July 20, 2011

இது என்ன ஊர் - சிங்கப்பூர்(4)

28 - 06 - 11 - செவ்வாய்க்கிழமை - சிங்கைல என்னோட இரண்டாவது நாள். மத்தியானம் என்னோட கட்டுரைய சப்மிட் பண்ண வேண்டி இருந்ததால சாயங்காலம் நாலு மணி வரைக்கும் கான்ஃபரன்ஸ் நடந்த சன்டெக் வளாகத்துலயே பொழுது போச்சு. அதுல பெரிசா சொல்றதுக்கு எதுவும் இல்லாத சூழ்நிலைல சிங்கப்பூர் என்கிற நகரம் பத்தியும் குறிப்பா அந்த ஊர் பெண்கள் பத்தியும் (ஹி ஹி) நான் என்ன ஃபீல் பண்றேங்கிற கில்மாதான் இந்தப்பதிவு பூராவும். அதனால எஸ்ஸாகிறவங்கோ இப்பவே ஜூட் விட்டுக்கோங்க சாமிகளா...

மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ள நகரம் சிங்கப்பூர். எழுபது சதத்துக்கும் மேலாக சீன மக்களும் மற்ற நாட்டினரான மலாய், ஃபிலிப்பானோ, தாய், இந்தியன் எல்லாம் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படியாகவும் இருக்கிறார்கள். பார்ப்பவரை ஆச்சரியம் கொள்ளச்செய்யும் விண்ணைத் தொடும் கட்டிடங்கள், அனைத்து பகுதிகளையும் பிரச்சினையின்றி இணைக்கும் பேருந்து / ரயில் போக்குவரத்து, தடையில்லா மின்சாரம், ரொம்பவே கறாரான ஆனால் நியாயமான சட்டங்கள், மக்களுக்கிருக்கும் சுதந்திரம், கேளிக்கை வசதிகள் என ஊரைப் பொறுத்தவரை எல்லாமே அம்சம். தங்களுடைய பொருளாதாரத்தின் மிகப்பெரிய அடிப்படை ஆதாரவளம் சுற்றுலாவே என்பதைத் தெள்ளதெளிவாக அரசு தெரிந்து வைத்திருப்பதால் வெளிநாட்டு மக்களுக்கு ரத்தினக்கம்பள வரவேற்பு கிடைக்கிறது.

இங்கே இருக்கும் கட்டிட வல்லுன்ர்கள் எல்லாருமே மிகுந்த அழகுணர்ச்சியோடு கூடிய மனிதர்களாக இருப்பார்கள் போலும். ராஃபிள்ஸில் ஒரு டவரை அண்ணாந்து பார்க்கிறேன் பேர்வழி எனக் கழுத்து வலியே வந்துவிட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டிடங்களை பெரிது பெரிதாக கட்டினாலும் அவையனத்தையும் வெகு அழகாகக் கட்டிமுடித்து பார்ப்போர் மூக்கில் விரலை வைக்கும்படியாக அசர அடிக்கிறார்கள். குறிப்பாக நான் பார்த்தவற்றிலேயே டிபிஎஸ் பாங்கின் கட்டிடம்தான் பட்டாசு. மெட்டல் ப்ளாக் கலரில் ஒரு தெருவையே அடைத்துக் கொண்டிருக்கும் அந்த ஒரு கட்டடம் போதும். கிளாஸ். நம்மூரைப்போல வீட்டைக் கட்டிவிட்டு தண்ணி, எலெக்ட்ரிக் கனெக்‌ஷன் கேட்கும் பிசினஸ் எல்லாம் கிடையவே கிடையாது. முதலிலேயே அதை எல்லாம் முடித்துவிட்டுத்தான் கட்டிடம் கட்டவே ஆரம்பிக்கிறார்கள்.

ஊரில் ஷாப்பிங் மால்களுக்கு அடுத்தபடியாக நிறைய காணப்படுவது ஹோட்டல்கள். பார்க்கும் பக்கமெல்லாம் வாத்தும் கோழியும் உரித்து தொங்க விடப்பட்ட கடைகள். எண்ணெய், செய்முறை சார்ந்து ஹோட்டல்கலுக்கு தரவரிசை வழங்கப்பட்டு அதை கடைகளில் ஒட்டியும் வைத்திருக்கிறார்கள். இதைப் பெண்களின் சுதந்திரத்திற்காக திட்டமிட்டு செய்ததாகச் சொல்கிறார்கள். ஊரெங்கும் கடைகளிருக்க பெண்கள் வீட்டுக்குள் அடைபட்டு இல்லாமல் நிம்மதியாக வேலைக்கு செல்ல்வேண்டும் என இதை திட்டமிட்டு அரசாங்கம் செய்ததாம். எளிதில் செரிக்கக்கூடிய திரவ உணவை, ஒரே உணவாக இல்லாமல் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமென, நாய் வாயை வைத்ததைப் போல எடுத்துப் போட்டு சாப்பிடுகிறார்கள்.

