March 19, 2011

உக்கார்ந்து யோசிச்சது (19-03-11)

போன வாரம் அம்மாவுக்கு சிறிது உடல்நலம் சரியில்லை என சாயங்கால நேரமாக மருத்துவமனைக்கு அழைத்துப் போயிருந்தேன். டாக்டர் வர நேரமாகுமென வரவேற்பறையில் காத்திருக்கச் சொன்னார்கள். நல்ல விசாலமான ஹாலில் முப்பதுக்கும் மேற்பட்டோர் காத்திருக்க டிவியில் ஏதோ ஒரு பாட்டுச் சானல் ஓடிக் கொண்டிருந்தது. மாலை ஆறரை ஆன பிறகுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. நடக்கவே முடியாமல் ஓரமாக படுத்து இருந்த ஒரு வயதான பெண்மணி மெதுவாக எழுந்து நர்சிடம் வந்தார்.

"அம்மா.. மணி ஆச்சு.. சன் டிவில நாடகம் போட்டு விடுங்கம்மா.."

அவர் சொல்லி வாய் மூடுமுன் இன்னொரு பெண் வேக வேகமாக நர்சிடம் வந்தார்.

"நாடகம் போடுங்க வேணாம்னு சொல்லல. ஆனா ஜி டிவில போடுங்க.. அதான் நல்லா இருக்கும்.."

"இங்க பாரு.. நான் தான் மொதல்ல வந்து மாத்த சொன்னேன்.. சன் டிவி தான் போடணும்.."

"இது என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா? அதெல்லாம் முடியாது.."

பாவம் அந்த நர்ஸ். என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தார். நல்ல வேளையாக அப்போது டாக்டர் வர கூட்டத்தின் கவனம் யார் முதலில் உள்ளே போவதென்பதில் திசை மாறியதால் டிவி தப்பித்தது.

மக்கள் உடம்புக்கு முடியாமல் ஆற்றாமையோடு வருகிற மருத்துவமனைகளில் கூட இந்த மாதிரி சண்டைகள் அவசியம்தானா? நோயில் வேதனை தாங்காமல் அரற்றிக் கொண்டிருக்கும் வேளையில் கூட டிவி பார்ப்பது அத்தனை முக்கியமா? மக்களைக் குறை சொல்வதா.. இல்லை டிவி எல்லாம் வைத்து மருத்துவமனைகளையும் வியாபாரக் கூடமாக்கும் நிர்வாகத்தை குறை சொல்வதா? என்னமோ போடா மாதவா..

***************

எழுத்தாளர் பா.வெங்கடேசனோடு கொஞ்ச நேரம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப சிம்பிளான மனிதராக இருக்கிறார். நான் தாண்டவராயன் கதையை படித்திராத காரணத்தால் இன்னும் விரிவாக அவரோடு பேச முடியவில்லை. மாறாகப் பேச்சு சமகால இலக்கியம் பற்றியும் படிக்க வேண்டிய முக்கியமான வெளிநாட்டு எழுத்தாளர்கள் பற்றியதாகவுமாக இருந்தது. தன்னுடைய எழுத்து எப்படி இருக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாக அவர் சொன்ன விஷயம் மிக முக்கியமானது. "ஒரு பெண்ணுக்கு வார்த்தைகளால் விவரிக்க முடியாத துன்பமொன்று நேர்கிறது என வைத்துக் கொள்வோம். அந்தத் துன்பம் நிகழும்போது இருக்கக் கூடிய அந்தப் பெண்ணின் மனநிலையையும் வலியையுமே இன்றைய எழுத்தாளர்கள் பதிவு செய்கிறார்கள். ஆனால் அந்த நிகழ்வு நடந்து பத்து நாட்களோ, இரண்டு வாரமோ ஆன பின்பு.. மீண்டும் தன் நினைவுகளில் பயணித்து தனக்கு ஏன் இப்படி நடந்தது என அந்தப் பெண் தன் மனதுக்குள் நடத்தக் கூடிய போராட்டமும் அதன் காரணமான வலியும் இன்னும் நூறு மடங்கு வீரியம் கொண்டதாக இருக்கும். என் எழுத்தும் அப்படி இருப்பதையே விரும்புகிறேன்.." புத்தகத்தைப் படித்து விட்டு இன்னும் அவரோடு நிறைய பேச வேண்டும்.

