January 27, 2009

கிராமத்துக் கதைகள்!!!

ஊர்ல இருந்த அம்புட்டு சனமும் கோயிலுக்கு தெக்கால இருந்த அரச மரத்தடியுல தான் கூடி இருந்தாக.. அன்னைக்கு பஞ்சாயத்து. பிராது கொடுத்தது முத்துச்சாமி. முத ஆளா வந்துட்டாரு. ஒறவு சனம் அத்தனியையும் கூட்டிகிட்டு வந்திருந்தாரு. வெட்டு குத்துன்னு ஆனா ஆளு தேவப்படும்ல..அவரு பிராது கொடுத்தது முனியாண்டி மேல. அவுக ஆளுங்க எல்லாரும் வந்துட்டா பஞ்சாயத்து தொடங்கிரும்.

முத்துச்சாமியும் முனியாண்டியும் ஒரு வகைல பங்காளிகதேன்.. ஊர்லையே பெருந்தனக்காரவுக ரெண்டு பேரும். ஒண்ணு மண்ணா இருந்த அவுகள பார்த்து யாரு கண்ணு பட்டுச்சோ.. இன்னைக்கு வெட்டிட்டு சாகுற அளவுக்கு பகையாகிப் போச்சு.. எல்லா வழக்கம் போல திருவிழாவுலதேன் ஆரம்பிச்சது.. வருஷா வருஷம் ஊருக்கொடை முனியாண்டி வீட்டுக்குதே போகும். சுத்தி இருந்த ஆளுக ஏத்தி விட்டதுல முத்துச்சாமி போட்டிக்கு வந்துட்டாரு. உனக்குத்தா ஊர் மரியாதையா.. எனக்கு இல்லையானு சண்ட கிளம்பிருச்சு.. அப்போ நடந்த கலவரத்துல முனியாண்டியோட மச்சான் செத்துப்போனான்.. அன்னைக்கு தொடங்குன வன்மந்தே.. இன்னைக்கு வரைக்கும் முடிஞ்ச பாடில்ல..

முனியாண்டி வந்துட்டாரு.. ஆளு, அம்பு எல்லாத்தோடையும்.. பஞ்சாயத்து தொடங்குச்சு... நாட்டாமை அண்ணாமலை தான் தொடங்குனாரு..

"அதுதா எல்லாரும் வந்தாச்சே.. சொல்லுப்பா.. முத்துச்சாமி.. என்ன பிரச்சினை.."

"ஐயா.. என் மக ராசாத்திய போன வாரம் பக்கத்து ஊர்ல இருந்து வந்து பொண்ணு பார்த்திட்டு போனது ஊருக்கே தெரியும்.. எப்படியோ எம்மக கரையேற போறான்னு நான் நம்பிக்கிட்டு இருந்தேன்.. ஆனா இப்போ.. கல்யாணம் வேணாம்னு தகவல் வந்து இருக்கு.. என்னன்னு விசாரிச்சா.. யாரோ நம்ம ஊருக்காரவுக எம்மவளப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லி அவுங்க மனச கலச்சி இருக்காங்க.. இந்த ஊர்ல எனக்கு ஆகாதவரு யாருண்டு உங்களுக்கே தெரியும்.. இது நியாயமா.. என்னென்னு கேளுங்கையா.. "

நாட்டாமை முனியாண்டி பக்கம் திரும்பினாரு.. "நீ என்னப்பா சொல்ற.."

"இது சரி இல்லீங்க.. எங்கோ யாரோ பிரச்சினை பண்ணினாலும் நான்தேன்னு சொன்னா என்னய்யா அர்த்தம்.. அவம்பொண்ணு முறைமாமன் கூட தெரு தெருவா சுத்திட்டு திரிஞ்சா.. இது எல்லாப் பயலுக்கும் தெரியும்.. அதப்பத்தி வேற எவனோ போய் மாப்பிள வீட்டுல வத்தி வச்சுட்டான்.. அவங்க தெளிவு.. கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டாங்க.. இதுக்கு நாந்தான் கிடைச்சேனா.." முனியாண்டி கிட்ட இருந்து பதில் திமிரா வந்துச்சி..

ராசாத்தி பொரந்தபோதே அவ மாமன் ராசுவுக்குதான் தர்றதுன்னு முடிவாகி போச்சு. வளந்த பொறவு ரெண்டு பேரும் ஒண்ணா சுத்துனப்ப யாரும் தப்பா எடுத்துக்கல.. எல்லா நல்லா இருந்த நேரத்துல திடீர்னு ஒருநா ராசு படுக்கைல விழுந்துட்டா.. டாக்டர் வந்து பாத்துட்டு வாய்ல வராத எதோ ஒரு நோய் பேர சொன்னாரு.. எண்ணி பதினஞ்சு நாள்ல புண்ணியவா போய் சேந்துட்டான்.. யாராலையும் ராசாத்திய தேத்த முடியல.. ரொம்ப நாள் கழிச்சு.. இப்போதான் அத இத சொல்லி.. எனெக்கு பின்னால உன்ன யாரு புள்ள பார்ப்பான்னு அழுது புடிச்சு கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குனாரு முத்துச்சாமி.. எல்லாம் கூடி வர நேரத்துல.. இந்த பிரச்சினை.. கல்யாணமும் நின்னு போச்சி..

