July 6, 2009

உக்கார்ந்து யோசிச்சது(06-07-09)...!!!

ராகவன் நைஜீரியா - பதிவுலகில் இந்தப் பெயரை அறியாதவர்கள் ரொம்பக் கம்மியாகத்தான் இருக்க முடியும். பின்னூட்ட சுனாமி, சூறாவளி என என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். சென்ற வாரம் அண்ணன் தனது குடும்பத்தோடு மதுரைக்கு வந்து இருந்தார். புதன்கிழமை மாலை மதுரை பதிவுலக நண்பர்களான தருமி ஐயா, சீனா ஐயா, ஸ்ரீதர் மற்றும் சுந்தரோடு சென்று அவரை சந்தித்தேன். கண்டிப்பாக வருவதாக சொல்லி இருந்த தேவன்மாயம் அவர்களால் கடைசி நேர அலுவல்களால் வர இயலாமல் போனது. ராகவன் அண்ணன் ஒரு தன்மையான மனிதர் என்பதைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது. போனிலோ, சாட்டிலோ இதற்கு முன்னர் நான் அவரோடு பேசியது கிடையாது. இருந்தபோதும் ரொம்ப நாள் பழகியவர்கள் போல இயல்பாகப் பேசினார்.
அவருடைய தங்கமணியும் அவரைப் போலவே அன்பானவர். அவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பது இன்னும் சந்தோஷத்தை தந்தது. அவர்களின் பாசத்துக்குரிய மகன் அரவிந்த். நிறைய பொது விஷயங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறான். நான் வழக்கம் போல அவனுடன் தமிழ் சினிமா பற்றி பேசிக் கொண்டு இருந்தேன். (ஹி..ஹி..ஹி.. நமக்கு அதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாதுல்ல..). அன்றைய இரவு, அண்ணனின் புண்ணியத்தில் அருமையான விருந்து ஒன்றும் நடைபெற்றது. பின்பு அனைவரும் அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டோம். சொந்த வேலைகளுக்கு ஊடே பதிவுலக நண்பர்களையும் அண்ணன் சிரமப்பட்டு சந்தித்து வருகிறார் என்பது ரொம்ப மகிழ்ச்சியை கொடுத்தது. எங்கெங்கோ இருக்கும் மனிதர்களை ஒன்று சேர்க்கும் தமிழுக்கும், இணையத்துக்கும் கண்டிப்பாக நான் நன்றி சொல்லியாக வேண்டும்.
***************
சனிக்கிழமை மாலை திடீரென எனது பாட்டிக்கு உடம்பு முடியாமல் போனது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துப் போக ஆட்டோ பிடிக்கப் போனேன். எங்கள் காலனி வாசலில் நின்ற ஆட்டோக்காரர் ஒருவரிடம் இடத்தை சொன்னேன். எழுபது ரூபாய் கேட்டார். டக்கென சரி என்று சொல்லி கூட்டிக் கொண்டு வந்தேன். அங்கே போன பிறகு அவரிடம் பணத்தை கொடுத்தேன். சாரி சார் என சொல்லி பத்து ரூபாயை திருப்பிக் கொடுத்தார். என்னங்க என்று நான் கேட்க, "உண்மையில அறுபது ரூபா தான் சார் ஆகும்.. ஆனா நான் நியாயமா சொன்னா மக்கள் பத்து ரூபா குறைச்சுக் கேப்பாங்க.. அதனால எப்பவும் பத்து ரூபா கூட்டி சொல்லுவேன். ஆனா நீங்க பேரம் பேசாம வந்துட்டீங்க.. உங்களைப் போய் ஏமாத்தலாமா சார்? எங்க கஷ்டத்த மக்கள் புரிஞ்சிக்கிட்டா நாங்க ஏன் சார் பிரச்சினை பண்ணப் போறோம்?" என்று சொன்னார். இப்படியும் மக்கள் இருக்கிறார்களே என்று கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.
***************
ஒரு பதிவுலக கிசிகிசு..
கேலிக்கும் கிண்டலுக்கும் பெயர் போன பதிவர் அவர். எதிர்ப்பதிவு போட்டே பிழைப்பு நடத்துபவர். சமீபமாக இன்னொரு கடையை திறந்து வைத்துக்கொண்டு வருவோர், போவோரை எல்லாம் உரசிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பின்னலாடை நகரில் இருந்து எழுதும் வார்த்தைகளின் ராஜாவான பதிவர் மீது இவருக்கு அப்படி ஒரு தனிப்பாசம். அவரே ஆடிக்கொரு தரம், தேர்தலுக்கு ஒரு தரம் எனப் பதிவு போடுபவர். அவர் சினிமா விமர்சனம் போட்டால் கூட நான் எதிர்ப்பதிவு போடுவேன் எனக் கிண்டல் செய்பவர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதாக கேள்வி..
**************
நேற்று இரவு மதுரையின் தெருக்களில் பொழுது போகாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். சாலையில் பயங்கர வாகன நெரிசல். ஒரு வண்டியின் பின்னால் சின்னப்பெண் ஒருத்தி எதிர்ப்பக்கமாக திரும்பி உக்கார்ந்து இருந்தாள். ஏழெட்டு வயது இருக்கலாம். வண்டியை ஒட்டியது அவள் அப்பாவாக இருக்கக்கூடும். ஒரு கையில் சாக்லேட், மற்றொரு கையில் ஐஸ்க்ரீம். சுற்றி நடக்கும் விஷயங்கள் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் பாட்டு பாடியவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. இது போன்ற சின்னச் சின்ன சந்தோஷங்களில் தான் இன்னும் வாழ்க்கையின் அர்த்தம் ஒளிந்திருப்பதாகத் தோன்றுகிறது.
***************
ஒரு கவிதை மாதிரி..