***************

இதுவும் மருத்துவமனை கதைதான். நண்பர் ஒருவருக்குத் தோல் வியாதிகள் சம்பந்தமாக சில சந்தேகங்கள் கேட்பதற்காக மருத்துவர் ஒருவரைத் தேடிப்பிடித்து போயிருக்கிறார்.

"சொல்லுங்க.. என்ன பிரச்சினை.."

"திடீர்னு கைல கொஞ்சம் கரணை கரணையா வருது சார்.. ஏன்னு தெரியல.."

"ஓ.. இதுதானா.. சார் எங்க வேலை பாக்குறீங்க.."

"சிட்டிபாங்க்ல மேனேஜரா இருக்கேன்.."

"அடடே.. ஏன் பையன் கூட அங்கதான் இருக்கான்.. ஆனா போஸ்டிங் பெங்களூர்ல.. இங்க மதுரைல சிட்டிபாங்க் இருக்கா என்ன?"

"ஆமா சார்.. சிம்மக்கல்ல ஒரு ஆபிஸ் இருக்கு.. அங்கதான் வேலை பாக்குறேன்.."

"அப்போ சரி.. கம்ப்யூட்டர்ல நிறைய வேலை பார்ப்பீங்களோ.."

நண்பருக்கு தான் கணினியில் தொடர்ச்சியாக வேலை பார்ப்பதால்தான் இந்தப் பிரச்சினை என்பதை டாக்டர் கண்டுபிடித்து விட்டார் என ஒரே குஷி.

"ஆமா சார்.."

"அதுல கூகிள்னு கேள்விப்பட்டு இருக்கீங்க இல்லையா.."

"(குழப்பமாக) தெரியும் சார்.."

"ஆங்.." ஏதோ ஒரு நோயின் பேரை ஆங்கிலத்தில் எழுதி நண்பரிடம் தந்திருக்கிறார். "இதுதான் உங்களுக்கு வந்திருக்குற நோயோட பேரு.. இதை கூகிள்ல போட்டு தேடிப்பாருங்க.. இதுக்கு மருந்தே கிடையாதுன்னு வரும்.. பாருங்க.. எனக்குக் கூட இருக்கு.."

டாக்டர் தன் கைகளைக் காட்ட நண்பர் மயக்கம் போடாத குறைதான். ஙே..

***************

ஆனந்த விகடன் வாங்குவதை நிறுத்தி நிறைய வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக மீண்டும் வாங்க ஆரம்பித்து இருக்கிறேன். அதற்குக் காரணம் சுகாவின் மூங்கில் மூச்சும் முத்துக்குமாரின் அணிலாடும் முன்றிலும். அத்தோடு அறிவுமதியின் மழைப்பேச்சும் ரொம்ப அருமையாக இருந்தது. அதை சீக்கிரமே முடித்ததில் எனக்குக் கொஞ்சம் வருத்தமும் கூட. மற்றபடி அரசியல் சார்ந்து வரும் விகடனின் கட்டுரைகளை வாசிப்பதை தவிர்த்து விடுகிறேன். முழுக்க முழுக்க தி.மு.க.வுக்கு எதிரான ஒரு நிலை எடுத்து விகடன் குழுமம் ஒரு தீர்மானத்தோடு களத்தில் இறங்கி இருப்பது கிட்டத்தட்ட ஒரு ஊடக தாக்குதல் போல இருப்பது சரியானதாக எனக்குப் படவில்லை. பார்க்கலாம்.

***************

இப்போது திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கும் பாடல் "கோ"வின் "என்னமோ ஏதோ"தான். ஆலாப் ராஜுவின் குரல் உள்ளே நுழைந்து மனதை உலுக்கி எடுக்கிறது. இந்த வருடத்தின் மிகப் பெரிய ஹிட்டாகப் போகும் பாடல் என அடித்துச் சொல்லலாம். புதிதாக வந்ததில் "மாப்பிள்ளை"யில் இரண்டு குத்துப் பாடல்கள் தேறும். போதாக்குறைக்கு "என்னோட ராசி" பாட்டை ரீமிக்ஸ் பண்ணி இருக்கிறார்கள். தனுஷுக்கு இன்னொரு ஹிட் படம் ஆக இருக்கும் என நினைக்கிறேன்.

