இன்று 25 முதல் 40 வயது வரை இருக்க கூடிய யாரை கேட்டாலும் காமிக்ஸ் பற்றி பெருமையாக சொல்வார்கள். நம் நிஜ வாழ்வில் நினைத்து பார்க்க இயலாத வீரத்தீர சாகசங்களும் மாயாஜால மந்திரங்களும் நிறைந்த ஒரே அற்புத உலகம் காமிக்ஸ்களின் உலகம். ஆரம்ப காலங்களில் லைன், முத்து, திகில், மினி லைன் என்று பல காமிக்ஸ்கள் வந்து கொண்டு இருந்தன. நம்மால் மறக்க முடியாத பல கேரக்டர்களை இவை நமக்கு அறிமுகம் செய்து வைத்தன.
நிழல் உலக சக்கரவர்த்தி spider, டெக்ஸ் வில்லர், கார்சன், டைகர், ஆர்ச்சி என எண்ணிலடங்கா கதாபாத்திரங்களை நம் கண் முன் உலவ விட்டவை காமிக்ஸ்களே. புதிய இடங்களும் புதுப் புது அனுபவங்களையும் காமிக்ஸ்கள் நமக்கு தந்தன. காட்சிகள் நம் கண் முன்னே விரிய அவற்றின் ஊடான நமது வாசிப்பு தரும் இன்பம் அலாதியானது. காமிக்ஸ் என்பது சிறியவர்களுக்கு மட்டும் அல்லாது அனைவரும் படிக்க கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது.
இன்று ஊடகங்கள் பெரிதும் வளர்ந்து விட்ட நிலையில் காமிக்ஸ்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன.பாலமித்ரா, பூந்தளிர், பார்வதி சித்திரக் கதைகள் என பல புத்தகங்களும் இன்று இருந்த இடம் தெரியவில்லை. மதுரையில் இருந்து வெளிவந்தது கொண்டு இருந்த கலைப்பொன்னியின் மாயாஜால புத்தகங்களும் நின்று போயின. ராணி காமிக்ஸ் தனது தனித்தன்மை இழந்து விட்டது. லயன் காமிக்ஸ் மட்டுமே இன்று வரை பிடிவாதமாக தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்று வரை தரமான படைப்புகளை தந்து கொண்டு இருக்கும் லயன் ஆசிரியர் எஸ். விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நமது பால்ய பருவங்கள் கதைகளால் சூழப்பட்டு இருந்தது. ஆனால் நமது அடுத்த தலைமுறைக்கோ கதைகள் என்றால் என்ன என கேட்கும் நிலை வந்து விடுமோ என்று அச்சமாக உள்ளது. கம்ப்யூட்டர்களின் முன்னும் தொல்லைகாட்சிகளின் முன்னும் தங்களின் நேரத்தை தொலைக்கும் அவர்களுக்காக நாம் பரிதாபப்பட மட்டுமே முடியும். காமிக்ஸ்களோடு வாழ்ந்த அந்த நாட்களை பற்றி சொல்வதானால், அது ஒரு அழகிய நிலாக்காலம்.
2 comments:
//இன்று 25 முதல் 40 வயது வரை இருக்க //
ஓ! இதப் பத்தி கருத்து சொன்னா என் வயசு தெரிஞ்சிருமோ??? ;)
பூந்தளிரோடும் அம்புலிமாமாவோடும் கழித்த நாட்களை மறக்க முடியுமா???
Post a Comment