தெரியாமல் விழுந்து இருக்கக்
கூடும் - இல்லையெனில்...
ஏதேனும் ஆத்திரத்தில் எறிந்து
விட்டிருக்கலாம் - இல்லையெனில்..
விபத்தாக இருக்கக்
கூடும் - இல்லையெனில்..
கேள்விகளை எழுப்பியபடியே
இருக்கிறது.. காலையில்
பயணத்தின் போது பார்த்த
குழந்தையின் ஒற்றைக் கால்செருப்பு..!!!

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

38 comments:

Prabhu said...

(:-)

நர்சிம் said...

மறக்க முடியாத மதுரை நகர வீதிகள் நண்பா..அதுவும் இரவில்..

அ.மு.செய்யது said...

//அன்றைய இரவு, அண்ணனின் புண்ணியத்தில் அருமையான விருந்து ஒன்றும் நடைபெற்றது//

அங்கயுமா?? சொல்லவேயில்ல...!

// சின்னப்பெண் ஒருத்தி எதிர்ப்பக்கமாக திரும்பி உக்கார்ந்து இருந்தாள். ஏழெட்டு வயது இருக்கலாம் //

ஏழெட்டு வ‌ய‌துன்னா சிறுமின்னு சொல்லியிருக்க‌லாம்ல‌..நாங்க‌ எவ்வ‌ள‌வு ஆவலா
ப‌டிச்சிட்டு வ‌ரோம். அட் போங்க‌ பாஸு..

குடந்தை அன்புமணி said...

ராகவன் அண்ணா சந்திப்பு பற்றிய பகிர்வுக்கு நன்றி. அண்ணியார் உங்க ஊரா? இது புது தகவல்தான். நட்பை வளர்க்கும் இணையத்திற்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். உண்மைதான்.

ஆட்டோக்காரர்கள் மட்டுமல்ல பலரும் இப்படித்தான். விலையை ஏற்றிச் சொல்வார்கள். ஆனால் இவர்போல அவராகவே குறைத்துக்கொள்பவர்கள் அரிது. அதுசரி பாட்டிக்கு உடம்பு எப்படி உள்ளது? நலமடைய எனது பிரார்த்தனைகள்.

பதிவர் பற்றிய கிசுகிசுவா? நீங்களுமா? நடத்துங்க.

அந்தச் சின்னப் பெண்ணின் சந்தோஷங்கள் நீளட்டும்.

மேவி... said...

