November 15, 2010

நெற்குஞ்சம் - தேன்மொழி

இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர் யாத்ரா மதுரை புத்தகத் திருவிழாவுக்கு வந்திருந்தார். அங்கே அவர் வாங்கிய பல கவிதைத் தொகுப்புகளில் "துறவி நண்டு"ம் இருந்தது (காலச்சுவடு வெளியீடு). தொகுப்பின் பெயர் வித்தியாசமாக இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது எனப் பார்க்கலாமே என்று படிக்க ஆரம்பித்து மண்டையில் இருக்கும் இச்ச சொச்ச முடியும் நட்டமாய் நட்டுக் கொண்டு நின்றதுதான் மிச்சம். சத்தியமாக ஒன்றுமே புரியவில்லை. இப்படியாகத்தான் கவிஞர் தேன்மொழி எனக்கு அறிமுகமானார். எனவே நண்பரொருவர் தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பான "நெற்குஞ்சம்" நன்றாக இருப்பதாக சொல்லி வாசிக்கத் தந்தபோது மிரட்சியாக இருந்தது. எப்படி இருக்குமோ என்ற பயத்திலேயே நிறைய நாட்கள் வாசிக்காமலேயே வைத்திருந்தேன்.

புத்தகங்கள் வாசிப்பதற்கென ஒரு தனி மனநிலை வேண்டுமென்பதில் எனக்குத் தீவிர நம்பிக்கை உண்டு. வாசிப்பு என்பது ஒரு முழுமையான அனுபவமாக இருக்கும்போது, வாசிப்பவன் அந்த புத்தகத்தில் முழுவதுமாய் கரைந்து போகும் தருணங்கள் அற்புதமானவை. அப்படி வாசிக்கவே நான் ஆசைப்படுவேன். திடீரென நேற்று காலையில் எதையாவது ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் உந்தித் தள்ள இந்தப் புத்தகத்தின் ஞாபகம் வந்தது. பொறுமையாக வாசிக்கலாம் என உட்கார்ந்தேன். எடுத்து வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நான் செய்த தவறு புரிய ஆரம்பித்தது. ரொம்ப அழகான, மனதை அள்ளிச் செல்லக் கூடிய எளிமையான மொழி. எந்த ஒரு புத்தகத்தையும் இனிமேல் முன்முடிவோடு அணுகக் கூடாது என்பதை இந்தப் புத்தகம் எனக்கு சொல்லித் தந்திருக்கிறது.

நெற்குஞ்சம் - தேன்மொழியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இதுவரை யாருமே சொல்லாத கதைகள், படுபயங்கரமான புதிய கதை சொல்லும் உத்திகள்.. இப்படியெல்லாம் இந்தத் தொகுதியில் எதுவும் இல்லை. எல்லாமே வெகு சாதாரணமான கதைகள். ஊர்ப்பெரியவர்களால் அசிங்கப்படும் பெண், காதலைச் சொல்ல மறந்த இருவரின் சந்திப்பு, தனக்கான அங்கீகாரத்தை தேடும் பெண்கள் என நாம் நன்கறிந்த கதைமாந்தர்கள்.. ஏற்கனவே எத்தனையோ பேர் பேசித் தீர்த்த கதைகள்தான். ஆனாலும் விவரணைகளாலும் தன் மொழியின் சாதுர்யத்தாலும் கவனம் ஈர்த்து நம்மை அசரடிக்கிறார் தேன்மொழி. வண்ணதாசனின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதை எல்லாக் கதைகளுமே சொல்லிப் போகின்றன.

ஆசிரியர் தன் அனுபவங்களையும் பார்த்த விஷயங்களையும் கதைகளாக்கி இருப்பார் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே தன்னிலையிலேயே சொல்லப்படுகின்றன. அதுவும் பெண்களின் பார்வையில்தான் சொல்லப்படுகின்றன. வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள்... இந்தப் புத்தகம் முழுதுமே ஒரு வார்த்தைகளின் கூடாரமாகத்தான் இருக்கிறது. இரவில் எங்கோ தூரத்தில் ஒலிக்கும் வயலின் இசையென, நிசப்தமாய் ஓடும் ஆற்றின் அமைதி போல, தவிப்பின்போது ஆறுதலாய் தடவிக் கொடுக்கும் கரங்கள் போல.. வார்த்தைகள் வாசிப்பவனை ஆற்றுப்படுத்துகின்றன.

