November 29, 2010

கிகுஜிரோ (1999)

ஒரு குழந்தையின் கண்களுக்குள் வரையப்பட்டு இருக்கும் தேவதையின் படத்தோடு துவங்குகிறது "கிகுஜிரோ". அடுத்தது நமக்கு காத்திருப்பது என்ன என்கிற எதிர்பார்ப்பில்தானே மொத்த வாழ்க்கையின் சூட்சுமம் இருக்கிறது. பயணங்களும் அதுபோலத்தான். அவை எப்போதுமே தங்களுக்குள் பல சுவாரசியங்களை ஒளித்து வைத்திருக்கின்றன. கோடை விடுமுறையில் தன் தாயைத் தேடி கிளம்பும் ஒரு சிறுவனும், தேவதை போல அவனது வாழ்க்கையில் வந்து சேரும் மனிதனொருவனும் இணைந்து பயணிப்பதுதான் படம்.


பள்ளியில் படிக்கும் மாசோ தன்னுடைய பாட்டியோடு வசித்து வருகிறான். கோடை விடுமுறை என்பதால் மாசோவோடு விளையாட யாருமில்லை. அவனோடு கூடப் படிக்கும் மாணவர்கள் எல்லாம் வெளியூருக்குப் போயிருக்கிறார்கள். தனிமையில் வாடும் மாசோ தானும் எங்காவது போக வேண்டுமென சொல்கிறான். அவனுடைய தந்தை விபத்தில் இறந்து போனதையும் தாய் வெகு தொலைவில் அவனுக்காக கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதையும் சொல்லும் பாட்டி, மாசோ வளர்ந்து பெரியவனாகி எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்கிறாள்.

வீட்டில் தனித்திருக்கும் மாசோவுக்கு எதேச்சையாக தனது தாயின் புகைப்படமும் அவளுடைய விலாசமும் கிடைக்கிறது. ஒரு பையில் தன்னுடைய உடைமைகளையும் கொஞ்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தாயைத் தேடிக் கிளம்புகிறான். வழியில் சில வளர்ந்த பையன்கள் மாசோவை மறித்து அவனிடமிருக்கும் பணத்தை பறிக்கப் பார்க்கிறார்கள். அப்போது மாசோவின் பக்கத்து வீட்டில் முன்பு வசித்த பெண்ணொருத்தி தன் கணவனோடு வந்து அவனைக் காப்பாற்றுகிறாள். அவனுடைய பயணம் பற்றி தெரிந்து கொண்டு தொலைதூரத்தில் இருக்கும் அவ்வூருக்கு தனித்துப் போக வேண்டாமென தன் கணவனையும் கூட அனுப்புகிறாள்.

வினோதமான பழக்கங்களைக் கொண்டிருக்கும் அந்த மனிதர் மாசோவை அழைத்துக் கொண்டு சைக்கிள் ரேசுக்குப் போகிறார். ஊருக்குப் போவதற்காக தன் மனைவி கொடுத்த காசு அத்தனையையும் ரேசில் தொலைத்து விட்டு மாசோவிடம் இருக்கும் பணத்தையும் பிடுங்கிக் கொள்கிறார். ஆனால் மாசோ சொல்லும் நம்பர்களில் அவருக்கு ஜாக்பாட் அடிக்கிறது. பெண்கள், குடி என அந்தப் பணத்தை செலவழிக்கிறார். மறுநாளும் அவரும் மாசோவும் ரேசுக்குப் போகிறார்கள். ஆனால் இம்முறை அவருடைய பணம் அத்தனையையும் தோற்று விடுகிறார். மாசோ ராசியில்லாதவன் என்று அவனைத் திட்டுகிறார்.

அன்றிரவு ஒரு கிழவன் மாசோவிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிக்கிறான். அவனை அடித்துப்போடும் மிஸ்டர் (அப்படியே அழைப்போம்) கிழவனிடமிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்கிறார். அழும் மாசோவைத் தேற்றி கண்டிப்பாக அம்மாவிடம் கூட்டிப் போவதாகக் சொல்கிறார். இருவரும் ஒரு காரில் போகிறார்கள். வழியில் டிரைவர் எங்கோ இறங்கிபோக அந்தக் காரைத் தானே ஓட்டிக்கொண்டு கிளம்புகிறார் மிஸ்டர். வழியில் அந்தக் கார் ரிப்பெராகிவிட ஒரு ஆடம்பர ஹோட்டலில் அறையெடுத்து தங்குகிறார்கள். அங்கும் மிஸ்டரின் அட்டகாசங்கள் தொடர்கின்றன.

