரதேசம் என்பதால் வாரி விட்டது. என் கால் முட்டி போய் தார் சாலையின் முனையில் மோதியது மட்டுமே தெரிந்தது. அடுத்து என்ன நடந்தது என்று என் நினைவில் இல்லை.

எனக்கு நினைவு திரும்பிய போது என் முகத்தின் வெகு அருகே குனிந்து நின்ற மனிதர் ஒருவரைப் பார்த்தேன். வயதானவர். "தம்பி.. தம்பி.. எந்திரிப்பா.." என அவர் தான் என்னை எழுப்பிக் கொண்டிருந்தார். அவர் கண்களில் கலவரத்தை மீறி ஒரு கருணை இருந்தது. நான் எழுந்து கொள்ள முயன்றேன். முடியவில்லை. வலது காலை நகர்த்த முடியாத அளவுக்கு வலி. அவர் என் கைகளை தனது தோளின் மீது போட்டுக் கொண்டு என்னை மெதுவாக எழுப்பினார். வயல் வேலை பார்ப்பவர் போல. அவருடைய உடையில் இருந்த சேறு என் மீதும் அப்பிக் கொண்டது. எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தேன். என் வண்டி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டது இருந்தது.

"வண்டிக்கு ஒண்ணும் பிரச்சினை இல்ல.. அப்படி ஓரமா நிக்கட்டும். விடுங்க தம்பி.. ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போயிருச்சுன்னு சந்தோஷப்படுங்க" பேசியவாறே நடந்தார். அருகில் இருந்த சரிவில் பத்தடி தூரம் நடந்து அவருடைய வீட்டை அடைந்தோம். காரை வீடு. எளிமையாக இருந்தது. அடிபட்டு வந்த என்னைப் பார்த்து அவருடைய மனைவி பதைபதைத்துப் போனார். என்னைத் திண்ணையில் அமரவைத்து காலை சுத்தம் செய்தார். முட்டியில் பெரிய அளவில் வெட்டுக்காயம் இருந்தது. கண்டிப்பாகத் தையல் போட வேண்டி இருக்கும். வேறு எங்கும் பெரிய அளவில் அடிபடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார். "கொஞ்சம் பொறுத்துக்கோ தம்பி.. என் மகன் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.. பிறகு டாக்டர்கிட்ட போகலாம்.." அந்த அம்மா சொன்னார்.

அவருடைய மகன் வந்ததும் விஷயத்தை சொல்லி என்னுடன் அனுப்பி வைத்தனர். கொடைரோட்டுக்கு பைக்கிலேயே போய் டாக்டரைப் பார்த்து தையல் போட்டுக் கொண்டேன். திண்டுக்கல்லில் இருக்கும் என்னுடைய நண்பனுக்கு போன் வரச் சொல்லி விட்டு, நான் பத்திரமாக போக முடியுமா என்பதை உறுதி செய்து கொண்டு அவர்களின் மகன் கிளம்பிப் போனார். அதன் பிறகும் தையல் போட்ட காலுடன் ஈரோடு வரை வண்டி ஓட்டிப் போனது எனது திமிர்.

என் கால் சரியாக கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆனது. கல்லூரியிலேயே இருந்தேன். ஊருக்குப் போகவில்லை. கால் சரியாகி ஊருக்குப் போன பிறகுதான் அம்மாவிடம் கூட உண்மையைச் சொன்னேன். அம்மா அவர்களைப் பார்க்க வேண்டும் என்றார். அழைத்துக் கொண்டு போனேன். அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டார்கள். நான் யார் இவர்களுக்கு? முன்பின் தெரியாத ஒருவன் மேல் எதற்காக இவர்கள் இத்தனை அக்கறை காட்ட வேண்டும்? என்னுடைய நன்றியைத் தெரிவித்தபோது அந்தப் பெரியவர் சொன்னார்.. "கண்ணுக்கு முன்னாடி ஒரு உசிரு கஷ்டப்படுரப்ப, ஒதவ முடியாட்டி நாம மனுஷனா பொறந்ததுக்கு அர்த்தமே இல்ல தம்பி.." அன்பின் விதைகளில் நான் வாசித்த மனிதர்கள் என் முன்பாக உயிருடன் அங்கே நின்றிருந்தார்கள்.

