March 12, 2012

பெண்மை போற்றுவோம் - "என் விகடன்" பதிவு

(மகளிர் தினத்தை ஒட்டி போன வாரம் ஆனந்த விகடன் - என் விகடன் மதுரை பதிப்பில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்..)

நான் எதற்கும் அஞ்சவில்லை. மாறாக, இதற்கெனவே நான் பிறந்ததாக உணர்கிறேன் - ஜோன் ஆஃப் ஆர்க்

என் வாழ்க்கை பெண்களால் ஆனது. சிறு வயது முதல் இன்று வரை பெண்களுடனேயே பெரும்பாலும் வளர்ந்துள்ளேன். பெண்களே எப்போதும் எனக்குப் பிடித்தமானவர்களாகவும் நெருக்கமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஏதோ ஒரு பெண்ணின் பாதிப்பு என்னுடனே இருந்து வருகிறது. நான் என்று மட்டுமல்ல, நம் எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் பெரிய பாதிப்புகளை விட்டுச் செல்கிறார்கள். கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்ட அம்மா, வறுமையில் எனக்கான ஸ்கூல் ஃபீஸைக் கட்டிய மாட் மிஸ், எப்போதும் தோள் சாய்ந்து அழும் பால்ய சினேகிதி மீனாட்சி, வாழக் கற்றுத்தந்த தோழி சரோ.. எத்தனை எத்தனை பெண்கள். நான் இன்றிருக்கும் நானாய் இருப்பதில் இவர்கள் எல்லாருக்குமே பங்குண்டு.

உடைந்து போகும் தருணங்களில் எல்லாம் நான் சாய்ந்து கொள்ளும் தோள்களாகப் பெண்களே இருந்திருக்கிறார்கள். அது மாதிரியான சமயங்களில் நம்பிக்கை எனும் வார்த்தைக்கு அர்த்தமாக நான் அடையாளம் காணும் இரண்டு பெண்களைப் பற்றி இங்கே பேச ஆசைப்படுகிறேன். அதில் முதலாவதாக என்னுடைய மிக நெருங்கிய தோழியான சக்தி.

கடலூர் தான் சக்தியின் சொந்த ஊர். அவளை முதன்முதலில் அவள் அப்பா இறந்த வீட்டில்தான் பார்த்தேன். மின்சார வாரியத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சக்தியின் அப்பா திடீரென ஒரு இரவில் நெஞ்சு வலியில் இறந்து போனார். இரண்டு பெண் பிள்ளைகளில் சக்திதான் இளையவள். தெரிந்தவர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பக் கூட ஆளில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் குடும்பமே தவித்த நிலையில் வீட்டின் பொறுப்பை சக்தி ஏற்றுக் கொண்டாள். “எங்க அப்பாவுக்கு பையன் இல்லையேன்னு என்னைக்கும் குறை இருந்ததே இல்லை. நாந்தான் அவருக்கு பொண்ணு பையன் எல்லாமே..” நண்பர்களை உதவிக்கு அழைத்து நிலைமையைச் சொன்னாள். அந்த சங்கடமான நேரத்தில்தான் மற்றொரு நண்பர் மூலம் எனக்கும் அவளுக்குமான அறிமுகம் நடந்தது.

உறவினர்களுக்கு சொல்லியனுப்பவதில் ஆரம்பித்து கடைசி காரியம் வரை எல்லாவற்றையும் முன்னின்று அவளே செய்து முடித்தாள். எல்லாரையும் எதிர்த்துத் தன் அப்பாவுக்கு தானே கொள்ளி வைக்கும் தைரியமும் அவளுக்கு இருந்தது. காரியம் முடிந்து வந்தபோது உறவினர் யாரையும் காணவில்லை. ஆண்பிள்ளை இல்லாத வீட்டில் பொறுப்பு தங்கள் மீது வந்து விடுமோ என்கிற பயம். கலங்கி நின்ற அம்மாவுக்கு அப்போதும் ஆறுதலாக இருந்தது சக்திதான். அலைந்து திரிந்து அப்பாவின் வேலையை அக்காவுக்கு வாங்கிக் கொடுத்தாள். அடுத்ததாக லோன் வாங்கிக் கட்டிய வீட்டின் மீதான கடன் அவர்களைத் துரத்தியது. சக்தி பயப்படவில்லை. தமிழ்நாட்டின் தலைநகருக்கு வண்டி ஏறினாள். ஆறு மாத காலம் நாயாய் அலைந்து திரிய பேங்க் ஒன்றில் வேலை கிடைத்தது. கடுமையான உழைப்பு. இரண்டே வருடத்தில் வீட்டின் மீதான கடனை அடைத்தவள் அக்காவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தாள்.

