March 16, 2011

மழை விளையாட்டு

இத்தனை நேரமாக ஓடாமல் நின்று போயிருந்த அந்த கடிகாரம் மீண்டும் ஓடத் துவங்கியிருந்தது. மழை நின்று போயிருந்தது.

அலுவலகம் விட்டு வெளியே வந்த அவன் வெகுவாக களைத்துப் போயிருந்தான். அன்றைய தினத்தின் ஏமாற்றங்கள் அவனுக்குள் ஏதேதோ நினைவுகளைக் கிளர்த்தி மிகவும் பலவீனமாக உணரச் செய்தபடியே இருந்தன. நேரம் ரொம்ப ஆகியிருக்காவிட்டாலும் எங்கும் இருள் சூழத் துவங்கியிருந்தது. நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். ஆங்காங்கே தென்பட்ட மேகங்களின் கூட்டம் மழையின் வருகையை முன்னறிவிப்பு செய்து கொண்டிருந்தது. அவன் மிகுந்த அச்சத்துடன் தன் வண்டியை நோக்கி விரைந்தான்.

பொதுவில் அவன் மழையை மிகவும் வெறுக்கக் கூடியவனாக இருந்தான். ஒரு மழைநாளின் இரவில்தான் அவன் தந்தை தூக்கு போட்டுக்கொண்டு இறந்தார் என்பதும் அவன் காதலி நிறைய பணம் சம்பாதிக்க இயலாத அவனைப் பிரிவதே சரியாக இருக்கும் எனச் சொல்லிபோனதும் கொடியதொரு மழைநாள்தான் என்பதும் அதற்கான காரணமாக இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக மழை பேய்ந்து ஓய்ந்த பின்பான தனிமை அவனுக்குத் தாங்கவொண்ணா துக்கத்தை தரக்கூடியதாக இருந்தது. பித்துபிடித்தவன் போல ஏதோவொரு மாயலோகத்தில் சிக்கி சுழலச்செய்யும் அந்தத் தனிமையையும் அதற்கு காரணமான மழை இரவுகளையும் அவன் அறவே வெறுத்தான்.

நீண்ட ஷெட்டின் கடைசியில் அவனுடைய வண்டி நின்று கொண்டிருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பாக ஒரு சேட்டிடம் இருந்து இவன் கைக்கு மாறி வந்த வண்டி. செகண்ட் ஹாண்டில் வாங்கி இருந்தாலும் இன்று வரைக்கும் அவனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பட்டியலில் அவன் அம்மாவுக்குப் பிறகு அந்த வண்டியைத்தான் அதிகமாக நேசித்தான். இதுவரை ஆறேழு முறை அந்த வண்டி விபத்தில் சிக்கியிருந்தாலும் ஒருமுறை கூட அவனுக்கு ரொம்ப ஆபத்தான காயம் ஏதும் பட்டதே கிடையாது என்பது தன் வண்டியின் மீதான அவனுடைய அன்பை இன்னும் அதிகமாக பெருக்கி விட்டிருந்தது.

வாஞ்சையோடு வண்டியில் ஏறி அமர்ந்து அதைக் கிளப்பினான். மழை பிடிக்குமுன் வீட்டுக்குப் போய்விட வேண்டும் என தனக்குத் தானே பேசியபடி அவன் கிளம்பிய சிறிது நேரத்திலேயே மழை பிடித்துக் கொண்டது. மழையையும் தன் மேலதிகாரியையும் சபித்தபடியே கண்முன் தென்பட்ட பேருந்து நிறுத்தத்தின் முன் வண்டியை நிப்பாட்டி விட்டு நிழற்குடையின் கீழே நனையாத இடத்தில் போய் நின்று கொண்டான். உடம்பில் மழை பட்ட இடங்கள் எல்லாமே அமிலம் தெரித்தாற் போலொரு உணர்வு அவனுக்குள் நிரம்பி இருந்தது. கைக்குட்டையையை எடுத்து மொத்தமாக துடைத்துக் கொண்டு நிமிர்ந்தான்.