தொடரும் பயணத்தில் லிப்ட் தர மறுக்கும் ஒரு லாரிக்காரனின் கண்ணாடியை அடித்து நொறுக்குகிறார் மிஸ்டர். சிறுவனின் மீது பரிதாபம் கொண்டு ஒரு காதல் ஜோடி அவர்களை வண்டியை ஏற்றிக் கொள்கிறது. ஒரு பார்க்கில் அவர்களோடு சிரிக்க சிரிக்க விளையாடுகிறான் மாசோ. அதில் கலந்து கொள்ளாமல் மிஸ்டர் தனியாகவே இருக்கிறார். சிறுவனுக்கு இறக்கைகளுடன் கூடிய பையை பரிசாகக் கொடுத்து ஒரு பழைய பேருந்து நிறுத்ததில் அவர்களை இறக்கிவிட்டு விட்டு அந்த ஜோடி போகிறார்கள்.


அங்கு காத்திருக்கும் இன்னொருவனிடம் இருந்து உணவைத் திருடித்தரும் மிஸ்டரின் வேடிக்கைகள் தொடருகின்றன. சிறுவனை சிரிக்க வைக்க டாப் டான்ஸ் ஆடுகிறார். வழியில் போகும் வண்டியை நிப்பாட்ட பார்வையற்றவராக நடிக்கிறார். எதுவும் சரிப்பட மாட்டேன் என்கிறது. அன்றிரவு நல்ல மழை பெய்கிறது. சிறுவன் தன் தாயின் படத்தை மிஸ்டரிடம் காட்டி தான் அவளைப் பார்த்ததே இல்லை என்கிறான். அவனும் தன்னைப் போலத்தான் என்று உணருகிறார் மிஸ்டர். அடுத்த நாள் ஒரு நாடோடி எழுத்தாளனைச் சந்திக்கிறார்கள். அவன் மாசோவின் ஊரில் அவர்களை விட்டுப்போகிறான்.

மாசோவின் அம்மாவைத் தேடி செல்லும் மிஸ்டர் அவளுக்கு வேறொரு குடும்பம் இருப்பதைத் தெரிந்து கொள்ளுகிறார். அவளை மாசோவும் பார்த்து விடுகிறான். ஆனால் அவள் வேறு யாரோ என்று சமாதானம் சொல்லி மிஸ்டர் மாசோவை அழைத்துப் போகிறார். மனமுடைந்து கிடக்கும் மாசோவைத் தேற்ற அவருக்கு வழி தெரியவில்லை. பாதையில் மோட்டர் பைக்கில் பயணப்படும் இருவரை சந்திக்கிறார். அவர்களை மிரட்டி ஒரு மணியை வாங்கிக் கொண்டுவந்து மாசோவிடம் தருகிறார். துயர காலங்களில் மணியை ஆட்டினால் தேவதைகள் வருமென மாசோவிடம் ஆறுதல் சொல்லுகிறார்.

பக்கத்தில் நடக்கும் திருவிழாவுக்கு சிறுவனைக் கூட்டிக்கொண்டு போகிறார் மிஸ்டர். அவனைச் சிரிக்க வைப்பதற்காக கடைக்கார்களிடம் வம்பு செய்கிறார். அவன் தன்னுடைய ஆட்களோடு வந்து மிஸ்டரை அடித்துப் போடுகிறான். படியில் வழுக்கி விழுந்ததாக அவர் மாசோவிடம் பொய் சொல்கிறார். இரவு நேரத்தில் பூட்டிக் கிடக்கும் மருந்துக் கடையைத்தேடி மருந்து வாங்கி வந்து மாசோ அவருக்கு உதவுகிறான். இருவருக்கள்ளும் ஒரு அணுக்கம் உண்டாகிறது.

வீட்டுக்குத் திரும்புவதற்கான பயணம் ஆரம்பிக்கிறது. வழியில் அந்த நாடோடி எழுத்தாளனும், பைக்கில் வந்த இரண்டு பயணிகளும் இவர்களைச் சந்திக்கிறார்கள். சிறுவனை குஷிப்படுத்த அங்கேயே சில நாட்கள் கேம்ப் போட அனைவரும் முடிவு செய்கிறார்கள். தாயை மறந்து சிறுவன் அவர்களோடு விளையாடத் துவங்குகிறான். அதே வேளையில் பைக்கில் வந்தவர்களில் ஒருவனை அழைத்துக் கொண்டு தன் தாய் தங்கி இருக்கும் மனநல விடுதிக்குப் போகிறார் மிஸ்டர். ஆனால் அவளைப் பார்க்காமலே திரும்பி வந்து விடுகிறார்.