சிங்கப்பூரை ஃபைன் நகரம் என்றே சொல்கிறார்கள். தவறு செய்பவர்களுக்கு ரொம்பக் கடுமையான தண்டனைகள். அதே நேரம் பொதுமக்களுக்கு தாங்கள் விரும்பியதை பிரச்சினையின்றி செய்ய எல்லாவிதமான சுதந்திரமும் உண்டு. ஊரில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் யார் வேண்டுமானாலும் தம் போடலாம். நான் பார்க்க 12 / 13 வயது ஜாரிகளின் கும்பல் ஒன்று மொத்தமாக வெண்குழல் ஊதுவத்தியை புகைத்தபடி கடந்து போனது வயித்தெரிச்சல். அதே போல கட்டியணைத்து கிஸ்ஸடிக்கவும் இந்த ஊர் மக்கள் யோசிக்கவே மாட்டேன் என்கிறார்கள். மூடாகுதா ரைட்டு உடனே அடிச்சிடு பக்கத்துல இருப்பவன் பார்ப்பான் என்ன நினைப்பான் ஒரு கவலையும் கிடையாது. மக்கா.. வாழ்கிறார்கள்.




இதைச்சொல்லும் அதே நேரத்தில் மக்கள் எல்லாரும் பொறுப்புடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும். சாலையில் யாரும் குப்பை போடுவதில்லை. சிகரெட்டுகள் புகைத்தாலும் அதை ஒழுங்காக கொண்டு போய் குப்பையில் போடுகிறார்கள். சாலையின்மீது எந்த வாகனமும் வராவிட்டாலும் கூட சிக்னலுக்காக காத்து இருக்கிறார்கள். பஸ்ஸில் முன்னால் ஏறி பின்னால்தான் இறங்குகிறார்கள். போக்குவரத்து வண்டிகளில் பெரியவர்களுக்கு எனத் தனி மரியாதையே இருக்கிறது. ரயில் நிலையங்களில் எல்லாரும் வரிசையிலேயே போகிறார்கள். பெரும்பாலும் திருட்டு எங்கும் கிடையாது.

பெண்கள் - ஆகா.. இப்போதுதான் ஒரு குரூப்பே நிமிர்ந்து உட்கார்கிறது சாமிகளா. மஞ்சள் நிற மைனாக்கள். ரொம்ப ரொம்ப சுதந்திரமான பெண்கள்.அதுவும் ஆடை விஷயத்தில் கேட்கவே வேண்டாம். உள்ளாடைகளே ஆடைகளென அரியதொரு தத்துவம் கொண்ட மக்கள். ஒரு பனியன் சற்றே பெரிய ஷார்ட்ஸ்.. எல்லாம் முடிஞ்சு போச்சு. அதையே விதம்விதமாக டிசைன் செய்து அணிகிறார்கள். அலங்காரங்களில் பெரிதும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் - குறிப்பாக சிகையலங்காரம். தங்கள் முகத்துக்கு எம்மாதிரியான ஸ்டைல் பொருந்தும் எனப் பார்த்துப் பார்த்து செய்து கொள்கிறார்கள். அடுத்த முக்கியத்துவம் காலணிக்கு. பெரும்பாலும் குட்டையான பெண்கள் என்பதால் பெரிய ஹீல்ஸ் வைத்த செருப்புகளாய்த் தேடி அணிகிறார்கள். வாழைத் தண்டு கால்களைப் பார்த்து பெருமூச்சு விட்டே ஒரு வாரம் ஓடிப்போனது என் சொந்தக்கதை சோகக்கதை.

ஆண்கள் முக்கால்வாசி முள்ளம்பன்றி மண்டையர்களாகவே திரிகிறார்கள். தலையில் பான் பராக் துப்பிய மாதிரியே கலரிங் செய்து கொள்கிறார்கள். டி ஷர்ட் - ஜீன்ஸ் - அவ்வளவே. ஊரில் ஆண் பெண் என பேதமில்லாமல் எல்லோரும் கையில் ஒரு ஐஃபோன் வைத்திருக்கிறார்கள். கையைப் பிடித்த கரகரப்பு என எப்போதும் அதை நோண்டியபடியே இருக்கிறார்கள். ஒரு மணி நேரப் பயணத்தில்கூட பக்கத்தில் இருப்பவரிடம் பேசுவதை விட ஃபோனை நோண்டுவதே மக்களுக்குப் பெரிதாக இருக்கிறது. ஒரு மாதிரியான மெக்கானிக்கல் வாழ்க்கைக்குப் பழகிவிட்ட சூழல். வெளிப்படையாகச் சொன்னால் பெரிதளாவில் மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம் ஊரின் மீது இருக்கிறது. எனவேதான் சிங்கப்பூர் என்பது சுற்றிப்பார்ப்பதற்க்கான நகரமின்றி வாழ்வதற்கான நகரமாக எனக்குத் தட்டுப்படவில்லை.

