September 21, 2010

யானைமலை - ஆபத்தில் இருக்கும் அற்புதம்

மதுரை ஒத்தக்கடையில் இருக்கும் யானைமலை வரலாற்று சிறப்பு வாய்ந்ததொரு இடமாக இருக்கிறது. தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மலையில் சமணர் குகைகள், சங்ககால கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள் என்று பல முக்கியமான இடங்கள் இருக்கின்றன. ஏற்கனவே இந்த இடங்கள் சரியான கவனிப்பின்றி கிடக்கும் சூழ்நிலையில், இங்கே ஒரு சிற்ப நகரத்தை அரசு உண்டாக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. இதன் பின்னால் இருக்கும் அரசியல், யானைமலை மீதான கிரானைட் மாபியாக்களின் ஆர்வம், ஒத்தக்கடை மக்கள் சந்தித்து வரும் அரசியல் ஒடுக்குமுறை ஆகிய விஷயங்களைப் பற்றி சென்ற ஆகஸ்ட் மாத உயிர்மையில் முக்கியமான கட்டுரையொன்றை .முத்துகிருஷ்ணன் எழுதி இருந்தார்.

அறிவிப்புப் பலகையே பாதுகாக்கப்படவேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கு

இதன் தொடர்ச்சியாக மதுரையைச் சேர்ந்த நண்பர்கள் முத்துகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு யானைமலையில் நிலவும் பிரச்சினைகள் பற்றி விசாரித்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். என்னவென்று வெறுமனே பேசிக் கொண்டிருப்பதை விட மலைக்கு நேரிலேயே போய் பார்த்தால் என்ன என்று தோன்றியதால், நண்பர்கள் அனைவரோடும் மலையையும் அதில் இருக்கும் வரலாற்றுச் சான்றுகளையும் சுற்றிப் பார்ப்பதென முடிவானது. கடந்த சனிக்கிழமை (18-09 -2010) அன்று காலை கிட்டத்தட்ட அறுபது நண்பர்கள் ஒத்தக்கடையில் ஒன்றாய்க் கூட, யானைமலையின் வரலாற்றுச் சின்னங்களைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம்.



முதலில் நாங்கள் போனது அங்கே இருக்கும் சமணர் குகைக்கு. மலையில் வெட்டப்பட்டு இருக்கும் சுமார் நாற்பது ஐம்பது படிகளில் மேலேறிப் போனால் குகையை அடையலாம். அந்த இடமொரு சுற்றுலாத்தளம் என்றாலும் கவனிப்பின்றிதான் கிடக்கிறது. உள்வாங்கி போய்க் கொண்டே இருக்கும் குகைக்குள் இரண்டு அல்லது மூன்று ஆட்கள் தங்கலாம். குகையின் முகப்பில் சமணதீர்த்தங்கரின் சிற்பம், பாகபலி, அம்பிகா ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் இருக்கின்றன. அதன் கீழேயே வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. குகையின் பக்கவாட்டில் மிக அழகான மகாவீரரின் புடைப்பு சிற்பம் உள்ளது. எல்லா சிற்பங்களிலும் சுதை பூசப்பட்டு இருந்தாலும் காலப்போக்கில் அவை அழிந்து போய் இன்று அதன் எச்சங்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

சமணர் குகையின் முன்பு நண்பர்கள் அனைவரும் அமர்ந்து கொள்ள நண்பர் சுந்தர் காளி இந்த இடத்தின் முக்கியத்துவம் பற்றியும், சமணர்கள் வரலாறு பற்றியும் பேசத் துவங்கினார்.



"நூறு ஆண்டுகள் பழமையான விஷயங்களைக் கூட வெளிநாடுகளில் பத்திரமாக பாதுகாக்கிறார்கள். ஆனால் பல நூற்றாண்டுகள் தொன்மையான சின்னங்கள் பற்றி நம் அரசு கவலை கொள்ளாததாக இருக்கிறது. இந்த மலையில் ரொம்பப் பழமையான பிராமி எழுத்தக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கூட இருக்கின்றன. எழுத்து என்பது ரொம்ப காலம் முன்பே தோன்றி விட்டது. கி.மு.1500 வரையான எழுத்து வடிவங்கள் பற்றிய விவரங்கள் இருக்கின்றன. அதன் பின்னர் ஒரு ஆயிரம் வருடங்களுக்கு என்ன மாதிரியான எழுத்துகள் உபயோகத்தில் இருந்தன என்று தெரியவில்லை. ஆனால் கி.மு.500 முதலான கல்வெட்டுகள் மீண்டும் நமக்கு கிடைத்துள்ளன.