பாரம்பரிய விளையாட்டுகளை சிறுவனோடு சேர்ந்து அனைவரும் விளையாடுகிறார்கள். பயங்கரமான கொண்டாட்டத்தோடு எந்தவிதமான நெருக்கடியும் இல்லாத கணங்களை அவர்கள் வெகுவாக ரசிக்கிறார்கள். கோடை முடிவடையும் நேரம். முதலில் பைக்கில் வந்தவர்கள் விடைபெற்றுக் கொள்கிறார்கள். டோக்கியோவில் மிஸ்டரையும் சிறுவனையும் இறக்கிவிட்டு எழுத்தாளனும் கிளம்புகிறான். தாங்களும் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டதென சொல்லும் மிஸ்டர் மீண்டும் ஒருமுறை இதேபோல போகலாமெனவும் சொல்லுகிறார். நன்றி சொல்லும் மாசோவிடம் பாட்டியை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மிஸ்டர் கிளம்புகிறார். திடீரென மாசோ அவருடைய பெயரென்ன என்று கேட்கிறான். அவர் சிரித்தபடியே சொல்கிறார்.. ”கிகுஜிரோ”.


மாசோ சந்தோஷமாக வீட்டை நோக்கி ஓடி வருவதோடுதான் படம் ஆரம்பிக்கிறது. மொத்தப்படமும் மாசோவின் டைரியில் இருக்கும் படங்களின் வாயிலாக ஃப்ளாஷ்பேக் முறையில் சொல்லப்படுகிறது. ஒரு பயணத்தின் மூலம் வெவ்வேறு மனிதர்களையும் அவர்களின் குணாதிசயங்களையும் படம் பேசிப் போகிறது. அவர்களில் நிறைய பேர் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். மொத்தக்கதையிலும் ஒரு மெல்லிய சோகம் இழையோடினாலும் எங்கும் அது வெளிப்படுவதில்லை. முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே எடுக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக மிஸ்டரின் உடல்மொழி அட்டகாசம். ஆணி ஒன்றை வைத்து ஒரு கார் பாலத்தில் இருந்து கீழே விழும் காட்சியில் விழுந்து விழுந்து சிரித்தேன்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்தோடு நாம் ஒன்றிப்போவதற்கு பெரிதும் துணை புரிகின்றன. படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே கேமிரா இருப்பதே தெரியாத அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார்கள். கிகுஜிரோவாக நடித்திருப்பவர்தான் படத்தின் இயக்குனர் டகேஷி கிடானோ. ஒரு கட்டுக்குள் அடங்காததாக இன்னதென்று சொல்ல முடியாததாக கிகுஜிரோவின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தனக்கு உதவும் மக்களையும் அவர் திட்டிக்கொண்டே இருக்கிறார். யாரைப் பற்றியும் தனக்கு அக்கறை இல்லை என்று காட்டிக்கொண்டாலும் எல்லாரும் தன்னை கவனிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். கடைசியாக அவருக்கும் மாசோவுக்கும் ஓர் இணக்கம் உண்டாகும் இடத்திலும் தன் தாயைப் பார்க்கப் போகுமிடத்திலும் மனிதர் அசரடிக்கிறார்.

பொதுவாக கிடானோவின் படங்கள் அதீத வன்முறை கொண்டதாகவே இருக்குமாம். அதற்கு நேர்மாறாக தொலைந்து போன சம்பிரதாயங்களையும் அன்பையும் பற்றி விரிவாகப் பேசுகிறது கிகுஜிரோ. ஜப்பானில் பல விருதுகளை வென்ற இந்தப்படம் 1999இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதுக்கான போட்டியிலும் கலந்து கொண்டது.

மேலதிகத் தகவல்களுக்கு நன்றி - விக்கிப்பீடியா

17 comments:

test said...

Nice review! :))

krish said...

நந்தலாலா இந்த கோலிவுட் இயக்குனர்கள் எப்போது திருந்துவார்கள் நந்தலாலா ?

Balakumar Vijayaraman said...