அந்த நிறுத்தத்தில் அவனைத் தவிர்த்து மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவனுக்கு இடப்புறம் நின்றிருந்த நீல நிறச் சேலையணிந்த இளம் வயதுப் பெண்ணொருத்தி அங்கு வேறு சிலரும் இருக்கிறார்கள் என்பதே அறியாதவள் போல அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். வட்ட முகமும் மிகச் சிறிய கண்களும் கொண்டிருந்த அவள் மூக்கு குத்திக் கொண்டிருந்தது அவனுக்கு அவளை இன்னும் அழகாகக் காட்டியது. அவள் தன்னை கவனிக்க வேண்டும் என்பதாய் லேசாக இருமுறை இருமினான். ஆனால் அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை என்பது அவனுக்கு சங்கடமாக இருக்கவே முகத்தை திருப்பிக் கொண்டான்.

நிறுதத்தில் இருந்த மற்றவர்களில் பைத்தியம் போலிருந்த மனிதரொருவர் சாலையை வெறித்து பார்த்தபடியே இருந்தார். அங்கிருந்த இன்னொரு ஆண் உலகமே இன்னும் சிறிது நேரத்தில் அழிந்துவிடுமோ எனக் கவலை கொண்டவன்போல வெகு சிரத்தையாக புகைபிடித்துக் கொண்டிருந்தான். மழை கிளப்பி விட்டிருந்த மண்வாசனையையும் மீறி சிகரெட்டின் நொடி இவன் நாசிக்குள் புகுந்து நெஞ்சை நிறைத்தது ரொம்ப இதமாக இருந்தது. இவனுக்கு புகைப்பழக்கம் கிடையாது என்றாலும் முதல்முறையாக அதை தான் பழகாமல் விட்டுவிட்டோமே என்பதாக வருத்தம் கொண்டான். தன்னைத்தானே பழித்தபடி மழை எப்போது நிற்குமென யோசித்துக் கொண்டே சாலையை வேடிக்கை பார்க்கத் துவங்கினான்.

அப்போதுதான் அவன் அந்தச் சிறுவனைப் பார்த்தான். சோவென பெய்யும் மழையைப் பொருட்படுத்தாது வெகு சந்தோஷமாக பாட்டொன்றை பாடியபடியே சைக்கிள் மிதித்து போய்க் கொண்டிருந்தான் சிறுவன். தன்னுடைய வலது கையால் கைப்பிடியை திடமாகப் பிடித்து, இடது கையோ பாதி இல்லாமல முழங்கையோடு முடிந்து போயிருக்க, ஒற்றைக்கையால் வண்டியோட்டி போய்க் கொண்டிருந்த அவனைப் பார்த்த இவனுக்குள் இன்னதென்று சொல்ல முடியாத குற்றவுணர்ச்சி தோன்றியிருந்தது. தன் கஷ்டங்கள் மறந்து மழையைக் கொண்டாடியபடி செல்ல அந்த சிறுவனால் முடியும்போது தான் ஏன் மழையை வெறுக்கிறோம் என யோசிக்கத் துவங்கினான். சாலையில் விளையாடிபடி போய்க் கொண்டிருந்த குழந்தைகளின் கூட்டமொன்று அவனை மொத்தமாக கலைத்துப் போட்டது.

மிகுந்த யோசனைக்குப்பின் தன் கையை வெளியே நீட்டினான். மழைத்துளிகள் அபாரமான வேகத்தோடு அவன் கைகளில் பட்டு தெறித்து விழுந்தன. மெல்ல மெல்ல நகர்ந்து வந்து மொத்தமாக நனையும்படி மழையில் நின்றான். மழையின் குளிர்ச்சி மெல்ல மெல்ல உடலை நிரப்பத் துவங்கியிருந்தது. சந்தோஷமாக உணர்ந்தான். மழை மீது அவன் சேமித்து வைத்திருந்த கசப்பு அத்தனையும் கரைந்து நீரோடு ஓடுவதாக உணர்ந்தவன் உற்சாகம் கொண்டவனாக வண்டியில் ஏறிக் கிளம்பினான்.