இன்றைக்கு சக்தி சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி அம்மாவோடு நிம்மதியாக வாழ்கிறாள். புதுவீடு புகும் நிகழ்வன்று சக்தியின் அம்மா அழுதபடிக்கு சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது. “அவர் போனதோட என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன். ரொம்பப் பெருமையா இருக்குடி..”

எதிர்பாராத நிமிடமொன்றில் தோன்றும் தடைகளைப் புன்னகையோடு கடந்து செல்ல எனக்குக் கற்றுக்கொடுத்தவள் சக்திதான். இடைப்பட்ட காலத்தில் அவளுடைய எல்லா சுகதுக்கங்களிலும் உடனிருக்கும் ஆகச்சிறந்த தோழனாக நான் மாறியிருந்தேன். எப்போதும் அமைதியாக இருக்கும் சக்தி என்னோடு பேசும் நேரங்களில் மட்டும் இலகுவாக மனம் விட்டு சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த தோழி ஒருவர் அவளிடம் கேட்டிருக்கிறார்.

“ஏம்ப்பா.. அவந்தான் உன்னை நல்லாப் புரிஞ்சுக்கிட்டவனா இருக்கான்ல. அவனோட பேசும்போதுதான் நீயும் சந்தோசமா இருக்க. அப்புறம் ஏன் அவனக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது..?”

ஒரு நிமிடம் யோசித்தவள் மெதுவாகப் புன்னகைத்தபடி சொல்லி இருக்கிறாள்.

“எனக்கு எங்கப்பாவ ரொம்பப் பிடிக்கும். அதுக்காக நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? அவனும் எனக்கு அப்பா மாதிரித்தான்..”

ஒரு மனிதனுக்கு இதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்? நட்பு என்கிற இடத்தில் இருக்கும் ஒருவனைத் தன் அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும் அந்தப் பெண்ணின் அன்புக்கு கைமாறாக வாழ்வுக்கும் அவள் தோழனாய் இருப்பதைவிட நான் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?

சக்தியைப் போலவே நான் பார்த்து ஆச்சரியம் கொள்ளும் இன்னொரு மனுஷி ரம்யா அக்கா. இரண்டு வருடங்களுக்கு முன்பாக இணைய எழுத்துகளின் மூலமாக எனக்கு அறிமுகம் ஆனவர். விதி தன் மீது வீசிய கேலிகளை எல்லாம் நம்பிக்கை என்னும் ஆயுதம் கொண்டு சிரித்தபடி எதிர்கொண்ட அற்புதமானதொரு ஜீவன்.

அவருக்குக்கு சொந்த ஊர் ஹைதராபாத். படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை விடுமுறைக்கு உறவினர்கள் வீட்டுக்கு பாம்பே போயிருக்கிறார். அங்கே காபி போடலாமென்று பம்ப் ஸ்டவ்வைப் பற்ற வைக்கப் போய் அது வெடித்து உடம்பெல்லாம் தீக்காயம். முகம் மொத்தமாகக் கருகி விட்டது. நாற்பத்து ஆறு நாட்கள் மருத்துவமனையில் நரக வேதனைக்குப் பிறகு அக்கா இறந்து விட்டதாக அறிவித்து போஸ்ட்மார்ட்டத்துக்குக் கொண்டு போய் விட்டார்கள். ஆனால் அங்கே யாரோ ஒரு புண்ணியவான் முழங்காலில் லேசாக துடிப்பு இருப்பதைப் பார்த்துச் சொல்ல மறுபடி வார்டுக்குக் கொண்டு வந்து பிழைக்க வைத்தார்களாம். என்னுடைய போஸ்ட்மார்ட்டம் பேட்ஜ் நம்பர் பதிமூணு தெரியுமா என அடிக்கடி ரம்யா சிரித்தபடி சொல்வது உண்டு.

