July 16, 2011

இது என்ன ஊர் - சிங்கப்பூர்(3)

வாழ்க்கையில மொதத் தடவையா ஃப்ளைட்டுல போறேன். மொத ரோல நடுசீட்டு. ஜன்னலோரம் கிடைக்கலைன்னு ரொம்பவே வருத்தம். ஆனா பக்கத்துல உக்கார்ந்து இருந்த நேபாள்கார கூர்க்கா பொண்ணு மாதிரி இருந்த கிளாமர் சப்ப மூக்கியப் பார்த்தவுடனே வருத்தம் எல்லாம் போயே போச்சு. இட்ஸ் கான். அந்நியமா இருந்தாலும் அம்சமான புள்ள. சரின்னு செட்டிலாயாச்சு. ராத்திரி எப்படியும் உக்கார்ந்துக்கிட்டே தூங்க முடியாது. நாலு மணி நேரம் பயணம். என்ன பண்ணலாம்னு யோசிச்ச நேரத்துல தூங்குறேன்னுட்டு அந்த கூர்க்கா பயபுள்ள நம்ம தோள்ல சாயுது. அப்புறமென்ன.. அவள வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துக்கிட்டே போயிச் சேர வேண்டியதுதான்.


சொன்ன நேரத்துக்கு வண்டி கெளம்பிருச்சு. உள்ளூர் பஸ் ரேஞ்சுக்கே பேசுறேனோ? யோவ்.. டைகர் ஃப்ளைட்டு அப்படித்தான்யா இருந்துச்சு. ரன்வேல ஒரு அஞ்சு நிமிஷமா கட்ட வண்டி போற மாதிரியே உருட்டிக்கிட்டு இருந்தாய்ங்க. டேய் என்னாங்கடா இது இதான் பறக்குறதா விட்டா இப்படியே சிங்கப்பூருக்கே போய்ச் சேர்ந்துருவாய்ங்க போலயேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போது பேய் பிடிச்ச மாதிரி திடீர்னு வண்டியோட வேகம் கூடுது. நாலு செகண்ட்ல அப்படியே குப்புன்னு ஏதோ ஒண்ணு அடிவயத்தக் கவ்வ பறக்க ஆரம்பிச்சாச்சு. ஹை.. நான் பறக்குறேன். நல்லாத்தான் இருந்தாலும் வண்டியை அப்படி இப்படி லைட்டா ஆட்டும்போது மட்டும் அல்லையப் பிடிக்குது. என்னன்னாலும் வீட்டுக்கு ஒத்தப்பையன் பாருங்க.. பயம் இருக்கும்ல.

பறக்க ஆரம்பிச்சு நானும் ரொம்ப நேரமா தேடிக்கிட்டு இருக்கேன் ஆனா ஒண்ணு கூட கண்ணுல தட்டுப்படல. பொறுக்க மாட்டாம இன்னொரு பக்கத்துல இருந்தவர்கிட்ட கேட்டுட்டேன். “ஏங்க.. இந்த ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் வந்து குடிக்க ஏதும் தர மாட்டாங்களா?” மனுசன் ஏற இறங்கப் பார்த்துட்டு சொன்னார். “தம்பி, இது பட்ஜெட்டு ஏர்லைன்ஸ். மொத விஷயம்.. இதுல எந்த ஃபிகரும் ஏர் ஹோஸ்டஸா வர மாட்டா எல்லாம் ஹோஸ்டந்தான். ரெண்டாவது.. உனக்கு ஒரு வாய்த்தண்ணி வேணும்னாலும் விலைக்கு வாங்கித்தான் குடிக்கணும். ரைட்டா?” அதுக்குப்பொறவு அங்க பேச என்ன இருக்கு. மொத்தமா ப்யூஸ் போயிருச்சு. நானுண்டு நம்ம நேபாள் ஃபிகரோட ஹீட்டருண்டுன்னு பொழுது ஓடிப்போனதுல நாலு மணி நேரம் போனதே தெரியல.

பளபளான்னு வானம் விடியுற நேரம் காலை ஏழு மணிக்கு வெற்றிகரமாக தனது முதல் விமானப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்ட பாண்டியன் சிங்கை விமான நிலையத்தில் தரையிறங்கினார். (வரலாற்றுக் குறிப்புய்யா) இமிக்ரேஷன் முடிஞ்சு வெளில வந்தப்ப ஒரு உருவம் நின்னு கையாட்டி காமிச்சுகிட்டு நமக்காக காத்து இருந்தது. அந்த மனுஷனப் பத்திக் கொஞ்சம் பேசிட்டு நம்ம பயணத்தத் தொடருவோம்.


