December 4, 2010

பாபா சாகேப் அம்பேத்கர்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியவர். சாதிப் பிரச்சினைகளின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இவருடைய சிலைகளுக்கு இரும்புவேலி அமைத்திருப்பார்கள். இதற்கு மேல் அம்பேத்கரைப் பற்றி எதுவும் தெரியாமலே வளர்ந்திருக்கும் என்னைப் போன்ற இளைய தலைமுறையினருக்கு, அந்த மக்கள் தலைவனின் வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது "டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்". கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த இந்தப்படம் வெளியானதில் .மு.. நண்பர்களுக்கும் இயக்குனர் லெனினுக்கும் பெரும்பங்கிருப்பதாகத் தெரிகிறது. அவர்களுக்கு என் நன்றிகள்.

அம்பேத்கரின் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்போக்காகவும், அவருடைய அரசியல் வாழ்க்கையை வெகு தீவிரமாகவும் இந்தப்படம் பதிவு செய்கிறது. சொந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் சாதிரீதியாகவும் இனரீதியாகவும் அம்பேத்கர் சந்தித்த பிரச்சினைகள், சாதீய அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள், அரசியலில் காங்கிரசுக்கு எதிரான நிலை, காந்திக்கும் அம்பேத்கருக்கும் இருந்த தீவிர கருத்து மோதல்கள் என நிறைய விஷயங்களைப் படமாக்கி இருக்கிறார்கள்.அம்பேத்கர் ஆசிரியராக பணிபுரியும் கல்லூரியில் மற்ற ஆசிரியர்கள் தாங்களும் அவரும் ஒரே பானையில் தண்ணீர் குடிக்க வேண்டியிருப்பதை எதிர்க்கிறார்கள். மாணவர்களோ ஒரு தீண்டத்தகாதவன் எப்படி ஆங்கிலத்தில் தங்களுக்குப் பாடம் நடத்த முடியும் என கேலி செய்கிறார்கள். வெளிநாட்டில் படிக்கும்போது இந்தியன் நாயினும் கீழானவன் என அசிங்கப்படுத்தப்படுகிறார். அத்தனையும் மீறி தன்னுடைய மேல்படிப்பை வெற்றிகரமாக முடித்து பாரிஸ்டர் பட்டம் பெறுகிறார் அம்பேத்கர்.

சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமூக விடுதலை என்பது கிடைக்காமல் இந்திய விடுதலை என்பது சாத்திமில்லை என நம்புகிறார் அம்பேத்கர். பம்பாய் மேலவையின் ஒரு அங்கத்தினராக பதவி ஏற்றுக் கொள்கிறார். தீண்டத்தகாதவர்களின் ஆலயப் பிரவேசத்தை ஆரம்பித்து வைக்கிறார். ஊர் பொதுக்குளத்தில் அவர்களுக்கும் தண்ணீர் குடிக்க உரிமை வேண்டும் எனப் போராடுகிறார். உயர் சாதி ஹிந்துக்களின் தீவிர எதிர்ப்பை சம்பாதிக்கிறார். சாதிப் பிரிவினை அவசியம் என்பதை ஆதரிக்கும் காங்கிரசின் கொள்கைகள் அவருக்கு எரிச்சலூட்டுகின்றன.

காந்தி எதிர்க்கும் சைமன் கமிஷனில் ஆஜராகி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வாழ்வாதாரத் தேவைகள் பற்றி அம்பேத்கர் எடுத்துரைக்கிறார். அவர்களுக்கான இட ஒதுக்கீடு அவசியம் எனத் தீவிரமாக வாதாடுகிறார். ஆனால் அம்பேத்கரின் கருத்துகளை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருக்க அம்பேத்கர் விட்டுக் கொடுக்க நேர்கிறது.

சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டங்களை வடிவமைக்கும் பொறுப்பை நேரு அரசு அம்பேத்கரிடம் தருகிறது. ஆனால் அம்பேத்கர் பரிந்துரைக்கும் இந்து மசோதா ஜாதி இந்துக்களின் எதிர்ப்பால் கைவிடப்படுகிறது. கோபம் கொள்ளும் அம்பேத்கர் தன்னுடைய பதிவியைத் துறக்கிறார். இந்துவாக இறக்க மாட்டேன் எனச் சொல்லும் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவுகிறார. அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவருடைய மரணம் நிகழ்ந்து எனும் குறிப்போடு படம் முடிகிறது.