/யாரைப் பற்றியும் தனக்கு அக்கறை இல்லை என்று காட்டிக்கொண்டாலும் எல்லாரும் தன்னை கவனிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்.//

நல்லாயிருக்கே !

Prabu M said...

நான் இன்னும் நந்தலாலா பார்க்கல...
கிகுஜிரோவைப் பார்த்த திருப்தி வந்திருச்சு.... விவரிப்புகள் அருமை நண்பா...
நந்தலாலா படத்தில் எல்லாருடைய ரிவ்யூயையும் சேர்த்துக் கொடுத்து உங்கள் பார்வையையும் பதித்ததையும் ரசித்தேன்....

Thomas Ruban said...

அருமை, பகிர்வுக்கு நன்றி சார்.

கார்த்திகைப் பாண்டியன் said...

@ஜீ

நன்றிங்க..

@கிருஷ்

நீங்க ரொம்பக் கனவு காணுறீங்க நந்தலாலா

@பாலா

கிடானோவின் பாத்திரம் வெகு அருமையாகக் கையாளப்பட்டிருக்கு.. மொதல்ல தமிழ்ல பாருங்கையா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரபு . எம் said...
நான் இன்னும் நந்தலாலா பார்க்கல...
கிகுஜிரோவைப் பார்த்த திருப்தி வந்திருச்சு.... விவரிப்புகள் அருமை நண்பா...//

நன்றி பிரபு.. தவறாம நந்தலாவைப் பார்திட்டு உன்னோட பார்வையையும் பதிவு செய்ப்பா..

//Thomas Ruban said...
அருமை, பகிர்வுக்கு நன்றி சார்.//

வருகைக்கு நன்றிங்க..

தருமி said...

வாசிக்காமல் scroll பண்ணிட்டேன் - இப்படி முழு திரைக்கதை வசனம் எழுதினா வேறென்ன செய்றதுங்க??

தருமி said...

//பிரபு . எம் said....
கிகுஜிரோவைப் பார்த்த திருப்தி வந்திருச்சு....//

இப்படி ஒருத்தரை சொல்ல வைக்கலாமா?

கார்த்திகைப் பாண்டியன் said...

தருமி அய்யா.. உலக சினிமா பற்றிய அறிமுகங்கள் இது மாதிரித்தான் எழுதப்படுது.. அது ஒரு டெம்ப்ளேட்..:-((

Karthik said...

Nice write up. :-)

அத்திரி said...

புரொபசரின் சமூக சேவை புல்லரிக்க வைக்கிறது....வரிசையா படம் பாத்து நமக்காக எவ்ளோ சிரமப்படுகிறார்....... ப்ரீத்திட்ட சொல்லி புரொபசரை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க

கார்த்திகைப் பாண்டியன் said...

@ கார்த்திக்

நன்றி நண்பா..

@ அத்திரி

பாராட்டுறது எல்லாம் ஓகே.. அவசியம் கடைசியில பத்த வைக்கணுமா?

தருமி said...

//உலக சினிமா பற்றிய அறிமுகங்கள் இது மாதிரித்தான் எழுதப்படுது.. அது ஒரு டெம்ப்ளேட்..:-(( //

(ப்ரீத்திட்ட சொல்லி) அந்த டெம்ப்ளேட்டை மாத்தச் சொல்லணும்!

முகவை மைந்தன் said...

//வாசிக்காமல் scroll பண்ணிட்டேன் - இப்படி முழு திரைக்கதை வசனம் எழுதினா வேறென்ன செய்றதுங்க??//

நீங்களுமா?? முன்னோடி ஒருத்தர் இருக்காருல்ல்ல;-)

உருட்டிட்டு வந்துதுனால பதிவைப்பதி என்ன பின்னூட்டம் போடறதுன்னு தெரில. அடுத்தமுறை முயல்றேன்.

முகவை மைந்தன் said...

//தருமி அய்யா.. உலக சினிமா பற்றிய அறிமுகங்கள் இது மாதிரித்தான் எழுதப்படுது.. அது ஒரு டெம்ப்ளேட்..:-((//

ம்.. இதும் அளந்து பாக்க வேண்டியது தான்.

முகவை மைந்தன் said...

அய்யோடா, இப்பத் தான் பாக்குறேன்.. மதுரைக்காரங்கிறதுல பெருமைன்னு சொல்லிட்டு பொன்னியின் செல்வன்னு பதிவுக்கு பேரா?? பழையர்கள் பேரு ஏதும் தமிழ்ல கிடைக்கலையா??