***************

நண்பர்கள் தான் வாழ்வில் எல்லாமே என நம்புவதில் தவறில்லை. ஆனால் அந்த நண்பர்கள் சரியானவர்களாக இல்லையென்றால் உங்கள் வாழ்க்கையில் தாங்க முடியாத சோகத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கலாம். (கருத்து சொன்னா கேட்டுக்கணும்.. ஆராயக் கூடாது..)

***************

சமீபத்தில் வாசித்த கவிதைகளில் எனக்கு ரொம்பப் பிடித்த நண்பர் போகனுடைய கவிதைகளில் சில இங்கே..

முள்ளோடு கலந்தது முளரி கள்ளோடுஇறங்கிற்று கலயம் கலயத்தில் புரண்ட கரு நாவல் துண்டுகள் உண்ண உண்ணத் தீரா உயிர்ச்சோறு
இந்தக் குகை எங்கு முடிகிறது என்றவனிடம் உன்னால் எதுவரை போக முடிகிறதோ அங்கு என்றாள்
***************
பொதுவாகவே நான் மிகப்பெரிய சோம்பேறி.. தொடர்ச்சியா எழுதுறது எல்லாம் நமக்குப் பிடிக்காத வேலை.. ஆனாலும் தமிழ்மணம் நட்சத்திர வாரம்னு சொல்லி இந்த வாரம் தொடர்ச்சியா எழுதி இருக்கேன்.. இந்த வாய்ப்பின் மூலம் இன்னும் பல நண்பர்களிடத்தில் என்னைக் கொண்டு போய் சேர்த்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இப்போதைக்கு அவ்ளோதான். நெக்ஸ்டு மீட் பண்றேன்..:-)))))))

13 comments:

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே! வணக்கம்.. இந்த வாரம் தமிழ்மணம் நட்சத்திர பதிவராக வலம் வரும் திரு. கா.பா. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

தமிழ்வாசி - Prakash said...

நல்லா உட்கார்ந்து யோசிச்சிருகிங்க.. நல்ல கருத்துக்களையும் பகிர்ந்திக்கிட்டு இருக்கீங்க. நானும் ஆனந்த விகடன் வாங்குவதை நிறுத்தி பல வருடங்கள் ஆச்சு...

எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

அத்திரி said...

raittu...............

Vimal said...

sir , neenga kilappunga sir

நிகழ்காலத்தில்... said...

தொடர்ச்சியா எழுதினதுக்கு பாராட்டுகள்:)

சில மருத்துவமனைகளில் டிஸ்கவரி சேனல் அல்லது அனிமல் பிளானட் போட்டு விட்டு விடுகிறார்கள். சர்ச்சை இல்லை (ரிமோட்ல தான் சேனல் மாத்த முடியும் ரிமோட் நர்ஸ்கிட்ட இருக்கும்:))

Deiva said...

Is Citibank in Madurai? What is the address?

முனைவர்.இரா.குணசீலன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா

மதுரை சரவணன் said...

நீங்க ஆனந்த விகடனை அரசியல் சார்பாக தாக்கி நீங்களும் ஊடகமா எதோ சொல்லிட்டு போன மாதிரி இருக்கு.... எது எப்படியோ அம்மா உறுதி ... மதுரைக்காரரே மனசுல வச்சுக்கங்க..

Yoga.s.FR said...

என்ன அத்திரி சார்"ரெய்டா?"பாவம்,வுட்டுடுங்க!

ஆகாயமனிதன்.. said...

தேர்தல் அறிக்கை 2011 கதாநாயகி (கதாநாயகன்)
http://aagaayamanithan.blogspot.com/2011/03/2011.html

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பா

செ.சரவணக்குமார் said...

நிறைவான வாரம் இது கா.பா. ஜொலித்த நட்சத்திரத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

ச.பிரேம்குமார் said...

தமிழ்மணம் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள் பாண்டியன்.