ராகவன் நைஜீரியா ரொம்ப நல்ல எழுதுவார் .... ஆரம்பத்தில் இவருடைய பதிவுகள் நிறைய படிப்பேன் ; பிறகு இவர் எழுவது ரொம்ப அறிவளிதனமாக எனக்கு பட்டது.....
அறிவுக்கும் நாமக்கும் ரொம்ப துரம் ஆச்சே...... அதனால் சில சமயம் தான் எட்டி பார்ப்பேன் இவருடைய பதிவுகளை ...


ஆட்டோகாரர்களின் உலகம் ரொம்ப competitive யானது .... வருமானம் குறைவு தான் ; வேறு என்ன செய்ய முடியும் அவர்களால்


"பயணத்தின் போது பார்த்த
குழந்தையின் ஒற்றைக் கால்செருப்பு..!!! "

பக்கத்தில் இருந்திற்க்கும் இன்னொரு செருப்பும் குழந்தையும் ...
நீங்க பாஸ் பார்க்க வில்லை போல் இருக்கு ....

அகநாழிகை said...

கார்த்தி,
ராகவன் நைஜுரியாவை நானும் சந்திக்க நினைத்திருந்தேன். தேவன் மாயம் அழைத்திருந்தார். தேர்வுகளின் காரணமாக சந்திக்க இயலாமல் போனது. உங்கள் பதிவு நிறைவாக உள்ளது.
000
தானி ஓட்டுநரின் நேர்மை மனம் பாராட்டுக்குரியது. இன்னும் இதுபோன்றவர்கள் இருக்கிறார்கள் என்பதே ஆறுதலான விஷயம்.
பாட்டி நலமா? உங்களை ரொம்ப எதிர்பார்ப்பார்களே.. விருப்பப்படி நடந்து சந்தோஷம் ஏற்படுத்துங்கள்.
000
எதிர்பதிவு போடுபர் வாலைச் சுருட்டிக் கொண்டு பூனையைப் போல் அமைதியாக இருக்கிறார். அவரை விட்டுவிடுங்கள். தியானத்தில் இருக்கிறார்போல. வார்த்தை ராஜா அடிக்கடி பதிவுகள் இட்டால் நன்றாக வாசிக்கலாம். அவரிடம் ‘சொல்‘லுங்கள்..
000
கவிதை நன்றாக இருக்கிறது.
உங்கள் கவிதை இப்படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

//தெரியாமல் விழுந்து இருக்கக் கூடும்
ஏதேனும் ஆத்திரத்தில் எறிந்து விட்டிருக்கலாம்
விபத்தாக இருக்கக் கூடும் -
கேள்விகளை எழுப்பியபடியே இருக்கிறது
காலையில் பயணத்தின் போது பார்த்த குழந்தையின் ஒற்றைக் கால்செருப்பு.

000

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

தேவன் மாயம் said...

அகநாழிகை எல்லாம் சொல்லிவிட்டார்!! நான் ஓட்டு மட்டும் போடுகிறேன்!!

Dhavappudhalvan said...

ரொம்ப சந்தோசமா இருக்குது, நல்லபடியா நம்ம வீட்டுல கல்யாணம் நடந்தமாதிரி. போனில் அன்று தொடர்ப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் அன்பு தங்கையின் திருமணத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருப்பீர்கள். அந்த சமயத்தில் கரடியாய் நான் எதற்கென்று. விரைவில் மீண்டும் எதிர்ப்பார்க்கிறேன் சுப நிகழ்ச்சி செய்தியை தங்களிடமிருந்து.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வணக்கம் கவிஞரே.

சென்ஷி said...

:)

நல்லாயிருக்குதுங்க..

அமுதா கிருஷ்ணா said...

" சுற்றி நடக்கும் விஷயங்கள் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் பாட்டு பாடியவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. இது போன்ற சின்னச் சின்ன சந்தோஷங்களில் தான் இன்னும் வாழ்க்கையின் அர்த்தம் ஒளிந்திருப்பதாகத் தோன்றுகிறது”


100/100 உண்மை...சின்ன குழந்தைகள் நம்மை வாழ வைக்கின்றன.

Joe said...

//
சொந்த வேலைகளுக்கு ஊடே பதிவுலக நண்பர்களையும் அண்ணன் சிரமப்பட்டு சந்தித்து வருகிறார் என்பது ரொம்ப மகிழ்ச்சியை கொடுத்தது.
//
சென்னையில் என்னை சந்திக்காமல் சென்ற ராகவன் அண்ணாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன். ;-)

நையாண்டி நைனா said...