சமணர் குகை

பண்டைய மனிதன் தன்னுடைய எண்ணங்களை பொறித்து வைக்க மூன்று விஷயங்களைப் பயன்படுத்தினான். கல்வெட்டு, காசு மற்றும் மண்பாண்டங்கள். அந்த காலத்து வாழ்க்கையை அறிந்து கொள்ள இவையே நமக்கு சான்றாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் சமணம் மிக முக்கியமான மதமாக இருந்து வந்திருக்கிறது. சுவேதம்பரர்கள், திகம்பரர்கள் என்று இரு பிரிவினராக சமணர்கள் இருந்தார்கள். திக் - திசையையே ஆடையாய்க் கொண்டவர்கள் என்பதே திகம்பரர்கள் ஆனது. எனவே சமண முனிவர்களுக்கு வேண்டிய வசதிகளை அந்தந்த ஊரின் அரசர்களோ தானாதிபதிகளோ செய்து வந்திருக்கிறார்கள். குகையை சீர் செய்து படுக்கை போன்றவற்றை செய்து கொடுத்து, அந்தக் குகையின் முகப்பில் தங்கள் பெயரையும் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

தீர்த்தங்கரர் - இயக்கன் இயக்கியுடன்

மிகப் பழமையான கல்வெட்டுகள் நமக்குக் கிடைத்து இருக்கின்றன. ஒரு கல்வெட்டில் "ஆங்கோல்" என்றொரு வார்த்தை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இது பொதுவாக தமிழில் பயன்பாட்டில் இல்லாதொரு வார்த்தை. தொல்காப்பியத்தில் மட்டுமே காணக் கிடைக்கிறதென்றால் அதன் முக்கியத்துவம் எத்தகையது? அதே போலத்தான் சில வரலாற்று உண்மைகளை எளிதில் விளங்கிக் கொள்ள கல்வெட்டுகள் உதவுகின்றன. அசோகர் காலத்தைய கலிங்கக் கல்வெட்டு ஒன்றில் சேர, சோழ, பாண்டியர்களோடு சதபுதோ என்றொரு வார்த்தை இருந்திருக்கிறது. அது என்னதென்று தெரியாமல் நிறைய நாட்கள் அறிஞர்கள் குழம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டு ஒன்றால் அத்தனை குழப்பமும் ஒரே நாளில் தீர்ந்து போனது. சதபுதோ என்பது சத்யபுத்ரா என்பதின் மருவு என்றும் அதியமான் நெடுமான் அஞ்சியைக் குறிக்கக் கூடியது என்றும் பொருளாகிறது.

மகாவீரர் - அம்பிகா சிற்பங்கள்

சேரர்களின் தலைநகராக இருந்த வஞ்சி - இன்றைய கரூரில் ஒரு கல்வெட்டு கிடைத்து இருக்கிறது. ஒரு சமண முனிவருக்கு ஒரு இளவரசன் முடிசூடிக் கொண்டபோது குகை வெட்டிக் கொடுத்ததைப் பற்றியக் கல்வெட்டு. அதில் மூன்று சேர அரசர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அவர்கள் யாரென்றால், பதிற்றுப்பத்தின் ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் பத்தின் நாயகர்கள். இதன் மூலம் சங்கப்பாடல்கள் என்பவை கற்பனை அல்ல என்பதும், அந்த அரசர்கள் பற்றிய தகவல்களும் கிடைத்து இருக்கின்றன என்பது குறிப்பிடப்பட வேண்டியது. வெகு சமீபமாக வத்தலகுண்டு அருகில் மிகப் பழமையான நடுகற்களும் கிடைத்திருக்கின்றன. ஆக மிகப் பழமையானதொரு கலாச்சாரத்தின் எச்சமாகத்தான் நாம் இருக்கிறோம். அவற்றைக் காப்பது நம் கடமையும் கூட"

சுதை பூசப்பட்ட மகாவீரரின் மிகப்பெரிய சிற்பம்

சமண குகையிலிருந்து கிளம்பிய நண்பர்கள் குழு சென்ற அடுத்த இடம் லாடன் கோயில். மிகப்பெரிய குடைவரைக் கோவிலின் உள்ளே முருகன் தெய்வானையின் (வள்ளி?!!) சிற்பங்கள், வேலின் மீதிருக்கும் சேவல் மற்றும் மயிலின் சிற்பங்கள், மற்றும் இரண்டு மனிதர்களின் சிற்பங்களும் இருக்கின்றன. யோக நரசிம்மர் கோவிலின் பின்னே இருக்கும் இந்தக் கோவிலை யாருக்கும் தெரிவதில்லை என்பது சோகமான விஷயம். முருக வழிபாடு பற்றியும் இந்தக் கோவில் பற்றியும் நண்பரொருவர் பேசத் தொடங்கினார்.



