September 28, 2010

உக்கார்ந்து யோசிச்சது (28-09-10)

கண் அறுவை சிகிச்சைக்காக "அரவிந்தில்" அனுமதிக்கப்பட்டு இருந்த நண்பரொருவரின் அம்மாவைப் பார்ப்பதற்காக போயிருந்தேன். தெற்காசியாவின் புகழ் பெற்ற மருத்துவக் குழுமம். மக்கள் சேவையே தங்கள் முக்கியக் கடமையெனக் கொண்டவர்களாக இருந்தவர்கள். இதில் "கள்" என்பது என்பது இறந்த காலத்தில் இருப்பதைக் கவனியுங்கள். அப்படியானால் அரவிந்தின் இன்றைய நிலை என்ன? காசேதான் கடவுளப்பா என்பதுதான் இப்போது அவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது.

மருத்துவமனை வளாகத்தின் உள்ளே, சிகிச்சை பெறுபவர்களைப் பார்க்க வரும் உறவினர்களின் வண்டியை நிப்பாட்ட டோக்கன் போடுகிறார்கள். ஏன்யா.. இது என்ன சினிமா தியேட்டரா?ஆயிரம், லட்சம் என இவர்களுக்கு கொட்டிக் கொடுப்பது போதாதென இதில் கூடவா.. தலையில் அடித்துக் கொண்டே நண்பரின் அம்மாவைப் பார்க்கப் போனேன். காலை பத்து மணிக்கு டிஸ்சார்ஜ் செய்வதாக சொன்னவரை மாலை ஐந்து மணி வரை இழுத்து அடித்திருக்கிறார்கள். காரணம் வெரி சிம்பிள். காலை பத்து மணியோடு ஒரு நாள் முடிந்து விடுகிறது. இப்போது மாலை வரை இழுத்து விட்டதால் மற்றொரு நாளுக்கான வாடகை.. சரியாப் போச்சா?

அத்தோடு இங்கே வேலை பார்க்கும் செவிலியர் பற்றி என்ன சொல்வது.. நோயில் அவதிப்படுவோரை எந்த முகச் சுழிப்பும் இல்லாமல் அக்கறையோடு கவனித்துக் கொள்வதால்தான் சகோதர எண்ணத்தோடு அவர்களை சிஸ்டர் என்று அழைப்பதாக எனக்கு நானே ஒரு புரிதலை வைத்திருக்கிறேன். அதை எல்லாம் வெகு சாதாரணமாக உடைத்துப் போடுகிறார்கள் அரவிந்தில் இருக்கும் "சிஸ்டர்கள்". பேசும் எல்லாரிடமும் ஒரு கடி.. முகத்தில் பொங்கி வரும் கருணை என.. அடப் போங்கப்பா.

நண்பரின் அம்மா நடக்க முடியாதவர் என்பதால் வீல் சேர் வேண்டுமெனக் கேட்டிருந்தோம். அதற்கு முக்கால் மணி நேரம் ஆக்கினார்கள். நடுவில் போய் வண்டி கிடைத்ததா எனக் கேட்ட நண்பருக்கு நாலு திட்டு வேறு. கடைசியாக வண்டியைக் கொண்டு வந்து அறையின் வாசலில் எனக்கென்ன என்று போட்டு விட்டுப்போனது இன்னும் கொடுமை. சிரமப்பட்டு நண்பரின் அம்மாவை வெளியே கூட்டிவந்தோம். மருத்துவம் என்பது உலகிலேயே உயர்ந்த சேவை என்பதெல்லாம் வாயளவில்தானா?அனைத்தும் வணிகமயம் ஆகி வரும் சூழலில் இது போல புலம்புவதைத் தவிர நாம் வேறன்ன செய்து விட முடியும். (இது என் அனுபவம் மட்டுமே.. நல்லவிதமாக "அரவிந்தைப்" பற்றி சொல்ல ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் மக்களே..)