இந்தத் தொகுப்பில் இருக்கும் மிகமுக்கியமான கதையென "தாழி" என்றொரு கதையைச் சொல்லலாம். சுனாமியில் காணாமல் போன மகளைத் தேடி வரும் பெரியவர், இறந்தவர்களின் போட்டோ ஆல்பம் மூலமாக அடையாளம் காட்டும் பணியைச் செய்யும் அரசு அலுவலர் என இரண்டே பாத்திரங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதை. அந்தப் பெண்ணின் போட்டோ எந்த இடத்திலும் இருந்து விடக் கூடாது என வேண்டிக் கொள்கிறார் அலுவலர். ஆனால் அந்தப் பெண் இறந்து போனதை உறுதி செய்யும் பெரியவரின் அழுகை இன்னும் கொடுமையாக "இப்படி அம்மணமா செத்து கிடக்காளே எம்மவ" எனக்கதறும்போது இயற்கையின் மீதான கடுங்கோபமும் ஆற்றாமையும் வாசிக்கும் நம்மையும் உக்கிரமாகத் தாக்குகிறது.

இன்னொரு முக்கியமான கதை பிணவறையில் ஊழியம் செய்து பிழைக்கும் ஆரோக்கியம் என்பவனைப் பற்றிய “நாவாய்ப்பறவை”. தனக்கானதொரு தனி உலகை சிருஷ்டித்துக் கொண்டு வாழ்பவன். உறவென யாருமே இல்லாதவனின் நிலை பற்றிய விவரணை மிக அருமையாக இந்தக் கதையில் வெளிப்பட்டு இருக்கிறது. இருந்தும் கதையின் கடைசியில் ஒலிக்கும் பிரச்சார தொனி தேவையற்றதாகவே எனக்குப் படுகிறது. இதைப்போலவே தனிமனுஷியான ஆயிஷாவின் வாழ்க்கையைப்பேசும் “மீன்கொத்திகள் வரும் நேரமு”ம் அருமையாக வந்திருக்கிறது. ஒழுக்கம் என்கிற விஷயத்தை மீறி ஒரு பெண்ணின் அகம்சார்ந்த தேடல் என்பதாக இந்தக் கதை விரிகிறது.

மாய யதார்த்த பாணியில் பயணிக்கிறது “பேச்சிமரம்”. தன்னுடைய எல்லாமுமாய் இருந்த ஒருத்தி பேச்சிமரவடிவில் (பனை) வாழ்வதாக நம்பும் பெரிவரைப் பற்றிய கதை. கதை சொல்லலில் மற்ற கதைகள் எல்லாம் நேர்க்கோட்டில் பயணிக்க இதுமட்டுமே முன்னும் பின்னுமாய் மாறிவரக்கூடிய கதை. தலைப்புக் கதையான “நெற்குஞ்சம்” ஒரு சின்னஞ்சிறிய குருவியின் மரணம் நமக்குள் ஏற்படுத்தக்கூடிய குற்றவுணர்வையும், தனிமையின் கொடுமையையும் பேசிப்போகிறது. கோவில் என்ற சம்பிரதாயமான இடத்தில் சந்தித்துக் கொள்ளும் இரண்டு முன்னாள் காதலர்களின் தவிப்பை அழகாக பதிவு செய்கிறது “நாகாபரணம்”.

மரணம், ஆண் பெண் இடையேயான உறவு என்பதைப்பேசும் கடல்கோள், நாகதாளி இரண்டுமே எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஒரே மாதிரியான களம், பலமுறை பேசி சலித்த விஷயங்கள் என்பதால் அவை என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. அதைப்போலத்தான் “நிலக்குடை”யும். வேலைக்காரப்பெண் - அவளை அடைய நினைக்கும் பெரிய வீட்டுக்காரர் என ரொம்பவே அரதப்பழசான கதை. இந்தத் தொகுப்பின் மிக மோசமான கதையென “மரப்பாச்சி மொழி”யை சொல்வேன். பெண்ணியம் என்கிற விஷயத்தை மிக நீண்ட பிரச்சாரத்தின் மூலமாக நிறுவ முயலும் இந்தக்கதையை தொகுப்பில் சேர்க்காமலே இருந்திருக்கலாம்.

இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியிருக்கும் ரவிக்குமாருக்கு,

தனக்குப் பிடித்த படைப்பை கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் யாரோடு ஒப்பிடுகிறோம், என்ன மாதிரியான இடத்தில் அதை வைக்கிறோம் என்பது ரொம்பவே முக்கியம. கடந்த பத்தாண்டுகளில் இது போல புத்தகம் வந்ததில்லை, புதுமைப்பித்தன் மரபில் வரும் கதை, ஜெர்மானிய லத்தின் அமெரிக்க கதைகளுக்கு ஈடாக.. இதெல்லாம் என்ன ஐயா? உங்களுக்கே ரொம்ப அதிகமாகத் தெரியவில்லையா? தட்டிக்கொடுங்கள். ஆனால் தலையில் தூக்கி வைத்து ஆடாதீர்கள். அதுவே அந்த படைப்பாளியின் வீழ்ச்சிக்கு காரணமாக மாறிவிடலாம். ஒரு இளம்படைப்பாளியை காலி பண்ண அவரை விமர்சனம்தான் பண்ண வேண்டும் என்கிற அவசியமில்லை. அதிகமான பாராட்டு, கவனிப்பு மற்றும் தகுதிக்கு மீறிய வியந்தோதுதலும் கண்டிப்பாக மனிதனை இல்லாமல் செய்து விடும். இதை நீங்கள் எதிர்காலத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்.

கடைசியாக.. நான் இங்கே எந்தக்கதையின் வரிகளையும், நான் சிலாகித்த இடங்களையும் குறிப்பிட்டு எழுதவில்லை. மாறாக அவற்றின் கருவைப் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறேன். காரணம்.. வெறுமனே தனித்தனியாக வரிகளை எடுத்து வாசிப்பதை விட மொத்தமாக வாசிக்கும்போது அவை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக உணரக்கூடும் என்பதாலேயே எழுதாமல் விடுகிறேன். அது சரியானதுதான் என்பதை நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது நிச்சயம் உணருவீர்கள். கதைகள் சொல்லப்பட்ட விதத்துக்காகவும் மொழியின் அழகியலுக்காகவும் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

நெற்குஞ்சம் - தேன்மொழி
மணற்கேணி வெளியீடு
ரூ.90/-

6 comments:

மதுரை சரவணன் said...

தேன்மொழியின் நாவலை நீங்கள் தட்டிக் கொடுத்துள்ளீர்கள்... வாசிப்போம். நல்ல புத்தக விமர்சனம். உங்கள் வாசிப்பு உங்கள் எழுத்தை அழகுப்படுத்துகிறது... வாழ்த்துக்கள்

நிலா மகள் said...

அருமையாக ஒரு படைப்பாளியை அறிமுகம் செய்துள்ளீர்கள்... வாழ்த்துகள்! ரவிக்குமாருக்கான அறிவுறுத்தல் அசத்தல். உள்ளது உள்ளபடியான தங்கள் விமர்சனமும் ,அப்புத்தகத்தை வாங்கி வாசிக்கும் ஆவலைத் தூண்டிடத் தவறவில்லை.

ஜெய்சக்திராமன் said...

Nice Review Sir...

Sriakila said...

விமர்சனம் நன்று.

தகவலுக்கும் நன்றி!

கார்த்திகைப் பாண்டியன் said...

@சரவணன்

நன்றி தலைவரே

@நிலாமகள்

அறிமுகம் எல்லாம் இல்லீங்க.. நான் வாசிச்ச விஷயத்தயையும் உள்ளுக்குள்ள தோணுனதையும் பதிவு பண்ணியிருக்கேன்.. அவ்வளவே..

@ஜெய்சக்திராமன்

நன்றிடா..

@ஸ்ரீஅகிலா

வருகைக்கு நன்றிங்க..

பிரபு . எம் said...

நல்ல அறிமுகம் கார்த்தி....
படிக்கிறேன்..