August 5, 2013

விட்டு விடுதலையாகி

கொஞ்ச நாட்களாகவே மனம் அமைதியிழந்து தவித்து வந்தது. வீடு விட்டால் கல்லூரி, கல்லூரி விட்டால் வீடு, ஆராய்ச்சிப் படிப்புக் குழப்பங்கள் என செக்கு மாடாய் மாறிப் போனதான உணர்வு. மே மாத நடுவில் வந்து சேர்ந்த நகுலனின் வருகை சற்றே நெஞ்சை ஆற்றுப்படுத்தினாலும் வழக்கமான நாட்களிலிருந்து தப்பித்து வெளிக்கிளம்பும் எண்ணம் உள்ளிருந்து உறுத்தியபடியேதான் இருந்தது. 

மனதில் தோன்றியதை துணைவியாரிடம் சொன்னேன். தனக்குப் பிடிக்காதபோதும் எனக்காய் எல்லாவற்றையும் அனுசரித்துப் போகும் ஜீவன் இதற்கும் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆனால் ஒரேயொரு விண்ணப்பம் மட்டும் வைத்தாள். எக்காரணம் கொண்டும் இரவு நேரங்களில் பேருந்து நிலையம், மண்டபம் போன்ற பொது இடங்களில் தங்காமல் பத்திரமாய் இருக்க வேண்டும் என்பதுதான் அது. சரி என நன்றி கூறிக் கிளம்பினேன்.

நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது இலக்கில்லாமல் சுற்றி வரப் போகிறேன் என்பதைப் பகிர்ந்து கொண்டேன். உடன் அவர் கேட்டது..

“என்ன.. எஸ்ராவா.. தேசாந்திரியா?”

கண்டிப்பாக இல்லை. எஸ்ரா, கோணங்கி போன்றோரின் வாழ்க்கை மீது பொறாமை கலந்த காதல் உண்டென்றாலும்  ஒருபோதும் அவர்களைப் போல அலைந்து திரிவது எனக்குச் சாத்தியப்படாது. எங்கும் குட்டியைத் தூக்கிச் சுமக்கும் அழகர்மலை குரங்கைப் போல வீட்டின் நினைவுகளையும் நெருங்கின மனிதர்களையும் எப்போதும் சுமந்து திரிபவன் நான்.  இது என்னால் இயன்ற ஒரு சின்ன விடுபடல். அன்றாட வாழ்வில் தொலைந்து போகாமல் என்னை நான் தக்க வைத்துக் கொள்ள செய்திடும் சிறு முயற்சி. அவ்வளவே.

போவதென்று முடிவான பின்பு எங்கே போவது எனும் கேள்வி வந்தது. எங்கிருந்து தொடங்குவது என நிறைய யோசித்த பின்பு நான் பெரிதும் வெறுக்கும் நகரமான சென்னைக்கே முதலில் செல்வது எனத் தீர்மானித்தேன். கல்லூரி காலத்தோடு காணாமல் போன ஒரு சில நண்பர்களைப் பார்க்கலாம் என்பதோடு சென்னையின் மால்களில் சுற்ற வேண்டும் என்பதும் அதற்கு ஒரு காரணம். யாரும் உள்நுழையாத ஆடம்பரக் கடைகளுக்குள் எவரேனும் வர  மாட்டார்களா என மிருகத்தின் பசியை கண்களுள் தேக்கி நிற்கும் மால்களிலுள்ள கடைகளின் சிப்பந்திகளைப் பற்றிய ஒரு நடுக்கம் எனக்குள் உண்டு. அவர்களைப் பற்றிய கதை ஒன்றை எழுதும் எண்ணமும் உண்டு. ஆகவே சென்னைதான் ஆரம்பப்புள்ளி என முடிவானது.