***************

சுஜாதாவின் "விஞ்ஞானக் கதைகளை" வாசித்துக் கொண்டிருக்கிறேன். சுவாரசியமாக கதை எழுதுவதில் மனிதரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. சுஜாதாவை ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு அவர் சொல்லிய விஷயங்களில் பலவும் இன்று நடைமுறையில் இருக்கின்றன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. எதிர்பாரா திருப்பங்கள், வாசகர்களையே முடிவுகளை அனுமானிக்கும்படியாக கதையை அந்தரத்தில் விடுதல் எனப் பல உத்திகளை மனிதர் அநாயாசமாகக் கையாண்டிருக்கிறார். அதுவும், கடைசி ஒற்றை வார்த்தையில் மொத்தக் கதையே மாறி போவதும் பட்டாசு கிளப்புகிறது.

"சோம்னா" என்றொரு கதை. நனவிலும் கனவிலும் மாறி மாறி வாழ்பவன் ஒருவன் தன்னுடைய பிரச்சினைகளை நண்பனோடு பகிர்ந்து கொள்கிறான். கடைசியில் பார்த்தால் கனவுகளில் அவனைக் காதலிப்பவள் தான் நிஜத்தில் நண்பனின் மனைவியாகப் போகிறவள். வெறி கொண்டவனாக காதலன் நண்பன் மீது கத்தியுடன் பாய்ந்து குத்துகிறான். கதையின் கடைசி வரி இதுதான். "அவனுக்கு வலிக்கவே இல்லை". ஆக மொத்த கதையும் சொல்பவனின் கனவு என்னும் பொருளில் மாறிப் போகிறது. மாஸ்டர் கிளாஸ்.

ஆனால் நான் அடுத்து சொல்லப்போகும் விஷயம் உங்களுக்குக் கோபத்தை உண்டாக்கலாம். அது.. சுஜாதாவும் ஒரு சில வெளிநாட்டுக் கதைகளால் "inspire" ஆகி இருக்கிறார் என்பதே. இந்தத் தொகுப்பில் இருக்கும் மற்றொரு பாலு (1996 ) - தலைப்பு சரியாகத் தெரியவில்லை.. என்ற கதை டெலிபோர்டலைப் பற்றியது. விஞ்ஞானி ஒருவரும் அவருடைய இரட்டைச் சகோதரனும் சேர்ந்து பாலு என்னும் மனிதனை தங்கள் சோதனைக்கு உடன்பட வைப்பதுதான் கதை. இந்தக் கரு அப்படியே கிறிஸ்டோபர் பிரீஸ்டின் "the prestige" (1995) என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது. அந்த ஆங்கில நாவல் படமாகவும் (the prestige - 2006) வந்து இருக்கிறது. இந்த என் கருத்து சரிதானா என்பதை விஷயம் அறிந்தவர்கள் விளக்கினால் தேவலாம்.

***************

பதிவுலக நண்பர்களுக்காக "பரிசல்" கிருஷ்ணா ஒரு சிறுகதை போட்டியை அறிவித்து இருக்கிறார். மூன்று சுவாரசியமான சம்பவங்கள். மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு கதை எழுத வேண்டும். அதற்கான விதிமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள். ஏற்கனவே பல நண்பர்கள் தங்களுடைய படைப்புகளை அனுப்பத் தொடங்கி விட்டார்கள். நானும் என்னுடைய கதையை அனுப்பி விட்டேன். நீங்களும் கலந்து கொண்டு பட்டையைக் கிளப்புங்கள் மக்களே...

***************

பறவைகளைப் பற்றிய மிக முக்கியமான ஆவணப்படம் என்று "winged migration" பற்றிச் சொல்லலாம். போன வாரம் இந்தப் படத்தை மாணவர்களுக்காக கல்லூரியில் திரையிட முடிந்தது. ஏழு கண்டங்களில் படப்பிடிப்பு, நாலரை வருஷங்கள், கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் செலவு.. படத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் பரவசத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாது. பறவைகளோடு நாமும் சேர்ந்து பறப்பது போன்ற உணர்வு படத்தை பார்க்கும்போது கிடைக்கிறது. இதுவரை பார்த்திராத நிறைய வகையான பறவைகளைப் பற்றிப் படம் எடுத்திருக்கிறார்கள். அத்தோடு மனிதனின் தவறான செயல்களால் பறவை இனத்துக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் பொட்டில் அறைந்த மாதிரி சொல்லிச் செல்கிறார்கள். மனிதனால் சிறை பிடிக்கப்படும் பஞ்சவர்ணக் கிளியொன்று கூண்டில் இருந்து தப்பித்துப் போகும் காட்சியில் வகுப்பறையே சந்தோஷத்தில் அதிர்ந்தது. யூட்யூபில் இருக்கும் படத்தின் சுட்டி இங்கே..

