December 9, 2010

ஆழி சூழ் உலகு

தன் முன் நிற்கும் யாருக்குமே தாங்கள் ஒன்றுமேயில்லை என்னும் எண்ணத்தை உண்டாக்கக்கூடியது கடல். வார்த்தைகளுக்குள் அடைக்க முடியாத இயற்கையின் பேரற்புதம். சிறு குழந்தையின் தொடுதலென கால்கள் வருடிச் செல்லும் கடல் அழகின் மொத்த உருவம். அதே நேரத்தில் கோபம் கொண்டு பெருவெள்ளமாய் மாறி கண்ணில் தென்படும் அனைத்தையும் விழுங்கி செரிப்பதும் இதே கடல்தான்.

இதுதான் இயல்பென வரையறுக்க முடியாத கடலின் மடியின் வாழும் மீனவர்களும் கடலையொத்த இயல்புகளைக் கொண்டிருப்பதில் வியப்பேதும் இல்லை. கடலை நம்பி வாழும் பரதவர் வாழ்வையும் ஒரு மீனவ கிராமத்தின் வரலாறையும் பதிவு செய்யும் நாவல்தான் ஜோ டி குருஸின் "ஆழி சூழ் உலகு".

ஆமந்துறை (முட்டம் அல்லது உவரி?!) என்னும் ஊர் - அதில் வாழும் மக்களின் கதை என மூன்று தலைமுறைகளைப் பற்றி நாவல் பேசிப்போகிறது. தொம்மந்திரை, சூசை, கோத்ரா, சிலுவை என்று தான் பார்த்த மனிதர்களையும், தன் ஊரின் வாழ்க்கையையும் வரலாற்றுச் சம்பவங்களோடு சற்றே புனைவு கலந்து பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர். எந்தவொரு விஷயத்தையும் மையப்படுத்தாமல் இருக்கும் பின் நவீனத்துவத்தின் கூறுகள் இந்த நாவலெங்கும் விரவிக் கிடக்கின்றன.

1985 இல் கட்டுமரத்தில் பயணிக்கும் மூன்று பேர் ஒரு சுழலில் சிக்கிக் கொள்வதோடு கதை ஆரம்பிக்கிறது. அங்கிருந்து அறுபது வருடங்கள் பின்னோக்கி பயணப்படும் கதை ஆமந்துறை என்னும் மீன்பிடி கிராமத்தின் கதையைச் சொல்கிறது. அம்மக்களின் வாழ்வும் அந்த காலகட்டங்களில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்களும் கலந்து (உதா:தனுஷ்கோடியை கடல் கொண்டு போனது) நமக்கொரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காணக்கிடைக்கின்றன.

இங்கே கதையின் நாயகன் நாயகி என யாருமில்லை. மாறாக பலதரப்பட்ட மனிதர்களும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையுமே நம் பார்வைக்குக் கிடைக்கின்றன. அவர்களின் வாழ்வில் நடக்கும் விஷயங்களை சரி தவறு என பிரிக்கவில்லை என்பதிலும் நல்லவர் கெட்டவர் என யாரையும் வகைப்படுத்தவில்லை என்பதிலுமே இந்த நாவல் ஒரு உச்ச நிலையை அடைகிறது. மனிதர்களைத் தவிரவும் மூன்று முக்கியமான கதாபாத்திரங்களை இந்த நாவல் முன்வைக்கிறது. அவை - கடல், மரணம் மற்றும் காமம்.

கடலை இங்கே காலத்தின் உருவகமாகவும் கொள்ளலாம். காலத்தைப் போலவே கடலும் ஊரில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் சாட்சியாக நிற்கிறது. பரதவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கடலே அவர்களை சாகடிக்கும் கொலைக்கூடமாகவும் இருக்கிறது. இருந்தும் மீனவர்களால் கடலைப் பிரிவதென நினைத்துக் கூடப் பார்க்க முடிவதில்லை. அவர்களின் ஆரம்பமும் முடிவும் கடலாகத்தான் இருக்கிறது என்பதை நாவல் ஆழமாகப் பதிவு செய்கிறது.

பரதவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கும் இன்னொரு விஷயம் மரணம். இயற்கையாகவும், பேரழிவின் வடிவிலும், விபத்தெனவும் மரணம் ஒரு தீரா சாபமென மீனவ மக்களை ஆட்கொள்கிறது. அதைப் போலவே காமமும் ரொம்பத் தீவிரமாக நாவலில் சித்தரிக்கப்படுகிறது. உடலின் வேட்கை ஒரு மிருகமென மனிதர்களை துரத்துகிறது. காமத்துக்கு தன்னையே பலியிடும் மனிதர்கள் சந்திக்கும் குற்றவுண்ர்வையும் எல்லா மனிதர்களுமே வாய்ப்பு கிடைக்காதவரை மட்டுமே யோக்கியர்கள் என்பதையும் அழகாக சொல்லி இருக்கிறார் ஜோ டி குருஸ்.

வெகு எளிமையான நடையில் சொல்லப்பட்டு இருக்கும சுவாரசியமான நாவல். ஒரு இனக்குழுவின் வாழ்வியல் இப்படித்தான் இருக்கும் எனத் தெளிவாக விளக்குகிற இந்த புத்தகத்தில் அவர்கள் வாழ்வோடு சம்பந்தப்பட்ட மற்ற நுட்பமான தகவல்களும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கடலின் இயற்கை அமைப்பு, கடலில் வாழும் மீன் வகைகள், அங்கு வீசும் காற்றின் வாகு, கட்டுமரம் செய்யும் முறை, வலை பின்னுதலின் சூட்சுமம் எனப் பல விஷயங்களை நாவல் நுணுக்கமாக சொல்லிப் போகிறது.

இந்த புத்தகத்தில் அரசியல்ரீதியாக குருஸ் சொல்லியிருக்கும் விஷயங்கள் மிக முக்கியமானவை. போலிஸ்காரர்கள் மீன்பிடிக்கும் மக்களை ரவுடிகளாகவே பார்க்கிறார்கள். அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உதவிகளை கிடைக்க விடாமல் செய்கின்றார்கள். அந்த மக்களுக்கு நல்லது செய்ய முயற்சிக்கும் அதிகாரிகளும் ஒழுங்காக செயல்பட முடியாமல் வெளியூருக்கு தூக்கியடிக்கப்படுகிறார்கள். இன்றைக்கும் இந்த நிலை மாறியிருப்பதாகத் தெரியவில்லை.

கிருஸ்துவ மதம் பரதவர்களிடம் பரப்பட்டது பற்றியும் பங்குத்தந்தைகள் மீதும் வெகு காட்டமான விமர்சனங்களை வைக்கிறார் குருஸ். சேவை மறந்து பெண்கள் பின்னால் சுற்றும் பாதிரிகள், மாற்று மதத்தை சாத்தான்களின் கூடாரம் என கேலி பேசும் அகங்காரம், தங்கள் தேவைகளுக்கென மக்களை பயன்படுத்திக் கொள்ளும் மதத்தின் நேர்மை எனப் பல விஷயங்களை வெகு காட்டமாக உரத்து கேள்வி கேட்பதாலேயே இந்தப் புத்தகம் வெளியான பிறகு ஜோ டி குருஸ் அவரது சொந்த ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாவலின் பிரச்சினைகள் என்று எதைச் சொல்லலாம்? முதலில் வட்டார மொழி. புத்தகத்தின் பின்னால் அகரமுதலி கொடுக்கப்பட்டிருந்தாலும் நமக்கு சில வார்த்தைகள் இறுதிவரை என்னவென்று புரிபடுவதே இல்லை. தூத்துக்குடித் தமிழை உள்வாங்கிக் கொண்டு நாவலின் உள்நுழையும்வரை சற்றே சிரமம்தான். இரண்டாவதாக தன் வரலாற்று ஞானத்தை பறைசாற்ற குருஸ் கொண்டிருக்கும் முனைப்பு. தான் அறிந்த அத்தனை விஷயங்களையும் சொல்லி விட வேண்டுமென்ற ஆவல். எனவே ஒரு சில இடங்களில் கதைக்கு தேவையில்லாத தகவல்கள் துருத்திக் கொண்டு தெரிகின்றன.

கடைசியாக குருஸ் காமத்தை சொல்லி இருக்கும் விதம். ஒரு இலக்கியப் பிரதியில் காமத்தைப் பற்றிய சித்தரிப்புகள் வரும்போது அது வாசகனுக்கு கிளர்ச்சியை உண்டாக்குமெனில் அங்கே எழுத்தாளன் தோற்றுப் போகிறான். துரதிர்ஷ்டவசமாக ஆழி சூழ் உலகில் அது போலான சம்பவங்கள் நிறையவே உண்டு. டீச்சருக்கும் சூசைக்கும் உண்டாகும் உறவு, ஜஸ்டினிடம் தன்னை இழக்கும் வசந்தா எனப் பல இடங்களில் மலையாளப்பட வாசனை. எதிர்காலத்தில் குருஸ் வெகு கவனமாக இருக்க வேண்டிய இடமிது.

மற்றபடி தன் உடம்பின் மீது எப்போதும் ஊர்ந்து செல்லும் கடலின் உப்புக்காற்றை உணர முடிந்த ஒருவராலேயே இத்தகையதொரு கலைப்படைப்பை எழுத முடியும். இதை குருஸின் முதல் நாவல் என்று நம்புவது கடினமாகவே இருக்கிறது. அதிகமான கதாபாத்திரங்களும் சம்பவங்களும் இருந்தும் எந்தப் பிரச்சினையோ குழப்பமோ இல்லாமல் கதை சொல்லும் பாங்கு ஜோ டி குருஸை ஒரு திறமையான கதைசொல்லியென பறைசாற்றுகின்றன. தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான நாவல்களில் கண்டிப்பாக ”ஆழி சூழ் உலகு”க்கும் ஓர் இடமுண்டு.

ஆழி சூழ் உலகு
ஜோ டி குருஸ்
தமிழினி வெளியீடு
ரூ.320/-

10 comments:

ஜீ... said...

//தன் முன் நிற்கும் யாருக்குமே தாங்கள் ஒன்றுமேயில்லை என்னும் எண்ணத்தை உண்டாக்கக்கூடியது கடல். வார்த்தைகளுக்குள் அடைக்க முடியாத இயற்கையின் பேரற்புதம்//
super!! :-))

அ.வெற்றிவேல் said...

தங்களை அய்யா தருமியுடன் சந்த்தித்து ரொம்ப சந்தோசம்.. ஆழி சூழ் உலகு மிக முக்கியமான நாவல்.. வெளிவந்த போது மிகவும் கவனிக்கப்பட்ட நாவல்.. தாங்களும் அத சாரத்தை உள்வாங்கி அருமையாக அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் வாழ்த்துகள் அய்யா

வி.பாலகுமார் said...

வாசிக்க வேண்டியவைகளில் இருக்கிறது. விரிவாக பிறகு விவாதிப்போம்.

sakthi said...

நல்ல விமர்சனம் கா பா ::)))

நேசமித்ரன் said...

விமர்சனத்தின் தரமும்,கைக் கொண்டிருக்கும் அறமும் மாறாது எழுதியிருக்கிறீர்கள்.

வரலாற்று திணிப்புகளற்று எழுதுவது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை . சாண்டில்யன் ஒரு விதம் ,ராகுல்ஜி ஒரு விதம், வரலாற்றையே புனைவாக்குபவர் கல்கி , கௌதம நீலாம்பரன் , விக்ரமன் எல்லாம் வாசிக்க மிகவும் தட்டையாகப் படும் எனக்கு

தமிழ் மகன் ,குரூஸ் இருவருக்கும் ஒப்பீடுகள் ஏதும் இல்லை என்ற போதும் மாற்றங்கள் கொணர்ந்தவர்கள்

Karthik said...

நல்ல ரிவ்யூங்ணா. பகிர்வுக்கு நன்றி. :)

செ.சரவணக்குமார் said...

ஆழி சூழ் உலகு கவனிக்கப்படவேண்டிய மிக முக்கியமான நாவல். நாவல் பற்றிய உங்கள் பார்வை மிக அருமை.

லேகா said...

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.வாசிக்க வேண்டிய பட்டியலில் உள்ளது இந்நூல்.

Gopi Ramamoorthy said...

இந்த ப்லாகருக்கு இலக்கிய வியாதி புடிச்சிடிச்சிடோய்.

On a serious note, பகிர்வுக்கு நன்றி காபா.

தோப்பில் முகம்மது மீரானின் துறைமுகம், ஒரு கடலோர கிராமத்தின் கதை, கூனன் தோப்பு நாவல்களும் கடல், கடல் சார்ந்த மக்கள் வாழ்க்கை பற்றியதுதான். சரியாக நினைவில்லை. 2007 இல் படித்தது

ஈரோடு கதிர் said...

நீண்ட நாட்களாய் படிக்க நினைக்கும் புத்தகம்