மழையின் ஊடாக வண்டி சீரான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. அவன் தன்னை புதிதாக பிறந்தவன் போல உணர்ந்தான். மழை அவன் பார்க்கும் காட்சிகளை எல்லாம் இன்னும் அழகாக மாற்றி விட்டிருந்தது. ஒரு ஆட்டோ சாலையில் இவனைக் கடந்து போனது. அதன் உள்ளே அமர்ந்து இருந்தவன் தன் கைகளில் சைக்கிள் ஒன்றை வைத்திருந்தான். ஆட்டோவின் இரு பக்கங்களிலும் சக்கரங்கள் முளைத்திட்ட புதிய வாகனமென அது போய்க் கொண்டிருந்தது வித்தியாசமான காட்சியாக அவனுக்குப் பட்டது. தனக்குள் சிரித்துக் கொண்டான்.

வழியில் குறுக்கிட்ட வண்டி ஒன்றுக்காக வேகத்தை குறைத்தபோதுதான் அவன் அதை கவனித்தான். வண்டியின் வேகம் குறைந்தபோது மழையின் வேகம் கூடி இருந்தது. எதிரே இருக்கும் எதுவும் இவனுக்கு தெரியாத வண்ணம் மழை சோவெனப் பெய்யத் துவங்கியது. மழையைத் தோற்கடிப்பவன் போல இவன் வண்டியின் வேகத்தைக் கூட்டினால் மழையின் வேகம் கம்மியானது. தன்னோடு மழை நடத்தும் விளையாட்டு அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. வேகத்தைக் குறைப்பதும் கூட்டுவதும் என அதற்கு தகுந்தாற்போல மழையும் மாறுவது அவனுக்கு மிக வேடிக்கையாக இருந்தது.

வெகு நேரம் தொடர்ந்த அந்த விளையாட்டு முடிவே பெறாதோ என அவனுக்குத் தோன்றிய கணத்தில்தான் அது சட்டென உரைத்தது. பொதுவாக இத்தனை நேரம் அவன் வண்டியில் வீட்டுக்கே வந்திருக்கக் கூடும். ஆனால் இன்று இதுவரைக்கும் அவன் அத்தனை பரிச்சயம் இல்லாத சாலைகளில் பயணித்தபடியே இருந்தான். அவனுக்கு சற்றே குழப்பமாக இருந்தது. தன்னுடைய கடிகாரத்தைப் பார்த்தான். அது மிகச்சரியாக அவன் பேருந்து நிறுத்தத்தில் மழைக்குள் நுழைந்த கணத்தோடு நின்று போயிருந்தது. எதிர்கடந்து போகும் மனிதர்கள் எல்லாரும் சாதாரணமாகப் போக தன்மேல் மட்டும்தான் மழை பெய்து கொண்டிருக்கிறதோ என அவன் ஐயம் கொள்ளத் துவங்கினான். மழை நிற்காமலே போய்விடுமோ எனும் அச்சம் மெதுவாக அவனுள் பரவத் தொடங்கியது.

அவன் சாலையை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் மீண்டும் தான் ஒரே சாலையிலேயே பயணித்துக் கொண்டிருப்பதை வழியில் பார்த்த காத்து நிற்கும் மழைப்பெண் ஒருத்தியின் மூலமாக உறுதி செய்து கொண்டான். பயம் ஒரு மிருகமென அவனுக்குள் புகுந்து கொண்டு இம்சிக்க ஆரம்பித்தது. உறைந்து போய்க் கிடக்கும் காலத்தின் ஒரு துளியில் தான் சிக்கிக் கொண்டு விட்டோம் என்பதை அவனால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. சின்னதொரு கணத்தின் தாக்கத்தில் மழையில் வண்டியை செலுத்த முடிவு செய்த தன் மீதே அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. தந்திரமாகத் தன்னை மழை ஏமாற்றி விட்டதென உரக்கக் கத்தத் தொடங்கினான். மழையைக் கண்டபடி திட்டிய அவனுடைய கதறல்களை எல்லாம் காற்று தனக்குள் புதைத்துக் கொண்டது.