உயிர் பிழைத்தாயிற்று. ஆனால் இனி? தன்னால் நார்மலான வாழ்க்கை வாழ முடியாது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முகத்தில் சர்ஜரி செய்ய வேண்டும். அதற்கு எக்கச்சக்கமாகப் பணம் வேண்டும். உறவினர்களின் உதவியை வேண்டாம் என மறுதலித்து விட்டு ரம்யாக்கா சென்னை வந்து சேர்ந்தார். ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் புரோகிராமராக வேலை. கொஞ்சம் கொஞ்சமாக உழைப்பால் உயர்ந்து இன்றைக்கு அந்தக் கம்பெனிக்கு ரம்யாதான் ப்ராஜெக்ட் மேனேஜர். தன் மீது அக்கறை கொண்ட கலைச்செல்வி, சுரேஷ் ஆகியோரோடு ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். “நாம சந்தோசமா இருக்கணும். நம்மளச் சுத்தி இருக்குற மக்கள சந்தோசமா வச்சுக்கணும். முடிஞ்ச அளவுக்கு இல்லாதவங்களுக்கு உதவணும். போதாதா” என்கிற ரம்யா அக்காவின் எதிர்காலக் கனவு “ஆதரவற்ற மக்களுக்காக ஒரு இல்லம் அமைக்க வேண்டும்..”

எழுத்தின் மூலமாக மட்டுமே அறிந்த ரம்யாக்காவை சந்திக்க வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசை. அவரைச் சந்திப்பதற்காக சென்னை போயிருந்தேன். ஆனால் அவர் வீட்டுக்குள் நுழையும்போது எனக்கு அப்படி ஒரு காய்ச்சல். இரண்டு நாட்களாகக் கண்களைத் திறக்கக் கூட முடியாமல் படுத்துக் கிடந்தேன். அந்த இரண்டு நாட்களும் என்னருகிலேயே இருந்து என் அம்மா இருந்திருந்தால் எப்படி என்னைப் பார்த்துக் கொண்டிருப்பாரோ அப்படிப் பார்த்துக் கொண்டார் அக்கா. ஒரு கணத்தில் அந்த அன்பின் வேகம் தாங்காமல் பொல பொலவென அழுதுவிட்டேன். ஆதரவாய்த் தோள் சாய்த்துக் கொண்டவர் அன்பாகச் சொனார்..”இதுக்கு எல்லாமா அழுவாங்க.. அக்கா அக்கான்னு வாய் நிறையக் கூப்படுறல.. உனக்காக இது கூடச் செய்யலைன்னா நான் என்னப்பா மனுஷி..” அந்த அன்புதான் ரம்யாக்கா. ஒவ்வொரு பெண்ணுக்கு உள்ளும் தாய்மை உண்டு என்பதை நான் உணர்ந்த கணம் அது. அன்றைய தினத்தையும் அவர் அன்பையும் என்னால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாது.

எல்லாக் கணங்களிலும் அன்பு நம்பிக்கை என ஏதோவொரு பெண் நம் நினைவுகளில் இடறிப் போகிறார். சமூகம் தனக்கான இடத்தை வழங்க மறுத்தாலும் தன் தேடலைத் தொடர்ந்தபடி உற்சாகமாகத் தன்னிருப்பை உறுதி செய்து கொள்ள முனையும் பெண்களின் போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றங்களைப் பெண்கள் உணரத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில் பாரதியின் வரிகளை நினைவு கூறுவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். “மங்கையராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா..” வாழ்க்கையின் எல்லாமுமாக இருக்கும் தன்னம்பிக்கைப் பெண்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

7 comments:

ஸ்ரீ said...

வாழ்த்துகள்.:-))))))

sri said...

“எனக்கு எங்கப்பாவ ரொம்பப் பிடிக்கும். அதுக்காக நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? அவனும் எனக்கு அப்பா மாதிரித்தான்..”

ஒரு மனிதனுக்கு இதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்? நட்பு என்கிற இடத்தில் இருக்கும் ஒருவனைத் தன் அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும் அந்தப் பெண்ணின் அன்புக்கு கைமாறாக வாழ்வுக்கும் அவள் தோழனாய் இருப்பதைவிட நான் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?

குமரை நிலாவன் said...

வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

பத்மா said...

class a irukku kaa paa

SRH said...

அருமையான பதிவு...

கவியாழி கண்ணதாசன் said...

எதிர்பாராத நிமிடமொன்றில் தோன்றும் தடைகளைப் புன்னகையோடு கடந்து செல்ல எனக்குக் கற்றுக்கொடுத்தவள் சக்திதான். //சக்திக்கு வாழ்த்துக்கள்.சக்தியை அடையாளம் காட்டிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்