தமிழில் வசனம் எழுதி இருப்பது யார் எனத் தெரியவில்லை. அம்பேத்கர் பேசுவதில் நிறையவே கூர்மையான வசனங்கள்.

"நமக்கு ஆலயப்பிரவேசத்தை விட அரசியல் அங்கீகாரம்தான் முக்கியம்.."

"மகாத்மாவின் மனதில் என்ன இருக்கிறது என்பதை சாதாரண மனிதன் எப்படி கண்டு கொள்ள முடியும்.."

"ஹிந்துக்கள் மனம் திருந்துவார்கள் என்று சொல்கிறீர்களே.. ஐந்து வருடங்களுக்குப் பிறகு சங்கராச்சாரியாரின் இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரை அமர வைத்து மற்றவர்களை அவர் காலில் விழ வைக்க உங்களால் முடியுமா?"

"மற்றவர்கள் உங்களை மதிப்பது இருக்கட்டும்.. முதலில் நீங்கள் தன்மானத்தோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்.."

ஒரு சில இடங்களில் பேச்சுத் தமிழும் மற்ற இடங்களில் எழுத்துத் தமிழும் பேசுவதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதிலும் வெள்ளையர்கள் இழுத்து இழுத்து தமிழ் பேசுவது போல மொழிபெயர்த்திருப்பது தேவையற்றது.


மகாத்மா என நாம் கொண்டாடும் காந்தியின் மீது மிகத் தீவிரமான விமர்சனங்களை இந்தப்படம் முன்வைக்கிறது. மத ரீதியான காந்தியின் கொள்கைகள் அவரைக் கிட்டத்தட்ட ஒரு வில்லனாகவே காட்டுகின்றன. அம்பேத்கரின் கொள்கைகளை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருக்கிறார். அவருடைய உடல்நிலை மோசமாகிக் கொண்டே போகிறது. அம்பேத்கர் தன்னுடைய கொள்கைகளை தளர்த்திக் கொள்ள வேண்டும் என அனைவரும் வற்புறுத்துகின்றனர். வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொண்டு காந்தியை சந்திக்கும் அம்பேத்கர் சொல்கிறார்."அடிக்கடி தேவைப்படும் போதெல்லாம் உண்ணாவிரதம் என்கிற ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டாம்.." காந்தியின் புனித பிம்பத்தை ஒற்றை நொடியில் இந்த வசனங்கள் சிதைத்துப் போகின்றன.

பொதுவாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனிதர்கள் தனி வாழ்க்கையில் குடும்பத்தின் மீது கவனம் செலுத்த முடியாமல் போகும் என்பதற்கு அம்பேத்கரும் விதிவிலக்கில்லை என்பதை அவருடைய அண்ணனுக்கும் அவருக்கும் நடக்கும் பிரச்சினைன் மூலம் புரிய வைக்கிறார் இயக்குனர். சிறுவயதில் இறந்து போகும் பிள்ளைகள், கடைசி வரை அம்பேத்கரின் நல்லதையே யோசித்த மனைவி ரமாபாய், இறுதிக் காலத்தில் தன்னை கவனித்துக் கொள்வதற்காக அவர் மணந்து கொள்ளும் டாக்டர் சவிதா (இந்த இடத்தில் எனக்கு பெரியாரின் ஞாபகம் வந்தது) என அம்பேத்கரின் தனிப்பட்ட வாழ்க்கையின் சில பகுதிகள் நமக்கு அறியக் கிடைக்கின்றன.

சிறந்த படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்குனருக்கான தேசிய விருதுகளை இந்தப்படம் வென்றிருக்கிறது. அம்பேத்காரைப் பற்றி அதிகம் தெரிந்திராத காரணத்தால் இந்தப்படம் எனக்கு ரொம்பப் பிடித்து இருந்தது. இரண்டாம் பாதியின் நீளம் மட்டுமே கொஞ்சம் இடைஞ்சல். மம்முட்டியின் கேரியரில் இது முக்கியமான படம். கண்ணியம் மற்றும் மிடுக்கான உடல்மொழியுடன் கூடிய வெகு அழுத்தமான நடிப்பு. தலை வழுக்கையுடன் வரும் கடைசி ஒப்பனை மட்டும் அவருக்குப் பொருந்தவில்லை. மனைவி ரமாபாயாக சோனாலி குல்கர்னி நடித்திருக்கிறார். டாக்டர் சவிதாவாக நடித்திருக்கும் பெண் யாரென்று தெரியவில்லை. வெகு லட்சணம். காந்தி, நேரு, ராஜேந்திர பிரசாத் என முகச்சாயல் பொருந்திப்போகும் நடிகர்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பது படத்துக்கான நம்பகத்தன்மையை கூட்டுகிறது.