***************

சமீபத்தில் நான் செய்த மிகப் பெரிய தவறுகளில் ஒன்று - சிந்து சமவெளியைப் பார்த்தது. உயிர், மிருகம் என்று கொஞ்சம் உருப்படியாக எடுத்த சாமியின் படம், ஜெமோ வேறு இருக்கிறார் என்று நம்பிப் போனதற்கு செருப்படி. துருக்னேவ் அது இது என்றெல்லாம் பீலா விட்டு கடைசியில் அஜால் குஜால் படம் எடுத்து இருக்கிறார்கள். தெரியாமல் ஏற்பட்டுவிடும் உறவு, அதன் காரணமான மனதின் போராட்டம் என்றிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். ஆனால் இங்கே எல்லாமே வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கிறது. மாமனார் மருமுகள் உறவு கொள்வது.. அதன் பிறகு அவர்கள் ரொம்ப சந்தோஷத்தோடு ஒன்றாகக் குடும்பம் நடத்துவது..கருமம்டா. இதற்கு "மாமனாரின் இன்ப வெறி" என்று நேரடியாகவே எடுத்து இருக்கலாம்.

***************

"buzz "இல் நண்பர்கள் மூலமாகத்தான் இந்தத் தளம் அறிமுகமானது. வசுமித்ர.. மனிதர் கவிதைகளில் பட்டாசு கிளப்புகிறார். எனக்கு ரொம்பப் பிடித்தமான அவருடைய கவிதை இங்கே..

தற்காலிகமாகத்தான் அவன் செயல்புரிந்தான்
மழைக்குப் பின்பு ஈரம் கூடாத தரையில் கால் பதித்தவாறு
அப்படியாகத்தான்
வாய்த்தது அக்குரல்

தனிமையைப் பீய்ச்சியடிக்கும்
ஒரு
ஒரு
ஒரே
சொல்
அத்தகையது

அப்படியாக
அவன் அவளைச்சந்திக்கும்போதெல்லாம்
சொல்லியும்
இசைத்தும் வந்தான்

வயலின் நாணை அறுத்தெறிந்தபொழுது
துள்ளி விழுந்த அதன் கடைசித்துளி
மற்றும்
சிறு
சுதி

அவனுக்கு மொழியென்பது
மௌனத்தின்
என்றைக்கும் வாய்க்காத கிசுகிசுப்பு

பனிக்கட்டிகள் தங்கள் நிறத்தை இழந்து தவழ்கையில்
மழை வெப்பம் உள்ளங்காலை நனைக்கிறது

பிணவறைக்குள் ஒரு கவிஞன் நுழைகையில்
கடவுளர்கள்
மௌனத்தைப் புடம் போட்டுக்காக்கின்றனர்

கவிஞன் இறுமுகிறான்
பிணவறை இசைக்கத்தொடங்கியது ஓலத்தை
அதன்
தார்மீகத்தை
இப்படியாக
இருப்பை

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-))))

25 comments:

வி.பாலகுமார் said...

என்ன ஜி, இன்னிக்கு ரொம்ப சிரியஸாவே யோசிச்சிட்டீங்க.

வசுமித்ர, நல்ல அற்முகம்.

வினோத் கெளதம் said...

நல்ல கலவை ..

வி.பாலகுமார் said...

// சிரியஸாவே //

ஸாரி, அது சீரியஸாவே...

ஜாக்கி சேகர் said...

காசேதான் கடவுளடா.. சேவையா அப்படின்னா???????கிலோ இன்னா விலை.

Anonymous said...

அரவிந்தில் மட்டுமா இது?

படம் வெளிவரும் முன்னர் டைட்டில் தந்து உதவி இருக்கலாம் பாண்டியன்....