"லாடன் என்பது கல்லாடன் என்பதின் மாறிய வடிவமாக இருக்கலாம். ஏனென்றால் தமிழில் ரா, லா ஆகியவை முதலெழுத்தாக வராது. எனவேதான் ராமன், ராவணன் ஆகியோருக்கு தமிழ் மண்ணுடன் தொடர்பு இருக்காது எனத் தோன்றுகிறது. முருகன் என்பவன் தமிழ் மண்ணின் தெய்வமாக இருந்தவன் பின்பு கடவுளாக்கப்பட்டான். அவரவர் வீட்டில் இருக்கும் குலதெய்வம் என்பதே தெய்வம். அது ஒரு மதம் சார்ந்து பெரிய தளத்துக்குப் போகும்போது கடவுளாக மாற்றப்படுகிறது. நாம் இன்று பார்க்கும் முருகனும் சங்க கால முருகனும் வெவ்வேறு. தமிழ்க்கடவுளான முருகன் பின்பு சிவனின் மகனாக்கப்பட்டான். அவன் ஒரு குறத்தியை மனம் புரிவதா? எனவே அவனுக்கு தெய்வானை என்றொரு பெண்ணிடம் திருமணம் முடிகிறது. அவள் இந்திரனின் மகள். இப்படியாகத்தான் மார்க்கங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

நரசிம்மம் என்பது வெற்றியின் சின்னம். எனவே பாண்டியர்கள் ஏதேனும் வெற்றியைக் கொண்டாடும் வகையில், சமணர்களைக் கழுவில் ஏற்றியதாகக் கூட இருக்கலாம், அதனைக் கொண்டாட இங்கே நரசிம்மத்தின் சிலையை உண்டாக்கி இருக்கலாம். பிற்பாடு வந்த வைஷ்ணவ மக்கள் முருகனைப் பின்தள்ளி இன்று இந்த இடம் நரசிம்மர் கோவிலாக மாறிப் போய் விட்டது. அதன் பின்னர் நரசிம்மர் கோவில் செழித்தோங்க தமிழ்க்கடவுளான முருகன் கோவில் கேட்பாரற்றுக் கிடக்கிறது."

இலாடன் கோயில் குடைவரைக் கோயில்

இதன் தொடர்ச்சியாக சுந்தர் காளி இன்னும் சில விஷயங்களைக் கூறினார்.

"சங்க காலத்து முருகனின் குணாதசியங்களே வேறு. ஒரு சங்க காலப்பாடல். தலைவனைப் பிரிந்த பசலையால் மெலிந்து நோயுற்றவளாக இருக்கிறாள் நாயகி. அவள் வீட்டில் இருப்பவர்கள் அவளுக்கு முருகன் பிடித்திருப்பதாக சொல்லி பூசாரியைக் கொண்டு குணம் செய்விக்கிறார்கள். ஆக முருகன் என்பவன் பெண்களோடு மையல் கொள்ளும் ஒரு தெய்வமாக இருந்து வந்திருக்கிறான். இன்றைக்கு எல்லாம் மாறிவிட்டது. தமிழ்நாட்டில் குடைவரைக் கோவில்கள் கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கின்றன. அதற்காக எழுப்பட்டக் கோவில்கள் இல்லை என்று அர்த்தமில்லை. நமக்குத் தெரிந்து பழமையான எழுப்பப்பட்ட கோவில் கும்பகோணத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் - ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால் சமீபமாக சுனாமி தாக்கிய தமிழ்நாட்டின் வடபகுதியொன்றில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுப்பப்பட்ட கோவில் கிடைத்துள்ளது. அது ஒரு முருகன் கோவில் என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்."


லாடன் கோவிலின் வாசலில் இருந்த இந்த சிதைந்த சிற்பம் என்னை மிகவும் கவர்ந்தது. இது ஒரு பூதகணமாக இருக்கக்கூடும். இதே போன்ற சிற்பங்களை நான் அங்கோர்வாட் கோவில் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் கோவில்களின் புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன்.

அதன் பின்னர் தாமரைக்குளத்தில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. மனதுக்கு நிறைவானதொரு பயணம். முடிவாக, மதுரையைச் சுற்றி இதுபோல இருபது இடங்கள் இருப்பதாகவும், இனி மாதமொரு ஞாயிற்றுக்கிழமை இதுபோன்ற தொன்மையான இடங்களுக்கு சென்று வரலாம் எனவும் நண்பர் முத்துகிருஷ்ணன் கூறினார்.