ரோஸ்விக் - காளையார்கோயிலைச் சேர்ந்த மனுஷன். கலகலப்பான ஒரு ஆளுன்னு சொல்றத விட கலாட்டாவான ஆளுன்னு சொல்லலாம். இருக்குற இடத்த தன்னோட கிண்டல் பேச்சாலையும் உற்சாகத்தாலையும் நிறைக்குற மனுஷன். மதுரைல நம்ம சீனா அய்யா வீட்டுலதான் மொதத் தடவையா சந்திச்சேன். தடதடன்னு வாய் மூடாம ஒளட்டுர என்னாலயே அவர் பேச்சுக்கு ஈடுகொடுக்க முடியலைன்னா பார்த்துக்கோங்க. சிரிக்க சிரிக்க பேசிட்டு இருந்தாரு. எஸ்ராவோட “தேசாந்திரி”ய வாங்கிக் கொடுத்து அனுப்பி வச்சோம். அதுதான் அவரோட நடந்திருந்த ஒரே சந்திப்பு. ஆனா நான் சிங்கை வர்றேன்னு சொன்னவுடனே எல்லாம் நாம பார்த்துக்கலாம், மூணு நாள் உங்க கூட இருந்து நானே சுத்திக் காமிக்குறேன்னு சொல்லிட்டாரு. நான்னு இல்லை, நம்ம மக்கள் யாரு போனாலும் அம்சமா கவனிக்கக் கூடிய ஆளு - அதுதான் ரோஸ்விக்.

வணக்கம் நண்பா எப்படி இருக்கீங்க எல்லாம் முடிஞ்சு ஏர்போர்ட்லயே ஒரு டீயப் போட்டோம். நீங்க ரூம் போட்டிருக்கிற இடம் ரொம்பத் தூரம் அங்கெல்லாம் போக வேண்டாம்னு சொல்லி தன்னோட வீட்டுலையே தங்கச் சொல்லிட்டாரு. கையில ஒரு பஸ் கார்டு, சிம்கார்டும் வந்துருச்சு. பஸ் கார்டு நம்ம ஊரு ஏடிஎம் கார்டு மாதிரி இருக்கு. ஊருக்குள்ள எங்க சுத்துறதுன்னாலும் அதுக்கு அந்த ஒரே கார்டுல வேலை முடிஞ்சு போகுது. மொத வேலையா நான் யுனிவர்சிடில போய் ரெஜிஸ்டர் பண்ணிட்டு வரணும் சொன்னேன். நீங்க போக வேண்டிய வழிய மேப் போட்டுத் தர்றேன்னு சொல்லி எழுதித் தந்துட்டு ரோஸ்விக் வேலைக்குக் கிளம்பிட்டாரு.



டிரைன் ஸ்டேஷன் ஃபுல்லா ஏசி, டிரைனுக்கு உள்ளயும் ஏசி, ஏசியோ ஏசி. டிரைன் உள்ளே ஏறினா அப்படியே நெஞ்ச அடைக்குது. அவ்ளோ சுத்தமா, அவ்ளோ அழகா ட்ரைய்ன வச்சுக்க முடியுமா என்ன? கம்பின்னு வச்சா ஒருத்தர் வேணும்னா பிடிச்சுக்கிட்டு நிக்கலாம்னு கம்பிய மூணா வகுந்து வச்சு.. எல்லாத்தையும் பக்காவா பிளான் பண்ணி கட்டி இருக்குற ஒரு நகரத்துக்குள்ள நான் நுழைஞ்சு இருக்கேன். ஜன்னல் வழியா பராக்கு பார்த்துக்கிட்டே வர்றேன். எல்லாம் மெகா சைஸ் கட்டிடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள். நான் போகவேண்டிய சிட்டிஹால் நிலையத்துல இறங்கிக்கிட்டேன். மொத தடவை ஊருக்குள்ள வர்றோம், வழி தெரியுமான்னு ஒரு பயம் இருந்தது. ஆனால் எறங்குனவுடனே எல்லாம் காணாமப் போச்சு. பத்தடிக்கு ஒரு போர்டு, எந்த வழில போகணும்.. எப்படிப் போகணும்னு. வழி நெடுக எஸ்கலேட்டர்கள். ஏதோ சினிமாக்கள்ல மட்டுமே பார்த்த விஷயங்களுக்கு நடுவுல நானும் நடந்துக்கிட்டு இருக்கேன்.