பேச்சு வளந்துகிட்டே போச்சு. கடைசிவர முனியாண்டி ஒத்துக்கவே இல்ல.. முத்துச்சாமி ஒடஞ்சு போய்ட்டா மனுஷன்.. அழுகுற மாதிரி ஆகிட்டாரு.. கடைசியா கத்துனாரு.."டேய்.. நீயும் ஒரு மகள வீட்டுல வச்சிருக்க.. ஞாபகம் வச்சுக்கோ.. "

முனியாண்டி திருப்பி சொன்னாரு.."எம்மவள பார்த்துக்க எனக்கு தெரியும்.. பிள்ளைய ஒழுங்கா வளக்க துப்பில்ல.. பேச வந்துட்டா.. போயா.."

எந்த முடிவும் எடுக்க முடியல.. முனியாண்டிதா கல்யாணத்த நிப்பாடுனதுன்னு யாரும் அடிச்சு சொல்ல முடியல.. எல்லாம் பிரிஞ்சி போய்ட்டாக.. முத்துச்சாமி அழுதுகிட்டே வீட்டுக்கு போனாரு..

மறுநா காலைல எந்திரிச்சி பார்த்தா... முனியாண்டி மக செல்விய வீட்டுல காணல.. எங்க தேடி பார்த்தும் அகப்படல.. முத்துச்சாமி ஆளுகதேன் ஏதோ பண்ணிட்டாகன்னு முனியாண்டி முடிவு கட்டிட்டாரு.. பெரிய சண்ட வெடிச்சது.. ரெண்டு பக்கமும் பயங்கர சாவு.. ஊரே மயானக் காடாகி போச்சு.. கடைசி வர செல்வி கிடைக்கவே இல்ல..

அன்னைக்குதே ஊருக்கு வெளிய இருக்குற சேரில செருப்பு தைக்கிற கன்னியப்பனும் காணாம போனான்.. அத யாரும் கவனிக்கல..!!

14 comments:

நையாண்டி நைனா said...

நல்லாதே எழுதியிருக்கிய..... சூப்பபரப்பு..

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க நைனா.. கொஞ்ச நாளா ஏரியா பக்கம் ஆளையே காணோம்? அடிக்கடி வந்து போங்கப்பு..

’டொன்’ லீ said...

ம்..தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//'டொன்'லீ said..
ம்..தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்..:-)//

என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல நண்பா.. என்றாலும் வருகைக்கு நன்றி..

நையாண்டி நைனா said...

இன்னா சாமி இப்படி சொல்லிட்டே.....
அடிக்கடி வந்து பார்த்துட்டுதான் சாமி கீரேன்....

’டொன்’ லீ ...அண்ணா இன்னா சொல்லுதுன்னா... உன் கதைலே கீற சம்பவத்ததான்..சொல்லுது

கார்த்திகைப் பாண்டியன் said...

அந்த நம்பிக்க போதும் தலைவா.. நாங்க எழுதி தள்ளுவோம்ல.. "டொன்" லீ சொன்னது சரிதான்.. எதுவே நமக்கு நடக்காத வரை வேடிக்கைதான்..

பிரேம்குமார் said...

கிராமிய வழக்கில ஒரு அழகான கதையை தந்ததற்கு நன்றி பாண்டியன்.

மவராசனா இருங்கப்பு!

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கு நன்றி பிரேம்.. வெகு நாட்களாக வட்டார வழக்கில் கதை எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது.. இப்போது தான் நிறைவேறி உள்ளது..

ராம்.CM said...

தாங்கள் கூறியது போல எங்கள் ஊரிலும் நடக்கும். என்ன.. காவல் நிலையத்தில்[பஞ்சாயத்து கிடையாது].


அருமையாக இருந்தது.

கார்த்திகைப் பாண்டியன் said...

இப்போதெல்லாம் இது போன்ற நிகழ்வுகள் வெகு சாதாரணமாகி விட்டன.. வருகைக்கு நன்றி ராம்...

நையாண்டி நைனா said...

புதுசரக்கு ஏதும் போடலியா?

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பரின் தந்தை இறந்து போனார்.. இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மதுரை சென்றிருந்தேன்.. அதனால்தான் எதுவும் எழுதவில்லை தோழர்..

thevanmayam said...

நல்லா எழுதியிருக்கீங்க..எங்க பக்கமெல்லாம் வாங்க சாமி...

கார்த்திகைப் பாண்டியன் said...

முதல் முறையாக வருகை தந்துளீர்கள்.. நன்றி தோழரே...