சென்னை வந்து இறங்கியபின்பு நான் சந்திக்க விரும்பிய கல்லூரித் தோழனுக்கு அழைத்தேன். அது ஒரு சனிக்கிழமையாக இருக்க தான் சொந்த ஊருக்குப் போய் விட்டதாகச் சொன்னவன் சொல்லாமல் கொள்ளாமல் வந்ததற்காகக் கடிந்து கொண்டான். மற்றவர்களும் ஊரில் இருக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பதாய் அவன் சொல்ல நண்பர்களைச் சந்திப்பது இனி சாத்தியப்படாது என்று தெரிந்தது. எந்த மாலுக்குச் செல்லலாம் என்கிற என் கேள்விக்கு புதிதாய்த் திறந்திருக்கும் ஃபோரம் மாலுக்குப் போகலாம் எனச் சொன்னான். நாள் முழுதும் அங்கே கழித்து விடலாம் ஆனால் இராத்தங்கலுக்கு என்ன செய்வது என்கிற புதுக்குழப்பம் வந்து சேர்ந்தது.

அடுத்து எங்கே போவது எனத் தெரியாது. சென்னையில் தான் இரவு தங்க வேண்டும். பணம் செலவழித்து அறையெடுத்துத் தங்க வசதி பற்றாது எனும் சூழலில் நான் நன்கறிந்த அல்லது அப்படி நம்பிக் கொண்டிருந்த சில நண்பர்களுக்கு அழைத்தேன். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் சொன்ன பதிலோ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒருவர் தனது அப்பாவைக் கேட்க வேண்டும் என்றார். ஒருவர் தனது வீட்டு முதலாளியிடம் அனுமதி பெற வேண்டும் எனச் சொன்னார். இன்னொருவர் மனைவி வீட்டில் இல்லாத காலத்தில் நண்பர்களைக் கூட்டி வந்தால் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும் என்றார். எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இறுதியில் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. ஒரு நிமிடம் எனது வீட்டின் நினைவு வந்து போனது.

பள்ளியின் இறுதி வருடக் காலம். முத்துக்குமார் என்றொரு நண்பன் என்னோடு படித்துக் கொண்டிருந்தான். ஒரு மதிய நேரம் அவனை வீட்டுக்குக் கூட்டிப் போயிருந்தேன். அம்மா வேலைக்குப் போயிருக்க வீட்டில் அம்மாச்சி மட்டும்தான் இருந்தார். வந்தவனுக்கும் சேர்த்து உணவு கொடுக்கும்படி அம்மாச்சியிடம் சொன்னேன். என்ன ஆளுகளோ என்னவோ என அவனுக்குத் தனியாக உணவு தர முடியாது என அவர் மறுத்து விட்டார். கோபம் கொண்டு எனது தட்டில் சோற்றைப் போட்டுக் கொண்டுபோய் அதிலேயே சாப்பிடும்படி சொல்லி இருவரும் சாப்பிட்டோம். மாலை வீடு திரும்பியபின் அம்மாவிடம் அம்மாச்சி போய் சொல்ல அவருக்குத் தான் திட்டு கிடைத்தது. 

சிறுவயது முதலே எனது வீட்டில் இப்படித்தான். நான் வைத்தது தான் சட்டம். கல்லூரிக் காலத்திலும் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வருகிறேன் ஏற்ப்படுகள் செய்து வையுங்கள் என அம்மாவிடம் சொல்லி இருக்கிறேனே தவிர அழைத்து வரட்டுமா என்று அனுமதி கேட்டதில்லை. இப்படியான சூழலில் வளர்ந்தவனுக்கு மற்றவர்கள் சொன்ன காரணங்கள் சிரிப்பை வரவழைத்ததில் ஆச்சரியம் இல்லைதானே? 

நான் மேலே இருக்கும் அண்பர்கள் யாரையும் குற்றம் சொல்ல முற்படவில்லை. மாறாக நான் எத்தனை சுதந்திரத்தோடு வளர்க்கப்பட்டிருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்திய தருணம் அது என்பதைச் சொல்லவே ஆசைப்படுகிறேன். அந்தக்கணம் என் அம்மாவுக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டேன்.பல நண்பர்களிடம் கேட்டு கடைசியாக நண்பர் மேவியின் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என முடிவானது. உடைமைகளை எடுத்துக் கொண்டு மாலுக்குக் கிளம்பினேன்.