நேராப் போய் ரிஜிஸ்டர் பண்ணிட்டு மறுபடியும் டிரையினைப் பிடிச்சு பாசிர் ரிஸ்னு ஒரு ஏரியாவுக்கு வந்தாச்சு. அங்க இருந்த பஸ்ஸப் பிடிச்சு ரோஸ்விக் வீடு. நடுவுல குழலி, கோவியார், பிரியமுடன் பிரபு ஆகிய மக்கள்கிட்ட வந்தாச்சுன்னு அட்டெண்டன்ஸ் போட்டாச்சு. குளிச்சு முடிச்சு கிளம்பினப்போ நல்ல பசி. காலைல தோசை சோறு எல்லாம் எங்க கிடைக்கும்னு சொல்ல வந்த ரோஸ்விக் கிட்ட நான் சொன்னது, “எப்பவுமே அதைத்தான நண்பா சாப்பிடுறோம்.. அதனால ஒரு வாரம் சைனீஸ்தான்..”

பாசிர் ரிஸ் ஸ்டேஷன்ல இருந்த ஒரு சைனாக்காரன் கடைக்கு முன்னாடி நிக்குறேன். வாத்து கோழின்னு எல்லாம் முண்டமாத் தொங்குது. அங்க இருந்த ஏதோ ஒரு நூடுல்ஸ் படத்தக் காமிச்சு குடுறான்னு சொல்றேன். அவன் திரும்பி பார்த்து “ஸ்பைசி?”ன்னான். ஆமாண்டான்னு சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துல சட்டியத் தூக்கிக் கொடுத்தான். உள்ள பார்த்தா நூடுல்ஸ் ஏதோ பிரவுன் கலர் மசாலால மொதக்குது. கூடவே கொஞ்சம் சிக்கன் துண்டுங்க. சாப்பிடலாம்னு ஃபோர்க்ல நூடுல்ச எடுத்தா கால் கிலோமீட்டர் நீளத்துக்கு வருது. அத எப்படி பிச்சித் திங்கன்னும் தெரியல. பக்கத்துல இருந்த டப்ஸா மண்டையன்லாம் என்னைப் பார்த்து சிரிச்சுக்கிட்டே சாப்பிடுறாய்ங்க. சாப்பாட்டுல ஒரு மாதிரியான வாடை அடிக்கங்காட்டி ஒழுங்கா சாப்பிடவும் முடியல. ஒரு வழியா ஒப்பேத்திட்டு கான்ஃபரன்ஸ் ஹாலுக்குப் போயிட்டேன். அன்னைக்கு மத்தியானமும் சாப்பாடு இதே லட்சணம்தான். அப்படியொரு கேவலமான பிரியாணிய அன்னைக்குத்தான் சாப்பிட்டேன். ஆனா கூட இருந்தவங்க எல்லாம் காணாததக் கண்ட மாதிரி அடிச்சுக்கிட்டு சாவுறானுங்க.

கான்ஃபரன்ஸ், சிட்டி ஹால் மால்னு சுத்திட்டு சாயங்காலமா வீட்டுக்கு வந்தேன். எட்டு மணி போல நண்பர் ரோஸ்விக் வந்து சேர்ந்தார்.

“என்ன தலைவரே சாப்பிடப் போகலாமா?”

“கண்டிப்பா நண்பா.. இங்க நம்ம ஊரு சாப்பாடு எங்க கிடைக்கும்?”

(பிரயாணிப்போம்..)

12 comments:

Balakumar Vijayaraman said...

ஒரு நாள்லயே நம்ம ஊர் சாப்பாட தேடியாச்சா! :)

நேசமித்ரன். said...

கடைசில பிரியாணிப்போம்- வாசிச்சுட்டேன் :)

கோவை நேரம் said...

அடுத்த பாகம் எதிர் பார்க்கறேன் ...உங்களுடன் பயணம் சென்றது போன்ற உணர்வு ...

curesure Mohamad said...

ராமாஜன் படம் ஞாபகம் வருது

ஜெய்சக்திராமன் said...

தல... நம்ம காலேஜ்(!!!) சாரி எங்க காலேஜ்(??##) மறுபடியும் சாரி அந்த காலேஜ் பசங்கல்லாம் உங்க போடோஸ் எல்லாம் போடோஷோப் ல எடிட் பண்ணது... நிஜம் இல்லன்னு பொய் பிரசாரம் பண்றாங்க தல...

ஷர்புதீன் said...

mustafa centre - poneengalaa?

இராஜராஜேஸ்வரி said...

பயணப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்

வடுவூர் குமார் said...

நன்றாக இருக்கு விவரனை. அங்கு இருந்தால் சந்தித்திருக்கலாம்.

CS. Mohan Kumar said...

ஹா ஹா ஹா

குமரை நிலாவன் said...

பயணப் பகிர்வு நன்றாக இருக்கு thala continue

ரோஸ்விக் said...

நேத்து நான் உங்களை விட்டுட்டு கொரியன் ஸ்பைசி சிக்கன் செட் சாப்பிட்டேனே !!!
:-) :-)

கோவி.கண்ணன் said...

பட்டையை கிளப்புறேள் போங்கோ