ஒத்தையிலே உக்காந்து மொக்கிட்டு ஒரு பதிவு வேறையா....

நையாண்டி நைனா said...

ஆட்டோகாரர் மிக நல்லவர் போலே இருக்கார்....

ஒருவேளை நீங்க‌ "டக்கு" நண்பர் என்று தெரிஞ்சிருக்குமோ என்னவோ....

பாட்டி நலமடைய வேண்டுகிறோம்.

அப்துல்மாலிக் said...

நல்லாவே யோசிக்கிறீங்கப்பூ

ஆட்டோ டிரைவரின் கமெண்ட் சூப்பர்

அந்த ஒத்தை செருப்பு கவிதை எதார்த்தம்

தொடர்ந்து கலக்குங்க‌

நையாண்டி நைனா said...

ஆமா, அந்த பதிவர் யாருங்கோ....

நையாண்டி நைனா said...

அந்த அப்பாவி புள்ளைய நோட்டம் பார்த்து காலிலே கிடந்த கொலுசை ஆட்டைய போட பார்த்திருக்கீங்க..... அது முடியலைன்ன ஒடனே... பதிவா போட்டுடீங்க....
உங்க தெறமையே தெறமை நண்பா....

நடத்துங்க... நடத்துங்க....

நையாண்டி நைனா said...

என்னைய மாட்டிவுட்டுட்டு கவுஜயே திரிச்சிட்டியே நண்பா....

உண்மைகவுஜை வாசகர்களுக்காக....

ஒரு கவிதை (மாதிரி..அல்ல அசல்)

தெரியாமல் வலையில் விழுந்து இருக்கக்
கூடும் - இல்லையெனில்...
ஏதேனும் ஆத்திரத்தில் சரணடைந்து
விட்டிருக்கலாம் - இல்லையெனில்..
விபத்தாக நடந்த ரெய்டில் மாட்டி இருக்கக்
கூடும் - இல்லையெனில்..
கேள்விகளை எழுப்பியபடியே
இருக்கிறது.. காலையில்
"அடித்து" விட்டு ஓடும்போது பார்த்த
என் நண்பன் ஜேப்படியும் போலிசும்..!!!

ச.முத்துவேல் said...

என்னா ஒரு தன்னடக்கம்! கவிதையேதங்க அது. தானி ஓட்டுனர்..சரி சரி ஆட்டோக்காரர் நெகிழ்த்திவிட்டார்.வடகரை வேலன் அண்ணாச்சி படிச்ச மாதிரி கதம்பம எழுதியிருக்கீங்க. எல்லாமே அருமை.

பீர் | Peer said...

அருமை. அடிக்கடி உட்கார்ந்து யோசிக்கவும், கார்த்திக்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

கடைசி கவிதை மாதிரியை வாசித்தபோது வைரமுத்தின் கவிதை ஒன்று ஞாபகம் வருது.. அது பட்டாம்பூச்சி பற்றியது.. காரின் கண்ணாடியில் மோதி விழுந்த பட்டாம்பூச்சி பற்றியது.. குமுதத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தேன்.

இந்தக் கவிதையும் நல்லா இருந்திச்சு

☼ வெயிலான் said...

என்னது? பின்னலாடை நகர் பதிவருக்கு பிரச்சனையா?

எங்ககிட்ட 'சொல்'லலாம்ல...... நாங்க எதுக்கு இருக்கிறோம்.

உடனே சங்கத்தை கூட்டுங்கப்பா....

முரளிகண்ணன் said...

உட்கார்ந்து படிக்கும்படி எழுதுறீங்க

நல்லாயிருக்கு

Cable சங்கர் said...

அந்த மதுரை சிறுமி மேட்டர்.. ம்ஹும். வாழ்க்கையில் சில விஷயங்க்ள் திரும்ப வரவே வராது.. நண்பா..

"உழவன்" "Uzhavan" said...

கவிதை அருமை நண்பா..
பாட்டி நலமா இப்போது? கவனித்துக்கொள்ளுங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//இணையத்துக்கும் கண்டிப்பாக நான் நன்றி சொல்லியாக வேண்டும்.//

கண்டிப்பாக நண்பா

ஆ.ஞானசேகரன் said...