- பயணிப்போம்




10 comments:

Romeoboy said...

யோவ் இந்த சைடு வந்தா முன்னாடியே போன் பண்ணிடு எல்லாதையும் ரெடி பண்ணிடுறேன் .. திடு திப்புன்னு வந்து நின்னு அந்த சமயத்தில் எனக்கு ஏதாவது எசக்கு பிசக்கா நடந்து உன்னைய வீட்டுக்கு அழைச்சிட்டு போக முடியாம போச்சுன்னுவை அப்பாலிக்கா என்னையும் சேர்த்து ஒரு கும்மி அடிச்சிடுவ :))..

King Viswa said...

ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு பதிவு என்று வந்து பார்த்தால் மனதை மிகவும் வருத்திய ஒரு பதிவாக அமைந்துவிட்டது.

நான் சென்னையில் தான் இருக்கிறேன் என்பதோ அல்லது எனக்கு ஒரு கைபேசி இருக்கிறது என்பதோ மறந்த உங்களை என்ன சொல்ல?

Balakumar Vijayaraman said...

ம்ம்ம்ம்ம்ம்ம்.......

மேவி... said...

"தனக்குப் பிடிக்காதபோதும் எனக்காய் எல்லாவற்றையும் அனுசரித்துப் போகும் ஜீவன் இதற்கும் மறுப்பேதும் சொல்லவில்லை."


காபா, உங்க அடக்கு முறை ல அண்ணியால எதுவும் பேச முடியாதே ....அடக்குமுறைக்கு இன்னொரு பெயர் அனுசரித்தா ???

Prabu M said...

என்ன சொல்லன்னு தெரியல....ஹ்ம்ம்ம்ம்..... ஓகே பாஸ் தொடந்து எழுதுங்க..... பயணிப்போம்!

cheena (சீனா) said...

அன்பின் கா.பா - ஏன் சற்றே ஓய்வெடுக்கக் கூடாது ? மன அமைதி குறைந்து வழக்கமான நாட்களில் இருந்து வெளிக்கிளம்பும் எண்ணம் ஏன் வருகிறது ? சற்றே சிந்திக்க வேண்டும். சென்னை சென்று இரவு தங்குவதற்கு இடம் தேடி அலையும் நிலையா ? ஏன் இந்தக் கொடுமை ? எவ்வளது தான் துயரமிருந்தாலும் அருமை அம்மா - துணைவி - நகுலன் - இவர்கள் எல்லாம் உடனிருக்க திட்ட மிட்டிருக்கலாமே ! - அறிவுரை கூறவில்லை கா.பா - மனதில் தோன்றை யதை எழுதுகிறேன். அவ்வளவு தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

யாழ் சிஸ்டம்ஸ் said...

சென்னையில இல்லாமப் போனதுக்கு வருத்தப்படுறதா? சந்தோசப்படுறதான்னு தெரியலையே? ;-)

அன்பேசிவம் said...

ஓ சாரி இந்த் மெயிலிலிருந்து கமெண்டிட்டேனா?

அமுதா கிருஷ்ணா said...

ஃப்ரெண்ட்ஸ் வந்தா தங்குவதற்கு என்றே மொட்டை மாடியில் ஒரு ரூம் கட்டி இருக்கிறோம். எனக்கு இரண்டு பசங்க.

A Simple Man said...

/// யாரும் உள்நுழையாத ஆடம்பரக் கடைகளுக்குள் எவரேனும் வர மாட்டார்களா என மிருகத்தின் பசியை கண்களுள் தேக்கி நிற்கும் மால்களிலுள்ள கடைகளின் சிப்பந்திகளைப்///
u will find very few such people in chennai malls.