தொன்மங்களின் உறைவிடமாக இருக்கும் யானைமலைக்கு எந்தத் தீங்கும் வராமல் இருக்கும் என அரசு உறுதி கூற வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையும் ஆசையும். புராதனச் சின்னங்களுக்கும் தொன்மங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமேயில்லை. ஆனால் அவற்றை சரியாகப் பாதுகாப்பதில்தான் சிரத்தை இல்லாதவர்களாக இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். மாறும் என நம்புவோம்.

25 comments:

சுந்தரா said...

சலையில் கடந்துசெல்லும்போது அந்தப்பகுதிக்கு அழகுதரும் ஒரு பொருளாகமட்டுமே ஆனைமலையைப் பார்த்ததுண்டு.

ஆனால், அதில் இத்தனை அற்புதங்கள் புதைந்திருப்பதை இன்றுதான் தெரிந்துகொள்ளமுடிந்தது.

பகிர்வுக்கு மிக்க நன்றி!

Anonymous said...

மிக அவசியமான மற்றும் அருமையான பதிவு பாண்டியன்!
படங்களும் அருமை!... தமிழ் மக்களின் தொன்மையை இதுபோன்ற கோவில்கள், சிலைகள் மூலமாகத்தான் அறிந்து கொள்ள முடிகிறது.
ஒரு சராசரி தமிழனுக்கு ( குடிமகனுக்கு) இருக்கும் அக்கறையில் நூறில் ஒரு பங்கு கூட ஆளும் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்று நினைக்கும் போது வேதனையும் கோவமும் வருகிறது :(

அலைகள் பாலா said...

இதை நான் அவ்வப்போது எண்ணிப் பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டேன். தேவையான பதிவு.

Anbu said...

குற்றம்..
நடந்தது என்ன???

தருமி said...

தொடரட்டும் இந்த பணி.

வாழ்த்துகள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஆனைமலையைப் பார்த்ததுண்டு.

ஆனால், அதில் இத்தனை அற்புதங்கள் புதைந்திருப்பதை இன்றுதான் தெரிந்துகொள்ளமுடிந்தது.//

ஆமாம் எனக்கும் அங்கே இப்படி இருப்பது தெரியாது..
பகிர்வுக்கு நன்றி..

Anonymous said...

அறிவிப்புப் பலகையே பாதுகாக்கப்படவேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கு//
செம காமெடி! நிறைய தகவல்கள் தொகுத்து இருக்கீங்க பாரட்டுக்கள்

M.G.ரவிக்குமார்™..., said...

நல்ல கட்டுரை நண்பா புகைப்படங்களுடன்!.....சரியான காதுகளில் விழ வேண்டும் இந்த செய்தி!

ஹுஸைனம்மா said...

ஊர்போயிருந்த போது, முதல்முறை இதைப்பார்த்து வியந்தேன். அருகில் செல்லாததால், சிற்பங்கள் குறித்து தெரியவில்லை.

//பின்னால் இருக்கும் அரசியல், யானைமலை மீதான கிரானைட் மாபியாக்களின் ஆர்வம், ஒத்தக்கடை மக்கள் சந்தித்து வரும் அரசியல் ஒடுக்குமுறை//

என் உறவினர் விளக்கிச் சொன்னபோது அதிர்ச்சியா இருந்தது. இத்திட்டம் கைவிடப்பட்டதாகச் சொன்னாரே? இல்லையா?

சிவாஜி சங்கர் said...

அற்புதமான பகிர்வு..

துளசி கோபால் said...

அருமை.


சேர நாட்டின் தலைநகர் வஞ்சி தற்போதைய கரூரா?

ஆஹா.... இனி எல்லோரும் சொந்த ஊர் எதுன்னா வஞ்சின்னு சொல்லிடலாம்:-)

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கவனிக்காம போட்டு அழிப்பதில் நம்மை யாரும் மிஞ்சிறமுடியாது:(

மலை விழுங்கிகளிடமிருந்து மலையை முதலில் காப்பாத்தணும்.

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வு கா.பா. எப்பவும் போல் தொகுத்திருக்கும் விதம் க்ளாஸ்!

சுவாமிநாதன் said...

அருமையான பதிவு. விடுமுறை நாட்கள் என்றால் நாங்களும் வருவோம். முன்கூட்டியே பயணம் பற்றி தெரியப்படுத்தவும்.