மழை உண்டாக்கிய அந்த மாயவெளியில் இருந்து வெளியேறும் வாசல் தெரியாதவனாக அவன் அழுது அரற்றியபடியே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். வீட்டில் தனக்காக காத்திருக்கும் அம்மாவின் முகம் அவன் கண்முன்னே வந்து வந்து போனது. எப்பாடியாவது தான் இந்த சுழலில் இருந்து தப்பி விடுவேன் என்று தனக்குத்தானே நம்பிக்கை சொல்லிக் கொண்டிருந்த வேளையில் திடீரென அவன் எதிர்பார்த்திராதாவொரு கணத்தில் பெரிய லாரியொன்று அவன் முன்னே திரும்பியது. நேராக அவன் வண்டி போய் அந்த லாரியிலேயே மோதியது. அவன் தூக்கி எறியப்பட்டான்.

சாலையில் இருந்து சற்று விலகி அந்த வண்டி முற்றிலுமாக உருக்குலைந்து கிடந்தது. பத்தடி தூரத்தில் தூக்கி எறியப்பட்ட அவன் விழுந்து கிடந்தான். தலையில் இருந்து வழிந்து கொண்டிருந்த ரத்தம் அவனைச் சுற்றி குளமாகத் தேங்கி நின்றது. அவன் விழுந்து கிடந்த இடம் நோக்கி மக்கள் குழுமத் தொடங்கி இருந்தார்கள். இத்தனை நேரமாக ஓடாமல் நின்று போயிருந்த அந்த கடிகாரம் மீண்டும் ஓடத் துவங்கியிருந்தது. மழை நின்று போயிருந்தது.

12 comments:

சமுத்ரா said...

அருமையான நடை..வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

நடத்துங்க...நடத்துங்க...

vasu balaji said...

மின்னுது கா. பா.:)

Pranavam Ravikumar said...

அருமை!

ஸ்வர்ணரேக்கா said...

//தன் கஷ்டங்கள் மறந்து மழையைக் கொண்டாடியபடி செல்ல அந்த சிறுவனால் முடியும்போது தான் ஏன் மழையை வெறுக்கிறோம் என யோசிக்கத் துவங்கினான். //

--பெரியவங்களோட பிரச்சனையே அது தானே...

முடிவு எதிர்பார்த்ததாய் இருந்தாலும், அருமையான நடை..

குமரை நிலாவன் said...

அருமை

Anonymous said...

கா.பா டுவர்ட்ஸ் டு எஸ்.ரா! :)

அன்புடன் அருணா said...

அட!மழையைப் பிடிக்காமக் கூட இருக்குமா?

VELU.G said...

ரொம்ப நல்லாயிருக்குங்க

அழகாக சீராகசெல்லும் நடை

கலக்கறீங்க பாஸ்

மதுரை சரவணன் said...

malaiyil nanainthen..vaalththukkal

மேவி... said...

காபா ...இதை உங்களுடைய மைல் கல் பதிவென்றே சொல்லலாம். அப்படியே மனசை அல்லுது.

வாழ்த்துக்கள் ....

ஆனா முடிவு மட்டும் வேற எங்கையோ படிச்ச/பார்த்த மாதிரி இருக்கு.

மழை ...

நடை சூப்பர் ...ஆனா இன்னும் அழகு படுத்திருக்கலாம் .. மற்றவை தொலைபேசியில் செப்புகிறேன்

cheena (சீனா) said...

அன்பின் கா.பா

அருமை - சிறு கதை அருமை - ஒவ்வொரு சிறு நிகழ்வினையும் இரசித்து விவரிப்பது நன்று. மழை பிடிக்காததன் காரணம், வண்டி பிடிப்பதின் காரணம், நிறுத்தத்தில் நிற்கும் பெண் திரும்ப வில்லையே என்ற ஆதங்கம், அடுத்தவன் பிடிக்கும் புகை நம் நெஞ்சில் இதமாகப் பரவுவது, முடிவு முதலில் இரு வரிகளீல், மழையை இரசிக்கும் ஒற்றைக்கை சிறுவன் சைக்கிள் ஓட்டுதல், கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது கார்த்தி. எதிர்பாரா முடிவு. டிறமை பளிச்சிடுகிறது. நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா