January 3, 2011

புத்தாண்டு - நினைவுக்குறிப்புகள்

இரவு பத்து மணிக்கு கோரிப்பாளையத்தில் நண்பர்களின் சங்கமம். மதுவின் ருசி தெரியாதவர்களுக்கு நட்பே போதை. குமார் மெஸ்ஸில் புரோட்டா குருமாவும் சிக்கன் கைமாவும். மாப்ள ஏதாவது படத்துக்குப் போகலாமா? அந்தக் கருமத்துக்குத்தான் எப்பவும் போறோமே, வேற ஏதாவது சொல்லுங்கடா. தல்லாகுளம் கிரௌண்டு, தமுக்கம் ரெண்டுலயும் புரோக்ராம். என்ன பண்ண? தல்லாகுளம் காசு தமுக்கம் ப்ரீ. அப்ப வண்டிய தமுக்கத்துக்கு விடுங்கடா.
எந்த வருஷமும் ஓயாமல் சிணுங்கிக் கொண்டிருக்கும் அலைபேசியின் இந்த வருஷ அதிசய மவுனம். மொத நாளும் மெசேஜ் அனுப்பக் காசாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து வராத கால்கள். நினைத்தே பார்க்காத மக்களிடம் இருந்து வந்த வாழ்த்துகள். வலி. நானும் யாரையும் கூப்பிடவில்லை. யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்.
தமுக்கத்தில் தங்கமயிலின் கலைவிழா கொண்டாட்டம். பிள்ளை குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக மக்கள். கொண்டாட்டம் என்பதையும் மீறி இப்போது சம்பிரதாயம். மிகச்சரியாக பனிரெண்டு மணிக்கு இதுவரைக்கும் யாராலும் அடித்துக் கொள்ள முடியாத சகலகலா வல்லவனின் “ஹாய் எவ்ரிபடி”யோடு பிறந்தது புத்தாண்டு. கிளம்பி வெளியே வந்தால் சாலையெங்கும் வாகனங்களில் அலைந்து திரியும் ஹேப்பி நியூ இயர்கள்.
வண்ணங்களில் மிதக்கும் வானம். ஹோட்டல்களின் வாணவேடிக்கைகள். சோடியம் மஞ்சளில் குளித்துக் கொண்டிருந்த ஆற்றுப்பாலத்தில் கேக் வெட்டி வருவோர் போவோர் மீதெல்லாம் இழுவி விளையாடும் இளைஞர் கூட்டம். திட்டிக் கொண்டெ கடந்து போகிறார் பெரியவர் ஒருவர். பாலத்தின் மீதிருந்து எட்டிப் பார்த்தால் சலனமின்றி ஓடிக் கொண்டிருக்கிறது வைகை.
நடப்பதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதாய் பழ மூடைகளை இறக்கிக் கொண்டிருக்கும் யானைக்கல்லின் வியாபாரிகள். பாராவில் போலிஸ்காரர்கள். கோவிலில் சாமி கும்பிட்டு விபூதி பூசி புத்தாண்டை வரவேற்கும் பெண் போலிசார். வண்டியில் நான்கு பேர் போனாலும் கண்டு கொள்ளாத சுதந்திரம்.

பாண்டி பஜாரின் வாசலில் சீரியல் லைட்டுகளின் இதயத்தில் எழுதப்பட்ட இனிய புத்தாண்டு வாழ்த்துகள். தங்கரீகல் முன்பாக வரிசையாக ராக்கெட்டுகள் விடும் ஆட்டோ டிரைவர்கள். பெரியார் நிலைய நுழைவில் வெளிநாட்டுக்காரர்களோடு ஆட்டம் பாட்டம் வீடியோவும் உண்டு. உங்கள் தேவனாகிய இயேசுவின் வருகை தூரத்தில் இல்லை பாவம் செய்தவர்களே சீக்கிரம் என்னிடத்திலே வாருங்கள் அலறிக் கொண்டிருக்கும் தேவாலய ஸ்பீக்கர்கள்.
பாலத்தின் மீது போதையில் ஆடும் நாளைய பாரதம். தள்ளாடியபடியே சென்று போலிசிடமே கைகொடுத்து வாழ்த்து சொல்லும் இளமைத் திமிர். வண்டியில் போன பெண் ஒருவளை மறித்து கை கொடுக்க வெருண்டு வேறு பக்கம் திருப்பிக் கொண்டு போகிறாள். பாலத்தின் மறுபக்கம் எதுவுமே தெரியாதது போல அமைதியில் எல்லிஸ் நகர்.
எப்போதும் புரிந்து கொள்ள முடியாத மாயத்தன்மையோடு, எல்லாம் கலந்ததாக, வசீகரமாக.. மதுரை.

17 comments:

Prabu M said...

நான் மும்பையில் தூங்கிக்கொண்டிருந்தேன் நிம்மதியாக! :)

முன்னாடி புத்தாண்டு நள்ளிரவில் இப்படி "நகர்வலம்" சென்றதுண்டு....
மதுரையில் அலம்பல்கள் கூடிவிட்டதோ!! வருத்தம்தான்...

//எப்போதும் புரிந்து கொள்ள முடியாத மாயத்தன்மையோடு, எல்லாம் கலந்ததாக, வசீகரமாக.. மதுரை.//

இது க்ளாஸ்!!

ஊருல இல்லாத என்னைமாதிரி ஆளுகளுக்கு ஊரைச்சுற்றி ஒரு ரவுண்ட் காட்டயதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி கார்த்தி ரொம்ப லைவ்!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

தருமி said...

தங்ஸோடு கோவிலில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தேன். நீங்க ஊர் சுத்தியிருக்கீங்க. ம்ம்...ம்.. சாமி கும்பிடணும்'பா/

அடுத்து - பொய் சொல்லக்கூடாது.//பாலத்தின் மீதிருந்து எட்டிப் பார்த்தால் சலனமின்றி ஓடிக் கொண்டிருக்கிறது வைகை.// இப்படியெல்லாம் சொல்லிட்டா மக்கள் நம்பிருவாங்களோ?

கார்த்திகைப் பாண்டியன் said...

பிரபு.. ஊரு முன்ன மாதிரியில்ல.. நிறையவே மாறியிருக்கு.. ஆனாலும் இன்னும் ஒட்டிகிட்டு இருக்குற அந்த பழைய விஷயங்கள்தான மதுரைக்கு அழகே..:-))

தருமி அய்யா.. சாமி கும்புடணுமா? எங்க அந்த பால் வடியுற மூஞ்சிய கொஞ்சம் காட்டுங்க..? அப்புறம் வைகை பத்தி.. கொஞ்சமா இன்னும் தண்ணி ஓடிக்கிட்டுத்தான் இருக்கு.. நம்புங்க..:-)))

நையாண்டி நைனா said...

/*தங்ஸோடு கோவிலில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தேன். நீங்க ஊர் சுத்தியிருக்கீங்க. ம்ம்...ம்.. சாமி கும்பிடணும்'பா/*/


அண்ணே... அந்த பழைய பாக்கிய சொக்கநாதர் கிட்டே கேட்டு வாங்கிருங்க அப்புறம் சொக்கர் கிட்டே சொல்லுங்க இப்போதைக்கு எல்லாம் வெல ஏறி போச்சி... அதனாலே ஆயிரம் பொற்காசுக்கு பதிலா ஒரு லட்சத்தி எம்பதினாயிரம் கோடி.... வேணாம்... வேணாம்.... ஒரு லட்சத்தி எம்பதினாயிரம் பொற்காசு கேட்டு வாங்கிடுங்க

நையாண்டி நைனா said...

/*அப்புறம் வைகை பத்தி.. கொஞ்சமா இன்னும் தண்ணி ஓடிக்கிட்டுத்தான் இருக்கு.. நம்புங்க..:-)))
*/

பார்த்தீங்களா எங்க அஞ்சா நெஞ்சரோட மகிமையை....