வெகு சமீபமாகத் தான் சந்தியாவை எனக்குத் தெரியும். சிவகங்கை தாண்டி இருக்கும் பொறியியல் கல்லூரி ஒன்றில் வேலை பார்க்கிறார். அப்பா கிடையாது. அவருடைய மாத வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் நடுத்தரக் குடும்பம். இருந்தும், சாயங்காலம் தோறும் ட்யூசன் எடுத்துக் கிடைக்கும் பணத்தை, மாதமானவுடன் அருகிலிருக்கும் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் காலை நேர வாக்கிங் வரும் மனிதர்களுக்கு அவரை நன்கு அடையாளம் தெரிந்திருக்கலாம். அந்தப் பகுதியில் பறந்து திரியும் காக்கைகளுக்கு வேண்டுமட்டும் பன் வாங்கி பிய்த்துப் போடுவதை தினமும் தனது கடமையென செய்து கொண்டிருக்கும் அந்த மனிதர் பற்றி என்ன சொல்வது? ஹைதராபாத் பயணத்தில் பர்சைத் தொலைத்து நின்றபோது என்ன ஏதென்று விசாரித்து பணம் கொடுத்து உதவிய பெயர் தெரியாத முதியவர், மதுரையின் சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பிறழ்ந்தோரைப் பாதுகாப்பதே தன் வாழ்வின் கடமையெனச் சொல்லும் பெயர் சொல்ல விரும்பாத நண்பர், வேலை விட்டு வந்த பின்பாக சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் தன் நேரங்களை செலவிடும் குமார் எனக் காலம் தொடர்ச்சியாக சில அற்புதமான மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்தபடியே இருக்கிறது.

லைப்பூவில் எழுதத் தொடங்கியபின்பு அறிமுகம் ஆன நண்பர் அவர். மலேசியாவில் இருக்கிறார். இங்கிருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் நண்பா எனச் சொல்லி மாதாமாதம் இரண்டாயிரம் ரூபாய் எனக்கு அனுப்பி வைத்தபடி இருக்கிறார். வெகு நாட்களுக்குப் பின்பு ஒருநாள் ஏதோ தோன்ற அவரிடம் கேட்டேன்.

“மலேசியாவுல என்ன வேலை பாக்குறீங்க தல..”

“கூலி வேலைதான் நண்பா. தினமும் பாக்குற வேலைக்குத் தகுந்தா மாதிரிச் சம்பளம்...”

நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது என்று சொல்லுவார்கள். எனக்குப் பொதுவாக அதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால், இது மாதிரியான மனிதர்களைப் பார்க்கும்போது, அது உண்மையாக இருக்க வேண்டும் என்றே ஆசையாய் இருக்கிறது.

19 comments:

மேவி .. said...

:))))

சரவணகுமரன் said...

அருமை...

உங்களுக்கு எஸ்ராவின் ‘அன்பின் விதைகள்’ போல, பலருக்கு உங்களுடைய இப்பதிவு இருக்கும் என்று நம்புகிறேன்.

King Viswa said...

இன்னமும் கூட பல சம்பவங்களை சொல்ல இயலும்: சோளிங்கர் மலையில் இருக்கும் மாருதிக்களுக்காக (சாதாரண மொழியில் குரங்குகள்) ஒருவர் தினமும் செலவு செய்து (தனியாக வேலைக்கு ஆள் வைத்து) இரண்டு வேலைகளும் பன் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை கொடுத்து உதவுகிறார்.

சென்னை எழும்பூரில் இருக்கும் ஒரு டிராவல்ஸ் கம்பெனி நிறுவனர் ஒவ்வொரு நாளும் எங்கேனும் அன்னதானம் செய்கிறார். வருடத்தின் அனைத்து நாட்களிலும் அவரது அன்னதானம் தொடர்கிறது

சிவகாசி ராஜபாளையம் அருகே ஒரு சகோதரி திருமணமே செய்துக்கொள்ளாமல் அந்த ஊரில் இருக்கும் அனைத்து ஆதரவற்ற நாய்களுக்கும் சேவை செய்து வருகிறார்.

இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால்தான் மழை பெய்கிறது என்று சொல்வார்களே, அது நூற்றுக்கு நூறு உண்மைதானே?

வி.பாலகுமார் said...

நெகிழ்வான பதிவு... வாழ்த்துகள் கார்த்தி.

சில பகுதிகளை ஏற்கனவே எழுதியிருக்கிறீர்கள், மீண்டும் வாசித்தாலும் சிலிர்த்தது.

”அன்பின் விதைகள்” பகுதியை துனையெழுத்து புத்தகத்தில் வாசித்த போது, உதவி செய்தவர் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து நன்றி சொல்வதெல்லாம் எழுத்து சுவாரஸ்யத்திற்காக எழுதப்பட்டது என்று தான் நினைத்தேன்.
//அன்பின் விதைகளில் நான் வாசித்த மனிதர்கள் என் முன்பாக உயிருடன் அங்கே நின்றிருந்தார்கள்.//
இப்போது உண்மை புரிகிறது.