மற்றும் தகவல்கள் உக்கார்ந்து தான் யோசிச்சி இருக்கீங்க....

aravind said...

கிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளுமே இப்படித்தான் ஆகி விட்டன. சென்னையின் மருத்துவமனைகள் இன்னும் மோசம். விஜயா மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைத்தால் இன்னும் எரிகிறது. ஒரு நோயாளியைப் பார்வையிட தலை சிறந்த மருத்துவர்கள் என்று அழைக்கப் படுபவர்கள் செலவிடும் நேரம் மூன்றே மூன்று நிமிடங்கள். உள்ளே என்ன நடந்தது என்று நமக்குப் புரிவதற்குள் வெளியே அனுப்பப்பட்டு விடுவோம். ரோஷம் இருப்பவர்கள் வெட்டியாக சண்டை போட்டு விட்டு வர வேண்டியதுதான்.

திருடர்களாய்ப் பார்த்துதான் திருந்த வேண்டும்...

தியாவின் பேனா said...

SUPER

Karthik said...

சுஜாதாவோட புக் படிச்சிப் பார்க்கிறேங்ணா. :)

கவிதை, செம!

drbalas said...

அரவிந்த் என்று பொதுவாக சொல்லாமல் எந்த ஊரின் கிளை என்று சொல்லியிருந்தால் நன்று

சத்யராஜ்குமார் said...

// விஞ்ஞானி ஒருவரும் அவருடைய இரட்டைச் சகோதரனும் சேர்ந்து பாலு என்னும் மனிதனை //

The Fly என்ற ஆங்கிலப் படத்தில் வரும் டெலிபோர்ட்டிங் சமாசாரத்தை வைத்து எழுதப்பட்டிருக்கும். 1987 -ல் அந்தப் படம் பார்க்கையில் என் மனதிலும் ஒரு சிறுகதை உதித்தது. அப்போது நான் பத்திரிகைகளில் நிறைய எழுதி வந்தேன். ஆனால் ஆங்கிலப் படத்தில் பார்த்த சம்பவம் மற்றும் விபரங்களை ஒட்டி தமிழில் எழுதலாமா கூடாதா என்ற தயக்கத்தினால் ரொம்ப நாள் அக்கதையை எழுதாமலே இருந்தேன். நீங்கள் குறிப்பிட்ட சுஜாதாவின் அந்தக் கதை in 80s or 90s குமுதத்தில் வெளிவந்தது. சுஜாதாவே இப்படி எழுதும்போது நாமும் எழுதலாம் தப்பில்லை என என் மனம் தெளிந்தது. The Fly பார்த்தபோது மனதில் உதித்த கதையை எழுதி விட்டேன். 'காதல் 2000' என்ற என் சற்றே பெரிய சிறுகதை மாலைமதியில் பிரசுரமாகியது.

M.G.ரவிக்குமார்™..., said...

@ DRBALAS - கா.பா. மதுரக்காரர்னு தெரியாதா?............

லேகா said...

"Winged Migration" குறித்து எஸ்.ராவின் "பேச தெரிந்த நிழல்கள்" தொகுதியில் விரிவான கட்டுரை வாசிக்க கிடைத்தது.மதுரை புத்தக சந்தையில் வாங்க தவறிவிட்டேன்.இணைப்பிற்கு நன்றி.

ஹிட்ச்காக்கின் Strangers on a train திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் "சாவதற்கு முன் எல்லாவற்றையும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்க வேண்டும்,கொலையையும் கூட" என சொல்லுவதாக வரும். சுஜாதாவின் "எதையும் ஒருமுறை" நாவலின் ஒன் லைனர் அது தான். இவை தவிர்ப்பதற்கில்லை...:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

// வி.பாலகுமார் said...
என்ன ஜி, இன்னிக்கு ரொம்ப சிரியஸாவே யோசிச்சிட்டீங்க. வசுமித்ர, நல்ல அற்முகம்.//

நன்றி பாலா.. விஷயம் ரொம்ப சீரியசாப் போச்சோ?

//வினோத் கெளதம் said...
நல்ல கலவை ..//

வாங்க புதுமாப்ள..