சாயங்காலம் கான்ஃபரன்ஸ் முடிச்சுட்டு நேரா தியேட்டர். ட்ரஷர் இன் அப்படின்னு ஒரு சைனாக்காரன் படம். உள்ளே வெறும் ரெண்டே பேரு. ஆனா டாண்ணு சொன்ன நேரத்துக்கு படம் போட்டு முடிச்சு அனுப்புனானுங்க. அப்புறமேட்டுக்கு மால் பூரா சுத்தி ஆவ்னு வாயைப் பொளந்ததுதான் மிச்சம். விலை ஒவ்வொண்ணும் யானை விலை. ஒரு லிட்டர் தண்ணி எழுபது ரூபான்னா பார்த்துக்கிடுங்க. சும்மா வேடிக்கை பார்க்க, ஃபிகர்களைப் பார்க்க.. இப்படியே பொழுது போச்சு. சிட்டி ஹாலுக்கு நடுவுல அதிர்ஷ்டத்தின் நீரூற்றுன்னு ஒண்ணு வச்சிருந்தாய்ங்க. கைய நனைச்சு வேண்டினா நினைச்சது நடக்குமாம். வெளிநாட்டுலயும் இப்படி அஜால் குஜால் சமாச்சராங்களான்னு சிரிச்சுக்கிடே கைய நனைச்சுட்டு வந்தேன்.



வெளில வந்து நமக்கும் நண்பர் ரோஸ்விக்குக்கும் ஒரு சிக்கன் முர்தபா வாங்கிட்டு வீட்டுக்கு வந்தா தலைவர் வெற்றிக்கதிரவன் வந்திருந்தார். நல்லா வாசிக்குற மனுஷன். தனக்காக மட்டுமே எழுதுறேன்னு சொல்ற ஆளு. ரொம்ப ஜாலியா பேசிக்கிட்டு இருந்தாரு. அவரோட மொக்கை போட்டதுல நேரம் போனதே தெரியல. அப்படி இப்படின்னு ரெண்டு நாளு ஷாப்பிங் மால், கான்ஃபரன்ஸுன்னு சுத்தியாச்சு. அடுத்த நாள்ள இருந்துதான் உண்மையான சுத்தலை ஆரம்பிக்கணும்.

(பிரயாணிப்போம்..)

4 comments:

அப்பாவி முரு said...

//ஊரில் பொது இடம் அது இது என்றெல்லாம் கணக்கில் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் தம் போடலாம்//

தப்பு, சாப்பாடுகூடம், ஷாப்பிங் மாலின் வெளியிடங்களில் 10 சதத்துக்கும் குறைவான இடத்தை காற்றோட்டமான பகுதியில் ஒதுக்கி வைத்திருப்பார்கள். மூடிய பகுதிகளில்(மால், கார்...) புகைபிடிக்க அனுமதி இல்லை.
திறந்தவெளி நடைபாதையில் புகை பிடிக்கிறார்கள். ஆனாலும், சிகரெட் துண்டை கீழே போடக்கூடாது.
போட்டால் வழக்கம்போல் தண்டனை தான். முதல் முறைக்கு 300 வெள்ளி, இரண்டாம் முறை நீதிமன்றம் சென்று அபராதம் கட்டவேண்டும். மூன்றாம் முறைக்கு நெருக்கடி மிகுந்த ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸ் வாசலை சில மணி நேரங்கள் சுத்தம் செய்யும் வேலை + அபராதம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

திருத்தினதுக்கு நன்றி தல.. மாத்திடுறேன்..

கோவை நேரம் said...

சீக்கிரம் வாங்க ...அடுத்த பகுதி படிக்கணும் போல இருக்கு

வடுவூர் குமார் said...

ஹூம்! என்று சொல்லி ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டியது தான். தினமும் வேலை இடத்தில் இருந்து அண்ணா சாலையை அவ்வப்போது பார்ப்பேன்...லேன் மார்க்கிங் இல்லாத பிரதான சாலை அதில் கசா முசா என்று ஓடும் வண்டிகள் இதையெல்ல்லாம் பார்க்கும் போது நாம் திருந்த இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று சொல்லவே முடியவில்லை அதோடு ஆட்டோ ஓட்டுனர்களின் அராஜகம்,எச்சில் துப்பும் பண்பு,வாகனம் ஓட்டும் திசைக்கு எதிரில் கொஞ்சமும் கூச்சம் இன்றி வரும் வாகனங்கள் இதையெல்லாம் பார்க்கும் போது அன்னியன் அவதாரம் அரசாங்கமே எடுக்கனும் என்று தோனுகிறது.அதோடு இல்லாமல் எந்திரன் படத்தில் வரும் டிரைலர் போல் எச்சில் துப்புகிறன் மேல் “நச்” என்று மிதித்து பறக்கும் ரஜினியும் சென்னைக்கு மிக மிக தேவை என்றே தோன்றுகிறது.