நையாண்டி நைனா said...

நினைவு குறிப்புகள்னு போட்டிருக்கீங்களே... இது இருபது வருஷத்திற்கு முந்தி நடந்ததா?

நையாண்டி நைனா said...

/*பிரபு எம் said...
நான் மும்பையில் தூங்கிக்கொண்டிருந்தேன் நிம்மதியாக! :)*/

மும்பைலே எங்கே இருக்கீங்க?

ஹேமா said...

கார்த்தி...சுகமா.நிறைய நாள் ஆச்சு.எல்லாத்துக்கும் சேர்த்து
இனிய மனம் நிறைந்த வாழ்த்துகள் !

மதுரை சரவணன் said...

//பாண்டி பஜாரின் வாசலில் சீரியல் லைட்டுகளின் இதயத்தில் எழுதப்பட்ட இனிய புத்தாண்டு வாழ்த்துகள்//

நான் புத்தாண்டை மதுரையில் தவறவிட்டேன் .... வருத்தம் தான் . இருந்தாலும் பெங்களூரில் புதிய் நண்பர்களுடன் கொண்டாடினேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

நைனா
என்ன அடி அடிச்சாலும் குசும்பு இன்னும் குறையலையே..

ஹேமா
நல்லா இருக்கேன் சகோதரி.. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்..:-))

சரவணன்
சீக்கிரம் ஊருக்கு வந்து சேருங்க தலைவரே

நேசமித்ரன். said...

இன்னும் ஒரு வாரத்துக்கு வத்தாம இரு தாயே இந்தா வந்துருவேன் :)

நன்றி கா.பா லைவ் ரிலே

Prabhu said...

நானும் வந்தேனே. வைகைல தண்ணி ஓடினதெல்லாம் பொயடிக் லைசன்சில வேணா விட்டுக்கலாம். நிஜம்னு சொல்லக் கூடாது. அந்த பத்து நாள் மழை நீரெல்லாம் நான் வரும் முன்னையே வடிஞ்சிருச்சு!

ஆனா, ஒரு நல்ல பிக்சரைசேஷன் இருந்தது இந்த write up ல!

செ.சரவணக்குமார் said...

மதுவின் ருசி அறியாதவர்களுக்கு நட்பே போதை!!

ரைட்டு..

துயில் படிச்சாச்சாண்ணே.

கார்த்திகைப் பாண்டியன் said...

நேசன்
சீக்கிரமா வாங்க தலைவரே..

பப்பு
ஊருக்கு வந்திருந்தா கூப்பிட்டு இருக்கலாமே.. ஏன்யா வைகை ஓடுதுன்னா கரைபுரண்டு ஓடணுமா? அது பாட்டுக்கு போய்க்கிட்டு இருந்ததுன்னு வச்சுப்போம்..:-))

சரவணா
புதுப்புத்தகம் எல்லாம் கண்காட்சிக்குப் பிறகுதான் மதுரை சந்தைக்கு வருமாம்.. அதனால் மீ தி வெயிட்டிங்..:-))

மேவி... said...

விமர்சன பார்வை, சமுதாயத்தின் மேல் கோவம், இயற்க்கை குறுயீடுகள், தனிமனித உணர்வுகள் என்றெல்லாம் எழுதிவிட்டால் இலக்கிய பதிவாகிவிடுமா காபா சார் ???

புத்தாண்டு வாழ்த்துக்கள் காபா சார்

Rathnavel Natarajan said...

Good running commentary.

கார்த்திகைப் பாண்டியன் said...

மேவி
இதுதான் இலக்கியம்னு யார் சொல்ல முடியும்? அத்தோடு.. நான் இலக்கியம் எழுதுறேன்னு எப்போ சொல்லியிருக்கேன்..:-))

ரத்னவேல்
நன்றிங்க..