// ஜாக்கி சேகர் said...
காசேதான் கடவுளடா.. சேவையா அப்படின்னா???????கிலோ இன்னா விலை.//

வருத்தப்பட வேண்டிய விஷயம்ணே..

கார்த்திகைப் பாண்டியன் said...

// தமிழரசி said...
அரவிந்தில் மட்டுமா இது? //

இது பாவம் இல்லையா தமிழ்?

@அரவிந்த்

சரியாச் சொல்லி இருக்கீங்க:-(((

//தியாவின் பேனா said...
SUPER//

நன்றிங்க

// Karthik said...
சுஜாதாவோட புக் படிச்சிப் பார்க்கிறேங்ணா. :)//

கண்டிப்பா வாசிங்க கார்த்தி.. உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//rbalas said...
அரவிந்த் என்று பொதுவாக சொல்லாமல் எந்த ஊரின் கிளை என்று சொல்லியிருந்தால் நன்று//

மதுரைதாங்க..

@சத்யராஜ்குமார்

உங்க தளத்தை புக்மார்க் செஞ்சு இருக்கேங்க. வாசிக்கிறேன்

//M.G.ரவிக்குமார்™..., said...
கா.பா. மதுரக்காரர்னு தெரியாதா?............//

புதுசா வந்திருக்கார் நண்பா.. இருக்குறதுதான்

//லேகா said...
"Winged Migration" குறித்து எஸ்.ராவின் "பேச தெரிந்த நிழல்கள்" தொகுதியில் விரிவான கட்டுரை வாசிக்க கிடைத்தது.மதுரை புத்தக சந்தையில் வாங்க தவறிவிட்டேன்.இணைப்பிற்கு நன்றி//

லேகா.. ”பேசத் தெரிந்த நிழல்கள்” படிச்சுதான் நான் படத்தைக் கண்டுபிடிச்சதே..:-)))

//ஹிட்ச்காக்கின் Strangers on a train திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் "சாவதற்கு முன் எல்லாவற்றையும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்க வேண்டும்,கொலையையும் கூட" என சொல்லுவதாக வரும். சுஜாதாவின் "எதையும் ஒருமுறை" நாவலின் ஒன் லைனர் அது தான். இவை தவிர்ப்பதற்கில்லை...:-)//

ஹ்ம்ம்ம்.. ஒரு சில விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள மனம் மறுப்பதுதான் பிரச்சினையே..

மதுரை சரவணன் said...

some times aravind looks like,but realy its better than others. I had such bad experience recording cycle stand,and complaint about it , they said that they bought tockens to avoid barking form outsiders. sure i show this post to them to imporove better services . i has some soft carner on their service. any how thank u for sharing.

jothi said...

//அது.. சுஜாதாவும் ஒரு சில வெளிநாட்டுக் கதைகளால் "inspire" ஆகி இருக்கிறார் என்பதே.//

நல்ல படிப்பாளிதான் நல்ல படைப்பாளியாக முடியுமோ?? விடுங்க பாசு இதையெல்லாம் பெரிசுபடுத்திகிட்டு,. விஞ்ஞானக்கதைகள் எழுதும் போது வெளி நாட்டின் தாக்கங்கள் தவிர்க்க முடியாதவை,.

//பறவைகளைப் பற்றிய மிக முக்கியமான ஆவணப்படம் என்று "winged migration" பற்றிச் சொல்லலாம்.//

நன்றி, ஏதாச்சும் டோரண்ட்ல கிடைக்குதான்னு பாக்குறேன்

jothi said...

//உயிர், மிருகம் என்று கொஞ்சம் உருப்படியாக எடுத்த சாமியின் படம்,//
உருப்படியானவையா அவை??

//ஜெமோ வேறு இருக்கிறார் என்று நம்பிப் போனதற்கு செருப்படி.//
திரைப்படம் பலரின் உழைப்பு,.. அதில் பலரின் விருப்பங்கள் தங்களின் கதையில் வருவதை தவிர்க்க முடியாது. எழுத்தானளின் சுதந்திரம் அவர் எழுதிய நூலில் மட்டுமே இருக்கும்,.. திரைப்படத்தில் எதிர்பார்க்க முடியாது.

jothi said...