சக்தி உள்ள எந்த இடமும் தானாகத் தான் மறையுமே தவிர கண்டிப்பாக எந்த மனிதனாலும் அதை அழிக்கமுடியாது.

மதுரை சரவணன் said...

நல்லதொரு பயணம் . அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள். தொன்மை காக்கப்பட் வேண்டியுள்ளது . அது நம் கடமை. அடுத்து செல்லும் போது அழைக்கவும். மிஸ் செய்துவிட்டேன். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

Vijay said...

nice post. do you have more pictures of the cave temple. Please do share with us.

rgds
vj
www.poetryinstone.in

kannamma said...

இது தான் நம்ப நாட்டுக்கும் மத்த நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.நாம எப்போதுமே கைல இருக்கிறத மறந்துட்டு பறக்குரதுக்குதான் ஆசபடுவோம்
இந்த நிலை மாற அரசோடு சேர்ந்து மக்களும் உதவிக்கரம் நீட்டனும்.
அது நடக்குமான்னு தான் தெரியல ..அக்கறையான பகிர்வு

NONO said...

மதுரையில் நான்னு நாள் செழவழிச்சேன் சுற்றிப்பாக்க, இப்படிப்பட்ட ஒரு வரலாற்று இடம் இருக்குது என்று ஒரு நபரும் சொல்லவே இல்ல,திருப்பரங்குன்றம் "மலை"க்கு பின்னாலும் சமணபடுக்கைகள் இருக்கிதாம்! திருப்பரங்குன்றம் சென்றும் அதைபாக்க தவறிவிட்டேன்(இத்தனைக்கும் குன்றின் மெல் ஏறி சில சுனை மற்றும் குன்றில் குடைந்த ஒவியங்களை புகைப்படம் எடுத்துள்ளேன் அப்போது சமணர்களைபற்றி அதிகம் தெரியாது)எந்ததகவலையும் அப்பிடி ஒரு இடம் உள்ளது என்று எந்த தகவலும் இல்லை.(விக்கிபீடியாவிலும் இல்லை:-( தொல்லியல் துறை தன் வேலையை சரியாக செய்யவில்லை போல் தொன்றுகிறது.

கானகம் said...

http://www.tamilhindu.com/2010/02/yanaimalai-in-danger/

இஸ்லாமியப் படையெடுப்புகளில் நடந்த இந்துமதக் கோயில்களின் அழிப்பும், ஒழிப்பும் இன்று நவீன பகுத்தறிவுவாதிகளால் அதைவிடத் திறமையாகச் செய்யப்படுகிறது. அன்று நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருந்தோம் எதிர்த்தோம். இன்று நாத்திகம் பேசுபவர்களின் அரசு நடைபெறும்போது, கோவில்கள் நிர்வகிக்கப் படும்போது இது எல்லாம் நடக்கும்தான்.

Thekkikattan|தெகா said...

தேவையான பதிவு!

இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பல குன்றுகள் க்ரனைட் கல் குவாரிகளாக்கப்பட்டு கொண்டிருப்பது வேதனையிலும் வேதனை. புதுக்கோட்டை ட்டூ திருச்சி ரோட்டில் அநியாத்திற்கு பல மலைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

அதன் சுற்றுச் சூழல் அத்தியாவசியம் கருதி கூட அவைகளின் மேல் கை வைக்காமல் இருக்கக் கூடிய அடிப்படை அறிவு கூட இல்லாத அரசியல் வாதிகளை பெற்றிருக்கிறோம் என்பது கூடுதல் வேதனை.

பதிவிற்கு நன்றி!

thiyaa said...

காலத்துக்கு ஏற்ற பதிவு

நீச்சல்காரன் said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்

தருமி said...

நம் ‘ஆனை மலையை’ உலகம் முழுமைக்கும் எடுத்து சென்றமைக்கு வாழ்த்துகள்.

உமர் | Umar said...

தமிழ்மண விருதிற்கு வாழ்த்துகள்.

க.பாலாசி said...

மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் தலைவரே... ஒரு நல்ல இடுகைக்கும் பகிர்வுக்கும் கிடைத்த அங்கீகாரம் இது...

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. யானைமலைக்கு என்னை அழைத்துப் போன நண்பர் அ.முத்துகிருஷ்ணனுக்கு இநேரத்தில் என் மனமார்ந்த நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.. யானைமலை என்னும் அற்புதம் தப்பிப் பிழைத்தால் அதுவே நமக்கு மிகப்பெரும் கொடையாக இருக்கும்..:-)))