மதுரை அலங்கார் தியேட்டரில் இந்தப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. இது அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய படம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாராருக்கான படம் என்பதைப் போல முன்னிறுத்தப்படுவது சோகமான விஷயம். நான் போனபோது ஒரு சாதிப் பேரவையின் சார்பாக அம்பேத்கர் படத்துக்கு மாலை மரியாதை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இன்னொரு குழுவுக்கும் அம்பேத்கர் எங்களவர் என்று சண்டை வேறு வந்ததுதான் பெரிய கொடுமை. எந்த நிலையை மாற்ற வேண்டி அம்பேத்கர் போராடினாரோ, அதில் இன்னும் சொல்லிக் கொள்ளும்படியான மாற்றங்கள் வரவில்லை என்பதே நிதர்சனம். சாதி மத பேதமற்ற பாரதம், அனைவருக்கும் சம உரிமை என்று கனவு கண்ட அந்த மனிதரின் ஆசைகள் என்றுதான் நிறைவேறக் கூடுமெனத் தெரியவில்லை.


12 comments:

ஜீ... said...

//"மற்றவர்கள் உங்களை மதிப்பது இருக்கட்டும்.. முதலில் நீங்கள் தன்மானத்தோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்.."//
super! :-)

Anonymous said...

எந்த நிலையை மாற்ற வேண்டி அம்பேத்கர் போராடினாரோ, அதில் இன்னும் சொல்லிக் கொள்ளும்படியான மாற்றங்கள் வரவில்லை
//
yes

வார்த்தை said...

//அம்பேத்கர் எங்களவர் என்று சண்டை வேறு வந்ததுதான் பெரிய கொடுமை//

:(

தமிழ்ப்பறவை said...

நல்ல பகிர்வு கா.பா... பார்க்கவேண்டிய படம்...இன்னும் பார்க்கவில்லை...நன்றி

Karthik said...

Nalla review. Parkka try panrengna.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நல்ல பகிர்வுங்க.....வாழ்த்துக்கள்.

Rathnavel said...

Sir,
I wish to read a detailed book about Dr B.R.Ambedkar, please guide me.
Thanks.
N.Rathnavel.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஜீ & ஆனந்த்
நன்றி நண்பர்களே..

வார்த்தை..
எனக்கும் வருத்தம்தாங்க..

தமிழ்ப்பறவை & கார்த்திக்
கண்டிப்பா பாருங்க நண்பர்களே.. மிக முக்கியமான அரசியல் படம்

நித்திலம்
நன்றிங்க..

ரத்னவேல்
எனக்கு அவரைப் பற்றிய புத்தகங்கள் பற்றி அவ்வளவா பரிச்சயம் இல்லைங்க.. நண்பர்கள்கிட்ட கேட்டு சொல்றேன்..

டம்பி மேவீ said...

தல .... கிழக்கு பதிப்பகத்துல அவரை பத்தி ஒரு புக் போட்டு இருக்காங்க..... அதை படிங்க ..பிறகு அதுல தந்திருக்கும் reference books கொஞ்சம் புரட்டி பாருங்க ... ஒரு ஐடியா கிடைக்கும்

வேண்டுமானால் இங்க போய் பாருங்க http://www.ambedkar.org/Babasaheb/Books_on_Babasaheb.htm

டம்பி மேவீ said...

see this also


http://keetru.com/index.php?option=com_content&view=article&id=9564:2010-06-15-13-05-04&catid=1130:2010-06-15-11-06-12&Itemid=396

Gopi Ramamoorthy said...

உங்களைப் பத்தி ரொம்பப் பெருமையா எழுதி இருக்கேன். வந்து ஒரு எட்டு பாத்துட்டுப் போயிடுங்க

http://vavaasangam.blogspot.com/2010/12/blog-post_06.html

கார்த்திகைப் பாண்டியன் said...

டம்பி மேவி
தரவுகள் பயனுள்ளவை..நன்றி தல..

கோபி..
வாசிச்சேன்.. இலக்கிய வியாதினு சொல்லிட்டீங்களே.. அவ்வ்..