பாட்டி தற்பொழுது நலமா? நண்பா. நலமாக பிராத்தனைகள்..

கவிதை செய்தி எல்லாம் அருமை

அப்பறம் உக்காந்துதான் யோசிப்பீங்களா? எங்கே உற்காருவீங்க?
தப்பா நினைக்காதீங்க போதிமரமானு கேட்டேன்

நிகழ்காலத்தில்... said...

//☼ வெயிலான் said...

என்னது? பின்னலாடை நகர் பதிவருக்கு பிரச்சனையா?

எங்ககிட்ட 'சொல்'லலாம்ல...... நாங்க எதுக்கு இருக்கிறோம்.

உடனே சங்கத்தை கூட்டுங்கப்பா....//


ஒற்றுமையை காட்டுவோம்!

வினோத் கெளதம் said...

//Cable Sankar said...

அந்த மதுரை சிறுமி மேட்டர்.. ம்ஹும். வாழ்க்கையில் சில விஷயங்க்ள் திரும்ப வரவே வராது.. நண்பா.//

சரி தான் இந்த வயசுல நாம ஒரு கையுல சாக்லேட் இன்னொரு கையுல ஐஸ்கிரீம் வச்சிக்கிட்டு வண்டியுல அதே மாதிரி உக்கர்ந்துக்கிட்டு சாப்ட்டு போன பாக்குறதுக்கு நல்லவா இருக்கும்..:)

ச.பிரேம்குமார் said...

நல்ல பதிவு பாண்டியன். ‘இல்லையெனில்’ என்பதை எடுத்துவிட்டால் மிக அழகான கவிதை. வாழ்த்துகள் :)

வால்பையன் said...

கிசுகிசு புரியலையே தல!

சொல்லரசன் said...

//எங்கெங்கோ இருக்கும் மனிதர்களை ஒன்று சேர்க்கும் தமிழுக்கும், இணையத்துக்கும் கண்டிப்பாக நான் நன்றி சொல்லியாக வேண்டும்.//

கண்டிப்பாக,

// உங்களைப் போய் ஏமாத்தலாமா சார்?//

இப்படியா சொன்னார்!!!!!!!!!!!!!!!!!!!!

//காலையில்
பயணத்தின் போது பார்த்த
குழந்தையின் ஒற்றைக் கால்செருப்பு..!!!//

இந்த கவிதை ரியலிசமா அல்லது மேஜிக்ரியலிசமா.

யாருங்க அந்த கிசு கிசு பதிவர்கள்

சொல்லரசன் said...

"அகநாழிகை" said...
//வார்த்தை ராஜா அடிக்கடி பதிவுகள் இட்டால் நன்றாக வாசிக்கலாம். அவரிடம் ‘சொல்‘லுங்கள்..//

நானும் சொன்னதாக சொல்லுங்கள்

சொல்லரசன் said...

// ☼ வெயிலான் said...
என்னது? பின்னலாடை நகர் பதிவருக்கு பிரச்சனையா?

எங்ககிட்ட 'சொல்'லலாம்ல...... நாங்க எதுக்கு இருக்கிறோம்.

உடனே சங்கத்தை கூட்டுங்கப்பா....//

தலைவரே சீக்கிரம் கூட்டத்தை கூட்டுங்கோ

குமரை நிலாவன் said...

ஒன்று சேர்க்கும் தமிழுக்கும், இணையத்துக்கும் கண்டிப்பாக நான் நன்றி சொல்லியாக வேண்டும்

கண்டிப்பாக நண்பா

கவிதை அருமை நண்பா

Unknown said...

உக்கார்ந்து யோசிச்சு நல்லா தான் எழுதி இருக்கீங்க..

சுந்தர் said...

//எங்கெங்கோ இருக்கும் மனிதர்களை ஒன்று சேர்க்கும் தமிழுக்கும், இணையத்துக்கும் கண்டிப்பாக நான் நன்றி சொல்லியாக வேண்டும். //

கா.பா வுக்கு என் நன்றியை சமர்பிக்கிறேன்.

சுந்தர் said...

அந்த ஆட்டோ காரர் , பேராவது எழுதி இருக்கலாம் . வாழ்க அவரது நேர்மை.