May 17, 2012

சொற்களின் நீரூற்றும் நிறமற்றப் பச்சோந்தியும்

(உயிர்மொழி ஏப்ரல் இதழில் வெளியான கவிதை)

இருளென்றும் வெளிச்சமென்றும்
பிரித்தறிய முடியாப் பொழுதுகளாலான
அடர்கானகத்தின் நடுவே
மலையடிவாரத்தில் தான் தேடிவந்த
சொற்களின் நீரூற்றைக்
கண்டுபிடித்தான் மந்திரன்
மட்டற்ற மகிழ்ச்சியுடன்
அதனுட் புக முற்பட்டவனைத்
தடுத்து நிறுத்திய மாயக்குரல்
முன்புதிரைத் தீர்த்தபின்னரே
நீரூற்றுக்குள் நுழையமுடியுமென எடுத்துரைக்க
மந்திரனின் கண்முன் விரிந்தது
அரூபத்திரையில் பொன்னிற எண்களினாலான புதிர்
பின் தொடர்ந்த தனிமையைப் பச்சோந்தி என உருமாற்றி
தோளின் மீது இருத்தியவனாக புதிருக்குள் நுழைந்தான்
பூஜ்யம் முதல் ஒன்பது வரையிலான எண்களும்
ஆயிரம் கட்டங்களும் கொண்ட புதிர்
காலத்தோடு தன்னிருப்பை மாற்றிக் கொண்டேயிருக்க
காலவெளியில் மந்திரனும் சுழன்றபடியே
எண்களைக் கட்டங்களுக்குள் அடக்கவியலாது
மூச்சுத்திணறிக் கொண்டிருந்தான்
புதிருக்குள் தொலைந்து போயிருந்த
பச்சோந்தியின் உடம்பிலிருந்து நிறங்கள் உதிரலாயின
வனமெங்கும் இருளப்பிய கிரகணப் பொழுதில்
புதிரத்தனையும் பொருத்தி முடித்ததாக
நம்பியவன் கண்கள் வலது மூலையின் நிரப்பப்படாத
இரு கட்டங்களில் இடறிவிழுந்தன
பூர்ணசமர்ப்பணமாய்
வாளெடுத்து தன் கழுத்தை
வெட்டியெறிகையில்
துண்டாகிய தலை பூஜ்யம்
தனியே கிடந்த உடல் ஒன்று
தீர்ந்துபோனது புதிர்
நிறமற்ற பச்சோந்தியின்
கண்ணீர்த்துளிகள்
காற்றில் விசித்தபடி
தனித்தலைகின்றன

2 comments:

MaduraiGovindaraj said...

நான் இருமுறை வாசித்தேன் ஒன்று புரியவில்லை இந்த கவிதை வாசிக்கும் அளவு மேருகேறவில்லையோ தெரியவில்லை?

சித்திரவீதிக்காரன் said...

சொற்களின் நீருற்றும் நிறமற்றப் பச்சோந்தியும்' கவிதை முன்பு படித்த பல கதைகளை ஞாபகப் படுத்தியது. பகிர்விற்கு நன்றி.