January 3, 2009

நான் கடவுள் - பாலா..!!!


கிட்டத்தட்ட மூன்று வருட காலத்திற்கு பின் தரிசனம் தரத் தயாராகி விட்டார் கடவுள். பாலா என்னும் அற்புதமான இயக்குனரின் கனவு திரையில் வெளியாகும் காலம் வந்து விட்டது. பல தடைகளை தாண்டி இந்த பொங்கலுக்கு வெளியாகிறது பாலாவின் "நான் கடவுள்". இந்த படத்தை ஆரம்பித்ததில் இருந்தே பல பிரச்சினைகள். முதலில் நடிப்பதாக இருந்த அஜித் பல பிரச்சினைகளால் விலகிக் கொள்ள பின்னர் முடிவானவர் தான் ஆரியா. அதே போல் தான் கதாநாயகியும். பாவனா, கிருத்திகா என ஒரு நீண்ட பட்டியலே நடிக்க வந்து இறுதியாக பூஜா கதாநாயகியானார்.மூன்று வருட தவம் போல இந்த படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் பாலா.

பாலா என்னும் தனிப்பட்ட மனிதரை எனக்கு அவ்வளவாக பிடிக்காது. நான் ஒரு தீவிரமான அஜித் ரசிகன் என்பது தான் இதற்கு காரணம். "நான் கடவுள்" படத்தில் இருந்து விலகுமுன் அஜித் பட்ட கஷ்டங்களால் எனக்கு பாலா மீது பயங்கரமான கோபம் உண்டு. ஆனாலும் பாலா என்னும் படைப்பாளியை நான் பெரிதும் மதிக்கிறேன். தமிழில் அவரைப் போல் இயக்குனர்கள் வெகு குறைவு. மனிதர்களின் உணர்வுகளை காட்சிபடுத்துவதில் பாலாவுக்கு இணை அவர்தான். பத்து வருடங்கள். நான்கு படங்கள். ஆனால் ஒவ்வொரு படமும் ஒரு அனுபவம். அது தான் பாலா.

சேது, நந்தா, பிதாமகன் என அவரது மூன்று படங்களுமே வெவ்வேறு தளங்களை பற்றியவை. சேது - காதலை கொண்டாடியது. நந்தா - தாய் மகனுக்கான உறவைப் பற்றியும், பிதாமகன் - நட்பை அடிப்படையாகக் கொண்டும் வெளிவந்தன. எனக்கு விவரம் தெரிந்த பிறகு முதல் முறையாக ஒரு படத்தில் அழுதேன் என்றால் அது சேதுவின் கடைசி காட்சியில் தான். அவளுடைய காதலை வலியுறுத்த காதலி இறந்து போகிறாள். அவளுடைய துயரங்கள் அத்துடன் முடிந்து போகின்றன. ஆனால் அவளுடைய நினைவுகளை சுமந்து கொண்டு மீண்டும் பாண்டி மடத்துக்கே போகும் விக்ரமின் முடிவு நெஞ்சை கனக்க செய்தது.இளையராஜாவின் இசையில் இன்னும் மறக்க முடியாத படம் சேது.

சேது தந்த நம்பிக்கையோடு, மிகுந்த எதிர்பார்ப்புகளோடு நந்தாவுக்கு போனேன்.அதுவும் அஜித் நடிக்க மறுத்து பின்பு சூரியா நடித்த படம். ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தால் படம் என்னவோ போல் இருந்தது. ஒன்றுமே பிடிக்கவில்லை. நல்லவேளை தல தப்பிச்சுட்டருடா என்று சொல்லியவாறு வீட்டுக்கு வந்தேன். ஆனால் ஏதோ ஒன்று எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு தாயே தன் மகனை கொல்வாளா.. என்ன படம் இது என வருவோர் போவோர் எல்லோரிடமும் புலம்பி கொண்டிருந்தபோது, நண்பன் கேட்டான். "என்னடா படம் நல்லா இல்லன்னு சொல்லிட்டு ரெண்டு நாளா அதப்பத்திய புலம்பிக்கிட்டு இருக்க? " அப்போதுதான் எனக்கே உரைத்தது. நந்தா என்னை எந்த அளவுக்கு பாதித்தது என்று நானே பிறகு தான் உணர்தேன். சூர்யா என்ற நல்ல நடிகரை வெளிக்கொணர்ந்ததும் பாலா தான். அதன் பிறகு இன்றுவரை அந்த படத்தை இருபது தரமாவது பார்த்து இருப்பேன்.

பிதாமகன் - நம்பவே முடியாத ஒரு பாத்திரம்தான் விக்ரம் நடித்த சித்தன். ஆனாலும் கேள்வி கேட்காமல் நம்பும் வகையில், அவன் மேல் நமக்கு பரிதாபம் பிறக்கும் வண்ணம் திறமையாக கையாண்டு இருப்பார் பாலா. சூர்யா, விக்ரம் இடையிலான நட்பை எளிதாக ஒரே பாடல் காட்சியில் ( இளங்காற்று வீசுதே..) புரிய வைத்து விடுவார். சூர்யா சாகும்போது அழுதது சித்தன் மட்டும் அல்ல, நாமும் தான்.

எல்லாமே மிகவும் கனமான, வாழ்வின் சோகத்தை சொல்கிற படங்கள். ஆனால் எல்லா படங்களிலுமே நகைச்சுவை அதிகமாக இருக்கும். அதுதான் பாலாவின் தனித்திறமை.கடைசியாக இனிமேல் வர இருக்கும் நான் கடவுள். படத்தின் விளம்பர ஸ்டில்களை பார்த்தாலே மிரட்டலாக இருக்கின்றன. ஆர்யாவின் தோற்றமும், அவரது போஸ்களும் ரொம்பவே வித்தியாசம். நான் இன்னும் பாடல்களை கேட்கவில்லை. ஆனால் கேட்ட நண்பர்கள் எல்லாருமே பாடல்கள் அபாரம் என்றார்கள். எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாவது உலகம் நாவல் தான் இந்த படத்தின் கதைக்கு கரு என்கிறார்கள். வாழ்வில் புறக்கணிக்கப்பட்ட, உதாசீனம் செய்யப்படும் மக்களை பற்றிய படம் என்றும் சொல்கிறார்கள். பாலாவுடனான மற்றுமோர் அனுபவத்துக்கு காத்து இருக்கிறோம். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா "நான் கடவுள்"? பொறுத்திருந்து பார்ப்போம்!!!

1 comment:

தருமி said...

//சூர்யா சாகும்போது அழுதது சித்தன் மட்டும் அல்ல, நாமும் தான்.//

சித்தன் அழவில்லை!