கவிதை அட்டகாசம்,. நானும் போய்பார்க்கிறேன்

டம்பி மேவீ said...

தல .... எங்க அம்மாவுக்கு heart attACK வந்த சமயத்துல apollo ல angiogram பண்ணுறதுக்காக சேர்த்து இருந்தோம் .... அப்ப நடந்ததை எல்லாம் நேரில் உங்களை பார்க்கும் பொழுது சொல்கிறேன்

சுஜாதா விஷயம் நான் இன்னும் அந்த இரண்டு புஸ்தகத்தையும் படிக்கல ...படிச்ச பிறகு தெரிந்து கொள்கிறேன்

காதல் கதைகள்ன்ன சொந்த அனுபவத்தை சேர்ந்து எழுதலாம் ..... பார்போம்

"winged migration" அடுத்த தடவை சென்னைக்கு வரும் பொழுது ...செட்டிநாடு அஞ்சப்பர் ஓட்டல் பக்கம் போவீங்கல ..அப்ப பேசிக்கிறேன்

சிந்து சமவெளி - யாரோ பிட்டு இல்லையேன்னு கவலை பட்டத கேள்வி பட்டேனே ???

அந்த பிளாக்கை follow செய்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//மதுரை சரவணன் said...
some times aravind looks like,but realy its better than others. I had such bad experience recording cycle stand,and complaint about it , they said that they bought tockens to avoid barking form outsiders. sure i show this post to them to imporove better services . i has some soft carner on their service. any how thank u for sharing.//

சரவணன், நான் சந்தித்த பிரச்சினைகளை மட்டுமே சொல்லி இருக்கிறேன்.. இதை எல்லாம் மாற்றிக் கொண்டால் அரவிந்த் இன்னமும் நல்ல பெயர் வாங்கக் கூடும்

//jothi said...
உருப்படியானவையா அவை??
திரைப்படம் பலரின் உழைப்பு,.. அதில் பலரின் விருப்பங்கள் தங்களின் கதையில் வருவதை தவிர்க்க முடியாது. எழுத்தானளின் சுதந்திரம் அவர் எழுதிய நூலில் மட்டுமே இருக்கும்,.. திரைப்படத்தில் எதிர்பார்க்க முடியாது.//

சொல்ல வந்த விஷயங்களைப் பெரட்டிப் போடாமல் ஓரளவு உருப்புடியாய் சொன்ன படங்கள் அவை என்பது என் கணிப்பு.. மத்தபடி எழுத்தாளர் சினிமாக்குள்ளவந்துட்டா நீங்க சொல்ற நிலைமை தான்..

@ டம்பி மேவீ

நாம நேர்ல பேசிக்கலாம் சாமி

romba thimuru said...

I forward your comment to my friend who is working in Aravind. Here is his reply.

"At present here in our hospital Madurai branch daily patient flow around 2000 persons..! In holiday & leave time too more rush (ie nearly 2500 patients)...

These type of problems solving purpose our management newly appointed individual unit Manager for taking care of quality & etc...!"

I hope they will improve the service. Thanks.

கார்த்திகைப் பாண்டியன் said...

@romba thimuru

உங்கள் முற்சிக்கு நன்றி நண்பரே.. எப்படியாவது நல்லது நடந்தால் சரிதான்..

மோகன்ஜி said...

கார்த்திகைப் பாண்டியன் சார்! அந்த மருத்துவ மனைப் பற்றி நல்லவிதமாகவே கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த பதிவைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. எங்கே போய்க கொண்டிருக்கிறோம் நாம்?
வசு மித்ரா கவிதை நன்றாக இருந்தது.

கார்த்திகைப் பாண்டியன் said...

//மோகன்ஜி said...
கார்த்திகைப் பாண்டியன் சார்! அந்த மருத்துவ மனைப் பற்றி நல்லவிதமாகவே கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த பதிவைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. எங்கே போய்க கொண்டிருக்கிறோம் நாம்?//

நல்லா இருந்ததுதான் நண்பா.. ஆனா இன்னைக்கு எல்லாமே பணமயம்..:-((