மழை பெருகி மனிதம் செழிக்கட்டும் :)

இராஜராஜேஸ்வரி said...

அன்பின் விதைகளில் நான் வாசித்த மனிதர்கள் என் முன்பாக உயிருடன் அங்கே நின்றிருந்தார்கள்.

மணமும் அழகும் கொண்ட உதிரிப்பூக்களால் தொடுக்கப்பட்ட அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

nigalkalathil siva said...

நெகிழ்ந்து எழுதி இருக்கீங்க., க.பா

படிக்கிறவங்க மனசை நிச்சயம் தொடும். அவங்களுக்குள்ளேயும் தோண வைக்கும்..

kashyapan said...

கார்த்திகை பாண்டியன் அவர்களே! " Isle of March" என்ற நூல் ஹக்ஸ்லி எழுதியது. அவர்கூறுவார்." பசியிலிருக்கும் பிச்சைக்காரனுக்கு உணவளித்தால் அளித்தவரை 'தர்மவான்" என்று புகழுகிறோம்.சக மனிதனுக்கு உதவுவதால் தான் அவன் மனிதனாகிறான்.இல்லையானால் அவனுக்கு மனிதன் என்ற பெயரே கிடையாது' என்பார்.. kashyapan.

மோகன் குமார் said...

மாதா மாதம் பணம் அனுப்பும் நண்பர் பற்றிய பத்தி மனதை என்னவோ செய்தது.
**
பைக் அனுபவம் நெகிழ்ச்சி. நீண்ட தூர பயணத்துக்கு பைக்கில் போக கூடாது என்பதை உணர்த்தவும் செய்கிறது இல்லையா?
***
முதல் விஷயத்தில் உங்கள் நண்பரும் "அந்த வீட்டுக்கு குடி வந்து விட்டனரா?" என்கிறாரே. புதிதாக வந்தவர்கள்
பழக சற்று நாள் ஆக தானே செய்யும். (நகரத்தில் பக்கத்து வீட்டு காரர்கள் பழகுவது சற்று குறைவு தான்; இருந்தாலும் நீங்கள் சொன்ன உதாரணத்தில் லாஜிக் சற்று இடித்ததால் சொன்னேன்)

kashyapan said...

கார்த்திகைப்பாண்டியன் அவர்களே! அந்தப் புத்தகத்தின் பெயர் "Isles of Gaza" தவறாக எழுதி விட்டேன். நாற்பது வருடமாவது ஆகியிருக்கும்படித்து.மன்னியுங்கள்---காஸ்யபன்

ரவிச்சந்திரன் said...

நெகிழ்ச்சி !!!

புதுகை.அப்துல்லா said...

நன்று.

Ramani said...

தங்கள் பதிவு கூட நிச்சயம் பலரின்
கண்களைத் திறக்கும்
பயனுள்ள அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

உண்மை தான்.. நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது...

சிநேகிதன் அக்பர் said...

அருமை. நெகிழ்ச்சியான பகிர்வு.

bandhu said...

//உங்களுக்கு எஸ்ராவின் ‘அன்பின் விதைகள்’ போல, பலருக்கு உங்களுடைய இப்பதிவு இருக்கும் என்று நம்புகிறேன்.//
மிகச்சரி.. என் மகள் படிக்கும் பள்ளியில் ஒரு வருடம் Power of Random Acts of Kindness என்று இதை வலியுரித்தினார்கள்..

Rathnavel Natarajan said...

நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது என்று சொல்லுவார்கள். எனக்குப் பொதுவாக அதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. ஆனால், இது மாதிரியான மனிதர்களைப் பார்க்கும்போது, அது உண்மையாக இருக்க வேண்டும் என்றே ஆசையாய் இருக்கிறது.

நிஜம் தான். அருமையான பதிவு. வாழ்த்துகள்.

sri said...

இது மாதிரியான மனிதர்களைப் பார்க்கும்போது, அது உண்மையாக இருக்க வேண்டும் என்றே ஆசையாய் இருக்கிறது.

சித்திரவீதிக்காரன் said...

மிகவும் நெகிழவைத்த பதிவு. எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள் என்னுடைய வாழ்விலும் இதுபோன்ற பாதிப்புகளை நிறைய ஏற்படுத்தி இருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

manjoorraja said...

எஸ்ராவின் அந்த கட்டுரையை படித்த போது நானும் உங்களை போலவே சிந்தித்தேன் என்பது உண்மையே.

எவ்வளவோ நல்லவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கின்றனர்.